Thursday, May 31, 2007

Star கொத்ஸ்-ஆ.விகடனில்

*கொத்தனாரே,
மறைச்சு மறைச்சு பதிவு போடுறதும், பின்னூட்ட பொட்டிய மூடி வெச்சுடறதும் சரியா இல்லே. இதை அகில உலக பின்னூட்ட அமைப்பு கண்டனம் தெரிவிக்கிறது.

சில விஷயங்கள் சில நேரத்துல சரியா ஒத்து போகும். அது இந்த வாரம் நட்சத்திர கொத்தனாருக்கு அப்படிதாங்க செட் ஆகியிருக்கு. ஆனந்த விகடன் படிச்ச நம்ம சிங்கங்கள் கொதிச்சு போய் இருக்காங்க. இப்படியா ஆனந்த விகடனில் மதன் எழுதுவாரு? அதெப்படி கொத்தனாரு நட்சத்திரம் ஆனது அவருக்கு தெரிஞ்சது. இது ஒரு மர்மம். பினாத்தலாரை அவர் பதிவுக்குள் இழுக்க, பினாத்தலார் அவரோட 1024 பதிவுல லக்கிய இழுக்க. லக்கி அவரோட பதிவுல...... அட வுடுங்கப்பா, இப்பவே கண்ண கட்டுது. அவிழாத வேட்டிகள் சே சே அவிழாத முடிச்சுகள் நிறைய இருக்கும் போல.

நன்றி:ஆ.வி


மர்மங்கள் நிறைந்த பதிவாகவும் அவர் போடுறதால தமிழ்மணத்துக்கு காத்து கருப்பு அடிச்சு இருக்கு. தமிழ்மணத்துக்கு சங்கத்துக்காரங்க தாயத்து கட்ட முடியாது. ஆனா வ.வா.சங்கத்துக்கு தாயத்து கட்டலாம்னு யோசிச்சு பார்த்த போதுதான் ......

மக்களே,

அடுத்த மாசம் அட்லாஸ் வாலிபர் யாரா இருக்கும்னு யாராவது சொன்னீங்கனா அவுங்களுக்கு 1000 பொற் காசுகள் கொண்ட JPG தனிமடலில் அனுப்பி வைக்கப்படும்.

Wednesday, May 30, 2007

கவுஜையா வாழுங்கடே!!

கவுஜை தொகுப்பு போடுவது எப்படி? - பாகம் 3

தலைப்புதான் ஒரு கவுஜை தொகுப்புக்கு தலை மாதிரி. எப்படி பதிவுக்கு தலைப்பைப் பார்த்து கூட்டம் கூடுதோ அதே மாதிரிதான் கவுஜை தொகுப்புக்கும் பேரு வச்சு கூட்டத்தைக் கூட்டணும். உதாரணமா காதல் கவுஜைன்னு வைங்க.

நீயாகிய நான், தேவதையின் சிறகுகள், காதலால் கசிந்துருகி, வியர்க்காத விழிகள், அழகுக்கு அப்பால், அன்பான ராட்சசி, மனதில் பூத்த ரோசா, உன்னோடுதான், என்னவளே, முத்தத்தின் சத்தம் என்று என்ன எழவு பெயர் வேண்டுமானாலும் காதல் கவிதைக்கு வைக்கலாம்.

சமூகக் கோபமென்றாலும் அப்படித்தான். புரட்சி தீ, யாரிடம் இருக்கிறது தோட்டா?, இனியொரு விதி செய், அவனுக்கேற்ற அரிவாள், வெட்டியெறி,அழித்து விடு, கனவுகள் மற, காட்சிப் பிழை என்று ஏதாவது பெயர் வைக்கலாம்.

ஆனால் நவீனக் கவுஜை என்றால் கொஞ்சம் யோசிக்கணும்.
வாசகனைத் திடுக்கிட வைக்க வேண்டும் தலைப்பு - கவுஜை எப்படியும் அதைச் செய்யும் என்பது வேறு விசயம்.

'பிட்ஸா கடையில் பீத்தோவன்' என்றொரு தலைப்பைப் பாருங்கள். தமிழ் வாசகனுக்கு அந்நியமானவை பிட்ஸாவும், பீத்தோவனும். நவீனக் கவுஜையின் நோக்கம் கெடாதவகையில் வாசகனை அந்நியப்படுத்தும் இது போன்ற தலைப்புகளை நிறைய யோசியுங்கள்.
'முசோலினியின் மூக்குக் கண்ணாடியும் மூன்றாம் வகுப்பு கணக்கு புத்தகமும்' இப்படி தலைப்பு வைத்தாலும் சரிதான். இந்த ரெண்டுக்கும் என்ன எழவு சம்பந்தம் இருக்கும் என்ற யோசனையிலேயே நுட்ப வாசகன் நூலாகப் போய்விடுவான். அதனால் தலைப்பை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். 'அக்குளில் முளைத்த ஆலமரம்' கூட நல்ல தலைப்புதான்.
'அடர்கானகத்தில் நீலி'யும் நல்ல தலைப்புதான். ஆனாலும் இன்னமும் செறிவாக, 'அடர்கானகமும் அடங்காத நீலியும்' னு பேரு வச்சுப்பாருங்க. நவீன கவுஜைத்தலைப்புக்கு இந்த 'ம்'காரம் ரொம்ப முக்கியம். 'அவன் அவள்'னு வச்சா அது சாதாரணம். 'அவனும் அவளும்'னு வச்சாத்தான் அது நவீனம். இந்த அடிப்படையை ஞாபகத்துல வச்சுக்கோங்க.
'கவுஜையும் கண்றாவியும்'னு நீங்க தலைப்பு வச்சு என் தலையை உருட்டாதீங்க. சொல்லிட்டேன்.

சரி. ஒருவகையா தலைப்பையும் வச்சாச்சு. இனி????..
வேறென்ன படிக்கட்டுதான். - அதாங்க கவுஜை
அதைத்தான் எப்படி வேணும்னா எழுதிடலாமே?

ஆசிப் மீரான்
அட்லாஸ் வாலிபர்
தபால் பெட்டி எண்
துபாய்

இவ்வளவுதாங்க கவுஜை. எவ்வளவு 'ஈஜி'யா இருக்குன்னு பாத்துக்கிடுங்க.
அதனாலதான் அதைக் கடைசியில எழுதிக்கலாம்னு சொன்னேன்.
இன்னும் வேணும்னா கவிமடத்துல இதுக்கான ஆதாரக் குறிப்புகள் கிடைக்கும்

அதிக பட்சமாக 40 பக்கம்தான் கவுஜைத் தொகுப்பு. அளவுக்கு மிஞ்சினா அமிர்தம் நஞ்சாகுமோ ஆகாதோ தெரியாது;ஆனா கவுஜைத் தொகுப்பு இந்த அளவைத்தாண்டுனா நஞ்சுதான். ('தொகுப்பு போடுறதே அப்படித்தானவே?'ன்னு கேட்டா என்னத்த்ச் சொல்ல?)


முதல் பக்கத்தில் வழக்கமா அம்மாவுக்கு, அப்பாவுக்கு, என் தமிழாசிரியருக்கு(பாவம் அவர் என்னய்யா பாவம் செஞ்சாரு?!!) அப்படின்னு காட்டிக் கொடுத்துடுவாங்க. அப்படி இல்லாம வித்தியாசமா 'இதைப்படித்துத் தொலைக்கும் அவஸ்தைக்கு ஆளாகும் என் வாசக அன்பர்களுக்கு' ன்னு அர்ப்பணம் செஞ்சுடுங்க.

சரி. முதல் பக்கம் முடிஞ்சது. அடுத்த பக்கத்துல அச்சாபீஸ் பேரு விலாசம் எல்லாம் நீங்க சொல்லாம அவங்களே போட்டுடுவாங்க. அதனால பக்கம் ரெண்டும் நிறைஞ்சு போச்சு. மூணாவது பக்கம் ஏதாவது சின்னதா ஒரு கோட்டோவியம் போடுங்க. அதுக்குக் கீழே கவுஜையப் பத்தி ஏதாவது பெரிய மனுசன் எப்பவாவது நிதானத்துல இருக்கும்போது எழுதுன

'உலகப்பந்தை
உருட்டி ஆடும்
உன்னத மொழிதான்
கவுஜை'

இந்த மாதிரி விசயம் ஏதாவது எங்கயாவது கிடைக்கும். அதைப் போட்டு வச்சுட்டா பக்கம் மூணுக்கு 'மேட்டர்' கிடைச்சாச்சு.

இனி அணிந்துரை வாங்குனது இருக்கும். நிறைய இடைவெளி விட்டு எழுதுனா ஒரு நாலஞ்சு பக்கம் தேறிடும். அட நீளமான அணிந்துரைன்னா நல்ல கவுஜைதான் போலன்னு மக்கள் நெனச்சுப்பாங்க. அது முடிஞ்சதும் இந்தக் கவுஜைக்கெல்லாம் சொந்தக்காரனான உங்களைப் பத்தி உங்களுக்குக் கவுஜை எழுதணும்கற கெட்ட புத்தி எப்பலேருந்து வந்துச்சுங்குறதப் பத்தியெல்லாம் நீங்கதான சொல்லியாவணும். அதனால என்னுரைன்னு ஒரு பகுதி போட்டு ஒரு நாலஞ்சு பக்கம் ஓட்டுங்க. பார்த்தீங்களா? கவுஜைங்குற கர்மம் இல்லாமலேயே 10- 12 பக்கம் ஓட்டியாச்சு. அப்படியும் 'இன்னும் 28 பக்கம் இருக்குதே; இதுக்குக் கொறஞ்சது 50 கவுஜையாவது எழுதணுமே'ன்னு கவலைப்படாதீங்க.

பக்கத்துக்கு ஒரு கவுஜை போதும். அதுவும் எண்ணி நாலு வரி - அதிக பட்சமா 5 வரி போதும். ஆனா அதை அப்படியே சும்மா போடக் கூடாது. இடது மூலையில் குட்டியா ஒரு கவுஜை . மேல் மூலையில நெஜம்மான ஒரு குட்டியோட படம். என்ன எழவை எழுதியிருக்கீங்கங்குறதப் பொறுத்து படத்தை 'ஜெலக்ட்' பண்ணனும். உங்க வாஸ்துப்படி படத்தை எங்க வேணும்னாலும் போடலாம். வாசிக்குறவன் வாஸ்துப்படி அவனுக்கு நேரம் சரியில்லாம போறதுக்குப் பரிகாரமத்தை அவன்தான் கண்டுபுடிச்சாகணும்

உன் மைவிழி
ஓரத்தில்
துளிர்த்து நிற்கிறது
எனக்கான
கண்ணீர்த்துளி


இப்படி ஒரு கவுஜை (தூ!! இதெல்லாம் கவுஜையா?ன்னு கோபப்பட்டா எப்படி?) இருக்குன்னு வச்சுக்கலாம். இந்தக் கவுஜையை கீழே ஓரமா போட்டுட்டு மேலே பெருசா ஒரு கண்ணுலேருந்து ஒரு துளீ நீர் சொட்டுறா மாதிரி ஒரு படத்தைப் போட்டுட்டா போதும். படிச்சுட்டு அழப்போறவனை மனசுல வச்சுக்கிட்டு நாம செஞ்ச மாதிரி இருந்துட்டு போகட்டுமே!!

இப்படியே ஒரு 15 கவுஜை எழுதுங்க.
அது கூடவா தெரியாது??

வருத்தப்படாத வாலிபன்
வருத்தப்பட்டான்
கல்யாணம்


அப்படின்னு ஒரு சங்கூ எழுதுங்க. எவனுக்கோ சங்கூதுறதைச் சொல்றதுனால இது ஹைக்கூல சங்கூ பிரிவுல வரும்.(கவுஜைல என்னென்ன பிரிவெல்லாம் இருக்கு பாருங்க) இதுக்கு ஒரு அழகான படம் தேர்ந்தெடுக்கலாம். ஆடு தலைல மஞ்சள் தண்ணி தெளிக்குற மாதிரி ஒரு படம் போட்டா மஜாவா இருக்காது?

முக்கியமான விசயம் ஒண்ணு இருக்கு. கவுஜை பொஸ்தவுத்துல என்னதான் குறும்பா, வெறும்பான்னு எழுதிக் குவிச்சாலும் நீள் கவுஜைன்னு ஒண்ணு கட்டாயம் இருக்கணும். அதை ஒரு ரெண்டு பக்கம் ஓட்டிக்கலாம். நீள்கவுஜை எப்படி எழுதணுமா?
என்னய்யா வெளங்காத ஆளா இருக்கீங்க? நீள்கவுஜைதான் இருக்குறதுலேயே ரொம்ப சுலபம்.

காலை எழுந்தேன்
கை விலக்கி நெட்டி முறித்தேன்
எதிர் சுவர்
காலண்டரில்
தேதி மே 29 காட்டியது
ஓடிப்போய் விட்டது ஒருநாள்
மெல்ல எழுந்து
கிழிக்கிறேன்
ஓடிப்போன ஒரு நாளை.

அடுத்த நாளுக்கான ஆயத்தமாய்
நடக்கிறேன் மெதுவாய்
பற்பசை பிதுக்கி
விரலில் வைத்து
தேய்க்கிறேன் பல்லை..


இப்படியே ராத்திரி படுக்குறவரைக்கும் எதையாவது எழுதித் தொலைச்சுட்டா நீள்கவுஜை வந்துடும். இதுல ஒரு பெரிய அனுகூலம் என்னன்னா காலைக் கடன் கழிச்சதையெல்லாம் எழுதுறீங்கன்னு வச்சுக்கோங்க. ஒண்ணுக்கு போனா முன் நவீனத்துவம், ரெண்டுக்கு போனா பின்நவீனத்துவம் ரெண்டையும் ஒரே நேரத்துல தொட்டுட்டீங்கன்னு அர்த்தம்.

