Thursday, February 28, 2008

அயல்நாட்டு தம்பிக்கு அண்ணனின் கடிதம்

புறப்படு தம்பி!!
வெள்ளைக்காரன் முகம் பார்க்கவா
அகம் விட்டு கிளம்பினாய்?!

ஐயகோ! ஒரு மர்லின் மன்றோ க்ளோனிங்கா
ஜெனிபர் லோபஸின் ஸ்கேனிங்கா - என
நீ துள்ளி வருவாய்
வீக்கெண்ட் பார்ட்டியில் அள்ளி விரைவாய்
என்று உன் அண்ணன் இங்கு படமெடுத்துக் கொண்டிருக்க
அங்கு நடப்பதோ கொடுமை!
காலத்தின் சத்திய சோதனை!!

தாவணியைக் கவனி!
சுடிதாரைக் கண்டு சிரி!
ஜீன்ஸ் போட்ட எந்த பெண்ணுக்கு நீ ஃபேன்ஸ்!
டைட்டா...அது நம்ம சைட்டு!

இப்படி வருத்தமில்லா வாலிபனாய் வசந்தமான ஒரு வாழ்வு வாழ்ந்த தமிழ் தம்பியே!!

இன்று அங்கு உன்னை சூழ்ந்து நிற்பது
குளித்தும் குளிக்காமலும்
சிரைத்தும் சிரைக்காமலும் திரியும் வெள்ளைக்காரன்!!
உன் பகல் கனவுகளுக்கு வேட்டு வைக்கும் கொள்ளைக்காரன்!!
சேதி கேட்டு உன் அண்ணன் நெஞ்சும் விம்முது...கம்முது...தும்முது...

கன்னியரைக் கண்டு கிடப்பதே கடமையெனக் கிடந்த அன்புத் தம்பியே!!
விமானம் ஏறியதும்கூட விமானபணிப்பெண்களைக் கண்டுகளிக்கவே என கொள்கை முழக்கம் செய்த தம்பி!!

இன்று அயல்நாட்டில் அட்டு ஃபிகர்களும் இல்லாத அவல அலுவலகத்தில் அடைந்து கிடப்பதா!! மனம் கொதிக்குதடா!!

பொறுத்தது போதும்!
ஃபிகரைத் தேடு!
கடலை போடு!
மாலையில் கூடு!
விடியும் வரை ஆடு!!
இளமை கொண்டாடு!!

அண்ணனின் அன்புமொழி கேளு!
அயல்நாட்டில் மொழி தெரியாத மங்கையர்குலம் கண்டு மனம் கலங்காதே!
அயல்நாட்டு வாலிபா எழுக!!
வாலிபத்தின் நிரந்தர தல'யாம் கைப்புள்ளயைத் தொழுக!!!

Thursday, February 21, 2008

எப்படி கோட்டிக்காரன் ஆவது?


Wednesday, February 20, 2008

சால்சா மோனிகா பால் - 2

முதல் பாகம் இங்கே

என்னடா...காதல் கதைன்னு சொல்லீட்டு காதலே வரலைன்னு சொல்றீங்களா? அது வர்ரதுக்குக் காரணம் வேணும்ல. அந்தக் காரணத்துக்குத்தான் வெச்சோம் ஒரு பயணம். விமானப் பயணம். லண்டன்ல சாக்ஸ் சண்முகசுந்தரத்துக்கும் மோனிகா பாலுக்கும் சண்டை வந்துச்சுல்ல. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் பாரீசுக்குப் போறாங்க. சென்னை பாரீஸ் இல்லைங்க. இது பிரெஞ்சுப் பாரீசு. அதுக்குக் காரணம் சவடால் சாண்டியாகோதான். சங்கப் போர்வாள்...தங்கத் தேர்வாள் தேவ் அந்தப் பாத்திரத்த ஏத்து நடிக்கப் போறாருன்னு ஏற்கனவே பாத்தோம்.

அந்தச் சவடால் சாண்டியாகோவுக்கு என்ன வேலை? ஏற்பாடு செய்றதுதான். அதாவது.... பிரெஞ்சு பிரதமரு, ஜெர்மன் ஜனாதிபதி, கொசாவா குடியரசுத்தலைவர்னு சிநேகிதம் பிடிச்சு வெச்சுக்கிறது. அப்படியே அவங்க வீட்டு கல்யாணம், வேலண்டைன்ஸ் டேக்கு பாட்டுக் கச்சேரிகளை ஏற்பாடு செய்றதுதான் வேலையே. அப்படித்தான் நம்ம கதாநாயகனோட சாக்ஸ் கச்சேரியையும் கதாநாயகியோட சால்சாவையும் பிரஞ்சு விவசாய அமைச்சர் வீட்டு விருந்துக்கு ஏற்பாடு செஞ்சிருக்காரு. அதுனாலதான் ரெண்டு பேருக்கும் ஒரே பிளைட்ல டிக்கெட் வாங்கி அனுப்பிட்டாரு.

வழக்கமா கச்சேரிக்குப் போறவங்கள்ளாம் செட்டாத்தான் போவாங்க. மோனிகா கூட அவங்கம்மா மார்க்கரெட்டு... மேக்கப் செட்டு மேரி.. பியானோ பீட்டருன்னு ஒரு படையே கெளம்பும். நாயகனோட ஒரே ஒரு ஆளுதான். அவர்தான் டிரம்ஸ் டேவிட்டு. அதுக்கு ரொம்பப் பொருத்தம் யார்னா ஆன்மீகச் செம்மல்..சண்மதச் செல்வர்...சொல்வின் செல்வர் கே.ஆர்.எஸ்தான்.
அந்த விமானப் பயணத்துல டிரம்ஸ் டேவிட் பக்கத்துலதான் மொதல்ல மோனிகா பாலுக்கு எடம் கெடைக்குது. ஆனா சாக்ஸ் சண்னுக்கு மோனிகா மேல ஒரு இதுன்னு தெரிஞ்சதுல இருந்து அந்த எடத்த கதாநாயகருக்கு விட்டுக் கொடுக்க விரும்புனாரு டேவிட்டு.. அதாவது ஆன்மீகப் புயல் கே.ஆர்.எஸ். அப்ப ஒரு டயலாம் வெக்கிறோம்.

"தம்பி... இங்க குளுறுது.....ஆட்டம் ஜாஸ்தியாயிருக்கு. தலையும் கிறுகிறுங்குது...நேத்து நைட்டு வெட்டுன நண்டு வறுவலும் ஹெய்னகென் பீரும் அடிவயத்துல ஜலக்ஜலக்குன்னு குலுங்குது...நான் அங்க வர்ரேன். நீ இங்க வந்துரு"ன்னு சொல்லீட்டு இடம் மாறீர்ராரு. இடம் மாறும் போது வேணுக்கும்னே மார்க்கெரெட்டா அம்மா மேல மோதுறாரு.

அப்பத்தான் மொதமொதல்ல நாயகனுக்கும் நாயகிக்கும் காதல் வருது. பக்கத்துல பக்கத்துல உக்காந்திருக்காங்கள்ள. அவங்க பாரீஸ் சார்லஸ் தி ஹால் ஏர்ப்போர்ட்ல எறங்குறப்போதான் சவடால் சாண்டியாகோ எண்ட்ரி ஆகுறாரு. வர்ரப்பவே கூட அப்ரசெண்டையும் கூட்டீட்டு வர்ராரு. படத்துல பாக்குறீங்களே அவங்கதான். சவடால் சாண்டிக்கு பஞ்சு டயலாக்கு நெறைய வெக்குறோம்.

"சாண்டியாகோவுக்குச் சவடால்...விவசாயத்துக்குப் பாலிடால்"

"எக்மோர்ல இருக்குற மால் பேரு அல்சா....இந்தப் பாப்பா ஆடுற டான்சுக்குப் பேரு சால்சா"

"என் பேச்சக் கேக்கனும் சாக்ஸ்சு...இல்லைன்னா ரெடியாகுது பாக்ஸ்சு"

"பிகருதான் எனக்குப் பவரு...அதப் பாத்து நீங்க முட்டிக்க இருக்கு சொவரு"

"சாண்டியாகோக்கு இருக்குற ரசிகர் கூட்டமோ லேக்ஸ்... உங்கிட்ட இருக்கிறதோ ஒரே ஒரு சாக்ஸ்"

"சாக்ஸபோன் சத்தம் கேட்டா...எல்லாரும் singu....சாண்டியாகோ சத்தம் கேட்டா எல்லாருக்கும் பாங்கு"

இதெல்லாம் சாம்பிள்தான். அவரு கலக்குனா அண்டார்டிக்காவே அண்டர்வேர் இல்லாம ஓடும். அந்த அளவுக்கு ரகளை பார்ட்டி.

