Tuesday, October 31, 2006

இந்த ஆப்பு போதுமா?


ராசா மாதிரி சங்கத்து சிங்கங்க எல்லாரும் மீசையை முறுக்கிவிட்டுகிட்டு தேன்கூடு போட்டியில ஏதோ ஒரு இடத்தை புடிச்சுக்கிட்டு இருந்தாங்க. விவசாயி, என்னைய்யா பாவம் பண்ணுனாரு? அவருபாட்டுக்கு தான் உண்டு, தன் விவசாயம், வரப்பு உண்டுன்னு இருந்தாரு. சங்கத்து சார்புல போட்டி போடு ஜெயிக்கலைன்னா என் பேர மாத்திக்கவேன்னு சொன்னியே? என்ன பேரு வெக்கலாம்? இப்படி ஒரு முடிவு தேவையா?
அதான் 10 இடத்துக்கு உள்ளே கூட வர உடாம அடிச்சுபுட்டாங்க இல்லே? அப்புறம் எதுக்குய்யா உனக்கு பென்சில்ல வரைஞ்ச மீசை? எல்லாரும் இங்கே அடிச்சதுன்னு மட்டும் இல்லாம, தேன்கூடு வரைக்கும் போய் சேர்ந்து சொல்லி வெச்சு கும்மியடிச்சு இருக்காங்க ஆப்பு. இது போதுமா? இல்லே, இன்னும் கொஞ்சம் வேணுமா?
இனிமே இந்த மாதிரி போட்டில எல்லாம் கலந்துக்க போவியா? இதெல்லாம் உனக்குத் தேவையா?

Monday, October 30, 2006

சோக்கு சோக்கேய்ய்ய்ய்ய்ய்ய்ய்


நல்லது: மனைவி உங்களிடம் பேசாமல் இருந்தால்
மோசம்: விவாகரத்து கேட்டால்
கொடுமை: மனைவியே லாயராக இருந்துவிட்டால்

நல்லது: உங்கள் மகன் வளர்வது
மோசம்: அவனுக்கு மோசமான நட்பு வட்டம் இருக்கிறது
கொடுமை: ஏண்டா இப்படின்னு கேட்டால், அப்பனைப்போலதானே பிள்ளைன்னு பதில் வந்தால்

"டாக்டர், எனக்கு வயித்தால போவுது"
"எழுமிச்சம் பழம் முயற்சி பண்ணுனீங்களா?"
"பண்ணியாச்சு, பழத்தை எடுத்தவுடனே திரும்பவும் போவுது"

"வெளவ்வாலுக்கு இருக்கிற மிகப்பெரிய பிரச்சினை என்ன?"
"அதுக்கு வயித்தால போகும்போது தூங்குறது"
(பின்குறிப்பு: வெளவ்வால் தலைகீழா தொங்கிய படிதான் தூங்கும்".

"ஒரு புத்திசாலி சர்தாரும், கைப்புள்ளையும் தெருவில நடந்து போய்கிட்டு இருக்காங்க, ஒரு 100 ரூபாய் நோட்டு தெருவில கிடக்குது, அந்தப்பணத்தை யாரு முதல்ல எடுப்பாங்க?"
"கைப்புள்ள"
"ஏன்?"
"இந்த உலகத்துல புத்திசாலி சர்தாருன்னே யாருமே இல்லே"

"ஒரு போலீஸ் சர்தார், ஒரு கால்ல வெள்ளை ஷூவும், இன்னொரு கால்ல கருப்பு ஷூவும் போட்டு இருந்தாரு. அதை பார்த்த அவர் முதலாளி, ஷூவ மாத்திட்டு வர சொன்னாரு.
திரும்பவும் சர்தார் அதே மாதிரிதான் வந்தாரு.
ஏன்?

இந்த கேள்வி உங்களுக்கு

Create polls and vote for free. dPolls.com
அப்படியே இந்த கேள்விக்கும் பதில் சொல்லிட்டா உங்க புள்ளகுட்டியெல்லாம் நல்லா இருக்கும்

Wednesday, October 25, 2006

வ வா ஆட்டோகிராப்-2!!!

முதல் பாகம்

எங்க ஊருல ஒரு வகுப்புக்கு 30 பேர்தான் இருப்பாங்க. ஆனால் கடலூர்ல ஒரு வகுப்புக்கு 70-80 பேர் இருப்பாங்க. மார்க்தான் 70- 80 வாங்க முடியல... ரேங்காவது அந்த ரேஞ்ச்ல வாங்கனும்னு சேர்ந்த அன்னிக்கே முடிவு பண்ணிட்டேன்.

ஆனால் ஏற்கனவே ஒரு வருஷம் ஆறாவது படிச்ச எக்ஸ்பீரியன்ஸ் இருந்ததால அந்த வருஷம் என்னால அந்த ரேங்க் வாங்க முடியலை. அப்பறம் போக போக பிக் அப் பண்ணி 70-80 ரேங்க் வாங்க ஆரம்பிச்சிட்டேன்.

எட்டாவது படிக்கும் போது வழக்கம் போல கடைசி பென்ச்ல உக்காந்து தூங்கிட்டு இருந்தேன். அந்த வாத்தியார் அதை பார்த்துட்டாரு...

வாத்தியார்: தம்பி, அந்த கடைசி பென்ச்ல இருக்கறவரே.. எழுந்திரிங்க...

நான் எழுந்து நின்றேன்...

வாத்தியார்: சரி, இப்ப நான் என்ன நடத்திட்டு இருந்தேன்...

இது கூட தெரியாம என்னயக் கேக்கறாரு...

நான்: வரலாறு சார்

வாத்தியார்: ஏம்பா, வரலாறு வாத்தியார், வரலாறு நடத்தாம அறிவியலா நடத்துவேன். வரலாறுல என்ன நடத்திட்டு இருந்தேன்...

நான்: காந்தி உப்பு சத்தியாகிரகம் சார்...

வாத்தியார்: சிந்து சமவெளி நாகரீகத்துல காந்தி எதுக்குப்பா உப்பு சத்தியாகிரகம் பண்ணுறாரு???

நான்: வெள்ளைக்காரவங்க கிட்ட இருந்து சுதந்திரம் வாங்க தான் சார்...
(காந்தி வேற எதுக்கு உப்பு சத்தியா கிரகம் பண்ண போறாரு... இதுவே தெரியல... இவர்ட படிச்சு நான் எப்படி கலெக்டர் ஆகறது? ஆமங்க.. அப்ப நம்ம ஆசை கலக்டர் ஆகறது தான்)

வாத்தியார்: உன்கிட்ட பேச்சு கொடுத்தது என் தப்பு. இனிமேல் முதல் பெஞ்ச்ல வந்து உக்கார்ந்துக்கோ...

நான்: சரி சார்.

அன்றிலிருந்து முதல் பெஞ்சில் உட்கார ஆரம்பித்தேன். என் வாழ்வின் திருப்பு முனை ஏற்பட்டது அதற்கு பிறகுதான். கடைசி பெஞ்சில் பயந்து பயந்து தூங்கி கொண்டிருந்த நான், அதற்கு பிறகு முதல் பெஞ்சில் உட்கார்ந்து நன்றாக தூங்க ஆரம்பித்தேன். எல்லா ஆசிரியர்களும் கடைசி பெஞ்சையே பார்த்து பாடம் சொல்லி கொடுத்தனர். இந்த டெக்னிக்கை எனக்கு சொல்லி கொடுத்த மணி சாரை இன்றளவும் மறக்காமலிருக்கிறேன்.

இங்கிலிஷ்ல மெமரி போயம்ஸ்னு ஒண்ணு இருக்கும். அதை நினைத்தாலே இன்றும் நமக்கு ஆகாது. யார் யாரோ வெள்ளைக்கார துறைங்க அவுங்க ஊர் படத்துல பாடின பாட்டெல்லாம் எடுத்து போட்டிருப்பாங்க. அந்த பாட்டாலையே எனக்கும் என் இங்கிலிஷ் வாத்தியாருக்கும் எப்பவுமே சண்டைதான்.

