Friday, December 24, 2010

ரங்கமணி குரங்கு பிடித்த கதை

ஒரே நேரத்தில் கணவர், அவருடைய குடும்பத்தை வம்புக்கு இழுப்பதில் இந்த மனைவிகளுக்கு என்ன ஒரு ஆனந்தம்.

*************************************

நான்தான் எங்கள் அபார்ட்மென்ட் செக்ரட்டரி. பாழாய்ப் போன குரங்குக் குடும்பம் ஒன்று இரண்டாவது ப்ளாக்கில் பிளாட் நெ 306 இன் பால்கனியில் சில நாட்களாக அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. ஹௌஸ் ஓனர் அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்.

அசோசியேஷன் மீட்டிங்கில் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டார் அந்த பிளாட்டின் ஓனர். ஒரு செக்ரட்டரி என்ற முறையில் நான் இதைத் தடுத்திருக்க வேண்டும் என்பது அவர் வாதம். ஒரு கட்டத்திற்கு மேல் நான் அந்தக் குரங்கு குடும்பத்திற்கு அந்த பிளாட்டில் வந்து குடியேற NOC கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். வந்த கோபத்தில் அவர் பாதி மீட்டிங்கில் சென்றுவிட்டார். எல்லோரும் முடிவு செய்து குரங்கைத் துரத்தும் பொறுப்பை என் தலையில் கட்டினார்கள். நான் கூகிலாண்டவரைச் சரணடைந்தேன்.

நிலைமை புரியாமல் வீட்டில் வேறு என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். குரங்கு என்னிடம் முரண்டு பண்ணாது என்று உத்திரவாதம் கொடுத்தார்கள் (உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் மேலே வலது மூலையில் இருக்கும் என் புகைப்படத்தைப் பார்க்கவும்). விஷயம் அவர்கள் அம்மா வீட்டுக்கும் போனது. பிள்ளையாரைப் பிடிக்கப் போய்க் குரங்காய் மாறிய கதைதான் அவர்களுக்குத் தெரியுமாம். மேலும் மாப்பிள்ளை குரங்கை எப்படிப் பிடிக்கிறார் என்று பார்க்கக் கிராமமே ஆவலாக உள்ளதாம். குறைந்த பட்சம் மாமனார், மாமியார், அவளின் தாத்தா, தாத்தாவின் மூத்த சகோதரர்கள் இருவர் ஆகியோர் (கிட்டத் தட்ட ஒரு மினி zoo ) பெங்களூர் வர டிக்கெட் ஏற்பாடு செய்யும்படி உத்தரவு வந்தது.

இதனிடையே குரங்கு எங்கள் பிளாட்டின் பால்கனிக்கு வந்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை என்னவென்றால், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மா சொன்னதுதான். "உங்க வீடல் இப்ப எக்ஸ்ட்ரா மெம்பெர் வந்துர்க்காங்க. சம்பளம் ஜாஸ்தியா வேணும்".

ஒரு வேளை அந்தக் குரங்குக் குடும்பத்திற்கு ஒரு மினி zoo வே தன்னைப் பார்க்க தெரிந்து விட்டதோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டது. இதை வீட்டில் சொல்லப் போக, ஒரு வேளை நான் கஷ்டப்படுவது பொறுக்காமல் அவை சென்று விட்டன என்று சொன்னார்கள். அதோடு நிறுத்தாமல், அந்தக் குரங்கு ஒரு சகோதர பாவத்தில் என்மேல் பரிதாபப்பட்டு சென்றிருக்கலாம் என்றும் நினைப்பதாகக் கூறினார்கள். ஒரே நேரத்தில் கணவர், அவருடைய குடும்பத்தை வம்புக்கு இழுப்பதில் இந்த மனைவிகளுக்கு என்ன ஒரு ஆனந்தம்.

சில நாட்களுக்கு முன் பிளாட் நெ 306 இன் ஹவுஸ் ஓனரை வாக்கிங் போகும்போது பார்த்தேன். அவரைப் பார்த்து மையமாகப் புன்னகைத்து வைத்தேன். அவரே அருகில் வந்து குரங்கு போன செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். நான் என்ன செய்து விரட்டினேன் என்று கேட்டு வைத்தார். எனக்கு நாக்கில் சனி, செவ்வாய் மற்ற எல்லாக் கெட்ட கிரகங்களும் ஒரே நேரத்தில் குடியேறினர்.

"அது ஒன்னும் இல்லை சார். நான் போய் அந்தக் குரங்கு குடும்பத் தலைவனிடம் உங்களைப் பற்றி சில உண்மைகளைச் சொன்னேன். குரங்கே, உனக்கு இந்த ஓனரைப் பற்றித் தெரியாது. நீ பால்கனில இருக்க. இவர் பால்கனி லைட்டுக்கு மட்டுமில்லாம சூரியன், சந்திரன் வெளிச்சத்திற்கும் கரென்ட் காசு கேட்பார். தானாக அடிக்கும் காற்றுக்கு பேன் சார்ஜ் கேட்பார். இதற்கு மேல் குரங்குக் குட்டிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பார். உன்னுடைய சொந்தகாரர்கள் யாரும் வரக் கூடாது என்பார். வருட வருடம் 10 % வாடகை ஏற்றுவார். எல்லாவற்றுக்கும் மேலாக ரெண்ட் ரெசிப்ட் தரமாட்டார், இந்த மாதிரி எல்லாம் சொன்னவுடனே குரங்கு தன் குடும்பத்தோட ஓடிப் போய்விட்டது சார்" என்றேன். அதற்குப் பிறகு நான் அவரை எங்கும் காணவில்லை.

நான் இனி அசோசியேஷனில் தொடரக் கூடாது என்று அனைவரிடமும் அவர் பேசி வருவதாக் கேள்வி.






Wednesday, December 22, 2010

சண்டேன்னா ரெண்டு

கொஞ்சம் வன்முறை, கொஞ்சம் ரொமான்ஸ், நிறைய காமெடி உள்ள பதிவு இது.

********************************************

அவன்: நாம ரெண்டு பேரும் வேற வேற சாதி

அவள்: ஆமா. நீ ஆண் சாதி நான் பெண் சாதி

அவன்: நாங்க நான் veg சாப்பிடுவோம்

அவள்: நானும்தான், அதான் ஒந்தலையைத் தின்கிறேனே, புரியல, I am eating your brain

அவன்: ஒங்க வீட்ல ஒத்துப்பாங்களா?

அவள்: ஒனக்கு விருப்பமா இல்லயா, அதச் சொல்லு

அவன்: எங்கம்மா என்ன சொல்வாங்களோ?

அவள்: அத்தகிட்ட நான் பேசறேன்

அவன்: நீ ரொம்ப fastஆ போற

அவள்: ஆமாம். ஒனக்கும் சேர்த்து ஈடு கட்டணும்ல

அவன்: நாளைக்குக் குழந்த பிறக்கும், அதுக்கு எப்படி கல்யாணம் காட்சி எல்லாம்

அவள்: ஆமாம். ஒன்ன மாதிரி இருந்தா சிரமம்தான். குழந்தய என்ன மாதிரி வளத்துக்கறேன்

அவன்: அப்ப நீ ஒரு முடிவோடதான் இருக்க

அவள்: நாளைக்கி நீ ஒங்கம்மாவோட எங்க வீட்டுக்கு வரியா இல்ல நான் எங்கப்பாவோட ஒன் வீட்டுக்கு வரட்டுமா?