எப்படியாச்சும் மோனிகாவையும் சாக்ஸையும் சேர விடக் கூடாதுன்னு முயற்சி செய்ற பாத்திரம். போட்டியைத் தடுத்து நிறுத்தப் பாக்குறாரு. ஆனா போப்பாண்டவர் முன்னாடி வாட்டிகன்ல போட்டீங்குறதால அது மட்டும் முடியலை. ஆனா விடுவாரா? இத்தாலி மாபியா லீடரப் போய் பாக்குறாரு. "இந்த மோனிகா பொண்ணு ரோம்ல உங்க கூட ரோமிங் பண்ண வேண்டியது. யாரோ ஒரு தமிழ் நாட்டு ஊதுவானுக்குப் பொண்டாட்டியா போறதா? வெள்ளைப் பாலைக் கருப்புக் காப்பீல கலக்குறதா? சீஸ்தான் பீட்சாவுக்கு பேஸ். பீட்சாவுக்கே இத்தாலிதான் பேஸ்"னு கண்டதப் பேசி மனச மாத்தீர்ராரு.

மாபியான்னா வில்லன்கள்னு ஒங்களுக்குப் புரிஞ்சிருக்குமே. இங்கதான் வில்லன்களோட எடத்துல ஒரு பாட்டு வெக்கிறோம். செமயான பாட்டு.

மாபியா மாபியா
நீங்க குடிக்கிறது
காபியா காபியா
பீட்சா பர்கர் பன்னாச்சு
உன்னைப் போட்டுத் தாக்கும் பொண்ணாச்சு

இப்பிடி ஒரு செந்தமிழ்ப் பாட்டை எழுதனும்னா வாளிபக் கவிஞரோ கவிகளின் பேரரசோ தேவையிருக்கும். அதுனால என்ன...விட்டா இந்தப் பாட்டுக்கு அவங்களே தேசியவிருதும் வாங்கிக்கிருவாங்க. நமக்கும் விளம்பரமாயிரும்.

நடுநடுவுல சாக்ஸ் சண்ணுக்கும் சவடால் சாண்டிக்கும் சின்னச் சின்ன சண்டை வருது. பாரீஸ் சர்ப் ஆப் நாத்ரதாம்ல சண் சாக்ஸ்ல ஒரு தமிழ்ப் பாட்டுதான் வாசிச்சாரு. அது யாருக்கும் புரியலைன்னு சாண்டி பிரச்சனையக் கெளப்புறாரு. அப்ப கதாநாயகருக்கு பஞ்சு டயலாக்

"தமிழ்தான் என் மூச்சு. அதுதான் என் சாக்ஸபோனுக்கும் மூச்சு" அப்படீன்னு நெத்தி நரம்பு பொடைக்க வீரவசனம் பேசுறாரு.

அப்பத்தான் சாண்டி கேக்குறாரு. "ஏண்டா....தமிழ் என்ன ஆக்சிஜன் சிலிண்டராடா? என்னவோ முதுகுல தூக்கிக்கிட்டே போற மாதிரி மூச்சு மூச்சுங்குறீங்களேடா?"

இப்பிடிச் சண்டை பெருசாகிக்கிட்டே போயிதான் மாபியா கிட்ட ஏத்தி விடுறாரு. ஆனாலும் எப்படியோ போட்டி நடக்குற நாளும் வந்துருது. போப்பாண்டவர் உக்காந்திருக்க அவரு முன்னாடி வாட்டிகன் சர்ச்சுல சாக்ஸ் வாசிக்கிறாரு கதாநாயகரு. ஆனா அங்கதான் ஒரு புதுமையப் பண்றோம். மொதமொதல்ல சாக்ஸ்ல கானா பாட்டு வெக்கிறோம். சாக்ஸ் இசையில் கானாங்குறது இசையுலகத்துல இதுவரைக்கும் யாருமே செய்யாத புதுமை. அனேகமா இந்தப் புதுமைக்கு ஆஸ்கார் அவார்டு கிடைக்கிற வாய்ப்பு ரொம்பப் பிரகாசமா இருக்கு. அதே மாதிரி கானாபாட்டுக்கு சால்சா ஆடுறதும் பெரும் புதுமை. இப்படி இவரு வாசிக்க....அந்தப் பொண்ணு ஆட...ஆகா..ரெண்டு பேரையும் பாத்தா தில்லான மோகனாம்பாள் படத்துல சிவாஜி பத்மினியப் பாத்த மாதிரியே இருக்கும்.அப்பத்தான் சாண்டி ஏத்திவிட்ட மாபியா மாண்டி உள்ள வந்து துப்பாக்கியால சுடுறான். அதக் கதாநாயகி பாத்து தடுக்குறாங்க. ஆனா தவறி குண்டு சாக்ஸ் மேல பட்டுறுது. அதுனால ஏற்கனவே இருக்குற ஓட்டைல கூட ஒரு ஓட்டை வந்துருது. ஆக ஏழு சுரத்துக்கு மேல எட்டாவது சுரம். அந்தச் சுரத்துல ஜுரம் வர்ர மாதிரி வாசிக்கிறாரு ஹீரோ. ஏழு சுரம்னு இதுவரைக்கும் மக்களை ஏமாத்தீட்டு இருந்த இசைமேதைகளுக்கெல்லாம் நம்ம படம்தான் ஆப்பு.

இந்தக் கிளைமாக்ஸ் பாட்டுதான் படத்துல கிளைமாக்ஸ். அந்தப் பாட்டு முடியுற நேரத்துல சரியா இத்தாலி போலீஸ் வந்து சவடால் சாண்டியாகோவை அள்ளிக்கிட்டு போகுது. மாபியா மாண்டி அங்கயே திருந்தி போப்பாண்டவர் கிட்டயே பாவமன்னிப்பு கேக்குறதால அவரை மட்டும் மன்னிச்சு விட்டுர்ராங்க.

எட்டு சுரப் பாட்டு முடியுறப்போ வாட்டிகன் சர்ச்சுல இருக்குற ஏசுநாதர் கண்ணுலயும் மேரிமாதா கண்ணுலயும் ரத்தக்கண்ணீர் வருது. அப்பத்தான் காதல் பொங்கி நாயகனும் நாயகியும் அஞ்சு நிமிஷம் ஸ்லோமோஷன்ல ஓடி வந்து கட்டிப்பிடிக்குறாங்க. ரெண்டு பேரையும் ஆசீர்வதிச்சி அங்கயே போப்பாண்டவரே கல்யாணம் செஞ்சு வெக்கிறாரு.

இதுதான் சாக்ஸ் சால்சாவும் இணைஞ்சு பரோட்டாவும் சால்னாவுமா ஆன கதை.

பி.கு - அடுத்த வாரம் இசையமைப்பாளர் எம்.எஸ்.இளையமானோட ஒரு நாள்.

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, February 19, 2008

பொண்ணு எப்படி இருக்கனும்டா...

சரி.. மாதம் முடிய போது.. இன்னும் ஒரு பதிவு போடலனா எப்படி! (குட்டி பதிவு தானுங்க..)

இந்த கல்யாண வயசு கிட்ட வந்தாலே, அம்மா மெதுவா கேட்பாங்க... ஆமாடா கண்ணா பொண்ணு எப்படி இருக்கனும்.. அப்படினு.. நாம பே பே அப்படினு உளறுவோம். எப்படி... இப்படி...

சரி.. சீரியஸா பேசுவோம்.. (அப்போலோ ஓகேயா?)
இப்படி தான் பொதுவா இந்த பேச்சு போகும்...

அம்மா: உனக்குனு, பொண்ணு இப்படி தான் இருக்கனும்னு ஏதும் இருக்காடா?

பையன்: அதா.... ம்ம்ம்...

அம்மா: சும்மா கூச்ச படாம சொல்லுடா...

பையன்: ம்ம்ம்ம்ம்....... கொஞ்சம் example சொல்லுங்கம்மா.. (example code பார்த்தே வாழ்க்கை பூரா code செய்துட்டேனே.. சொந்தமா specs கேட்டா, வர மாட்டேன்யுதுய்யா!)

அம்மா: எனக்கு... பொண்ணு குறைந்தது 5 feet உயரமாச்சும் இருக்கனும்.. ரொம்ப வெள்ளையா வேண்டாம், உன் லைன்ல படிச்சு இருக்கனும், அவிங்க வீடு கொஞ்சம் வசதியா இருக்கனும், (இப்படி ஒரு 5 நிமிஷம், script ஏ பார்க்காம ஒரு நீளமான டயலாக்.. அவிங்க பேசும் போது நமக்கு தண்ணி தாகம் எடுக்கும்...) .............
............ இவ்ளோ தாண்டா.. இப்போதைக்கு

பையன்: (அடங்கொக்கமக்கா.. இவ்ளோ தானாவா) ஓ... நீங்க சொன்னா சரிதான்மா..

அம்மா:
சரிடா.. உனக்கு எப்படி இருக்கனும்

பையன்: (இன்னுமா???? அதான் உலகத்துல இருக்கிற எல்லாத்தையும் நீங்க சொல்லிடீங்களே.. நான் என்னத்த சொல்ல) ம்ம்ம்ம்........

அம்மா: சரி.. ஏதும் மனசுக்குள்ல இருக்கானு தான் கேட்டேன். இருந்தா சொல்லு.. இல்லனா நாங்க பார்த்துப்போம்..

பையன்: ஹி ஹி...இல்லைமா..ஹா ஹா.. (நான் கோடு போடாமலேயே ரோடு போடுறீங்க.. இதுல நான் அத வேற சொன்னேன்.. விளங்கினாப்ல தான்)

அதுனால, நம்ம பயலுகளுக்கு எல்லாம் உபயோகமா இருக்கனுமேனு தான் இது...

