Wednesday, February 28, 2007

மாமாவின் காதல் - நிறைவுப் பகுதி

மாமாவின் காதல் - முதல் பகுதி


அன்று கேண்டீனில் கூட்டம் அதிகமில்லை. ப்ரியாவும், இளாவும் டீக்குடித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள்.

வேகமாக ஓடி வந்த சுரேஷ் “ப்ரியா, மாமா பைக்ல போகும்போது ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு… தலைல நல்ல அடியாம் KMCHல அட்மிட் பண்ணிட்டாங்களாம், கிளம்பு போலாம்”. அவர்களோடு இளாவும் கிளம்பினாள்.

மருத்துவமனையை நெருங்க நெருங்க இளாவுக்கு அழுகை ஆரம்பித்திருந்தது. ICU வுக்குள் இருந்ததால் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அறுவை சிகிச்சை முடிந்து மாமா சுயநினைவுக்கு வர இரண்டு நாட்களானது. நினைவு திரும்பிய பிறகு அவன் அப்பாகூடவே அவனைப் பார்க்க போன அந்த நான்கு பேரோடு இளாவும் உள்ளேப் போனாள். அவன் அப்பா அவனிடம் அதிகம் எதுவும் பேசாமல் மருத்தவரைப் பார்க்கப் போய்விட்டார். அவர்கள் நால்வரும் அவனோடுக் கொஞ்சமாய்ப் பேசிவிட்டு திரும்பும் வரையிலும் ஓரமாய் அமைதியாய் நின்று கொண்டிருந்தாள் இளா. அவளிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. அவளும் அவனைப் பார்த்து விட்டு வந்ததோடு சரி.

அதன் பிறகு இரண்டு மாதம் அவன் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டி ஊருக்கேப் போய்விட்டான். அந்த இரண்டு மாதமும் இளாவிடம் எதாவது மாற்றம் தெரிகிறதா என்று கவனிப்பதே ப்ரியாவுக்கும், உமாவுக்கும் வேலையாக இருந்தது. ஆனால் அவளிடம் எந்த வருத்தமும் இருந்த மாதிரி தெரியவில்லை. உண்மையா, நடிப்பா என்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. இளாவிடம் கடைசியாக ஒருமுறை கொஞ்சம் சீரியசாக கேட்டு விடுவது என்று ப்ரியாவும், உமாவும் முடிவு செய்து அவளிடம் பேச அவளை கேண்டீனுக்கு வர சொல்லியிருந்தார்கள்.

“என்னங்க்கா ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க? வழக்கம்போல மாமாயணமா?”

“கொஞ்சம் சீரியசாப் பேசலாமா?” – ப்ரியா.

“நான் எப்பவுமே சீரியசா தான் பேசிட்டு இருக்கேன்! நீங்க தான் புரிஞ்சிக்க மாட்டேன்றீங்க”

“உண்மையிலேயே உனக்கு மாமாவப் பிடிக்கலையா?”

“பிடிச்சிருக்கவங்க எல்லாத்தையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்க்கா… ஆரம்பத்துல அவர் மேலக் கோபம் இருந்தது உண்மை…ஆனா இப்போ அவர் மேலக் கோபம் இல்ல.. பரிதாபமாதான் இருக்கு”

“அவர் எழுதினக் கவிதைகள் எதையும் நீ ரசிக்கவேயில்ல?”

“கவிதைகள் எல்லாமே வாசிக்கிறதுக்கும், ரசிக்கிறதுக்கும் தாங்க்கா எழுதறாங்க. அப்புறம் நல்லா கவிதை எழுதறாங்க அப்படிங்கறதுக்கெல்லாம் காதலிச்சுட முடியாது”

“ஏ…அதெல்லாமே உன்ன நெனச்சுதான் எழுதறார்னு உனக்குத் தெரியாதா?” - உமா

“ம்ம்ம்… நான் தெளிவா சொன்ன பின்னாடியும் அவர் இப்படி பண்ணிட்டு இருக்கிறது அவருக்கேத் தப்புனு தோணனும்!”

“ரொம்பப் பேசாத இளா… நீ எதிர்பார்க்கிற என்ன இல்ல அவர்ட்ட? உண்மையிலேயே சொல்றோம் அவர் உனக்கு perfect match. A friend for ever”

“அது நான் முடிவு பண்ணனும்ங்க்கா!”

“உனக்கென்ன மாமாவக் காதலிக்கிறது பிரச்சினையா? இல்ல காதலிக்கிறதே பிரச்சினையா?”

“…”

“காதலிக்கிறது தான் பிரச்சினை அப்படின்னா கவலையவிடு. உனக்காக உங்க அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கறதெல்லாம் மாமாவேப் பாத்துக்குவார்.”

“க்கா நீங்களா ஏதேதோப் பேசாதீங்க… என் மனச மாத்தலாம்னு முயற்சி பண்ணாதீங்க என்னோட முடிவுல எந்த மாற்றமுமில்ல நான் தெளிவாதான் இருக்கேன்”

“ம்ஹும் இவளுங்களத் திருந்த முடியாதுடி…பாக்க மாதவன் மாதிரி இருக்கான்னு எவனாவது ஒரு சைக்கோ கேஸ்கிட்ட இவளுங்களே போய் மாட்டிக்குவாளுங்க…ஆனா கொஞ்சம் நல்லாவனா இருக்கவன் தானா வந்து ப்ரபோஸ் பண்ணிட்டா மட்டும் போதும் ஓவரா தான் அலம்பல் பண்ணுவாளுங்க… இதுக்கெல்லாம் அனுபவிப்பா” – உமா கொஞ்சம் கோபமாகவே சொன்னாள்.

அவர்கள் பேசியது அவள் காதிலும் விழுந்தது.

இரண்டு மாதம் கழித்து மாமா மீண்டும் வந்த பிறகு, இளவரசி மனதை இனியும் மாற்ற முடியாது என்று நடந்ததெல்லாம் சொன்னார்கள் சுரேஷும், விஜயும். ஏற்கனவே விபத்தில் மாட்டிக் கொஞ்சம் சோர்ந்து போயிருந்தவனுக்கு இது மேலும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக அவள் தன்னைக் காதலிப்பாள், காதலிக்கிறாள் என நம்பிக் கொண்டிருந்தான்.

ஆனால் அவளிடம் எப்போது, எப்படி ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளே வந்து பேசியது ஆச்சரியமாயிருந்தது.

“எனக்கு உங்ககிட்டக் கொஞ்சம் பேசனும்”

“நெறையக்கூட பேசலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்”

“தயவு செஞ்சு இனிமேலும் நான் உங்களக் காதலிப்பேன்னு வீணா நம்பிட்டு இருக்க வேணாம்…நெக்ஸ்ட் இயர் உங்களுக்கு ப்லேஸ்மெண்ட் ஆரம்பிக்கப் போகுது அதுல கான்செண்ட்ரேட் பண்ணப் பாருங்க…”

“நீ இனிமேதான் என்னக் காதலிக்கனும்னு ஒன்னும் கிடையாதே… நீ தான் ஏற்கனவே என்னக் காதலிக்க ஆரம்பிச்சுட்டியே”

இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“எத வச்சு சொல்றீங்க நான் உங்கள காதலிக்கிறேன்னு”

“நீ என்னக் காதலிக்கிறேன்னு தோணுது அவ்வளவுதான், ஏன் , எப்படினு எல்லாம் எனக்கு சொல்லத் தெரியாது”

“ஆரம்பத்துல இருந்தே நீங்க காரணமில்லாமலே தான் எல்லாத்தையும் செஞ்சுகிட்டு இருக்கீங்க…அதான் பிரச்சினையே”

“காரணத்த வச்சு வந்தா அதுக்குப் பேர் காதலா?”

“பார்த்தவுடனே வந்தா அதுக்குப் பேர் காதலா?”

“பார்த்தவுடனே வந்தது காதல் இல்ல, காதலிக்கலாமா அப்படிங்கற ஆசை”

“சும்மா மழுப்பாதீங்க… காதல்ங்கறது ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறம் வரணும்… கண்டதும் காதல் எல்லாம் சினிமாவுக்கு வேணும்னா நல்லாருக்கும் ஆனா வாழ்க்கைக்கு உதவாது!”

“உனக்கே நல்லாத் தெரியும் நீயும் நானும் பல விசயங்கள்ல ஒரே மாதிரிதான் சிந்திக்கிறோம்…நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பறேன்”

“நான் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கனும்னு தான் சொன்னேனேத் தவிர ஒரே மாதிரி சிந்திக்கனும்னு சொல்லல… என்ன மாதிரியே இருக்கிற xerox கூட வாழ்றதுல என்ன சுவாரசியம் இருந்துடப் போகுது?”

“தன்னோட பார்ட்னர் 100% தன்ன மாதிரியே இருக்கனும்னு எதிர்பார்க்கிறது முட்டாள்தனம்தான்… ஆனா தான் அதிகம் நேசிக்கிற ஒருத்தருக்கும் தனக்கு இருக்கிற மாதிரி ரசனைகள் தான் இருக்குன்றது உண்மையிலேயே சந்தோசப் படவேண்டியது…அவங்களே லைஃப் பார்டனரா வர்றது இன்னும் சந்தோசமான விசயம் … நான் அததான் உங்கிட்ட எதிர்பார்க்கிறேன்”

இப்படியே இருவருமே மற்றவரை கன்வின்ஸ் செய்கிற மாதிரி பேசிக்கொண்டே போக நேரம் தான் ஆனதே தவிர இருவருமே ஒரு முடிவுக்கு வந்த பாடில்லை. கடைசியாக அவனே சொன்னான்

“நீ ஏற்கனவே முடிவு பண்ணதுக்கு இப்போ வந்து காரணம் தேடிட்டு இருக்காத… உண்மையிலேயே உனக்கு மனசுல என்ன இருக்குன்னு நல்லா யோசிச்சுப் பாரு… நாளைக்கு இதே டைம் இங்கேயே மீட் பண்ணலாம்… ஒரு நல்ல பதிலா சொல்லு”

எதுவும் சொல்லாமல் திரும்பிப் போய்விட்டாள்.

அன்று இரவு நெடுநேரம் அவன் சொன்னதையே யோசித்துக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்கும் அவன் சொல்வதும் சரியாகதான் இருக்கிறது என்கிற எண்ணம் இருந்தாலும், உண்மையிலேயே அவனையும் அவளுக்குப் பிடித்திருந்தாலும் அவள் மனதில் ஆழப் பதிந்திருந்தது என்னவோ அவளைப் பார்த்தவுடனே அவளைக் காதலிப்பதாக அவன் முடிவு செய்தான் என்பது தான். அதுதான் அவளால் நியாயப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. அவனிடம் அடுத்தநாள் என்ன சொல்லவேண்டும் என்று தீர்மானித்துவிட்டுத் தூங்கிப் போனாள்.

அவள் சொல்லப் போவதற்கெல்லாம் என்ன பதில் சொல்வது என் யோசித்துக் கொண்டே அவன் இரவும் கழிந்தது.

அடுத்த நாள். அதே நேரம். அதே இடம்.

“என்ன முடிவு பண்ணிட்டியா”

“இங்கப் பாருங்க அருள்… எனக்கும் உங்களப் பிடிக்கும்தான்…கண்டிப்பா உங்களக் கல்யாணம் பண்ணிக்கிப் போற பொண்ணு அதிர்ஸ்டசாலிதான்… ஆனா என்னால அந்த அதிர்ஸ்டசாலியா இருக்க முடியாது… தயவு செஞ்சு என்ன மன்னிச்சிடுங்க!”

அவனுடையப் பெயரை அவள் உச்சரித்ததே அவனுக்கு முதல் ஆச்சர்யம். அடுத்து அவள் அவனைப் பிடிக்கும் என்று ஒத்துக் கொண்டதும் இன்னும் ஆச்சர்யம்.

“அதான் பிடிச்சிருக்குனு சொல்லிட்டியே… அப்புறமும் என்னத் தயக்கம்? உங்கம்மாவுக்கு பயப்பட்றியா? அதெல்லாம் நான் பாத்துக்கறேன்… நீ கவலைப் படவேண்டாம்”

“எங்கம்மாகிட்ட சம்மதம் வாங்கறதெல்லாம் ரெண்டாவது விசயம்… நான் உங்கள காதலிக்க முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன்… அதப் புரிஞ்சுக்கோங்க…எனக்கு உங்களப் பிடிச்சதுக்கு காரணம் உங்களோட கேரக்டர்… ஆனா உங்களுக்கு என்னைப் பிடிச்சதுக்கு என்ன காரணம்? பார்த்தவுடனே என்ன பிடிச்சிருக்குன்னு முடிவு பண்றதுக்கு காரணமா இருந்தது, உங்கப் பார்வைல நான் அழகாத் தெரிஞ்சது மட்டும் தான?”

“இங்க பார்… நாம ஆசப்பட்டு எடுத்த ஒரு ட்ரெஸ்ச மத்தவங்க எல்லாரும் நல்லா இல்லைனு சொன்னாலும் நமக்கு எப்பவும் அது ஸ்பெஷல் தான்…ஏன்னா அது நாம செலக்ட் பண்ணது அப்படிங்கற எண்ணம் தான்… அது மாதிரிதான் நீயும் நான் செலக்ட் பொண்ணு… எனக்கு நீ எப்பவும் ஸ்பெஷல் தான்”

“ஆனா ட்ரெஸ் செலக்ட் பண்ற மாதிரி பார்த்தவுடனே லைஃப் பார்ட்னர செலக்ட் பண்ணிட முடியாது… இன்னைக்கு பார்த்தவுடனே என்னப் பிடிச்ச மாதிரி நாளைக்கே இன்னொரு பொண்ண பிடிக்காதுனு என்ன நிச்சயம்? இல்ல ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆகிட்டாலோ இன்னைக்கு இருக்கிற மாதிரியே உங்களால இருக்க முடியுமா?”

அதைக் கேட்டதும் அவனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது.

“உன்னத் தவிர எனக்கு வேற யாரையும் பிடிக்காது” அவன் குரலில் மாற்றம் தெரிந்தது.

“அதான் ஏன்னு கேட்கறேன்?”