எப்பவும் அவர் என்னை ஒப்பிக்க சொல்லுவார். நமக்குதான் முதல் வரிக்கு மேல தெரியாதே... அதனால இம்பொஸிஷன் கொடுத்துடுவார். அவரை எப்படியாவது பழி வாங்கனும்னு பாத்துக்கிட்டே இருந்தேன். அதுவும் அவரைவிட எனக்கு ஆங்கிலம் அதிகமா தெரியனும்னு நிருபிக்கனும்னு காத்துக்கிட்டு இருந்தேன்.

பரிட்சை வந்தது. அவர்தான் சூப்பர்வைசர். கேள்வித்தாளையும், விடை எழுதற தாளையும் கொடுத்துட்டு அவர் கேட்ட கேள்வி

இங்கிலிஷ் வாத்தியார்: Has everyone got question paper and answer paper?

நான்: No sir...

அவர் என் அருகில் வந்து, என்னப்பா எது வரலைனு கேட்டாரு?

நான்: சார்... நீங்க சொன்னதுல பொருள் குற்றம் இருக்கு

இ.வாத்தியார்: என்ன பொருள் குற்றம்???

நான்: Question paperல Question இருக்கு... ஆனால் Answer paperல answer இல்லையே... அதனால இது answer paper இல்லை... Milk Paper (எங்க ஊருல வெள்ளை பேப்பரை பால் பேப்பர்னு தான் சொல்லுவோம்)

எல்லாரும் சிரிச்சாங்க. அப்பறம் வாத்தியாரும் என்னை பார்த்து சிரிச்சாரு.
கடைசியா அந்த பேப்பர்ல 100க்கு 34 போட்டு ஃபெயிலாக்கிட்டாரு. .. கேட்டா எந்த ஆன்ஸரும் கரெக்டா இல்லைனு சொன்னாரு. அப்ப இதுக்கு முன்னாடி மட்டும் என்ன கரெக்டாவா இருந்துச்சி நீங்க பாஸ் போடறதுக்குனு நான் சண்டை போட்டவுடனே... பயந்து போய் 35 மார்க் போட்டு பாஸாக்கிட்டாரு. ஒரு வழியா 70 ரேங்க் மேல எடுத்து பேரை காப்பாத்திட்டேன்

Saturday, October 21, 2006

தீவாளி!

ஒரு மாதத்துக்கு முன்னாலேயே கவுண்ட் டவுண் தொடங்கிவிடும். சனி ஞாயிறை ஒட்டி வந்தால் திங்கள்கிழமை வயத்துவலி வந்து பள்ளிக்கு லீவு போட திட்டம் ரெடியாக இருக்கும். முந்தின வியாழக் கிழமையே எனக்கு அடுத்த வாரம் வயத்துவலி வரும், லீவு வேண்டும் என்று லெட்டரைக் கொடுக்க கை பரபரக்கும். ஜிகிடி அறியாப் பருவத்தில் ட்ரஸில் அவ்வளவு மோகம் இருந்ததில்லை. ஒருதரம் பெண்களின் பாவடை துணி டிசைன் பிடித்து விட அதில் தான் ட்ராயர் வேண்டும் என்று அடம் பிடித்து தைத்துப் போட்டுக்கொண்டது கூட நினைவில் இருக்கிறது. நான் விட்ட உதாரில் என்னைப் பார்த்து இன்னும் நாலு வானரங்கள் வீட்டில் அடம் பிடித்து சூடு போட்டுக்கொள்ள அந்த தீபாவளிக்கு நாங்கள் பாவாடை சாமியார்களாக உலா வந்ததைப் பார்த்து ஊரில் வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சிரித்தார்கள். இதையே அப்புறம் ஒரு பத்து வருஷம் கழித்து பிரிண்டட் ஷர்ட்ஸ் என்று மெட்ராஸில் பேஷனாக்கிவிட்டார்கள். (நாங்க யாரு தீர்க்க தரிசி பரம்பரைல்ல..) ட்ரஸ்ஸை விட அதன் கூட வரும் துக்கடாவில் தான் கவனம் இருக்கும். ஜிகு ஜிகு பெல்ட், ஊதா கூலிங் கிளாஸ், தொப்பி, செருப்பு என்று சுரேஷ், சீனி, வாசு, மணி என்று எல்லோரோடும் ரவுண்டு வரும் போது பந்தாவா இருக்கும்ல. ஊதா கூலிங் கிளாஸைப் போட்டுக்கொண்டு காலை நாலு மணிக்கு லெட்சுமி வெடியை பத்த வைக்கிறேன்னு வெடி அல்ரெடி பற்றியது தெரியாமல் குத்த வைத்துக் கொண்டு பத்தியை வைத்துக் கொண்டு தடவு தடவுன்னு தடவியதில், வெடி வெடித்து அடுத்த தீவாளியிலிருந்து கூலிங் க்ளாஸுக்கு வேட்டு வைக்கப்பட்டது. நல்லவேளை அந்த தரம் எனக்கு எதுவும் சேதாரம் இல்லை.

தீபாவளியை ஒட்டி சினிமா ரிலீஸ் தவிர எங்கள் வட்டத்தில் பேசப்படும் இன்னொரு முக்கியமான டாபிக் யார் வீட்டில் எவ்வளவு ரூபாய்க்கு வெடி வாங்கியிருக்கிறார்கள் என்பது. நூறு ரூபாய்க்கு வெடி வாங்குபவர்கள் எல்லாரும் வி.ஐ.பி ஸ்டேடஸ். என்ன தான் அண்டப் புளுகு புளுகினாலும் வீட்டு வாசலில் வெடிக் குப்பை இருந்தால் தான் நம்பப்படும். "நல்ல நாள் அதுவுமா ஏண்டா தெருவெல்லாம் பெருக்கற?" அம்மா எவ்வளவு புலம்பினாலும் யாரும் பார்க்காத போது அடுத்த வீட்டுக் குப்பையையெல்லாம் பெருக்கி நம்வீட்டில் போட்டால் தான் பந்தா விடுவதற்கு நிம்மதியாக இருக்கும். அணுகுண்டையெல்லாம் நான் ஒத்தக் கையாலயே பத்த வைத்து போடுவேன் தெரியுமான்னு பத்தவைத்து எங்கயாவது போட்டு "வானரம் அவதாரம் எடுத்து அப்படியே வந்திருக்கு"ன்னு நாலு பேர் புகழும் போது எவ்வளவு ஆனந்தம். இந்த மாதிரி வயத்தெரிச்சல் சில சமயம் அதிகமாகி லெட்சுமி வெடி கையிலேயே வெடித்து, இதெல்ல்லாம் அண்ணனுக்கு தூசு என்று உதார் விட்டு ஒருத்தரும் பார்க்காத போது ஓரமாய் போய் தண்ணீரில் கைவிட்டு "அவ்வ்வ்வ்வ்வ்" என்று அரற்றி, அடிக்கடி வாயில் விரலை வைத்து சூப்பி பக்கோடா காதர் மாதிரி முழித்த அனுபவமும் உண்டு. ராக்கெட்டைப் படுக்கவைத்து தான் விடுவோம்ன்னு தெருவில் வானர மாநாட்டில் ஒரு கும்பலாக தீர்மானம் எடுத்து விட்டு அது ரோட்டில் போவோர் வருவோரை துரத்த...அடுத்த கட்டமாக அவர்கள் எங்களைத் துரத்த..இதெல்லாம் இல்லாத தீபாவளி தீபாவளியா என்று இருக்கிறது.

மாடு விரட்டி கணேசா...எங்க வீட்டுல இந்த தரம் ஐந்நூறு ரூபாய்க்கு வெடி வாங்கியிருக்குன்னு கடை பரப்பி பந்தா விட்டுக்கொண்டிருக்க.."எங்க ஒரு தரைச் சக்கிரத்தைப் பத்த வைத்துக் காட்டு பார்ப்போம்"ன்னு ஒரு வானரம் உசுப்பேத்திவிட...அவனும் அங்கேயே பத்த வைத்து அது சுத்தி சுத்தி எல்லாவெடியையும் பத்த வைத்து விட, அவர்கள் வீடு வாசலறையில் இரண்டு நாள் முன்னாடியே தீபாவளி வந்து விட - அது என்னம்மோ அவ அப்பாவுக்கு ரொம்ப பிடிக்காமல் அவன் முதுகிலேயே தீபாவளி கொண்டாடிவிட்டார்.

