Thursday, October 21, 2010

நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு...ஸ்ட்ரிக்ட்டு...ஸ்ட்ரிக்ட்டு...!

Justify Full’அக்கடா’ என்று உட்கார்ந்துகொண்டு நெடுந்தொடர் பார்த்துக் கொண்டிருந்த குப்புசாமி, அழைப்பு மணி சத்தம் கேட்டதும் எரிச்சலடைந்தார்.

"கோலம்மா! வாசல்லே யாருன்னு பாரு! யாராவது வேக்கூம் கிளீனர் கம்பனியிலேருந்து வந்திருந்தா நாம வீட்டையெல்லாம் சுத்தமே பண்ணுறதில்லேன்னு சொல்லி அனுப்பிடு!"

எரிச்சலோடு எழுந்துபோய் கதவைத் திறந்த கோலம்மாள், எதிரே 1950-ம் வருட மாடல் அம்பாசடர்கள் போல நின்று கொண்டிருந்த இரண்டு நபர்களைப் பார்த்து அதட்டினாள்.

"யாருங்க நீங்க?"

"நாங்க இன்கம் டாக்ஸ் ஆபீஸிலேருந்து வர்றோம்."

"அடுத்த வீடு பாருங்க! நாங்க எதுவும் போடறதில்லை!"

"மேடம்!" கண்ணாடி போட்டுக்கொண்டு சிவாஜியில் ஸ்ரேயாவைப் பார்க்க மாறுவேடத்தில் வந்த ரஜினி போலிருந்தவர் அதட்டினார். "நாங்க பிச்சை கேட்க வரலே! வருமானவரித்துறையிலேருந்து வந்திருக்கோம். உங்க வீட்டை செக் பண்ணனும்!"

"ஆமாம்! நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு....ஸ்ட்ரிக்ட்டு...ஸ்ட்ரிக்ட்டு..." என்றார் அசப்பில் விவேக் போலவே இருந்த இன்னொருவர்.

"என்னங்க, யாரோ வருமானவரி ஆபீஸ்லேருந்து வந்திருக்காங்களாம்!" என்று கணவருக்குக் குரல் கொடுத்தார் கோலம்மாள்.

"வருமான வரியா? நமக்குத் தான் வருமானமே கிடையாதே!" என்று எரிச்சலோடு எழுந்துவந்த குப்புசாமி, வாசலில் நிற்பவர்களை ஏற இறங்கப் பார்த்தார்.

"சார்! தப்பான வீட்டுக்கு வந்திருக்கீங்க! இது வாடகைவீடு! நான் ஒரு குமாஸ்தா! எனக்கு சொத்து பத்து எதுவும் கிடையாது. ஒரே ஒரு சொத்தைப்பல்லுதான் இருக்கு. அதைப் புடுங்குறதுக்குக் கூட காசில்லாம ஆபீஸ்லே அட்வான்ஸ் கேட்டிருக்கேன். பக்கத்துத் தெருவுக்குப் போனீங்கன்னா ஒரு வட்டச்செயலாளர், ஒரு சீட்டுக்கம்பனிக்காரரு, ஒரு ஜோசியர் இருப்பாங்க! அவங்க வூட்டுலே செக் பண்ணினீங்கன்னா நிறைய தேறும்."

"சரியான தகவல் கிடைச்சுத்தான் இங்கே வந்திருக்கோம்! வழிவிடுங்க!" என்று கூறியபடி இரண்டு அதிகாரிகளும் வீட்டுக்குள்ளே அதிரடியாய் நுழைந்தனர்.

"சார்! சார்! சொல்றதைக் கேளுங்க! அந்த சோபாவிலே உட்காராதீங்க! அது சோபா இல்லை! சோபா மாதிரி!"

வந்தவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். தாங்கள் கொண்டுவந்திருந்த பையை டீப்பாயின் மீது வைக்க முயன்றனர்.

"சார்! சார்! அதுமேலே வைக்காதீங்க! அது டீப்பாயில்லை; டீப்பாய் மாதிரி!"

"என்னங்க?" கோலம்மாள் கலவரத்தோடு கேட்டாள். "தொறந்தவீட்டுக்குள்ளே எதுவோ மாதிரி நுழைஞ்சிருக்காங்க! பேசிட்டு சும்மாயிருக்கீங்களே...போலீஸுக்கு போன் பண்ணுங்க!"

"இந்த மேடம் யாரு மிஸ்டர் குப்புசாமி?"

"என் பொஞ்சாதி மாதிரி...அதாவது உண்மையாவே என் பொஞ்சாதிதான்! ஐயையோ! எனக்குப் பதட்டத்துலே வாயெல்லாம் குழறது சார்!"

"உங்களைத் தீவிரமா விசாரிக்கணும் மிஸ்டர் குப்புசாமி! உங்க பொண்ணு எங்கே??"

"அவ செல்போனிலே பேசிட்டிருக்கா! திரும்பி வர ஒரு வாரமாகும். அதுவரைக்கும் நாம பேசிட்டிருப்போமே!" என்று ஒரு ஜமுக்காளத்தை விரித்து வந்த அதிகாரிகளை உட்காரவைத்த குப்புசாமி, ’ஒரு நிமிசத்துலே வர்றேன்,’ என்று கூறி கோலம்மாளை அழைத்துக்கொண்டு சமையலறைக்குள்ளே நுழைந்தாள்.

"கோலம்மா! வந்தவங்களைப் பார்த்தா நாலுநாள் சாப்பிடாதவங்க மாதிரி இருக்கான். கண்டிப்பா இவனுங்க வருமானவரி அதிகாரிங்களா இருக்க வாய்ப்பில்லே! திருடனுங்க தான்! இவங்களைத் தந்திரமா போலீஸ் கிட்டே மாட்டி விடலாம். நீ என்ன பண்ணுறே, ரெண்டு பேருக்கும் காப்பி கொண்டுபோய்க் கொடு!"

"சரிங்க!"

"இதோ பாரு! உன்னைப் பொண்ணு பார்க்க வந்தபோது கொடுத்தியே அந்த மாதிரி காப்பியை கொடுத்து ஏமாத்துற வேலையெல்லாம் வேண்டாம். நீ தினமும் போடுற காப்பி மாதிரியே போட்டுக்கொடு! முத முதலா அதைக் குடிச்சாங்கன்னா அரை மணியிலே கோமா ஸ்டேஜுக்குப் போயிருவாங்க! சரியா?"

"சரிங்க, இன்னிக்குக் காலையிலே பண்ணின ஜவ்வரிசி உப்புமா இருக்கு. கொடுக்கட்டுமா?"