“அதெல்லாம் சொல்ல முடியாது”

“அப்போ நானும் ஒரே வரியில பதில் சொல்றேன்.. மூஞ்சப் பாத்து காதலிக்கிறவன எல்லாம் என்னாலக் காதலிக்க முடியாது”

கிளம்பப் போனவளை நிறுத்தினான்.

“மூஞ்சப் பாத்துதான் உன்ன எனக்குப் பிடிச்சது. ஆனா அதுக்குக் காரணம் நீ அழகாத் தெரிஞ்சேன்றது கிடையாது…” பாக்கெட்டில் இருந்த பர்சை திறந்து காண்பித்தான்.

அதில் அவளைப் போன்ற முக சாயலோடு ஒரு பெண்ணின் போட்டோ. கிட்டத்தட்ட 22, 23 வயதில்.

அவனைப் பார்த்தாள்.

“இது எங்கம்மா! எனக்கு 2 வயசா இருக்கும்போது இறந்துட்டாங்க… “

கொஞ்ச நேரம் கழித்து அவனேத் தொடர்ந்தான்.

“எல்லாப் பையனுக்கும் மனசுக்குள்ள தனக்கு வரப் போற மனைவி எப்படி இருக்கனும்னு ஒரு ஆசை இருக்குமே அது பெரும்பாலும் அவனவனோட அம்மா குணம் மாதிரி இருக்கனும்னுதான் நெனைப்பாங்களாம். எனக்கு எங்க அம்மாவப் பத்தி தெரிஞ்சதெல்லாம் இந்த போட்டோதான். அதான் அதே மாதிரி நீ இருக்கவும் உடனே உம்மேல ஒரு பாசம் வந்துடுச்சு! இத மத்தவங்ககிட்ட சொன்னா… ஏன் உங்கிட்ட சொன்னாலே சிரிப்பீங்கன்னுத் தெரியும்… இது சரியா தப்பான்னு எனக்குத் தெரியல… ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் அம்மா இல்லாத ஒரு பையனோட ஃபிலிங்ஸ் மத்தவங்களாலப் புரிஞ்சிக்க முடியாது” கொஞ்சம் சீரியசாகிவிட்டான்.

“ஹே.. ஐ யாம் ரியலி வெரி சாரி… நாந்தான் தப்பாப் புரிஞ்சிக்கிட்டேன்…நீ பார்த்த்வுடனே லவ் பண்றன்னு உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லவும் நான் வேறென்ன முடிவு பண்ண முடியும்”

“சரி இப்போ என்னதான் சொல்ற” நிமிராமலே கேட்டான்.

“பையன்ங்களுக்கு மட்டுமில்ல… எல்லாப் பொண்ணுக்கும் அதே மாதிரி ஆச இருக்கும். அப்பா மாதிரி பாசமா பாத்துக்குற ஹஸ்பெண்ட் கிடைக்கனும்னு. எங்கப்பா பாசத்த 15 வயசு வரைக்கும் அனுபவிச்சிருக்கேன். எங்கப்பா மாதிரி பாசமா நீயும் பாத்துக்குவேன்ற நம்பிக்கை இருக்கு”

நிமிர்ந்து பார்த்தான். புன்னகைத்து விட்டு குனிந்து கொண்டாள்.

ஒரு அப்பா அம்மா விளையாட்டு ஆரம்பமானது.

அழியாத அன்புடன்,

அருட்பெருங்கோ.

30 ஆச்சுன்னா ரிட்டயர்மெண்டு!!!







தமிழ்மணத்துல இனிமே 30தாண்ட கூடாதுன்னு சொல்லிட்டாங்க. யோவ், யார்யா அடிக்க வர்றது, பின்னூட்டத்தைதாம்பா சொல்றோம்.
வயசை சொல்றோம்னு நெனைச்சு கைய கீய வெச்சீங்க,
அப்புறம் ...அப்புறம்

அப்புறம் அப்புறம்

அப்புறம்

அப்புறம் அப்புறம்

அப்புறம் அப்புறம்

அழுதுபுடுவோம்ல.


சரி, கொலை வெறிப்படை என்னய்யா பண்ணுவாங்க. கம்னு இந்த அறிவிப்புக்கு எதிர் கொரலு வுடுற மாதிரி செந்தழல் ரவிய கொளுத்திப்புடலாமா? அப்படியே பெங்களூரு-காவிரி பிரச்சினைன்னும் சொல்லி அரசியல் ஆக்கிரலாம். எப்படி ஐடியா? இதெல்லாம் தெரிஞ்சுதான் ரவி அப்பபோ "நான் அவுஸ்திரேலியா போய்ருவேன்னு" சொல்றாரோ?
ஒரு தில்லாங்கடி பண்ணலாமே,


எப்படி?

வழக்கம்போல 20 பின்னூட்டம் வரைக்கு விளையாட்டு,
அப்புறம்?
20 பின்னூட்டத்தையும் Cut-Paste to ஒரு பின்னூட்டமா ஆக்கிறது. அப்பிடியே பழைய 20 பின்னூட்டத்தையும் டெலிட் பண்ணிறுவோம், அப்படியே 21 வரைக்கும் மறுபடியும் விளையாட்டு, மறுபடியும் Cut-Paste to ஒரு பின்னூட்டம் அப்ப்டியே 29 வரைக்கும் விளையாடலாம்.

என்ன ஒரு இது.. அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்ல இது வராது. அதுக்காக என்ன பண்றது..20-21-22ன்னு 29 வரைக்கும் முன்னேறனும் .. 30 ஆச்சுன்னா?

ஆச்சுன்னா என்ன? ஆட்டைய கலைச்சுபுட்டு போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.

என்ன பண்ண? இப்படியெல்லாம் ரோசனை பண்ணித்தான் பொழப்ப ஓட்ட வேண்டியிருக்கு. விடுங்க விடுங்க.. 30 ஆச்சுன்னா ரிட்டயர்மெண்டு!!!

இந்த விளையாட்டை இந்த பதிவிலே இருந்தே ஆரம்பிக்கிறோம்ய்யா.. ஆரம்பிக்கிறோம்ய்யா..!!!


[டிஸ்கி: நாங்களும் தமிழ்மணத்தின் 30 அம்ச(மான) திட்டத்தினை வரவேற்கிறோம்]

இம்மாத அட்லாஸ் வாலிபரின் நிறைவுப் பதிவு..

நம்ம ஆஸ்தான நகைச்சுவை நாயகன் வடிவு (வடிவேலுவோட செல்ல பேர்) ஹோட்டல்லருந்து வெளிய வறார். வெத்தல போட்டதுல உதடு செவந்துருக்கான்னு பாத்துக்கிட்டே வறார்.

வடி: அடடா.. அய்யர் கபேன்னாலே ஒரு அலாதி டேஸ்ட்தாம்ப்பா.. அந்த சாம்பாரும்.. ரசமும், மோரும்.. சேத்து ஊத்தி சாதத்த கொளச்சி அடிக்கற சுகம் இருக்கே.. (புளிச்சென்று வாயிலிருந்த வெற்றிலை எச்சிலை துப்பிவிட்டு வானத்தைப் பார்க்கிறார்) எய்யா ச்சாமி.. இன்னைக்கி ஒன் மொகத்துலதானய்யா முளிச்சிட்டு எறங்குனேன்.. அதான் இம்புட்டு திருப்தியா ஒரு சாப்பாட்ட குடுத்துருக்கே.. ரொம்ப தாங்ஸ்ய்யா.. ஏஏஏஏஏவ்...

பின்னாலிருந்து ஒரு குரல்: டேய் நில்றா..

(வடிவு திரும்பிப் பார்க்காமல் போகிறார்)

குரல்: டேய் ஒன்னெத்தாண்டா.. நில்றாங்கறேன் போய்க்கிட்டேருக்கே.. ஒங் காதென்ன செவிடா?

வடி: (திடுக்கிட்டு நிற்கிறார்) இது எங்கனயோ கேட்ட கொரலாட்டம்ல இருக்கு.. இது அவனாருக்குமோ.. ச்சீச்சீ இருக்காது. நாம ஊர்லருந்து ரொம்பத் தூரம்லே வந்துருக்கோம்.. அது இவனாயிருக்காது.. இது வேற யாரோ.. (முன்னே நடக்கிறார். அடுத்த நொடியே தோளில் ஒரு கை விழுகிறது. அவரையுமறியாமல் மந்தரித்து விட்ட கோழி மாதிரி திரும்புகிறார். அடுத்த நொடியே முகம் களையிழந்து போகிறது.)

பார்: என்ன சொன்னே அது இவனாயிருக்காதா? இப்ப பார். இது அவனேதான். அது இவனேதான்.

வடி: ச்சரிய்யா.. நீ அவனே தான்.. அவன் நீயே தான்.. இப்ப என்ன அதுக்கு.. எதுக்கு என்னெ புடிச்சி நிறுத்தி வம்பு பண்றே.. சிவனேன்னு நாம்பாட்டுக்கு போய்கிட்டுதான இருந்தேன்..

பார்: டேய் நீ சிவனேன்னு போய்ட்டுருந்தா நா ஏண்டா ஒன்னெ புடிச்சி இளுக்கேன்.. என்னெ நீ சிவப்பாக்கிட்டில்லடா போனே..

வடி: என்னது நா ஒன்னே சிவனாக்கிட்டேன்னா.. என்னய்யா சொல்றே?

பார்: (தன் ஜிப்பாவைக் காட்டுகிறார்) இதென்ன?

வடி (தனக்குள்) அடடா.. இவன் மேலயே போய் துப்பிட்டம் போலருக்கே.. வேலியில போற ஓணானப் புடிச்சி வேட்டிக்குள்ள விட்டுட்டேன் போலருக்கே.. ச்சும்மாவே கொடஞ்சி எடுத்துருவானே.. இப்பம் என்னென்னல்லாம் செய்வானோ தெரியலையே..(வானத்தைப் பார்க்கிறார்) எய்யா.. இப்பத்தானய்யா ஒங்கிட்ட தாங்ஸ் சொன்னேன்.. அதுக்குள்ள இப்படியா? இது நல்லால்லையா.. நல்லால்ல..

பார்: டேய்.. மேல பாத்து பேசிட்டா விட்டுருவமா.. ச்சாமி மொகத்துல முளிச்சிட்டு பொறப்பட்டா என்ன வேணும்னாலும் செஞ்சிருவியா? களட்றா..

வடி: (முறைக்கிறார்) என்னது களட்றதா? எத?

பார்: (கேலியுடன்) ஊம்.. வாயை மட்டும் அசைக்கிறார் (சென்சார் பண்ணிட்டாங்க போலருக்கு).

வடி: யோவ் வேணாம்.. கொளப்பாத.. நீ ஒளுங்கா பேசினாலே ஒரு எளவும் புரியாது.. இதுல வாய மட்டும் தொறந்து மூடுறே?

பார்: டேய்.. நீ என்ன செவிடா? (சாலையில் போய்க்கொண்டிருக்கும் ஒருவரைப் பிடித்து நிறுத்துகிறார்) அண்ணே நா சொல்றது ஒங்களுக்கு கேக்குதா பாருங்க (வாயை மட்டும் அசைத்து காட்டுகிறார்)

(அவருக்கும் ஒன்றும் கேட்கவில்லை. இருந்தாலும் பார்த்தியையும் வடிவையும் ஏற்கனவே அறிந்து வைத்திருந்ததால் நமக்கேன் வம்பு என்று நினைத்து) என்ன தம்பி நீங்க.. பக்கத்துலயே நிக்கேன். இப்படி செவிடங்கிட்ட பேசற மாதிரி கத்தறீங்க.. காது கொய்ய்யுங்குது..

பார்: தாங்ஸ்ணே நீங்க போங்க.. பார்த்தியாடா.. அவர் நா கத்தறேங்கறார்.. நீ கேக்கலேங்கறே.. இப்பவாவது கேக்குதா பாரு (மீண்டும் பிரசுரிக்க முடியாத வார்த்தையொன்றை சப்தம் வராமல் உச்சரிக்கிறார்)

வடி: (தனக்குள்) என்னடா இது ரோதனையா போச்சி.. அதெப்படி இவன் பேசறது மட்டும் நமக்கு கேக்க மாட்டேங்குது.. பஸ்சு சத்தம் கேக்குது.. தோ.. அந்த பளக்காரன் அங்கனருந்து கூவுறது கூட தெளிவா கேக்குதே.. இந்த பயதான் என்னமோ ஃப்ராடு பண்றான்னு நினைச்சா அந்தாள் வேற கேக்குதுங்கறானே...

பார்: டேய் என்ன ஒனக்குள்ளயே பேசிக்கறே.. களட்டு..

வடி: (அழுதுகொண்டே தன்னுடைய மேல் சட்டையைக் கழற்றுகிறார்) யோவ் ஒனக்கு இதே வேலையா போச்சுய்யா.. இந்தா புடி..

பார் (அருவறுப்புடன் வாங்கி சாலையில் வீசிவிட்டு மீண்டும் வடிவைப் பார்க்கிறார்) டேய், இதைய்யா கழட்டச் சொன்னேன்..

வடி: பின்னே..வேட்டியையும் கழட்டுனுமாக்கும்.. சொன்னாத்தானய்யா தெரியும் (வேட்டியையும் கழற்றிக் கொடுக்கிறார்)

பார்: (அதையும் வாங்கி வீசிவிட்டு முறைக்கிறார்) டேய்.. கடுப்படிக்காத.. நா சொன்னத கழட்டு..

வடி: (தனக்குள்) வெறுமனே வாய மூடி, மூடி தொறக்கான்.. காத்துதான் வருது.. இவன் என்னத்த கழட்டச் சொல்றானேன்னே தெரியலையேய்யா..

பார்: மொனகாத.. கழட்டு..

வடி: மேலருக்கறதையும் குடுத்தாச்சி.. கீழருக்கறதையும் குடுத்தாச்சி.. இன்னும் என்னத்தையா கேக்கே.. இதுக்குக் கீழ -----------தாய்யா இருக்கு..

பார்: ஆங்.. அதத்தான் அப்பத்துலருந்து கழட்டிக் குடுறாங்கறேன்.. கழட்டு..

வடி: (குதித்து பின்வாங்குகிறார்) என்னது?

பார்: ஊம்? நொன்னது.. கழட்றான்னா..