ஆனா ஒரு விசயத்துல கவனமா இருக்கணும். இப்படி நாள்கணக்குல கவுஜை எழுதுனாலும் கடைசி ரெண்டு மூணு வரில வாசகன் நெஞ்சை நக்குறமாதிரி நாலு வரி வச்சிடுங்க. அப்பதான் அவன் புளகாங்கிதமடைஞ்சு கொஞ்சமா உங்களைத் திட்டுவான்

............
உறங்கச் சொல்லுமுன் பார்க்கிறேன்
நாட்காட்டியை
அடுத்த நாளுக்கான
நம்பிக்கையை தருகிறது எனக்கு


இந்த மாதிரி 'நம்பிக்கை' என்னமோ காலண்டர்ல செஞ்சு சுவத்துல மாட்டியிருக்குற மாதிரி ஏதாவது உளறினாக் கூட போதும். 'சே!! நம்பிக்கை உணர்ச்சியை எப்படி அள்ளித் தெளிச்சிருக்கான் கவுஞன்?'னு வெவரம் தெரியாத நாலு பேரு சந்தோசப்படாமலா போயிடப் போறான்?

இப்படியே ஓட்டிட்டா 30 பக்கம் முடிஞ்சிடும். மீதி 10 பக்கம் என்ன பண்றது?
இவ்வளவு கஷ்டப்பட்டு கவுஜை பொஸ்தவம் போட்டு இருக்கிற நமக்கா இதுக்கு விடை தெரியாது?

மீதி 10 பக்கத்தையும் வெள்ளைத்தாளா விட்டுட்டு குறிப்புக்காகன்னு போட்டுடலாம்.
யாருக்குக் குறிப்பு, ஏன் குறிப்பு, இந்த எழவுக்கவிதைக்கெல்லாம் எதுக்கு குறிப்புன்னு யாரும் கேட்கமாட்டாங்க. 'என்ன உலகமகா காவியமா எழுதியிருக்கோம் குறிப்பு எழுதுறதுக்கு?' ன்னு சுயமா உங்களை நீங்களே கேள்வில்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா, கவுஞன் தன் கவுஜைகள் மூலமா மத்தவங்களைக் கேள்வி கேட்டு சாகடிக்கலாமே தவிர சுயமா தன்னைத்தானே
கேள்வி கேட்பது முறையன்று.

பாருங்க இப்போ.
மொத்தம் 40 பக்க கவுஜை தொகுப்புக்கு வேண்டியதெல்லாம்
75 வரிதான் கவுஜையே.
ஒரு வானம் பார்த்த படம்
ஒரு 'அனாமத்து' அணிந்துரை
'ஏண்டா எழுதுனோம்'னு கவுஞனோட சுயஉரை
குறிப்புக்காக வெத்து தாள்.

பாருங்க கவுஜை தொகுப்பு போடுறது எவ்வளவு சுலபம்!!
நீங்களும் கவுஜை தொகுப்பு போட்டு கவுஜையா வாழுங்கடே!!

Tuesday, May 29, 2007

என்ன தலைப்பு வைக்கப் போறீங்கடே?!

கவுஜை தொகுப்பு வெளியிடுவது எப்படி? - பாகம் 2


கவுஜைத் தொகுப்புக்கான முதல் கட்டத்துல தேர்ந்துட்டீங்க. இனி அடுத்த கட்டம். இருங்க இருங்க..இதுதான் எனக்குப் பிடிக்காது. அடுத்த கட்டம்னு சொன்ன உடனேயே கட்டம் கட்டி கவுஜை எழுத ஆரம்பிச்சட்டா எப்படி? கொஞ்சம் பொறுமையா இருங்க.

அதை விட முக்கியமானதா இன்னொண்ணு இருக்கு. அதுதான் அணிந்துரை எழுதி வாங்குறது. 'கவுஜையே எழுதலை. எப்படிய்யா அணிந்துரை வாங்குறது?'ன்னு குழப்பமா இருக்கா? இன்னும் ஹைதர் அலி காலம் தாண்டி மேலே வரவே இல்ல போலிருக்குது நீங்க. கவுஜை இருக்கோ இல்லியோ அணிந்துரை ரொம்ப முக்கியம்யா. கவுஜையே இல்லாம பொஸ்தவம் போட்டாக் கூட மக்கள் ஏத்துக்குவாங்க. அணிந்துரை இல்லேன்னா ஒத்துக்க மாட்டாங்க. இதெல்லாம் பால பாடம்.

அதனால முதல்ல அதை சரி பண்ணிடுங்க. அதை எழுதுறது உங்க நண்பரா இருந்தா நல்லது. அப்பத்தான் உங்களைப் பத்தி நாலு வார்த்தை நல்லதாச் சொல்லுவாரு. (வேற எவனும் சொல்ல மாட்டான்னு உங்களுக்கே தெரிஞ்சிருக்கும்) ஏன்னா, நாளைக்கு அவருக்கும் இதே மாதிரி கோட்டிக்கார ஆசை வந்து கவுஜை பொஸ்தவம் போடுறாருன்னு வைங்க. அவருக்கு எவன் எழுதிக் கொடுப்பான்? அதனால, நமக்கு நாமேதான் இருக்கோம்னு ஆதுதல் சொல்லி அவர் கிட்ட அணிந்துரை வாங்கிடுங்க.

'சின்னப்பையனா இருக்கும்போதே ரொம்ப யோசனையா திரிவான். எல்லாரும் வானம் சிவப்பா இருக்குன்னு சொன்னா யாரு அந்த மை பாட்டிலை தட்டி விட்டதுன்னு அப்பவே சொல்லுவான். விளையும் பயிர் முளையிலேயே (விளங்காமப் போகும்னு) தெரியும்னு சொல்லுறதை இப்ப நாம் இந்த கவிதை புத்தகம் மூலமா பார்க்கலாம்' குற மாதிரி ஏதாவது நாலு பக்கத்துக்கு எழுதுனா போதும். அதுலேருந்து ஏதாவது நாலு வார்த்தையை எடுத்து 'வானத்தை வசப்படுத்தும் வசீகரப் பார்வைக்குச் சொந்தக்காரன்' அப்படின்னு ஒரு வார்த்தையை மட்டும் புடிச்சி தொங்கிக்கிட்டு அப்படியே அதை உங்க புகைப்படத்துக்குக் கீழே போட்டுடுங்க. உங்க படம் ஏற்கெனவே வானத்தை முறைச்சு பார்க்குற மாதிரி எடுத்து வச்சிருக்கீங்க. கீழே அப்படியே "'வானத்தை வசப்படுத்தும் வசீகரப் பார்வைக்குச் சொந்தக்காரன்' போட்டுடுங்க. சபாஷ்!! பின் பக்கத்து அட்டைக்கான வேலை முடிஞ்சிடுச்சு. ஒரு கவுஜை எப்படி ஆரம்பிக்குதோ எப்படி முடியுதோன்னு யாருக்கும் ஒரு எழவும் தெரியாது. ஆனா, ஒரு கவுஜை தொகுப்பு அதனோட பின்பக்கத்துலேருந்துதான் ஆரம்பிக்குதுன்னு இப்பவாவது புரிஞ்சுக்குங்க.

அணிந்துரைக்கு யாராவது பெரிய ஆளுதான் வேணும்னாலும் பிரச்னையேயில்லை. 'சோத்தைப் போட்டா கூரைக்கு மேல ஆயிரம் காக்கா'ன்னு ஊருல சொல்லுவாங்க. அதே மாதிரி 500 ருபாயிலிருந்து 5000 ரூபாய் வரைக்கும் செலவழிக்கத் தயாராயிருந்தா கவிதைக்கான குறுநில மன்னரோ, பேட்டை தாதாவோ அல்லது பேரரசோ அணிந்துரை எழுதித் தருவாங்க. அதையும் வேணும்னா செய்யலாம். சிலர் கிட்ட அணிந்துரை எழுதும்போது கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. 'இப்படித்தான் வெள்ளைக்காரனை விரட்ட நான் ஒரு கவிதை எழுதினேன்னு சொல்லி அவரோட கவிதையை மெல்லமா உங்க அணிந்துரையில் திணிக்குறதுக்குன்னு ஒரு கூட்டம் அலையும். அதுங்க கிட்ட மாட்டிக்காம இருக்குறது நல்லது. இல்லேன்னா நாப்பது பக்க பொஸ்தவுத்துல 30 பக்கம் அணிந்துரை எழுதி அதுல 28 பக்கத்துக்கு அவங்க கவிதையையே சிலாகிச்சு, "இப்படியெல்லாம் இருக்குற என் கவிதையோட கூறுகளை இந்தக் கவிஞனிடமும் காண்கிறேன்'னு கூறுகெட்டத்தனமா எதையாவது எழுதித் தருவாங்க. காசு கொடுத்து இப்படியொரு அவஸ்தை வேணுமான்னு முடிவு பண்ணிக்கோங்கய்யா. "எப்படியும் தண்டச்செலவு. எதுக்கு இதுவும்" னுதான் சுலப ஆலோசனையா உங்க நண்பர் கிட்ட அணிந்துரைன்னு சொன்னேன். காசு இருந்துதுன்னா யாரு கிட்ட வேணும்னா எழுதிக்கலாம்.அது ஒரு பிரச்னையே கிடையாது.

ஆக அணிந்துரை பின்பக்க அட்டைப்படம் எல்லாம் முடிச்சாச்சு. இனி முக்கியமான விசயம்.
பற்க்காதீங்கய்யா. கவுஜை எழுத இன்னும் நேரம் இருக்கு. முதல் பக்கம் என்ன செய்யணும்னு தீர்மானம் செய்ய வேணாமா?

இதுக்கு இணையத்துல இருந்து எதையாவது சுட்டு போட்டுக்கலாம் - கொஞ்சம் வண்ண மயமா இருந்தா நல்லது. காதல் கவுஜைன்னா ரெண்டு இதயத்தை தமிழ்நாடு நெடுஞ்சாலையில் விபத்துல மாட்டிக்கிட்ட லாரி மாதிரி கோர்த்து போடணும். சமூகக் கோபம் நெறஞ்ச கவிதைன்னா அதுக்கும் வழியிருக்கு. சிவப்பு அட்டை போட்டு நம்ம கேப்டனோ விழியைக் காட்டிடலாம். பின்நவீனத்துவ கவிதைன்னா ஏதாவதொரு கோட்டோவியம் - 'என்னய்யா சின்னப் புள்ளத்தனமா இருக்கு? கோட்டி ஓவியம் இல்ல' - போட்டுக்கலாம். இல்லேன்னா நவீன ஓவியம்னு எதையாவது யாருக்கும் வெளங்காத ஒண்ணு போட்டுக்கலாம். அதாவது உள்ளடக்கத்தை வெளியிலேயே அடக்கமா சொல்லிடணும் அட்டைப்படம் - உள்ள தொறந்து பாக்காதடான்னு.

அதெல்லாம் இருக்கட்டும். இனி தான் ரொம்ப முக்கியம்.
தலைப்பு. என்ன தலைப்பு வைக்கப் போறீங்கடே?

(நாளையோடு முடியலாம்)

Monday, May 28, 2007

கவுஜை தொகுப்பு போடுவது எப்படி?

'அண்ணாச்சி, கவிதை தொகுப்பு போடலியா நீங்க?' என்று கேட்டார் நண்பர் ஒருவர்.
உண்மைதான். ஒரு மனுசன் வறுமைக்கோட்டுக்குக் கீழயாவது இருக்கலாம். ஆனால் அதுக்காக கவிதைத் தொகுப்பு போடாம மட்டும் இருந்துடவே கூடாதுங்குறதுதான் தமிழ் கூறும் நல்லுலகத்துக் கவிஞர் பெருமக்களின் ஆசையாக இருக்கிறது. 'சென்றிடுவீர் அச்சகமெங்கும். அடித்திடுவீர் கவிதைத்தொகுப்புகளை' என்பதுதான் ஆவேசம் தரும் முழக்கமாக இருக்கிறது.

இப்படி உரத்த முழக்கம் ஊரெல்லாம் கேட்கும்போது, செவிட்டுக் காதோடு எத்தனைக் காலம்தான் வாழ முடியும் ஒரு மனிதனால்? எல்லா மனிதர்களுக்குள்ளேயும் கவுஜை எச்சிலை விட மோசமாக ஊறுகிறது என்பது புதுக்கவிதை மடையைத் திறந்த நாளிலிருந்தே எல்லா கவுஞனுக்கும் தெரிஞ்ச விசயமாக இருக்கிறது.. எல்லாரும் இந்நாட்டு மன்னரோ இல்லையோ எல்லாரும் இந்நாட்டு கவுஞர் என்பது மட்டும் உலகக் கோப்பையில் பங்களாதேசிடம் பல்லடி பட்ட இந்திய அணி போல சத்தியமான உண்மை.

ஒரு மன்னனுக்கு தான் எழுதியதை தானே பதிப்பித்துப் பார்க்கும் ஆசை வரக்கூடாதா? வந்தால்தான் அவன் கவுஞன். ஆக, எப்படி தனிமனிதனுக்கு மின்னஞ்சல் முகவரியும், வலைப்பூ முகவரியும் தவிர்க்க முடியாததாகி விட்டதோ அதே போலத்தான் கவுஜை பொஸ்தவமும் கவுஞனுக்கு தவிர்க்க முடியாததாகிறது.

பஞ்சாங்கக்குறிப்பு கூடத்தான் புத்தகம்ங்குற அடைமொழியோட விக்குது. அதே மாதிரி சாணித்தாள்ல அடிச்சா கவுஜைக்கும் அந்தத் தாளுக்கும் வித்தியாசம் தெரியாம போயிடும் வாய்ப்பு இருக்குறதால, கவுஜை புஸ்தவம் போடுறதுக்கு முன்னால சில அடிப்படையான விசயங்களைத் தெரிஞ்சுக்கலாம்.

கவுஜைத் தொகுப்புங்குறது எப்படியும் விலாச அட்டைக்கு பதிலா கொடுக்கப் போற விசயம்கறதால அதைக் கொஞ்சம் மெலிசா தயாரிச்சா அது கவுஞரான உங்களுக்கும் வாசிக்கப் போறவனுக்கும் நல்லது.

கவுஜை பொஸ்தவம் போடுறதுன்னு முடிவெடுத்துட்டா உடனே கவுஜை எழுதித் தொலைச்சுடாதீங்க. ஒரு கவுஜைத் தொகுப்புக்கு கட்டக்கடைசிலதான் கவுஜை தேவைப்படும். என்ன இது அநியாயமா இருக்கு?'ன்னு முறைக்காதீங்க.தெளிவாத்தான் சொல்றேன்.