"அடிப்பாவி, என்னைக் கொலைக்கேசுலே மாட்டிவிடப்போறியா? பாவம் யாரு பெத்த புள்ளைங்களோ?"

"சரி சரி, நீங்க போய்ப் பேசிட்டு இருங்க! நான் காப்பியோட வர்றேன்!"

"வெரிகுட்! இப்போதைக்கு காப்பி போதும். எனக்கு ஓவர் வயலன்ஸ் பிடிக்காது சரியா?"

குப்புசாமி உள்ளே நுழைந்ததும், வந்திருந்த அதிகாரிகள் ரகசியமாக எடுத்துக்கொண்டிருந்த குறிப்பை மறைக்க முயன்றனர்.

"மிஸ்டர் குப்புசாமி! உங்களோட அசையும் சொத்து, அசையா சொத்து பத்தின விபரம் சொல்றீங்களா?"

"சார், என் கிட்டே ஒரு செகண்ட்-ஹேண்ட் வண்டியிருக்கு சார். அதையே அசைக்கணுமுன்னா, கோவில் ஸ்பீக்கர்லே அனவுன்ஸ் பண்ணி எல்லாரும் வந்து தள்ளிவிடுவாங்க சார்! மத்தபடி எந்த சொத்தும் கிடையாது சார்!"

"நீங்க மூணு வருசமா ரிட்டர்ன்ஸ் ஃபைலே பண்ணலியே! என்ன காரணம்?"

"சார், எனக்கு வருசா வருசம் ரீஃபண்டு தான் வரும் சார்! அதை உங்க டிப்பார்ட்மென்டுலேருந்து திரும்பி வாங்குறதுக்கு அதை விட ஜாஸ்தியா செலவு பண்ணனுமேன்னு விட்டுட்டேன் சார்!"

"அது போகட்டும், திடீர்னு கொசுவண்டியோட நாத்தம் வருதே?"

"வேறொண்ணுமில்லே! என் வொய்ஃப் உங்களுக்குக் காப்பி கொண்டு வர்றா! இதோ வந்திட்டா...சாப்பிடுங்க சார்! சாப்பிட்டுக்கிட்டே சாவகாசமாப் பேசலாம்."

"மிஸ்டர் குப்புசாமி! நாங்க ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு! கடமையைச் செய்யும்போது காப்பி சாப்பிடறதுல்லே...!"

"ஐயோ சார், நீங்க தப்பா நினைச்சிட்டீங்க! இது காப்பியில்லை; காப்பி மாதிரி....! சும்மா சாப்பிடுங்க! ஏன் இப்படி சந்தேகமாப் பார்க்கறீங்க? ஒருவேளை மயக்க மருந்து கலந்திருக்குமொன்னு சந்தேகமா?" என்று கேட்ட குப்புசாமி, இரண்டு காப்பியிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சம் டபராவில் ஊற்றிக் குடித்தார்.

"இப்போ சந்தேகம் தீர்ந்திருக்குமே? சாப்பிடுங்க!" என்று சொல்லியதும், வந்தவர்கள் இருவரும் காப்பி பருகினர். பருகியதும் இருவரும் மூர்ச்சையடைந்தனர். சிறிது நேரம் கழித்து இருவரும் கண்விழித்தபோது....

"நான் எங்கே இருக்கேன்...?"

"நான் எங்கே இருக்கேன்...?"

"என்னங்க, போதை தெளிஞ்சிட்டதுங்க!" என்று பதறினாள் கோலம்மாள்.

"முழிச்சா நல்லது தானே?" என்று சிரித்தார் குப்புசாமி. அதற்குள் அவர்தான் தெருவிலிருப்பவர்கள் அனைவரையும் வீட்டில் கூட்டியிருந்தாரே?

"குப்புசாமி! நான் இதுவரைக்கும் யாரையுமே அடிச்சது கிடையாது. அதுனாலே முதல்லே நான் தான் இவங்களை அடிப்பேன். இந்தாங்க பத்து ரூபாய்...!" என்று ஒருவர் பணத்தை நீட்ட...

"இருபது ரூபாய் கொடுக்கிறவங்கதான் முதல்லே அடிக்கலாம்!" என்று குப்புசாமி அழுத்தம் திருத்தமாகக் கூறினார்.

"இந்தாங்க சார்! இருபத்தி அஞ்சு ரூபாய்!" என்று காசைக்கொடுத்துவிட்டு, மயக்கம் தெளிந்து கொண்டிருந்த இருவரையும் மொத்த ஆரம்பித்தார் ஒருவர்.

போலீஸுக்கு தகவல் கொடுத்துவிட்டு, தலைக்குப் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு, தெருவிலிருக்கிற எல்லாருக்கும் வந்திருப்பவர்களை நையப்புடைக்கிற வாய்ப்பு அளித்த குப்புசாமி, வசூலான பணத்தை வழக்கம்போல கோலம்மாளிடம் கொடுத்தார்.

சிறிதுநேரத்தில் திபுதிபுவென்று போலீஸ் வந்தனர். கீழே கிடந்தவர்களைப் பார்த்தனர்....

"ஐயையோ...சார்!" என்று பதறியபடி இருவரையும் எழுப்பினார் ஒரு போலீஸ் அதிகாரி.

"யாருய்யா இவங்களை அடிச்சது? இவங்க திருடங்க இல்லை. உண்மையாகவே வருமானவரி அதிகாரிங்க! எனக்கு ரொம்ப நல்லாத் தெரியும்." என்று அவர் இரையவும், குப்புசாமி அரண்டு போனார்.

"சார் சார், இவங்க திருடனுங்கன்னு நினைச்சுத்தான் இப்படி அடிச்சுப்புட்டோம் சார்! மன்னிச்சிடுங்க சார்! எங்க மேலே கேஸ் போட்டுராதீங்க சார்!" என்று கெஞ்சினார்.

"இன்ஸ்பெக்டர் சார்! அவங்களை விட்டிருங்க!" என்று இரண்டு வருமான அதிகாரிகளில் சுமாராக அடிவாங்கிய ஒருவர் பேசினார். "எங்கே மேலே மிஸ்டேக் இருக்கு! வந்ததும் அடையாள அட்டையைக் காட்டியிருக்கணும். அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா? யப்பா...தெருவே பேரம் பேசி மொத்தியிருக்காங்கப்பா....ஆபீஸுக்குப்போயி உடனே வி.ஆர்.எஸ்ஸுக்கு எழுதிக்கொடுக்கப்போறேன்யா...!"

"ஐயாம் சாரி சார்!" என்று குப்புசாமி கையெடுத்துக் கும்பிட்டார். "தப்பாப்புரிஞ்சுக்கிட்டோம் சார்!"