காலை இரண்டு மணிக்கு இந்தப்பக்கம் ஒரு அனுகுண்டை வைத்து தெருவில் எல்லாரையும் எழுப்பினால் அந்தப் பக்கம் இன்னொரு வானரம் பதில் அனுகுண்டைவைத்து சங்கேத மொழி பேசும் காலம் எல்லாம் மலையேறிப் போச்சு போல இருக்கு. ஒரு மணி நேரம் வெடி போட்டுவிட்டு டி.வி. பொட்டி முன்னால் மஙக்ள இசை, நடிகர்கள் வாழ்த்து, நடிகைகள் பேட்டி, புதுப்பாடல், பட்டிமன்றம், உலகத் தொலைகாட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பப் படும் படம் என்று தீபாவளி கொண்டாடும் முறையே மாறிவிட்டது.

குறையாகச் சொல்லவில்லை...மாற்றுங்களைய்யா...டீ.வி. பொட்டியிலிருந்து வெளி வந்து சந்தோஷமாக இந்த தீபாவளியைக் கொண்டாடுவோம்...குடும்பத்தோடு தெருவிற்கு வாங்கள்..(தீபாவளிக்கு கொண்டாடுவதற்குச் சொன்னேன்பா) மக்களோடு மக்களாக சந்தோஷமாக கொண்டாடுவோம். சாலமன் பாப்பையாவும், நமீதாவும் எங்கேயும் போய்விட மாட்டார்கள்.. நாம் வெளியில் வந்து கொண்டாடினால் இன்னும் நாலு பேர் வருவார்கள்...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!

Thursday, October 19, 2006

தீவாளி கொண்டாடுங்க மக்கா

அருமை நண்பர்களே, சக வருத்தப்படாத வாலிபர்களே, வாலிபிகளே! ஒங்க அல்லாப்பேத்துக்கும் நன்றி. எதுக்கா? இதை படிக்கப் போறீங்கல்ல...அதுக்கு தான். இன்னும் ரெண்டு நாளுலே தீவாளிய்யா. முன்னாடி சின்னபிள்ளலே ஆசை ஆசையா இருக்கும் , அய் திவாளி வந்திருச்சு புதுச்சட்டை , பட்டாசு கிடைக்கும்னு. இப்பவும் தீவாளின்னதும் அதே சந்தோஷம் வந்து ஒவ்வொருத்தரையும் தொத்திக்கத் தான் செய்யிது. நமக்கெல்லாம் பலபேத்துக்கு வெடி வெடிக்கிறேன்னு சொல்லி வீரசாகசங்கள் எல்லாம் பண்ணி அது கைகாலிலே வெடிச்சு வைச்சு விழுபுண்ணுக வாங்கிருப்பீங்க. அது கடைசிலே தீவாளியைப் புண்வாளியா ஆக்கி வைச்சிருக்கும். அணுகுண்டு, சரவெடி, லட்சுமி வெடி, யானை வெடி, குதிரை வெடின்னு வெடியெல்லாம் வெடிக்க விட்டு தெரு,வீதியெல்லாம் குப்பையாக்கி காது கேட்காத பெருசுக காதிலே கூட ரத்தம் வர்ற அளவுக்கு சத்தமான வெடியெல்லாம் வெடிச்சு சரித்தர சாதனைகளும் நடத்திருக்கும். அதுதான் நானும் சொல்லவர்றேன், வெடி வெடிக்கிறது சுற்றுபுறச்சூழலுக்கு ஏத்தது இல்லன்னோ இல்லே வெடிக்க பயந்தோ அதை வாங்காம வெடிக்காம இருந்துராதீங்க அப்போய்.

வெடிக்கிறேன்னு சொல்லிப்பிட்டு கையிலே தூக்கிபோடுறேன் , காலால் ஏத்தி விளையாடிருன்னு சொல்லி விளையாட்டெல்லாம் பண்ணபிடாது. அப்புறம் பர்னால்லும், தேங்கண்ணே, ப்ளூ மையின்னு கையெல்லாம் ஊத்திக்கிட்டு திரியணும்.அப்புறம் இந்த 102 கீயையும் தட்டமுடியாது, ஓரமா கெடக்கிற எலியேயும் புடிச்சு ஆட்டமுடியாது. மொத்ததிலே இப்போ மாதிரி வேலை பார்க்கிறமாதிரி நடிக்க முடியாது. ஏதோ உங்க சத்துக்கு தக்கமாதிரி நாலஞ்சு பட்டாசு டப்பாவை வாங்குங்க, அடுத்தவங்களுக்கு தொல்லை குடுக்காத சத்தம் கம்மியா குடுக்கற பட்டாசைக் கொளுத்தி கொண்டாடுங்க. கீழே படத்துல இருக்கற மாதிரி பட்டாசெல்லாம் ரத்தத்தைக் கண்டு அஞ்சாத என்னைய மாதிரி வீரனுங்க தான் கொளுத்த முடியும். அதெல்லாம் நீங்க யாரும் முயற்சி பண்ணி பாக்காதீங்க.
நீங்கெல்லாம் வெடிக்கல்னன்னா பரவாயில்லே! ஏதோ உங்க ஏரியாக்குள்ளே இருக்கிற ஏழை குழந்தைகளுக்குக் கொடுங்க. நீங்கெல்லாம் பட்டாசு வாங்கலைன்னா அந்த பட்டாசு தொழிற்சாலை மொதலாளிக்கு கொஞ்சம் தான் நஷ்டம் ஆனா தொழிலாளிக்கு வருசம் பூராவும் கூலி நஷ்டமப்பா. நம்மால ஆனா உதவியா பட்டாசு செய்யிற தொழிலாளிக்கும் உதவி பண்ணின மாதிரி இருக்குமில்லே . அப்புறம் கொஞ்சூண்டு காசை உங்க ஏரியா பக்கத்திலே இருக்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கும்,அனாதை ஆசிரம பிள்ளைகளும் கொடுங்கப்பா. இந்த உலகமே நம்மோட அன்பபை மையப் புள்ளியா வச்சு சுத்துற வட்டமின்னு சொல்லீருக்காங்க பெரியவங்க! நம்ம அப்பனும் மக்கா சுப்பனும் சொன்னது தப்பா போகுதில்லே? ஏதோ எனக்குத் தெரிஞ்சதே சொல்லிருக்கேன். நீங்க அதுக்காக பீலீங் ஆப் கேலக்ஸில்லாம் ஆவ வேணாம். அதுதான் வேலை பார்க்காட்டியும் வேலை பார்க்கிற மாதிரியே நடிச்சு பேரு வாங்குற ஒரு வருத்தப்படாத வாலிபனுக்கு ஏத்த ஜைனடிக்கப்போய்!

தீவாளிக்கு ரெண்டு நா கழிச்சு ரம்சான் வேற வருது. தீவாளி அன்னிக்கு மட்டும் ஒரு பத்து இட்லி கறிகொழம்போ, பருப்பு சாம்பாரோ ஊத்தி சாப்பிட்டு பிட்டு அப்புறம் சுட்டு வைச்சிருக்கே பலகாரமெல்லாம் தின்னு முடிச்சு மறுநா நல்லா தீவாளி லேகியத்தே வாங்கி ஒரு உருண்டை வகுத்துக்குள்ளே திணிச்சிருங்க . ஹி ஹி அப்போதான் பிரியாணி புல்கட்டு கட்டமுடியும்.

