Monday, July 31, 2006

தேன்கூடு போட்டி - நன்றி நவில்தல்

'மரணம்' என்ற தலைப்பில் நான் எழுதாத காவியத்திற்கு தேன்கூடு வாக்கெடுப்பில் மூன்றே முக்கால் ஓட்டுக்கள் விழுந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. எழுதப்படாத என் படைப்பிற்கு வாக்களித்த முகம் தெரியா அந்த ஒண்ணே முக்கால் நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். (பின்ன, மீதி ரெண்டு ஓட்டும் நானே இல்ல போட்டுக்கிட்டேன்!). இதே தருணத்தில் இப்போட்டியை நடத்தும் தேன்கூடு குழுவினருக்கும், தமிழோவியக் குழுவினருக்கும், இப்படைப்பை எழுதாமலிருக்கத் தூண்டுகோலாக இருந்த வ.வா.சங்க நண்பர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த போட்டியில் கலந்து கொல்லாதது எனக்கு மிக நல்லதொரு அனுபவமாய் இருந்தது. இன்னும் அதிக வாக்குள் வாங்க எழுதாமல் இருந்தால் மட்டும் போதாது என்ற உண்மையை நன்றாகவே உணர்ந்து கொண்டேன். எழுதாமல் இருந்தால் மட்டும் போதாது, மண்டையை உடைத்துக் கொண்டு சிந்திக்கவும் செய்யாமல் சும்மா இருக்கவேண்டும் என்ற விழிப்பு எனக்கு கிடைத்தது.

எழுதப்படாத எத்தனையோ படைப்புகள் இருக்க, எனக்கு ஓட்டிட்டு (அட ஓட்டு போட்டுன்னு சொல்ல வந்தேன். ஓட்டறது பத்தி இல்லை) சிறப்பித்த இந்த நண்பர்களின் அபரிதமான ஊக்குவிப்பால் அடுத்த முறை ஒரே ஒரு படைப்புடன் நிறுத்தாமல் கதை, கவிதை, கட்டுரை என பலவற்றையும் எழுதாமல் இருப்பேன் என கூறிக் கொள்கிறேன். இந்த நண்பர்கள் பின்னூட்டத்தின் வாயிலாக தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்களேயானால் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் நன்றி சொல்ல ஏதுவாக இருக்கும்.

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். பங்கு பெற்ற மற்றவர்களுக்கு பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.

டிஸ்கிக்கள்

1) இப்படி ஒரு நன்றி பதிவு போட்ட எஸ்.கேயும், போட்டிக்கு போகமலே ஆறுதல் பரிசு அடிக்கப் பார்க்கும் இட்லிவடையும் ஆளுக்கு 70 -80 பின்னூட்டம் வாங்குவதைப் பார்த்த புகைச்சலில் இந்த பதிவு எழுதப்படவில்லை.

2) எனது பதிவு எண்ணிக்கை ஏற வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பதிவு எழுதப்படவில்லை.

3) இந்த பதிவில் வாழ்த்துக்கள், நன்றி, நன்றிக்கு நன்றி, நன்றிக்கு நன்றிக்கு நன்றி என்ற ரேஞ்சில் பின்னூட்டங்கள் வந்தால் அதற்கு நான் காரணம் இல்லை. போலீஸ்கார் எல்லாம் இதற்கு முன்மாதிரியாக இருக்கும் அந்தப் பதிவிற்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

4) வாத்தியார் 'மரணம்'ன்னு தலைப்பு குடுத்தாலும் குடுத்தார் 80 பேரு கதையும் கவிதையுமா எழுதித் தள்ளிட்டாங்க. போதாததுக்கு ஆளுக்கு ஒரு நன்றி பதிவு வேற. தமிழ்மண முகப்பு பூர இந்த நன்றி அறிவிப்பா இருக்கா, மாதாமாதம் இப்படி ஒரு படலம் நடக்கப் போகுதேன்னு ஒரு பயம். அதனால சும்மா ஒரு கலாய்த்தல். அவ்வளவுதான். அதுவும் இதுக்கு நேயர் விருப்பம் வேற. :)

5) இந்த பதிவோட நம்ம அட்லாஸ் பொறுப்பு முடிஞ்சு போச்சு. அதுக்கும் சேர்த்துத்தான் இந்த நன்றிப் பதிவு. சங்கத்திற்கு, வந்து படிச்சவங்களுக்கு, செய்ய வேண்டியதை சரியா செஞ்சவங்களுக்கு, எல்லாருக்கும் நம்ம நன்றி.

Sunday, July 30, 2006

அட்லாஸ் வாலிபருக்கு அட்லாஸ்ட் நன்றி!

சங்கப் பலகையில் சங்கத்து முகங்களையே பார்த்து அலுத்துப்போன பெருவாரியான வாசக உள்ளங்களுக்கு மாற்றம் தரும் வகையில் சிறப்பு விருந்தினர்களை அழைத்து அவர்களுக்கு(ம்) ஆப்பு வாங்கித்தரும் விதமாக
எங்கள் முதல் அட்லாஸ் வாலிப விருந்தாளியாக ஆப்புகளை அள்ளிக் கொள்ள இலவசக் கொத்தனார் அவர்களை அழைத்திருந்தோம்.

அவரும் அயராத அலுவலகப் பணிகள் மற்றும் எழுத்து, தமிழ் வளர்ப்பு, வெண்பா வடித்தல் போன்ற வலையுலகப் பணிகளுக்கிடையிலும் எங்கள் அழைப்பை ஏற்று அட்லாஸ் வாலிபராக ஆப்புகளைத் தாங்கியதோடு மட்டுமின்றி, பின்னூட்ட எண்ணிக்கையில் அவரது பழைய சாதனைகளையும் முறியடித்து, சங்கத்திலும் சாதனையை ஏற்படுத்தி சங்கத்தை சிறப்பித்திருக்கிறார்.

இதோ இன்றோடு அவரது அட்லாஸ் வாலிப பருவம் முடிவடையும் இவ்வேளையில் சங்கத்தின் தலை கைப்பு மற்றும் சங்கத்தின் முக்கிய உறுப்பினர்களான போர்வாள் தேவ், வேளாண் தோழர் விவசாயியார், புதரகத் திரும்பி ஆற்றலரசியார் பொன்ஸ், எள் என்றாலே நினைவுக்கு வரும் எண்ணெய் போல் ஜொள் என்றாலே நினனவில் வரும் பாண்டித்தம்பி ஆகியோர் சார்பாகவும், அலைகடலென திரண்டிருக்கும் சங்கத்தின் ஏனைய சிங்கங்களின் சார்பிலும் இலவசக் கொத்தனார் அவர்களுக்கு எங்கள் கோடானு கோடி நன்றிகளை தெரியப்படுத்திக் கொள்ள கடமைப்படுக்கிறேன்.