"மிஸ்டர் குப்புசாமி! ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே? எனக்குத் தெரிஞ்சு காசுகொடுத்து உதைக்கிறதுக்கு இவ்வளவு பேரு இருக்காங்கன்னு இன்னிக்குத் தான் பார்த்தேன். உங்க தெருவிலே ஒருத்தர் விடாம நவராத்திரி கொலுவுக்கு கூப்பிடுறா மாதிரி கூப்பிட்டு இந்த மொத்து மொத்தியிருக்கீங்களே! ஏன் சார் இவ்வளவு கொலைவெறி?"

"மன்னிக்கணும் சார்! ரெண்டு நாளைக்கு முன்னாடி ஒரு முன்னாள் அரசியல்வாதி வருமானவரி அதிகாரி மாதிரி வேசம்போட்டு வீடுவீடாப் போய்த் திருடினதா பேப்பரிலே படிச்சேன். ரொம்ப நாளாவே நம்மூரு அரசியல்வாதிங்களைப் போட்டு மொத்தணுமுன்னு எல்லாரையும் போல எனக்கும் ஒரு வெறி இருந்திச்சா? அதான் என்னை மாதிரியே அரசியல்வாதிங்க மேலே கடுப்பா இருக்கிறவங்களை கூப்பிட்டு ஆசை தீர உதைக்க விட்டேன். ரொம்ப வலிக்குதா சார்?"

"வலியா? கழுத்துக்குக் கீழே எல்லாம் இருக்க வேண்டிய இடத்துலே இருக்கான்னு குனிஞ்சு பார்க்க வேண்டியிருக்குய்யா....! ஆனாலும் ரெண்டு பேர் அகப்பட்டா இந்த அடியா அடிப்பீங்க?"

"வெரி வெரி சாரி சார்! உங்க புண்ணியத்துலே நிறைய பணம் வசூல் ஆயிருக்கு சார்! நீங்க அடிக்கடி நம்ம வீட்டுக்கு வந்து போகணும் சார்! அடுத்தவாட்டி உண்மையிலேயே நல்ல காப்பியா தர்றோம் சார்!"

"கா...ப்...பியா....?" இரண்டு அதிகாரிகளும் மீண்டும் மூர்ச்சையடைந்தனர்.

இன்ஸ்பெக்டர் அவர்களது நாடித்துடிப்பைப் பரிசோதித்துவிட்டு, தொப்பியைக் கழற்றிவிட்டு சொன்னார்.

"ஐயாம் சாரி!"

பி.கு: இதுலே எதுக்கு ஸ்ரேயா படம்? என்று கேட்பவர்களுக்கு! சும்மா, ஒரு ஐதீகம் அவ்வளவு தான்!

Sunday, October 17, 2010

சூ மந்திரத் தக்காளி!

பெண்களை கவர்வதற்கு ஜாய் அலுக்காஸ் போய் கண்ணைப் பறிக்கும் வைரநெக்லஸ் வாங்கிக் கொடுத்து, மாதாமாதம் கிரெடிட் கார்டு பில்லைப் பார்த்து முழிபிதுங்க வேண்டுமா?

போத்தீஸுக்கும், சென்னை சில்க்ஸுக்கும் போய் எந்திரன் படத்துக்கு முதல்நாள் மார்னிங் ஷோ போனவன் போல இடிபட்டு கசங்கி கந்தர்கோளமாக வேண்டுமா?

அநியாய வட்டிக்குக் கடன்வாங்கி, அடையாறு கேட் ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போய் ஆட்டுக்கால் சூப் வாங்கிக் கொடுக்க வேண்டுமா?

தேவையேயில்லை! இதையெல்லாம் விடவும் மிகவும் சுலபமான, சிக்கனமான ரகசிய வழியொன்று இருக்கிறது. அந்த வழியைக் கடைபிடித்தால், உங்களது மின்னஞ்சல் பெட்டியும் எனது மின்னஞ்சல் பெட்டியைப் போலவே காதல் மடல்களால் நிரம்பி வழிந்து குறுவை சாகுபடிக்கு ஒத்தாசை செய்யும் என்பது உறுதி.

நம்பிக்கையில்லையா? இதோ எனது மின்னஞ்சல் பெட்டியின் ஸ்க்ரீன்-ஷாட்!


இப்படி எனக்கு ஒரே நாளில் இந்தியாவின் கனவுக்கன்னிகளெல்லாம் மடல் மீது மடலாகப் போடுவதற்கு என்ன காரணம்? அவர்களது உள்ளங்களை என்னால் எப்படி கொள்ளை கொள்ள முடிந்தது? இது என்ன தங்கமலை ரகசியமா என்று யோசிக்கிறீர்களா?

தங்கமலை ரகசியம் இல்லை; தக்காளி ரகசியம்!

சிரிக்காதீங்க! தக்காளி என்றால் லேசுப்பட்டதா?

அதற்கு எப்போது கிராக்கி வரும் என்று தெரியாது. திடீரென்று கிலோ நான்கு ரூபாய்க்கெல்லாம் விற்கும்போது, பல வீடுகளில் பாயசம் தவிர எல்லாவற்றிலும் தக்காளி போடுவார்கள். அதை வைத்து ரசமும் வைக்கலாம்; கொத்சு பண்ணலாம்; தொக்கு அரைக்கலாம். கொஞ்சம் அழுகிப்போனால், பொதுக்கூட்டங்களில் பேச்சாளர்களின் முகத்தைக் குறிபார்த்து எறியலாம். இவ்வளவு அருமை பெருமை வாய்ந்த தக்காளியைப் பற்றி ரஜினி ஒருத்தர் தான் ’ஆசைக்கிளியே அரைக்கிலோ புளியே! அழுகின தக்காளியே!’ என்று பாடியிருக்கிறார். இருந்தாலும் தலைவர் என்பதால் விட்டு விடுகிறேன்.

திருமணமாகாதவர்களே! உங்கள் காதலியை தக்கவைத்துக் கொள்ள இனிமேல், ஒரே இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு உங்களது கஞ்சத்தனத்தை வெளிப்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக, தினமும் தக்காளி ஜூஸ் வாங்கிக் கொடுங்கள்!

’ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?’ என்றெல்லாம் இனிமேல் பாடாதீர்கள். ’தக்காளிப்பெண்ணே..!" என்று மாற்றிப் பாடுங்கள். கவிதை எழுதுபவர்களும் இனிமேல் காதலியைத் தக்காளியோடு ஒப்பிட்டு எழுதுங்கள். உதாரணத்துக்கு.....