(இப்பதிவின் உருவாக்கத்துக்கு உதவி செய்த அருமை தம்பி மதுரை வீரன் "ராயல் ராம்"சாமிக்குச் சங்கம் தன் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது)

Tuesday, October 17, 2006

விடு'தலை-தேன்கூடு போட்டிக்கு

ரொம்ப சூடா போயிட்டு இருக்கிற தேன்கூடு போட்டிக்கு தனியாளா எழுதிதான் இருக்காங்க. முதன் முறையா ஒரு குழுமமா சங்கம் சார்பா போட்டியில கலந்துக்க முடிவு செஞ்சு எழுதி இருக்கிற படைப்புதான்(!?) இது.* நம்ம இட்லி வடையும் இப்போ சுறு சுறுப்பா உள்ளாட்சி தேர்தல் பக்கம் வேலையா இருக்காங்க.
* கோவி கவிதையும், கதையுமா பின்ன, SK இன்னும் வேகமா பாலியல் கல்வி - பெற்றோருக்காக எழுதி பின்னி பெடல் எடுக்கிறாங்க.
* ரவியோ வேலை குடுக்கிற எஜமானர் ஆகிட்டாரு
* லக்கியும் மாயவரத்தாரும் உள்ளாட்சி தேர்தல மையமா பதிவுகளை ஆரம்பிச்சு இருக்காங்க.
* வெட்டிப் பதிவு பக்கம் போனாலே ஒரே தெலுங்கு வாடை, சங்கம் பக்கம் வந்தாதான் தமிழ் வருது அவருக்கு.
* ராசுகுட்டி எஸ்கேப், கைப்பு ஆமைதாபாளையத்து இட மாற்றம், புதுப்பொலிவோட தேவு கச்சேரி....

"Stop this non-sense"

"யாருப்பா அது, கவுண்டமணியா? சங்கத்துக்கு மீட்டிங்கில நீங்க எப்படி ......"

"அப்படித்தான்டா வருவேன். அடங்கொக்க மக்கா, இப்போ தான் தெரியுதா, போட்டியில கலந்துக்கிறீங்கன்னு சொல்லிட்டு அப்புறம் அதுக்குடா இவ்ளோ ஜல்லி அடிக்கிறீங்க? செல்லிகாட்டுக்கு தார் ரோடா போடப்போறீங்க?"

"அட இன்னும் இருக்குங்க மணி சார்"

"இன்னுமா இருக்கு? நாசமா போங்கடா. I am the escape"

இதோ இன்னும் கொஞ்சம் ஜல்லி அடிச்சுறோம்....

தடாலடியார் போட்டியில கலந்துக்கிற எல்லாருமே அந்த பரிசுக்காக இல்லே. போட்டி நடத்துற முறை புதுப்புதுசா இருக்கும். அதான் மஜாவே. ஒரு தடவை ஒரு வரியில சொல்ல சொல்லுவாரு, ஒரு தடவை பத்து கேள்வி கேட்டு பதில் சொல்லுவாரு.

அதே மாதிரி இந்தத் தடவை தேன்கூடு போட்டிக்கு நாமும் ஒரு புதுமை செஞ்சி இருக்கோம். அது ஒரு வார்த்தை.

"டேய், விட்டுருங்கடா படிக்கிறவங்களை, விஷயத்து வாங்கடா"

"வெய்டீஸ் மணிசார்"

சங்கம் சார்பாவும் அந்த படைப்பு இருக்கனும், தேன்கூடுக்கும் செட் ஆவனும்.

" ஆமா, பெரிய ஐஸ்வர்யா ராவை செட் பண்றீங்க. என்னான்னு அந்த ஒரு வார்த்தையை சொல்லித்தொலைங்கடா"

"மணி சார், தலைப்புக்கு ஏத்த மாதிரி படைக்கிறது பழைய ஸ்டைல்.."

"அப்புறம்"

"தலைப்பையே படைப்பாக்குறது சங்கம் ஸ்டைல்"

"இப்படியே சொல்லிக்கிட்டு இருந்தா படிக்கிறவங்க மண்டைய பிச்சிக்கிட்டு ஏர்வாடிதான் போவனும். அது என்னாங்கடா தலைப்பையே படைப்பாக்குறது"

"மணிசார், எங்க கைப்பை நீங்க எல்லாம் எப்படி கூப்பிடுவீங்க?"

"மரமண்டைத்தலையான்னு"

"உங்கள போய் கேட்கிறோம் பாருங்க, எங்கள சொல்லனும்.."

"அப்புறம் ஏண்டா கேட்கிறீங்க?"

"சரி, நாங்க எல்லாம் எப்படி கூப்பிடுவோம்?"

"தலை'ன்னு"

"சரி, எங்க தலை வாங்காத ஆப்பு இல்லே, அடி இல்லே, பட்டக்ஸ்ல வாங்காத தீக்காயம் இல்லே. விவேக், நீங்க, கோவை சரளா எல்லாரும் அடிச்சும் தலை இன்னியும் ராவா தண்ணியடிக்கிற தெம்புல இருக்க என்ன காரணம்? யாருக்காவது தெரியுமா?"

"ங்கே......'

"ஏன்னு தெரியுமா மணிசார். அதுக்கெல்லாம் நாங்க சொல்ற ஒரு வார்த்தைதான். அதுதாங்க இந்த மாதம் தேன்கூடி போட்டிக்கு நாங்க குடுக்கிற படைப்பு அது...

விடு'தலை.. அடிச்சா அடிச்சுட்டு போவட்டும்.....


"போங்கடாங்கோ...I am the escape"

Sunday, October 15, 2006

சையன்ஸ் பிக்க்ஷன் மாதிரி..

"உட்காருங்கள்..இன்னும் பத்து நிமிஷத்தில் பிரசாத் உங்களை அழைப்பார்" - எல்லா ஆஸ்பத்திகளிலும் வழக்கமாய் சொல்லுவது போல் டாக்டர் என்று சொல்லாமல் பிரசாத் என்று அந்த அழகுப் பதுமை சொன்ன போது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

"ஒருவேளை டாக்டருக்கும் ரிசப்ஷனிஸ்டுக்கும் ஒரு இது இருக்குமோ?" அவன் மனம் நதிமூலம் ஆராய முற்பட்ட போது ஒரு அதட்டு போட்டு மனதை அடக்கிக் கொண்டான். அவள் இவன் நினைப்பதையெல்லாம் பற்றி அலட்டிக் கொள்ளாமல் ஐஸ்குச்சி மாதிரி எதையோ வைத்துக் கொண்டு நளினமாய் நகத்தை ராவிக் கொண்டிருந்தாள்.

ஒரு கடி கடிச்சு இழுத்து துப்பி எறியாமல் ஏன் இந்த இழவ இப்படி சிங்காரித்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு எரிச்சலாக வந்தது. நல்லவேளை அவன் பொறுமையை இழப்பதற்கு முன்னால் பிரசாத் உள்ளே அழைத்துவிட்டார்.

"ஹலோ டாக்டர்...ஐ ஆம் சந்திரா"

"சந்திரா நீங்க என்னை பிரசாத்னே கூப்பிடலாம்..டாக்டர் எல்லாம் அவசியம் இல்லை"

"ஏன் நீங்க இன்னும் டாக்டர் பரீட்சை பாஸ் பண்ணவில்லையா?"

"ஹா ஹா குட் ஒன். சொல்லுங்க...ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?"

"மிஸ்டர் பிரசாத் எனக்கு கொஞ்ச நாளா ஒரு பிரச்சனை. சாரி இது பிரச்சனையான்னே எனக்குத் தெரியாது...எதுக்கும் ஒரு ஒபினியன் கேட்கலாம்னு தான் வந்திருக்கேன்" - சொல்லிக் கொண்டே கொண்டுவந்திருந்த பையிலிருந்து அந்த அழகான கடிகாரத்தை எடுத்து மேஜை மேல் வைத்தான். அழகிய வேலைப்பாடுகளுடன் பந்து வடிவத்திலிருந்த அந்த டிஜிட்டல் கடிகாரம் பேக்லிட்டில் கண்ணைச் சிமிட்டிக் கொண்டிருந்தது.

"வாவ் அழகா இருக்கே..கண்டிப்பா நம்மூர்ல செஞ்சது இல்லை போலிருக்கே...அமெரிக்காவா ஐரோப்பாவா இல்லை சைனாவா?"

"எனக்குத் தெரியாது மிஸ்டர் பிரசாத். இது என்னோட நண்பன் கிட்டேர்ந்து என்னிடம் வந்தது. பிரச்சனையைக் கேட்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். என் நண்பன் ராகவ் இதை மூன்று மாதங்களுக்கு முன்னால் எடுத்துக் கொண்டு என்னிடம் வந்தான்...அவனுக்கு கிஃப்டாக வந்ததாம் இந்த கடிகாரம்" அவன் சொல்லிக் கொண்டே அடிக்கடி அந்தக் கடிகாரத்தை பத்து நொடிக்கொருமுறை பார்த்துக் கொண்டான்.