இப்போ இந்த பொண்ணு கண்ணு இருக்கு பாருங்க.. அது... மீன் மாதிரி இருக்கனும். ( அதுவும் Gold Fish கணக்க இருந்தா ரொம்ப அழகா இருக்குமாங்க!) இப்போ மீன் என்ன செய்யும்.. அங்க இங்க நீந்திட்டே இருக்கும். நம்ம கண்ணும் அதை சுத்தியே போகும்... என்ன சொல்ல வரேன்னு புரியுதுங்களா..

அடுத்த மேட்டரு, மூக்கு. எங்க Guess செய்யுங்க. சரி தான்.. அதே தான்.. கிளி மூக்கு தான்! இது ஏன்னு நானும் ரொம்ப யோசிச்சு பார்த்தேன்.. தனியா ரூம் போட்டேன்.. ஒரு கிளி கூட (நிஜ கிளிங்க) ரூம் போட்டேன்.. ஒன்னும் தோணல. சரி, ஆராய வேணாம்னு விட்டாச்சு. உங்களுக்கு எதுனா தோணுதுங்களா?

அடுத்து கார்மேகம் மாதிரி கூந்தல். ஏன் அது ஜீப் மேகம், SUVமேகம் னு எல்லாம் இருக்க கூடாதானு நீங்க கேட்கும் முன்ன, கார்மேகம் னா, மழை தர மேகம் மாதிரி கருப்பா முடி இருக்கிறனு அர்த்தம்னு சொல்லிகிறேன்.. (Sorry people.. Blondes go out of the equation here :( )

அடுத்த மேட்டர்.. உதடு. Strawberry உதடு. இதுக்கு அழகா நான் சொன்ன விளக்கம் சென்ஸார் போர்டு நிராகடிச்சிடுச்சு..

சரி.. இது வரை சொன்ன மேட்டரெல்லாம் மொத்தல்ல ஒரு பொண்ணுக்கு இருந்தத எப்படி இருக்கும்னு பார்ப்போமா.....பொண்ணு, ஸ்நேகா மாதிரி, சூப்பரா இருக்குல.. ஹிஹி!
இது போக, ஆப்பிள் கண்ணம், சங்கு கழுத்து, நிலவு முகம் அப்படினு எல்லாம் சொல்ல ஆரம்பிச்சா... (ஸ்நேகா வீட்டுல இருந்து எனக்கு ஆட்டோ வரும்.. வேறென்ன! (ஒரு வேளை அதுல ஸ்நேகாவும் வருமோ...))

Tuesday, February 12, 2008

சால்சா மோனிகா பால் - 1

வாங்க வாங்க வாங்க.... இது காதல் மாசம். இந்தக் காதல் மாசத்துல ஒங்க எல்லாருக்கும் ஒரு கதை சொல்லப் போறேன். இதத்தான் சினிமாவா எடுக்கப் போறோம். வார்னர் பிரதர்ஸ் மொதமொதல்ல தமிழ்ல எடுக்கப் போற படம். கதாநாயகரா சூர்யாவா அஜீத்தான்னு யோசிச்சோம். அவங்க ரொம்பவும் பிசியா இருந்தா டாம் குரூஸ் கிட்ட பேசிக் கால்ஷீட்டோ..கைஷீட்டோ....அட...பெட்ஷீட்டாவது வாங்கிப் படத்த எடுக்கனும்னு ஒரே முடிவோட இருந்தோம். ஆனா பெரிய பட்ஜட் படங்குறதால சங்கத்துச் சிங்கம் வால்டர் வெட்டியார் கதாநாயகரா நடிச்சா மட்டுந்தான் நல்லாயிருக்க முடியும்னு எல்லாரும் கூடிப் பேசி முடிவு செஞ்சோம்.

பட்ஜெட்டு எவ்வளவா? 500கோடிதான். ஆயிரம் கோடி கொடுக்குறதாச் சொன்னாங்க. ஐநூறு போதும். தேவைப்பட்டா நூறோ எறநூறோ கூட வாங்கிக்கிறேன்னு சொல்லீருக்கேன்.

சரி கதை என்னன்னு கேக்குறீங்களா? காதல் கதைதான். அதுலயும் ரொம்பப் புதுமையான காதல் கதையைச் சொல்றோம். இதுவரைக்கும் யாருமே சொல்லாத காதல் கதை. அவ்வளோ புதுமை.

கதையில சாக்சஃபோன் வாசிக்கிறவருதான் ஹீரோ. அதாவது வால்டர் வெட்டியார். அவருக்குப் பேரே சாக்ஸ் சண்முகசுந்தரம். அவரு சாக்ஸ் வாசிச்சா ஒலகமே ஒரு நிமிசம் நின்னு கேக்கும். அவ்வளவு தெறமை. அவரை ஒரு நாள் லண்டன்ல இருக்குற சர்ச்சுல வாசிக்கக் கூப்புடுறாங்க. தமிழ்நாட்டுக்காரருக்கு லண்டன்ல இருக்குற எந்த சர்ச்சுல வாசிக்க வாய்ப்புக் கெடைச்சாலும் பெருமைதானே. லண்டன் மகாராணிக்கே வாசிச்ச மாதிரி பீத்திக்கலாம்ல. (ஆனாப்பட்ட ராயல் பில்ஹார்மொனிக் ஆர்க்கெஸ்ட்ராக்காரங்க ஹங்கேரீல புத்தாபெஸ்த் ரயில்வே ஸ்டேஷன்ல போஸ்டர் ஒட்டிக் கச்சேரி நடத்துறாங்கள்ள)... ஆனாலும் நம்ம கதாநாயகருக்குக் கெடைச்சது ஊருக்கு நடுவுல இருக்குற பெரிய சர்ச்சுல.

அந்தப் பெருமையோட அவர் வாசிக்கிறப்போ யாரோ வேட்டு போட்டுர்ராங்க. அதுனால அவருக்கு எரிச்சல். இந்த மாதிரி வேட்டுச் சத்தத்துல எப்படி வாசிக்கிறதுன்னு அவரு கோவிச்சுக்கிறாரு. அப்ப அதே சர்ச்சு ஏற்பாடு செஞ்சிருந்த சால்சா டான்சுக்கு வந்த இங்கிலாந்துப் பொண்ணு... அவங்க பேரு மோனிகா பால்...இங்கதான் நீங்க எல்லாரும் கவனிக்கனும். மொதமொதல்ல ஒரு இங்கிலாந்துப் பொண்ணக் கதாநாயகியாக்குறோம். அதுவும் முழுநீளக் கதாநாயகியா. இதுக்காக ஹாரி பார்ட்டர்ல ஹெர்மயானியா நடிக்கிற எம்மா வாட்சனை ஒப்பந்தம் பண்ணீருக்கோம்.

அவங்க விரும்பிக் கேட்டா ஹாரி பாட்டரா நடிக்கிறவரையே ஹீரோவாப் போட்டுறலாம்னு அவங்களையே கேட்டோம். லேசாக் கரியப் பூசீட்டா தமிழ்நாட்டுக்காரர் மாதிரியே இருக்க மாட்டாருன்னும் சொன்னோம். அந்த நடிகரும் கூட மீசை வெச்சிருவோம்னு சொன்னாரு. ஆனா எம்மா வாட்சன் ஒரே முடிவா...வெட்டியார் கதாநாயகனா நடிச்சா மட்டுந்தான் படத்துல நடிக்கிறதாச் சொல்லீட்டாங்க.

சரி. நம்ம கதைக்கு வருவோம். இவரு சாக்ஸ் வாசிக்கிற அழகப் பாத்து கதாநாயகி வியக்குறாங்க. ஆனா ஏன் சாக்ஸ் வாசிக்கிறத நிப்பாட்டீட்டாருன்னு புரியலை. ஏன்னு வாயத் தொறந்து கேக்குறாங்க. அவரும் காரணத்தைச் சொல்றாங்க. அப்ப பேச்சு வார்த்தை முத்தி சண்டை வந்துருது.

அப்பந்தான் சாக்ஸ் பெருசா சால்சா டான்ஸ் பெருசான்னு பிரச்சனை வருது. வரப்போற கிருஸ்மசுக்கு வாட்டிகன்ல இருக்குற செயிண்ட் மேரீஸ் பசிலிக்காவுல போப்பாண்டவர் முன்னாடி இவரு வாசிக்கிற சாக்சுக்கு அந்தம்மா ஆடனும்னு போட்டி முடிவாயிருது. அவரு செயிச்சிட்டா அந்தம்மா சால்சாவே ஆடக்கூடாது. அந்தம்மா செயிச்சிட்டா அவரு சாக்ஸ் தொடவே கூடாது. தொடுற ஒரே சாக்ஸ் ஷூக்குப் போடுறதா மட்டுந்தான் இருக்கனும்.