வடி: போய்யாங்கொய்யா.. (கழற்றிப் போட்ட வேட்டி சட்டையையும் மறந்து நாலு காய்ச்சலில் ஓடுகிறார்)

சாலையோரத்தில் அமர்ந்திருந்த பிச்சை சாலையில் கிடக்கும் வேட்டி சட்டையையும் பார்த்திபனையும் மாறி மாறி நோட்டம் விடுகிறார்)

பார்: என்னங்க பாக்கிறீங்க.. எடுத்துக்கிட்டு போங்க.. இன்னைக்கி நரி மொகத்துலதான் முளிச்சிருக்கீங்க..

(பிச்சை பாய்ந்து வந்து எடுத்துக்கொண்டு தூரத்தில் ஒளிந்துக்கொண்டு நின்ற வடிவேலுவைப் பார்க்கிறார். வடிவேலும் நாக்கை மடித்து கொன்னுருவேன் என்று சைகைக் காட்டுகிறார். பிச்சை சாலையோரத்தில் வைத்திருந்த அலுமினிய பாத்திரத்தையும் மறந்து நாலு கால் பாய்ச்சலில் எதிர் திசையில் ஓட வடிவேலு தன்னுடைய ட்ரேட் மார்க் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் என்று அழ.. பார்த்தி 'மவனே.. என் சட்டையிலயா துப்பறே.. இப்ப ஊருக்கு எப்படி போய் சேர்றேன்னு பாக்கேன்..' என்றவாறு சாலையோரக் கடையில் சென்று அமர்கிறார்)

********

இம்மாதம் முழுவதும் ஏதோ என்னால் ஆன வகையில் கிச்சு, கிச்சு மூட்ட முயற்சி செஞ்சேன்.. சிரிப்பு வந்ததோ இல்லையோ மாசம் முடிஞ்சிருச்சி..

என்னையும் வாலிபனா நெனச்சி என்னெ இங்க வரவழைச்ச சிபிக்கும் அவ்வப்போது தனி மயிலில் என்னை ஊக்குவித்த நண்பர் தேவுக்கும்.. நானும் எழுதியதை வேலை மெனக்கெட்டு படித்து வேலைமெனக்கெட்டு பின்னூட்டம் இட்ட வாலிப சிங்கங்களுக்கும் நன்றியோட சேர்ந்த சலாமுங்கோ..

நன்றி வணக்கம்..

அன்புடன்,
ஜோசஃப்

Tuesday, February 27, 2007

Alone...in a Woman's World

இல்லத்தரசிகளுக்குன்னு, தனியான சின்னஞ்சிறு உலகம் ஒன்னு இருக்குதுங்க. தன்னையும் தன் குடும்பத்தையும் தன் வீட்டைச் சுற்றியுள்ள ஒரு சிலரையும் தனது குடும்பத்தினரையும் கொண்ட ஒரு சின்னஞ்சிறு உலகம். (டிஸ்கி:இதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டிய வரை) அதில் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள், அந்த உலகத்தில் அவர்களை ஒத்தவர்களுடன் அவர்கள் நடத்தும் உரையாடல்கள் இவை எல்லாம் இயந்திரமயமான இவ்வுலகில் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் சுவையாக இருக்கும். அவசரமாக எதையோ தேடிக் கொண்டு ஓடிக்கொண்டிருப்பது போன்ற நம் வாழ்க்கையில் ஒரு கணம் நின்று ஒரு 'அட!' போட வைக்கும், சில சமயம் ஒரு புன்னகையை உதிர்க்கச் செய்யும். "என்ன கார்த்திக்கம்மா பசங்க எல்லாம் ஸ்கூலுக்குப் போயிட்டாங்களா? சமையல் எல்லாம் ஆச்சா"ன்னு ஒரு இல்லத்தரசி கேட்டா நாமளா இருந்தா என்ன பதில் சொல்லுவோம்? ஆமா தெனமும் தான் பசங்க ஸ்கூலுக்குப் போறாங்க தினமும் தான் சமைக்கிறாங்க என்னமோ இந்தம்மா புதுசா வந்து கேக்குதேன்னு தானே நெனப்போம்? ஆனா இதுக்கு இன்னொரு இல்லத்தரசியோட பதில் "போய்ட்டாங்க பாலாஜியம்மா. இன்னிக்கு கத்திரிக்கா சாம்பாரும் வாழைக்கா பொடிமாஸும் சமையல். காய் அரிஞ்சு வச்சிட்டுத் துணி காயப் போடலாம்னு மாடிக்கு வந்தேன். குக்கர்ல இப்பத் தான் பருப்பு வேகுது"ன்னு வரும். அதோட "அவரு கூட மதியானம் சாப்புட வர மாட்டேன்னு சொல்லிட்டுப் போயிட்டாரு...ஒத்த ஆளுக்குச் சமைக்கனுமேன்னு இருக்கு. இந்தப் பசங்களுக்கும் ஸ்கூல்லேருந்து வந்து மதியானம் சாப்பிடும் போது காய்கறின்னா மட்டும் எறங்கவே எறங்காது"ன்னு ஒரு கொசுறு தகவலும் வரும். இந்த கேள்வியும் பதிலும் அந்த உலகில் தினமும் கேட்கப்படுபவை, தினமும் பதிலளிக்கப்படுபவை. அவர்களுக்குள் இவற்றைக் கேட்பதற்கும், பதிலளிப்பதற்கும் எப்போதும் அலுக்காதவை. அந்த 'Woman's World'இல் நடக்கும் இப்படிப் பட்ட நிகழ்வுகளை ஒரு வருத்தப்படாத வாலிபனாக, ஒரு 'invisible entity' ஆகத் தள்ளி நின்று அவர்களுக்கு இடையூறாக இல்லாமலும், அவர்களை சங்கடத்தில் ஆழ்த்தாமலும் ரசிப்பது ஒரு தனி ஜாலி தான்.

2005ல கிட்டத்தட்ட ஒரு நாலு மாசம்ங்க...சென்னையில் வீட்டுல [அதாவது அம்மா வீட்டுல :)] தங்கியிருந்து வேலைக்குச் செல்லும் ஒரு அரிய வாய்ப்பு கிடைச்சது.தென் சென்னையிலிருந்து ஆபீஸ் இருக்கும் வடசென்னை வரை தினமும் ஊர்ப்பயணம் செஞ்சுக்கிட்டு வேலைக்குப் போயிட்டு வந்துட்டிருந்தேன். முந்தைய கம்பெனி ஒரு உற்பத்தி சார்ந்த தொழிற்சாலையாக இருந்ததால் வாரத்தில் ஆறு நாள் மட்டும் வேலை நாளாக இருக்கும். அப்படிப் பட்ட ஒரு கம்பெனியில், நீங்க ஐடி துறையில் இருந்தால், மற்ற ஐடி துறையினருக்கு இரண்டாவது விடுமுறை நாளாக இருக்கும் ஞாயிற்றுக் கிழமையும் உங்களுக்கு வேலை நாளாகும் பாக்கியமும் கிட்டலாம். அப்படித் தான் ஒரு வாட்டி, நம்ம கஸ்டடில இருந்த ஒரு அப்ளிகேஷனோட டேட்டாபேஸ் வெர்ஷன் அப்கிரேட் செய்ய வேண்டியிருந்ததுனால, ஞாயித்துக் கிழமையும் ஆபிசுக்குப் போக வேண்டியதாப் போச்சு. சிஸ்டம் அட்மினிஸ்டிரேட்டர் வெர்ஷனை அப்கிரேட் பண்ணிக்குவாரு, நான் திங்கக் கிழமை வந்து பாத்துக்கறேன்னு பாஸ்சு கிட்ட ஒரு பிட்டைப் போட்டுப் பாத்தேன், வர்க் அவுட் ஆகலை. "நான் ராத்திரி ஹார்டுவேர் வேலையெல்லாம் முடிச்சிட்டு காலாங்காத்தாலை சாஃப்ட்வேர் அப்கிரேட் பண்ணிடுவேன். நீ காலைல ஒரு பத்து மணிக்கு வந்தின்னா அப்ளிகேஷன் சரியா வேலை செய்யுதா இல்லையான்னு டெஸ்ட் பண்ணிட்டு பதினொன்னரை பன்னெண்டு மணிக்கு எல்லாம் திரும்பிப் போயிடலாம்"னு நம்ம அட்மிணிஸ்ட்ரேட்டன்(என்ன மரியாதை வேண்டி கெடக்கு?) சொன்னதை உண்மைன்னு நம்பி மாங்கு மாங்குன்னு பஸ்ஸைப் புடிச்சு ஆஃபிஸுக்குப் போனா, தரையில தினத்தந்தி பேப்பரை விரிச்சி போட்டுத் தூங்கிட்டு இருந்தான். 'அட பாவி! ஞாயித்துக் கெழமைக்கு மொத்தமா சங்கு ஊதிட்டியேடா'ன்னு திட்டிக்கிட்டே அவனை எழுப்பி வேலையைத் தொடங்கும் போதே மணி பதினொன்னரை ஆயிடுச்சு.

"ஸ்க்ரிப்ட் ரன் பண்ணி வுட்டிருக்கேன். டேபிள், இண்டெக்ஸ் இதெல்லாம் க்ரியேட் ஆக இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும்"னு சொல்லும் போது "ஹையா! இவனோட சண்டேக்கும் சமாதி கட்டியாச்சு"ன்னு நெனைச்சு சந்தோஷமா சொல்லற மாதிரி இருந்துச்சு. சரி கெடக்குது கழுதைன்னுட்டு இன்னும் இரண்டு மணி நேரம் உக்காந்து ஸ்க்ரிப்ட் ஓடறதை சினிமா பாக்க வேணாம், அந்த நேரத்துல ஊட்டா மாடிட்டு வந்து வேலை பாக்கலாம்னு முடிவு பண்ணோம். எங்க ஆப்பீஸாண்டவே ஓட்டல் இருந்தாலும், "ஞாயித்துக் கெழமையும் அதுவுமா சாம்பார், ரசமா...நோ நெவர்"னு அட்மின் தடியன் அடம்புடிக்கவே ராயபுரம் கல்மண்டபத்துக்கு கிட்டே இருக்க ஹோட்டல் பாண்டியன்ஸ்ல சண்டே ஸ்பெசலான டர்ர்க்கி பிரியாணி சாப்பிடலாம்னு அஜாக்ஸ்லேருந்து ஷேர் ஆட்டோல பயணப் பட்டோம். சின்ன வயசுலேருந்து பழகிப் போன அல்ப புத்தியான ஜன்னலோர சீட்டுக்காக அவசர அவசரமா ஆட்டோல ஏறி உள்ளே குந்திக்கிட்டேன்.

வான்கோழியை ஊடகங்கள்ல பாத்துருந்தாலும்(அப்பா...ஊடகத்தையும் ப்ளாக்ல உபயோகிச்சாச்சு) ஒரு நாளும் சாப்பிட்டதில்லை. வான்கோழி பிரியாணி சாப்பிட போறோம்னு நெனச்சதும் காதல் பரிசு படத்துல வர்ற "வான்கோழி மயிலின் ஆட்டம் அறியுமா"ன்னு பாட்டு வரி நெனப்பு வந்து அந்த பாட்டையே முணுமுணுத்துக்கிட்டு இருந்தேன். மயிலின் ஆட்டத்தை அறியாத வான்கோழியை அன்னைக்கே பழி வாங்க மனம் வன்மம் கொண்டது.

ராஜா கடை வந்ததும், ஒரு அம்பது வயசு மதிக்கத் தக்க ஆண்ட்டியும் ஒரு ரெண்டரை வயசு மதிக்கத் தக்க பாப்பாவை இடுப்புல தூக்கி வச்சிட்டிருந்த ஒரு முப்பது வயசு மதிக்கத் தக்க அக்காவும் ஷேர் ஆட்டோவைக் கை காட்டி நிறுத்துனாங்க.

"பீச் டேஷன் போவுமா?" - இது அக்கா

"போவும்மா" - ஆட்டோகாரர்

"எவ்ளோ?"

"பதினைஞ்சு ரூபா"

"அஜாக்ஸ்லேருந்து தான் பதினைஞ்சு ரூபா. இங்கிருந்து பன்னெண்டு ரூபா தான்" - அக்கா கூட வந்த ஆண்ட்டி.

"சரி ஏறுங்க"

ஆட்டோக்கு உள்ளே ரெண்டு தடியனுங்க உக்காந்துருக்கறதை பாத்ததும் கொஞ்ச நேரம் தயங்கி நின்னாங்க. இருபத்தி நாலு ரூபா சவாரி கைவிட்டுப் போயிடுமோன்னு பயந்த ஆட்டோகாரர் அட்மினிஸ்டிரேட்டனைப் பாத்து "நீ இங்க முன்னாடி வந்துட்ணா" அப்படின்னவும், என் கூட வந்தவன் வேற வழியில்லாம ஷேர் ஆட்டோ டிரைவரோட சீட்டை ஷேர் பண்ணிக்கிட்டான்.

அப்படியும் அவங்க ரெண்டு பேரும் ஏறாம யோசிச்சி நின்னதைப் பாத்த டிரைவர் "நெறைய எடம் இருக்கும்மா...ஏறுங்க சீக்கிரம்"னு அவசரப்படுத்தவும் போனா போவுதுன்னு ஏறி உக்காந்தாங்க.

பாப்பாவை ஜன்னல் பக்கமா உக்காந்துருந்த என் பக்கத்துல உக்கார வச்சிட்டு, பாப்பா பக்கத்துல அவங்க ஆயாவும்(ஆயாவாத் தான் இருக்கணும்னு ஒரு யூகம்), அவங்க பக்கத்துல அவங்க டாக்டரும் உக்காந்துக்கிட்டாங்க(டாக்டர் இன் லாவாக் கூட இருக்க வாய்ப்பிருக்கு).

நியூட்ரல், ஃபர்ஸ்ட், செகண்ட், தர்டைத் தாண்டி ஆட்டோ ஃபோர்த் கியர்ல போறதுக்கு முன்னாடி "ஏம்மா..."ன்னு அக்கா கிட்ட பேச நம்ம ஆண்ட்டி.