"மிஸ்டர் சந்திரா இந்தக் கடிகாரம் உங்கள் கவனத்தை திசை திருப்புகிறது என்று நினைக்கிறேன். இதை சொல்லி முடிக்கும் வரையில் நாம் தவிர்க்கலாமே" பிரசாத் தனது கைக்குட்டையினால் அந்தக் கடிகாரத்தை மூடினான்.

"யெஸ் பிரசாத் யூ ஆர் ரைட். கொஞ்ச நாளாக நான் இந்த கடிகாரத்தை பார்க்கும் போதெல்லாம் ஒரு விநோதமான பிரச்சனை. நான் பார்க்கும் போதெல்லாம் நேரம் யுனீக்காக இருக்கிறது. 12:12, 10:10, 07:07, 12:34 இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.."

"ம்ம்..அது உங்கள் மனதை உறுத்துகிறது ரைட்?"

"எக்ஸாட்லி"

"இதில் சலனப்படுவதற்கு ஒன்றும் இல்லை சந்திரா..இது ரொம்ப நார்மல்..ஜஸ்ட் கோ இன்ஸிடென்ஸ்...இந்தக் கடிகாரத்தின் அழகு உங்களை கவர்ந்திருக்கலாம்..அதனால் நீங்கள் இதை அடிக்கடி பார்த்துக் கொண்டிருக்கலாம்...நீங்கள் பார்த்துக்கொண்டிருந்த நேரங்கள் அந்த வித்தியாசமான நொடிகளாய் இருந்திருக்கலாம்...இந்த விபரங்களை ஒரு முதுகலை கணித மாணவனிடம் கொடுத்தால்..கணக்கு போட்டு உங்களுக்கு இது நிகழக் கூடிய ப்ராபபலிட்டியை சொல்லிவிடுவார்கள். ரொம்ப சிம்பிள் உங்களை மாதிரி நானும் பார்த்துக் கொண்டிருந்தால் எனக்கும் நிகழக் கூடியது தான் இது"

"எனக்குப் புரிகிறது டாக்டர். என் நண்பன் இதைக் கொடுத்தான் என்று சொன்னேன் அல்லவா...அவனுக்கு இதே பிரச்சனை என்று சொல்லி தான் என்னிடம் வந்தான். நானும் நீங்கள் சொன்ன மாதிரியான விளகத்தைச் சொல்லி தான் இந்தக் கடிகாரத்தை வாங்கிக் கொண்டேன் "

"ஹூம்...வெல்டன் அப்புறம் என்ன..."

"என் நண்பன் கூடுதலாக ஒரு விபரம் சொன்னான். நான் முன்பு சொன்ன நேரங்கள் தவிர்த்து அவனுக்கு 99:99 என்ற நேரமும் அடிக்கடி தெரிவதாக சொன்னான். அது தான் கொஞ்சம் இடித்தது. நானும் கடிகாரத்தில் கோளாறு இருக்கலாம் என்று அவனிடமிருந்து வாங்கி வைத்தேன். இதுவரை நான்கு கடைகளில் கொடுத்து செக்கப் செய்தாயிற்று. கடிகாரத்தில் பிரச்சனையே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அவன் சொன்னதை சரிபார்ப்பதற்காக நானும் அடிக்கடி கடிகாரத்தை நோட்டம் விட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நார்மலாகத் தான் இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் எனக்கும் அடிக்கடி 99:99 தெரியா ஆரம்பித்து இருக்கிறது..அதான் உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன்"

"இன்ட்ரெஸ்டிங்...ம்ம்ம்....ஹாலூசினேஷன் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா?"

"கேள்விப் பட்டிருக்கிறேன்..."


"மாயை..சில சமயம் நமது மனம் மூளை இவை விசித்திரமாக செயல்படும். நமது மூளை இருக்கிறதே..அதன் அமைப்பு அவ்வளவு விந்தையானது, சிறப்பானது. மருத்துவ உலகின் மிக முக்கியமான ஆராய்ச்சிகளில் ஒன்று மனித மூளையின் செயல்பாடுகளை புரிந்து செயல் படுத்த முயன்று கொண்டிருக்கும் ஆராய்ச்சி. எந்த அளவில் என்று தெரியுமா? லட்சத்தில் ஒரு பங்கு கூட கிடையாது. இதில் ஒரு பகுதியையாவது கிழித்துவிடுவோம் என்று ஐ.பி.எம்மும் ஸிவிஸ் விஞ்ஞானிகளும் இறங்கி இருக்கிறார்கள், ஆனால் இன்னும் நம்பிக்கை பிறக்கவில்லை. எதற்கு சொல்கிறேன் என்றால் இந்த ஹாலுசினேஷன் என்பது மூளையின் பில்லியன் கணக்கான ந்யூரான்களில் ஏற்படும் ஒரு கெமிக்கல் எஃபெக்ட். சில பேருக்கு குரல்கள் கேட்கலாம்..சில பேருக்கு உருவங்கள் தெரியலாம். அந்த மாதிரியாக உங்கள் நண்பர் சொன்னதிலிருந்து நீங்கள் கடிகாரத்தையே பார்த்துக் கொண்டிருப்பத்னால் வந்த விளைவு தான் இது. கவலையே படாதீர்கள்...நீங்கள் மிக மிக ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறீர்கள். குணப்படுத்திவிடலாம். ஆனால் அதற்கு முன்னால் உங்களை இன்னும் தரோவாக செக்கப் செய்யவேண்டும்

"எனக்கு என்னமோ இது அது மாதிரி தெரியவில்லை டாக்டர்"

"சந்திரா நான் சொன்ன மாதிரி நீங்கள் மிக மிக ஆரம்ப கட்டத்தில் இருக்கிறீர்கள் என்று நான் சந்தேகம் தான் படுகிறேன். நான் சில டெஸ்டுகள் எடுத்துப் பார்த்து விட்டால் அதுவும் தெரிந்துவிடும்...என்ன சொல்லுகிறீகள்"

"செலவு.."

"நிறைய ஆகாது வெறும் டெஸ்டுகள் தான்...நீங்கள் நாளை காலை வாருங்கள்..அதற்கு முன்னால் இந்த கடிகாரத்தையும் எனக்குத் தெரிந்த இடத்தில் கொடுத்து சோதித்து பார்த்துவிடுவோம்..கடிகாரம் தான் பிரச்சனை என்றால்...ரிப்பேர் சார்ஜ் மட்டும் கொடுங்கள் போதும் என்ன..ஹா ஹா"

சந்திரா அந்த ஜோக்கை அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது அவன் கவலை தோய்ந்த முகத்துடன் கிளம்பிச் சென்றதிலேயே தெரிந்தது.

"பிரசாத் இன்று நீங்கள் மிஸ்டர் ரெட்டியை சந்திப்பதாக சொல்லியிருக்கிறீர்கள்" ரிசப்ஷன் பதுமை பதவிசாக வந்து நியாபகப் படுத்தியபோது பிரசாத் அந்த மெடிகல் ஜார்னலில் ஆழ்ந்திருந்தான்.

"ஓ மை காட் மறந்தே போய்விட்டேன்...இதோ கிளம்புகிறேன்...இன்றைக்கு வந்த ஆள் நாளை மீண்டும் வருவான்...அவனுக்கு இனிஷியல் டெஸ்ட் ஒன்று செய்ய ஏற்பாடு செய்துவிடு..ஆரம்ப கட்டமாய் தான் தோன்றுகிறான்..பார்ப்போம்"

டாக்டர் பிரசாத் பக்கத்திலிருந்த பாத்ரூமில் முகம் கழுவிப் புறப்பட்டான். கைக்குட்டையை எடுத்துக் கொண்டு கிளம்பும் போது கண் அநிச்சையாய் சந்திராவின் கடிகாரத்தில் மணி பார்த்தது...துல்லியமாக 99:99 என்று அவனைப் பார்த்து கண்சிமிட்டியது.