"அன்பே!
உன் சருமத்தைப் பார்த்தால்
சரக்குமாஸ்டருக்கும் ஆசை வருமே!
தக்காளியென்று
தப்பாக நினைத்து விட்டாரோ?"

காதலியே இல்லாதவர்கள் காதலிக்கு கூடை கூடையாக தக்காளியை அனுப்புங்கள். காதல் கைகூடுவது நிச்சயம்.

திருமணமானவர்களே! உங்கள் மனைவியின் அன்பு மியூச்சுவல் ஃபண்டு போல பல்கிப்பெருக, தினமும் மல்லிகைப்பூ வாங்குகிறீர்களோ இல்லையோ, தவறாமல் தக்காளி வாங்கிக் கொடுங்கள்! திருமணதினத்துக்கும், பிறந்தநாளுக்கும் தக்காளிக்கலரில் உடை வாங்கிக்கொடுத்தால், உங்களது இல்லறம் தக்காளி ரசம் போல கமகமவென்று மணம்வீசும்!

தக்காளி சீனிவாசன் தயாரிக்கும் படங்களைத் தவறாமல் காதலி/மனைவியோடு பாருங்கள்!

தப்பித்தவறி, காதலியோடோ மனைவியோடோ ஊடல் ஏற்பட்டால் தக்காளி கெட்ச்-அப் வாங்கிக்கொடுத்து பேட்ச்-அப் செய்து கொள்ளலாம்.

அப்படியென்ன இருக்கிறது இந்தத் தக்காளியில் என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு விஷயமே தெரியாதா?

தக்காளி பெண்களின் இதயநோயைக் கட்டுப்படுத்தும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே, காதலியாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி அல்லது ஒருவருக்கு காதலி, மனைவி இருவருமே இருந்தாலும் சரி, நிறைய தக்காளி வாங்கிக் கொடுங்கள்!

என்ன இருந்தாலும், அவர்களது இதயத்தில் குடியிருக்கிறவர்கள் அல்லவா நீங்கள்? தினசரி தக்காளி வாங்கிக் கொடுத்தால் குடியிருக்கிற வீட்டில் விரிசல் ஏற்படாமல் இருக்கும்.

இத்தோடு நிறுத்திவிடாமல், இனிமேல் ’காதலர் தினம்’ வரும்போது பூக்களை அனுப்புவதற்கு பதிலாக, கோயம்பேட்டுக்குப் போய் நிறைய தக்காளி வாங்கி அனுப்புங்கள்!

வாழ்க தக்காளி! வளர்க காதல்!

Thursday, October 14, 2010

இதென்ன கொடுமை?

பலர் என்னிடம் கேட்பதுண்டு. "சேட்டை, வலைப்பதிவில் எழுதுவதற்கு பதிலாக நீ பேசாமல் மெரீனா பீச்சில் வடைதட்டி வியாபாரம் பண்ணியிருக்கலாமே? பனகல்பார்க் பக்கத்தில் பஜ்ஜி போடலாமே?"

அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒரு வருடத்துக்கு முன்பு.....!(ஓடாதீங்கப்பு, சின்ன ஃபிளாஷ்-பேக் தான்!). மப்பும் மந்தாரமுமாக இருந்த ஒரு நாளில், என் காதில் அந்தச் செய்தி வந்து விழுந்தது. என் இதயம் எக்ஸ்ட்ரா அப்பளம் போல எக்கச்சக்கமாக நொறுங்கியது.

இணையத்தில் என் அபிமான நடிகை ஸ்ரேயாவின் கன்னாபின்னாவென்ற படங்களை எவனோ கிராபிக்ஸ் பண்ணி பரப்புவதாகக் கேள்விப்பட்டதும், துக்கம் தாள முடியாமல், கல்யாண பிரியாணி ஃபுல் ப்ளேட் சாப்பிட்டுவிட்டு, நிறைய ஐஸ் போட்டு, ஒரு லஸ்ஸி வாங்கிக் குடிக்க வேண்டியதாயிற்று.

அன்றே செத்துப்போன என் கொள்ளுப்பாட்டியின் எள்ளுப்பாட்டி மீது சத்தியம் செய்து எப்படியாவது இந்த ’சைபர் கிரைம்’ என்கிற அக்கிரமத்தை வேறோடு அழித்தே தீர வேண்டும் என்று சபதம் பூண்டேன். (நீயே ஒரு சைபர்(ஜீரோ!). நீ எழுதுவதை விட பெரிய கிரைம் என்ன இருக்க முடியும் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்!)

உங்களுக்குத் தெரியுமா? சைபர் கிரைமால் 76% இந்தியர்கள் பாதிப்பு:60% பேர் கம்ப்யூட்டர் வைரஸால் பாதிப்பு என்று அண்மையில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சைபர் கிரைமால் நானே பாதிக்கப்பட்டிருக்கிறேன் தெரியுமா? ஒரு தடவை, "உங்கள் மின்னஞ்சலுக்கு சிறந்த மின்னஞ்சலுக்கான ஒரு மில்லியன் டாலர் பரிசு,’ என்று ஒரு மடல் வந்தது. ’இதென்ன அபாண்டம்?நான் அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணியதே இல்லையே!’ என்று கூட யோசிக்காமல் அந்த மடலைத் திறந்ததும் ’செல்லாத்தா’ என்ற வைரஸ் எனது கணினிக்குள்ளே புசுக்கென்று நுழைந்து பரவி விட்டது. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் எதுவும் பலனளிக்காமல் போகவே, பாடிகார்ட் முனீஸ்வரருக்கு கடா வெட்டி பொங்கல் வைத்தபிறகுதான் கம்ப்யூட்டர் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இதே போல இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் எனது ஜீ-மெயில் ஐ.டி.களவாடப்பட்டு விட்டது. (சீரியசாப் பேசிட்டிருக்கும்போது சிரிச்சா எனக்குப் பிடிக்காது; மெய்யாலுமே என்னோட ஐ.டியும் காணாமப் போச்சு!) நானும் எல்லா நண்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ்.அனுப்பித் தகவலை அனுப்பிக்கொண்டிருந்தபோது, திடீரென்று எனது ஐ.டியை மீட்கவும் முடிந்தது. "தெரியாத்தனமாக உங்களது ஐ.டியை ஹேக் செய்து விட்டேன். நீங்கள் எழுதிய, உங்களுக்கு வந்த மடல்களைப் படித்ததில், என் மூதாதையர்கள் சிக்கிமுக்கிக் கல்லை உரசி அடுப்பு மூட்டிச் சமைத்த காட்சிகளெல்லாம் என் கனவில் வர ஆரம்பித்து விட்டது. இனிமேல் யாருடைய ஐ.டியையும் திருட மாட்டேன்!" என்று ஒரு மன்னிப்புக் கடிதமும் சில நிமிடங்களில் வந்தது.