என் பக்கத்துல உக்காந்துருந்த அந்த பாப்பா அப்பத் தான் வின்னர் படம் பாத்துட்டு வந்துருக்கும் போலிருக்கு. "ஏண்டா கைப்புள்ள இன்னும் முழிச்சிட்டிருக்கே"ன்னு சொல்ற மாதிரி பாப்பா என் கை மேலே சடக்குன்னு தலையைச் சாய்ச்சது, வெடுக்குன்னு கண்ணை மூடுச்சு, படக்குன்னு தூங்கிப் போச்சு. பரசுராமர் தூக்கத்தைக் கலைக்க விரும்பாத கர்ணன் மாதிரி பாப்பாவுக்குத் தலையணையா நான் ஆட்டோ ஓரத்துல உக்காந்துருந்தேன்.

"ஏம்மா..."னு ஆரம்பிச்சவங்க பாப்பா தூங்கறதைக் கூட கவனிக்காம பேச்சு சுவாரசியத்துல இருந்தாங்க.

"ஜோதி கிட்ட ஜல்லி கரண்டி குடுத்து வச்சிருந்தியே, வாங்கிட்டியா?"

"இல்லைம்மா"

"தீபாவளி நெருக்கத்துல நீயும் தானே பலகாரம் சுடணும்? உனக்கு வேணும்னு அவ நெனைக்க மாட்டாளா?"

"இன்னிக்கே கேட்டு வாங்கிடறேன்"

"நீ தான் இதுல எல்லாம் கரிட்டா இருக்கணும். இன்னும் நாலு நாள் தான் இருக்கு. இன்னும் மிச்சர் போடணும், லட்டு புடிக்கணும்...எவ்வளவு வேலை இருக்கு? ஒனக்குக் கூடமாட வேலை செய்ய ஆளா இருக்கு? நீ தனியாத் தானே செய்யணும்?"

"ஹ்ம்ம்ம்...."

"சூட்டைத் தாங்கிக்கிட்டு லட்டைப் புடிக்கறதுக்கும் எவ்வளோ நேரம் ஆகும். கொஞ்ச கொஞ்சமாப் புடிச்சாத் தானே முடியும்?"

"ஆமாமா...அது சரி தான். இல்லையா பின்ன?" - நியாயமான வாதத்தைக் கேட்டு மனசுக்குள்ளே தீர்ப்பு சொன்னது நானு.

எப்பவும் தண்டையார்பேட்டை வழியா பீச் ஸ்டேஷன் போற ஆட்டோ, ராஜா கடை கிட்டவே சவாரி கெடைச்சதும் டோல்கேட் டிப்போ கிட்ட திரும்பி கடலோரமா எண்ணூர் எக்ஸ்பிரஸ்வேல போக ஆரம்பிச்சது. மழை பெய்ஞ்சு குண்டும் குழியுமா இருந்த ரோட்டைப் பாத்து ஓட்டற கவனத்துல ஆட்டோ டிரைவரும், சின்ன சீட்டுல இடம் பத்தாம ஒட்டுல உக்காந்து வந்துட்டுருந்த நம்ம சகாவும் ரொம்ப அமைதியா வந்தாங்க. பாப்பாவுக்குத் தலையணையான நான் ஆட்டோவின் பின் சீட்டில் Woman's Worldஇல் ஒரு lone traveller ஆக உக்காந்துருந்தேன்.

எப்பவாச்சும் இந்த மாதிரி lone travellerஆக நேரும் போது கடைப்பிடிக்க வேண்டிய எழுதாத சட்டம்(cardinal rule) ஒன்னு இருக்கு. அது "பொறுமையிலும் பொறுமை", "அமைதியிலும் அமைதி" காப்பது என்பது தான். நாம மைனாரிட்டியா இருக்கும் போது சுதந்திரமாப் பேசுவதற்கும் சிந்திப்பதற்கும் முழு உரிமை அவங்களுக்குத் தான் இருக்கு. அந்த நேரத்துல அவங்களைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்தாமல் இருப்பது நல்லது.

இப்படித் தான் போன ப்ராஜெக்டில சித்தூர்கட்ல இருக்கும் போது நாங்க தங்கியிருந்த டவுன்ஷிப்பிலிருந்து ஃபேக்டரிக்கு ஜீப்புல போயிட்டு இருக்கும் போது எதோ பூமி பூஜைன்னு ஸ்டாஃப் குவார்டர்ஸ்லே இருந்த ரெண்டு மூனு இந்திக் கார ஆண்ட்டிங்க ஏறிக்கிட்டாங்க.

வழக்கம் போல பல பரிமாணங்கள்ல நடை பெற்றுக் கொண்டிருந்த அவங்களோட பேச்சு வார்த்தையின் நடுவுல ஒரு ஆண்ட்டி "அண்ணி! இந்த சூட் உங்களுக்கு ரொம்ப நல்லாருக்கு. கலர் அருமை. நேத்து சீரியல்ல சலோனி போட்டுக்கிட்டு வந்த சூட் கலர் மாதிரியே இருக்கு"ன்னு இந்தியில சொல்ல, நான் ஆர்வம் தாங்க மாட்டாம திரும்பிப் பார்க்க...

வெயிட்டீஸ் வுட்டுக்கறேன்பா...ப்ளீஸ்...ப்ளீஸ்...இப்ப மணி பன்னெண்டு ஆகுது... ரொம்ப தூக்கம் வருது.

Woman's Worldஇல் நம்ம பயணம் இன்னும் ஒரு எபிசோட் தொடரும்.

பழி வாங்கும் படலம்....


சும்மா எல்லாரும் gals-யே ஓட்டிட்டு இருக்கிங்க இல்ல. அதான் பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்தாச்சு. இனி ஒரு கை பாத்துடறதுனு முடிவு பண்ணி களத்துலயும் குதிச்சாச்சு. ஹ்ம்ம்ம்ம்............




வடிவுக்கு போறாத காலம்:(

(சாலையின் வலப்புறத்திலிருந்து நம்ம வடிவு வந்துகொண்டிருக்கிறார். வானத்தைப் பார்த்தவாறு தனக்குள் பேசிக்கொள்கிறார்)

வ.வே: யப்பா சாமி, நா இன்னைக்கி போற காரியத்த நீதாம்பா நல்லபடியா முடிச்சித்தரணும். முடிச்சி தந்தேன்னா, திரப்பி வரப்ப ஒன்னோ ரெண்டோ, என்னால முடிஞ்சத உங்கோயில் உண்டியல்ல போடறேம்பா..

(எதிரில் வரும் நபர் அவரை கடந்து செல்ல, வடிவேலு அவர் காலரைப் பிடித்து தன் பக்கம் இழுத்து அவருடைய கன்னத்தில் அறைகிறார்.)

வழியில் சென்றவர்: (கோபத்துடன்) யோவ். உனக்கென்ன பைத்தியமா? ஏன்யா சும்மா போறவன பிடிச்சி அடிக்கறே?

வ.வே: டேய் நா யாரு?

வ.செ: யாருன்னா?

வ.வே: நான் யார்றா? (தன் நெஞ்சில் கைவைத்து) நானு, நானு.

வ.செ: யோவ் சுத்த இவனா இருக்கியே.. பேசாம ரோட்ல போயிட்ருக்கவன இழுத்து பிடிச்சி கன்னத்துல அறஞ்சிட்டு.. நா யாரு, நா யாருன்னு கேக்கற?

வ.வே: (கன்னத்தில் அறைகிறார்) சரியா பாத்து சொல்லு.. நா யாருன்னு தெரியல?

வ.செ: (அழுகிறான்) யோவ் தெரியலையா.. நீதான் யார்னு சொல்லித் தொலையேன்.

வ.வே: உண்மையிலயே நா யாருன்னு தெரியலை?

வ.செ: தெரியலைய்யா..

வ.வே: சரி நீ போ..

வ.செ: (தனக்குள்) யார்றா இவன்? ரோட்ல போய்க்கிட்டிருந்தவன நிறுத்தி கன்னத்துல அடிக்கிறான். ஏன்டா அடிச்சேன்னு கேட்டா நான் யார்ராங்கறான். தெரியலன்னு சொன்னா சரி போடாங்கறான். சுத்த பைத்தியக்காரனாயிருப்பான் போலருக்கே.. இவன்கிட்ட நின்னு பேசினதே தப்பு.. போயிருவம்.. (திரும்பி திரும்பி பார்த்தவாறே அடிபட்ட கன்னத்தை தடவிக்கொண்டு செல்கிறான்)

வ.வே: (தனக்குள்) அப்பாடா. இந்த ஊர்ல நம்மளை தெரிஞ்சவன் யாருமில்ல போலருக்குது. தைரியமா நடமாடலாம்.

(காலரை தூக்கிவிட்டுக்கொள்கிறார். அலட்சியமாக சாலையில் போவோர் வருவோரை பார்க்கிறார். கால்களை அகல வைத்து தெனாவட்டாக சாலையின் நடுவில் நடக்கிறார். ஏற்கனவே அவர் ஒருவனை அடித்ததை பார்த்தவர்கள் அவரை விட்டு சற்று தள்ளியே செல்கின்றனர். அதைப் பார்த்த வடிவேலு ‘அது.. அந்த பயம் இருக்கணும்..’ என்று தனக்குள் சொல்லிக்கொள்கிறார். திடீரென்று பின்னாலிருந்து சைக்கிளில் வந்த பார்த்திபன் அவர்மேல் இடிக்க முகம் குப்புற விழுகிறார். அவர் அணிந்திருந்த வெள்ளை சட்டை, வெள்ளை முழுவதுமாக அழுக்கடைகிறது. கீழே விழுந்தவர் கோபத்துடன் எழுந்து தன்னை இடித்துவிட்டு நிற்பவனை ஓரக்கண்ணால் பார்க்கிறார். அடுத்த நொடியில் அவர் முகம் இருளடைகிறது. தனக்குள் பேசிக்கொள்கிறார்) ஐயோ, இவனா? நம்ம எங்க போனாலும் மோப்பம் பிடிச்சிக்கிட்டு வந்திர்றானடா சாமி. இன்னைக்கி என்னல்லாம் குன்டக்க மன்டக்கன்னு பேசப் போறானோ தெரியலையே. திறக்கப்படாது.. அவன் என்ன பேசுனாலும் நம்ம வாயவே தெறக்கப்படாது..

பார்த்திபன்: (சைக்கிளில் அமர்ந்தவாறே) டேய்.. என்ன, ரோடு உனக்காகத் தான் போட்ருக்குன்னு நெனப்பா உனக்கு? நடு ரோட்ல பெரிய இவன் மாதிரி.. யார்றா நீ?

வ.வே: (அவனுக்கு முதுகை காட்டிக்கொண்டு நிற்கிறான்) அட ஒன்னுமில்லப்பா.. நான் ஊருக்கு புதுசு.. நீ போ.. (அந்த இடத்தைவிட்டு வேகமாக செல்ல முயல்கிறார்)

பார்த்தி: டேய் நில்றா! நான் கேட்டுக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்கிட்டே இருக்கே?

வ.வே: (அப்படியே நிற்கிறார். திரும்பாமலே பதில் சொல்கிறார்) நீ என்ன கேட்டே, நான் யாருன்னுதானே? அதான் நான் ஊருக்கு புதுசுன்னு சொல்லிட்டேன்லயா.. பிறவென்ன? (தனக்குள்) விடமாட்டான் போலருக்குதே சாமி..

பார்த்தி: ஏன், முகத்த பாத்து பேசமாட்டீங்களோ?

வ.வே: என் முகத்த பாத்து என்னய்யா பண்ணப் போறே?

பார்த்தி: அத நான் பாத்துக்கறேன். நீ முதல்ல திரும்பி என்ன பாத்து பேசுடா.

வ.வே: (திரும்பி முழுவதுமாக சுற்றிக்கொண்டு மீண்டும் முதுகையே காண்பிக்கிறான்) போதுமா? பாத்துட்டேல்ல? நான் போட்டா? அர்ஜண்டா ஒரு சோலிக்கி போயிட்டிருக்கேன்யா? என்ன உட்டுடேன் (அழுகிறான்).

பார்த்தி: டேய்.. முகத்த காட்றான்னா மறுபடியும் முதுகையே காட்றே? என்ன நக்கலா? அதுவும் ஏன்கிட்டயே?

வ.வே: இப்ப என்னய்யா பண்ணணும்கற?

பார்த்தி: ஸ்லோ மோஷன்ல திரும்பு.

(வ.வே ஸ்லோ மோஷன்ல மீண்டும் முழு வட்டமடித்து திரும்ப முயல.. பார்த்திபன் அவருடைய தோளைப் பிடித்து நிறுத்துகிறான். வடிவேலு தன் இரு கண்களையும் ஒன்றரை கண்ணுள்ளவன்போல் மாற்றிக்கொண்டு நிற்கிறார்.)

பார்த்தி: (ஆச்சரியத்துடன்) டேய் நீயா?

வ.வே: நீயான்னா? நீ நெனக்கற ஆள் நானில்லையா? என்ன உட்டுறு.

பார்த்தி: டேய்.. நான் நீ யாருன்னு நெனச்சேன்னு உனக்கெப்படி தெரியும்? நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தான் நீ?

வ.வே: (தனக்குள்) மறுபடியும் ஆரம்பிச்சிட்டன்யா. இப்படி குண்டக்க மண்டக்கன்னு பேசி எத்தனை நாளைக்கித்தான் இவன் என் கழுத்த அறுக்க போறான்னே தெரியலையே (பார்த்திபனைப் பார்க்கிறான்) என்னய்யா சொல்ற? ஒரெழவும் விளங்க மாட்டேங்குதே..

பார்த்தி: சரி மெதுவா உன் மர மண்டைக்கு விளங்கமாதிரி சொல்றேன். நீ நான் நீன்னு நெனச்ச ஆள்தானே நீ?

வ.வே: நீ.. நீன்னு.. எளவு வரமாட்டேங்குதே.. சரி ஏதோ ஒன்னு.. வேணாம். என்ன விட்டுறு..

பார்த்தி: என்ன வேணாம்?

வ.வே: என்ன வேணாம்னா?

பார்த்தி: இல்ல.. இப்ப ஏதோ வேணாம்னியே?

வ.வே: நானா? எப்ப?

பார்த்தி: டேய்.. என்ன விளையாடறியா? இப்ப நீதானடா வேணாம் என்ன விட்டுருன்னே? அதான் கேக்கறேன். சொல்லு, என்ன வேணாம்?

வ.வே: (அழுகிறான்) யோவ், ஏதோ ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா?