இலவசக் கொத்தனார் அவர்களுக்கு எங்கள் இமாலய நன்றிகள்
சங்கத்தின் முதல் அட்லாஸ் வாலிபரை மனதார மகிழ்ந்து, ஆனந்தக் கண்ணீர் மல்க, அரை மனதோடு, சென்று வருக, குட் பை, டாட்டா என்றெல்லாம் சொல்லி பிரியா விடை தரும் இத்தருணத்தில் எங்கள் அன்பு அண்ணன், தல கைப்பு அவர்கள் "விருந்தாளிகளை வெறுமனே வழியனுப்புதல் நமது பாரம்பரிய மரபு அல்லவே!" என்று அன்புக் கட்டளை இட்டதால்
சங்கத்தின் சகல வித உறுப்பினர்கள் சார்பாக அன்பு அண்ணன் இலவசக்கொத்தனார் அவர்களுக்கு
"பின்னூட்டப் புயல்"
என்ற பட்டத்தை வழங்கிக் கௌரவிக்கிறோம்.
பின்னூட்டப் புயல் கொத்தனார் வாழ்க! வாழ்க!

Saturday, July 29, 2006

நாங்களும்தான் படம் போடுவோம்

படம் போடுற காலமாகிப்போச்சுய்யா, இளவஞ்சி, கைப்பு, பொன்ஸ், "calgary" சிவா, பாலபாரதி அப்படின்னு எல்லாருமே இப்போ இப்படித்தான் படம் பத்தி பேச ஆரம்பிச்சு இருக்காங்க. அதுக்காக், நாமும் படம் போட்டா நல்லாவா இருக்கும். ஈ அடிச்சான் காப்பின்னு சொல்லிரமாட்டாங்க?. நமக்கு கலாய்த்தல் தான் தெரியும், படம் புடிக்க தெரியுமா? அவுங்க போட்ட படத்துக்கு ஏத்தமாதிரி நாமும் ஒரு போட்டி படம் போட்டா எப்படி இருக்கும். அவுங்க போட்ட பதிவுல இருந்து எடுத்து துப்பறிஞ்சு சில வரிகளை சுட்டு, அதுக்கு தகுந்தா மாதிரி படம் போட்டு இருக்கோம். திட்டறதுன்னாலும், அடிக்கிறதுன்னாலும் அந்தந்த பதிவுல போயே செய்ங்க, இதெக்கெல்லாம் நாங்க பருப்பில்லை சே பொறுப்பில்ல, ஆமா சொல்லிபுட்டோம்.

பொண்ணு போட்டிருந்த டி-சர்ட்ல இருந்த கேப்ஷன படிக்க நம்ம பாண்டி போட்ட பல்டி(சொடுக்கினா பதிவு வரும்)




கிறுக்கு புடிச்ச கைப்பு(சொடுக்கினா பதிவு வரும்)






அப்புறம் கோவத்துல கடிச்சி வெச்சிடுவேன் சொல்லிப்பிட்டேன்- சிபி(சொடுக்கினா பதிவு வரும்)






டெல்லி பிரதமர் வீட்டுல நடந்த காவல் அத்துமீறல தொ.கா. வில கண்டு களிச்ச தேவ் (சொடுக்கினா பதிவு வரும்)






தேன்கூடு போட்டியில கெலிச்சது தெரிஞ்சவுடன் கேரளாவுல ஆற்றலரசி பொன்ஸ்க்கு நடந்த பாராட்டு விழா(சொடுக்கினா பதிவு வரும்)





கொசுக்களை கொல்வது எப்படின்னு படம் போட்டு கதை சொன்ன நாகை சிவாவைப்பத்தி பேசினாலே கொச்சுக்களுக்கு சிக்குன் குனியா வந்துருதாம்(சொடுக்கினா பதிவு வரும்)


Tuesday, July 25, 2006

தளபதியார் வாழ்த்துப்பா

இன்று சங்கத் தலைமை நிலையத்திற்கு லீவு சொல்லைவிட்டு பாண்டி பிக்னி பேபியோடு கோவா கிளம்பிவிட்டார். எனக்கும் சற்று அலுவல் அதிகம். அதனால் பெருந்தன்மையோடு நம் தலைமை நிலையம் வந்து அன்பின் பெருமக்களாம் சங்கத்தின் இளம் புயல்களாம் மின்னல், வெறும் பயல், கப்பி பய, நாகை சிவா, கிதாக்கா ஆகியோர் கடிதங்களுக்குப் பதில் எழுதும் வேலையில் ஈடுபட்டிடுந்தனர்.

அந்நிலையில் சங்கத்திற்கு வந்த ஒரு கடிதம் உங்கள் பார்வைக்கு...
சங்கத்தின் முன்னோடிகளாம் நவீன உக்கிர புத்தனாம் எங்கள் தல கைப்புள்ள, வேளாண் தோழர் விவசாயியார், ஆற்றலின் பேரரசியார் பொன்ஸ் ஆகியோரின் ஆணையையும் புறந்தள்ளி இதோ உங்களுக்காக சங்கப் பலகையில் வாழும் வார்த்தை வள்ளல் எங்கள் தளபதியாரைப் பாராட்டி வந்த வாழ்த்துப்பா மடலை ஒட்டுகிறேன்.

முத்தமிழ் அரசே
முல்லை வேந்தே
நாமக்கல் மைந்தனே
நக்கலின் கொழுந்தனே
கண்ணாடிக் கலைஞனே
தமிழ்மணத்தின் நகைச்சுவையே

சங்கம் கண்ட மன்னா
சிபி என்ற கண்ணா
கலாய்த்தலுக்கு தனி இடமா?
அதில் எனக்கும் ஒரு இடமா?

சின்னம் கொடுத்த சிங்காரா!
உன்னை
நல்லவன் என்றே நான் நினைத்தேன்
பொல்லாப்பற்ற வல்லவன் என்றல்லோ மகிழ்ந்திருந்தேன்

அய்யகோ!!!!
என்னை கலாய்க்க ஒரு அணி
சொர்ணக்காவும் உம்மோடா இனி?

உசுபேற்ற-
ஒதுங்கி இருந்தவனை எல்லாம்
கடுப்பேற்ற
அவனை
சுடு அடுப்பேற்ற.....
வந்துவிட்டாய்....
வலைப்பூ கண்டுவிட்டாய்....

வா....வா....
வீறு கொண்டு வா....
வீச்சு பெற்றவனிடம்
நொறுபட வா....விழு...வாங்கும்
அடியில்
எழு.....மீண்டும்
எழு

ஓட்டுவது
உன் குலத்தொழிலாகட்டும்
கலாய்ப்பது
இனி குடும்பத் தொழிலாகட்டும்....


குறிப்பு: இந்த வாழ்த்துப்பாவை எழுதிய அன்பருக்கும் தலக் கைப்பு , வேளாண் தோழர் மற்றும் ஆற்றல்ரசி அக்கா ஆகியோரால் எதாவது மிரட்டல் வரலாம் என்பதால் பெயர் தவிர்க்க படுகிறது... எந்தச் சோதனை வந்தாலும் தளபதிக்காகப் போராடப் பல தொண்டர்கள் உள்ளார்கள் என்பதற்கு இந்த மடலே சாட்சி....
ஸ்அப்பப்பப்பப்பா... கயமை அது இதுன்னு பதிவு போட்ருக்காய்ங்க .. அப்புறம் நாங்க இப்படி எதாவது கிளப்பி விட வேண்டியதா இருக்கு...