இதுவரைக்கும் கதையப் பாத்தீங்கன்னாளே...எவ்வளோ ரிச்சா வந்துருக்குன்னு தெரிஞ்சிருக்கும். தமிழ்நாட்டுல தொடங்கி....லண்டன் போயி...அங்க இருந்து இத்தாலி..இத்தாலிக்குள்ள இருக்குற வாட்டிகன். வாட்டிகன் சர்ச்சு. போப்பாண்டவர் வேற நடிக்கனும். வாரியார் நடிச்ச படத்தப் போப்புக்கு ஏற்கனவே போட்டுக் காமிச்சி...அவரு மாதிரி இவரும் பாப்புலர் ஆயிரலாம்னு பேசி அவரையும் சரிக்கட்டியாச்சு. சிவாஜி நடிச்சிப் பாடுன "தேவன் கோயிலிலே யாவரும் தீபங்களே"ங்குற வெள்ளைரோஜா பாட்டை ரீமிக்ஸ் பண்ணி போப்பாண்டவரை வெச்சி ஒரு பாட்டு.

எவ்வளவு புதுமைகள் பாத்தீங்களா? இந்தப் புதுமைகளைப் பாத்துப் புல்லரிச்சுதான் வார்னர் பிரதர்ஸ் எனக்குப் படம் எடுக்குற வாய்ப்புக் குடுத்திருக்காங்க. இன்னும் பலப்பல புதுமைகள் கதைல இருக்கு. ஒவ்வொன்னா எடுத்துச் சொல்றேன்.

போட்டிக்கு முன்னாடி நம்ம வெட்டியார்...அதாவது சாக்ஸ் சண்முகசுந்தரம் சாக்சபோன் நல்லா வாசிக்கிறதுக்காக ஹங்கேரி போறாரு. அங்க போய் ராயல்பில்ஹார்மொனி ஆர்க்கெஸ்ட்ராவுல இருக்குற பெரிய வித்வான் கிட்ட கத்துக்கப் போறாரு. அங்க வெக்கிறோம் ஒரு பாட்டு. ஹங்கேரியில புத்தாபெஸ்த் நகரத்தோட அழகைப் பார்த்து ஒரு பாட்டு பாடுற மாதிரி.

ஹங்கேரி ஹங்கேரி
என் மனசைக் கவர்ந்த சிங்காரி

இந்தப் பாட்டுக்கு ஏ.ஆர்.ரகுமானை இசையமைக்கச் சொல்லி உதித் நாராயணனைப் பாட வைக்கச் சொல்லப் போறோம். ஏன்னா..பாட்டு தமிழ்ப்பாட்டுன்னு நெனச்சு யாரும் கேக்காமப் போயிறக் கூடாதுல்ல. அதுக்குத்தான் உதித் நாராயண். தமிழை உதுத்த நாராயண். பாட்டு கண்டிப்பா ஹிட். ஹங்கேரில இருக்குற டாப் மாடல்ஸ்ல நூறு பேர புத்தா(பெஸ்த்) மலைக்கு மேல ஏத்தி விட்டு டான்ஸ். செயின் பிரிட்ஜ் மேல நிக்க வெச்சி டான்ஸ். இப்பிடி சுத்திச் சுத்தி எடுக்குறோம்.

கதாநாயகரு இவ்வளவு செய்யுறப்போ நாயகி சும்மாயிருப்பாங்களா? பிரியாணி சால்னால ஊறுற மாதிரி இவங்க சால்சாயே ஊறுறாங்க. லண்டன்ல அவங்க அம்மா மார்க்ரெட் இந்தப் போட்டி நடக்கவே கூடாதுன்னு அடம் பிடிக்கிறாங்க. அப்பத்தான் நம்ம கதைல உள்ள வர்ராரு சவடால் சாண்டியாகோ. இது ஒரு மாதிரி காமெடி வில்லன் பாத்திரம். யார நடிக்க வைக்கலாம்னு இன்னும் யோசனை பண்றோம். எடி மர்பிய நடிக்க வைக்கலாம்னு யோசனை இருக்கு. ஆனா அவரே கதாநாயகனாவும், நாயகியாவும், நாயகியோட அம்மாவாவும், போப்பாண்டவராவும் நடிப்பேன்னு அடம் பிடிப்பாரோன்னுதான் பயமா இருக்கு. ரொம்பவும் அடம் பிடிச்சா அவரத் தூக்கீட்டு ஜிம் கேரியை நடிக்க வைக்கனும்னும் நெனச்சோம். ஆனா சவடால் சாண்டியாகோ பாத்திரத்துக்கு சங்கப் போர்வாள் தேவ் மட்டுமே பொருத்தமா இருக்க முடியும்னு வார்னர் பிரதர்சே சொல்லீட்டாங்க. அதுனால தங்கத்தேர் தேவும் பெரிய மனசு வெச்சு போனாப் போகுதுன்னு நடிக்க ஒத்துக்கிட்டாரு. அவரு படத்துல ரொம்பவே கலக்கப் போறதா உலகத்துல இப்பவே பேசிக்கிறாங்க.

சரி போட்டி நடந்துச்சா? அத அடுத்த அத்தியாயத்துல பாப்போம். ஆனா அதுக்கு முன்னாடி....ரசிகர்கள் கருத்துங்குற பேர்ல இந்தக் கதையில எந்த மாதிரி திருப்பங்கள் வந்தா நல்லாயிருக்கும்னு நீங்க நெனைக்கிறீங்களோ.....அதத் தாராளமா கூச்சநாச்சப்படாம சொல்லலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

காதலிப்பது எப்படி?

மு.கு: என்னை எழுதும்படி அழைத்த சங்கத்து சிங்கங்களுக்கு முதலில் என் நன்றிகள்..

சரி.. எப்படி காதலிக்கனும்.. யாரை காதலிக்கனும், எப்படி காதல சொல்லனும்னு திகைச்சு இருக்கும் என் சக காளையர்களுக்கும், தோழிகளுக்கும் இந்த பதிவு சமர்ப்பனம். படிச்சு தெரிஞ்சுகோங்க.பசங்களுக்கு:

முதல்ல. ஒரு பொண்ண கண்டுபிடிக்கனும். எப்படி?

அந்த பொண்ணுக்கு எந்த qualification இருக்கோ இல்லையோ.. இரண்டு qualifications முக்கியம். முதல்ல, அவ வேற யாரையும் காதலிக்க கூடாது. இரண்டாவது என்னனு கடைசில சொல்லறேன். சரி. அப்படி ஒரு பொண்ண கண்டுபிடிச்சுடீங்களா. இப்ப, அந்த பொண்ணு உங்க ரேஞ்சில இருக்கனும். அதாவது, கண்ணாடி முன்னாடி போனா, நீங்க எப்படினு உங்களுக்கு தெரியும். அழகு, smartness, attitude, humor sense இதெல்லாம் வைச்சு, (நம்ம பொண்ணுங்களுக்கு மார்க் போடுவோமே) நமக்குனு ஒரு மார்க் இருக்கும். அந்த ரேஞ்சுக்கு கொஞ்சம் முன்ன பின்ன பொண்ணு இருக்கலாம். ரொம்ப கம்மியாகவோ, ரொம்ப கூடவோ இருந்தா, பொண்ணுக்கு நம்மை பிடிக்காம ரிஜக்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். (ஆனா, உண்மை காதலுக்க்கு, எப்படி இருந்தாலும் சரி ). So, இப்போ, பொண்ண செலக்ட் செய்தாச்சு!

இரெண்டாவது, அந்த பொண்ணு மேல காதல் வரணும்.

இதெல்லாம் எப்படினு சொல்ல முடியுமா! காதல் வரலனா ஒன்னும் செய்ய முடியாது...சரி சரி.. அழாதீங்க. தபூஷங்கர் கவிதைகள் படிங்க. கண்டிப்பா காதல் மேல ஒரு ஆசை வரும். அப்படியும் வரலனா, நிறைய தமிழ் சினிமா பாருங்க.. காதலுக்கு மரியாதை, சேது, இப்படி ... தானா வரும்.

மூன்றாவது, அந்த பொண்ணு கிட்ட காதலை சொல்லனும்.

நீங்க நண்பனா பழகுவீங்களோ, இல்ல வழியறீங்களோ, ஆனா சொன்னா தான் காதல். காதல் சொல்லவே தைரியம் இல்லனா, ரொம்ப கஷ்டம். லவ் லெட்டர் எல்லாம் so old fashion. பொண்ண நேர்ல பார்க்க முடிஞ்சா, அவ கண்ண பார்த்து (Note this point, காதலிக்கிற பொண்ண கண்ணுல மட்டும் தான் பார்த்து பேசனும்.. unless நீங்க கருப்பு கண்ணாடி போட்டு இருந்தா) "நான் உன்னை காதலிக்கின்றேன்" அப்படினு நச்சுனு சொல்லனும். அப்போ தான் பொண்ணுக்கும் ஒரு நம்பிக்கை வரும். சரி. கடைசி வரை வச்சு காப்பாத்துவான்னு! நேர்ல பார்க்க முடியலையா, ஒரு போன்ல சொல்லுங்க. ஆனா, பொண்ணு சுதாரிச்சு, அவ உண்மையான உணர்வை மறைப்பதற்க்குள், அதை கண்டுகொள்ளும் படியான ஒரு மீடியா அவசியம்.

நான்காவது, அந்த பொண்ணு, ரிஜக்ட் செய்தால் என்ன செய்ய.