பார்த்தி: பேச்சுக்கா? அதென்ன பேச்சுக்கு? நாங்க மட்டும் பேசாமயா சொல்றோம்? சொல்றா?

வ.வே: (தனக்குள்) என்னடா இவன்.. முன்னால போன முட்டுறான்.. பின்னால போன ஒதைக்கிறான்.. இன்னைக்கி விடிஞ்சாப்பலதான்.. இப்ப என்ன கேக்க வறாங்கறத மறந்து போயிருச்சே..

பார்த்தி: (வடிவேலுவின் தலையில் தட்டுகிறார்) டேய் என்ன சத்தத்தையே காணோம். சரி, அத விடு.. நீ நான் நெனச்ச ஆளா இல்லையா அத சொல்லு..

வ.வே: (முறைக்கிறார்)முதல்ல நான் யாருன்னு நீ நினச்சு பேசிக்கிட்டிருக்க.. அதச் சொல்லு..

பார்த்தி: டேய், என்னையே மடக்கறியா? மவனே.. அப்ப எதுக்கு நீ நெனச்ச ஆள் நான் இல்லன்னு சொன்னே?

வ.வே: நான் ஒரு குத்து மதிப்பா கேக்கறியாக்கும்னு சொன்னேன்.

பார்த்தி: குத்து மதிப்பா? அதென்ன குத்து, மதிப்பு..

வ.வே: யோவ் ஒரு பேச்சுக்கு சொன்னேன்யா..

பார்த்தி: டேய் சொன்ன டையலாக்கையே சொன்னே.. கொன்னுருவேன். சரி அதையும் விடு.. நான் சொல்றேன். நீ அந்த துபாய் கக்கூஸ் பார்ட்டிதானே..

வ.வே: (தனக்குள்) ஹா.. மாட்டிக்கிட்டம்யா.. எமகாதகானாயிருப்பான் போலருக்குதே.. (பார்த்திபனைப் பார்க்கிறார்) துபாயா? கக்கூசா? நீ என்னய்யா சொல்றே? நான் மெட்றாசே பாத்ததுல்ல.. இதுல துபாயில போயி.. நீ நெனக்கற ஆளு நான் இல்லையா.. உலகத்துல ஒருத்தன மாதிரி ஏழு பேர் இருப்பாங்கன்னு நீ கேட்டதில்ல அதுல ஒருத்தன் நான்னு வச்சிக்கயேன்..

பார்த்தி: சரி வச்சிக்கறேன்.. அதுக்குன்னு அவன் மேல அடிச்ச அதே கக்கூஸ் நாத்தமுமா ஏழுபேர் மேலயும் அடிக்கும்?

வ.வே: (தன் மேல் முகர்ந்து பார்க்கிறான். எனக்கு அடிக்காத நாத்தம் இவனுக்கு மட்டும் எப்படி அடிக்குதுன்னே தெரியலையே)

பார்த்தி: என்ன அடிக்குதா?

வ.வே: எது?

பார்த்தி: அதான்டா.. மோந்து பாத்தியே.. அது..

வ.வே: (விறைப்புடன் திரும்பி பார்க்கிறான்) ஆமாய்யா நீ நெனக்கற ஆளு நான்தான்.. அதுக்கு என்ன இப்ப?

பார்த்தி: (வியப்புடன்) தோ பார்றா, கோபங்கூட வருமா உனக்கு?

வ.வே: பின்னே.. நான் என்ன ஒன்னுக்கும் பெறாத ஆளுன்னு நினைச்சியா.. வேணாம். சொல்லிட்டேன்.

பார்த்தி: ஒன்னுக்கு போவாத ஆளா? அது வேறயா? தள்ளி நில்றா!

வ.வே: (தனக்குள்) ஐயோ.. நானே வாய் குடுத்துட்டு, குடுத்துட்டு மாட்டிக்கறனே.. (கன்னத்தில் அடித்துக்கொள்கிறார்) சும்மா வாய வச்சிக்கிட்டு இரேன்டா..

பார்த்தி: டேய் யார சொல்றே?

வ.வே: என்னது நானா?

பார்த்தி: இப்ப ஏதோ வாய்க்குள்ளயே சொன்னியே?

வ.வே: (வாயை மூடிக்கொள்கிறார் இல்லை என்று தலையை அசைக்கிறார்).

பார்த்தி: (வடிவேலுவின் பின்னந்தலையில் அடிக்கிறார்) வாயை தொறந்து சொல்றா?

வ.வே: (கோபத்துடன் முறைக்கிறார்) யோவ். பேசிக்கிட்டிருக்கப்பவே கையை நீட்டுற? வேணாம்.. சொல்லிட்டேன்.

பார்த்தி: என்ன வேணாம்? என்ன சொல்லிட்டே? அடிக்கடி இதே டயலாக்க சொல்றே? என்ன வேணாம்? நான் இந்தான்னு எதையோ குடுத்தா மாதிரி!

வ.வே: (கைகளை தலைக்குமேலே உயர்த்தி கும்பிட்டவாறு தரையில் விழுகிறான்) ஐயோ சாமி.. தெரியாம சொல்லிட்டேன்.. ஆள விடுய்யா..

பார்த்தி: (வலது கரத்தை உயர்த்தி சீர்வதிக்கிறார்) தீர்க்காயுசு பவ.. நீ சாவாம நூறு வருஷம் இரு.. (தனக்குள்) அப்பத்தான அடிக்கடி எங்கிட்ட மாட்டுவே..

வ.வே: (எழுந்து முற்றிலும் அழுக்காகிப்போன தன் உடைகளைப் பார்க்கிறான்) இப்ப திருப்தியா?

பார்த்தி: (வடிவேலுவை மேலும் கீழும் பார்க்கிறார்) இப்பத்தான் சரியான கக்கூஸ் பார்ட்டி மாதிரி இருக்கே.. இப்படியோ போ..

(வ.வே தலையை குனிந்தவாறே சாலையின் ஓரத்துக்கு சென்று ஓரக்கண்ணால் பார்த்திபனைப் பார்க்கிறார்)

பார்த்தி: டேய் என்ன பாக்கறே?

வ.வே: ஒன்னுமில்லயா.. இதோ போய்கிட்டேயிருக்கேன்.. (அவசர, அவசரமாக ஓடுகிறார்)

(பார்த்திபன் ஒரு விஷம புன்னகையுடன் சைக்கிளை திருப்பிக்கொண்டு வந்த வழியே திரும்புகிறார்)

முடிவு

என்னங்க எங்கயோ படிச்ச மாதிரி இருக்கா.. இது ஒரு மீள் பதிவு.. பின்ன என்னங்க தெனக்கும் புதுசு, புதுசாவா எழுத முடியும்.. நாளைக்கிருக்கு.. புதுசா.. கடைசி நாள் பாருங்க..

Monday, February 26, 2007

சென்சஸ் எடுக்கப் போறாங்க.. 4

(பயில்வான் தலையிலடித்துக்கொண்டு தன் மகளைப் பார்க்கிறார். அவர் ஒரு நொடி யோசித்துவிட்டு தன் தந்தையைப் பார்த்து கண்ணடிக்கிறார். திரும்பி செந்திலிடம்) இருங்க.. வாரன்.. (வீட்டிற்குள் சென்று அடுத்த சில நொடிகளில் ஒரு பழைய உள்ளூர் பஸ் டிக்கட்டைக் கொண்டு வந்து காட்டுகிறார்) இந்தாங்க.. நீங்க கேட்ட டிக்கெட்டு..

(செந்தில் அதை வாங்கி சோதித்துவிட்டு திருப்தியுடன் கவுண்டரிடம் கொடுக்கிறார்.)

கவு: டேய்.. இது பழைய பல்லவன் பஸ் டிக்கெட்டுடா.. இங்க பார் பாரீஸ் கார்னர்னு போட்டுருக்கு..

செந்: சரி விடுங்கண்ணே.. ஒருவேளை பாரீசுக்கு பக்கத்துலதான் போயிருக்கோ என்னமோ.. ஊருக்கு போயிருக்குன்னு இவங்க சொல்றது சரியாத்தான் இருக்கும்.. என்ன மேடம்? (சற்று நெருக்கமாக செல்ல பயில்வான் தன் பெரீஈஈய கைகளால் செந்திலைப் பிடித்து பின்னுக்கு தள்ளுகிறார்)

செந்: (சமாளித்துக்கொண்டு) சரி.. டிக் பண்ணிருவோம்.. அடுத்தது மாணிக்கம். வயசு 90!

கோவை2: தாத்தா இப்ப உசிரோட இல்லை.. (கண் கலங்குகிறார். பயில்வான் மகளை பாசத்துடன் அணைத்துக்கொள்கிறார்)

செந்: ( கோவை2வை அணைத்துக்கொண்டிருக்கும் பயில்வானின் கரங்களைப் பார்த்தவாறு பெருமூச்சுடன்) நீங்க குடுத்து வச்சவர் சார்..

பயில்: (கோபத்துடன் பற்களைக் கடிக்கிறார்) டேய்.. நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கி உயிரோட போறதில்லேங்கற முடிவோடத்தான் வந்துருக்கீங்க போலருக்கு.. எம் பொண்ணுக்கு எங்கப்பான்னா உயிர்டா.. அவர் உசிரோட இல்லேங்கறா.. நா குடுத்து வச்சவனா?

கவு: அதானே.. ஏண்டா சார் எவ்வளவு ஃபீலிங்கோட சொல்றார்.. நீ பாட்டுக்கு குடுத்து வச்சவர்ங்கறே..

செந்: (கவுண்டரை நெருங்கி ரகசியக் குரலில்) ஐயோ.. அண்ணே நீங்க வேற போட்டு குடுக்காதீங்க.. அவர் அந்த ஃபிகர கட்டிப்புடிச்சத பார்த்துட்டு சொல்லிட்டேண்ணே.. (முகத்தை தொங்கப் போட்டுக்கொண்டு பயில்வானிடம்) மன்னிச்சிருங்க சார்.. அப்போ தாத்தா இல்லை? பேர அடிச்சிரட்டுங்களா..பேனாவால் மாணிக்கம் என்ற பெயரை அடிப்பதற்கு பதில் மாணிக்கம்மாள் என்ற பெயரை அடித்துவிடுகிறார்.

கோவை2 (அதைப் பார்த்து பதறி..)ஐயையோ.. அது பாட்டி பேருங்க.. அத ஏன் வெட்றீங்க.. (மாணிக்கம் பெயரை சுட்டிக்காட்டி) இதான் தாத்தா பேரு.. (மீண்டும் கண்கலங்க பயில்வான் பொறுக்க முடியாமல் செந்திலை நோக்கி கையை ஓங்கியவாறு நெருங்குகிறார்)

செந்: (வீம்புடன்) யோவ்.. என்ன ரொம்பத்தான் துள்றே.. கைய வச்சிருவியா.. எங்க வைய்யா பாப்போம்.. நா ஒரு கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்.. ஞாபகம் வச்சிக்க.. ஏதோ பேர் கொளப்பம்.. ரெண்டு பேருக்கு ஒரே பேர் வச்சா கொளம்பத்தான்யா செய்யும்.. அதுக்கு பேர் வைக்கறப்பவே யோசிச்சிருக்கணும்.. என்னடா அப்பாவுக்கும் அம்மாவுக்கும் ஒரே பேர் வைக்கறமேன்னு.. அப்போ கோட்டை விட்டுப்போட்டு.. இப்ப துள்ளுன்னா என்னய்யா அர்த்தம்.. (கவுண்டரைப் பார்க்கிறார்) என்னண்ணே பாத்துக்கிட்டு நிக்கறீங்க? சொல்லுங்கண்ணே.. நா கேட்டதுல தப்புருக்கா..

கவு: (தலையில் அடித்துக்கொண்டு தனக்குள்) இவன் நம்ம முதுகுல டின் கட்டாம விடமாட்டான் போலருக்கே.. (செந்திலிடம்) டேய் என்னடா சொல்றே.. ஒங்கப்பனுக்கு நீயா பேர வச்சே.. இங்க பாத்தது போறும்.. வாடா போலாம்.. (திரும்புகிறார்)

செந்: (லிஸ்ட்டைப் பார்க்கிறார்) இருங்கண்ணே.. இன்னொரு ஐட்டம் இருக்கே இந்த அட்றஸ்லே..

கவு: ஐட்டமா.. என்னடா சொல்றே (ஓரக்கண்ணால் பயில்வானைப் பார்க்கிறார்) அது ஒரு ஆளோட பேர்டா..

செந்: (அலட்சியத்துடன்) சரி ஏதோ ஒன்னு.. (கோவை2வை மீண்டும் நெருங்கி) மேடம்.. இது யாருன்னு சொல்லலையே.. (அதிலிருந்த சிங்காரம்மாள் என்ற பெயரை தவறாக சிங்காரியா ஒய்யாரியா என்று கிண்டலுடன் படிக்க பயில்வான் கோபத்துடன் வீட்டிற்குள் செல்கிறார்.. செந்தில் கோவை2வை நெருங்கி) என்ன மேடம்.. அவங்கள கூட்டிக்கிட்டு வரப் போயிருக்காரா?

(பயில்வான் கையில் நீண்ட துப்பாக்கியுடன் வருவதைப் பார்த்துவிட்டு கோவை2)ஐயோ அது எங்கம்மா பேருங்க.. அவங்க பேரப் போயி.. ஓடிருங்க.. எங்கப்ப துப்பாக்கிய எடுத்துட்டா அதுலருந்து புகை வராம வைக்கமாட்டார்..

(அதுவரை நடப்பதை கண்டுக்கொள்ளாமல் படுத்துக்கிடந்த நாயார் எழுந்து செந்திலை நோக்கி உறும செந்தில் கவுண்டரை தள்ளிக்கொண்டு படிகளில் தாவி இறங்க கீழே முகங்குப்புற விழப்போன கவுண்டர் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறார். துப்பாக்கியுடன் வந்த பயில்வான் சாலையில் தலை தெறிக்க ஓடும் இருவரையும் நோக்கி குறிவைக்க கோவை2 அதைப் பிடித்து இழுக்க ஒரு கூட்டமே நின்று வேடிக்கை பார்க்கிறது.)

நிறைவு..