"இங்க வாயேன், இதப்படி" என்றான் அந்த மாத சஞ்சிகையின் ஒரு பக்கத்தைக் காட்டி.

ஒரு கையில் பூரிக்கட்டையும் இன்னொரு கையில் தேங்காயுமாகக் கிச்சனில் இருந்து எட்டிப் பார்த்தாள்.

" அது ரெண்டையும் வச்சிட்டுத்தான் வாயேன்" என்றான் ஒரு எச்சரிக்கை உணர்வோடு.

படித்துப் பார்த்துவிட்டு nice என்றாள்.

" இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் தொடை நடுங்கிகள்" என்றாள்.

"அதெல்லாம் கெடையாது. அந்தப் பொண்ணுதான் அந்தப் பையன் மேல மேல வந்து விழுந்தாங்கற மாதிரிதான் எனக்குப் படுது" என்றான்.

விறுவிறு என்று கிச்சனுக்குச் சென்றவள் பூரிக்கட்டையுடன் திரும்பிப் பார்த்து, "எலி, தான் சிக்கிக்கப் போறது தெரியாம பொறியச் சுத்தி சுத்தி வரும்" என்றாள்.

"இதுக்கு நீ அந்த பூரிக்கட்டயாலயே என்னய அடிச்சிருக்கலாம்" என்றான்.

அப்போது பார்த்து காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தால் எதிர்வீட்டு கிரி.

"சார், ஒங்க வீட்டு எலிப்பொறி கொஞ்சம் தாங்க, எங்க வீட்ல ஒரே எலித்தொல்ல" என்றார்.

"அவரையெல்லாம் தர முடியாது" என்றாள் அவசர அவசரமாக. உடன் நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

கிரி ஏதோ பேச வாயெடுக்குமுன் அவன் இடைமறித்து, "அது மேல பரண்ல இருக்கு சார். இப்ப கைல இல்லங்கறத அப்டி சொல்றாங்க, நான் என் பையன்ட்ட குடுத்து அனுப்பறேன் சார்" என்றான்.

அவர் சென்ற பிறகு அவனுக்கு நறுக்கென்று ஒரு குட்டு விழுந்தது. என்ன ஏதென்று சுதாரிப்பதற்குள் இன்னொன்று.

"சண்டேன்னா ரெண்டு" என்றாள்.

மறுபடியும் காலிங் பெல். கதவு திறந்தால் பையன்.

"அப்பா கிரி அங்கிள் எலிப்பொறி கேக்குறார். அந்த அங்கிளுக்கு எப்படிப்பா தெரியும் நம்ம வீட்டுல எலிப்பொறி இருக்குன்னு" என்றான்.

அவன் சண்டே டைம் பத்திரிக்கையில் முகத்தை மறைத்துக் கொண்டான். அவள் முகத்தை வேறுபக்கம் திருப்பிக்கொண்டு பூரி உருட்ட ஆரம்பித்தாள்.

"இன்னிக்கு என்னம்மா டிபன்" என்றான்.

"பொங்கலும் பூரியும்" என்றாள்.

"ஓ, சண்டேன்னா ரெண்டா" என்றான்.

கணவனும் மனைவியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தனர்.. பையன் திருதிருவென விழிக்க ஆரம்பித்தான்.

Tuesday, December 14, 2010

விடாது துரத்தும் எக்ஸாம் பூதம்

நான் ஒரு டம்மி பீசுங்கறது இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். கொஞ்ச நஞ்ச டவுட் இருந்தா இதைப் படிச்சுப் பாருங்க.

*******************************

"சார் நான் கோபி பேசறேன்"

"சொல்லு கோபி சௌரியமா?"

"நல்லா இருக்கேன் சார், நீங்க சௌரியம்தானே, கிருஷ்ணன் சொன்னான் சார்"

"ஆமாம்பா அவசியம் வந்துடு"

"நிச்சயமா சார்"

"MJN சொன்னாரு ஒன்ன chief கெஸ்டா போடா வேணாம்னு சொல்லிட்டியாமே, ஏம்பா"

"கிண்டல் பண்ணாதிங்க சார் "

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிறது பள்ளிப்படிப்பு முடித்து. நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ முறை கும்பகோணம் சென்றிருக்கிறேன். ஆனால் பள்ளிக்கூடம் போக ஒரு முறையும் தோன்றவில்லை. சொல்லப் போனால் காசி தியேட்டர் போகப் பள்ளியைக் க்ராஸ் செய்துதான் போக வேண்டும். அப்போதும் பள்ளி செல்லத் தோணியதில்லை. ஒரு வேலை மழை வந்திருந்தால் ஒதுங்கி இருப்பேனோ என்னவோ.

"டேய் பஸ் ஏறிட்டேண்டா"

"சரி, பத்து மணிக்கு வந்துரு"

"ஏன், விழா சாயந்தரம் தானே"

"கொடி கட்றது, நாற்காலி போடறது இதுக்கெல்லாம் ஆள் வேணாமா, நீதான் செய்யணும் அதெல்லாம்"

"என்னடா சொல்ற"

"காலம்பர வேற ஒரு விழா, 9 மணிக்கு வெங்கட்ரமணா வந்துரு, டிபன் சாப்டுட்டு ஸ்கூலுக்குப் போயிடலாம்"

" சரி காசி தியேட்டர்ல என்ன படம் ஓடுது"

" MR சார்கிட்ட பேசுறியா பக்கத்துலதான் இருக்கார்"

" போன வைடா சாமி"

ஆண்டு முழுவதும் நடந்த பல்வேறு போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கும் விழா காலை பத்து மணிக்கு ஆரம்பமானது. "ஏன்டா, நான் படிக்கிற காலத்துல எனக்கு ஒரு பரிசும் கொடுக்கல" என்றேன். " அதுக்கெல்லாம் ஸ்கூலுக்கு ஒழுங்கா வரணும். போட்டில கலந்துக்கனும். ஜெயிக்கணும். தட்சிநாமுர்த்தி ஞாபகம் இருக்கா ?" என்றான் கிருஷ்ணன்.

என் நினைவு பின்னோக்கிச் சென்றது. எந்தப் போட்டி என்றாலும் அவன்தான் முதல் பரிசு வாங்குவான் - கோலம் மற்றும் தையல் போட்டிகளைத் தவிர. எனக்குப் பொதுவாக எந்தப் போட்டியிலும் விருப்பம் இருந்ததில்லை (சீ சீ இந்தப் பழம் புளிக்கும்) . இருந்தாலும் சில போட்டிகளில் கலந்துகொண்டேன். இப்போது எல்லாரும் சொல்கிறார்களே பல்பு வாங்குதல் என்று. நான் கலந்து கொண்ட எல்லாப் போட்டிகளிலும் சீரியல் பல்பு செட் வாங்கினேன். தட்சிநாமுர்த்திக்கு உடனே போன் செய்து பேசினேன். "இப்பவும் பொறாமையா இருக்கா அவன நெனச்சா?" என்றான் கிருஷ்ணன். " லைட்டா" என்றேன்.

முதல் முறையாகத் தலைமை ஆசிரியர் அறைக்கு எந்த விதமான பிரச்னை பயமுமில்லாமல் நுழைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் பள்ளி மைதானக் கண்காணிப்பாளர் என்னையே உற்றுப் பார்த்து கிரௌண்ட் கேட்டின் பூட்டை ஒருமுறை உடைத்தது நான்தானே என்று கேட்டு உறுதி செய்து கொண்டார் (அவனா நீயி? ).