கண்டிப்பா, எந்த பொண்ணும், உங்களை காதலிச்சா கூட உடனே ஒத்துக்கொள்ள மாட்டா. அதுனால, கொஞ்சம் பொறுமை வேணும். (Again, note this point,. கொஞ்சம் தான் பொறுமை வேணும். லூசு மாதிரி, 5 வருஷமா பின்னால சுத்த கூடாது. காதல் ஒரு முறை தான் வரும். அதுவும் ஒருத்தர் மேல தன் வரும் அப்படினு சினிமா டயலாக் பேசனீங்கனா, சேது மாதிரி தான் கடைசில ஆகுவீங்க). ஒரு பொண்ணு மேல நீங்க உண்மையாகவே அக்கறையும், அன்பும் காட்டினா, கண்டிப்பா புரிஞ்சிப்பா.

ஐந்தாவது, இது எதுவுமே ஒத்து வரலனா..

Pls go to step one.

சரி, கடைசியா பொண்னு செலக்ட் செய்ய, இரண்டாவ்து criteria சொல்லறேன்னு சொன்னேன் இல்ல..அவ இந்த பதிவ படிச்சு இருக்க கூடாது! வேற என்ன ;)

-------------------------------------

பெண்களுக்கு:

பையன பார்த்து லேசா சிரிங்க. அதுக்கு மயங்கலனா, வேலைக்கு ஆகாது.

-----------------------------------------------------------------


Happy Valentines's Day மக்கா! இந்த வருஷம் இல்லனா, அடுத்த வருஷமாச்சும், உங்க valentine கூட கொண்டாட வாழ்த்துக்கள்.

Thursday, February 7, 2008

இயக்குனராகிறார் ஜிரா

கூட்டம்னா கூட்டம் அப்படியொரு கூட்டம். கோட்டூர்ல இருக்குற அந்த அப்பார்மெண்ட் வாசல்லயும் தெருவுலயும் கூட்டம்னா கூட்டம். நடிகர் சூரியாவும் ஜோதிகாவும் ஒரு கார்ல வர்ராங்க. கிளிக்கு கிளிக்குன்னு பலர் அவங்கள போட்டோ பிடிச்சிக்கிறாங்க.

கூட்டத்துல இருந்து அவங்க ரெண்டு பேரையும் காப்பாத்தி மலேசியா மாரியாத்தா ஒரு அப்பார்ட்மெண்டுக்குள்ள கூட்டீட்டுப் போறாங்க. கூட்டம்னா....சன்னு, செயா, ஸ்டாரு, ராஜூ, கலைஞரு எல்லாருந்தான்.

"அண்ணே...சூரியா சோதிகா வந்துருக்காங்கண்ணே." மமா (மலேசியா மாரியாத்தா) அண்ணனைக் கூப்புடுறாரு. எலுமிச்ச நெறத்துல ஜிப்பா போட்டுக்கிட்டு அண்ணேன்னு கூப்புடப்பட்ட ஜிரா கும்புட்டுக்கிட்டே ஹாலுக்கு வர்ராரு. "வாங்க சூரியா வாங்க. வாங்க ஜோதிகா வாங்க"

அப்பிடியே சூரியா பெரிய ஆளுயர சந்தனமாலையை ஜிரா கழுத்துல போடுறாரு. அத ஜிராவோட இன்னொரு உடன்பிறப்பான சிவியாரு காமரால கிளிக்கிக்கிறாரு. பின்னே? மமாவும் சிவியாரும் ஜிராவோட சினிமா அப்ரசெண்டுகளாச்சே.

"நல்லா இருக்கோம் ஜிரா. உங்க படத்துல நடிக்க எனக்கு நீங்க கொடுத்த வாய்ப்புதான் எனக்குத் தேசிய விருது வாங்கிக் கொடுத்திருக்கு. ஆலந்து நாட்டோட உயர்ந்த விருதான ஆலந்தூரான் விருதும் கெடைச்சிருக்கு. அதுக்கு ரொம்ப நன்றி சொல்லக் கடமைப் பட்டிருக்கோம்."

"அடடே! சூரியா. ரொம்ப உணர்ச்சிவசப்படுறீங்க. கள்ளியிலும் பால் திரைப்படத்துல நீங்க சரவணன் பாத்திரமாவே மாறீட்டீங்க. அது உங்க நடிப்புக்குக் கிடைச்ச பெருமை. நீங்களும் அசினும் பிசின் மாதிரி நடிச்ச காட்சிகள் படத்துக்குப் பெரும் பலம். அதுனாலதான் படம் ஓடீருக்கு. எங்கிட்ட என்னங்க இருக்கு. எல்லாம் முருகன் செயல்." தன்னோட பங்குக்கு ஜிராவும் படம் காட்டுறாரு.

அதுக்குள் மமா "அண்ணே...அசின் வந்திருக்காங்கண்ணே. உள்ள வந்துக்கிட்டிருக்காங்க." சொல்லிக் கிட்டிருக்கும் போதே அசின் உள்ளே வருகிறார்.

"வணக்கம் ஜிரா. நிங்களைக் கண்டு நன்னி சொல்லீட்டுப் போகலாம்னு வந்து. மலேசியாவுக்கு ஒரு ஷூட்டிங் போயி. அங்க டூரியன் பழம் கிட்டீன்னு வாங்கி வந்து. இந்தாங்க."

மமாவுக்கு முகத்தில் பல்ப் எரிகிறது. "மலேசியாவா? டூரியானா? குடுங்க குடுங்க" படக்கென்று பிடுங்கி வைத்துக் கொள்கிறார். கடமை மறவாத தம்பி சிவியார் அண்ணனும் அசினும் சேர்ந்து நிற்பதைப் படம் பிடித்துக் கொள்கிறார்.

"அடுத்த படத்துல...."ன்னு சூரியாவும் அசினும் ஒரே நேரத்துல இழுக்க.....ஜிரா 70எம்எம்ல படம் போடுறாரு. "அடுத்த படந்தான.....யோசிப்போம். பாவக்காய் செய்த பாவம்னு ஒரு கதை இருக்கு. நல்ல சேலஞ்சிங்கான பாத்திரம். துணியோபோபியா வந்த ரெண்டு பாத்திரங்களை வெச்சிக் கதை. அசினும் சூரியாவும் நடிச்சா நல்லாத்தான் இருக்கும்....."

கேக்குறப்பவே ஜோதிகாவின் முகம் மாறுகிறது. அவசர அவசரமாக சூரியாவை இழுத்துக் கொண்டு வெளியேறுகிறார். ஒரு சாயா குடித்து விட்டு அசினும் வெளியேறுகிறார்.

"அண்ணே....ஒரு விசயம்...."

"என்னடா ஆன் ஆர்பாரு...சொல்லு. சென்னைல ஃபுரோசன் இடியாப்பம் கெடைக்க மாட்டேங்குதா?"

"ஹி ஹி ஹி...அதில்லண்ணே...தளபதி வந்திருக்காரு. உள்ள வரச்சொல்லட்டுமா?"

"தளபதியா? எந்த நாட்டுக்குத் தளபதி? இந்தியாவுலயே முப்படைகள் இருக்காமே. அவங்கள்ள ஒருத்தர் வந்திருக்காரா? நம்மளை எதுக்குப் பாக்க வந்திருக்காரு."

மமா குறுக்க நுழைஞ்சி, "அண்ணே..இந்தச் சிவியாருக்கு எதையுமே ஒழுங்காச் சொல்லத் தெரியாதுன்னே. இப்பிடித்தான் ஒளறி வைப்பான். வந்திருக்குறது இ.தளபதிண்ணே....இப்பிடிப் பாடு பாடு பாடு...அவருண்ணே"

"ஓ அந்தத் தளபதியா? நம்ம தெலுங்கு நாட்டுல இருந்து தான வீர சூர கர்ணா, கஜ தொங்கா, டப்பு லேனி கதா மாதிரிப் படங்களை எறக்குமதி பண்றதில்லையே. அதுக்குத்தான் இயக்குனர் நடிகர் வெட்டியார் இருக்காரே. அங்க போகாம இங்க ஏன் வந்தாரு இ.தளபதி? சரி. சரி. போயிட்டு அப்புறமா வரச்சொல்லு. இப்பத்தான் கதைக்குப் பேரே வெச்சிருக்கோம். மெதுவா வந்தா இருக்குறதப் பாத்துச் செய்றோம்னு சொல்லி அனுப்பு."

"அண்ணே....." மறுபடியும் இழுக்கிறார் சிவியார்.

"என்னாச்சுல சிவியாரு? பொகைப்படப் போட்டீல நடுவரா இருக்கச் சொல்லீட்டாங்களா? ஓசை செல்லாவுக்கு ஃபோனப் போடு. அடுத்த படம் எடுத்து முடிக்கிற வரைக்கும் ஒனக்கு லீவு கேப்போம். முடியாதுன்னு சொன்னா...அவரை நம்ம படத்துக்குக் வசனம் எழுதச் சொல்லீரலாம்."

"அதில்லண்ணே ஸ்டார் வந்திருக்காரு...அதான்........."

"அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்! தளபதி ஸ்டார்னு சொன்னா நான் யாரடா நெனைக்கிறது..எல்லாம் ஒருத்தரோட பேர் மாதிரித்தாண்டா தெரியுது. நாம என்ன ஓடி விளையாடு தாத்தான்னா படம் எடுக்கப் போறோம்? நம்ம படத்துல டச்சுல பிரெஞ்சுல இங்கிலீசுல ஜெர்மனியில டப்பு பண்ணி டப்பு பாக்குறோம்னா அதுக்குக் காரணம் என்ன? கள்ளியிலும் பால் படமெடுத்து அதுல ரெண்டரை மணி நேரம் படம்னா...ரெண்டு மணி நேரம் சரவணன் சந்தியாவின் ஆத்மார்த்தமான காதல் சங்கமங்களின் உன்னத அன்பைக் காட்டுறதாலதான். அதையெல்லாம் டூப்பு போட்டு கிராபிக்ஸ் போட்டு எடுக்க முடியாது. புரிஞ்சதா...போய்ச் சொல்லு"

"இல்லண்ணே....." மறுபடியும் சிவியார் இழுக்கும் போது மமா உதவிக்கு வந்து "அண்ணே...அவன் சொல்ல வர்ரது அ.ஸ்டார்னே. சூ.ஸ்டார் இல்ல...."

"ஓஓஓஓஓ! அ.ஸ்டாரா? ம்ம்ம்ம் இப்ப என்ன செய்யலாம்...சரி நீயே போயி மலைக்கள்ளன், ஆயிரத் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, உரிமைக்குரல், காசேதான் கடவுளடா படங்களையெல்லாம் இப்ப ரீமேக் பண்ணலை. நாம லா மிசரபிள், கம் செப்டம்பர்னு யோசிச்சிக்கிட்டிருக்கோம். அதுனால போயிட்டு அப்புறமா வரச்சொல்லு. இல்லைன்னா துளசி டீச்சர் கிட்ட கேட்டா கேரளத்துக் கதை நெறையக் கெடைக்கும். அதுனால துளசிதளத்துல சரண்டர் ஆகச் சொல்லு. அத்தோட இனிமே பாத்தாக் கொண்டா பேஸ்ஸக்கூடாது. பேசனும்னு அண்ணன் கண்டிப்பாச் சொன்னதாச் சொல்லீரு. நெக்ஸ்ட்"

அ.ஸ்டாரை வழியனுப்பப் போன மமா பயந்து கியந்து ஓடி வந்து "அண்ணே அண்ணே காப்பாத்துங்கண்ணே..."

"என்னாச்சு மமா? யாராச்சும் சம்பல் இகான் பிலிஸ் கொண்டு வந்துட்டாங்களா?...ஆனா அதுதான் ஒனக்குப் பிடிக்குமே!!!!"

"அது இல்லண்ணே...நாயகன் நாயகன்...நாயகன்...."

"ஹா ஹா ஹா...பாத்தீங்களாண்ணே...என்னையச் சொல்லீட்டு இவ ஒளர்றா...அவ சொல்றது உ.நாயகன் வர்ராருன்னு..." பழிக்குப் பழி வாங்கிய திருப்தி சிவியாரிடம்.

"ஓ! அவரா? இப்ப என்ன செய்றது? இவருக்காக Ratatoille (ரேட்டடோயி) படத்த தமிழ்ல எடுக்க முடியுமா? அதுல இவருதான் எலியா நடிப்பேன்னு அடம் பிடிப்பாரே. அதுக்கு மேக்கப் போட ஆலிவூட்டுல இருந்து ஆளக்கூட்டிட்டு வரணுமே. அந்தப் படத்துல வர்ர எலி, கதாநாயகன், நாயகி, வில்லன் எல்லாப் பாத்திரத்துலயும் இவரே நடிக்கனும்னு வேற அடம் பிடிப்பாரு. ம்ம்ம்ம்...ஏற்கனவே நவ அவதாரம்னு ஒரு படம் எடுக்குறாரு. அதுவும் Bedazzled அப்படீங்குற படத்தத் தமிழ்ல எடுக்குறாரு. காப்பீ ரைட்டும் டீ லெப்டும் வாங்குனாரான்னு தெரியலை. அதுல மல்லிகா ஷெராவத்தைச் சாத்தானா நடிக்க வைக்கிறாரு. இவர வெச்சிப் படமெடுத்தா...நமக்குச் சரிவராது. ஆனா ஒன்னு...அந்தப் பாவக்காயின் பாவம் கதைல துணியோஃபோபியா பாத்திரத்துல நடிக்க இவரு கண்டிப்பா தயாரா இருப்பாரு. ஆனாலும் நோ ரிஸ்க்கு. பகல்ல நிலா வந்தவன்னு ஒரு படத்த இருவது வருசத்துக்கு அப்புறம் எடுக்கப் போறோம். அப்ப பாக்கலாம்னு சொல்லி அனுப்பு. சிவியாரு...மமா போக வேண்டாம்...நீயே போய்ச் சொல்லி அனுப்பு."

"ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...தாங்க முடியல முருகா. ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதமப்பா!"

சொல்லி முடிக்குறதுக்கு முன்னாடியே குய்ங் குய்ங்குன்னு ஒரே சத்தம். தடால் புடால்னு விழுந்தடிச்சு வந்து சிவியாரு, "அண்ணே அண்ணே......சாருக்க்க்க்கக்க்க்க்க்க்..."

"சாருக்கு என்ன வேணும்? ஏன் இப்பிடி திக்குற?"

"அதில்லண்ணே....சாருக்கானு வந்துருக்காரு. அவருக்கு க வந்தா திக்கனும்ணே....இந்தீல அப்படித்தான் அவரக் கிண்டல் செய்வாங்க"

"யாரு சாருக்கானா? அவரு ஏண்டா இங்க வந்தாரு? நம்மள மணிரத்னம்னு நெனச்சிக்கிட்டாரா? தயிரே பயிரேன்னு இந்தீல படமெடுத்துத் தமிழ்ல டப்பு பண்ண? சரி. வரச்சொல்லு. ஒருவேளை கள்ளியிலும் பாலை இந்தீல கள்ளீ மே தூத் அப்படீன்னு ரீமேக் பண்ண நெனச்சு வந்திருப்பாரு. இவரு கிட்ட படத்தக் குடுத்தா கொதறி வைப்பாரே. அதுலயும் இந்தீல கரண் ஜோகர்னு ஒரு இயக்குனர் கிட்ட குடுத்து.....படம் முழுக்க ஜெயபாதுரிய அழ விடுவாரே. எதுக்கும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கனும்."

வாயெல்லாம் பல்லாக மமா ஷாருக்கானை உள்ளே அழைத்து வருகிறார்.

"ஆயீயே ஆயீயே ஷாருக் ஜி. ஆப்பூ கெய்சா ஹை?" இந்தியில் ஜிரா எடுத்து விட்டதும் கூட்டமே மிரண்டு போகிறது.

ஷாருக்கான் சிரிச்சிக்கிட்டே, "சப் டீக்கு ஹை ஜிராஜி" ன்னு கையைப் பிடித்துக் குலுக்குறாரு.

"ஓ! டீக்கு தான் இதர் ஆகய்? ஹமாரா கர் டீ பகூத் பகூத் அச்சா." ன்னு சாருக்கிடம் உளறிவிட்டு.."மமா, நல்லா ஸ்டிராங்கா ரெண்டு டீ முக்குக்கடைல இருந்து வாங்கீட்டு வா"ன்னு ஆர்டர் குடுத்தாரு ஜிரா.

"போலுங்க ஷாருக் ஜீ. மும்பை சே சென்னை ஆகய். நான் கியா கர்ரு?"

"குச் நை ஜிராஜி. ஹமாரா நெக்ஸ்ட் சினிமா ஆப் டைரக்ட் பண்ங்க. மே புரொடியூசிங்."

"ஆகா இந்தாள் தயாரிப்புல இந்திப் படமா? நமக்கு ஆப்பு வெக்காம விட மாட்டாரு போல இருக்கே. இவரு பேசுறது சரியான வசனமான்னே கண்டுபிடிக்கத் தெரியாதே நமக்கு..." ன்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டு ஷாருக்கானிடம், "ஷாருக் ஜி, ஹமாரா தமிழ்நாட்டுல ராமநாராயணன் டைரக்டர். மங்க்கி, எலிஃபண்ட், ஸ்நேக் சினிமா அச்சா அச்சா டைரக்டிங். லோ பட்ஜெட். ஆனாலும் 500% புராஃபிட். ஆப் ஆக்டிங் மே தேக்கி. ஆப்புக்கு அவரே கரெக்ட் டைரக்டர். ஆப்பு ஷங்கரோட ரோபாட் சினிமால ரோபாட்டா ஆக்டிங். அது பகூத் அச்சா. அப்பூ நை ஆக்டிங். வெரி ரியலிஸ்டிக். நேஷனல் அவார்டு. ஆஸ்கார் அவார்டு."

ஷாருக்கானுக்கு வருத்தமாப் போயிருது. ஜிரா இப்பிடிச் சொல்லீட்டாரேன்னு. மனுசனாக் கஷ்டப்பட்டு நடிக்கிறத விட ரோபாட்டா லேசா நடிக்கிறது நல்லதுன்னு மும்பைல இருந்து வாங்கீட்டு வந்த பக்கார்வாடி பாக்கெட்டை ஜிராவுக்குக் குடுக்காமக் கொண்டு போயிர்ராரு.