Saturday, July 22, 2006

வ.வா. சங்கத்தினரின் மெகா பதிவுக் கயமைத்தனம்

இதுவரை நமது விஜிலென்ஸ் குழு கண்டறிந்ததிலேயே மிகப்பெரிய கயமைத்தனம் வ.வா. சங்கத்தில் நடந்திருக்கிறது. அந்த சங்கத்தின் முக்கியப் பிரமுகரான கைப்புள்ளதான் இந்த கயமையை செய்திருக்கிறார். இந்த மாதத்தின் அட்லாஸ் வாலிபராம் இலவசக் கொத்தனார் எழுதிய பரிணாம வளர்ச்சி என்னும் தலைப்பில் இடப்பட்ட பதிவு மொத்தம் 550+ பின்னூட்டங்கள் வாங்கி அமோகமாக போய்க் கொண்டிருக்கும் வேளையில் அதனைக் குலைக்க வேண்டும் என நினைத்து சங்கத்தின் முக்கிய பிரமுகர்களான நாகை சிவா மற்றும் பொன்ஸைத் தூண்டிவிட்டு அப்பதிவை நிறுத்த கோரிக்கை வைத்துள்ளார். அது மட்டுமில்லாது வாரம் ஒரு பதிவு என்ற பழங்கால சட்டதிட்டத்தையும் கையில் எடுத்து அட்லாஸ் வாலிபரை வரும் பின்னூட்டங்களுக்கு சரிவர பதில் போட முடியாமல் அவர் கைகளைக் கட்டி மிரட்டியுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல வலைப்பதிவாளர்கள் தமிழ்மணத்தில் ஒரு புதிய ரெகார்டாக கொத்தனார் ஆயிரம் பின்னூட்டங்கள் வாங்க வேண்டும் என ஆசைப்பட்டதை மீறியும், கொத்தனார் சார்ந்துள்ள கட்சியின் தலைவர் இது தொடர்ந்து நடக்கட்டும் என ஆசீர்வதித்ததையும் மீறியும் இது நடந்திருப்பதாகத் தெரிகிறது . இலவசக் கொத்தனாருக்கு ஏற்பட்டுள்ள இந்த மனவேதனையும் சங்கத்தின் கட்டைப் பஞ்சாயத்து பாரம்பரியமும் சோதனைக்குச் சென்ற காவலர்களை அதிர்ச்சியிலும், பீதியிலும் ஆழ்த்தி இருக்கிறது.

Disclaimer:
It is completely acknowledged with full faith that this post has been inspired by this post.

பி.கு: இப்பதிவினைப் படிக்கும் வலையுலக மேன் மக்கள் வலப்புறத்தில் இருக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, July 19, 2006

VAVASA - வரலாறு - பாகம்-3

வீர வரலாறு பாகம் 3



தங்கவையின் கோரப் பிடியில் சிக்கி இருக்கும் கைப்போங்காவை எப்படிக் காப்பது என்று தேவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது தான் சற்றுத் தூரத்தில் அந்த இளைஞன் நடந்து கொண்டிருந்தான்.சோழனின் அவையில் போருக்காகத் தூது சொல்ல வந்து பூம்புகார்ப் பெண்களின் அழகில் மயங்கி போர் தொடங்கிய பின்னும், சோழ நாட்டுத் தாவணியைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறேன் என்று கதை சொல்லிக் கொண்டு பூம்புகாரில் நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்ட வில்லுப் பாண்டிதான் அவன். மின்னலென ஒரு யுக்தி அநிர்தேவனுக்குப் புலப்பட்டது.

Part 3 Starts ....

வில்லுப்பாண்டி, அநிர்தேவனின் கச்சேரியில் வில்லுப்பாட்டுப் பாட அடிக்கடி வில்லுப்பாண்டியின் வில்லை இரவல் கொடுத்த வகையில் நன்கு அறிமுகமானவன்தான். வில்லுப்பாண்டி போர்க்காலங்களைத்தவிர பெரும்பான்மையான நேரங்களில் கரும்பு வில்லைத்தான் வைத்துக்கொண்டு படம் காட்டுபவனாதலால் அன்றும் அப்படித்தான் கரும்பு வில்லோடு வருவதைக் கண்டு பேரானந்தம் கொண்டான் தேவன். தங்கவை நாச்சியார் என்ற போர் யானை பேருக்குத்தான் யானை ஆனால் அதற்கு தளையுடன் கூடிய வெண்கரும்பு என்றால் கொள்ளைப்பிரியம் என்பதை அறியாதவனா தேவன்? போர்களத்திலே கூட எதிரிகள் தங்கவை நாச்சியாரின் தாக்குதலையும் இக்கரும்பைக்காட்டி கட்டிப்போட்டனர் என்ற வரலாற்றினையும் நன்கு உணர்ந்த தேவன் கணப்பொழுதில் வில்லுப்பாண்டியின் கரும்பு வில்லைப் பிடுங்கி அதன் நாணை அறுத்து தோகையை ஆட்டியவாரே தங்கவை நாச்சியாரை நோக்கி ஓடினான்.

வழக்கமாக தான் நாடிச்செல்லும் கரும்பு தன்னை நாடி வருவதை பார்த்த தங்கவை நாச்சி கைப்போங்காவை மறந்தது. ஏற்கனவே கைபோங்காவை தட்டாமாலை சுற்றிக்கொண்டிருந்த தங்கவை நாச்சி கரும்பைப் பார்த்த கணத்தில் அப்படியே விட்டெரிந்ததில் அந்தரத்தில் மிதந்து ‘ஐயோ காப்பாதுங்க காப்பாதுங்க ‘ போன்ற வேத கோஷங்கள் முழங்க வீரமாக தேவன் கச்சேரி செய்துகொண்டிருந்த தபேலாக்களின் மீது விழுந்தான். கைபோங்காவைத்த தாங்கிய தபேலாக்கள் எழுப்பிய ஒலி போர்ப்பறையை ஒத்திருந்தன.தங்கவை நாச்சியின் கோரப்பிடியில் சிக்கி சின்னாபின்னமாயிருந்த கைபோங்காவை நோக்கி ஓடி வந்த வில்லுப்பாண்டியும் அநிர்தேவனும் கைத்தாங்கலாக திண்ணையில் அமரவைத்து ஆசுவாசப் படுத்திக்கொண்டிருந்தனர்.

வீரம் வெளஞ்ச மண்ணில் கூட வெளஞ்ச மாசரு மாணிக்கம் கலாய் கலாய் கலக்கலக்கலாய் என எப்போதும் கோஷமிட்டுக் கொண்டு குதிரைமீது அமர்ந்து ஓடியோடி வீரர்களுக்கு எதிரிகள் தாக்கினால் எப்படி திரும்பி ஓடுவது அவ்வாறு ஓடிவரும்போது கூட ஓடி வரும் தங்கவை நாச்சியாரின் கரும்புக்காட்டு கவனத்தை எப்படி திருப்புவது என சோளம் தின்றுகொண்டே பயிற்சி அளித்துக்கொண்டுந்த சோழத்தளபதி சிப்பிப்பாரை சிபிவர்மனின் பயிற்சிமிக்க காதுகள் தூரத்திலே ஒலித்த போர்ப்பறையை ஒத்திருந்த ஓசையைக் கேட்டன. உடனே ‘கலாய் கலாய்’ என வீரர்களைப்பார்த்து சத்தமிட்டுக்கொண்டே குதிரையிலிருந்து குதித்தான். ‘காலாய்’ எனக் கேட்ட மாத்திரத்தில் அப்படியே மண்ணில் குப்புற விழுந்து பதுங்கி தலையை மாத்திரம் தூக்கிப் பார்த்த வீரர்களைக் பார்த்து கோபக்கனல் கக்கியவாரே கேட்டான் சிப்பிப்பாரை சிபிவர்மன். ‘எல்லையில் எல்லாம் வெள்ளைக்கொடியை ஏற்றச்சொன்னேனே. ஏற்றினீர்கள் தானே ! பின் எப்படி இந்தப் போர்ப்பறை?? ‘ கேட்கும்போதே அரையில் கட்டியிருந்த வெண்கொடியை தொட்டுப் பார்த்துக்கொண்டான்.’இந்த சத்தம் போர்ப்பரையை ஒத்திருந்தாலும் போர்ப்பறை போல் தோன்றவில்லை தள! ’ என சிப்பாய் சிவனாண்டி நடுங்கியபடியே கூற மண்ணிலிருந்து எழுந்த சிப்பிப்பாரை சிபிவர்மன் படிந்திருந்த மண்ணைத்தட்டிவிட்டவாரே தனது புரவியில் தாவியமர்ந்தான்.