Friday, February 23, 2007

சென்சஸ் எடுக்கப் போறாங்க 3

செந்: அதா நா இருக்கேன்லேண்ணே.. நீங்க பேசாம நில்லுங்க.. நா கேக்க, கேக்க நீங்க கம்முன்னு டிக் பண்ணிக்கிட்டே வாங்க..

பயில்வான்: யார்யா நீங்க? நீங்க முழிக்கற முழியே சரியில்லையே.. பால்கனியிலிருந்து கீழே பார்க்கிறார்.. வாசலில் நாயரும் மகளும் நிற்பது தெரிகிறது..) யோவ் நாயர்.. ஒன்கிட்ட வாடகைக்கு வீட்ட குடுக்கறப்பவே சொன்னேன்லே.. கேட்ட எப்பவும் மூடி வையின்னு.. கண்ட, கண்ட பயல்லாம் வீடேறி வர்ற வரைக்கும் என்னய்யா பண்ணிக்கிட்டிருக்கே..

(கவுண்டர் கோபத்துடன் ஏதொ பேச வாயெடுத்துவிட்டு பிறகு மூடிக்கொள்கிறார்.)

செந்: அண்ணே வேணாம்.. வந்த வேலைய மட்டும் முடிச்சிக்கிட்டு போயிருவோம்.. ஏற்கனவே மயக்கம் போட்டு விழுந்திருக்கீங்க.. நா பேசிக்கறேன் (முன்னால் சென்று) சார்.. நாங்க கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்ஸ்.. கொஞ்சம் மரியாதையா பேசுனா நல்லாருக்கும்..

(அவர் பேசிக்கொண்டிருக்கும் போதே பயில்வான் பின்னாலிருந்து ஒரு இளம் பெண் எட்டிப் பார்ப்பதைக் கண்டுவிடுகிறார்.. வாயெல்லாம் பல்லாகிறது..) (இவங்கள யார்னு கற்பனை பண்றது நக்மா? சீ.. அவங்க ரிட்டையர்டாயாச்சு.. சிம்ரன்.. சே.. அவங்க ரொம்ப குண்டாய்ட்டாங்க.. த்ரிஷா? வேணம்பா நா செந்திலுக்கு ஜோடியான்னு சண்டைக்கு வருவாய்ங்க.. சரி.. ஒங்களுக்கும் வேணாம் எனக்கு வேணாம்.. நம்ம கோவை சரளாவே டபுள் ஆக்ஷன் பண்ணிக்கட்டும்..)

பயில்: (செந்திலின் பார்வை செல்லும் பாதையை கவனித்துவிடுகிறார்) டேய்.. இதான் கவர்ன்மெண்ட் ஸ்டாஃபோட லட்சணமா.. நீ எதுக்கு வந்தியோ அந்த சோலியே பாக்காம அங்க என்ன லுக்கு விடறே.. ஒரு குத்து விட்டேனா சட்னியாயிருவே.. நீயும் ஒம் மூஞ்சியும்.. ஒனக்கு என்ன வேணும் இப்போ..அதச் சொல்லு..

(கவுண்டர் வாயை மூடிக்கொண்டு சிரிக்கிறார். செந்தில் அதைக் கண்டுக்கொள்ளாதவர் போல் கையிலிருந்த பட்டியலில் இருந்து படிக்கிறார்) இங்க மடசாமி யாரு சார்? நீங்களா? (முனகுகிறார்) சரியாத்தான்யா வச்சிருக்காய்ங்க..

பயில்: டேய் என்ன நக்கலா? மாடசாமிய மடசாமின்னு படிக்கே?(கோபத்துடன் முஷ்டியை குவித்து குத்த வருகிறார். அதற்குள் கோவை2 வந்து அவருடைய கையைப் பிடித்துக்கொள்கிறார்)

கோவை2: அப்பா.. அவருதான் கவர்ன்மெண்ட் ஸ்டாஃபுன்னு சொல்றாருல்லே.. அவர போயி அடிக்கப் போறீங்க.. டியூட்டியிலருக்கற கவர்ன்மெண்ட் ஸ்டாஃப் மேல கைய வச்சா வில்லங்கமாயிரும்பா.. வேணாம் (அவர் குரலிலிருந்த கொஞ்சல் செந்திலை மெய்மறக்கச் செய்கிறது. கண்களை மூடி அப்படியே கனவுலகுக்கு செல்கிறார்.. கட்.. கட்.. என்கிறார் டைரக்டர்.. யார்.. நம்ம கவுண்டர்தான். அதனால கனவுல டூயட்லாம் ஒன்னும் வேணாம்.)

பயில்: சரி ஒனக்காக விடறேன்.. என் செல்லம்லே.. (மகளைக் கொஞ்ச.. அவரோ செந்திலை ஓரக்கண்ணால் பார்த்து ஒரு வசீகர புன்னகையை விடுக்கிறார்)

செந்: சாரி.. சார்.. நா தமிள்ல கொஞ்சம் வீக்.. அதான்.. சரி.. அண்ணே மாடசாமிய டிக் பண்ணிக்குங்க.. ரைட்.. அடுத்தது ஜல்சா ராணி.. என்னது? (பயில்வான் மீண்டும் கோபத்துடன் முஷ்டியை உயர்த்துகிறார்)

கோவை2: ஊம்..(சிணுங்குகிறார்) அது ஜலஜா ராணி.. நாந்தேன்.. வயசு என்னன்னு போட்டுருக்கு?

செந்: பதினேழு..

கோவை2: (வெட்கத்துடன்) கரெக்டாதான் சொல்றீங்க (செந்தில் லிஸ்ட்டில் இருக்கும் தியதியை டிக் செய்கிறார்)

கவு: டேய்.. அது போன தேர்தலப்போ எடுத்ததுறா.. அஞ்சு வருசமாச்சில்லே..

செந்: (எரிச்சலுடன்) என்னண்ணே நீங்க.. வருசம் மாறுனா வயசுமா மாறும்.. நா பத்தாங்கிளாஸ் பாஸ்ணே..

கவு: (நொந்துபோகிறார்) டேய்.. அதையே எத்தனதரம்டா சொல்வே.. மேல படிடா..

செந்: மாணிக்கம்மாள்.. வயசு 80.. என்னது எண்பதா? எங்க காணம்? (பயில்வானுக்கு மேலே எம்பி பார்க்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை)

பயில்: யோவ்.. அவங்க இப்ப இல்லை..

கவு: மேல போய்ட்டாங்க போலருக்கு.. பேர அடிடா..

(கோவை2 கண் கலங்குகிறார். பயில்வான் கவுண்டருடைய கழுத்தில் கைவைக்கிறார்)

பயில்: டேய்.. இன்னைக்கி ஒங்க ரெண்டு பேரையும் என்ன பண்றேன் பார்..

கவு: (சிரமப்பட்டு அவருடைய கைகளை விடுவிக்க முயல்கிறார். ஆனால் முடியவில்லை. செந்தில் பார்த்துக்கொண்டு வெறுமனே நிற்கிறார்) டேய்.. டேய்.. ஏதாச்சும் பண்ணேண்டா.. செத்து கித்து போயிரப் போறேன்..

செந்: (சிரிக்கிறார்) பயப்படாதீங்கண்ணே.. நாம கவர்ன்மெண்ட் ஸ்டாஃப்ணே.. லேசா கைய வச்சாலே ஆறு மாசம் ஜெயில்.. இப்ப ஒங்கள கொன்னுட்டார்னு வச்சிக்குங்க.. தூக்குதான்..

(பயில்வான் செந்திலை முறைத்தவாறு கைகளை எடுக்கிறார். கவுண்டர் கழுத்தை தேய்த்தவாறு செந்திலைப் பார்க்கிறார்) டேய்.. இருந்தாலும் ஒன் லொள்ளு தாங்கலடா.. நா செத்ததுக்கப்புறம் இவன் ஜெயிலுக்கு போனா என்ன போவாட்டி என்ன.. இப்ப நா என்னடா தப்பா சொல்லிட்டேன். கெழத்துக்கு அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே எண்பது வயசு.. இதுல இவன் இப்போ இல்லேங்கறான்.. நான் என்னத்தடா நினைக்கறது..

கோவை2: (கொஞ்சலுடன்) பாட்டி ஊருக்கு போயிருக்காங்க..

செந்: (முறைப்புடன்) நாங்க எப்படி நம்பறது.. அவங்க ஊருக்கு போன டிக்கெட் இருக்கா.. இருந்தா காமிங்க.. டிக் பண்ணிக்கறோம்.. (கோவை2 பரிதாபமாக தன் தந்தையைப் பார்க்கிறார்) சொல்லுங்க டிக்கெட் இருக்கா? இல்லன்னா சொல்லிருங்க.. பேர கட் பண்ணிடறோம்.. (கவுண்டர் செந்திலைப் பார்த்து பற்களைக் கடித்தவாறு தனக்குள்) டேய்.. ஒன்னெ கூட்டிக்கிட்டு வந்தேன் பார்.. ஊருக்கு போனவங்க டிக்கெட் இவங்கக்கிட்ட எப்படிறா?

(பயில்வான் தலையிலடித்துக்கொண்டு தன் மகளைப் பார்க்கிறார். அவர் ஒரு நொடி யோசித்துவிட்டு தன் தந்தையைப் பார்த்து கண்ணடிக்கிறார். திரும்பி செந்திலிடம்) இருங்க.. வாரன்.. (வீட்டிற்குள் சென்று அடுத்த சில நொடிகளில் ஒரு பழைய உள்ளூர் பஸ் டிக்கட்டைக் கொண்டு வந்து காட்டுகிறார்) இந்தாங்க.. நீங்க கேட்ட டிக்கெட்டு..

தொடரும்..

Thursday, February 22, 2007

சென்சஸ் எடுக்கப் போறாங்க.. 2

கவு: டேய் தண்டோராத் தலையா, நா ஒருத்தன் இங்க மூச்சுவிட முடியாம உளுந்துக் கிடக்கேன்.. ஒனக்கு அந்த பொண்ணோட பல்லுதான் முக்கியமா போச்சா..?

செந்: (சிரிக்கிறார். பிறகு குனிந்து ரகசியக் குரலில்) இல்லண்ணே.. அந்தப் பொண்ணு இந்தாளோட மக போலருக்கு.. அதான் கொஞ்சம் ஐஸ் வச்சேன்.. இந்த பயலுக்கு காச குடுக்காம தப்பிச்சிக்கலாம் இல்லே..

கவு: (ஓரக்கண்ணால் நாயரையும் பெண்ணையும் பார்க்கிறார்) (தனக்குள்) பொண்ணு சூப்பராத்தான் இருக்கு.. பிராக்கெட் போட்டு பாக்கலாம் போலருக்கே..(துள்ளி எழுகிறார்) டேய்.. இப்ப பரவால்லை.. காலையிலருந்து சரியா ஒன்னும் திங்கலையா அதான்.. கொஞ்சம் லேசா.. (மலையாளப் பெண்ணை நெருங்கி) மேடம்.. மேடம்.. குடிக்க கொஞ்சம் ஜில்லுன்னு தண்ணி கிடைக்குமா (குடிப்பதுபோல் ஆக்ஷன் செய்து காட்டுகிறார்)

கோவை: (எட்டி பின்னால் குதிக்கிறார்)ஏய்.. எந்தா இது.. தண்ணியோ.. இது வீடாக்கும்.. கள்ளு ஷாப்பல்லா.

செந்: (உரக்க சிரிக்கிறார்..பிறகு கவுண்டரை ஒதுக்கிவிட்டு நெருங்கி நிற்கிறார்) மேடம்.. தண்ணின்னா தமிள்ல வாட்டர்..

கவு: டேய்.. பண்டாரத் தலையா தமிள் வார்த்தைக்கு இங்க்லீஷ்ல அர்த்தம் சொல்றியா.. தள்றா.. (பெண்ணை ரொம்பவே நெருங்கி) கொஞ்சம் குடிக்க வாட்டர்..

கோவை (கலகலவென சிரித்தவாறு வீட்டிற்குள் ஓடிச்சென்று ஒரு பாட்டிலில் குடிநீருடன் வாசலில் வந்து நின்று) வரு.. இவ்விட வரு.. (வலது கையால் சைகைக் காட்டுகிறார்)

நாயர் (முறைத்தவாறு தன் மகளை நெருங்கி) எடி பிராந்தி..

செந்: போச்சிறா.. அந்த பொண்ணு குடிக்க தண்ணி தரேங்குது.. இவன் என்னடா பிராந்திய குடுங்கறான். நல்ல குடும்பம்டா.. அண்ணே வேணாம் இன்னும் பத்துவீடாவது நாம முடிக்கணும்.. பேசாம வந்துருங்க.. டீயே குடிச்சே மயங்கி விழுந்த ஆளு நீங்க.. இதுல இந்தம்மா குடுக்கற பிராந்தியயும் குடிச்சீங்க.. அவ்வளவுதான் சொல்லிட்டேன்..

(கோவை மீண்டும் லகலவென சிரிக்கிறார்)அல்லா.. பிராந்தி அல்லா.. மலையாளத்துல பிராந்துன்னா மேட்னு அர்த்தம்.

செந்: என்னது மேடா.. அப்ப பள்ளத்துக்கு என்ன மேடம்?

கவு: அடேய்.. அடேய்.. மேட்னா தமிழ்ல பைத்தியம்னு அர்த்தம்டா.. மானத்த வாங்காம கொஞ்ச நேரம் சும்மாயிருடா.. (கோவையின் கையைத் தொட்டு பாட்டிலை வாங்கி ஒரே மூச்சில் குடிக்கிறார்)

செந்: (சிரிக்கிறார்) அண்ணே நான் பத்தாங் க்ளாஸ் பாஸ்ணே.. மேடுன்னா பைத்தியம்னு ஒங்களுக்கு தெரியுமான்னு ஒரு சின்ன டெஸ்ட் பண்ணி பார்த்தேண்ணே..

(கவுண்ட பெல் கோபத்துடன் திரும்பி ஒரு உதை விடுவதுபோல் காலைத் தூக்க செந்தில் துள்ளி குதித்து தப்புகிறார். கோவை மீண்டும் கலகலவென சிரிக்கிறார்)

கவு: அடடடடா.. இந்த சிரிப்புக்கே குடுத்துரலாம்டா..