மாலை மூன்று மணிக்கு விழா ஆரம்பமானது. ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும் முதலிடம் பிடித்த மாணவர்கள் ஆகியோருக்குப் பரிசுகளை வழங்க ஆரம்பித்தனர். (பய புள்ளைக கர்சிப் பாக்டரியே வச்சிருப்பாக போலிருக்கே, பக்கு பக்குன்னு எடத்தப் புடிக்குதுக). விழா முடிந்ததும் தலைமை விருந்தினர்களை மாணவர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கிகொண்டனர். நானும் என் பேனாவை எதற்கும் இருக்கட்டும் என்று திறந்து வைத்துக்கொண்டேன் (நானும் ரௌடிதான்). என் நிலைமை கடைசியில் ஆளில்லாத டீக்கடை போலாகிவிட்டது.

இன்னும் கொஞ்சம் (?!) மெனக்கெட்டு நன்றாகப் படித்திருக்கலாமோ என்று திடீரென்று தோன்றியது. "போன வாரம் கோகிலா வந்துருந்தப்ப ஒன்ன விசாரிச்சாப்பா " என்றார் MR சார் . எப்போதோ தொலைத்த பொருள் இப்போது கிடைத்த திருப்தி எனக்கு. மன நிறைவுடன் பஸ் ஏறினேன்.

"எங்கப்பா போயிருந்த நேத்தி" என்றான் பொடியன்

" எங்க ஸ்கூலுக்கு" என்றேன் பெருமிதத்துடன்

" நீ இன்னும் ஸ்கூலே படிச்சு முடிக்கலையா" என்றான் இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று என் மனதுக்குப் பட்டது.

"நீ என்னோட படிப்பப் பத்திப் பொடியன்கிட்ட எதாவது சொன்னாயா" என்றேன்

"இல்லைங்க ஒங்க அம்மாதான், அப்பா மாதிரி இருக்காதேன்னு நேத்தி சொல்லிக்கிட்டு இருந்தாங்க" என்றார் தங்க்ஸ்.

" ஆமாண்டா நாந்தான் சொன்னேன், என்ன இப்போ" என்றார் அம்மா.

" நான் 2000 த்துல அந்த எக்ஸாம்....." என்று முடிப்பதற்குள்

" கிருஷ்ணா அங்கிள் சொன்னாரு, ஏதோ Y2K, கம்ப்யூட்டர் ப்ராப்லம் அதனாலதான் நீ பாஸ் ஆனியாமே" என்றான் பொடியன்.

அம்மாவும் தங்கமணியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். நான் முறைக்க ஆரம்பித்தேன். ஒத்துக்கறேன் ஒத்துக்கறேன். நான் பல்பு வாங்கினத ஒத்துக்கறேன். ஆபீஸ் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டு நெக்ஸ்ட் மீட் பண்றேன் என்றேன் மனதுக்குள்.

"ஏங்க அந்த ப்ரோமோஷன் எக்ஸாம் என்னாச்சு, அஞ்சு வருஷமா எழுதுறிங்களே" என்றார் தங்கமணி

மானங்கெட்ட மனசாட்சி வெளில எல்லாம் கேக்குது

Monday, December 13, 2010

தங்க்ஸ் பாடும் பாடு

ரங்ஸின் பாச்சா தங்ஸிடம் பலிப்பதில்லை. மாமியார்தான் சரி.

**************************************

மாமியார்: தொவச்ச துணிய ஏன் ஒனத்தாம வெச்சிருக்க?

மருமகள்: மழை பெய்யிது அத்தை

மாமியார்: (ஒரு வினாடியில் சுதாரித்துக் கொண்டு), அதனால என்ன குடையைப் பிடித்துக் கொண்டு ஒனத்துறது?

மருமகள்: ?!

****************************************

மாமியார்: ஒங்க மனுஷா யாருமே லெட்டர்ல பின் கோடு எழுத மாட்டாளா?

மருமகள்: இனிமே எழுதச் சொல்றேன் அத்த. ஆனா டெலிவரி ஆன லெட்டர்ல எல்லாம் ஏன் பின் கோடு எழுதுறீங்க?

மாமியார்: (வழக்கம் போல ஒரு வினாடியில் சுதாரித்துகொண்டு), நீங்களும் செய்ய மாட்டேள், செய்றவாளையும் செய்ய விட மாட்டேள். ஒங்காத்து வழக்கமே இதானே

மருமகள்: ?!

*************************************************************

மகன்: நம்ம அபார்ட்மென்ட் புது செக்ரட்டரி நான்தான்

மருமகள்: ஏங்க இந்தத் தேவையில்லாத வேல?

மாமியார்: (முழு உரையாடலையும் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல்) போன வாரம் உன் தம்பி அந்த மியூசிக் சபால செக்ரட்டரி ஆனப்போ அவ்ளோ சந்தோசப்பட்ட. ஆம்படையான் எதுக்கோ செக்ரட்டரி ஆயிருக்கான். சந்தோஷப் படாம ஏன் இப்படி அலுத்துக்கற?

மருமகள்: ?!

***************************

மருமகள்: ஏங்க ஏதோ முக்கியமான e-மெயில் வரணும்னு சொன்னீங்களே, வந்துதா?

மாமியார்: அவன் g-மெயிலுக்கு மாறி ரொம்ப வருஷம் ஆச்சுது. நீ இப்ப வந்து e-மெயில், f - மெயிலுங்குறியே

மருமகள்: ?!

*************************************************************

மருமகள்: என் தம்பிக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்காம்

மாமியார்: இரு கோடுகள் படத்துல நாகேஷ் சொல்ற மாதிரியில்ல இருக்கு. வேல செய்ரவாளுக்கு வேலையும், வேலை செய்யதவாளுக்கு ப்ரோமொஷனும் கொடுப்பா போலருக்கே

மருமகள்: ??
***********************************************************

மருமகள்: அத்தை, என் தம்பி IAS எக்சாம்ல தமிழ் நாடு அளவுல பத்தாவது ரேங்க் எடுத்துப் பாஸ் பண்ணிருக்கான்

மாமியார்: ஓ, அவன விட ஒன்பது பேர் நல்லா படிச்சிருக்காங்கன்னு சொல்லு



மருமகள்:?!

*********************************************

மருமகள்: ஏம்பா டிரைவர், மெதுவாப் போப்பா. ரயிலுக்கு இன்னும் நெறைய நேரம் இருக்கு

மாமியார்: அவர் போற ரயிலுக்கு நேரம் ஆய்டுச்சோ என்னவோ? நீ போறபடி போப்பா.

மருமகள்:?!

*********************************************

மருமகள்: என் தங்கை எழுதிய கதை நாம வாங்கற வாராந்தரி பத்திரிக்கையிலே வந்திருக்கு அத்தை

மாமியார்: என் பொண்ணு ப்ளாக் எழுதுறா. ஒன தங்க கதைய அந்த புக் வாங்கினவங்க மட்டும்தான் படிக்க முடியும். என் பொண்ணு எழுதறத உலகமே படிக்கலாம். இன்னொன்னு தெரிஞ்சுக்கோ. பேப்பர்ல இருக்க எழுத்தோட ஆயுள் கொஞ்ச நாள்தான். பதிவுல எழுதுறது சந்திர சூரியன் உள்ளவரை இருக்கும்.