ஜிரா ரொம்ப நேரம் யோசிச்சிட்டு ஒரு முடிவுக்கு வர்ராரு. மமாவையும் சிவியாரையும் கூப்டு, "அப்ரசெண்ட்ஸ், நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். ஏன்னா பாவக்காயின் பாவம் படத்துக்கு ஏத்த நல்ல கதாநாயகனே கெடைக்கலை...அதுனால..."

மமா குறுக்க புகுந்து, "அவசரப்படாதீங்க அண்ணே...நம்ம சீவியார் இருக்கானே...அவனையே கதாநாயகனாப் போட்டுறலாம்."

சிவியாருக்கு அடிவயிறு கலங்குது. "அண்ணே..அண்ணே....ஜிரா அண்ணே...நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சுண்ணே"ன்னு பாடுறாரு.

"பாடதல....நேரா விசயத்துக்கு வா..."

"அதில்லண்ணே...பாவக்காயின் பாவத்துல துணியோஃபோபியா வருதுண்ணே...நா தூங்கும் போதே பேண்ட்டு சட்டை போட்டுக்கிட்டு தூங்குறவண்ணே...நா எப்படி?"

ஜிராவுக்குச் சிரிப்பு தாங்கலை. "ஹெ ஹெ ஹெ ஹெ...வருத்தப்படாதல....பாவக்காயின் பாவத்துல உன்னைக் கதாநாயகனாப் போடுற திட்டத்த நான் டிராப் பண்ணீட்டேன்."

மமாவுக்கு எரிச்சல். மனசுக்குள், "ஜஸ்ட் மிஸ்டு..சிவியாரு..ஒன்ன ஒரு வழி செய்யாம விட மாட்டேன். இப்ப தப்பிச்சிக்கோ. அடுத்து மாட்டாம இருக்க மாட்ட"

ஜிரா தொடந்து சொல்றாரு. "படத்துக்குக் கதாநாயகனையும் முடிவு செஞ்சிட்டேன். அடுத்த கதாநாயகன் விவசாயி இளா. ரொம்பவும் இயல்பா நடிக்கிற தெறமை அவரு கிட்ட மட்டுந்தான் இருக்கு. அவரை கதை டிஸ்கஷனுக்குக் கூப்புடுங்க."

அன்புடன்,
ஜிரா (எ) கோ.இராகவன்

Tuesday, February 5, 2008

தாரே கோடம்பாக்கம் பர்

பொங்கலுக்கு ரிலீஸான படங்கள் நடித்தவர்களுக்கு தயாரிப்பாளர்களுக்கு படம் பார்த்தவர்களுக்கு என சகலருக்கும் ஆப்பு மேல் ஆப்பாக பார்சல் கட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இது தெரியாமல் பொங்கல் ரிலீஸ் படங்களை வரிசையாக பார்த்து மப்பேறி மட்டையாகியிருக்கும் சின்னக் கலைவாணர் விவேக் கோலி ஜோடா அடித்து ஹேங் ஓவரைப் போக்க வடபழனி க்ரீன் பார்க்குக்கு வருகிறார். அங்கே ஏற்கனவே கோலிவுட் கும்பல் ஒன்று குத்தாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது

விவேக்: அடேய்! எங்கே போனாலும் ஒரு க்ரூப்பா வந்துடுறீங்களேடா! மனுசனை நிம்மதியா சோடா குடிக்கக் கூட விடமாட்டீங்களா? இப்ப யாருக்கு சமாதி கட்ட கூடியிருக்கீங்க?

பரத்:அட ஏற்கனவே எங்களுக்கு சமாதி கட்டற நிலமைல தான் இருக்கு. பேரரசு இளநீ பழனின்னு ரைமிங்கா டயலாக் சொல்லி டைமிங்கா ஆப்படிச்சுட்டாரு. இதுலருந்து எப்படி வெளிய வர்றது..எப்படி ஹிட் கொடுக்கறதுன்னு பேசிட்டிருக்கோம்

விவேக்: அஜீத், விஜயகாந்துன்னு வரிசையா அந்தாள் ஆப்படிச்சுட்டு வரும்போதே தெளிவாயிருக்கனும்..வெள்ளை பெயிண்ட்ல விபூதியும் கருப்பு பெயிண்ட்ல மீசையும் வரைஞ்சு விட்டதும் ஃபேன்சி டிரஸ் காம்பெடிஷன்ல கலந்துக்க போற காண்வெண்ட் பையன் மாதிரி கெளம்பிட்ட..இப்ப ஃபீல் பண்ணி என்ன ஆவப்போகுது?

பரத்: அதில்ல சார். அடுத்த படத்துல ஒரு நல்ல கதையா புடிக்கனும். எல்லாரும் ரீமேக் பண்றாங்க..இப்ப தாரே ஜமீன் பர் தான் ஹிட்டு...அதை தமிழ்ல பண்ணலாமான்னு பேசிட்டிருக்கோம்

விவேக்: அந்த சின்ன பையனா நீ நடிக்க போறயா? அதெல்லாம் உனக்கு சூட்டாவாது. அப்படியே நாலு குத்து பாட்டு ரெண்டு லெக் ஃபைட்டுன்னு ஒரு ரூட்டைப் புடிச்சு போய் பொழச்சுக்கோ

எஸ்.ஜே.சூர்யா: ஆங்க்...இப்படி சொன்னா எப்படி ஆங்க்...நான் கதையை ரெடி பண்ணிட்டேன்..ஆங்க்

விவேக்: மொதல்ல இஎண்டி ஸ்பெஷலிஸ்ட்ட காமிச்சு உன் தொண்டைய ரெடி பண்ணனும்டா

எஸ்.ஜே.சூர்யா: அந்த சின்ன பையனா நானே நடிக்கறேன். அதாவது வயசு 22. மனசளவுல 12. அவன் க்ளாஸ்மேட் கல்பனா, சயின்ஸ் டீச்சர் சந்தியா, டியூஷன் மிஸ் மீனா, பக்கத்து வீட்டு பத்மா, அவனோட நொண்டி விளையாடற நமீதான்னு பார்க்கற பொண்ணுங்க மேல எல்லாம் பாசத்தைக் காட்டறான். அதைப் புரிஞ்சுக்காம அந்த சின்னப் பையனை

விவேக்: சின்னப் பையனா..கலிகாலம்டா டேய்

எஸ்.ஜே.சூர்யா: அந்த சின்னப் பையனை பாய்ஸ் ஸ்கூல்ல சேர்த்துடறாங்க. அங்க பி.டி. மாஸ்டரா இன்னொரு சூர்யா. இந்த சூர்யாவும் அந்த சூர்யாவும் சேர்ந்து ஒவ்வொரு கேர்ள்ஸ் ஸ்கூலா, ஒவ்வொரு லேடீஸ் காலேஜா போய் சைட் அடிக்கறாங்க. கடைசில சைட் அடிக்கறது ஒரு வியாதி இல்ல..அவங்களோட வாழ்க்கை அப்படின்னு மக்களுக்கு புரியற மாதிரி ஒரு மெசெஜ் சொல்றோம். நடுல அம்மா செண்டிமெண்ட்ல இருந்து ஐயிட்டம் நம்பர் வரைக்கும் எல்லாத்தையும் கொண்டு வர்றோம்...வாலி பாட்டெழுதினா அத்தன பேரும் காலி

விவேக்: டேய் கொஞ்சம் மூச்சு விட்டுக்கோடா! யூனிபார்ம் டவுசர்ல உன்னைப் பார்த்தா தமிழ்நாட்டுல எத்தன பேர் டவுசர் கிழியப் போதோ தெரிலயேடா..எங்களை எல்லாம் மன்னிச்சு விட்டுடக்கூடாதாடா?

அப்போது "ஆமாண்ணே..இல்லண்ணே...வெறும் லைம் ஜூஸ் தாண்ணே..தண்ணி நிறைய கலந்துட்டண்ணே..இல்லண்ணே ஒரு க்ளாஸ் தான்ணே" என்று மொபைலில் பேசியபடி வருகிறார்.

விவேக்: அடப்ப்ப்பாவி...ஒரு லைம் ஜூஸ் குடிக்கறதுக்கு மிக்ஸிங் கலந்து அதுக்கு போன்ல கன்னாபின்னான்னு பெர்மிஷன் வாங்கி..என்னடா நடக்குது இங்க..

ஜெயம் ரவி: இல்லைங்க..எனக்கு லைம் ஜூஸ் புடிக்கும்ங்க..எங்கண்ணனுக்கு புடிக்காதுங்க.அதுனால கொஞ்சமா குடிக்கறேங்க

என்று மூக்கால் பேசி ஃபீலாகிறார்.

விவேக்: தனியா வந்திருக்கியே செல்லம் வீட்டுல தேட மாட்டாங்களா ராசா??

ஜெயம் ரவி: இல்லைங்க..சொல்லிட்டு தாங்க வந்தேன்..எனக்கு ரீமேக் தாங்க ஹிட்டாகும். அதான் தாரே ஜமீன் பர் டிஸ்கஷன் ஓடுதுன்னு சொன்னாங்க வந்தேங்க

விவேக்: இங்க பாருடா! ரீமேக் தான் ஹிட்டாகுதாம்..தம்பி உங்க படம் கடைசியா எப்ப ஹிட் ஆச்சு ஞாபகம் இருக்கா?