பி.கு- இந்தக் கதைக்கும் வேறொருவரின் வலைப்பதிவுக்கும், எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. விபரங்கள் பின்னூட்டத்தில் அல்லது அடுத்த பதிவில்.

பி.கு2 - இந்தப் பதிவ படிச்சிட்டு சாவித்திரி வாடை வருது சுஜாதா வாடை வருதுன்னு பின்னூட்டம் போடாதீங்க இப்போவே சொல்லிப்புட்டேன்...போதும் நிறுத்திகிரலாம் :)

Thursday, October 12, 2006

Sangam Technologies Part-1 (Farmer)

"ஆகா... என்ன சொகம்டா சாமி... கால் மேல கால் போட்டுகிட்டு இந்தக் கயித்து கட்டிலே படுத்துகிட்டு அவுட்சைட் காத்து வாங்கிட்டு, காவேரி ஆத்தைப் பாத்துக்கிட்டே சிந்திக்கிற சொகம் இருக்கே சாமி.. சக்க சொகம்டா"

"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி..விவசாயீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.. விவசாயி"

அப்போது அங்கு சல்லென்று வெள்ளை வேன் ஒன்று வந்து சடன் பிரேக் அடித்து நின்றது. வேன் கதவு திறந்து ஜோடியா ஒரு குறுந்தாடியும் ஒரு அல்ட்ரா மாடர்ன் லேடியும் இறங்கினாங்க....தோப்புக்குள்ளே கயித்துக் கட்டிலே கவுந்துக் கிடந்த விவசாயி லைட்டா ஜெர்க்காகி முகத்தை மூடியிருந்த தொப்பியை ஸ்டைலா வீசிட்டு கண்ணைத் திறந்தா.. அந்தக் குறுந்தாடி அவுட் ஆப் போகஸ்ல்லயும் லேடி அல்ட்ரா போகஸ்ல்லயும் விவசாயி கண்ணுக்கு தெரிஞ்சாங்க....

லேடி மைக் ஒண்ணைக் கொண்டு வந்து விவசாயி கிட்ட நீட்டி...
"ஹாய்...."

"அதெல்லாம் காலையிலேயே ஆயிருச்சு"

"சீ..ஹலோ..."

"இது போன் பேசுற நேரம் இல்ல... கேக்க வந்ததைப் பட்டுன்னு கேட்டுட்டு, சட்டுன்னு எஸ்கேப் ஆனீங்கன்னா நான் என் ஓர்க்கைக் கன்டினீயூ பண்ணிக்குவேன்"

"ஓ..அவ்வளவு முக்கியமான வேலையில இருக்கீங்களா.. பார்த்தா அப்படித் தெரியல்லீயே"

"எனக்கு கூட உங்களைப் பார்த்தா என்ன என்னமோ தெரியுது அதுக்காக...."

"ஹே நீ ரொம்ப பேசுற..." எனக் குறுந்தாடி குறுக்கிட...

"என்னப் பண்றது பழக்கம் அப்படி...""சரி.. எதோ முக்கியமான வேலைன்னு சொன்னீயே அது என்ன?"

"சிந்திக்கிறேன்...அல்லும் பகலும் சிந்திக்கிறேன்...காலையிலே கழிவறையிலே துவங்குற சிந்தனை... அப்படியே ராவைக்கு ராவா சைஸா ஊறுகாய் தொட்டுட்டு உள்ள உட்டுகிட்டு குப்புற விழுந்து குறட்டை விடுற வரைக்கும் கன்டினீயூ ஆகுது"

"சோ நீ ஒரு வெட்டி வில்லேஜ் பாய்.. அப்படித் தானே"

"பாவாடைக் குட்டையா இருந்தாலும்... உன் மூளை ஒரளவுக்குக் வளந்து தான் இருக்கு.. அதை நான் பாராட்டுறேன். சில பேர் வெட்டிப்பயன்னு கூட பேர் வெச்சு இருக்கானுவ. அவுங்க எல்லாம் வெட்டியாவா இருக்காங்க? ..."

" உன்னை மாதிரி இளைஞர்கள் உழைச்சா எவ்வளவு நன்மைன்னு தெரியுமா?" குறுந்தாடி சவுண்டாய் அட்வைஸ் விட

"ஆடு மாதிரி உன் லுக் மட்டும் இல்ல சவுண்ட் கூட அப்படித் தான் இருக்கு மேன்.. ஓ.கே.. ஓ.கே லேடி அண்ட் தாடி உங்க வழிக்கே நானும் வர்றேன்... உழைச்சா என்ன நனமை டைம் வேஸ்ட் பண்ணாம டக்ன்னு சொல்லுங்க?"

"உழைச்சா நிறைய பணம் சம்பாதிக்கலாம்"

" பணத்தைச் சம்பாதிச்சு என்ன பண்ணுறது?"

"நிறைய சொத்து வாங்கலாம்"

"அந்த சொத்து எல்லாம் வாங்கி"

"வயசுக் காலத்துக்கு சேத்து வைக்கலாம்"

"சேத்து வச்சி...சொல்லு மேன் பக்கத்துல்ல எட்டிப் பாக்காதே"

" சேத்து வச்சி... சொகமா இப்படி தோப்பு துரவுன்னு வாங்கிட்டு வாழலாம்"

"ஏ ஆட்டுத் தாடி.. புல் பேண்ட் போட்டு இருக்க ஒனக்கு மூளை புல்லா வளரல்ல"

"ஏன் அப்படி சொல்லுறே வில்லேஜ் பாய்"

"என்ன நல்லாப் பார்.."

" பார்த்தாச்சு"
"இப்போ நான் என்னப் பண்ணுறேன்?"

"தோப்புல்ல கயித்து கட்டில்ல கால் ஆட்டிக்கிட்டு படுத்துகிட்டு இருக்கீங்க"

"அடேய் டுப்புக்கு டாபாக்கு.. எனக்கு வயசு முப்பது... இப்போவே நான் நீ அறுபதுல்ல செய்வேன்னு சொல்லறதெல்லாம் நான் செஞ்சுகிட்டு இருக்கேன்... சோ எதுக்குடா நான் உழைக்கணும்"

லேடியும் தாடியும் மிரள.. விவசாயி வாய்ஸ் எக்கோ ஆகிறது....

"கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி..விவசாயீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ.. விவசாயி"...

"இப்படித் தான் எனக்கு வேலைக் கொடுக்கணும் அமெரிக்கா வெள்ளை வீடு புஸ்... அப்புறம்... தம்மாத்தூண்டு மெல்லிஸ் அப்படின்னு எதோ பெரிய கம்யூட்டர் கடை வச்சிருக்க கதவுகாரரு...எல்லாம் வந்து எப்படியாவது என்னிய வேலைக்குச் சேத்துக்கணும்ன்னு தலை சைடா நின்னாங்க... நான் மசியல்லயே. ஆமைதாபாளையத்துல இருந்து.."

"அது ஆமைதாபாளையத்துல இல்லே ஃபார்மர், அகமதாபாத்"

"அது இங்கிலீசு, நான் சொல்றது தமிழு. தமிழ்ல சொன்னா வரி விலக்கம்ன்னு கலிஞ்சரூ சொன்னது தெரியாதா?"

"சரி.சரி..சரி மேல சொல்லுங்க."

"என்னாத்த மேல கீழன்னுட்டு. ஆமைதாபாளையத்துல இருந்து 'தல' கைப்புள்ளைன்னு ஒருத்தர் சங்கம் டெக்னிலஜீஸ்ன்னு ஒரு சங்கத்த ஆரம்பிச்சு வேலைக் கொடுத்தே ஆகணும்ன்னே ஒரு கடுதாசி போட்டு இருக்காரு அவர பார்க்கதான் நாளைக்கு போறேன்"
அவருதான் நான் வெவசாயமும் பார்த்துக்கலாம் அங்கன இருக்கிற வேலையையும் பார்த்துக்கலாம்னு சொல்லிருக்காப்புல. நாளைக்கு இண்டிரிவியு. பட்டணம் போறேன் வழிய உடு, நட்ட நடுவால நின்னுகிட்டு ஆளுங்களும் மொகறகளும்.. ஹூம்"

லேடியும், தாடியும் "எவ்வளவு மூளை இருந்து இருந்தா இந்த வெவசாயி எல்லாம் வேலை எடுக்க சரின்னு சொல்லி இருப்பாரு. எல்லாம் தலை விதி"

Sunday, October 8, 2006

ஞாபகம் வருதே...