செந்: எத? ஒங்க ஓட்ட வீட்டையா? அக்காவுக்கு மட்டும் தெரிஞ்சது.. நீங்க தொலைஞ்சீங்க.. மரியாதையா வந்த வேலைய பாப்போம்.. (கக்கத்தில் வைத்திருந்த புத்தகத்தை எடுத்து புரட்டியவாறு வீட்டு எண்ணைப் பார்க்கிறார்) ஐ! ஒம்போது.. அண்ணே எட்டுக்கப்புறம் ஒம்போத காணம்னீங்களே இதான அது!

கவு: ஆமாடா.. எட்டுக்கப்புறம் ஒம்போதத்தான் தேடுவாங்க.. பின்னே பத்தையா தேடுவாங்க.. லிஸ்ட்லருக்கற பேர படிடா.. (ரகசியமாக) முதல்ல இந்த பொண்ணோட பேர படி.. சிரிப்பு மாதிரியே அளகா இருக்கான்னு பாப்போம்..

செந்: (லிஸ்ட்டைப் பார்த்துவிட்டு குழப்பத்துடன் கோவையையும் அவருகில் நின்ற நாயரையும் பார்க்கிறார்) என்னண்ணே இது..

கவு: என்ன நொன்னண்ணே.. பேர படிடான்னா..

செந்: அதாண்ணே.. லிஸ்ட்ல தமிளாளுங்க பேரால்லே இருக்கு? இதுங்க மலையாளமாச்சே..

கோவை: (சிரிக்கிறார்) அது நாங்க இல்லே.. ஹவுஸ் ஓனர். மேல இருக்குது..

செந்: வாங்கண்ணே (படிகட்டுகளை நோக்கி நகர்கிறார்)

கோவை: ஏய்.. பாத்து.. வாசல்ல நாய் இருப்பாங்க..

கவு: பாத்தியாடா எவ்வளவு மரியாதையா இருக்காங்க மலையாளிங்க.. நாய் இருப்பாங்களாம்..

செந்: (சலிப்புடன்) நீங்கதான் மெச்சிக்கணும்.. மனுசங்கள அது, இதுங்குது.. நாய அவங்கங்குது..

கவு: சலிச்சிக்காதட.. சரி பாத்துவா.. நாய்ங்க கடிச்சிடப் போறாங்க..

செந்: என்னாச்சிண்ணே.. ஒங்களுக்கு மலையாள வாடை அடிச்சிருச்சா.. ஒரு அளகான பொண்ணெ பாத்துரக்கூடாதே..

கவு: சரிடா பம்பரத் தலையா.. வா..

(வாசலில் கட்டிப்போட்டிருந்த நாய் ஆள் வரும் சப்தம் கேட்டு எழுந்து நின்று சோம்பல் முறிக்கிறது. பிறகு இருவரையும் முறைக்கிறது. குலைப்பதா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்குள்.. கவுண்டர் சார், சார்.. சென்சஸ் சார்.. என்று குரல் கொடுக்கிறார். உள்ளிருந்து டேய்.. சும்மாயிரு.. என்ற அதிகாரக் குரல். கவுண்டர் திரும்பி செந்திலை முறைக்கிறார்)

கவு: டேய்.. இவன் யாரச் சொல்றான் என்னையா இந்த நாயையா?

செந்: சிரிக்கிறார்... ஒங்கள சொல்வாராண்ணே.. அவர் கொரல் கேட்டதும் நாய் கப்சிப்புன்னு ஆயிருச்சி பாருங்க.. போங்க..

கவு: அதானே பாத்தேன்.. இல்லன்னா மவனே அவனெ தூக்கிப் போ... (கதவு திறந்து பயில்வான் சைசில் ஒருவர் வந்து நிற்க கவுண்டர் வாயை மூடிக்கொண்டு பரிதாபமாகப் பார்க்கிறார்) ச..சார்.. சென்..சஸ்..

செந்: (ரகசியமாக) நல்ல வேளைண்ணே.. நீங்க முடிக்கறதுக்குள்ளயே வந்துட்டார்.. தப்பிச்சீங்க.. இனியாச்சும் வாய தொறக்காம கேளுங்க..

கவு: (ரகசியக் குரலில்) டேய்.. என்ன நக்கலா.. வாய தொறக்காம என்னத்தடா கேக்கறது?

தொடரும்

Wednesday, February 21, 2007

கவுன்டரும் செந்திலும் சென்சஸ் எடுத்தால்...

நம்ம கவுண்டரும் செந்திலும் சேர்ந்து சென்சஸ் எடுக்கப் போறாங்க. கையில அஞ்சி வருசத்துக்கு முன்னால எடுத்த வாக்காளர்கள் லிஸ்ட்.

காலையிலருந்து சென்சஸ் எடுத்த களைப்பும் அலுப்பும் கவுண்டபெல் முகத்தில்..

செந்: என்னண்ணே.. ரொம்பத்தான் சோர்ந்து போய்ட்டீங்க போலருக்கு.. என்னைய பாருங்க.. அப்படியே இன்னைக்கி பூத்த பூ மாதிரி இருக்கேன்..

க.மணி: (கடுப்புடன் பார்க்கிறார்) டேய்.. நீ? இன்னைக்கி பூத்த பூ? வேணான்டா, என் வாய கெளறாத. சொல்லிட்டேன்..

செந்: கெளற்னா என்னண்ணே.. ரெண்டு திட்டு திட்டுவீங்க.. திட்டிட்டுப் போங்க.. ஆனா அதுக்காக நான் சொன்னது இல்லேன்னு ஆயிருமாண்ணே.. நா பூ மாதிரிதாண்ணே..

க.மணி: (களைப்புடன்) சரிடா அப்படியே வச்சிக்க.. ஆளவிடு.. அடுத்த வீட்டுக்கு போறதுக்கு முன்னால ஒரு டீ அடிப்பம் வா. (சாலையோர கடையை நோக்கி நகர்கிறார். செந்தில் கையிலிருந்த புத்தகத்தை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு பின்னால் ஓடுகிறார். டீக்கடை எதிரில் கிடந்த ஒரே மர நாற்காலியில் கவுன்டர் அமர்ந்துக்கொள்ள செந்தில் வேறு வழியில்லாமல் நிற்கிறார்)

செந்: (சிரித்தவாறு) என்னண்ணே இவ்வளவு சீக்கிரம் சரண்டராயிட்டீங்க.. ரொம்பத்தான் டயர்டாய்ட்டீங்க போலருக்கு..(கடைக்காரரை பார்த்து) யோவ் டீ இருக்கா? அண்ணன் ரொம்ப களைச்சி போயிருக்கார்.

டீ: ஏய் எந்தா, கேலியோ.. இது டீக்கடையாக்கும்? ஒங்கண்ணன் மாத்திரமல்லா.. காசு கொடுத்தா ஏது பட்டி வந்தாலும் இவ்விட டீ உண்டு.. எத்தன டீ வேணும் அதச் சொல்லு.

(க.மணி கண்டுக்கொள்ளாமல் அமர்ந்திருக்கிறார்.)

செந்: (கோபத்துடன்) இந்த நாயர் சொன்னத கேட்டீங்களாண்ணே.. ஒங்கள நாய்ங்கறான்.. யோவ், என்ன கொழுப்பா? நம்ம அண்ணன் யார்னு தெரியல?

டீ: (ஏளனத்துடன் கவுன்டரைப் பார்க்கிறார்) யாரான ஈயாளு? வெல்லிய கலெக்டரோ.. எத்தன டீ வேணும்.. அதச் சொல்லு..

செந்: யோவ்.. என்ன ஓட்ட ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொல்லிக்கிட்டிருக்கே.. ரெண்டு பேருக்கு ரெண்டு டீன்னு கூட தெரியாம.. நீயெல்லாம் ஊர் விட்டு ஊர் வந்துட்டே.. திங்கறதுக்கு எதாச்சும் இருக்கா?

டீ: ஓ இருக்கே.. நேந்திரம்பழம் புழுங்கி வச்சிருக்கி..

செந்: என்னது புளுங்கி வச்சிருக்கியா? என்னய்யா சொல்றே.. அண்ணே நீங்க எழுந்து வாங்க.. வேற எங்கயாச்சும் போவோம். இவன் என்ன சொல்றான்னே புரியமாட்டேங்குது..

க.மணி:(அலுப்புடன்) டேய் சும்மார்றா நீ வேற.. சூடா எதையாச்சும் ஊத்துனாதான் எனக்கு உயிர் வரும்போலருக்கு.. அவன்கிட்ட என்ன இருக்கோ எடுத்து வுடச் சொல்லு..

செந்: என்னது எடுத்து உடறதா? என்னாச்சிண்ணே ஒங்களுக்கு.. நீங்களும் அவன் மாதிரியே பேசறீங்க.. யோவ்.. ஒங்கிட்ட இருக்கறதயெல்லாத்துலயும் ஓன்னு எடுத்து வுடுய்யா.. சீ.. நமக்கும் அதே பாஷையே வருது.. எடுத்து ப்ளேட்ல வச்சி குடுய்யா.. அப்படியே ரெண்டு மசாலா டீ போடு.. ஏலக்காய் இருந்தா அதயும் பொடி பண்ணி போடு.. குடிச்சிட்டு அண்ணன் தெம்பா இன்னும் பத்து வீட்டுப்படி ஏறி எறங்கணும்லே..

(நாயர் தனக்குள் முனுமுனுத்தவாறே இரண்டு கண்ணாடி தம்ளர்களில் டீ கலந்து அதனுடன் ஒரு அலுமினிய தட்டில் இரண்டு வேகவைத்த நேந்திரம் பழத்தையும் கடைப் பையனிடம் கொடுத்தனுப்புகிறார்.)

(க.மணி தலையைக் குனிந்தவாறே டீயை வாங்கி மடமடவென குடித்து முடிக்க செந்தில் அவரை முறைக்கிறார்)

செந்: என்னாச்சிண்ணே உங்களுக்கு? இதெல்லாம் டீயாண்ணே.. களுவி ஊத்துன தண்ணி மாதிரி இருக்கு.. இதப்போயி மூச்சு புடிச்சி குடிக்கறீங்க.. யோவ்.. இதென்னா டீயா இல்ல பாத்திரம் களுவுன தண்ணியா.. இந்தா நீயே குடி.. (தட்டைப் பார்க்கிறார்) இதென்னா கன்னங்கரேல்னு..இதான் நீ சொன்ன புளுங்குன பளமா.. பாக்கவே அசிங்கமாருக்கு.. இது குப்பையில போடத்தான் லாயக்கு (இரண்டையும் எடுத்து சாலையோரத்திலிருந்த குப்பை தொட்டியில் வீசுகிறார்).. வாங்கண்ணே நாம போவோம்.. இதுக்கெல்லாம் இவனுங்களுக்கு பைசா குடுத்தா நாமதான் முட்டாப்பயல்க.. டீ போடறானுங்களாம் டீ..

(நாயர் பாய்ந்து வந்து குறுக்கே நிக்கிறார்)

டீ: எடோ.. ஞான் விடில்லா.. பைசா தந்துட்டு பொக்கோ..

செந்: என்னது பொக்கையா.. யோவ் யார பார்த்து பொக்கைங்கறே.. நம்ம அண்ணன் ஒரு குத்து விட்டார்னா ஒனக்குத்தான் வாய் பொக்கையாயிரும்.. எடுய்யா கைய.. உப்புச் சப்பில்லாத டீயயும் ரெண்டு அளுகிப்போன பளத்தையும் கொண்டுக்கிட்டு வந்துட்டான். இதுக்கு காசு வேறயா.. வாங்கண்ணே போலாம்..

(க.மணி எழுந்து இயந்திரக்கதியில் செந்திலை பிந்தொடர்கிறார். இருவரும் சாலையைக் கடக்க நாயர் அவர்கள் பின்னால் ஓடுகிறார்.)

செந்: (எதிர் வீட்டையடைந்து திரும்பிப் பார்க்கிறார்) அண்ணே என்னாச்சின்னே.. அதான் டீய குடிச்சிட்டீங்கல்லே.. பெறவு எதுக்குண்ணே தலைய தொங்கப் போட்டுக்கிட்டு வரீங்க?

க.மணி: டேய் அந்த டீயிலதான் என்னமோ இருக்குடா.. குடிச்சதுலருந்து தள்ளாடுது.. உழறா மாதிரி இருக்குதுடா.. (அப்படியே சரிந்து அமர்கிறார். உடம்பெல்லாம் வியர்த்துவிடுகிறது. செந்தில் பதற்றத்துடன் சற்று தள்ளி நின்ற டீக்கடை நாயருடைய சட்டையைப் பிடித்து உலுக்குகிறார். அடுத்த வீட்டினுள்ளிலிருந்து ஒரு மலையாளப் பெண் ப்ளவுஸ் முண்டுடன் ஓடிவந்து பார்க்கிறார். கோவை சரளாவை நினைத்துக்கொள்ளுங்கள்.)

கோவை: (கண் இமைகள் இரண்டு படபடக்க) எந்தா.. எந்தாயி.. (நாயரைப் பார்த்து) எந்தாச்சோ?

நாயர்: (பதற்றத்துடன் தன் மகளை நெருங்கி) எடி.. ஒன்னெ யார் இங்க வரச் சொன்னது. இவர் ரெண்டு பேரும் சாயா கழிச்சிட்டு பைசா கொடுக்காண்டு எஸ்கேப் ஆயவரா.. ஞான் நோக்கிக்கொள்ளாம்.. தான் அகத்து பொக்கோ..

செந்: (எரிச்சலுடன்) யோவ் ஒனக்கு இந்த பொக்கைங்கற வார்த்தைய தவிர வேற ஒன்னுமே வாய்ல வராதா? இவரையும் பொக்கைன்னே சரி.. ஒத்துக்கறேன்.. வயசான ஆளு.. . அந்த பொண்ணு என்ன சின்னதா அளகாருக்கு, பச்சரிசி கணக்கா பல்லும் இருக்கு. அதப் போயி பொக்கைங்கறே?

தொடரும்..

Tuesday, February 20, 2007

இரு துருவம் - 2

இரு துருவம் முதல் பகுதி படிக்க

"டேய் குமாரு! இப்பவே கட்டிக்கப்போற பொண்ண பத்தரமா சைக்கிள்ல வெச்சி ஓட்டிட்டு வர" குமார் சைக்கிளை நிறுத்தியவுடனே சொன்னார் பக்கத்துவீட்டு தாத்தா. அதை கேட்டு சிரித்து கொண்டே வீட்டிற்குள் ஓடினாள் சரண்யா.