கவுஜை தொகுப்பு போடுறதுன்னு தீர்மானிச்சதும் சிரைக்குறதை விட்டுடுங்க மொதல்ல. காசா, பணமா தாடி பாட்டுக்கு வளர்ந்து தொலையட்டும்னு விடுங்க. கவுஞனா இருந்து தாடியும் இருந்தா கவுஜைக்கு மருவாதை அதிகம்தான். என்னை மாதிரியே உங்களுக்கும் தாடி வளராம அழிச்சாட்டியம் பண்ணுதுன்னா அப்படியே விட்டுட வேண்டியதுதான்.

இனி தினமும் ஒரு முக்கியமான பயிற்சியை மேற்கொள்ளனும்.'பிசியோதெரபி' மாதிரி இது கவியோதெரபி. ஒரே இடத்தை ஒரு 30 டிகிரி கோணத்துல தலையை சாய்ச்சுகிட்டு மொறச்சு பார்க்கணும். இப்படி ஒரு நாளைக்கு 10 நிமிசம் செஞ்சு பழகிக்கோங்க. முக்கியமான விசயம் என்னன்னா, அப்படிச் செய்யும்போது பக்கத்துல ஆட்கள் இல்லாம பார்த்துக்கோங்க,. இல்லேன்னா எங்கயோ பாக்குறீங்கன்னு நெனச்சு உங்களை போட்டுத் தள்ளிடப் போறாங்க.

இந்தப் பயிற்சி முடிஞ்சதும் அடுத்த பயிற்சி முக்கியமானது. வானத்தை உத்துப் பார்க்குற பயிற்சி. ஏதோ கெட்ட கவுஜையை வாசிச்ச மாதிரி நெனச்சுக்கிட்டு முகத்தை உக்கிரமா வச்சுக்கிட்டு வானத்தை மொறச்சுப் பார்க்கணும். இதுவும் தினம் 10 நிமிசம் பயிற்சியோட செய்யுங்க.

இந்த பயிற்சி ஒருவாரம் முடிஞ்சதுன்னா நீங்க முதல ்கட்டத்துக்கு தயாராயிட்டீங்கன்னு அர்த்தம். இனி இந்தப் பயிற்சியில் இருக்கும்போதே உங்க நண்பர் மூலமா ஒரு படம் எடுத்துக்கோங்க. சபாஷ்!! இந்தப் படம்தான் உங்க கவுஜை தொகுப்புக்கான ஆதாரம்.

கவுஜை - அதை மெதுவா எழுதிக்கலாம்யா. அதுக்கும் முன்னாலே இன்னும் செய்ய வேண்டியிருக்கு நெறய..

(மீதி நாளைக்கு)

Friday, May 25, 2007

Bachelors Party-Kaippu Marriage

"கைப்புள்ளை கண்ணாலத்துக்கு வர்ழவங்களுக்கு தண்ணி ஃப்ரீ. ஆனா ஒர்ழே ரவுண்டுதான் கிழைக்கும். அத்னால வூட்ல இர்ழுந்தே ஒரு கப்பு கொண்டு வந்துர்ழுங்கோ"

அப்படின்னு சொன்னா சிங்கமெல்லாம் இப்படி வந்ழுசுங்க. பாவம் கைப்பு.

பாருங்க இந்த கொடுமைய.

இப்படியா கப்பு கொண்டு வருவாய்ங்க?



.
.
.
.
.
.
.
.
.
.
.
.


.
.

.
.
.
.
.
.
.





Finally.....

Wednesday, May 23, 2007

மனைவி - ஜாக்கிரதை

சில பழமொழிகள் அதனோட பொருள் தெரியாம த்வ்றான புழக்கத்துல இருக்குதுன்னு சொல்றாங்க. 'கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்துல கைவைக்காதே'ன்னு சொன்னா, கவிதைத் தொகுப்புக்கு 'போஸ்' கொடுக்குற கவிஞனை மாதிரி கன்னத்துல கைவைக்குறதைப் பத்தி அந்தப் பழமொழி சொல்லலையாம். கப்பலே கவிழந்தாலும் கன்னக்கோல்ல கைவச்சுடாதே. அதாவது 'திருடாதே! பாப்பா திருடாதே!'ன்னு புரட்சித்தலைவர் பாடுன பாட்டைத்தான் அப்படிச் சொல்லியிருக்காங்களாம். அதே மாதிரி சில வாக்கிய்ங்களையும் அவற்றுக்கான உண்மைப் பொருளையும் சொல்லிடுறேன்.. அப்புறம் நான் இதெல்லாம் முன்னாலேயே ஏன் சொல்லலைன்னு நாளைய சங்கக் கூட்டத்துல யாரும் கேள்வி கேட்டுறக் கூடாது பாருங்க. அதான்.


மனைவி ஒரு மந்திரம்

நம்மால் முணுமுணுக்க மட்டுமே முடியும்

மனைவி ஒரு மந்திரி

மண்டையில் ஒரு மண்ணும் இருக்காது என்று பொருள்
அல்லது பெரிய கிரிமினலா இருக்கலாம். இது ரெண்டு இல்லேன்னா மந்திரி வரும்போது 'மடையா நீ எந்திரி'

மனைவி ஒரு தீபம்

இருட்டா இருந்தா மட்டும்தான் உபயோகம் ;-)
(உள்ளதச் சொன்னா ஆணாதிக்கம்னு சொல்லிடுவீங்களே?)

மனைவி ஒரு மாணிக்கம்

ரொம்ப காஸ்ட்லியான விசயம்

மனைவி ஒரு மண்ணாங்கட்டி

எந்தக் கணவனும் வாய்விட்டு வெளியில் சொல்லாமல் மனதுக்குள் மட்டும் முணுமுணுப்பது

மனைவி ஒரு மத்தாப்பூ

நெருப்பாய் சிதறுபவள்

மனைவி ஒரு மகாராணி

ராஜவம்சம் ஒழிந்தும் ஒழியாமல் இருப்பவள். மான்யம் அழுதுக்கிட்டு இருக்கணும்

மனைவி ஒரு முன்மாதிரி

எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு

மனைவி ஒரு மகத்துவம்

யாருக்கு என்று யாருக்கும் தெரியாது

மனைவி ஒரு மனுஷி

ஆண்களால் மட்டும் ஒப்புக்கொள்ளவே முடியாது

மனைவி ஒரு மனைவி

இப்படி ஏன் எந்த மனைவியும் நினைப்பதில்லை?!

Tuesday, May 22, 2007

அம்புட்டு பேரும் பிஸியோ பிஸி!

என்னடா இது ஒரு வாரம் இந்த பசங்க எந்த பதிவும் போடாமா எஸ்கேப் ஆயிட்டானுங்க என்று நீங்கள் எல்லாம் கேட்பது நியாயம் தான். இது போல இப்படி அம்போனு விட்டுட்டு போக கூடாது தான், ஆயிரம் ஆணிகள் வந்து குவிந்த போதிலும் அதை எல்லாம் இடக்கையால் தடுத்துக் கொண்டே வலது கையால் டைப்பியே மொக்கை பதிவு போட்டு கொண்டு இருந்த நாங்கள் தற்பொழுது பதிவு போட விடாமல் செய்தது என்ன? அன்பு, பண்பு, பாசம், விசுவாசம். ஆமாங்க எங்களின் ஒரே அண்ணனும், சங்கத்தின் நிரந்திர தலைவருமான தல கைப்புள்ளையின் விக்கெட் விழும் விழாவிற்கான ஏற்பாட்டில் நாங்க எல்லாம் பிஸி. அதான் இந்த பக்கம் வர முடியவில்லை. இப்ப கூட யாருக்கும் தெரியாம வந்து தான் விழாவை பத்தி ஒரு அப்டேட் பதிவு போட தான் ஒரு எட்டு எட்டி பார்த்தேன்...



நம்ம சங்கத்து சிங்கங்கள் எல்லாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வேலையை எடுத்துக்கிட்டு அதில் பிஸியா இருக்காங்க.

கண்ணாலம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பதால் அதை நல்லப்படியா அறுவடை செய்யும் பொருப்பை நம்ம விவசாயி இளா எடுத்துக்கிட்டார். அறுவடைக்கு தேவையான பொருட்களை வாங்க அவரு ஜுட்.

இது வரை கச்சேரியை பெயரில் மட்டும் வைத்துக் கொண்டு இருந்து தேவ், நம்ம தலய விட வேறு எந்த நல்லவனும் தனக்கு கிடைக்க மாட்டேன் என்று உறுதியா நம்பி இந்த விழாவுக்கு நான் கச்சேரி பண்ணி தீருவேன் என்று முடிவு எடுத்து தினமும் கூவத்தில் நின்று சாசனம் பண்ணிக்கிட்டு இருக்கார்.

நம்ம வெட்டி, தலையின் உத்தரவுப்படி உலகத்தில் இருக்கும் அத்தனை தலைவர்களுக்கும் பத்திரிக்கையை நம் தலையின் சார்பாக நேரில் வைக்க உலகப்பயணம் மேற்க்கொண்டு உள்ளார்.

பாண்டி பய, சரக்கு வாங்க பாண்டிச்சேரிக்கு போயிட்டான். அங்க தான் டாக்ஸ் கிடையாதாம், அதனால் விலை மலிவாக இருக்கும் என்று அவன் ஜுட். (சரக்குனா - மளிகை)

கப்பி, சிவகாசி போய்கிட்டு இருக்கான், விழாவுல வாண வேடிக்கை தான் ஹைலைட்டே, லயன்ஸ் கம்பெனி இந்த விழாவை முன்னிட்டு புது புது வகையான வாண வேடிக்கைகளை அறிமுகப்படுத்துறாங்க, அதை பார்வையிட தான் அவன் போய் இருக்கான்.

சிபி, சங்கத்தின் அம்புட்டு சனங்களுக்கு புது சொக்கா எடுக்க சூரத் போய் இருக்கார். நமீதா தற்சமயம் சூரத்தில் இருந்தாலும் சிபி அவர் கடைக்கு போக மாட்டேன் என்ற உறுதிமொழி எடுத்து விட்டு தான் பிளைட்டே ஏறினார். (நயனை தவிர வேற நடிகைகளை நினைக்க மாட்டாராம், நமீதாவை பார்த்தால் சிலிப்பாக சான்ஸ் இருப்பதால் இந்த பிராமிஸாம்)

ராம், மதுரையின் சுற்று வட்டாரங்களில் அதிரடி சுற்றுப்பயணம் மேற்க்கொண்டு கரகாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், பொய் கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம் போன்ற ஆட்டங்களின் தலைச்சிறந்த ஆட்டக்காரர்களை தேர்ந்து எடுத்துக் கொண்டு இருக்கிறார். திண்டுக்கல் தப்பு, தஞ்சையில் இருந்து தவில், திருவாரூரில் இருந்து நாதஸ்வரம் போன்ற இன்னபிற எல்லாத்தையும் புடிச்சுடு வர பொறுப்பை அவரு ஏற்று இருக்கார்.

வழக்கம் போல் தேவ் சொதப்புவார் என்ற சந்தேகத்துக்கு இடம் இல்லாம் தெரிந்த காரணத்தால் தம்பி கதிர் டிரம்ஸ் சிவமணியை ராசாவுடன் சேர்ந்து வாசிக்க சென்னைக்கு தள்ளிட்டு வர முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

உலகின் பல மூலைகளில் இருந்து வரும் விருந்தினர்களை தங்க வைக்கும் ஏற்பாடுகளை நம்ம காமேஷ் பார்த்துக் கொண்டு இருக்கிறார்.

நான் என்ன பண்ணுறேன் என்று கேட்குறீங்களா, அறுசுவை நம்ம இன்சார்ஜ், செட்டிநாடு ஸ்டைல் ஆரம்பிச்சு மெக்ஸிகன் ஸ்டைல் வரைக்கும் எல்லா வகையான டிஷ்ம் உண்டு. அறுசுவை அரசர், அரசிகளை எல்லாம் கொண்டு வந்து இறக்கியாச்சு. மெனுவும் ரெடி பண்ணியாச்சு. நாளைக்கு ட்ரையல் பாக்குறோம், இதுக்காவே நம்ம நாட்ஸ் வரார். நமக்கும் ஒரு எலியை தேடி அலைய வேண்டிய வேலை மிச்சம்னு சும்மா இருக்கோம்.

சரி அப்பரசண்டிகள் எல்லாம் பிஸியா இருக்கீங்க, உங்க தல என்ன பண்ணுறார் என்று கேட்குறீங்களா... அழகன் படத்தில் வர மம்முட்டி மாதிரி போன்ல தான் வாழ்ந்துக்கிட்டு இருக்கார். விடிய விடிய சங்கீத ..... அய்யோ தல அடிக்காதீங்க தல... வலிக்குது.... வேணாம்..... நான் ஏதும் சொல்லல....

Monday, May 14, 2007

'மேட்ச் ஃபிக்ஸிங்' தவறா??

"நேயர்களே வணக்கம். வர வர கிரிக்கெட் ஆட்டமும் சூதாட்டம் போல மாறிட்டு வருது. இந்த சூதாட்டத்தை சட்டரீதியா செஞ்சிடலாம்னு சிலர் சொல்றாங்க. அது இன்னும் மோசமாப் போயிடும்னு சிலர் சொல்றாங்க. இந்த 'மேட்ச் ஃபிக்ஸிங்' கலாட்டாவால பெரிய பெரிய பிரச்னைகளெல்லாம் வருதுங்குறாங்க. அதனால இன்னைக்கு நம்ம 'மேட்ச் ஃபிக்ஸிங்' பத்தி ஒரு எக்ஸ்பர்ட் கிட்ட கேக்கப் போறோம். வணக்கம் சார்"

"வணக்கம்"

"இந்த மேட்ச் ஃபிக்ஸிங் பத்தி என்ன நெனைக்குறீங்க?"

"ரொம்ப காலமா நடக்குற விசயம்தான்"

"அப்படியா?"

"ஆமா. இதெல்லாம் ரொம்ப காலமாவே நடந்துட்டுதான் இருக்கு. இப்பதான் டி.வி, ரேடியோன்னு வந்ததுக்கப்புறம் இன்னும் கொஞ்சம் பிரபலமாயிட்டிருக்கு"

"அப்படியா சொல்றீங்க?

"ஆமா. இதுக்குன்னு ஒரு வரலாறே இருக்குங்க. முன்னால ரொம்ப ரகசியமாத்தான் எல்லாம் நடந்துச்சு. இப்ப டெக்னாலஜி வளந்துடுச்சு பாருங்க.அதனால இப்ப இது பப்ளிக்கா ஆயிடுச்சு"

"இதை சட்டப்படி செஞ்சுட்டா தப்பில்லேன்னு சொல்றாங்களே? அது பத்தி என்ன நெனைக்குறீங்க?"