Wednesday, December 8, 2010

லேடீஸ் ஸ்பெஷல்

என்ன இப்படிக் கிறுக்கி வெச்சிருக்கீங்கன்னு யாரும் கேட்டுட முடியாது இவங்களை. அதுக்குத்தான் ப்ளாக் பேருலயே கிறுக்கல்கள் அப்படிங்குற வார்த்தையை வெச்சிருக்காங்க. வழக்கமா நாம போடற பதிவுக்கு டிஸ்கி எழுதுவோம். இவங்க கொஞ்சம் மேல போய் வலைப்பூவுக்கே டிஸ்கி கொடுத்திருக்காங்க.

சரி என்னதான் எழுதுறாங்கன்னு, மன்னிக்கவும், கிறுக்குறாங்கன்னு போய்ப் பாத்தா தொலைஞ்சீங்க. வாரா வாரம் ஒரு ஹோட்டலுக்குப் போயிட்டு அங்க உள்ள எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டு ஒரு பதிவு அதைப் பத்தி. பர்ஸ் எடுத்துட்டுப் போறாங்களோ இல்லையோ கேமராவும் கையுமாப் போய்டுவாங்க போல. வித விதமா போட்டோ. படிக்கிறவங்களை வெறுப்பேத்துறதுக்கே போட்ட மாதிரி இருக்கும்.

இந்தப் பதிவுகளுக்கு விஜி மேடம் ஒரு டெம்ப்லேட் பின்னூட்டம் போடுவாங்க. ‘பாத்துட்டேன் அப்புறம்’ அப்படின்னு. அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். என்னிய வுட்டுட்டு நீங்க மட்டும் போய் நல்லா சாப்புடுறீங்க அப்படிங்கறதுதான்.

சரி, இது தவிர வேற என்ன எழுதி இருக்காங்கன்னு பாத்தோம்னா விதூஷ் எழுதின கவிதைக்கு ஒரு கோனார் நோட்ஸ். கோபுலுன்னு விகடன்ல ஒரு கார்டூனிஸ்ட் இருந்தார். அதுல ஒரு கார்ட்டூன் ஞாபகம் வருது. ஒரு சிறுவன் அப்பா இருக்கும் அறைக்குப் போவான். அவர் அப்போதுதான் முகம் முழுதும் ஷேவிங் கிரீம் தடவி வைத்திருப்பார். சிறுவன் பயந்து போய் வேறொரு அறைக்குப் போவான். அங்கே அம்மா நிறைய பேசியல் கிரீம் கொண்டு முகம் பூரா அப்பி வைத்துக் கொண்டிருப்பார். சிறுவன் அதைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு ஓடுவான். எனக்கு அது மாதிரிதான் ஆச்சு. விதூஷ் கவிதையை முதலில் படித்தேன். அதன் பின் வித்யாவின் கோனார் நோட்ஸ். நான் பதிவு எழுத ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே எனக்கு நடந்த இரட்டை விபத்து இது. இது போக இவர் நிறைய முழி பேர்ப்புக் கவிதைகள் எழுதியுள்ளார். உங்களால் ஒரு கவிதைக்கு மேல் படிக்க முடியாது. ஒரு கவிதை படித்து முடிக்கும்போதே முழி பேந்து விடுமே!

அது என்ன மாயமோ, பக்கோடா கட்டித் தரும் பேப்பரில் உள்ள விஷயம் எப்போதுமே சுவாரஸ்யமாகவே இருக்கும். அந்தப் பொது விதியை நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி பக்கோடா பேப்பர்கள் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். முழி பேர்ந்ததுதான் மிச்சம்.

அடுத்தது தி கிரேட் விஜி. இவங்களைப் பத்தி நான் ஒண்ணும் பெரிசா சொல்ல வேணாம். ஏற்கனவே இவங்க பேர்ல இருந்த வலைப்பூ ஒண்ணு காணாம போச்சு. கூகிளுக்கே பொறுக்கலை. அதான் காணாம போச்சு. இப்போ புதுசா ஒண்ணு. தி கிரேட் விஜி அப்படின்னு வலைப்பூ பேரு. எப்படியும் பெரிசா பதிவு ஒன்னும் போடப் போறதில்லை. அதனால பேர்லயாவது கிரேட் இருக்கட்டும்னு வெச்சிக்கிட்டாங்க போல.

எனக்கு ஒரு சந்தேகம் வரும். இவங்களை நம்பி எப்படி சங்கத்தோட பொறுப்பை ஒப்படைச்சாங்கன்னு. அப்புறம்தான் தெரியுது, யார் ரொம்ப வெட்டியோ அவங்க பொறுப்பில்தான் சங்கம் இருக்கிறது என்று. நான் கூட ரொம்பப் பெருமைப் பட்டேன். நம்மையும் எழுதக் கூப்பிடுகிறார்களே என்று. அப்புறம்தான் தான் தெரியுது, வெட்டியா உள்ளவங்களைத்தான் எழுதவே கூப்பிடுவாங்கன்னு. அதெப்படி விஜி, நான் வெட்டிங்குறதை இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சீங்க?

இவங்க மூணு பெரும் விட்ட (கூகிள்) பஸ்ஸை வரிசையா நிறுத்தினா நைல் நதி நீளம் வரும். அவ்ளோ பஸ். எழுந்ததும் பஸ், புக்கு படிச்சா பஸ், சாப்பிட்டா பஸ், இத்யாதி. இதுல வித்யா பேஸ் புக்குல இருந்து சில விஷயங்களை எடுத்து பஸ்ல விடுவாங்க.

பதிவிற்குச் சம்பந்தமில்லாத விஷயம்

நான் பதிவெழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து கிட்டத்தட்ட என் எல்லாப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுபவர்கள் பரிசல்காரனும் வித்யாவும் (கொஞ்ச நாளாய் பின்னூட்டங்கள் இல்லை, ஏன்?). நான் இன்று ஏதோ கொஞ்சம் சுமாராக எழுத அவர்கள் கொடுத்த ஊக்கமும் ஒரு முக்கியக் காரணம். என்னுடைய சுமாரான ஒரு பதிவை வலைச்சர ஆசிரியராக அவர் இருந்தபோது அதில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தக் காரணங்களுக்காக நான் வித்யாவுக்கு சரிவர நன்றிகள் ஒருபோதும் சொன்னதில்லை. இந்தத் தருணத்தில் சொல்லி விடுகிறேன். வித்யா, மிக்க நன்றி.

Tuesday, December 7, 2010

தங்க்ஸ் இருக்கக் கவலை ஏன்?

போன பதிவிற்கு வந்த பின்னூட்டங்களில் இருந்து நான் அறிந்துகொண்டவை:

எனக்கு அடுத்தவரைக் கலாய்க்க வரவில்லை.

என்னை நான் நன்றகாவே கலாய்த்துக் கொள்கிறேன்.

சோ, எது வருதோ அதை செய்வோம்.

**********************

நான்: (பெருமையுடன்) இங்க பாரேன், விஜி என்னைக் கவிதை எழுத முயற்சி செய்யுமாறு கேட்டிருக்கிறார்

தங்க்ஸ்: ஏங்க, நீங்க அவங்களுக்கு எட்டு மெயில் அனுப்பிச்சு அடுத்து என்ன எழுதனும்னு கேட்டா அவங்க ஏதாவது சொல்லித் தானேங்க ஆகணும்

நான்: சரி விடு. அவங்க சொன்னத பேஸ் வேல்யுக்கு எடுத்துக்கலாம்

தங்க்ஸ்: ஏங்க அவங்க ஏதோ பிளான் பண்ணித்தான் கேட்டிருக்காங்க. நெஜமா சொல்லுங்க, ஒங்களுக்குக் கவிதா எழுத வருமா?