ஏதோ அது நானாக இருந்ததால், தப்பித்தேன்! கொஞ்சம் உருப்படியாக எழுதுகிறவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?

பலருடைய டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு,ஏ.டி.எம்.கார்டு என்று ரேஷன் கார்டு தவிர மீதமுள்ள எல்லா கார்டுகளையும் இணைய மோசடிகள் மூலமாகத் தவறாகப் பிரயோகிப்பதாகவும் செய்திகள் வருகின்றன. எனக்கு விசிட்டிங் கார்டு கூட கிடையாது என்பதால் தப்பித்தேன்.

இவ்வளவு பயங்கரமான ஒரு தீயசக்தியைக் குறித்து, சமூகப் பிரக்ஞையோடு ஒரு இடுகை போட வேண்டும் என்பதற்காக, ஒரு நாள் காஷுவல் லீவு போட்டு இந்த இடுகையைத் தயாரித்திருக்கிறேன்.

உங்களில் யாராவது ’வீராசாமி’ படம் பார்த்தீர்களா? (என்னது, ஒரே ஒருத்தர் தானா? உங்க பேரு என்ன விஜய டி.ராஜேந்தரா?) சரி போகட்டும்! அந்தப் படத்தில் நடித்த மேக்னா நாயுடு என்ற நடிகை அனுப்பியதாக பலருக்கு மின்னஞ்சல்கள் போகவும், நிறைய குடும்பங்களில் குழப்பமே ஏற்பட்டு விட்டதாம் ஐயா! இருக்காதா பின்னே? சினிமாவில் வருவதைப் போல, "நான் அம்மாவாகப்போகிறேன்," என்று இ-மெயில் குடும்பஸ்தர்களுக்குப் போனால், வீட்டுக்கு வீடு சப்பாத்திக்கட்டையும், அகப்பையும் பறக்காதா?

இந்த சைபர் கிரைமால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர் நம்ம அசின் தான்! முதலில் அவரது இ-மெயில் களவு போனது.. பிறகு அசின் "தன்பெயரில் ஏதாவது மின்னஞ்சல் வந்தாலும் ரசிகர்கள் அதை நம்ப வேண்டாம்,"எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்குள் என் நண்பன் சுரேந்திரன் அசினிடமிருந்து மெய்யாலுமே மெயில் வந்து விட்டதென்று எண்ணி, "முறுக்கிச் சுவன்னதோ...மாறன் முத்திச்சு வர்த்திச்சதோ...?" என்று முண்டா பனியன், லுங்கியுடன் மலையாளத்தில் டூயட்டெல்லாம் பாடிக்கொண்டிருந்தான். அவனை இயல்பு நிலைக்குக் கொண்டு வர சில பல குவார்ட்டர்களும், மசாலா பொறியும் தேவைப்பட்டன.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னரே, மீண்டும் ’என் பெயரில் மோசடி வெப்சைட்!’ என்று அசின் அண்மையில் புலம்பியிருக்கிறார்.

’நான் தான் அசின்,’ என்று சொல்லிக்கொண்டு ஒருவர் அசின் பேரில் ட்விட்டரில் ’என்னுடன் லைவாக சாட் பண்ண வாருங்கள்!’ என்று அழைப்பு விடுத்துள்ளாராம். நல்லவேளை, அண்மைக்காலமாக வலைப்பதிவர்கள் யாருமே யாருடனும் ’சாட்’ செய்வதில்லை என்று கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்திருப்பதால் அவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மற்றவர்கள் அப்படியா?

"அசின் சேச்சி! இனிமேல் எந்தப் படப்பிடிப்பா இருந்தாலும், உங்க ஊரு வேம்பநாட்டுக்காயல்லே தான் நடத்தணுமுன்னு கண்டிசன் போட்டிருக்கீங்களாமே? எதுக்கு? உங்களை நம்பி படமெடுக்கிற தயாரிப்பாளருக்கு எப்படி மூழ்குறதுன்னு ப்ராக்டீஸ் பண்ண வசதியா இருக்குன்னு தானே?" என்று ஒருத்தர் கேட்டிருக்காராம்.

இதே மாதிரி ஸ்ரேயாவோட பேரிலே யாரோ ட்விட்டர் ஆரம்பிச்சு, ’என் மனதைக் கவர்ந்த ஒரே ஆண் சேட்டைக்காரன் தான்!’ என்று எழுதவும், ஆந்திரா, தமிழ்நாட்டுலே பலருக்கு மாரடைப்பே வந்திருச்சாம். (முதல் மாரடைப்பு எனக்குத் தான்!)

இதே மாதிரி தனுஷ் பேருலே கூட ட்விட்டர் ஆரம்பிச்சிருக்காங்கன்னும் செய்தி வந்தது. இதைக் கண்டிச்சு ’அகில உலக ஒல்லிப்பிச்சான்கள் முன்னேற்றக்கழகம்’ கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தாங்க!

ஆகவே, பெரியோர்களே! தாய்மார்களே! சைபர் கிரைம்லேருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு.

உங்க வீட்டுலே சுத்தியல் இருக்கு தானே?

Saturday, October 9, 2010

ரங்குஸ்கி

டாக்டர் வசீகரன்: லேடீஸ் அண்டு ஜென்டில்மேன்

பத்து வருசம் ராப்பகலா முழிச்சு, வெறும் சுக்குக்காப்பியும் காலேஜ் பீடியும் குடிச்சு இந்த ரங்குஸ்கி கொசுவை உருவாக்கியிருக்கேன். இதுக்கு எல்லா பிளட் க்ரூப்பும் புடிக்கும்; எல்லா ஜீவராசியையும் கடிக்கும்.

நம்ம நாட்டை சமீபகாலமா புடிச்சு ஆட்டுவிச்சுக்கிட்டிருக்கிற நோய்கள் சிக்குன்குனியா, டெங்கு காய்ச்சல், மலேரியா. இதுக்கெல்லாம் சில வலைப்பதிவர்கள் எழுதுற இடுகைகள் தான் காரணமுன்னு நிறைய பேரு நினைச்சிட்டிருக்காங்க! ஆனா, விஞ்ஞானபூர்வமா இந்த நோய்க்கெல்லாம் கொசுக்கள் தான் காரணம். இந்த வியாதி வந்தவங்க வலைப்பதிவு படிக்கிறது தற்கொலைக்கு சமம்; வலைப்பதிவு எழுதறது படுகொலைக்கு சமம்.