"அட! சட்டப்படிதான் இது நடக்கணும்ங்க"

"அப்போ நீங்க சட்டப்படி செஞ்சுட்டா தப்பில்லங்கறீங்க?"

"அப்படி என்ன பெரிய பாவமா செய்யுறோம்? சிலர் கொஞ்ச்ம தயங்குறாங்க. ஆனா நான் சொல்றேன். தைர்யமா செய்யலாங்க ஒரு பிரச்னையும் இல்ல "

"அப்ப இது புண்ணியமான விசயம்னா நெனைக்குறீங்க?"

"பாவ புண்ணியத்தை விடுங்கய்யா. இதனால எத்தனை பேருக்கு பொழப்பு நடக்குது. எத்தனை குடும்பங்கள் வாழுது. அதை யோசிச்சு பாருங்க"

"நீங்க பேசுறதைப் பார்த்தா மேட்ச் ஃபிக்ஸிங் தப்பேயில்லன்னு சொல்ற மாதிரில்லா இருக்கு?"

"என்ன தப்புன்னு கேக்குறேன்? நல்லா மேட்ச் ஆகணும்னா சந்தர்ப்ப சூழ்நிலை எல்லாம் பார்த்து ஒழுங்கா ஃபிக்ஸ் பண்ணனும்."

"நீங்க சொல்றதைப் பார்த்தா நீங்களே மேட்ச் ஃபிக்ஸிங் புரோக்கர் மாதிரி பேசுறீங்க?'

"ஆமா. நானே ஏகப்பட்ட மேட்ச் ஃபிக்ஸ் பண்ணியிருக்கேன். அதனால என்ன?"

"அப்ப அனுபவசாலின்னு சொல்லுங்க"

"ஆமா. இதுல அனுபவம் ரொம்ப முக்கியம்,.ஏன்னா ஃபிக்ஸ் பண்ணும்போது கொஞ்சம் தவறுனாலும் எல்லாம் கோவிந்தாவாகிடும். அதனால முன் அனுபவம் இந்தத் தொழிலுக்கு ரொம்ப முக்கியம்"

"என்ன சார் கொஞ்சம் கூட பயமேயில்லாம இவ்வளவு தைரியமா இதச் சொல்றீங்க?"

"ஏன் இதுல பயப்பட என்ன இருக்கு?"

"என்ன சார் நீங்க? மேட்ச் ஃபிக்ஸிங் பிரச்னையால பாப் வூல்மர் கொலையே நடந்திருக்கு. நீங்க என்னடான்னா...??"

"இதப் பாருங்க. சில சமயம் எதிர்பாராத விதமா அப்படி நடக்குறதும் உண்டு. அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?"

"என்ன இது அடாவடித்தனமா இருக்கு? பண்றதையும் பண்ணிட்டு இப்படிப் பேச வேற செய்றீங்க?"

'ஏன் சார் மேட்ச் ஃபிக்ஸிங் அவ்வளவு பெரிய பாவமா?"

"இந்தக் கேள்வியை என் கிட்டயே கேக்குறீங்களா?"

"சார். ஜோக்குக்காக வேணும்னா மேட்ச் ஃபிக்ஸிங் பண்றதை கிண்டல் பண்ணலாம்.ஆனா இது வாழ்க்கை பிரச்னை சார்"

"வாழ்க்கை பிரச்னையா? யாருக்கு?"

"வேற யாருக்கு. ஃபிக்ஸ் பண்ற எங்களுக்குத்தான்"

"ஏன்?? ஏன்?? வேற ஏதாவது நல்லதா தொழில் செஞ்சு பிழைக்கலாமே?"

"ஏன் இந்தத் தொழிலுக்கு என்ன குறைச்சல்?"

"அப்ப வருமானத்துக்காக என்ன வேணும்னா செய்யலாமா?"

"அப்படி என்னத்த சார் செய்யுறோம்? நீங்கதான் அப்பலேருந்து என்னமோ நாங்க பெரிய கிரிமினல் குத்தம் செஞ்ச மாதிரியே பேசிக்கிட்டிருக்கீங்க?"

"அப்ப நீங்க செய்யுறது கிரிமினல் குத்தம் இல்லையா?"

"ஏன் சார்? ஒரு பொண்ணை ஒரு பையனுக்குக் கல்யாணம் செஞ்சு வைக்குறது அவ்வளவு பெரிய குத்தமா?"

"என்ன சார் சொல்றீங்க?"

"ஆமா சார். நாங்க மேட்ச் ஃபிக்ஸ் பண்றோம்னு அதத்தான சொல்லிக்கிட்டிருந்தேன்"

"அடப்பாவி நீ கல்யாண புரோக்கரா?"

"ஆமா சார். இங்கிலீஸ்ல மேட்ச் ஃபிக்ஸிங்னுதான சொல்லுவாங்க. உங்களுக்கு இங்கிலிஸ் தெரியாதா?"

Friday, May 11, 2007

சும்மா ஒரு பிறந்தநாள் கொண்டாட்டம்

டியர் ஸ்டுடண்ட் இன்னிக்கு நாமே எண் வினோதங்களை பத்தி பார்க்கப்போறமின்னு ஒரு காலத்திலே நானு காலேஜ்'லே படிக்கிறப்போ?? எங்க கணக்கு வாத்தியார் சொன்னார். சரின்னு நாங்கெல்லும் வழக்கம்போல பெஞ்சிலே சரியா கையை வச்சு தூங்கிறதுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டோம்.அவரு என்னா சொன்னாலும் தூங்கியே பழகியாச்சு.. அதுனாலே என்ன அவரு இண்ட்ராஸ்டான மேட்டர் சொன்னாலும் சரி இன்னவரைக்கும் அவரு சொல்லிக்கொடுத்ததிலே ஒன்னுக்கூட முழுசா தெரியாது.அன்னிக்கு அவரு சொல்லிக்கொடுத்ததிலே நாங்க தூங்கிட்டே கேட்டத்திலே சில விசயங்கள் ஞாபகத்திலே இருக்கு. ஆனா அதுவும் அரைகுறைதான்.

இந்த கணிதத்திலே ஏகப்பட்ட விசித்திரம் இருக்கு, அதிலேயும் குறிப்பா centered octagonal number'லே பலவிதமான பலவிதமான ஆச்சரியங்கள் இருக்கு.

1 to n

எப்பிடின்னா (2n + 1)2 n'க்கு பதிலா 1ஐ போட்டு பாருங்க. அப்போ (2X1 +1)2 = 9 இப்போ (2X2+1)2 = 25

இப்பிடியே போட்டு பாருங்க. அதுப்பாட்டுக்கு 1, 9, 25, 49, 81, 121, 169, 225, 289, 361, 441, 529, 625, 729, 841, 961'ன்னு போயிட்டே இருக்கும்.

நமக்கு தேவை 25தானே. அடபாவி அதுக்கு எதுக்குடா எங்களுக்கு கணக்கெல்லாம் சொல்லி கொடுத்தேன்னு நீங்க கேட்கிறது எனக்கு புரியுது. என்ன பண்ணுறது நம்ம தமிழ் திரையுலக இளையதளபதி நடிச்ச சூப்பர் டூப்பர் படமான பேக்கரி'லே (Note:- This is not spelling mistake) "ஒரு தடவை முடிவெடுத்துட்டா என்னோட பேச்சே நானே கேட்கமாட்டேன்"னு வீரவசனம் பேசுவார். அதுமாதிரி நம்ம சங்கத்தோட இளையதளபதி பதிவு எழுதி கலக்க ஆரம்பிச்சிட்டா யாராலும் தடுக்கமுடியாது.

யப்பா சாமிகளா இந்த நம்பரையும் நம்ம வெட்டியையும் ஒரு லைன்'லே கொண்டு வரதுக்கு எம்புட்டு கஷ்டமிடா சாமி. அதுதாங்க நம்ம சங்கத்தோட இளையதளபதி வெட்டிப்பயலுக்கு 25வது பிறந்தநாள்.

Welcome to the 25th Age Club dude.

இதுக்கப்புறம் "எப்போ கல்யாணம்"ன்னு தான் கையிலெ தேய்ச்ச ரெக்கார்ட் மாதிரி எல்லா பயலுவெல்லும் கேப்பாய்ங்க?


எல்லாரும் கேட்கிறமாதிரியே நாமெல்லும் கேட்கமே கொஞ்சம் வித்தியாசமா டிப்ரெண்டா,மாற்றமா கேட்கணுமின்னு ரொம்பவே யோச்சிச்சு பார்த்தேன்.

கடைசியா சு(ம்)மா'வே கேட்கிறோம் "எப்போ கல்யாணம்"

పుట్టిన రోజు శుభాకాంక్షలు

Monday, May 7, 2007

உலகக்கோப்பை 2011 - பகுதி 3







முன்கதை சுருக்:


முதல் பந்திலேயே சிம்புவும் தணுஷும் out ஆகி விட, Team India மானத்தை காப்பாற்றுவதற்காக அடுத்து ஆட வேண்டிய S.J.Suryahவை ஓரமாக உட்கார வைத்து விட்டு அஜித்தும் விஜய்யும் களம் இறங்க முடிவெடுக்கிறார்கள்.

இனி...............


S.J.Suryahவிற்கு தனக்கு Batting தராததால் மனநிலை பாதிக்கப்படுகிறது. Dressing Roomல் Bore அடித்ததால், செவுத்தில் இருக்கும் பல்லியை பார்த்து, "சின்னதா எறும்பு இருக்கிறதா? ............பெருசா ஆணி இருக்கிறதா?............." என்று பல்லிக்கு class எடுக்க பல்லிக்கு mood வந்து பெண் பல்லியை நோக்கி பாய்கிறது.

S.J.Suryah நேராக T.R.இடம் வந்து, "Sir, என் அடுத்த படத்திற்கு concept புடிச்சிட்டேன்!. Heroவும் Heroineவும் காதலிக்க முடியாததால் night ஆனால் ஒரு ஊசி பல்லி ஆகி காதலிக்கிறார்கள். படத்திற்கு பேரு B.F. ஆமாம்! Balli Friend அப்படிங்கிறதோட சுருக்கம்தான் அது. ஒரு பாட்டு எழுதுங்க, A.R.Rahmanஐ போய் பார்த்திட்டு வந்திடறேன் " என்கிறார்.

அதற்கு T.R.
"அடியே லில்லி
நாமதான் பல்லி
படுக்காத தள்ளி
உன் கண்ணத்தை கிள்ளி
சொல்வேன் நீ சில்லி (Silly)
டும் டும் டும் யக்கா டும் டும் டும்"
என்று தலையை சிலுப்புகிறார்.

S.J.Suryah பாட்டை notes எடுத்து, A.R.Rahmanஐ பாக்கப்போகிறேன் என்று பைக்கில் பறக்கிறார். அதே சமயம், செவுத்தில் உச்சக்கட்டத்தை அடைந்த பல்லிகள் balance தவறி T.R.இன் தலையில் விழுந்து தாடியில் புகுந்துக்கொள்கின்றன.T.R., "நீங்க என் தாடிக்குள்ளயே தனிக்குடித்தனம் நடத்தலாம் பல்லி தங்கச்சி" என்று பல்லியிடம் அழுகிறார்.

ஒரு வழியாக எல்லா extra fittingsயும் அணிந்து அஜித்தும் விஜய்யும் களம் இறங்குகிறார்கள். Creaseல் இருக்கும் பவுடரை விபூதி போல் பூசிக் கொள்கிறார் விஜய். அஜித் cricket helmet அணிய மாட்டேன் motor bike helmetதான் அணிவேன் என்று umpireஇடம் அடம் செய்து, அதை மாட்டிக் கொள்கிறார்.

பந்து வீச வருகிறார் McGrath. அப்போது விஜய் தலையருகே சில bubbles உருவாகி ஒரு சின்ன flashbackற்கு செல்கிறார்.


Dressing roomல் coach கவுண்டமணி high decibelல் "நா....... அங்கு போய் சிம்பு மாதிரி batஐ தூக்கி அவுட் ஆகிடாதீங்கண்ணா! எப்படி screenல் எந்த scene அப்படின்னாலும் ஒரே மாதிரி நிக்கிறீங்களோ அதே மாதிரி நில்லுங்கண்ணா" என்று சொன்னது ஞாபகம் வருகிறது.

கவுண்டர் சொன்னதை போலவே பந்து வரும்போது விஜய் நகராமல் அப்படியே நிற்க McGrath பந்து batஐ தொட்டு boundary நோக்கி பறந்து score six ஆனது.

இதை சற்றும் எதிர்ப்பாக்காத கூட்டம், விஜய்க்கு standing ovation தருகிறது. அவர்கள் உட்காருவதற்குள் மழை கொட்டுகிறது.Umpire மழைக்காக match called off என்று சைகைக் காண்பிக்கிறார்.

இதை தவறாக புரிந்துக்கொண்ட ஆஸ்திரேலிய அணி தாங்கள்தான் ஜெய்த்துவிட்டோம் என்று stumpஐ பிடிங்கிக் கொண்டு போக தலயின் கண்கள் சிவக்கிறது..............தொடர்ந்து ஆடுவோம்ல.


பிகு: Photoவிற்கும் Postற்கும் சம்பந்தம் இல்லை

நாடகம் - சிறுகதை

ஒரே களேபரமாக இருந்தது. கூச்சலும், சத்தமுமாக ஆளாளுக்குப் பேசிக் கொண்டிருக்க சுப்பையா வாத்தியார் கடுப்பாகிப் போய் "நாசமாப் போறவனுவளை வச்சுக்கிட்டு என்ன செய்யச் சொல்லுதிய?" என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தார். அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கொடை வருவதை முன்னிட்டு இந்த முறை கீழத் தெரு இளைஞர் சங்கம் சார்பாக "கறுத்த முகம்" நாடகம் நடத்துவதாகத் தீர்மானம் செய்திருந்தார்கள். போன வருசம் மெஞ்ஞானபுரத்தில் வள்ளுவர் கலைமன்றம் சார்பில் நடத்தப்பட்ட "கறுத்த முகம்" நாடகத்தில் ஒரே ஒரு பெண் வேசம்தான் என்பதால் அந்த நாடகம் தேர்ந்தெடுக்கப்பட்டதே தவிர, உலகத்தைப் புரட்டிப் போடும் சமூகச் செய்தியைச் சொல்லுமென்பதற்காக அல்ல.