நான்: என்ன பெரிய விஷயம். அப்ப மத்ததெல்லாம் இந்தக் கதை, கட்டுரை இதெல்லாம் எனக்கு நல்லா வருதுன்னு நீ நினைக்கிறியா?

தங்க்ஸ்: (ஒரு வினாடி அதிர்ந்து போகிறார். ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு) நான் என்ன நெனைக்கிறேன் அப்படிங்கறது முக்கியம் இல்லீங்க. வாசகர்கள் என்ன நினைக்கிறாங்க அப்படிங்கறதுதான் முக்கியம்.

நான்: பரவா இல்ல. ஏதோ கொஞ்சம் கமென்ட் வருது. ஒரு 90 பாலோயர் இருக்காங்க

தங்க்ஸ்: அதுல 80 பேர் கிட்ட நீங்க பேசும்போதுதான் நான் பாத்தேனே. செல்போனையே அவங்க காலா நெனைச்சு தண்ட சேவை (அப்படின்னா என்னன்னு பின்னூட்டத்துல கேளுங்க) பண்ணாத குறைதான்.

நான்: சரி மத்த பத்து பேர்?

தங்க்ஸ்: அதுல அஞ்சு பேர உருட்டி மெரட்டி சேர்த்தீங்க.

நான்: அப்ப மத்த அஞ்சு பேர்?

தங்க்ஸ்: உங்க வலைப்பூல எதையோ கிளிக் பண்ணப் போய் தெரியாத்தனமா பாலோயர் பட்டனைக் கிளிக் பண்ணிட்டாங்க

நான்: அது சரி, ஒன தங்கைக்கு மட்டும் எப்படி இத்தனை பாலோயர்?

அவள்: அவள் நல்லா எழுதுறாங்க

நான்: அப்பா நான் நல்லா எழுதலையா?

தங்க்ஸ்: அத விடுங்க, ராத்திரி சமையலுக்கு என்ன பண்ணட்டும்?

நான்: ஒங்க வீட்ல எல்லார்க்கும் நான்னா இளப்பம்தான்

தங்க்ஸ்: என்னை அப்படிச் சொல்லாதீங்க

நான்: (ஒரு வித ஆறுதலுடன்) தேங்க்ஸ் பா

தங்க்ஸ்: கல்யாணம் ஆனதுலேர்ந்து நான் இந்த வீட்டுப் பொண்ணு, அதத்தான் நான் சொல்ல வந்தேன்

நான்: அப்ப கல்யாணத்துக்கு முன்னாடி நீயும் அப்படித்தான் நெனைச்சுக் கிட்டிருந்தியா?

தங்க்ஸ்: அப்பாடி டியுப் லைட் இப்பத்தான் பிரகாசமா எரியுது. காலம்பரலேர்ந்து வோல்டேஜ் ப்ராப்ம். ஆமா நீங்க என்ன கேட்டீங்க?

நான்: ஒன்னும் இல்ல, நீ கொடுத்த பல்பை எல்லாம் அள்ளி வைக்க ஒரு கூடை எடுத்துட்டு வா

காலிங் பெல் அடித்தது. திறந்தால் அசோசியேஷன் ப்ரெசிடென்ட்.

அவர்: ஒண்ணுமில்ல கோபி, நம்ம பார்க்கிங் ஏரியா பூரா இருக்க டியுப் லைட்டை எல்லாம் எடுத்துட்டு CFL பல்புன்னு ஏதோ புதுசா வந்திருக்காம். கரென்ட் செலவு நிறைய மிச்சமாகுமாம். ஆரம்பத்தில் கொஞ்சம் செலவு என்றாலும் நீண்ட நாட்களுக்கு நல்ல பயன் தரும். செக்ரட்டரி அப்படிங்கற முறைல நீங்க என்ன நினைக்கிறீங்க? காஸ்ட் பெனிபிட் அனலிசிஸ் பண்றதுக்கு உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல. நீங்க சொல்றதுதான் பைனல். நீங்க பல்பா டியுப் லைட்டா?

நான்: என்ன சார் சொல்றீங்க?

அவர்: சாரி, பல்பா டியுபான்னு டிசைட் பண்ணிச் சொல்லுங்க

அப்படியே செய்வதாகக் கூறி அவரை அனுப்பி வைத்தேன்.

தங்க்ஸ்: பல்புதான் அப்படின்னு முடிவு பண்ணீங்கன்னா, நீங்களும் எல்க்ட்ரிஷியானோட போயிட்டு வாங்க. நீங்கதான் நல்லா பல்ப் வாங்குவீங்களே

அவருக்குப் பதில் சொல்லுமுன் பொடியன் உள்ளே வந்தான்.

பொடியன்: அப்பா, கீழ் வீட்டுல கரண்ட் போனப்போ அந்தத் தாத்தா பெட்ரோமாக்ஸ் லைட்டப் பத்தி ஏதோ சொன்னார். இப்ப அதெல்லாம் இல்லையாமே. ஆனா அவர் ஒங்கப்பாகிட்ட இருந்தாலும் இருக்கும். கேட்டுப் பார்னு சொன்னார். பெட்ரோமாக்ஸ் பல்ப் வாங்கி வெச்சிருக்கியாப்பா நீ?

Monday, December 6, 2010

...ஆகவே இனி யாரையும் கலாய்ப்பதில்லை...

(டிஸ்கி: வெறும் கலாய்ப்பது மட்டுமே நோக்கம். உங்களுக்குப் பிடிக்காத விஷயம் இருந்தால், எனக்குத் தெரியப்படுத்துங்கள். நீக்கி விடுகிறேன்.

பதிவில் வருவது போன்ற உரையாடல்கள் நடக்கவே இல்லை.)

சென்ற பதிவில் யாரையும் குறிப்பிட்டுக் கலாய்க்கவில்லை என்று நிறைய கண்டனங்கள் வந்துள்ளன. எனக்குக் கலாய்க்க வரவில்லை என்கிற உண்மையும் தெரிய வந்துள்ளது எல்லோருக்கும். அதனால் இனிக் கலாய்ப்பதில்லை என்று முடிவு செய்துள்ளேன். கும்மிதான்.

எதுவா இருந்தாலும் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிறது என் வழக்கம். பிள்ளையார் சுழி உயிரெழுத்து ‘உ’ மாதிரி இருக்கும். ‘அ’ வுக்கு முன் வரும் ‘உ’ அப்படின்னு சொல்லியே நான் ஒரு ரெண்டு பதிவு போட்டிருக்கேன். நீங்க படிச்சாத்தானே. சரி இப்போ யாரைக் கும்மப் போறோம்? வெரி குட் கண்டுபிடிச்சிட்டிங்களே. நம்ம உனா தானா அண்ணனைத்தான்.

தங்க்சும் (ம), ரங்க்சும் (க) பேசிக்கொள்(ல்)வது போல உள்ளது.

ம: இவர் பேர் நல்லாருக்கே

க: ஆளும் சொக்கத் தங்கம்

ம: அவர் எப்படி எழுதுவாரு?