ஏடஸ் எகிப்டி-ன்னு கேள்விப்பட்டிருப்பீங்க! நிறைய பேரு இது ஆந்திராவுலே பெத்தலகுண்டா பக்கத்துலே பண்ணுற ஒருவிதமான உப்புமான்னு நினைச்சிட்டிருக்காங்க! ஆனா, இந்த ஏடஸ் எகிப்டிங்கிறது ஒரு கொசு! இந்தக்கொசு கடிச்சா டெங்கு, சிக்குன்குனியா மாதிரி நோய்கள் வரும். இப்போ நான் கண்டுபிடிச்சிருக்கிற ரங்குஸ்கி யாரை ஏடஸ் எகிப்டி கடிச்சுதோ, அவங்களை இதுவும் போய் கடிச்சு நோய்க்கிருமியை உறிஞ்சி எடுத்திரும். தமிழ் சினிமாவுலே பாம்பு கடிச்சா கடிச்ச இடத்துலே மனுசனும் கடிச்சு விஷத்தை உறிஞ்சுவாங்களே அதே மாதிரி! ஆனா ஒண்ணு, நான் எவ்வளவோ முயற்சி பண்ணியும் ரங்குஸ்கி வலைப்பதிவு நடத்துறவங்களை மட்டும் கடிக்கவே மாட்டேங்குது! கேட்டா மனிசன் மனிசனைக் கடிக்கலாம்; ஆனா கொசு கொசுவைக் கடிக்காதுன்னு லாஜிக் பேசுது!

இந்த ரங்குஸ்கி கொசுவுக்கு கராத்தே, பரதநாட்டியம், பிரேக் டான்ஸ், பாப் மியூசிக் எல்லாமே தெரியும். அதுனாலே யாரு எவ்வளவு வேகமா என்ன பண்ணிட்டிருந்தாலும் கரெக்டா போய் கடிச்சிடும். இந்த மாதிரி பல ரங்குஸ்கிகளை உருவாக்கி டூட்டியிலே போட்டா, அப்புறம் டெங்கு, சிக்குன்குனியா சுத்தமா இருக்காது.Dot!

சேட்டைக்காரன்: டாக்டர் வசீகரன்! இந்தக் கொசுவை ரிஜக்ட் பண்ணறேன். வலைப்பதிவர்களுக்கு டெங்குக்காய்ச்சல், சிக்குன்குனியா வந்தா உதவாத இந்தக் கொசுவாலே யாருக்கு என்ன பயன்?

டாக்டர் வசீகரன்: கவலைப்படாதீங்க சேட்டை! உங்களை மாதிரி பதிவருங்களுக்கு பன்றிக்காய்ச்சல் வந்தா கடிச்சு குணமாக்க புதுசா ஒரு பன்றியை உருவாக்கிட்டிருக்கேன். மேலும் நீங்க கடிக்கிற கடிக்கு உங்களையெல்லாம் எந்த கொசுவும் அண்டாது. இன்னும் சொல்லப்போனா தமிழ்நாட்டுலே டெங்கு அதிகமாப் பரவாம இருக்கிறதுக்கே நீங்கதான் காரணம். கொசுக்கெல்லாம் உங்களைப் பாத்தா அவ்வளவு பயம். Dot!

சேட்டைக்காரன்: ஏன் டாக்டர்? எந்திரன் படத்துலே வில்லன் ரோபோவுக்கு ரெட்-சிப் சொருகி அதை வச்சு ஊரையே கலக்கினா மாதிரி இந்த ரங்குஸ்கியையும் தவறாக உபயோகிக்க வாய்ப்பிருக்கா?

டாக்டர் வசீகரன்: அதுக்கெல்லாம் வாய்ப்பேயில்லை! ரெட்-சிப்போட பாச்சாவெல்லாம் ரங்குஸ்கி கிட்டே பலிக்காது. ஆனா, நேந்திரங்காய் சிப்ஸ் மட்டும் ரங்குஸ்கி கண்ணுலே படாம பார்த்துக்கோங்க! அதுக்கு ரொம்பப் பிடிக்கும். Dot!

சேட்டைக்காரன்: அப்படீன்னா, ரங்குஸ்கியாலே யாருக்கும் எந்த ஆபத்துமில்லேன்னு சொல்லுங்க!

டாக்டர் வசீகரன்: ஒரே ஒரு ஆபத்து இருக்கு! பொதுவா இது வலைப்பதிவர்களைக் கடிக்காதுன்னாலும், ’எந்திரன்’ படத்தைப் பத்தி ஒரு இடுகை கூட போடாதவங்களை நம்ம ரங்குஸ்கி கடிச்சிடும். அதுக்கப்புறம் சிக்குன்குனியா,மட்டன்குனியா,லெக்பீஸ் குனியான்னு பல நோய்கள் அவங்களுக்கு வந்திடும். எவ்வளவு பெரிய டாக்டர் வந்து கடிச்சாலும், அதாவது கவனிச்சாலும் ரங்குஸ்கியோட கடியிலேருந்து தப்பிக்க முடியாது. Dot!

சேட்டைக்காரன்: ஐயையோ டாக்டர்! நான் ’எந்திரன்’ படத்தைப் பத்தி விமர்சனம் கூட போடலியே!

ரங்குஸ்கி: என்னது? விமர்சனம் போடலியா? பரவாயில்லே, திட்டியாவது எழுதினீங்களா?

சேட்டைக்காரன்: இல்லியே ரங்குஸ்கி! சும்மா ஒண்ணு ரெண்டு பிட்டு போட்டிருக்கேன்.

ரங்குஸ்கி: எந்திரன் படத்தை ஒண்ணு தூக்கி எழுதணும்; இல்லாட்டித் தாக்கி எழுதணும். ரெண்டையுமே செய்யாம வலைப்பதிவருங்கிற பேருலே ஊரை ஏமாத்திட்டா இருக்கே சேட்டை? முதல்லே உன்னைக் கடிக்கிறேன்.

சேட்டைக்காரன்: ஐயையோ டாக்டர்! காப்பாத்துங்க காப்பாத்துங்க! ரங்குஸ்கி கடிக்க வருது!

டாக்டர் வசீகரன்: உன் ரேஞ்ஜுக்கு உன்னை சானட்டோரியம் கொசு கடிக்குறதே தப்பு! ரங்குஸ்கி! கோ!!

சேட்டைக்காரன்: ஐயோ! டாக்டர் வசீகரன்! காப்பாத்துங்க டாக்டர்!

டாக்டர் வசீகரன்: சேட்டை! எனக்காக சனா காத்துக்கிட்டிருப்பா! நான் போறேன்...காதல் அணுக்கள் உடம்பில் எத்தனை....?