பறையொலி கேட்ட திசையை நோக்கி தனது புரவியை விரட்டிய சிபிவர்மன் அது அநிர்தேவனின் இருப்பிடத்திலிருந்துதான் வந்தது என அறிந்து கொண்டான். வழக்கமாக தேவனின் தபேலக்களை தூரத்தில் பார்த்தாலே காத தூரம் ஓடும் மக்கள் இன்று என்னவோ அவன் கச்சேரி செய்யும் திண்ணையில் திரண்டிருக்கிறார்களே என்ன விசயமாக இருக்கும் என ஐயம் கொண்டான் ! தளபதிகளுக்கேயுரிய வழக்கமான எச்சரிக்கை உணர்வுடன் எதற்கும் இருக்கட்டும் என வெண்கொடியை அரையிலிருந்து எடுத்து கையில் வைத்துக்கொண்டே நெருங்கினான்.

சிப்பிப்பாரை சிபிவர்மன் அங்கே கண்ட காட்சி அவனுள் ஒரு பெரும் திகிலை ஏற்படுத்தியது. அநிர்தேவனும் வில்லுப்பாண்டியும் உடலெல்லாம் ரத்த விளாராய் போர்க்களத்திலிருந்து அப்படியே வந்ததுபோலிருக்கும் ஒருவனுக்கு சேவகம் செய்து கொண்டிருந்தனர், ‘ ஆகா இவ்வீரனுக்கு இவ்வளவு விழுப்புண்களா? எவ்வளவு போர்க்களங்களைச் சந்தித்தானோ? எவ்வளவு தலைகள் உருண்டனவோ ? இவனுக்கே இத்தனை விழுப்புண்களென்றால் இவன் எதிரிகளுக்கு என்ன கதியோ ?? நான் கூட இவ்வாறு களம் கண்டதில்லையே இவனிடமிருந்து எப்படியாவது களம் காண பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும்!’ என மனதிலே உறுதி பூண்டான். சிறுது தைரியத்தை வரவழைத்துகொண்டு கைபோங்காவை நெருங்கினான் சிப்பிப்பாரை சிபிவர்மன்.

ஓரமாக ஒய்யாரமாக நின்று நடக்கும் நிகழ்வுகளை பய பக்தியோடு பார்த்துக்கொண்டிருக்கும் விவசாயியை நெருங்கிய சிபிவர்மன் ‘என்ன நடந்தது ? விழுப்புண்களோடு அமர்ந்திருக்கும் இம்மாவீரன் யார் ? ’ என பிரமிப்பு விலகாமல் கேட்டான்.
- தொடரும்

Thursday, July 13, 2006

பரிணாம வளர்ச்சி

நான் ஏதோ எப்பவாவது ஒரு பதிவு போட்டுட்டு வாழ்க்கையை ஓட்டிக்கிட்டு இருந்தேன், நம்மளை அட்லாஸ் வாலிபராக்கி வாரம் ஒரு பதிவு போடச்சொல்லிப் படுத்தறாங்க இந்தப் பசங்க. இதுல பதிவு எல்லாம் கலாய்க்கற பதிவா இருக்கணுமுன்னு கண்டிஷன் வேற. சரி என்னதான் எழுதலாமுன்னு மண்டையை உடைக்கும் போது நம்ம தெக்கி பதிவு கண்ணுல பட்டது. அவரு எதோ சீரியஸா அந்துமணி, அரைகுறை தூக்கம், பரிணாம வளர்ச்சின்னு எழுதியிருந்தாரு. அதெல்லாம் நமக்கு எங்க புரியுது. அந்த பதிவுல ஒரு பின்னூட்டம் ஒண்ணு போட்டு இருந்தாரு. அதுதான் நம்ம கவனத்தைக் கவர்ந்தது. அதாவது தேவைக்கு ஏத்தா மாதிரி புதிய அங்கங்கள் வளர வாய்ப்பு இருக்கு என்பதை அவரு இப்படி நகைச்சுவையா சொல்லியிருந்தாரு.

"காதோட சேர்ந்து இயற்கையாகவே இருக்கிற மாதிரி ஒரு செல்போன் வைக்க ஒரு "பை," ஹீம், அப்புறம் சாப்பிடமலேயே வேலை பார்ப்பதற்கு ஏற்ற உடம்பு... அல்லது வயித்துக்கு பக்கத்திலேயே அடுத்த வேளை சாப்பாட்டை சேமித்து வைத்துகொள்கிற "பை" :-))) ஹி...ஹி...ஹி... இப்படி எல்லாமே... "

இதை படிச்ச உடனே நமக்கு ஒரு பொறி. இந்த மாதிரி நம்ம மக்களுக்கு எல்லாம் ஒரு சான்ஸ் கிடைச்சா என்ன என்ன தேவைப்படும் அப்படின்னு ஒரு படம் ஓடிச்சு. இன்னைக்கு அதைத்தான் சொல்லப் போறேன்.

கைப்புள்ள : பாவம் மனுஷன் இந்த ஆப்பு வாங்கறத பாத்த நமக்கே பாவமாத்தான் இருக்கு. அதனால இவருக்கு காண்டாமிருகம் மாதிரி நல்ல தடியா ஒரு தோல்தான் வேணும். ஆனா அப்படி ஒரு தோல் கிடைச்சா அவர கலாய்க்கறவங்க பாட்ட நினைச்சா பாவமா இருக்கு.

குமரன் : இவரு வெச்சு மேய்க்கிற வலைப்பூக்கள் எண்ணிக்கையைப் பார்த்தா இவருக்கு ரெண்டு கைகள் போதாது. இவருக்கு இன்னுமொரு பத்து கை கிடைச்சா? நல்லாத்தான் இருக்கும். ஆனா இன்னும் பத்து கை இருக்கேன்னு மேலும் ஒரு நூறு வலைப்பூ ஆரம்பிச்சாருன்னா நம்ம கதி?

கால்கரியார் : இவருக்கு என்னன்னு எனக்கு நல்லா தெரியும். இவரு ஒரு மிருகம், பறவை விட்டு வைக்காம காலெல்லாம் கடிச்சு வைக்கறாரு. அதனால இவருக்கு சைடில் கோழிக்காலாய் வளரச் செய்தால் நாட்டில் இருக்கும் மிருகங்கள் எல்லாம் நம்மை வாழ்த்தும். ஆனா கோழிப்பண்ணைக்காரங்க, உணவு விடுதிக்காரங்க எல்லாம் நம்மை கடுப்படிப்பாங்களே.