தமிழ் திரைப்படங்கள் கேன்ஸரை விட்டு விட்டு செல்க்டிவ் அம்னிஷியாவை கையிலெடுப்பதற்கு முன்னரே எனக்கு சின்ன வயதிலேர்ந்து இந்த வியாதி உண்டு. "ஜிஞ்ஜினக்கு ஜனக்கு சொல்லித் தரேன் கணக்கு"- பாட்டெல்லாம் கரெக்டாக நல்லா நியாபகம் இருக்கும் ஆனால் ஒன்பதும் பன்னிரெண்டும் எவ்வளவுடா என்றால் திருதிருதரேஷ்வரா தான். இதில் தெரிந்த குடும்ப வட்டத்தில் ஒரு மாமா மனக்கணக்கு போட்டால் தான் புத்திசாலிப் பட்டம் வழங்குவார். தெருவில் கல்யாணம், சீமந்தம் எல்லாத்திலும் என்னைப் போன்ற வாண்டுகளைப் பிடித்து வைத்துக் கொண்டு "ஐந்து மாம்பழத்தை நான்கு பேர்களுக்கு சமமாய் பங்கு போட்டுக் குடுக்கனும்னா எத்தனை துண்டங்கள் போடவேண்டும்" என்று அமிதாப்பச்சன் மாதிரி கேள்வியெல்லாம் கேட்பார். "நறுக்க வேண்டாம் அப்படியே காக்கா கடி கடிச்சுக்கலாம்"னு சொன்னா ஒத்துக் கொள்ள மாட்டார். "ஒருத்தன் பத்து எருமைகளை குளிப்பாட்ட போன போது இரண்டு எருமைகள் ஆத்தோடு போச்சு, ஒரு எருமை தானா வீடு வந்து விட்டது..அப்போ அவன் திரும்ப வரும் போது எத்தனை எருமைகளை ஓட்டிவருவான்"- வித விதமாய் கணக்கு கேட்பார். பேப்பர் பேனாலாம் கிடையாது. விரலை மடக்க கூடாது எல்லாம் மனக் கணக்கு தான்.அவரப் பார்த்தாலே நான் பாக்கெட்டுக்குள் கையை விட்டுக்கொள்வேன். உள்ளே விரலை மடக்கி கூட்டிக் கழித்து விடையைச் சொன்னால் "தப்பு...இதுக்குத் தான் வெண்டைக்காய் நிறைய சாப்பிடனும்..அப்போ தான் நியாபக சக்தி நிறைய வரும் " என்பார். மாம்பழம் பங்கு போடறதுக்கும், எருமை மாட்டைக் குளிப்பாட்றதுக்கும் போய் எவனாவது கொழ கொழ வெண்டைக்காயை சாப்பிடுவானா என்று புத்திசாலித்தனமாய் இருந்ததில், சின்ன வயதிலிருந்தே சயன்ஸில் வீக், அத்தோடு இந்த செலக்டிவ் அமினிஷியா வியாதியும் வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

எங்க தாத்தாவைப் பொறுத்த வரை மனக்கணக்கு அவிழ்த்து விட்ட குதிரை மாதிரி ஓடவேண்டும் என்பார். எங்க...எனக்கு கணக்கு பேச்சு எடுத்தாலே நம்மள அவிழ்த்து விட்டா ஓடிவிடலாம் என்று தான் தோன்றும். கணக்கு மட்டும் இல்லை மற்ற பாடங்களும் பரீட்சை வரை தான் நியாபகம் இருக்கும் அப்புறம் நாமா இதைப் படிச்சு எழுதினோம்ன்னு இருக்கும். அப்புறம் தான் இது படிப்பு பிரச்சனை இல்லை நியாபகமறதிப் பிரச்சனை என்று தெளிவாச்சு. கல்யாண நாளை கேட்டால் டக்கென்று சொல்லிவிடுவேன் ஆனால் வருஷத்தை கேட்டால் சில சமயம் கஜினி மொட்டை சூர்யா மாதிரி மண்டைய அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஆட்டி பத்து விநாடி ஆகும் விடை வருவதற்கு. முதலில் வீட்டுக்காரியின் பிறந்தநாளும் இப்படித் தான் இருந்தது அப்புறம் வேப்பிலையடித்ததில் சரியாகிவிட்டது. வீட்டில் இந்த விஷயத்தில் கொஞ்சம் கெட்டி. பேப்பர் பேனா கிடைக்காவிட்டால் இந்த நமபரை கொஞ்சம் நியாபகம் வைச்சுக்கோ என்று சொல்லி விட்டு அப்புறம் கேட்டால் டாண் என்று வரும். ஆனால் அதான் எனக்குப் பிரச்சனையே. "கல்யாணப் பரிசு" தங்கவேலு மாதிரி அடிக்கடி மாட்டிக்கொள்வேன்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு மாதிரி இப்பவும் பயப்படுவது ஒரு விஷயத்துக்கு என்றால் அது கோயிலில் அர்சனைக்குத் தான்.(ஹூம் கோயிலுக்குப் போறதே ரொம்ப அபூர்வமாகி விட்டது இப்பவெல்லாம்). குடும்ப சகிதமாய் போய் தான் அர்சனை வைப்போம் என்பதால் வசமாய் மாட்டிக்கொள்வேன். அர்சகர் அர்சனை சீட்டைக் குடுத்தால் பூஜை செய்வார் என்ற பாடு கிடையாது. பெயர் நட்சத்திரம் கேட்க ஆரம்பித்துவிடுவார். நமக்கு அங்கே தான் உதறலே..தங்கமணி குஷியாய் பின்னால் இருந்து நமுட்டுச் சிரிப்புடன் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பார். 99 சதவீதம் பெயர் மட்டும் தான் கரெக்டாக இருக்கும் நட்சத்திரத்தை குழப்படி செய்துவிடுவேன். அப்புறம் தங்கமணி புகுந்து கரெக்ட் செய்து அம்மனுக்கு சாதா அர்ச்சனையும் எனக்கு தங்கமணியின் கடைக்கண் ஸ்பெஷல் அர்சனையும் நடக்கும். "நான் தடுமாறும் போது உனக்கு ஒரு அல்ப சந்தோஷம் பாரு...அதுக்காகததான் இதெல்லாம்...உங்கண்ணன்கிட்ட உன்ன சந்தோஷமா வைச்சிகிறேன்னு ப்ராமிஸ் பண்ணியிருக்கேன்...அதுக்குத் தான் இந்தமாதிரியெல்லாம்" ஹூம்...என்ன சமாளித்தாலும் எடுபடாது கோயிலில் துப்ப முடியாது என்பதால் "க்ர்ர்ர்ர்ர்..." என்று பி.ஜி.எம்முடன் நிப்பாட்டிக் கொள்வார்.

பெரும்பாலான கல்யாணமான பெண்களிடன் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. கல்யாணமான புதிதில் நடந்த ஸ்டாடிஸ்டிக்ஸில் எல்லாம் நோண்டி நொங்கெடுப்பார்கள். இந்த ஹோட்டல் நியாபகம் இருக்கா? ...இந்த புடவை நியாபகம் இருக்கா?.. எங்க எனக்கு இனிமே நடக்கப் போறதே நியாபகம் இருக்காது இதுல எப்பவோ நடந்ததெல்லாம் கேட்கவே வேண்டாம். ஆனா வாயக் குடுத்து மாட்டிகிறது கூட பொறந்த குணம். "சலங்கை ஒலி ஜெயப்பிரதா இதே கலரில் புடவை உடுத்திக் கொண்டு வருவாரே" என்று ஒரு தரம் சொல்லி அன்னிக்கெல்லாம் ஏக மரியாதை தான்.