க: அவர் பயங்கர பாஸ்ட். ஒரு உதாரணம் சொல்றேன். சினிமாவப் பாத்துக்கிட்டே இருப்பார். தியேட்டர்ல வணக்கம் போடறதுக்கு முன்னாடி இவர் முப்பது பக்கத்துல விமர்சனம் போட்டுடுவார்

ம: அடுத்த ஷோ வணக்கத்துக்கு முன்னாடியா?

க: போடி இவளே, அவர யாருன்னு நெனச்ச, அதே ஷோ முடியறதுக்குள்ளே

ம: எங்க நான் கொஞ்சம் படிக்கிறேன் (படித்து முடித்துவிட்டு) ஏங்க இவர் பேருக்குப் பின்னாடி இவ்ளோ பெரிய நம்பர் வெச்சிருக்காரு?

க: அவர்ட்ட கேட்டேன். அவ்ளோ ஹிட் வந்ததற்கப்புறம் தான் எழுதுவதை நிறுத்துவாராம்

ம: ரொம்ப நீளமா எழுதுறாரே?

க: நீ வேற, அவர் மல்டிபிள் சாய்ஸ் ஆன்செர்ஸ் எக்ஸாம்ல கூட அடிஷனல் சீட் கேட்டவராம்

ம: திரைக்கதை ஸ்கிரிப்ட் தொலைஞ்சு போனாக் கவலையே படவேணாம். இவர் பதிவுல இருந்து மீட்டுக்கலாம். ஏங்க நான் நெனைக்கிறத சொல்லட்டுமா?

க: எவ்ளோ மொக்கையா இருந்தாலும் சொல்லு பரவால்ல

ம: இவரோட வேகத்தைப் பார்த்தா இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்துல லாரன்ஸ் நெழல விட வேகமா சுடுவாரே அது ஞாபகம் வருதுங்க

க: தேவலையே அப்புறம்

ம: இவர் விளக்கமா எழுதுறதப் பார்த்தா சிங்கம் படத்துல சூர்யா, ராதா ரவி கேட்ட ஒரு கேள்விக்கு எல்லாத் தகவலும் தருவாரே அது ஞாபகம் வருதுங்க

க: நீ வுட்டா ரசிகர் மன்றமே வச்சிடுவ போலிருக்கே. சரி வா அடுத்து வேற ஒரு பதிவரைப் பத்திப் பாப்போம்.

ம: போங்க நீங்க, நான் என்ன வெட்டியா, எனக்குக் கிச்சன்ல வேலை இருக்கு. நீங்க ஒன்னு பண்ணுங்க. விஜி உங்களை விட வெட்டியா இருப்பாங்க. அவங்களுக்குப் போன் போட்டு ஐடியா கேளுங்க.

க: சரி சரி, இதெல்லாம் சொல்லிக்கிட்டு. ஆனாலும் ஐடியா சூப்பர். நான் விஜிகிட்ட பேசறேன்.

(விஜி பேசுவது சாய்வு எழுத்துக்களில்)

தத்து மம்மி, நான் கோபி பேசறேன்

சொல்லுங்க. என்னங்க என்னையே கலாய்க்கிறீங்க

சரி சரி லூஸ்ல விடுங்க. இனிமே நோ கலாய்த்தல். நேரா கும்மிதான். உனா தானா அண்ணனைக் கும்மியாச்சு. அடுத்து யாரைக் கும்மலாம்னு ஐடியா கொடுத்தீங்கனா...

நீயே சொல்லு.

நம்ம காபா எப்படி?

சரிதான், கும்மிடலாம்.

இந்தப் பேரே எனக்கு ரொம்பப் பிடிக்கும்

ஏன்?

நம்ம பொடியன் ஒரு வயசுல சின்ன சின்னதா வார்த்தைகள் பேசுவான். கொஞ்சம் போல சுருக்கி சொல்வான்.

சாக்லேட்- சாக்கு
கல்கண்டு – காக்கு

அதே போல இரண்டு வார்த்தைகள் வரும் இடத்தில் அப்ரிவியேட் (abbreviate) பண்ணுவான். அப்பா உன்னை எப்படிக் கொஞ்சுவார்னு கேட்டா காபா (கண்ணா பாப்பா) என்று சொல்லுவான். எனக்கு அந்த ஞாபகம் வருது.

அதெப்படி கோபி உன் பையன் இவ்ளோ புத்திசாலியா இருக்கான்?

அழகிலும், அறிவிலும் அவன் அவங்க அம்மாவைப் போல.

அதானே பாத்தேன். காபாவைக் கண்ணே பாப்பான்னுல்லாம் கொஞ்சாதீங்க. நல்லாவே இல்லை. மேலும் நீங்க போன் பண்ணது அவரைக் கும்மத்தான் அப்படிங்கறதை ஞாபகம் வெச்சுக்கோங்க.

சரி சரி, இவரோட வலைப்பூவில் என்ன சொல்லி இருக்கார்னு பாத்தீங்களா?

நல்லாத்தானே இருக்கு. மதுரைக்காரன் அப்ப்டிங்குறதுல பெருமைன்னு சொல்லியிருக்கார்.

அது சரி. ஆனா மதுரை இவரைப் பத்தி என்ன நினைக்குதுங்குறதுதான் முக்கியம்.

அப்படிப் பாத்தா நீ, நான்லாம் பதிவராவே இருக்க முடியாது கோபி.

விஜி, நீங்க பதிவரா?

சரி சரி, லூஸ்ல விடுங்க.

காபாவுக்கு ஒலக இலக்கிய வியாதி உண்டு. ச்சே தப்பா சொல்லிட்டேன். அவர் ஒரு உலக இலக்கியவாதி. உள்ளூர் இலக்கியமும் தெரியும். ஆனா ஊனா ஒரு பழைய புத்தகக் கடைக்குப் போய் ஒரு புக்கு வாங்கிட்டு வந்து அதை கூகிள் பஸ்ஸில் போட்டுடுவார். நான் உடனே அதைப் பத்தி ஒரு நாலு லைன் கமென்ட் போட்டுடுவேன்.

எனக்கும் தெரியும் அது. அது சரி கோபி, உன்கிட்ட இருக்குறதே மொத்தமா நாலு புக்குதான். அதுல நீ படிச்சதே நாலு பக்கம்தான். அதெப்படி நிறைய படிச்ச மாதிரியும், நிறைய புக்கு இருக்குற மாதிரியும் சமாளிக்க முடியுது உன்னால?

ரொம்ப சிம்பிள் விஜி. எல்லாப் பதிப்பகத்தின் நூல் பட்டியலைக் கையில் வெச்சுக்கிட்டா மேட்டர் ஓவர்.

சரி சரி காபா மேட்டர் என்னாச்சு.

இவர் சமீபத்துல என்ன பண்ணார்னு கேளுங்க. கிகுஜிரோ பாத்துட்டு அதுக்கு ஒரு விமர்சனம். நந்தலாலா பாத்துட்டு அதுக்கு ஒரு விமர்சனம். அடுத்து ரெண்டையும் சீன் பை சீன் ஒப்பிட்டு ஒரு பதிவு வரும்னு நினைக்கிறேன்.

கோபி அந்த எஸ்ரா மேட்டர்...

இவர் எஸ்ரா பாணில காமெடின்னு நினைச்சு ஏதோ எழுதப் போக எல்லாரும் அதுக்கு சீரியசா பின்னூட்டம் போட ஆரம்பிச்சாங்க. இவரே வந்து இது காமெடி அப்படின்னு சொல்ல வேண்டியதாப் போச்சு. ஹா ஹா, ஜோக்கு முடிஞ்சிடிச்சி விஜி, இப்ப நீங்க சிரிக்கணும்.