பொன்ஸ் : இவங்க ஒரு பதிவு விடாம படிக்கிறதுக்கு இருக்கிற நாலு கண்ணு போதாதே, இன்னும் ஒரு எட்டு கண்ணு குடுப்போமா? அப்போ வலைப்பூ, புஸ்தகமெல்லாம் இன்னும் நிறையா படிக்கலாம். இங்க என்ன பிராப்பளம்? இவங்க போயி தப்பு கண்டுபிடிக்காத பதிவிலெல்லாம் தப்புக் கண்டுபிடிப்பாங்க. அந்த வலைப்பதிவாளர்கள் நம்மளைத் திட்டுவாங்க.

ஜிரா : இவரு விழுந்து வாரரதுக்கு இவருக்கு ஒரு ரப்பர் பாடிதான் வேணும். ஆனா என்ன இவரை நார்மலா பிடிக்கறதே ரொம்ப கஷ்டமா இருக்கு ரப்பர் பாடி வேற கிடைச்சா எங்க போயி பிடிக்கறது?

துளசி டீச்சர் : இவங்களுக்கு உடம்பில் இதுக்கு மேல ஒண்ணும் வேண்டாம். ;) இவங்களுக்கு பிடிச்ச விஷயமோ பயணம். இவங்க எடுக்கற வரலாற்று பாடங்களுக்கு இவங்களுக்குத் தேவை டயம் ட்ராவல் சக்திதான். என்ன ஒரு மாச இந்தியா பயணத்துக்கு 36 பதிவுகள் போட்டாங்க. இவங்க போன நூற்றாண்டு போயிட்டு வந்தா.... தலை சுத்துதே....

நாமக்கல்லார் : இவரு பகலில்லெல்லாம் நார்மல் மனிதனாகவும், சூரியன் மறைந்த பின் ஆந்தை மாதிரி இரவு வாழ் உயிரினமாகவும் மாறினால் 24 மணி நேரமும் இணையத்தில் யாரையாவது கலாய்த்துக் கொண்டே இருக்கலாம். இவருக்கு கண்ணு வேற கரெக்ட்டா நல்ல பெருசா இருக்கு. ஆனா நினைத்துப் பார்த்தால் இப்பவே இப்படித்தானே இருக்கிறார்.

இயற்கை நேசி : இவரு இப்பவே இவ்வளவு விஷயம் சொல்லறாரு. இவருக்கு கூடு விட்டுக் கூடு பாயும் சக்தி கிடைச்சுதுனா வேற வேற மிருகங்களா மாறி இன்னும் சுவாரசியமான தகவல்கள் தருவாரு. ஆனா மறந்து போயி அந்த அமேஸான் தவளையா மாறினாருன்னா அழிஞ்சுல்ல போயிடுவாரு.

எஸ்.கே. : மேல இருக்கறவருக்கு கூடு விட்டுக் கூடு பாயறதுன்னா இவருக்கு க்ளோனிங். அப்போ இவரோட அழகான, அர்த்தமுள்ள பதிவுகள் எல்லாம் நமக்கு இரட்டிப்பா கிடைக்குமே. அதிகமா பின்னூட்டமும் போடுவார். என்ன, இவரு போயி சண்டை போடறவங்க இவரு ஒருத்தரையே சமாளிக்க முடியாம கஷ்டப்படறாங்க. அவங்க கோபம் நம்ம பக்கம் திரும்பும். அதான் பிராப்பளம்.

இப்படி ஒவ்வொருத்தருக்கும் யோசிக்கும் போது நாமே ஆனால்ன்னு நினைக்கறோமே, அதெல்லாம் நினைக்காமலா ஆண்டவன் குடுத்தது போதுமுன்னு இருந்திருப்பான். உலகம் இப்போ இருக்கற மாதிரியே நல்லாத்தான் இருக்கு. ஒண்ணும் மாற வேண்டாம். என்ன சொல்லறீங்க?

ரொம்ப சீரியஸ் முடிவாப் போச்சோ? சரி விடுங்க. உங்களுக்கு ஞாபகத்துக்கு வர வலைப்பதிவர்கள், அரசியல் வியாதிகள், சினிமா நட்சத்திரங்கள், இவங்களுக்கு எல்லாம் என்ன அங்கங்கள் /சக்திகள் வேணுமுன்னு அடிச்சு விளையாடுங்க.

Tuesday, July 11, 2006

வாருங்கள், துபாய் ராஜாவை வாழ்த்துவோம்

வலை உலக மகா ஜனங்களே,

நம்ம சங்கத்து வளைக்குடா சிங்கம்
தெக்கத்தி சீமை கிங்...
பாசத்துல்ல பனிமலை...
எழுச்சியிலே எரிமலை...

போதுமய்யா பில் டப்பு...

ஆங் சொல்ல வந்தது என்னன்னா...

பிளேன் ஏறி ஊருக்கு வந்த 'தங்கத்தோட' வாழ்க்கையிலே தவிர்க்க முடியாத ஒரு சம்பவம் நடந்துப் போச்சாம்... தங்கம் போன் பண்ணிச் சொல்லிச்சுண்ணா...

ஆமா குதூகாலாமா அங்கன நீல லுங்கியும் நீல பனியனும் கருப்பு கண்ணாடியும் போட்டுகிட்டு துபாய் சந்தையிலே வெள்ளிகிழ்மை வெள்ளிகிழமை ஹே.. யாரடி நீ மோகினின்னு.....ஆசையாப் பாடித் திரிஞ்ச அந்தப் பயப் புள்ள வாழ்க்கையிலே நடந்த சம்பவம் என்னான்னா...

வேகாத வெயில்ல வேலைப் பாத்தக் களைப்பு தீர சொந்த மண்ணுக்கு வந்து உறம்மொறையெல்லாம் பார்த்து மகிழ் ஊருக்கு வந்த நம்ம கிங் வந்த வேகத்தில்ல களவுக் கொடுத்துட்டு கண்ணை உருட்டிட்டு நின்னுருக்கார்...

ஆமாங்கோ.. கன்னா பின்னாத் திருட்டு... எக்கச் சக்கத் திருட்டு..

நம்ம துபாய் ராசா இதயம் களவுப் போயிருச்சாம் இல்ல..
பதிலுக்கு நம்மாளும் திருடுனவங்க இதயத்தை லவட்டிட்டுத் தாம் வந்துருக்கார் ( அதைக் கேட்டப் பொறவு கைப்பு விட்ட் பெருமித லுக் இருக்கே அதுப் பத்தி தனிப் பதிவு போடுறோம்ய்யா)

சரி இப்போ அந்த இதயங்கள் இரண்டும் நாளைக்கு இணையப் போகுது....


இணையும் அந்த இதயங்களை வாழ்த்த உங்களை அன்போடு அழைக்கிறோம்...

துபாய் ராஜாவிற்கும் அவர் தம் உள்ளம் கொள்ளைக் கொண்ட அவர் அன்பின் துணைவியாருக்கும் சங்கம் சார்பில் இனிய மண நாள் ( 12-07௨006) வாழ்த்துக்கள்..