ஜெயம் ரவி: சந்தோஷ் சுப்ரமணியம் சூப்பரா வந்திருக்கு. ஜெனிலியா அவ்ளோ அழகா இருக்காங்க. நல்லா நடிச்சிருக்காங்க. அண்ணன் சூப்பரா டைரக்ட் பண்ணியிருக்காரு. எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க

விவேக்: ஹிட் படம் எங்கடான்னு கேட்டா வரப்போற படத்தைப் பத்தி பேசறான்.. அதுசரி..உனக்கு தெலுகு படம் தானே ஒத்துவரும்..இந்தி பக்கம் வந்துட்ட?

ஜெயம் ரவி: ஓ இது இந்தி படமா? எனக்கு தெரியாதே..எங்கண்ணன் அனுப்பினாரு..அதான் வந்தேன்

விவேக்: என்னமோ போ..அங்க யாருடா தலைல சேமியாவை சொருவிட்டு வர்றது

சிம்பு: எனக்குப் புடிக்கல..தாரே ஜமீன் பர் எனக்கு புடிக்கல

விவேக்: தெரியுமே..நாலு ஹீரோயினைப் போட்டு படமெடுத்தா ஒனக்கு புடிக்கும். இது எப்படி புடிக்கும்

சிம்பு: இல்ல சார்.எல்லாருக்கும் பொறாமை. சின்ன வயசுலயே இவ்ளோ பண்றானேன்னு. இன்னும் கலக்குவான் இந்த சிம்பு. தாரே ஜமீன் பர்ரை தமிழ்ல எடுக்கறேன் சார்

விவேக்: நீ மட்டும் என்ன பெருசா எடுக்கப் போற. எஸ்.ஜே.சூர்யா சொன்ன கதைல கொஞ்சம் எதுனா மாத்துவ. அவ்வளவு தானே?

சிம்பு: இதுல அப்படியே உயிரை உருவி கைல வைக்கற மாதிரியான கதையை சொல்றோம்

விவேக்: கோடம்பாக்கத்துக்கு பஸ் புடிச்சு வரும்போதே எல்லா டைரக்டரும் மனப்பாடம் பண்ற மொத டயலாக்கே இதுதானேடா..உயிரை உருவறீங்களோ இல்லையோ..ப்ரொடியூசர் வேட்டியை நல்லா உருவறீங்கடா

சிம்பு: இந்தில சின்ன பையனுக்கு தானே வியாதி..ஆனா இதுல ஹீரோயினுக்கு டிஸ்செக்ஸியா

விவேக்: டேய் அது டிஸ்லெக்சியாடா

சிம்பு: ஏதோ ஒன்னு..இதுல ஹீரோயினுக்கு அந்த வியாதி இருக்கு. அவளை அது தெரியாம மெண்டல் ஹாஸ்பிடலுக்கு அனுப்பிடறாங்க. அங்க நானும் இருக்கேன்

விவேக்: கரெக்டான இடத்துல தான் இருக்க..கண்டினியூ பண்ணு

சிம்பு: அங்க அவளைப் பார்த்ததுமே எனக்குள்ள ஒரு புயல். காதல் அப்படியே பொங்கிட்டு வருது

விவேக்: டாஸ்மாக்ல வாங்கற பீர் பாட்டிலே இப்பல்லாம் பொங்க மாட்டேங்குது..அதெப்படிடா உங்களுக்கு இந்த காதல் மட்டும் அப்படி பொங்குது??

சிம்பு:அவளை பார்த்து லவ்ஸ் ஆகும்போதுதான் அந்த ஹாஸ்பிடலுக்கு டாக்டரா இன்னொரு ஹீரோயின் என்னை விட வயசுல பெரியவங்க ஒருத்தர் வர்றாங்க

விவேக்: டேய் இந்த படத்துலயுமா...முடியலடா..அவ்வ்வ்

சிம்பு: இந்த முக்கோண காதல் கதைல நடுல இன்னும் ரெண்டு ஹீரோயினைப் போட்டு, சந்தானம், சத்யனை எல்லாம் கூப்பிட்டு ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டியது தான். வருவான் சார். சிம்பு வருவான்

விவேக்: உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா..அங்க யாருடா தீவிரமா யோசிக்கறது??

பேரரசு: உட்டாலக்கடி உலக்கை
வூட்டாண்ட கீறான் அல்லக்கை
தண்டவாளத்துல ரயிலு
அடிக்கிது பாரு பிகிலு

என ஃபீலிங்காக எழுதிக்கொண்டிருக்கிறார்

விவேக்: சார்..என்ன சார் எழுதிறீங்க

பேரரசு: அடுத்த படத்துக்கு டூயட் எழுதறேன் சார்..சூப்பரா வந்துட்டுருக்கு..வார்த்தை அப்படியே விழுது

விவேக்: இது டூயட்டா...என்னவோ மணிரத்னம் 'கதை மடில வந்து விழுது'ன்னு பில்டப் கொடுக்கற ரேஞ்சுக்கு நீயும் கொடுகறீயே உனக்கே ஓவரா தெரியல

பேரரசு: திருத்தணி வந்தா திருப்பம் சார்..சொல்லி அடிக்கிறோம். 'தாயே செம்மீன் பல்' படத்தை ரீமேக் பண்றோம்.

விவேக்: மொதல்ல வாயைத் தொறந்து பேசுங்க சார். தாரே ஜமீன் பர் சொல்லுங்க பாக்கலாம்

பேரரசு: விஜய் டேட் கொடுத்துட்டாரு..இனி பேச்சு இல்ல..வெறும் வீச்சு தான்

விவேக்: என்ன வீசப்போறீங்க? உங்களை வெளிய பாத்தா ஆசிட் முட்டை வீச தான் ரெடியா இருக்காங்க

பேரரசு: அத விடுங்க..கதைய சொல்றேன்..படத்துல ஹீரோ டாஸ்மாக்ல வேலை பாக்கறாரு. ஹீரோயின் திரிசா பால்வாடி ஸ்கூல்ல டீச்சரா வேலை பாக்கறாங்க. ஒரு சின்ன பையன் டெய்லி டாஸ்மாக்ல கட்டிங் வாங்கி அடிக்கிறான். இந்த சின்ன வயசுலயே இப்படி சரக்கடிக்கறானேன்னு நம்ம ஹீரோ அவனை பெருமையா பாக்கறாரு. அவன் யாருன்னு அவன் பின்னாடியே போய் பாக்கறாரு. பார்த்தா அது அவனோட அக்கா மகன். அக்கான்னா ஹீரோவோட பெரியப்பாவோட சித்தப்பாவோட மாமா பையனுக்கு ஒன்னுவிட்ட சித்தப்பாவோட பேத்திக்கு மக. அவ்வளவு நெருங்கிய சொந்தம். தன் மகன் தண்ணியடிக்கறது புடிக்காம அவ அழறதை ஹீரோ பாக்கறாரு. அந்த பையனை திருத்தனும்னு அவனுக்கு டாஸ்மாக்ல சரக்கு கொடுக்காம திருத்தராரு. ஆனா அக்கா புருஷன் அதுக்கு மேல குடிக்கறான். அவனையும் அடிச்சு திருத்தறாரு. கடைசில ஏரியா கவுன்சிலரையும் திருத்தராரு. எல்லாரையும் திருத்திட்டு டாஸ்மாக்ல சேல்ஸ் இல்லைன்னு வேலையை விட்டு தூக்கிடறாங்க. அப்ப லாங் ஷாட்ல குடும்பத்தோட சாராயம் காய்ச்ச போறாரு

விவேக்: உன் கதை ஏன்டா இப்படி காறித்துப்பற மாதிரி இருக்கு

பேரரசு: அப்படிலாம் சொல்லாதீங்க சார். இந்த படமும் கமர்சியல் ஹிட்டாகும் சார். அதுக்கேத்த மாதிரி ஸ்கிரீன் ப்ளே வச்சிருக்கேன் சார்

விவேக்: தமிழ்நாட்டு மக்களை இந்த விஷயத்துல்ல தான் டா என்னால புரிஞ்சுக்கவே முடியல..உன் படமெல்லாம் எப்படிடா ஹிட் ஆகுது??

எனும்போதே "எல்லா ஹீரோவுக்கும் அல்லு கிழலனும்..நாம தான் ரீமேக் பண்றோம்" என்று சே குவேரா கெட்டப்பில் திருமாவும் "இன்னும் நான் யூத்யா..தலைமுடி பாத்தியா ஒரிஜினல் ஹேரு..தாரே ஜமீன் பர்ரு நான் நடிக்கிறேன் பாரு" என்று டீ.ஆரும் "முகத்தை மூடி அழறதுல நான் இன்னொரு எம்.ஜி.ஆர். எனக்கு இந்த ரோல் அப்படியே பொருந்துதுன்னு அசிஸ்டெண்ட்ஸ் சொல்லிட்டாங்க" என்று சேரனும் கொலைவெறியுடன் ஓடி வர அங்கிருந்து அப்பீட் ஆகிறார் விவேக்.