ஹா ஹா ஹா போதுமா? நீங்க ஒரு ஆணாதிக்கவாதி கோபி

தத்து மம்மி, என்னாச்சு?

பாருங்க பெண் பதிவர்களைக் கலாய்க்க மாட்டேங்குறீங்க?

இவ்ளோதானே. இருங்க சீட்டுக் குலுக்கிப் போடறேன். யார் பேர் வருதுன்னு பாப்போம்.

(வந்தது விதூஷின் பெயர்)

விஜி, விதூஷ் பேர் வந்திருக்கு.

எல்லா சீட்லயும் விதூஷ் பேர்தான் எழுதிப் போட்டாயோ?

என்ன நம்பிக்கையே இல்லாம?

சரி சரி சொல்லு

நீங்க இந்தக் கண்ணன் பட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம்னு பாரதியார் எழுதின கவிதைத் தொகுப்புகளைப் பத்திக் கேள்விப்பட்டிருப்பீங்க.

கோபி, பாரதியார் பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க. வீட்டுக்கு லாரியே வரும்.

அவசரப்படாதீங்க. இவங்க அதே மாதிரி, முழிபேர்ப்புக் கவிதைகள், இந்தா பிடிச்சுக்கோ கவிதைகள், சயனைடு கவிதைகள் எல்லாம் எழுதி இருக்காங்க.

நானும் படிச்சேன். முழி நிஜமாவே பேந்து போச்சு.

இப்போல்லாம் தங்க்ஸ் எனக்குக் குடுக்கிற பனிஷ்மென்ட் இதான். இந்த மூணு கவிதையையும் கோடு போட்ட நோட்டுல மார்ஜின் போட்டு, ஸ்கெட்ச் பென் எல்லாம் யூஸ் பண்ணி ஒவ்வொரு கவிதையையும் பத்து பத்து வாட்டி எழுதணும். அடித்தல் திருத்தல் இல்லாம. பின்னூட்டங்கள் உட்பட எழுதியாகனும். இந்த முழி பேர்ப்புக் கவிதைகளுக்கு ஸ்க்ரிப்ளிங்ஸ் வித்யா கோனார் நோட்ஸ் எல்லாம் கூடப் போட்டிருக்காங்க.

அந்தக் கொடுமை வேறயா? அடுத்து யாரைக் கலாய்க்கப் போறீங்க? ஸ்க்ரிப்ளிங்ஸ் வித்யாவா?

இல்லை விஜி, ஆபீஸ் போகணும்.

உன் நேர்மை எனக்குப் புடிச்சிருக்கு. ஆபீஸ் போகனும்னுதான் சொல்ற. வேலை பாக்கனும்னு சொல்லலை. சரி வை போனை.

?????!!!!!!

Friday, December 3, 2010

தங்கமணி தரும் அதீத விளக்கங்கள்

இதைத்தான் காலக் கொடுமைன்னு சொல்றது. போயும் போயும் என்னைய காமெடியா எழுத சொல்லி சொல்றாங்க விஜி. ஒரு வேளை என்னைய வெச்சுக் காமெடி பண்றாங்களான்னு தெரியலை. ச்சே ச்சே அப்படின்னு நீங்க சொல்லும்போதே எனக்குத் தெரியுது. விஷயம் அதேதான்.

சங்கத்தில் பதிவு எழுத என்னை ஏண்டா கூப்பிட்டோம்னு நொந்துக்கனும். அந்த அளவு சீரியஸா பதிவு போடலாம்னு இருக்கேன்.

இது போன்ற வலைக் குழுமங்களில் பதிவு எழுதுறதுன்னா என்னன்னு தெரியாம ஒரு வாட்டி அணில் கவிதா கிட்டப் போய் ‘நட்சத்திரப் பதிவர்’னா என்ன அப்படின்னு கேட்டு வெச்சேன். இப்பவே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். பதிவுலகத்துல நான் டம்மி பீஸ் அப்படின்னு.

பஸ்ல நான் கமென்ட் போடற அழகைப் பார்த்து அருணையடி என்னை, ‘கோபி தி இன்னோசென்ட் சைல்ட்’ அப்படிங்க்றார். இந்த அழகுல நான் போய் யாரைக் கலாய்க்க முடியும்? இதுல விஜி கிட்டயிருந்து அறிவுரை வேற. கன்னா பின்னான்னு கலாய்க்கனும்னு.

எப்புடி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம் இருந்த நேரத்துலதான் தங்க்ஸ் பத்தி நினைப்பு வந்தது. நீங்க இந்த men are from Mars, women are from Venus அப்படிங்கற புத்தகம் பத்திக் கேள்விப் பட்டிருப்பீங்க. அந்தக் காலத்து இளைஞர் அப்படின்னா ‘வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான், அர்த்தமெல்லாம் வேறுதான், அகராதியும் வேறுதான்’ அப்படிங்கற பாட்டாவது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். விஜி, அபி அப்பா, அருணையடி, அணில் கவிதா இவங்கல்லாம் ஸ்கூல் போகும்போது வந்த படம்னு நினைக்கிறேன். நான் அப்போ பிறக்கவே இல்லை.

இதுல விஜிதான் எல்லாருக்கும் சீனியர் அப்படின்னு கேள்வி. ஆனா பாருங்க அவங்க அணில் கவிதாவை தத்து மம்மின்னு கூப்பிடுவாங்க. அப்பப்போ யூத் அப்படின்னு காமிச்சிக்க இளவரசிதான் அவங்களுக்குப் புடிச்ச ஹீரோயின்னு சொல்வாங்க. அவங்களுக்குத் தெரியாது. இளவரசி போய், இன்னும் எத்தனையோ பேர் போய் இப்போ தமன்னா வந்தாச்சுன்னு. இதுல சங்கத்துக்கு மட்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்னு பேரு.

சரி அவங்களைப் பத்தின நிறைய உண்மைகளைப் பாத்தாச்சு (இதுக்குப் பேர் கலாய்க்கிறது இல்லை, உண்மையைத்தான் சொல்றேன், நம்புங்க மக்கா). டாபிக் பத்திப் பேசுவோம். ஒரே வார்த்தைக்கு தங்க்ஸ் வேற அர்த்தத்திலும் ரங்க்ஸ் வேற அர்த்தத்திலும் புரிஞ்சிப்பாங்க அப்படின்னுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதான் தெரியுது ஒரே செயலுக்கு அவங்க ரெண்டு அர்த்தம் சொல்றாங்க. படிச்சுப் பாருங்க.

இந்தப் பதிவுல இன்னொரு சௌகரியம். ஒருத்தர் ரெண்டு பேர்னு கலாய்க்காம ஒட்டு மொத்த ரங்க்ஸ் குரூப்பையே கலாய்த்த மாதிரி ஆச்சு. சேம் சைட் கோல் தான். பரவாயில்லை. லூஸ்ல விடுங்க.

*****************************

தங்கமணி தரும் அதீத விளக்கங்கள்

(தங்க்ஸ் பேசுவது சாய்வு எழுத்துக்களில்)

ஏங்க உங்களுக்கு நான் செய்ற சில விஷயங்கள் புடிக்கலைன்னு நினைக்கிறேன்.

அப்படி எல்லாம் எதுவும் இல்லை.

சும்மா சொல்லாதீங்க. நீங்க கேளுங்க நான் சொல்றேன். தப்பா இருந்த மாத்திக்கிறேன்.