வாழ்க வளமுடன்

Friday, July 7, 2006

மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு

வெண்பா எழுதறதுனால நம்மளையும் இலக்கியவியாதி லிஸ்டுல சேர்த்துடறாங்க. அப்படியே இந்த கவுஜ எல்லாம் பிடிக்கும் அப்படின்னு ஒரு முடிவு கட்டிடறாங்க. இல்லைங்க எனக்கு கவுஜ எல்லாம் புரியாதுன்னு சொன்னாலும் விடாம சுட்டிகள் கொடுத்து, இதைப்பாரு அதைப்பாருன்னு ரொம்ப அன்பா அழைப்பாங்க நம்ம ஆளுங்க. நாமளும் சில சமயங்களில் அங்க போயி பார்த்தா, அந்த கவுஜையை விட அதுக்கு படிக்கறவங்க குடுக்குற விளக்கங்கள் இருக்கே. ரொம்ப தமாஷா இருக்கும். இந்த மாதிரி விளக்கங்களுக்கு நாம வெச்ச பேருதான் பின்நவீனத்துவ திறனாய்வு! நம்ம கமலஹாசன் கூட காதலா காதலா படத்தில் இதையே மாடர்ன் ஆர்ட்டுக்கு சொல்லி சிரிப்பு மூட்டுவாரு. சரி விஷயத்திற்கு வருவோம்.

நம்ம நண்பர் ஒருத்தர் ஒரு பெரிய கவிஞருங்க. அவரும் நமக்கு இந்த கவுஜ எழவைக் கத்துக் குடுக்கணுமுன்னு தலைகீழா நின்னு பாக்கறாரு. இப்படித்தான் அன்னிக்கு ஒரு நாள் நான் அவருகிட்ட எதோ பேசும் போது எனக்கு கவுஜன்னா என்ன ஏதுன்னே புரிய மாட்டேங்குது. உடனே நம்ம வாத்தியாரு அதெல்லாம் கஷ்டமே இல்லை. ரொம்ப ஈசியா எழுதலாம் பாருங்க அப்படின்னு சொல்லிட்டு

என்னமோ
ஏதோவாகத்தான்
தோன்றுகின்றன
எனக்கு
கவிதைகள்

அப்படின்னு நான் சொன்னதையே உடைச்சிப் போட்டு இதுதான்யா கவுஜ அப்படின்னாரு. அப்புறம் கட்டவிழ்த்து விடப்பட்ட கற்பனை, விதிகள் மீறிய கட்டமைப்புன்ன்னு என்னன்னவோ சொன்னாரு.

உடனே நானும் சும்மா இருக்காம, இப்போ இது கவுஜ கிடையாது. ஆனா ஒருத்தன் வந்து இதுக்கு பின்நவீனத்துவ விளக்கம் ஒண்ணு குடுத்துட்டு உம்மை ஒரு ரேஞ்சா கொண்டு போவான். அப்போதான்யா இது கவுஜ அப்படின்னேன். சும்மா இருக்காம நானே ஒரு விளக்கம் வேற குடுத்தேன்.

"அந்த கவிஞனை பாருங்க. அவன் தன் காதலியைப் பிரிஞ்சு இருக்கான். அதனால அவன் எண்ணங்கள் முழுசும் அவன் காதலியை பத்தியே இருக்கு. அவளை அவன் நினைத்த மாத்திரத்தில் அவன் மனசுல கவிதை பொங்கி வருது. எழுதறான். எழுதின கவிதையை படிக்கிறான். கவிதையை படிக்கும் போதே அவன் மனசில் காதலியின் உருவமும் நிழலாடுது. அந்த சமயத்தில் அவனுக்கு, தன் காதலியின் அழகின் முன் தான் எழுதிய கவிதை ரொம்ப சாதாரணமா தெரியுது.

அதைத்தான் ரொம்ப அழகா இப்படி சொல்லறான். காதலி, அவளைப் பற்றிய நினைப்பு, தன் பிரிவுத் துயரம் எதுவுமே சொல்லாம வெறும் கவிதையை மட்டும் பேசி இந்த உணர்வை உண்டாக்கினான் பாருங்க. அங்கதான் இவன் நிக்கறான். அவன் வாழ்வை உணர்ந்தவன். அவன் உண்மையில் ஒரு மெய்ஞானி."

இப்படி சொல்லிட்டு இவனுக்கு நீங்க இதை எனக்கு கவுஜ கிளாஸ் எடுக்கும் போது சொன்னதுன்னு தெரியவா போகுது அப்படின்னேன். அவரும் அட நல்ல விளக்கமா இருக்கே. எனக்கே இது தோணலையேன்னாரு. அதுதானே நல்ல கவிதைக்கு அடையாளம்.

இதையே பின்நவீனத்துவ நடையில் சொன்னால் - படைப்பாளியின் எண்ணச் சிதறல்கள் என்ற சிறு வட்டத்திற்குள் சிக்காமல், படிப்பவனின் ஆழ்மன தூண்டுதல்களின் வெளிப்பாடாக அமைந்து, படிக்கும் ஒவ்வொரு முறையும் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் கவிதையே சிறந்த கவிதை. (யப்பா, கண்ணைக் கட்டுதப்பா...)

இந்த மாதிரி நம்ம பதிவுல ஜிரா எழுதின சில பின்னூட்டங்களுக்கு திறனாய்வு செய்யப் போக, அவரு என்னடான்னா குமரன் எழுதினதுக்கும் நம்மளை திறனாய சொல்லிட்டாரு. சரி, இதுக்கு இவ்வளவு மவுசு (அட இங்க அந்த எலிக்குட்டி சோதனையெல்லாம் சொல்லலைப்பா) இருக்குன்னு அப்போதான் தெரிஞ்சது. சரி, மண்டூகங்களுக்கு பின்நவீனத்துவ திறனாய்வு ன்னு ஒரு புது கிளாஸ் ஒண்ணு ஆரம்பிக்க வேண்டியதுதான் என்ற ஐடியாவும் வந்தது. விருப்பப் படுபவர்கள் தனி மடல் அனுப்புங்க. மேலதிக விவரங்கள் தரப்படும்.

"அதான் எனக்குத் தெரியுமே" பார்ட்டிங்க எல்லாம் கீழ்வரும் கவுஜயை திறனாயுங்க பார்க்கலாம்.

பார்த்திரு.காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்!

வருத்தப்படாத 'அட்லாஸ்' வாலிபர்

என்னடா ரெண்டு நாளா வ.வா.ச ஆளுங்க ஒவ்வொருத்தரா வந்து மாறி மாறி பில்டப்பு குடுத்துக்குட்டு இருக்காங்க...எதுக்கு இது என்னாத்துக்கு இதுன்னு யோசிச்சிட்டு இருந்திருப்பீங்க. அதொன்னுமில்லீங்க...இப்ப நீங்க இருக்குறீங்க...நீங்க சொல்ற ஒவ்வொரு விசயத்துக்கும் செய்யற ஒவ்வொரு செயலுக்கும் ஒரு நாலு பேரு மாத்தி மாத்தி ஆப்பு வச்சிட்டே இருக்காங்கன்னு வையுங்க(அட! சும்மா ஒரு பேச்சுக்கு தாங்க). நீங்க என்ன நெனப்பீங்க? கொஞ்சம் நேரம் இந்த ஆப்பையெல்லாம் வேற யாராச்சும் வாங்கிக்க மாட்டாங்களா...நமக்கும் பாத்து ரசிக்க வாய்ப்பு கெடக்காதான்னு யோசிப்பீங்க...சரி தானே? அட! அதே மாதிரி தாங்க நாங்களும் யோசிச்சோம்.