நாடகம் போடுவதில் இருக்கும் ஒரே சிக்கல் அதற்குண்டான செலவுதான். புளியடி மாரியம்மன் கோவில் மாதிரி இந்தக் கோவிலுக்கு பெரிய அளவில் வருமானமெல்லாம் இல்லை. தலைக்கட்டு வரிபோட்டு வசூல் செய்யுமளவுக்கு பெரிய தலைகளும் ஒன்றுமில்லை. இருந்தாலும் 'தேங்காய் உடைக்குற இடத்துல குறைஞ்சது சிரட்டையாவது உடைக்கணுமே'ன்னுதான் நாடகம் போடுறதா தீர்மானம். செல்லப்பாதான் இளைஞர் சங்கச் செயலாளர். உருண்டையாக இருப்பான். எப்போதும் 'தொளதொள' வென்று பெரிய சட்டையாகப் போட்டுக் கொண்டு அவன் நடப்பதைப் பார்ப்பதற்கே கூட வேடிக்கையாகத்தான் இருக்கும். கடந்த இரண்டு ஆண்டுகளாக சங்கத்தில் ஆளில்லாத காரணத்தால் அவனேதான் செயலாளர்.

எல்லாவற்றையும் தானே சமாளிக்கும் திறன் இருப்பதால் எப்படியாவது ஊரை அடித்து உலையில் போட்டு விடும் சாமர்த்தியக்காரன். "மதுரைக்கு வழி வாயிலதாம்லே இருக்கு" என்பதுதான் அவனது ஒரே சித்தாந்தம்.

அரங்கம், ஒப்பனை எல்லாவற்றுக்கும் சேர்த்து வள்ளுவர் கலை மன்றத்துக்கு 500 ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். ஒலிபெருக்கி, விளக்கு எல்லாவற்றுக்குமாக இன்னொரு 200 ரூபாய். நாடகம் முடிந்ததும் நாடகத்தில் நடித்தவர்களுக்கு இட்லியும், காரச் சட்டினியும் கொடுத்தேயாக வேண்டும். அதற்கு எப்படியும் இன்னொரு 300 ரூபாயாவது வேண்டும். இதெல்லாம் போக பெண் வேசம் போடும் நடிகை யார் என்பதைப் பொறுத்து 200லிருந்து 500 ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருக்கும்.

செல்லப்பா கூட்டிக் கழித்து கணக்குப் போட்டுப் பார்த்ததில் எப்படியும் தொள்ளாயிரம் தேறி விடும் என்பது புரிந்தது. பற்றாக்குறை வந்தால் எப்படிச் சமாளிப்பது என்று அவனுக்குத் தெரியும். நாடகம் முடிந்து இட்லியை அளவுச் சாப்பாடாக்கி விட்டால் நூறு ரூபாயும், ஒலிபெருக்கியில் ஐம்பதும், நாடகம் போடும் வகையில் ஐம்பதும் குறைந்தால் எப்படியும் நாடகத்தை முடித்து விடலாமென்று நம்பிக்கை வந்ததும், சுறுசுறுப்பாக கணபதி வாத்தியாரைப் பார்த்து நாடகம் நடத்தப் போவதைப் பற்றிச் சொல்லிவிட்டான்.

கணபதி வாத்தியார்தான் கலைமன்றத்தின் பொறுப்பாளர். அவர்களாகப் போடும் நாடகத்துக்கு இயக்கமும் அவரேதான். ஒல்லியாக, காற்றடித்தால் பறந்து போய்விடுபவரைப் போல இருப்பார். நெற்றி நிறைய நீறு பூசி வாயில் வெற்றிலைக் குதப்பலோடு இருப்பார். ஓய்வு பெற்ற ஆசிரியர். கொஞ்சம் முறுக்கிக் கொண்டார்.

"பாருங்க தம்பி, இப்பல்லாம் முன்ன மாதிரியில்லல்லா.. நெறய நாடகம் போடுதானுவோ.. போன வருசம் 'கறுத்த முகம்' போட்டம்லா.. அவுகளே 1000 ரூவாயும் தந்து, பாராட்டி அனுப்பிச்சாங்கல்லா.."

செல்லப்பாவுக்கு கணபதி வாத்தியார் என்ன அடிபோடுகிறார் என்பது புரிந்து விட்டது.

"சரி அண்ணாச்சி, அப்போ நான் பொறவு வரேன். இந்த வருசம் நாடகம் வேண்டாம்னு சொல்லிடுதேன்.."

"என்னடேய்.. இப்படிச் சொல்லுதே? நாடகம் போடாம வேறென்ன செய்யப் போறிய?"

"250 ரூவா குடுத்தா கருங்கொளத்துலேருந்து சிவனடிமை கரகத்தோட வரப் போறான். அத பாத்துக்கிடுதோம்"

"என்னடேய்.. அவனுக்கு வயசாயிடுச்சுல்லா? அவன் ஆடுனா யாரு பாப்பா?"

"நாங்க பாப்பம்லா அண்ணாச்சி.. பணம் இருந்தா பவுசு காட்டலாம். இல்லன்னா என்ன செய்யச் சொல்லுதிய?"

செல்லப்பா குரலில் வருத்தம் காட்டினான்.

"அதுக்கென்னடேய் இப்பம்? பணம் இல்லாட்டிப் போனா என்ன? நாடகம் போட்டாத்தானடே கூட்டம் வரும். அதுக்கு ஏற்பாடு பண்ணுங்கடேய்.. வேணும்னா 750 ரூவா குடுங்க.. நம்ம பையனுவளுக்குச் செய்யாம வேற யாருக்குடேய் செய்யப் போறோம்?"

"சரி.. அண்ணாச்சி நாங்க கருங்கொளத்துக்குப் புறப்படுதோம்"

கணபதி வாத்தியாருக்குக் கலக்கம் வருவது மாதிரி செல்லப்பா எழுந்து விட்டான்.

"யேய்!! கொஞ்சம் இரிடேய்.. இப்படி அவசரப்படுதே? என்னதான் குடுப்பேன்னு சொல்லு. முடிஞ்சுதுன்னா உனக்குச் செய்யாமலாடே போயிடப் போறேன்?"

"அதெல்லாம் சரிப்படாது அண்ணாச்சி.. 300 ரூவாய்க்கு நீங்க எங்க வரப்போறிய?!. நான் கெளம்புதேன்!"

கணபதி வாத்தியார் செல்லப்பாவை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்தார்.

"ஆனாலும் ரொம்பத்தாண்டே உனக்கு. 300 ரூவாய்க்கு சொவப்புப் பொவுடர் கூடக் கிடைக்காதுடேய்"

"எனக்குத் தெரியும்லா அண்ணாச்சி. அதான் கெளம்புதேன்னு சொல்லுதேன்" செல்லப்பா சலனமில்லாமல் முகத்தை வைத்துக் கொண்டு அவரை ஏறிட்டான்.

"சரிடேய்.. உனக்குமில்ல; எனக்குமில்ல; 400 ரூவாய்க்குப் போட்டுடுவோம்டேய். என்ன சொல்லுதே?"

"400 ரூவாய்க்கு எங்க போவ? 350க்கு பாருங்க அண்ணாச்சி"

"டேய் நீ ரொம்பத்தான் ஆசப்படுதடேய்.. நாடகத்துக்கு ஆளில்லாமவா பேரம் பேசுதேன்னு நெனக்கே? நம்ம பயலுவளாச்சேன்னு பாத்தா ரொம்பத்தான் எட போடுதடேய். நானூறுக்கே நான் மன்றத்துல ஏச்சு வாங்கணும் தெரியும்லா" கண்பதி வாத்தியார் குரலை உயர்த்திச் சொன்னார்.

"சரி.. சரி.. அண்ணாச்சி. 100 ரூவாய் முன்பணம் புடிங்க. மீதி இருநூத்தம்பதுக்கு நாடகம் முடிஞ்சதும்.." செல்லப்பா முடிப்பதற்குள் "மீதி முன்னூறு" என்றார் கண்பதி.

"சரிங்கண்ணாச்சி.. நடிக்குறதுக்கு யாரைக் கூப்பிடுவிய?" செல்லப்பாதான் ஆவலாய்க் கேட்டான்.

"ஆமாடேய்ய்.. கேப்பியல்லா.. நல்லா கேப்பியல்லா.. குடுக்குற நானூறு ரூவாய்க்கு காஞ்சனாவா வருவா? நம்ம ஆளுங்க யாரையாவது பொம்பள வேசம் போடச் சொல்லுடேய்" பத்து ரூபாய் தாளை பத்துத் தடவை எண்ணி சரி பார்த்துக் கொண்டே சொன்னார் அவர்.

செல்லப்பா திரும்பி வந்து நடந்ததைச் சொன்னதும் 'கறுத்த முகம்' நாடகம் நடத்துவதென்பது உறுதியாகி விட்டது. கதாநாயகனாக நடிக்க பாபநாசத்திடம் போனபோது அவர் கேட்ட முதல் கேள்வியே யாரு எனக்கு ஜோடி என்பதுதான். வள்ளி நாயகம்தான் என்று செல்லப்பா சொன்னதுமே பாபநாசத்துக்கு உற்சாகம் வடிந்து விட்டது.

"அநேகமா நான் அன்னிக்கு ஊருலயே இருக்க மாட்டேன்னு நெனக்கேன். வேற ஆளப் போடுங்கடே.. புது ஆட்களும் நடிக்கட்டும். நானே எத்தனை நாடகத்துல நடிக்க?' சிரித்துக் கொண்டே அவர் சொல்ல வெளியே வந்ததும் செல்லப்பா கொதித்தான்.

"பெரிய புடுங்கின்னு நெனப்பு. போன வருசம் கனகாவை நடிக்கக் கூப்பிட்டப்போ எனக்கு ரெண்டு ஜோடி பாட்டு போதாதுன்னு அடம் புடிச்சி மூணு பாட்டு கேட்ட ஆளுல்லா. அன்னிக்கே ''''''யை குறுக்குல மிதிச்சிருந்தா இன்னிக்கு ஒழுங்கா பேசியிருப்பாம்லா"

வள்ளி நாயகம் கதாநாயகியாக வேசம் போடுகிறான் என்று தெரிந்ததும் கதாநாயகனாக நடிக்க எவருக்கும் ஆர்வமில்லாமல் போனது. பாபநாசம் தானாகவே முன்வந்து வில்லன் வேசத்துல நடிக்கக் கேட்டதும் செல்லப்பாவுக்கு மனசில்லை. ஆனாலும், 'தொலைஞ்சு போட்டுடே!' என்று சம்மதித்து விட்டான்.

"நானே நாயகனாவே நடிச்சா நல்லாருக்காதுல்லா.. ஒரு மாறுதலுக்கு இந்த வேசத்தையும் போட்டுப் பாத்துடுவோம். என்ன சொல்லுதிய?" என்று ஏதோ ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்ட நடிகனைப் போல பேசிக் கொண்டிருந்தார் பாபநாசம். பாபநாசம்தான் ஊரைப் பொறுத்தவரைக்கும் எம்ஜியார், சிவாஜி எல்லாமே. குறைந்த பட்சம் அவருக்காவது அப்படி ஒரு நினைப்பு மனதிற்குள் இருந்து வந்தது. "நான் டவுசர் போடுத காலத்துலேருந்தே நடிக்கலாம்டே. மெட்ராசுக்குப் போவத் துட்டில்லாம இங்க கெடந்துட்டேன். இல்லேன்னா இன்னைக்கு சினிமால இருந்திருப்பம்லா.." என்பது போலத் தான் பேசிக் கொண்டிருப்பார். அது வரது இயல்புதான்.

"இனி நாடகம் முடியுற வரைக்கும் இந்த வேசா மொவன் பேசுறதையெல்லாம் கேட்டுத் தொலைக்கணும்லா" செல்லப்பா அலுத்துக் கொண்டாலும் அதில் இருக்கும் உண்மை எல்லோருக்கும் தெரியும்.

பாபநாசம் ஒதுங்கிக் கொண்டதாலும், வள்ளி நாயகம்தான் பெண் வேசம் போட்டு நடிக்கப் போகிறானென்பதாலும் கதாநாயகனாக நடிக்க ஆள் கிடைக்கவேயில்லை. செல்லப்பா நொந்தே போனான்.

"அறுதலிங்க பண்ணுத சேட்டையைப் பாத்திராவே.. கதாநாயகி வேணுமாம்லா. பொட்டப்புள்ள இருந்தாத்தான் நடிப்போம்னு ஒவ்வொருத்தனும் சண்டைலா போடுதானுவோ. நான் நாடகத்துக்குத் துட்டுச் சேக்குறதுக்கே நாய் படாதபாடு படுதேன். அது எந்த மைராண்டிக்காவது தெரியுதா? பெரிய புடுங்கின்னு அவனவனுக்கு நெனப்புல்லா" செல்லப்பா தனியாகப் பொருமிக் கொண்டிருந்தான்.

ஜான் அண்ணன் தான் செல்லப்பாவைச் சமாதானம் செய்து வைத்தார். செல்லப்பாவை "நீயே கதாநாயகனா நடிடேய்!" என்று அவர் சொல்ல செல்லப்பா அவரை ஒருமாதிரியாகப் பார்த்துச் சிரித்தான்.

"என்ன அண்ணாச்சி, கிண்டல் ---- பண்ணாதீரும். நாடகம் போடுததுக்கு உம்மைக் கூப்பிட்டா, நீரு என்னடான்னா நாடகமே நடக்காம இருக்குததுக்குல்லா யோசனை சொல்லுதீரு"

"அப்படியில்ல கோட்டிக்காரா.. எப்படியும் நடிக்கப் போற எவனும் சிவாஜி கணேசன் இல்ல. அந்தக் கொடுமைக்கு நீ நடிச்சாத்தான் என்ன?"

"நான் கதாநாயகன்னு சொன்னா எல்லாரும் சிரிக்கல்லா செய்வானுவ?" செல்லப்பாவுக்கு, தனக்குக் கிடைத்த குருட்டு வாய்ப்பை எண்ணி உள்ளூற சந்தோசம் இருந்தாலும் சந்தேகத்தைக் கேட்டு வைத்தான்

'சிரிக்கட்டும்டேய்.. எம்ஜியாரு நடிக்கப் போவும்போது கூட சிரிக்கத்தான் செஞ்சிருக்கானுவோ கொஞ்சம் பேரு. அவரு சிவாஜியை வுடப் பெரிய ஆளா வரலியாடேய்?"