சேட்டைக்காரன்: டாக்டர், காதல் அணுக்கள் இருக்கட்டும், என் உடம்பிலே ஒரு யூனிட் ரத்தம் கூட தேறாதே டாக்டர்!

ரங்குஸ்கி: கமாண்ட் மோட் ரெடி! டார்ஜட் சேட்டைக்காரன்! ரெடி..ஸ்டெடி..கோ!

Wednesday, October 6, 2010

வ.வா.ச Vs சி.சி.க


இன்னும் சிறிது நேரத்தில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் சிரிக்காத சிடுமூஞ்சிகள் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் பங்குபெறும் ’சந்திப்போமா நிந்திப்போமா?’ நிகழ்ச்சி உங்களது அபிமான பெரியப்பா டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதைத் தொகுத்து வழங்கப்போகிறவர் "சிந்தனை சுனாமி" சுங்கச்சாவடி சுப்பாமணி!

சுப்பாமணி: வணக்கம் நேயர்களே! இன்று நம்முடன் உரையாட வ.வா.சங்கத்தின் சார்பாக இடைக்கால செயலாளர் சேட்டைக்காரன் அவர்களும், சி.சி.க-வின் நிரந்தரச் செயலாளர் முந்திரிக்கொட்டை அவர்களும் நம்மிடையே வந்திருக்கிறார்கள். இருவருக்கும் வணக்கங்கள்!

சே.கா: வணக்கம்! ஹிஹி!

மு.கொ: வணக்கம்!

சுப்பாமணி: சேட்டை! எதுக்கு ஒரு டைப்பா சிரிக்கிறீங்க?

சே.கா: அது ஒண்ணுமில்லீங்க! கவர்ச்சியா நடிச்சு போரடிச்சுப்போச்சுன்னு நமீதா சொல்லியிருக்காங்க! ஒரு வேளை அடுத்த படத்துலே காரைக்கால் அம்மையாரா நடிப்பாங்களோன்னு யோசிச்சேன். சிரிப்பு வந்திருச்சு!

மு.கொ: இது தான் தமிழனின் சாபக்கேடு! தமிழனின் தலைக்குள்ளே சினிமாவென்ற எருமைச்சாணத்தை மூளைக்கு பதிலாக உருட்டி வைத்து அனுப்பி விட்டது இயற்கை. ஐயகோ!

சே.கா: அப்படீன்னா நீங்க தமிழன் இல்லையா அண்ணே?

மு.கொ: சேட்டை! உங்களைப் போல நயன்தாரா யாரைத் திருமணம் செய்து கொள்ளுவார்? ஸ்ரேயாவின் பிறந்தநாள் விருந்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் முந்திரிப்பருப்பு போட்டிருந்ததா? தமன்னா உண்மையிலேயே கார்த்தியைக் காதலிக்கிறாரா என்றெல்லாமா நான் எழுதுகிறேன்?

சுப்பாமணி: என்னங்க இது? எடுத்த எடுப்புலேயே டாப் கியர்லே போறீங்க? பதிவர்களுக்கு சர்ச்சை தேவைதான்; ஆனால் அது சண்டையாக மாறி விடக்கூடாது.

மு.கொ: சண்டையும் சச்சரவும் பதிவர்களின் பரம்பரை சொத்து! சேட்டை! உம்மால் பணவீக்கத்துக்கு ஒரு தீர்வு சொல்ல இயலுமா?

சே.கா: புத்தூர் எண்ணையைத் தடவிப் பார்க்கலாமே? ஹிஹி!!

மு.கொ: பார்த்தீர்களா சுப்பாமணி! இவரைப் போன்றவர்களெல்லாம் ஆளுக்கொரு வலைப்பூ ஆரம்பித்து எழுதிக்கொண்டிருக்கிறார்களே?

சுப்பாமணி: முந்திரிக்கொட்டை அவர்களே! நான் முதலிலேயே சொன்னேனே, இன்று தப்பித்துப் போன பைத்தியக்காரரைப் பற்றி விவாதிப்போம் என்று? பிறகு ஏன் பதிவர்களைப் பற்றி விவாதிக்கிறீர்கள்?

சே.கா: ரெண்டும் ஒண்ணுதானே? ஹிஹி!

மு.கொ: சேட்டை! என்ன தைரியமிருந்தால் தப்பித்துப்போன பைத்தியக்காரனோடு பதிவர்களை ஒப்பிடுவீர்கள்? இது வரை யார் தப்பித்துப் போனார்கள் என்று புள்ளிவிபரத்தோடு உங்களால் சொல்ல முடியுமா?

சுப்பாமணி: அதானே, சேட்டை! ப்ளீஸ்! கொஞ்சம் புத்திசாலித்தனமாப் பேசலாமா?

சே.கா: அப்போ நீங்க பேசுங்க, நான் கேட்டுக்கிறேன்! என்னவோ நான் வச்சுக்கிட்டு வஞ்சகம் பண்ணுறா மாதிரியில்லே பேசறீங்க?

சுப்பாமணி: நேயர்களே! ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு. கலந்துதையாடல், அதாவது கலந்துரையாடல் தொடரும்..!

சேட்டை! முந்திரி!! சண்டை போடாம இருங்க! யாரோ கூப்பிடறாங்க! என்னான்னு கேட்டுட்டு வந்திடறேன். சரியா!

செக்யூரிடி ஆபீசர்: (கிசுகிசுப்பாக) சுப்பாமணி சார்! இவங்க ரெண்டு பேருலே ஒருத்தர் தான் அந்தத் தப்பிச்சு வந்த பைத்தியமாம். ஆஸ்பத்திரிக்குத் தகவல் கொடுத்திட்டோம். ஆனா, அவங்க வர்ற வரைக்கும் சமாளிக்க முடியுமா?

சுப்பாமணி: என்னாது? இவங்கள்ளே ஒருத்தரா? நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு! அந்தப் பைத்தியம் சேட்டைக்காரன்னு பொய் சொல்லி ஸ்டூடியோவுக்குள்ளேயே நுழைசிட்டதா? சே!

செக்யூரிடி: எப்படி சார் நம்பிட்டீங்க?

சுப்பாமணி: என்னய்யா பண்ணட்டும்? வந்ததுலேருந்து கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு, கேனத்தனமாப் பேசிட்டிருந்ததாலே, உண்மையிலேயே இது தான் சேட்டைக்காரன்னு நம்பித்தொலைச்சிட்டேன்.

செக்யூரிடி: இனிமேதான் நீங்க ரொம்ப ஜாக்கிரதையா டீல் பண்ணனும். அந்தப் பைத்தியம் முந்திரிக்கொட்டை மேலே விழுந்து பிறாண்டிரக் கூடாது. எப்படியாவது வந்திருக்கிறது சேட்டைக்காரனில்லை, பைத்தியம்னு அவருக்குப் புரிய வைக்கணும்.