தேமேன்னு தன் வழியில போயிட்டு இருக்குற ஒருத்தரை விருந்தினர், கெஸ்ட்டு அது இதுன்னு ஆசை வார்த்தை காட்டி பசப்பி கூட்டியாந்து, உங்க முன்னாடி வுட்டுடறது...அவரு சொல்றதுக்கெல்லாம் உங்களால எவ்வளவு முடியுமோ அவ்வளவு நீங்க கலாய்க்கிறது...அதப் பாத்து நாங்க ஆனந்தப் படறது. இது தான் எங்க திட்டம்(ஒரு நாலஞ்சு மோரைக்கட்டையையே திரும்பவும் திரும்பவும் பாத்துட்டு இருந்தா உங்களுக்கும் போர் அடிக்கும் இல்லியா?...அதுக்குத் தான் இந்த ஸ்பெசல் ஏற்பாடு). இந்தத் திட்டத்தை ஒவ்வொரு மாசமும் நடைமுறை படுத்தலாம்னு இருக்குறோம். ஒவ்வொரு மாசமும் ஒரு புது வருத்தப்படாத 'அட்லாஸ்' வாலிபர் வருவாரு...சரி வர்றவரு என்ன பண்ணுவாரு? அந்த மாசத்து வருத்தப்படாத 'அட்லாஸ்' வாலிபரா இருக்குறவரு, அந்த மாசம் முழுசும் வாரத்துல ஒரு நாளு, எல்லாருக்கும் புடிக்கிற மாதிரி காமெடி, நையாண்டி, நக்கல், லொள்ளு இதெல்லாம் பண்ணுவாரு...இதெல்லாம் இவரு பண்ணாலும் சங்கத்துப் பக்கம் வர்ற நீங்க என்ன பண்ணனும்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்(அதுக்குத் தானே இம்புட்டு பில்டப்பு எல்லாம் குடுத்து இருக்கோம்!). அதுக்கப்புறம் நீங்க ஆச்சு அவரு ஆச்சு.

எல்லாம் சரி தானுங்கோ...யாருங்கோ அந்த இந்த மாசத்து வருத்தப்படாத 'அட்லாஸ்' வாலிபரு...நம்ம எல்லாத்துக்கும் தெரிஞ்சவரு தானுங்கோ...

...அவரு அறுசுவைத் தமிழன், வெண்பா வேங்கை, புரோட்டா பாவலரு, நம்ம கொத்தனாரு தானுங்கோ!
(வருத்தப்படாத 'அட்லாஸ்' வாலிபர் - பேர் காரணம் கண்டுபிடிச்சு சொல்லுங்க பாப்போம் சாமிங்களா!)

Thursday, July 6, 2006

ஜூலை 7 எச்சரிக்கை !!!






எச்சரிக்கை !

வாலிப வயோதிக அன்பர்களே!!!

ஜூலை 7ம் தேதி யாரும் சங்கத்துப் பக்கம் வரவேண்டாம் என எச்சரிக்கப் படுகிறீர்கள் !!





சொன்னா கேளுங்க!









எச்சரிக்கையை மீறி நுழைபவர்களுக்கு ஏற்படும் விளைவுகளுக்கு சங்கம் வழக்கம்போல வருத்தப்படாது என்பதினை எங்க ‘தல’ கைப்பூ மீது ஆணையாக அழுத்தம் திருத்தமாக சொல்லிக்கொள்கிறோம் !!





Wednesday, July 5, 2006

ஒண்ணியுமே புரியலப்பு


ஹ்ம்ம், நேத்து சாயங்காலம் வய காட்டிலிருந்து வீட்டுக்கு வந்த விவசாயி முதல்ல ஒரு கேள்வி குறி படத்த போட்டுட்டு போய்டாரு,(சோத்தாங்கை பக்கம் பாருங்க, சிட்டுகுருவி கணக்கா குதிச்சு விளையாடுது) அப்புறமா சங்கத்து பக்கம் வந்த பாண்டி "ஜூலை 7ம் தேதி இந்த இடத்தில் ...... ஆங் சொல்ல மாட்டோம்ல, சொல்ல மாட்டோம்ல காத்திருங்கப்பு"அப்படின்னு காத்திருக்க சொல்லிட்டு அவரும் போய்ட்டாரு.

என்னாத்த பண்ண போறாங்களோன்னு, நைட்டு ஃபுல்லா யோசிச்சதுல ஒண்ணியுமே புரியலப்பு. ஒரு வழியா இம்சை படம் வரப்போகுது, இந்த நேரத்துல என்னய்யா புதுசா? ஏற்கனவே வாங்கின ஆப்பு போதாதுன்னு புதுசா என்னப்பு? தாங்குமா ஒடம்பு? இப்படி வாயில விரல கடிச்சுகிட்டு இங்கன கிடக்கேன் சங்கத்து மக்கள் சொல்லவே மாட்டேன்னு அடம் புடிக்கிறாய்ங்க.


ஏம்பு படிக்கிற உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சீக்கிரமா சொல்லுங்க ஒரு நாள்தேன் இருக்கு...

Tuesday, July 4, 2006

இரண்டு மகிழ்ச்சியான செய்திகள்



சங்கத்துல இன்னிக்கு ரெண்டு ஸ்பெஷல் நியூஸ்!


செய்தி 1:

இத்தினி நாளா கேள்வி கேப்பாரு இல்லாம இஷ்டத்துக்கு பேச்சுலரா சுத்திட்டிருந்த நம்ம சங்கத்து உறுப்பினர் துபாய் ராசா இனிமே பேச்சு இலரா ஆகப் போறாராம். அவரே அழைப்பிதழையும் அனுப்பியிருக்கார். சங்கத்து சார்பா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம்.

செய்தி 2:


சங்கத்தின் போர்வாள், கைப்புள்ளையின் கை என்றெல்லாம் அழைக்கப்படும்
நம்ம சென்னைக் கச்சேரிக்காரர் தேவ் அவர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அட! ஆமாங்க! நேத்து காலையில கோவை வந்துட்ட அவரு சாயங்கலாமா நமக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புனாருங்க! ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாகி இருக்கிறாருங்கோவ்.



சங்கத்து உறுப்பினர்கள் சார்பா அவருக்கும் வாழ்த்துக்களை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தம்பி பாண்டி அவர்கள் இரண்டு சந்தோஷ சங்கதிகளுக்காகவும் சேர்த்து உடனடியாக ஒரு பெரிய அளவுல பார்ட்டிக்கு ஏற்பாடு செய்யணும்னு தலை கைப்புள்ளை ஃபேக்ஸ் அனுப்பி இருக்காரு!

அப்புறம் என்ன! கொண்டாடிட வேண்டியதுதான!