ஜான் அண்ணன் சொன்ன சமாதானத்தை விடத் தன்னை எம்ஜியாரோடு ஒப்பிட்டு அவர் பேசியது செல்லப்பாவுக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், ஒத்திகையில் கதாநாயகனாக நடிக்கப் போவது செல்லப்பா என்று தெரிந்ததும் எல்லோரும் சிரிக்கவே செய்தார்கள்.

"என்ன மயித்துக்குவே சிரிக்கிய? நான் நடிச்சா என்னங்கேன்?" என்று செல்லப்பா கோபப்பட்டான்.

"டேய், யாரு வேணும்னா நடிக்கலாம்டேய். ஆனா அதுக்காவ மொதல்லயே கதாநாயகனா நடிக்கணும்னு ஆசப்பட்டா அது ரொம்ப தப்புல்லா!"

"செயலாளரா இருக்குறதுக்காக கதாநாயகன் வேசம் போடுதது சரியாடேய்?"

"---ளி மாப்ள, நீ ரோடு போடுத மெசின்மாதிரில்லாடே இருக்க. நீ மேடைக்கு நடந்து வாரதுக்குள்ள நாடகம் முடிஞ்சிடும்லா"

ஆளாளுக்கு செல்லப்பாவைக் கேள்வி கேட்க "போங்கலேய்!"ன்னு அவன் வேசம்போட மறுத்து விட்டான். இப்படி ஆள் யாருமே கிடைக்காமல் போனதால் துரை அண்ணாச்சியை கதாநாயகனாக்க வேண்டியதாயிற்று. துரை அண்ணாச்சிக்குப் பலசரக்குக் கடை கல்லாவைத் தவிர வேறு ஏதாவது தெரியுமா என்று யாருக்கும் தெரியாது என்றாலும், சுளையாக நூறு ரூபாய் அன்பளிப்பாகத் தருபவர்கள் எந்த வேசத்தில் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்பது மட்டும் எல்லாருக்கும் தெரியும்.

நாடக ஒத்திகை நடக்க ஆரம்பித்ததும் ஜான் அண்ணன் இயக்கும் பொறுப்பை சுப்பையா வாத்தியாரிடம் ஒப்படைத்து விட்டார்.. ஆரம்பத்தில் அவர் உற்சாகமாகத்தான் இருந்தார்.. ஆனாலும் இரண்டொரு நாள்களிலேயே 'கொள்ளைல போறவனுவோ வரவும் மாட்டானுவோ. வந்தா ஒழுங்கா வசனம் பேசவும் மாட்டானுவோ. இந்த அறுதலிங்களைக் கட்டி அழறதுக்கு எதுக்குத்தான் சம்மதிச்சேனோ தெரியலையே'ன்னு புலம்பிக் கொண்டிருக்க, ஒரு நாள் அவசரமாக உள்ளே நுழைந்தான் செல்லப்பா.

"சுப்பையாண்ணே, ஒத்திகையைக் கொஞ்சம் நிறுத்துங்க. முக்கியமான விசயம் ஒண்ணு சொல்லணும்."

"என்னடேய்.. நாடகம் நின்னுடிச்சா" சுப்பையா வாத்தியின் குரலில் தெரிந்தது மகிழ்ச்சியா வருத்தமா என்று தெரியவில்லை.

"அதெல்லாம் ஒண்ணுமில்ல.. இன்னைக்கு இட்டமொழி போயிருந்தேம்லா. அங்கின நம்ம நல்லசிவம் அண்ணாச்சியப் பாத்தேன். அண்ணாச்சி கிட்ட பேசிட்டிருக்கும்போது கோயில் கொடையெல்லாம் எப்படியிருக்குன்னு விசாரிச்சாக. நான் துட்டுக்கு வழியில்லாம அலையுதேன்னு சொன்னேன். 'எதுக்குலே இப்படி இருக்கிய.. என் கிட்ட கேட்டா தரமாட்டனான்னு சொன்னாக. சரி நூறு ரூவா தருவாக போலிருக்குன்னு நெனச்சா மூணு நூறு ரூவா நோட்டையில்லா எடுத்துத் தந்தாக. "இதை முன் பணமா வச்சுக்கடேய். ஊருக்கு ரெண்டு நாள்ல வருவம்லா. அப்ப இன்னும் எரநூறு தாரண்டேய்"னு சொல்லியிருக்காக. அதனால அவுக வரதுக்கு முன்னால எல்லாம் அவங்கவங்க பாடத்தை ஒழுங்காப் படிச்சு நாடகத்துல ஒழுங்கா நடிங்க. அண்ணாச்சி ஊருக்கு வந்தாருன்னா ஒத்திகைக்கு வருவாருல்லா."

அந்தக் கூட்டத்தில் கொஞ்ச நேரம் அசைவு ஏதுமில்லை.

"யேய் செல்லப்பா, அப்படின்னா நாடகம் முடிஞ்ச உடனே அளவு இட்டிலி போடாம நெறய போடுடேய்!" வள்ளிதான் முதலில் சொன்னான். அவன் கவலை அவனுக்கு.

"அதுக்கென்னலேய்.. போட்டுடுவோம். அத விட முக்கியமான ஒண்ணு இருக்குல்லா. நேத்து நான் திருநவேலி போயிருந்தம்லா. டவுண்ல மாலாவைப் பாத்துப் பேசியிருக்கேன். அவ சரின்னு சொல்லிட்டா. துரை அண்ணாச்சிக்கு யோகம்தான்!" செல்லப்பா சிரிக்க, துரை அண்ணாச்சிக்கு நடப்பது கனவு போல இருந்தது. மாலாதான் சுற்று வட்டாரத்தில் பரவலாக அறியப்படும் நாடக நடிகை. பார்ப்பதற்கும் கொஞ்சம் பளிச்சென்று மப்பும் மந்தாரமுமாக இருப்பாள்.

மாலாவோடு வள்ளுவர் கலா மன்ற 'செட்டிங்'கில் சிவப்பு, மஞ்சள், ஊதா வண்ண விளக்கு வெளிச்சத்தில் 'மானா மதுர குண்டு மல்லியே' மானசீகமாகப் பாடுவதற்கு அவருக்கு அது போதுமானதாக இருந்தது. பிறந்த பயனை அடைந்தது போல வாய் நிறைய புன்னகையோடு வலம் வர ஆரம்பித்தார் அண்ணாச்சி.. 'நூறு ரூவா குடுத்தது வீணாப் போவல' என்று மனசுக்குள் கணக்கும் ஓடியது அவருக்கு.

"என்னது, மாலாவை நடிக்கக் கூப்பிடப் போறியா?" பாபநாசம் அண்ணாச்சி கேட்டார்.

"ஆமா அண்ணாச்சி!"

"வள்ளி நடிக்காம்னுல்லா மொதல்ல சொன்னே?"

"ஆமா வள்ளிதான நடிக்குறதா இருந்துது"

"ஆனா, மாலா நடிக்கப் போறான்னு சொல்லுத?"

"ஆமா. அன்னைக்குக் கையில துட்டு இல்லல்லா. அதனால அப்படி. இப்போ அண்ணாச்சி துட்டு தந்திருக்காரு. அதான் இப்படி. மாலா வந்தா கூட்டம் வரும்லா."

"ஏமாத்துதீங்கடேய்.. வருசம் பூரா கதாநாயகனா நடிச்ச என்னை வில்லனா நடிக்க வைக்குறதுக்குத்தான இந்த நடிப்பு?" பாபநாசம் அண்ணாச்சி கொதித்தெழுந்தார்.

"யார் நடிக்கா? நானா நீரா?" செல்லப்பாவுக்கும் மூக்கு சிவக்க ஆரம்பித்தது.

"மொதல்லே என் கிட்ட சொல்லாம, என்னை ஏமாத்திப் போட்டு நாடகம் நடத்திடலாம்னு பாக்கியளோ?" பாபநாசம் பொங்க ஆரம்பிக்க,

"ஆமாவேய்.. அப்படித்தான்னு வச்சுக்கும்வேய்.. இப்ப அதுக்கு என்னங்கீரு?"

"என்னலேய் மரியாத தெரியாத பயலா இருக்க. நீ கூப்புட்டு நடிக்க வந்தேன் பாரு. என் புத்தியத்தான் செருப்பால அடிக்கணும். என்னவேய் சுப்பையா, நீருமாவே இதுக்குக் கூட்டு?" பாபநாசம் கணையைத் திசை திருப்ப, "அய்யய்யோ எனக்கு ஒண்ணும் தெரியாது'" என்றார் சுப்பையா வாத்தி.

நிலவரம் மோசமாவதைப் பார்த்து மற்றவர்கள் பாநாசத்தைச் சமாதானப்படுத்த, செல்லப்பாவை தள்ளிக் கொண்டு ஜான் அண்ணன் வெளியில் போனார்.

"நானாவே அவரை வில்லன் வேசம் போடச் சொன்னேன். பொம்பள வேசத்துக்கு ஆளில்லன்னவுடனே நான் வில்லனா நடிக்கேன்னு சொன்னது இந்த வேசா மொவந்தானே?.. எவன் தாலியறுத்தா என்னன்னு கிடக்காம நாடகம் போட அலையுதேன் பாரும். எனக்கு இன்னம் வேணும்வேய்" செல்லப்பா ஜான் அண்ணனிடம் புலம்பிக் கொண்டிருக்க, உள்ளே பாபநாசம் தன் கலையுலக வாழ்க்கைப் பெருமையை தானே சொல்லிக் கொண்டு தனக்கு உரிய மரியாதை கிடைக்காத இடத்தில் இனி நடிக்க மாட்டேன் என்று முழங்கிக் கொண்டிருந்தார். ஆனால், அவர் பேசுவதைக் கேட்கத்தான் ஆளில்லை.

கொஞ்ச நேரப் பொருமலுக்குப் பிறகு பாபநாசம் தானாகவே சுப்பையா வாத்தியிடம் போய், "நான் இந்த நாடகத்துல நடிக்கணும்னா நான் கதாநாயகனா நடிச்சிருந்தா எப்படி எனக்கு பாட்டு வைப்பியளோ அதுமாதிரி எனக்கு மாலா கூட ஜோடிப் பாட்டு வைக்கணும். அப்படிச் செய்யுங்க.. இல்லன்னா இப்பவே சொல்லுங்க. என்னை என்னமோ போக்கத்த பயன்னு நெனச்சுக்கிட்டு இருக்கியளா? நூறு கதாநாயகி கூட நடிச்சிருக்கேன்வே"

சுப்பையா வாத்தியாருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை

"அண்ணாச்சி, நீங்க வில்லன் வேசம்லா போடுதீங்க, உங்களுக்கு எப்படி ஜோடிப் பாட்டு வரும்?"

அவரது கேள்வியை பாபநாசம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.

"வில்லன் வேசம் போட்டா என்ன? கதாநாயகனுக்குக் கனவுப்பாட்டு வைக்கியள்ளா? அது மாதிரி எனக்கும் வைங்க.. கதாநாயகன் மட்டும்தான் கனவு காங்கணும்னு எவம்லே சொன்னான்? வில்லனும் கனவு காண்பான்னு சொல்லும். எவன் கேப்பான்? என்ன செய்வியளோ ஏது செய்வியளோ எனக்குத் தெரியாது. எனக்கு ஜோடி பாட்டு வேணும். அவ்வளவுதான். இல்லன்னா நீங்களே ஆளப் போட்டு நாடகத்த நடத்துங்க." சொல்லி விட்டு ஒத்திகைக்குக் கூட இருக்காமல் அவர் கிளம்பிப் போவதையே பார்த்துக் கொண்டிருந்து விட்டு செல்லப்பா சொன்னான்..

"போவட்டு போவட்டு.. இங்க கடவுளே களனித் தண்ணிதான் குடிச்சிட்டிருக்குறாராம். பூசாரிக்கு புண்ணாக்கு வேணுமாமுல்லா?? அவரப் போவச் சொல்லுவே.. கூரைக்கு மேல சோத்தப் போட்டா ஆயிரம் காக்கா வரும். இவரு செரைக்கலன்னா மசுரு போவாதுன்னு எவன் சொன்னான்? வேற யாராவது கிடைக்காமலா போயிடுவான்?" செல்லப்பா வீறாப்பாகச் சொல்லி விட்டாலும் உடனே ஆள் கிடைக்கவில்லை.. இரண்டு நாள் தேடிப்பார்த்தும் ஆளில்லாததால் சுப்பையா வாத்தியாருக்குக் கொஞ்சம் பயம் வந்துவிட்டது.

"நீ என்ன மயித்துக்குடே அவரு கிட்ட மாலா நடிக்கப் போறதப் பத்திச் சொன்னே?" சுப்பையா வாத்தி செல்லப்பாவிடம் கேட்டார்.

"ஆமாவே, என் கிட்ட கேளும். அந்தப் படுக்காளிப் பய நடிக்க மாட்டேன்னு சொன்னாம்லவே. அப்ப வாய்க்குள்ள கொழக்கட்டயா வச்சிருந்தீரு?" செல்லப்பா கடுப்பானான்.

"அவரு பெரிய நடிகருல்லாடே"

"ஆமா. மயித்தப் புடுங்குன நடிகன். என் வாயப் புடுங்காதீரும்வே. நடிகனாம்ல நடிகன்?! ஊரு உலகம் காணாத நடிகன். பிச்சக்காரப் பய!"

"சரிடே, இப்ப என்ன செய்யணுங்க? ரெண்டு நாளுதான இருக்கு. மாலா என்னைக்கு வாரா?"

"என்ன எளவாவது செய்யுங்க. அவ நாடகம் நடக்குத அன்னைக்குக் காலைலதான் வருவா"

"ஒரு நாள் முந்தி வரச் சொல்லலாம்லா?"

"ஒருநா முந்தி வந்து ரெண்டு வருஷம் முன்னால ஒருத்தி பட்டபாடு எங்களுக்குத் தெரியாதா? ஊராவே இது?! மாட்டுக்குப் பொடவ கட்டிக் கூட்டுட்டு வந்தாலும் மொறச்சு மொறச்சுல்லா பாக்கானுவ. பொம்பளைய வாழ்க்கையிலேயே பாத்ததேயில்லன்னு சாமி மேல சத்தியம் பண்ணுவான போல. இந்த ஊருக்கே இனி வரமாட்டேன்னு சொல்லிட்டுல்லா போனா அவ.. இவளும் அந்த மாதிரி சொல்லணும்னு உமக்கு ஆசையாக்கும்?" செல்லையா கேட்டதும் சுப்பையா வாத்தியார் பேசாமல் இருந்து விட்டார்.