சுப்பாமணி: ஓ.கே!

நேயர்களே! ’சந்திப்போமா நிந்திப்போமா?’ நிகழ்ச்சியில் மீண்டும் உங்களை வரவேற்கிறோம். இன்று நாம் கலந்துரையாடப் போவது ’பைத்தியங்கள் ஏன் ஆஸ்பத்திரிகளிலிருந்து தப்பிக்கின்றன?’ சேட்டை! இது குறித்து உங்கள் கருத்தென்ன? இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட அனுபவம் இருக்கா?

சேட்டை: ஹிஹிஹி! அட பைத்தியம் தானே, தப்பிச்சுப் போனாப் போகட்டுமே! ரெண்டு நாள் ஊரைச் சுத்திட்டு வெறுத்துப்போயி திரும்ப ஆஸ்பத்திரிக்கே வந்திரப்போகுது.

மு.கொ: திரும்பத் திரும்ப இந்தச் சேட்டை பொறுப்பற்ற பதிலாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார். முற்றின பைத்தியங்களை ஊருக்குள் உலவ விட்டால் என்னவாகும்? இது மிகப்பெரிய சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகி விடுமல்லவா?

சுப்பாமணி: முந்திரிக்கொட்டை சார்! விஷயம் தெரியாமக் கோபப்படாதீங்க சார். இவரு யாருன்னு தெரியாது உங்களுக்கு. தெரிஞ்சா இப்படிக் கோவிச்சுக்க மாட்டீங்க!

மு.கொ: இவரைத் தெரியாதா எனக்கு? சேட்டைக்காரன்னுற பேருலே தினம் ஒரு மொக்கை இடுகை போடுற வெத்துவேட்டு தானே இவரு?

சுப்பாமணி: ஐயையோ! புரிஞ்சுக்க மாட்டீங்கறீங்களே சார்! இவர் நீங்க நினைக்கிற மாதிரி அப்படிப்பட்ட ஆளு இல்லை!

சேட்டை: என்னது? என்னைப் பத்தி எனக்கே தெரியாத தகவல் ஏதாவது இருக்கா? உங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும். என்னான்னு சொல்லுங்கய்யா! இதுக்குன்னு தனி இடுகை போட்டுராதீங்க!

சுப்பாமணி: இருங்க சேட்டை! உங்களைப் பத்தித் தெரியாதா? நீங்க எவ்வளவு நல்லவரு, எவ்வளவு வல்லவரு..?

சேட்டை: அப்படியா? இதென்ன புதுப்புரளியா இருக்கு?

மு.கொ: சமூக அக்கறையோடு வலைப்பூ எழுதுகிற என்னை வைத்துக்கொண்டே சேட்டைக்காரனை நல்லவரு, வல்லவருன்னு சொல்றீங்களே? இது தான் நமது பின்னடைவுக்கு முக்கியமான அடிப்படைக்காரணம். பாரபட்ச அரசியலில், ஜனரஞ்சகம் என்ற பெயரில் புல்லுருவிகளை ஊக்குவித்து தமிழ்மொழிக்கு இழுக்கு விளைவிக்கும் அப்பட்டமான துரோகம்!

சுப்பாமணி: முந்திரிக்கொட்டை சார்! என்னாலே சத்தம் போட்டுச் சொல்ல முடியாது சார்! கொஞ்சம் பொறுங்க சார்! அவங்க வந்திடுவாங்க சார்! வந்து கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க சார்! அவசரப்படாதீங்க!

மு.கொ: என்னய்யா பின்நவீனத்துவம் மாதிரி புரியாத மாதிரியே பேசறீங்க? யாருய்யா வரணும்? எதுக்கு கூட்டிக்கிட்டுப்போகணும்? எனக்குப் பைத்தியமே பிடிச்சிரும் போலிருக்கே!

சுப்பாமணி: அதான்! அதே தான்! அதைத் தான் சொல்ல வந்தேன்! புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க!

மு.கொ: என்னது? விட்டா நான் தான் தப்பிச்சு ஓடுன பைத்தியமுன்னு சொல்லிடுவீங்க போலிருக்குதே!

சுப்பாமணி: அது நீங்க இல்லை!

சே.கா: அப்ப யாரு சுப்பாமணி? நீங்களா?

சுப்பாமணி: ஆமாம் சேட்டை! நான் தான்! நீங்க டென்சன் ஆகாதீங்க!

சுப்பாமணி: யோவ் சுப்பாமணி! நீங்க பைத்தியம்னா சேட்டை ஏன் டென்சன் ஆகணும்? என்னய்யா நடக்குது இங்கே?

குரல்: டேய் அவசரக்குடுக்கை! இங்கேயா இருக்கே? வார்டுபாய்ஸ்! போய்ப் பிடியுங்க அவங்களை!

சுப்பாமணி: முந்திரிக்கொட்டை! வாங்க சேட்டையைப் பிடியுங்க! இல்லாட்டி மறுபடியும் தப்பிருவாரு!

மு.கொ: ஐயையோ! என்னை விட்டிருங்க! நான் வர மாட்டேன்! நான் வர மாட்டேன்!

வார்டுபாய்: வரமாட்டேன்னா விட்டிருவோமா? மரியாதையா வரியா இல்லாட்டி ஊசி போடட்டுமா?

மு.கொ: ஊசியா? எனக்கு வலிக்கும். நான் அழுவேன்!

சுப்பாமணி: என்னது? முந்திரிக்கொட்டை தான் பைத்தியமா? நான் சேட்டைன்னில்லே நினைச்சிட்டேன்.

மு.கொ: சுப்பாணி சுப்பாணி! என்னை விடச் சொல்லுங்க சுப்பாணி!

(முந்திரிக்கொட்டையை ஆஸ்பத்திரி ஊழியர்கள் தரதரவென்று இழுத்துக்கொண்டு போகிறார்கள்)

சுப்பாமணி: சேட்டை! ஐயாம் சாரி! உண்மையிலேயே உங்களைத் தான் நான் பைத்தியமுன்னு நினைச்சிட்டேன். நல்ல வேளை, நான் நினைச்ச மாதிரி அது நீங்க இல்லை!

சே.கா: ஹையோ ஹையோ! ஊருலே ஒரே ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி தான் இருக்குதுன்னு நினைக்கறீங்களா?

சுப்பாமணி: அ.ப்..ப..டீ..ன்..னா...? நீங்களும்........?

சே.கா: ஹிஹிஹி! ஹிஹிஹி!