சரி இந்தப் பிரச்சனையை இதுக்கு மேலும் வளரவிடக் கூடாது என்று இப்பவெல்லாம் வெண்டைக்காய் நிறைய சாப்பிடறேன்...ஆனா சலங்கை ஒலி ஜெயப்பிரதா மாதிரியான ஸ்டாஸ்டிக்ஸ் மட்டும் தான் நியாபத்துல நிக்குது. இந்த செலெக்டிவ் அமினீஷியாவிற்கு என்னிக்கு விடிவு காலம் பொறக்குமோ தெரியல. "சலங்கை ஒலி" ஜெயப்பிரதா தான் நல்ல வழி காட்டனும் !!

Monday, October 2, 2006

அன்புள்ள விநாயகம்,

அன்புள்ள விநாயகம்
நலம் நலமறிய அவல். என்னாடா டுபுக்கு அதிசயமா நமக்கு லெட்டர்லாம் எழுதறானேன்னு நினைக்காத, உன்னை மாதிரி ஆத்தங்கரையோரமா உட்கார்ந்துகிட்டு குளிக்கப் போகிற பிகர்களை லுக்குவிட்டுக்கிட்டு கொழுக்கட்டைய தின்னுக்கிட்டு ஒய்யாராமா உட்கார்ந்திருக்கிற பொழப்பில்ல என்னுது. நாயாப் பேயா ஓடியாடற பொழப்பு. ஐந்நூத்தி சொச்ச தமிழ் ப்ளாக்குல ஐம்பதாவது எட்டிப்பார்த்து ":))))))"- ஸ்மைலியோ, "சூப்பர் கலக்குறீங்க"ன்னோ, "எதார்த்தமான நடை..நல்லாருக்கு"ன்னோ, "இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன்"ன்னோ கமெண்டு போட்டாத்…தேன்...நம்ம கல்லாவுல இருபத்து சொச்சம் கமெண்டாவது தேறும். இதெல்லாம் இல்லாம "இன்னிக்கு இன்னிக்கு மூடே சரியில்ல..."ன்னு ஒத்த வரில போடற மொக்கை போஸ்டுக்கெல்லாம் "ப்ளீஸ் கம் பேக் சூன்"..."டேக் கேர்"..."நல்ல பாட்டு கேளு".."காலாற நடந்து வாகிங் போயிட்டுவா".."உனக்குமா??..எனக்கும் :)", "வில் மிஸ் யூ"...ன்னு நூத்துக்கணக்குல கமெண்டு குமியறதுக்கு நானென்ன...தங்கிலிஷ்ல எழுதற ஃபிகரா?? இல்ல இலவசக்கொத்தனாரா?

ஏதோ நாணுன்டு என் இருபது சொச்ச கமெண்டுண்டுன்னு இருந்தா, சும்மா கிடக்கிற சங்க ஊதிக்கெடுத்தானாம் ஆண்டின்னு சங்கத்துல இழுத்துவிட்டுடாரு கைப்ஸ். சரி ஏதோ சங்கதுல கூப்பிட்டு "அட்லாஸ்"ன்னு மரியாதை செய்யப்போறாங்கன்னு இங்க வந்து பார்த்தா...ஆளாளுக்கு தர்ம அடிக்கு சவுண்டு விட்டுக்கின்னு இருக்காங்க. அப்பனே விநாயகம்...எனக்கு பயமாயிருக்கு காப்பாத்தைய்யா.

அப்பனே விநாயகம் உன்னை எனக்கும் உனக்கும் இன்றைக்கு நேற்றைக்கா பழக்கம்? உனக்கு நினைவிருக்கிறதா...97ல் நுங்கம்பாக்கம் ஹை ரோட்டில் நடந்து போய்கொண்டிருக்கும் போது ஒரே கூட்டம். என்னடா கூட்டம் என்று வந்து கொண்டிருந்த மார்வாரியைக் கேட்க.."விநாயம் பால் குடிக்கிறான்.." என்று ஏதோ சேட்டு விட்டு பிள்ளை பால் குடிப்பது போல் சொல்லிவிட்டு போக...(அழகாய் இருக்கும்)மிஸ்.ரீனாவின் யுனிக்ஸ் ஷெல் ஸ்கிரிப்டிங் க்ளாஸ் போனால் போகிறது என்று கூட்டத்தை..நெருக்கியடித்துக்கொண்டு முன்னால் வந்து நீ பால் குடிக்கும் அழகைப் பார்த்து பக்தியுடன் தலையிலடித்துக் கொண்டவனல்லவா நான். ஆமாம் விநாயகம்...நீ பால் குடிக்கும் பருவத்திலிருந்தே உன்னை எனக்குத் தெரியும்.

ஏதோ பால் குடிச்ச..அத்தோடு நிப்பாட்டிக்கோ...இல்லைன்னா..உன் பெயரச் சொல்லி எங்க வீட்டுலல்லாம் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கொழுக்கைட்டையை அடுத்த வருஷத்திலிருந்து ஆஞ்சநேயருக்கு ட்ரான்ஸ்பர் பண்ணிவிடுவார்கள் என்று எவ்வளவு உரிமையோடு உனக்கு அறிவுரை சொல்லியிருப்பேன்? ஊரார் சிரிக்கச் சொல்லுவார் உற்றார் உரைக்கச் சொல்லுவார் நீ புரிந்து கொண்டிருப்பாய்.

"நான் சின்னப் பையன், சங்கத்தில் இருக்கும் பிள்ளைகள் அளவுக்கு இன்னும் வாலிப வயது வரவில்லை" என்று கைப்பிள்ளையிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்...கேட்டால் தானே. இங்கு வந்து பார்த்தால் ஒரு பெரிய கூட்டமே எனக்கு ஆப்பு வைக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது...ரொம்ப பயமாய் இருக்கிறதப்பா...தயவு செய்து அவர்களை காப்பாத்து...உன்னை ரொம்ப வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.


பி.கு - அன்பார்ந்த சங்கத்து சிங்கங்களே...இந்த மாதம் முழுக்க நானும் உங்களில் ஒருவன். ஆதலால் நமக்கு நாமே திட்டதைக் கைவிட்டு வேறு யாருக்காவது செல்லமாக மனதை புண்படுத்தாமல் ஆப்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன். மற்றபடி இந்த ஆப்பு ஐடியாவிற்கு நன்றி

வலையுலக மக்களே - சும்மா எத்தனை நாள் தான் கொசுவத்தியை சுத்த விட்டு மலரும் நினைவுகளை சொல்லுவது? நானும் தர்ம அடி வாங்க வேண்டாமா? அதனால் உங்களில் வாரம் ஒரு அதிர்ஷடசாலியை கிறுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து செல்ல ஆப்பு வைக்கலாம் என்று நினைக்கிறேன். ஆப்பு கண்டிப்பாக பலமாகவோ மனதை புண்படுத்துமாகவோ இருக்காது. எங்க ஊர் மரியக்கா நர்ஸ் ஊசி போடுவது மாதிரி சிலசமயம் ஆப்பு உங்களுக்குத் தான் என்பதே தெரியாமல் போகலாம். சும்மா அறிவுஜீவித்தனமாக (??!!) காட்டிக்கொள்வதற்காக உங்கள் பெயரே இருக்காது...சின்ன க்ளூ மட்டும் தான் பதிவுகளில் இருக்கும். அடியேனின் கன்னி முயற்சிக்கு ஆப்பு வைச்சு ஆசிர்வாதம் பண்ணுங்க சாமியோவ் !!
ஓ.கே தர்ம அடி ...ரெடி ஸ்டார்ட் :) ஸ்டார்ட் மீசிக்

Sunday, October 1, 2006

நன்றி (01அக்டோபர் 2006)

செப்டம்பர் மாதம் என்னை அட்லாஸ் வாலிபனாக்கி அழகு பார்த்த வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினருக்கு நன்றி.

அக்டோபர் மாத ஆப்பை வாங்க வரும் டுபுக்காருக்கு வாழ்த்து!

நகைச்சுவை எழுத முனைந்து உட்காரும்போது வருவதில்லை என்பதை இந்த மாத பதிவு ஆயத்தங்களில் உணர்ந்தேன்; நீங்களும் உணர்ந்தீர்களா?