"சரிடே, இப்ப என்னதான் செய்யச் சொல்லுத? நடக்குற கதயப் பேசம்டே'

"ஆமாவே.. எல்லாத்துக்கும் என் காமாட்டுலேயே வந்து முட்டும். நான் ஒருத்தந்தானா வேட்டியக் கட்டிக்கிட்டு நடக்கேன். நீரும்தானே கட்டிக்கிட்டு இருக்கீரு? எவனையாவது புடிச்சிப் போட்டு நாடகம் நடத்தத் துப்பில்ல. வேற என்னத்தச் செய்யச் சொல்லுதீரு? அந்த வேசா மொவனையே நடிக்கச் சொல்லித் தொலையும்.. ஆனா ஒரு விசயம். ஒரு பாட்டுத்தான் குடுப்போம். அதும் கடைசிலதான் வைக்கணும். சம்மதம்னா நடிக்கட்டு. இல்லேன்னா நாடகத்தையே மண்ணள்ளிப் போட்டு மூடும். இனிமே நாடகம் போடுதேன் மயிரப் புடுங்குதேன்னு எவனாவது என் கிட்ட வந்தியன்னா நடக்குற கதய வேற.. சொல்லிப்புட்டேன் பாத்துக்கிடும் " சொல்லி விட்டு செல்லப்பா எழுந்து போனான். போனவன் போனவன் தான்.

அதன் பிறகு நாடகத்தன்று காலையில் மாலா ஒத்திகைக்கு வந்தபோது கூட செல்லப்பாவைக் காணவில்லை.. மற்ற காட்சிகளையெல்லாம் மறந்து விட்டு காலை முழுவதும் ஜோடிப் பாட்டுக்கு ஒத்திகை நடத்த வேண்டுமென்று பாபநாசம் சொன்னதை மற்றவர்கள் மறுத்து விட்டார்கள். அப்போதும்..............

"செல்லப்பா அண்ணனை எங்க காணோம்?" என்று மாலா அக்கறையோடு விசாரிக்க, "லேய், செல்லப்பா இவளுக்கு அண்ணன்னு சொல்லுதா. அப்ப அவன் இனிமே எனக்கு மச்சாம்லா" என்று ஒத்திகை பார்க்க வந்திருந்த சிலர் சொல்லிக் கொண்டிருந்தபோதும்................

மதியம் மாலாவோடு சேர்ந்து பாபநாசம் ஆட்டத்திற்கு ஒத்திகை பார்த்தார். "இடுப்புலல்லாம் கை வைக்காதிய அண்ணாச்சி" என்று மாலா சொல்ல மற்றவர்கள் சிரித்தார்கள். சுப்பையா வாத்தியார் தலையில் அடித்துக்கொண்டார். அப்போதும்.............. செல்லப்பா வரவில்லை. ஆளைக் காணவுமில்லை.

நாடகம் அம்மன் வீதி உலா முடிந்து தர்மகர்த்தாக்களுக்கெல்லாம் மாலை போட்டு, வாழ்த்துரை எல்லாம் வழங்கப்பட்டு தொடங்கும்போது மணி 11 ஆகியிருந்தது. பாபநாசம் பதட்டமாகவும், கோபமாகவும் இருந்தார்.

"எனக்கு ஜோடிப் பாட்டு கடைசியில் வச்சிருக்கிய. இவ்வளவு லேட்டாச்சுன்னா யாரு பாப்பாங்க?" என்று பொருமிக் கொண்டிருந்தார்.

"இல்லன்னா மட்டும் இவரு ஆடுறதப் பாக்கவா ஆளுங்க வர்றாங்க. கோட்டிக்காரத் தா---ளியால்ல இருக்கான். நாங்களே செல்லப்பாண்ணன் எங்க போய்த் தொலைஞ்சாருன்னு தேடிக்கிட்டி திரியிதோம். வந்துட்டாரு தூக்கித் தோள்ல போட்டுக்கிட்டு" என்று அவரைத் திட்டிக்கொண்டு 'தம்'மடிப்பதைத் தொடர்ந்தான் திரைச்சீலையை இழுக்கும் கணேசன்.

நாடகம் பாதி முழுங்கப்பட்ட வசனங்களோடும், மிகையான நடிப்போடும், ஒலிவாங்கியின் அசுரக் கூச்சலோடு கூடிய ஒலியோடும், ஆர்ப்பாட்டமான சிரிப்போடும் எதிரில் இருக்கும் ஜனங்களைப் பற்றிய அக்கறை இல்லாமலும் தொடர்ந்து கொண்டிருந்தது. அப்போதும் காணவில்லை செல்லப்பாவை.

துரை அண்ணாச்சி கலாமன்றத்தின் தயவில் முதல் தடவையாக டை கட்டிக் கொண்டு இரவல் வாங்கிய கறுப்புக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு மாலாவோடு ஆடும்போது கண் சரியாகத் தெரியாமல் தடுக்கி கீழே விழுந்ததைப் பார்த்து ஜனங்கள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தார்கள்.

திரைக்குப் பின்னால் பாபநாசம் அண்ணாச்சி தீவிரமான முகத்தோடு உலாவிக் கொண்டிருந்தார்.

"என் பாட்டு எப்படே வருது?" என்று அடிக்கடி கணேசனைக் கேட்க அவன் கடுப்பாகி, "யாருக்குவே தெரியும்? நாடகத்துல நடிக்கேங்கீரு. உமக்கே தெரியலை. எனக்கு எப்படிவே தெரியும்? வெளங்காத ஆளால்லாவே இருக்கீரு!" என்று திட்டித் தீர்த்துவிட்டான். அப்போதும் செல்லப்பா வரவில்லை.

ஒருவகையாக 34வது காட்சி நடந்து கொண்டிருந்தபோது சுப்பையா வாத்தி பாபநாசத்திடம் போய், "அடுத்த காட்சி உம்மோடதுதான்வே. எப்படி ஆடுறதுன்னு ஞாபவம் இருக்குல்லா? மாலா இடுப்புல மட்டும் கைய வக்காதிய கேட்டியளா? அவ கோபப்படுதால்லா?!" என்றார்.

"ஆமா. பர தேவதைல்லா அவ. எத்தனை பேரு அவ மேல எங்கெங்க கைய வச்சிருக்கான்னு எனக்குத் தெரியும்வே. அவ அப்படித்தான் சொல்லுவா. நாங்க பாத்துக்கிடுதோம். நீரு உம்ம துருத்திய மட்டும் ஊதும். என்ன?" என்றார் பாபநாசம். அவருக்குத் தெரியாமல் தலையிலடித்துக் கொண்டார் சுப்பையா வாத்தி.

அடுத்த காட்சி தனதென்பதால் தனது ஒப்பனை கலைந்து விட்டதாக பாவித்துக்கொண்டு முகத்தை துடைத்துக் கொண்டார். மீண்டும் கணேசனிடம் "மேக்கப்பு கலைஞ்சிருக்கானு பாருடே!" என்று கேட்க, "சட்டியில இருக்கதுதானவே வரும். மேக்கப்பு போட்டா மட்டு நீரு எம்சியாரு ஆயிடுவீரோ. போரும்வே!" என்றான். ராத்திரி இரண்டு மணியாகியும் நாடகம் முடியாத கவலை அவனுக்கு..

ஒரு வகையாகக் கடைசியில் அந்தக் காட்சி வந்தே விட்டது. காட்சியின் பின்னணியில் பார்வையாளர்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு மாலா நின்றிருக்க பாபநாசம் உள்ளே நுழைந்து அவளைக் கைப்பிடித்து மெல்லத் திருப்ப வேண்டும்.

பாபநாசம் இந்தக் கதையில் தான் வில்லன் என்பதை மறந்து கதாநாயகத் துள்ளலோடு அருகில் சென்று மாலாவின் கைபிடித்துத் திருப்ப, திரை விலகி ஒளி விழுந்தபோது மாலாவாக நின்று கொண்டிருந்தான் செல்லப்பா.

அரங்கு அதிர்ந்து ஆர்ப்பரிக்க, பேயறைந்த முகத்தோடு பாபநாசம் திகைத்து நிற்க, "வே வெங்கலப் -----கு, ஆடும்வே!" என்றான் திரை இழுக்கும் கணேசன். பாபநாசம் ஆடாமல் அப்படியே நிற்க செல்லப்பா அவருக்கும் சேர்த்து ஆனந்த நடனமாடினான்.

கூட்டம் செல்லப்பாவோடு சேர்ந்து ஆர்ப்பரிக்க, ஆடாமல் நின்றிருக்கும் பாபநாசத்திடம், "வே.. பாபநாசம் ஆடும்வே!" என்று உள்ளிருந்து கணேசன் கூவ, வேறு வழியில்லாமல் அவர் ஆடத் துவங்க, 'அண்ணாச்சி, செல்லப்பா இடுப்புல கைய வச்சுக்கிட்டு ஆடுங்க' என்று மாலா சொல்ல... பாபநாசம் அண்ணாச்சியின் முகம் கறுத்து விட்டது.

சொல்லத் தேவையில்லை; 'கறுத்த முகம்' தான் பாபநாசத்தின் கடைசி நாடகம்.

******

வாலிப சிங்கங்களே, இதுவும் மரத்தடியில ஆக்குன பழைய சோறுதான். புதுசா இனிமேதான் ஆக்கணும். நேரமில்ல. சீக்கிரம் வந்துடுறேன்

Friday, May 4, 2007

ஏதிர் விருந்து

நமக்கு யாராவது விருந்து குடுத்தா எதிர் விருந்து கொடுக்குறதுதான் நம்ம பம்பாடு அப்படிண்ணு எங்க தல அடிக்கடி சொல்லுவாரு. இதுல ஆப்பு மட்டும் விதிவிலக்கு. இதையும் அவரேதான் சொல்லுவாரு.

அதான் எங்களை அழைச்சி ஆப்படிச்ச ச்சே விருந்து குடுத்த பயபுள்ளைக பாசக்கார சங்கத்துக்கு நாம ஏதாச்சும் பண்ணனும்யான்னு தல ஃபிளைட்ல பறந்துகிட்டே அவசரமா கட்டளை போட்டுட்டாரு. அதான் உடனடியா ஒரு அவசர எதிர் விருந்து(எதிரி விருந்து அல்ல) ஏற்பாடு.











ப.பா.ச உறுப்பினர்களே! இதையே சங்கத்து சார்பா என் அழைப்பா ஏத்துகிட்டு எல்லாரும் வந்து கலந்துக்குங்க!

என்னதான் நீங்க காரத்தைப் போட்டு, புளியைக் கரைச்சி கொடுத்தாலும் நாங்க அப்படி செய்யமாட்டோம்! ஏன்னா ப.பா.ச எங்களோட சிஸ்டர்ஸ் கன்சர்ன் ஆச்சே!

Thursday, May 3, 2007

கல்யாணக்களை (C&P)

எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துச்சுங்க. அது என்னா கல்யாணக் களை கல்யாணக் களைன்னு சொல்லுறாய்ங்களே அப்பிடின்னா என்னான்னு, நாலஞ்சு பெருசுகளை கூப்பிட்டுக் கேட்டுப் பார்த்தேன். ஒன்னு எனக்கு ஆப்பு வக்கிற கணக்கா சரிப்பா உங்கப்பன்க்கிட்டே சொல்லி சிக்கிரம் கால்கட்டு போடச் சொல்லுறேன்னு சொன்னுச்சு. அட கெரகத்தே நமக்கு நாமே திட்டத்தின்படி ஆப்புவைச்சிக்கிற வேணாமின்னு தெரியமா கேட்டுட்டேன்னு சொல்லி ஓடியாத்திட்டேன். அப்புறம் நம்ம பட்டிக்காட்டு பெருசுக்கிட்டே கேட்டேன். அவரு அதுக்கு ஒரு புது விளக்கவுரை கொடுத்தாரு, என்னானா

"நல்லா விளைஞ்சு கிடைக்கிற வயக்காட்டுலே தேவையில்லமே இருக்கிற செடி,பதறுகளை தான் நாங்கெல்லாம் களைன்னு சொல்லுவோம், ஆனா கல்யாணக் களை'ன்னா உன்னைமாதிரி இளந்தாரி பயலுவெல்லாம் ஒனத்துக்கும் உதவாத களையா மாறிப்போயிடக் கூடாதுன்னு தாப்பா அப்பிடி சொல்லுறது"

அடபாவிங்களா ஒரு ஆளும் உருப்படியான விளக்கம் கொடுக்கமாட்டிங்களா, அப்பிடியே கொடுத்தாலும் நமக்கேதாய்யா ரிப்பிட்டுன்னு வருது. சரி என்னா பண்ணுறது சுயமாவே சிந்திச்சு நம்மகூடவே திரிஞ்ச நாலுப் பயப்புள்ளகளை கவனிச்சிப் பார்த்ததில்லே சின்ன க்ளு கிடைச்சது.

என்னோட கொலிக் ஒருத்தன் எப்பவும் சாயம் போன கலருலே ஒரு சட்டை அப்புறம் பேகிபேரல் பேண்ட்ன்னு தினமும் ஆபிஸ்க்கு வருவான். என்னாய்யா நீ எவ்வளவு பெரிய ஆளூ, நல்லா நாலு டிரெஸ் எடுத்து அதே போட்டுக்கிட்டு வரக்கூடாதா'ன்னா கேட்டா இந்த சட்டை என்னோட மொதல் செமஸ்டருலே எடுத்தது... இந்த பேண்ட்சர்ட் நான் +2 பாஸ் பண்ணினதுக்காக எங்க மாமா எடுத்து கொடுத்ததுன்னு லெக்சர் குடுப்பான்.அந்த லெக்சருக்கே பயந்தே எதுவுமே கேட்குறதில்லே. ஆனா இப்போ பயப்புள்ள கலரு கலரா டிரெஸ் போட்டுக்கிட்டு வர்றான். கூலிங்கிளாஸ், புது கேமரா செல்போன் வித் ஃப்ளுடூத்'ன்னு ஹைடெக்கா வேறே மாறிபோயிட்டான், சும்மாயிருக்க மாட்டாமே என்னாப்பா தீடீரென்னு மாறீட்டேன்னு கேட்டேன். அதுக்கு அவன் ஆமாம் என்னோட வுட்பீ'யோட கட்டளைங்கறான். இந்த மொபைல் அவங்க வாங்கி கொடுத்தது, அதிலே ஆட்இன் கார்டு போட்டு பேசிக்கிட்டு இருக்கோமில்லேன்னு உலகத்துக்கு தேவையான செய்தியே வேற சொன்னான்.