கிடைத்த வாய்ப்பை விட்டுவிட மனம் வரவில்லை. எல்லாவற்றையும் கேட்டு விடுவது என்று கேட்க நினைத்து எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்தேன்.

ஆமாம். புடவைக் கடையில் ஏன் இவ்ளோ நேரம் ஆக்குகிறாய்?

அப்படிக் கேளுங்க. நாங்கதான் கட்டுகிறோம் அப்படின்னாலும் பாக்கப் போறது நீங்கதான். பாக்கும் போது நல்லா லக்ஷணமா இருக்க வேண்டாமா அதுக்குத்தான் அவ்ளோ நேரம் செலவு பண்ணிப் புடவை எடுக்கிறோம். இதுலயும் உங்க நலன்தான் முக்கியம் எங்களுக்கு.

நீ சொல்றது இடிக்குதே. காலம்பர ஆபீஸ் போற அவசரத்துல உன்னைப் பாக்க டைம் எங்கே இருக்கு. சாயந்திரம் வந்ததும் டிவி பாக்கவும் பதிவு எழுதவுமே நேரம் போயிடுது. ராத்திரி பெட ரூமுக்குள்ள ஒரு நைட்டிய மாட்டிக்கிட்டுத் தான் வர்றே. நான் உன்னைப் புடவைல பாக்கவே முடியறதில்லையே.

அதாங்க தப்பு பூரா உங்க பேர்ல. நான் மெனக்கெட்டு நாலு அஞ்சு மணி நேரம் கால் கடுக்க நின்னு புடவைக் கடைல புடவை எடுத்து அதைக் கட்டிக்கிட்டு உங்க முன்னால வந்தா உங்களுக்கு என்னைப் பாக்க நேரமில்லை. உங்களைக் கட்டிக்கிட்டு....

நான் அதற்குள் அவளை இடைமறித்து, சரி சரி தப்பு எம்பேர்லதான்.

சரி அடுத்த கேள்வி கேளுங்க.

வேண்டாம். அடுத்த கேள்வி அடிபட்டுப் போச்சு

சும்மா கேளுங்க

ஏன் ரொம்ப நேரம் மேக் அப் போடுறேன்னு கேக்கலாம்னு இருந்தேன்... ஆனா அந்தக் கேள்விக்கும் நீ போன கேள்விக்கு சொன்ன பதிலைத்தான் சொல்லப் போற

சமத்துங்க நீங்க, ம்ம்ம் அடுத்த கேள்வி

நீ ஏன் எங்க மனுஷங்க வரும்போது அவங்க கிட்ட சரியாப் பேச மாட்டேன்கிற

நான் லொட லொடன்னு பேசிக்கிட்டே இருக்கேன் அப்படின்னு அவங்க நினைக்கக் கூடாதுல்ல.

சரி, ஏன் உன் மூஞ்சில எண்ணெய் வடியுது?

பொழுதன்னைக்கும் சீவி சிங்காரிச்சிக்கிட்டே இருப்பா போலருக்கே அப்படின்னு அவங்க தப்பா எடுத்துக்கக் கூடாதுல்ல அதான்.

அதுவே உங்க மனுஷங்க வரும்போது தலைகீழா மாறுதே ஏன் (பெரிதாக மடக்கிவிட்ட பாவனை என் தொனியில்)

நீங்க ஒரு டியூப் லைட்டுங்க. எங்க வீட்டில் இருந்து வர்றவங்க கிட்ட நான் நல்லாப் பேசலைன்னா உங்களுக்கும் எனக்கும் சண்டைன்னு நினைச்சிக்க மாட்டாங்க. பொண்ணை மாப்பிள்ளை நல்லா வெச்சிக்கலையோன்னு அவங்களுக்கு சந்தேகம் வந்துடாது.

எனக்குக் கொஞ்சம் தலை சுத்துது. நான் மிச்சத்தை நாளைக்குக் கேக்குறேனே.

இல்லை இல்லை. இன்னைக்கே முடிச்சிடுவோம்

யாரை, என்னையா?

இல்லைங்க கேள்வியை.

சரி, நீ சமையல் இன்னும் கொஞ்சம் ருசியாப் பண்ணலாமே (கொஞ்சம் எச்சரிக்கையாக ஒரு நான்கடி தள்ளி உட்கார்ந்து கொண்டேன்)

எனக்கு உங்க நாக்கை விட உங்க உடம்புதாங்க முக்கியமாப் படுது. சமையல் ருசியா இருந்தா நீங்க நிறைய சாப்பிட்டு வெயிட் போட்டுடுவீங்க. மத்தபடி எனக்கு நல்லாவே சமைக்கத் தெரியும். புதுசா விஜி அப்படிங்க்றவங்க பதிவுல பாவக்காயும் பரங்கிக்காயும் போட்ட ஒரு டிஷ் பத்தி நேத்தி படிச்சேன். செஞ்சு கொண்டு வரட்டுமா? இல்லை நேத்து நான் புதுசா ஒரு ஸ்வீட் கண்டுபிடிச்சேன். வெந்தயமும் நாட்டு சக்கரையும் போட்டு. அதை செஞ்சு கொண்டு வரட்டுமா?

இதற்கு மேல் கேள்வி கேட்க எனக்குத் தெம்பில்லை. மயக்கம் வந்தது போலக் கீழே விழுந்தேன்.

டேய் தம்பி, அந்தத் தண்ணி ஜாடியைக் கொண்டாடா. அப்பாவைத் தெளிய வெச்சுத் தெளிய வெச்சு அடிப்போம்.

ஓரக்கண்ணால் பார்த்தேன். பயபுள்ள என்னா வேகமா ஓடுது.

எழுந்து உட்கார்ந்து தங்க்சின் கையைப் பிடித்துக் கொண்டு இனி கேள்வியே கேட்பதில்லை, ஆளை விட்டுடு என்று கெஞ்சாத குறையாக சொன்ன பிறகே தப்ப முடிந்தது.

ரங்க்ஸ், நீங்க பாட்டுக்கு தங்க்ஸ் கேள்வி கேட்க சொன்னாலும் கேட்டு மாட்டிக்காதீங்க. தங்க்சை பொருத்தவரை நீங்கள் இரண்டு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

ஒன்று, தங்க்ஸ் செய்வது எப்போதுமே சரி.

இரண்டு, தங்க்ஸ் செய்வது சரியா தவறா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும் பட்சத்தில், விதி ஒன்றைக் கடைபிடிக்கவும்.

இது போக கேக்காம விட்ட கேள்வி இன்னும் நிறைய. அதுல ஒன்னு ரெண்டு நீங்க கேட்டுப் பாருங்க உங்க தங்க்ஸ் கிட்ட. பதிலைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க, கேட்டு விட்டு உயிரோடு இருக்கும் பட்சத்தில்!

அது ஏன் உன் தங்கை நான் டூர் போகும்போது மட்டும் நம்ம வீட்டுக்கு வறா?

தேற்றம் (theorem) , கிளைத் தேற்றம் (corrolary) மாதிரி கேள்வி, கிளைக் கேள்வி: அதெப்படி நான் டூரை பாதியில் முடித்துக் கொண்டு உன்கிட்ட சொல்லாமலே ஊருக்கு வந்தாலும் அவ அதுக்கு முத நாளே கரெக்டா எப்படிக் கிளம்பிப் போயிடறா?

பேஷன் டிவி ஏன் நம்ம வீட்டில் வர மாட்டேங்குது?