Saturday, July 1, 2006

எருமை கன்னுக்குட்டி

கண்ணுங்களா! உங்கள்ல யார்னா 'மந்திரி குமாரி' படத்துல வர்ற 'எருமை கன்னுக்குட்டி'ங்கிற பாட்டைக் கேட்டிருக்கீங்களா? முந்தா நேத்து காலைல எந்திரிச்சதுலேருந்து இந்த பாட்டு திடீர்னு உதட்டுல வந்து எக்கச்சக்கமா உக்காந்துக்குச்சு. எதனாலன்னு தெரியலை. ஆனா பாட்டோட முதல் வரியான 'எருமை கன்னுக்குட்டி என்னெருமை கன்னுக்குட்டி'யைத் தவிர வேறு எதுவுமே நெனப்பு வரலைமா. என்ன தான் சொல்லு கண்ணு... எருமை கன்னுக்குட்டியும் பாக்கறதுக்கு அப்பாவியா க்யூட்டா சப்பியாத்(சரியா படிங்கய்யா - அது chubby) தான் இருக்கும். பசு கன்னுக்குட்டியைத் தூக்கி கொஞ்ச நம்ம பசுநேசன் உட்பட பல பேரு கெடச்ச மாதிரி, எருமை கன்னுக்குட்டிக்குன்னு யாரும் கெடக்கலை - இந்த பாட்டைப் படத்துல பாடிக்கிட்டு வர்ற அந்த சதரவட்டை பையனைத் தவிர. நான் கூட ரொம்ப நாளா ஒரு பெட் அனிமல்ஸ் வளக்கணுமின்னு ஆஸ் பட்டுக்குனுருக்கேன். பாப்போம். இந்த பாட்டைப் பாடுற வாய்ப்பு எனக்கு எப்பயாச்சும் வாய்க்குதான்னு பாப்போம்.

சில சமயம் இத மாதிரி எதாச்சும் பாட்டோட வரிகளோ, ஒரு படத்தோட பேரோ யோசிச்சி யோசிச்சி பார்த்தும், நெனப்புக்கு வராம ரெண்டு நாளைக்கு ஒரே மண்டை காய்ச்சலா இருக்கும். இருக்குற வேலையெல்லாம் போட்டுட்டு இதே வேலையாத் திரிய வைக்கும். நாம நெனச்ச விசயம், சம்மந்தமே இல்லாம வேற வேலையா இருக்கும் போது நியாபகம் வரும். ஆனா எருமை கன்னுக்குட்டி கேஸ்ல ரெண்டு நாளா முயற்சி பண்ணி பார்த்தும் தோல்வி தான். ரொம்ப கஷ்டப் பட்டு யோசிச்சதுல, படத்துல எம்.ஜி.ஆர் பேரு வீரமோகன்ங்கிறதும், ஆன்ட்டி-ஹீரோவா(Aunty இல்லப்பா) வர்றவரு பேரு எஸ்.ஏ.நடராஜன்ங்கிறதும், ஹீரோயின் பேரு மாதுரிதேவிங்கிறதும், 'அரண்மனை நாயே அடக்கடா வாயை'ங்கிற கலைஞர் வசனமும், தீபன் சக்கரவர்த்தி அவுங்க நைனா திருச்சி லோகநாதன் பாடுற 'வாராய் நீ வாராய்' பாட்டுல வர்ற "முடிவில்லா மோனநிலையை நீ மலைமுடியில் காணுவாய் வாராய் வாராய்"ங்கிற வரியும், 'வாத்தியார்' அடிபட்டு கெடக்கும் போது ஜிம்மி மேலே ஒக்காந்துக்கிட்டு ஒரு 'பியூட்டிஃபுல் பாய்' எருமை கன்னுக்குட்டி...ன்னு பாடிக்கிட்டு வர்ற சிச்சுவேசனும் நியாபகம் வந்துச்சு.

ஆனா இதெல்லாம் நெனப்பு வந்து என்ன புண்ணியம்? 'எருமை கன்னுக்குட்டி...' பாட்டு மட்டும் தேய்ஞ்ச ரெக்கார்டு மாதிரி அதே எடத்துல நிக்குது. அதுக்கு மேலே ஒரு வார்த்தை கூட நெனப்பு வரலை. ஆகவே மகாஜனங்களே! இந்த பாட்டைக் கேட்டவங்களும் பாடல் வரிகள் தெரிஞ்சவங்களும் என் மண்டை காய்ச்சலுக்கு மருந்தாய் அவுங்கவுங்க எருமை கன்னுக்குட்டியைச் சங்கத்துப் பக்கம் மேய்ச்சலுக்கு ஓட்டிக்கிட்டு வாங்க.

அப்படி ஓட்டிக்கிட்டு வந்தீங்கன்னா இன்னிக்கில்லன்னாலும் என்னிக்காச்சும் ஒரு நாள், எளிய எருமை கன்றுகளும், அழகிய ஆர்மடில்லோக்களும், பிளிறும் யானை கன்றுகளும், கூவும் கூக்காபுர்ராக்களும் ஒரே தட்டில் ஒன்றாக, சப்பளங்கால் போட்டு சமத்தாச் சாப்புடும் காட்சியைக் காணும் அரிய வாய்ப்பைப் பெறலாம். அதுனால "எருமை கன்னுக்குட்டி என்னெருமை கன்னுக்குட்டி..."இதுக்கடுத்த வரி என்னான்னு சொல்லுங்க, ஒங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

(பி.கு : சொல்ல மறந்துட்டேனே! நம்ம 'கன்னிவெடி' சித்தர் பிரிகேடியர். நாகை சிவா வளர்க்கும் பெட் ஆர்மடில்லோவின்(Armadillo) பேரு டி.ஏ.மதுரம். காரணம் கேக்காதீங்க... சொல்லமாட்டேன்! யாரு கையிலயும் சொல்ல மாட்டேன்னு காட் ப்ராமிஸ் போட்டுருக்கேன். பி.பி.சியில் பிஸ்கோத்து சாப்பிட்டு சி.என்.என்னில் சைனா டீ குடிக்கும் சங்கத்தின் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் கீதா மேடத்தின் அன்பில் சங்கீத பயிற்சி பெறும் அந்த பேறு பெற்ற கூக்காபுர்ராவின்(Kookaburra)பேரு மகாலிங்கம்)

(ஐயோ! இன்னொரு பி.கு.வையும் மறந்துட்டேனே: "வீ வாண்ட் நாமக்கல்லார்"னு கோஷம் எழுப்பற தளபதி அவர்களின் பல நூறு கோடி ரசிகர்களுக்காக - இன்னிக்குக் காலையில சங்கத்துக்கு வந்த பேக்ஸ் செய்தி. அதுல "அருள்மிகு மலையாள பகவதி துணை. எண்டே ஒரே தலைவி கண்விண்மீனிற்கும் விரல்விளையாட்டு வித்தகருக்கும் தற்சமயம் சமாதானம் ஏற்படும் சூழல் நிலவிக் கொண்டிருப்பதால், அது ஏற்படாமல் தடுக்க தற்போது ரத, கஜப் படைகளையும் ஏவிப் பொருதிக் கொண்டிருக்கிறேன். இப்பணியைச் செவ்வனே முடித்துவிட்டு சங்கப் பணிகளை ஆற்ற இதோ வந்து கொண்டே இருக்கிறேன். இப்படிக்கு அ.உ.க.வி.மீ.ர.ம.தலைவர் சிபி 'ஷாஜி'. ஆலப்புழா மாவட்டம்"ன்னு போட்டுருந்துச்சுப்பா.)

(சாரி...சாரி...லாஸ்ட்டா இன்னும் ஒரே ஒரு பி.கு: கூக்காபுர்ராவோட இனிஷியலைச் சொல்ல மறந்துட்டேன் - "டி.ஆர்".)

இப்பாடலின் வரிகளை சிவஞானம்ஜி அவர்களின் "வ.வா.சங்கம் தேடும் பாடல்" எனும் பதிவில் காணலாம்.