அடபாவி ஒரு செங்கல்கல்லு சைஸ் செல்'லே தூக்கிட்டு வெயிட்டான பார்ட்டியா இருந்தியே! என்னா ஆச்சுடா மக்கா உனக்கு??
பேசுங்கடா நல்லா பேசுங்க! செல்லுலே பேசியே செவிட்டு பயலா போயித் தொலைங்கடா...!

இன்னொரு பயப்புள்ள இவனும் என்கூடதான் குப்பை கொட்டுறான். இவனோட பேரே கல்லுளிமங்கன்னு வச்சிருக்கலாமின்னு நினைக்கத்தோணும். ஒரு முக்கியமான விஷயத்துக்குகூட வாயே தொறக்கமாட்டான். எதானச்சிம் ஒன்னுகேட்டா "ஓ இஸிட்" "ஓகே" இவ்வளவுதான் பதில்லுன்னு சொல்லி மெதுவா காத்தோட உளறுவான். ஆனா என்னா ரசாயான மாற்றம் நடத்துச்சோன்னு தெரியலே இப்போ பயப்புள்ளே நான்ஸ்டாப்'ஆ பேச ஆரம்பிச்சிட்டான். ஒருநாளு சாப்பிடறே நேரத்திலே எப்பிடி இருக்கு இந்த லைப்புன்னு கேட்டுத்தொலைச்சேன். பேசினான் பார்க்கணும் அய்யோ சாமி அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கான். ஓரமா கிடைக்கிற தீட்டின ஆப்புலே நாமே தேடிப் போயி உட்கார்த்தே கதையா பே..பே...ன்னு முழிச்சிக்கிட்டு சோத்தே தின்னேன்.

எங்கூரு பய ஒருத்தன் எப்பவுமே தேமே'ன்னு தான் திரிவான். நல்லநாளு பொல்லநாளுன்னு பார்த்தாலும் மொகத்திலே யாருக்கிட்டேயோ ரெண்டு அடிவாங்கின மாதிரியே திரிஞ்சுக்கிட்டுதான் இருப்பான். இப்போ போனவாரம் ஊருக்குப் போனப்போ ஒரு சாவுவீட்டிலே பார்த்தேன். அவன் பாட்டுக்கு எல்லாத்துக்கிட்டெயும் சிரிச்சிப் பேசிக்கிட்டு இருந்தான். அடபாவி கல்யாணவீட்டிக்கு வந்தா கூட சிரிக்க மாட்டான் ஆனா இங்கே எழவு வீட்டிலே வந்து எல்லா பயலெயும் லந்து விட்டு சிரிக்கிறானே'ன்னு அவனே தனியா கூப்பிட்டு போயி என்னாடா ராசா என்னா ஆச்சு உனக்குன்னு கேட்டேன். அதுதாண்டா கல்யாணம் காட்சின்னு சொல்லுறது'ன்னு பதில் சொன்னான். சரிதான் நமக்கெல்லாம் அதப்பத்தி என்னா தெரியப் போகுதுன்னு செவனேன்னு வந்திட்டேன்.

டிஸ்கி #1:-

இதெல்லாம் வயித்தெரிச்சல் வந்து நான் போடலேன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.

கல்யாணக் களை'ன்னா கிழ்கண்டவைகள் தான் :-

1) நல்லா அழகான பயலுக பூராவும் அசிங்கமா டிரெஸ் பண்ண ஆரம்பிச்சிருவானுங்க!
2) புது டெக்னாலாஜியே உபயோகப்படுத்த ஆரம்பிச்சிருவானுங்க!
3) வாய் கிழிச்சுப் போற அளவுக்கு பேச ஆரம்பிச்சிருவானுங்க!
4) கேட்கிறவன் உண்மையா நம்ம பேசுறதே கேட்கிறானாகூட தெரியாமே பேசி கொல்லுறானுவே!
5) குறையாமே பத்து மணி நேரமாவது போன்லேயே பேசுறாய்ங்கே!

டிஸ்கி #2:-

தல'யோட இந்த போஸ்ட்'க்கும் மேலே இருக்கிறதுக்கும் எந்த சம்பந்தமுமில்லைன்னு பொய்யே சொல்லமாட்டேன் :)

Wednesday, May 2, 2007

மொதல்ல ஒரு கத சொல்லுதேன்

வருத்தப்படாத வாலிப சிங்கங்களே,

வழக்கமா நான் 'கவுஜை'தான் எழுதுவேன். ஆனா சிங்கங்கள் பொழ்ச்சு போகட்டும்னு ஒரு கத சொல்லி ஆரம்பிக்கலாம்னு பாக்கேன். கதன்னா உங்கவீட்டு கதை எங்க வீட்டு க்தை இல்லை. நவீனத்துவமான கதை. "என்னடா கெட்ட வார்த்தை சொல்லுதானே?"ன்னு மனசுக்குள்ள திட்டாம படிங்கப்பு..இந்த மாசம் முழுக்க என்ன செய்யப் போறேன்னு உங்களை மாதிரியே எனக்கும் ஒண்ணும் பிரியலை இன்னும். இருந்தாலும், வருத்தப்படாம எழுதுறதுன்னு நெனச்சிருக்கேன். நீங்க இந்த வாலிபனால வருத்தப்படாம இருந்தா சரிதான். நல்லா இருங்கடே!!

*******************************

"காலம் கடந்து போவதைப் பற்றிய பிரக்ஞையின்றி, உள்ளிருப்பு வற்றிப் போன எரிச்சலில் அமிலம் சுரக்கும் வயிறு. அடுத்தவன் பொருளை அபகரித்தே பழக்கப்பட்டுப் போனாலும் வாழ்க்கை முறை அதுவே யென்றான பிறகு வெளிநியாயங்களைப் பற்றிய அக்கறை கொண்டு வாழத் தலைப்பட அவசியமில்லை. அடுத்த வேளை வந்து பசிக்கத் துவங்கி விட்டது. நேரம் யாருக்காகவும் காத்திருக்காது போகலாம். ஆனால், இந்தப் பசியாவது காத்திருந்து தொலைக்கலாம்.அதுவும் எவருக்காகவும் காத்திருக்காமல் வந்து தொலைக்கிறது.

இன்றைய மோசடியை யாரிடம் துவங்குவது என்பதில்தான் அடிப்படை பிரச்சனை. இந்தத் திருட்டு, வாழ்க்கையில் முன்னிலைக்கு வந்து விடுவதற்காக இல்லையென்றாலும் இப்படித் திருடி வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளி விட்ட கடவுள் மீது கோபமாக வந்தது. பசிக்காக நடத்தும் இந்தத் திருட்டை பெரிது பண்ணாமல் விடும் பெரிய மனசு எவருக்கு இருக்கிறது?

அடுத்தவனைப் பற்றி கவலைப்பட நான் யார்? இப்போது என்னுடைய ஒரே குறிக்கோள் பசிக்கு உணவு. பாய் கடையில் போய் பார்க்கலாம். ஆனால், அங்கே நாய்களும் மனிதர்களும் ஈக்களும் பேதமில்லாமல் நின்று கொண்டிருப்பார்கள். அடிதடி சண்டை போட்டு உணவைப் பெற்றுக் கொள்ள உடலில் முன்போல வலுவில்லை. வலுவற்ற எதிரியை நேர்கொள்வதுதான் புத்திசாலிக்கு அழகாக இருக்க முடியும்.

திருடுவதென்வது இப்போதெல்லாம் அத்தனை எளிதல்ல. நிறைய தடுப்பு முறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளென்று இல்லாதவன் திருட்டை தடுப்பதற்கு ஏராளமான் முன்னெச்சரிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படி அன்றாடப் போராட்டத்திற்கு நடுவில்தான் வாழ்க்கை என்பது அலுப்பு தரத்தான் செய்கிறது. என்ன செய்து தொலைய? பேசிக் கொண்டிருந்ததில் நேரமாகி விட்டது. எனது எதிராளியை அடையாளம் கண்டு கொண்டேன். சாப்பாட்டு நேரம் வந்து விட்டது.

இனிதான் காய்களை நான் சாமர்த்தியமாக நகர்த்தியாக வேண்டும். இந்தக் கடையை சில காலமாகவே கவனித்து வந்து கொண்டுதான் இருக்கிறேன். காலை நேரமானால் தொடங்கும் கடை 10 மணிக்கெல்லாம் கலைந்து போகும். 9 மணிக்கு ஆட்கள் நிறைய வருவார்கள். அப்போது கைவரிசையைக் காட்ட முடியாது. என்னைப் போல வயதாகி விட்டதால் 10 மணியாகும்போது அல்லது கடை முதலாளி தளர்ந்து போகும் போதுதான் நான் நினைப்பதை நிகழ்த்த முடியும். வயிறு பசித்துக் கொண்டிருந்தாலும், நான் கொக்காக இல்லாமல் போனாலும், கொக்கைப் போலக் காத்திருக்க முடிவு செய்தேன்.

மனிதர்கள் வந்து கொண்டிருந்தார்கள் - பல உடைகளில், பல அளவுகளில். சிலருக்குக் கடன் வேண்டுமாம். கடைக்காரி மறுத்து ஏதோ வேசமாகப் பேசிக் கொண்டிருந்தாள். கடன் தர மறுப்பவள் கடையிலிருந்து நான் அபகரிக்கப் போவதை எப்படி ஏற்றுக் கொள்வாள்? அவளே இந்த வய்தான காலத்திலும் உள்ளதை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறாள். அவளிடம் போயா திருடுவது என்று மன்சாட்சி கொஞ்சமே கொஞ்சம் உறுத்த பசி மனசாட்சியை முறைத்ததில் அது அடங்கிப் போனது.

வாக்குவாதத்திற்குப் பின் கடைக்கார மூதாட்டி கடன் கேட்டவனுக்கு ஏதோ கொடுத்தாள். அவனும் இதுவரை ஏதுமே நடக்காதது மாதிரி சாப்பிடத் துவங்கி விட்டான். பசியென்று வந்து விட்டால் எல்லாம் ஒன்றுதான் போலிருக்கிறது என்று சமாதானம் செய்து கொண்டேன். அவனுக்கு வசவு வலிக்காதது போல எனக்கும் கிடைக்கப் போகும் வசவுகள் வலிக்காது என்று தோன்றியது.

கொஞ்சமாக புழுக்கம் துவங்கியது. சாலையில் போக்குவரத்துத் துவங்கியதன் அறிகுறியாக புழுதி மேலெழுந்து வரத் துவங்கியது. பள்ளிக்கூட பிள்ளைகள் அணிவகுத்து இன்றைக்கு எந்த டீச்சர் அடிப்பார்களோ என்ற கவலையோடு புத்தகப் பையை சுமந்து கொண்டிருந்தார்கள். அவ்வப்போது பிளிறிக் கொண்டு ஓடின பேருந்துகள்.

எல்லாரும் அவரவர் வேலைகளில் தங்களை பொருத்திக் கொள்ளும் அவசரத்தில் இருக்க கடையில் கூட்டம் மெல்ல கலையத் துவங்கியது. சிலருக்குக் கூட்டம்தான் கொண்டாட்டம். எனக்குக் கூட்டம் கலைந்தால்தான் என் வேலையைச் செய்ய முடியும். என் காத்திருப்பு நீளத் துவங்கியது.

ஒருவகையாகக் கடையில் ஆட்கள் குறைந்து போனதும் கடையில் பரப்பி வைத்திருந்த பலகாரங்களை நோட்டம் விட்டேன். இப்போது அந்த மூதாட்டி எல்லாவற்றையும் அடுக்கி வைத்து விட்டு புறப்படும் யத்தத்தில் இருந்தாள். இன்னும் ஓரிரு நிமிடங்களில் எல்லாவற்றையும் அடுக்கி எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவாள்.அதற்குள்ளாக நான் செய்ய நினைப்பதைச் செய்து முடித்தாக வேண்டும். கடைக்காரி இப்போது இலைகளை அள்ளி எடுத்து பக்கத்திலிருக்கும் குப்பைத் தொட்டியில் வீசி எறிவாள். பக்கத்தில் போய் போடுமளவுக்கு அவளுக்குப் பொறுமையில்லை என்பதை இத்தனை நாள் அவதானிப்பில் அறிந்திருந்தேன் நான். அந்த சில நிமிடங்களில்தான் அவளது கவனம் சிதறும். அந்த நிமிடம்தான் தோதுவானது.

நினைத்தது போலவே கிழவி இலைகளை எடுத்து எறிவதற்காக நடக்க முனைந்த நேரத்தில் கிளையிலிருந்து உந்தி எழும்பி இறக்கை விரித்தேன். புவியீர்ப்பு விசையோடு சேர்ந்து கீழிறங்கி அந்தக் கூடையில் இருந்த வடையைக் குறி வைத்தவாறே பயணப்பட்டு அதனைக் கவ்விக் கொள்ளும்போதும், அதை திரும்பிப் பார்த்து கிழவி பதறி கல்லெடுத்து எறிய முற்படும்போதும் கவனம் சிதறாமல் பறந்து வந்தமர்ந்தேன் பக்கத்து மரத்தின் உயர்கிளையில். திருடி ஜெயித்த மகிழ்ச்சியை விட அதில் இருந்த் ஆபத்து கலந்த பதற்றம் உற்சாகமாக இருந்தது.

ரொம்பவே பசிக்கிறது. கதை சொல்லிக் கொண்டிருக்க நேரமில்லை. அப்புறம் ஏதாவது நரி வருவதற்குள்ளாக வடையைத் தின்றாக வேண்டும்.

******

என்ன எழவய்யா இதுன்னு கேட்காதீங்க.
காக்கா - நரி கதை தெரியுமுல்லா.
அத நவீனமா சிறுகதையா எழுதிப் பழகுதேன்.
எனக்கும் தெரியுமுல்லா எளக்கியம்?