இந்த உலகம் கொண்ட பொக்கிஷமெல்லாம்
உலகின் முதல் பணக்காரர் கொண்ட பணமெல்லாம்
எழில் கொஞ்சும் மங்கையரின் அழகெல்லாம்
மழலை தரும் மகிழ்ச்சி எல்லாம்
அள்ளி என்னிடம் தந்தாலும்
அதற்கு மாறாக,
அந்த முதல் வார்த்தைகள்
நாம் இருவரின் பெயர்களால் நிறைந்த பக்கங்கள்
அருகில் நிற்காமல் சேர்ந்தெடுத்த புகைபடங்கள்
நாம் பரிமாறிக் கொண்ட சின்ன சின்ன பரிசுகள்
பழகிய அந்த அழகான பொழுதுகள்
மனதில் தோன்றிய கவிதைகள்
நமக்காகவே உலகம் இயங்கிய அந்த நிமிஷங்கள்
கடைசியாக நாம் அழுத கண்ணீர் துளிகள்
இதில் எதையுமே நான் தரமாட்டேன்..
ஏதோ சொல்கிறார்கள் ஆன்றோர் சான்றோர்
துன்பம் என்பது, தன்னுடையது என்று ஒரு பொருளை
நாம் எண்ணும் போதுதான் வரும்..
ஈடுபாடு இல்லை எனக்கிந்த கூற்றின்மேல்
உன்னை என்னுடையவன் என்று எண்ணியபின்தான்
எனக்கு, சந்தோஷம் - இவ்வார்த்தையின் அர்த்தம் விளங்கிற்று..
இப்பொழுது நீ இல்லை,
ஆனால் எனக்குள் இன்னும்
உன் முகம், அந்த சிரிப்பு, கர்வம் கலந்த அந்த பார்வை
நான்கு விரல் கொண்டு நீ அழகாக கோதிவிடும் உன் முடி
கவிதை எழுதும் போது உன் முகத்தில் தோன்றும் அந்த சிந்தனை....
சொல்வேன் இன்னும் ஏராளம் உன்னைப் பற்றி
ஒரு முப்பது ஆண்டுகள் கழித்து என்னிடம் வந்து கேட்டுப்பார்
இதையே சொல்வேன், நம் காதல் அத்தனை வலிமையானது!
சரி இன்று ஏன் உன்னை அதிகமாக நினைவு கூர்ந்தேன்?
ஆங்... காதலர் தினம்..
இந்நாளை போற்றுவதில் உனக்கு உடன்பாடு கிடையாது,
தினமும் காதலர் தினம்தானடி நமக்கு என்பாய்...
உன்னுடைய ஒரு பழக்கம் - உன்னிடம் சொல்லாமலேயே நான் ரசித்த ஒரு பழக்கம்
நீ இல்லாத போதும் உன் கருத்தை நினைவில் வைத்து, அப்படியே நடந்தால் உனக்கு மிகவும் பிடிக்கும், பெருமை கொள்வாய்
நாளும் கிழமையும் நம் அன்பை சொல்லுமென்றால்,
நமக்கு எந்நாளும் காதலர் தினமே,
எனக்கு நீ, உனக்கு நான்
நம்முள் என்றும் காதலும்.....
8 comments:
:-)
ரொம்ப வித்தியாசமா இருக்குங்க தீக்ஷ் உங்க காதலர் தின கவிதை. அதுவும் ஒரு ஆணின் பார்வையில் எழுதியிருக்குறது ரொம்ப சிறப்பு. வாழ்த்துகள்.
ஆணின் பார்வையில் அருமையான கவிதை...
காதலர் தினத்தன்று மலர்ந்திருக்கும் ஒரு அருமையானப் பதிவு வாழ்த்துக்கள் தீக்ஷ்ன்யா
மனதின் ஓசை - வருகைக்கும், நகைத்ததற்கும் நன்றி! :)
//ரொம்ப வித்தியாசமா இருக்குங்க தீக்ஷ் உங்க காதலர் தின கவிதை. // நன்றி கைப்புள்ள! எல்லாம் உங்கள பார்த்துதான் இப்படி இன்ஸ்பயர் ஆகுறோம்.
ஜி - மிக்க நன்றி!
//காதலர் தினத்தன்று மலர்ந்திருக்கும் ஒரு அருமையானப் பதிவு //
தேவ் - இவ்வளவு ஊக்கம் தந்தமைக்கு சங்கத்துக்கு தான் நான் நன்றி சொல்லவேண்டும்!
Post a Comment