"அதெல்லாம் இல்லை" சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்குள் சென்றான் குமார்.

அங்கே அத்தையின் மடியில் போய் உக்கார்ந்து கொண்டாள் சரண்யா. நேராக அம்மாவிடம் வந்தான் குமார்.

"அம்மா! ஏன் அந்த தாத்தா எப்ப பார்த்தாலும் இப்படியே சொல்லிட்டு இருக்காரு? இதுக்கு தான் நான் இவளை கூப்பிட்டு வர போக மாட்டேனு சொன்னேன்" கொபம் கலந்த குரலில் கேட்டான் குமார்.

"அவர் கிடக்கறாரு போடா. பாட்டி உள்ள சாப்பாடு போட்டு வெச்சிருக்கு, நீ போய் சாப்பிடு"

குமார், உள்ளே சென்று பாட்டியிடம் சாப்பிட ஆரம்பித்தான். வெளியே அத்தையுடன் கொஞ்சி கொண்டிருந்தாள் சரண்யா.

சரண்யா, குமாரின் ஒன்று விட்ட மாமன் மகள். குமாரின் அம்மாவிற்கும் கூட பிறந்தவர்கள் யாரும் அருகில் இல்லாததால் இந்த அண்ணனையே சொந்த அண்ணன் போலவும், சரண்யாவை மருமகள் போலவும் பார்த்து கொண்டாள். அவளை வீட்டிற்கு மருமகளாக்கும் திட்டமும் அவளுக்கு இருந்தது. சரண்யாவின் அப்பாவிற்கும் தங்கை பையனுக்கு கொடுத்தால் பிரச்சனையில்லை என்ற எண்ணம் இருந்தது. அவர்கள் குமார் வசிக்கும் தெருவிற்கு பக்கத்து தெருவிலே இருந்தனர்.

சரண்யாவும், குமாரும் ஒரே பள்ளியிலே படித்து வந்தனர். குமார் ஐந்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தான், சரண்யா மூன்றாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். பள்ளிவிட்டு இருவரும் ஒன்றாக வந்து கொண்டிருந்தனர்.

"இங்க பாரு, இனிமே என்னை அண்ணனுதான் கூப்பிடனும். புரியுதா? மாமானு எல்லாம் கூப்பிட கூடாது" குமார் சொல்லி கொண்டு வந்தான்.

"சரி" தலையசைத்தாள் சரண்யா.

சரண்யா குமாரை அண்ணா என்று அழைப்பதை பார்த்துவிட்டாள் குமாரின் பாட்டி.

"ஏன்டி யாராவது அத்தை பையனை அண்ணானு கூப்பிடுவாங்களா? மாமானு தான் கூப்பிடனும். சரியா?" விளக்கி கொண்டிருந்தாள் பாட்டி.

"பாட்டி நான் தான் அண்ணானு கூப்பிட சொன்னேன். பள்ளி கூடத்துல மாமானு கூப்பிட்டா பசங்க எல்லாம் கேலி பண்றாங்க. இவ ஒண்ணும் என்னை மாமானு எல்லாம் கூப்பிட வேண்டாம். அண்ணானு கூப்பிட்டாலே போதும்" வேகமாக சொன்னான் குமார். பாட்டி எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை.

.........................................


சரவணன் பரபரப்பாக சுற்றி கொண்டிருந்தான். அன்று அவன் டிப்பார்ட்மெண்ட் துவக்க விழா. அவன் டிப்பார்ட்மெண்ட் ஜாயின் செக்ரட்டரி என்பதால் முன் நின்று வேலை பார்த்து கொண்டிருந்தான்.

"சார்! இன்னைக்கு எங்க டிப்பார்ட்மெண்ட் இனாகரேஷன் ஃபங்ஷன். கொஞ்சம் சேர் எடுத்து போட ஆள் வேணும். ஒரு பத்து பசங்களை மட்டும் அனுப்ப முடியுமா?" எலக்ட்ரிக்கல் லேப் ஆசிரியரிடம் கெஞ்சி கொண்டிருந்தான் சரவணன்.

"அதேல்லாம் முடியாதுப்பா. உங்க பசங்களை வெச்சியே பண்ணிக்கோங்க. செகண்ட் இயர் பசங்கதான் சேர் எடுத்து போடணுமா?" சீரியஸாக சொல்லி கொண்டிருந்தார் அந்த ஆசிரியர். அவரிடம் விவாதிக்க மனமில்லாமல் டிப்பார்ட்மெண்டை நோக்கி நடந்தான் சரவணன்.

உள்ளே சென்று HODயை பார்த்தான்.

"சார் நம்ம செகண்ட் இயர் பசங்களுக்கு இன்னைக்கு எலக்ட்ரிக்கல் லேப். அந்த சார் விட மாட்றேனு அடம் பிடிக்கிறாரு. வேலை செய்ய பசங்க கொஞ்ச பேர் வேணும். நீங்க ஏதாவது சொல்லிவிடுங்க சார்" கோபமாக சொன்னான் சரவணன்.

"அதெல்லாம் வேணாம்பா. நீ நம்ம ஃபர்ஸ்ட் இயர் பசங்களை கூப்பிட்டு போ. நான் சொல்லிக்கறேன்" பொறுமையாக சொன்னார் HOD.

முதலமாண்டு மாணவர்களின் வகுப்பிற்குள் சென்றான் சரவணன். உள்ளே எந்த ஆசிரியரும் இல்லாத்தால் மாணவர்கள் தொண தொணவென்று பேசி கொண்டிருந்தார்கள். சரவணனை பார்த்ததும் அமைதியாகிவிட்டார்கள்.

"ஹாய் ஜினியர்ஸ். நான் உங்க டிப்பார்ட்மெண்ட் ஜாயின் செக்ரெட்டரி. இன்னைக்கு நம்ம டிப்பார்ட்மெண்ட் இன்னாகரேஷன் ஃபங்ஷன். எனக்கு ஹெல்ப் பண்ண ஒரு பத்து பேர் வேணும். யார் வறீங்க?" அவன் கேட்டு முடித்ததும் வகுப்பு மேலும் அமைதியானது.

"வரவங்களுக்கு ஓ.டி இருக்கு" இதை அவன் சொன்னவுடன் உடனே ஒரு இருபது மாணவர்கள் எழுந்தனர்.

"சரி நீங்க பத்து பேர் மட்டும் வாங்க" முதலிலிருந்த பத்து பேரை பார்த்து சொன்னான்.

"அப்பறம் அந்த ரங்கோலி போட ஒரு 4-5 பொண்ணுங்க வேணும். யாருக்கு போட தெரியும்" அனைவரும் அமைதியாக இருந்தனர்.

அன்று அவன் பார்த்த பேசிய அந்த பெண் முதல் பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அவள் அருகே சென்றான்.

"உனக்கு கோலம் போட வருமா?"

"ம்ம்... ஆனா ரங்கோலி எல்லாம் தெரியாது"

"சரி. நீ உன் ஃபிரெண்ட்ஸ் 4 பேரை கூப்பிட்டு ஆடிட்டோரியம் வந்துடு" அவன் சொன்னவுடன் அவள் திரு திருவென்று முழித்து கொண்டிருந்தாள்.

"ஆமாம். உன் பேரு என்ன?"

"சரண்யா..."

(தொடரும்...)

Monday, February 19, 2007

மாமாவின் காதல் - 3

மாமாவின் காதல் முதல் பகுதி

“என்னது உன்கிட்ட வந்து ஐ லவ் யூ சொன்னாளா? அப்புறம் என்ன சொன்னா?” ஒரு விதக் குழப்பத்தோடு கேட்டான் சுரேஷ்.

“அத மட்டும் சொல்லிட்டு ஓடிப்போயிட்டாடா…நில்லுனு சொன்னதுக்கு மீதிய நாளைக்கு சொல்றேன்னுட்டுப் போயிட்டா”

“மச்சான் அவ ஏதோ வெளையாடறான்னு நெனைக்கிறேன், காலையிலேயே வந்து என் கிட்டையும் இதே மாதிரி ‘ஐ லவ் யூ’னு சொல்லிட்டு திரும்பிப் பாக்காம ஓடிப்போயிட்டா… நானும் சீரியஸாதான் சொல்றா ன்னு நெனச்சுட்டு மாமா வந்ததும் ட்ரீட் கொடுக்கலாம்னு இருந்தேனேடா”

“இன்னைக்கு சாயங்காலமே அவகிட்ட கேட்டுட்லாம் விடு” காற்று போன பலூன் மாதிரி ஆகியிருந்தார்கள் இருவரும்.

அன்றுமாலை கல்லூரியில் இருந்து திரும்பி வரும்போது இளவரசியோடு அவள் தோழிகளும் இருக்கும்வரை பொறுமையாக பின் தொடர்ந்துவந்தவர்கள், அவள் தோழிகள் பிரிந்து அவள் தனியானவுடன் நெருங்கிப் போய் கேட்டார்கள்.

“ஏ நில்லு…எதுக்கு ரெண்டு பேர்கிட்டையும் ‘ஐ லவ் யூ’ சொன்ன? எங்களப் பார்த்தா என்ன கேணையனுங்க மாதிரி இருக்கா?”

அவள் திரு திருவென விழித்தாள்.

“என்ன ஒன்னும் தெரியாத மாதிரி முழிக்கிற? ஒழுங்கா யார லவ் பண்றனு சொல்லு… உன்ன விட்டுட்றோம்” – அப்போதும் கூட அவர்களின் காரியத்தில் கண்ணாயிருந்தார்கள்.

அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

“அண்ணா! நான் சத்தியமா யாரையும் லவ் பண்லண்ணா… செகண்ட் இயர் அக்காங்க தான் உங்க மூனு பேர்கிட்டையும் ‘ஐ லவ் யூ’ சொல்ல சொல்லி ராகிங் பண்ணாங்க… நான் மாட்டேன்னுதான் சொன்னேன் நாளைக்கு வந்து சாரி சொல்லிக்க இன்னைக்கு சொல்லிட்டு வரணும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க அதனாலதான்…”

அவள் அண்ணா என்றது மட்டும்தான் அவர்கள் காதில் முழுவதுமாக விழுந்தது. மீதியெல்லாம் அரைகுறையாகதான் கேட்டது.

“ஏய் இப்ப எதுக்கு அண்ணாங்கற? ஒழுங்கா சீனியர மரியாதையா சார்னு கூப்பிடனும்னு தெரியாதா?”

“சாரி சார் தெரியாம சொல்லிட்டேன்…நான் இன்னைக்கு உங்ககிட்ட இத சொல்லிட்டேன்னு அந்த அக்காகிட்ட சொல்லிடாதீங்க ” பயத்தோடு பார்த்தாள்.

“யார் உங்கிட்ட ராகிங் பண்ணது?”

அவள் சொல்லலாமாக் கூடாதா என்று யோசித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

“சரி விடு நாங்களேப் பாத்துக்கறோம்”

“சார் நானே சொல்லிட்றேன் ஆனா நாளைக்கு சாயங்கலம்தான் நான் உங்க கிட்ட சாரி கேட்டேன்னு சொல்லுங்க… காலையிலேயே சொல்லாதீங்க ப்ளீஸ்… ப்ரியாக்காவும், உமாக்காவும்தான் சொன்னாங்க”

“ஓ அவளுங்கதானா? சரி சரி நாங்க பாத்துக்கறோம்”

வண்டியை ஸ்டார்ட் செய்யப் போகும்போது அவள் கேட்டாள் “ அந்த அக்காங்க ,உங்க மூனு பேர்கிட்டவும் “ஐ லவ் யூ” சொல்ல சொன்னாங்க… மாமா சார் எப்ப வருவாங்க?”

அவள் மாமா சார் என்றதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “நைட்டு வந்துடுவான், நாளளக்கு மறக்காம சொல்லிடு” என்று கூறிவிட்டுக் கிளம்பி விட்டார்கள். போகும்போது சுரேஷ் சொன்னான் “மாமா பாவம்டா… வீடெல்லாம் கண்டுபுடிச்சு ரொம்பதான் அலஞ்சான்… அநியாயமா பல்பாகப் போகுது”

அன்று இரவு 10 மணிக்கு மாமா ஊரிலிருந்து வந்தான். அம்மா நினைப்பு இன்னும் இருக்கும்போல இருந்தது ஒரு மாதிரி மூடவுட்டாக இருந்தவன் “டேய் வாங்கடா தண்ணியடிக்கப் போலாம்… எனக்கு தண்ணியடிக்கனும் போல இருக்கு”

ஏற்கனவே நொந்து போயிருந்த இருவரும் உடனேக் கிளம்பினார்கள். வழக்கம்போல இல்லாமல் அன்று அமைதியாகவே இரண்டு ரவுண்ட் போயிருந்தது. கொஞ்சம் போதையேறியவுடனே சுரேஷ் சொன்னான் “மாமா நாம சீக்கிரமே அடுத்த வீடு தேடனும் போல இருக்கு” என்று ஆரம்பித்து மொத்தத்தையும் உளறி முடித்தவன் கடைசியாக சொன்னான் – “மாமா சார் நாளைக்கு உங்களுக்கும் பல்பு வெயிட்டிங் சார்”

அடுத்த நாள் காலை இண்டெர்வெலில் இளவரசி க்ளாசுக்குப் போன மாமா அவளை வெளியேக் கூப்பிட்டு கேண்டினுக்கு வந்தான். அவள் பயந்து கொண்டே வந்தவள் முதலில் சாரி சொன்னாள். அவன் எதுவும் சொல்லாமல் இரண்டு டீ வாங்கிக் கொண்டு வந்தான். மாமா கேண்டினில் டீ குடிக்க வந்திருப்பதையும் அதுவும் ஒரு பெண்ணோடு வந்திருப்பதையும் அவனுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவள் என்ன செய்வது என்று தெரியாமல் டீயை மட்டும் குடித்துக் கொண்டிருந்தாள். அவள் டீயைக்குடித்து முடித்ததும் சொன்னான் “நான் உன்னக் காதலிக்கிறேன்… உன்னதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறேன்… நான் காலேஜ் முடிக்கிறதுக்குள்ள பதில் சொல்லு… இன்னும் ரெண்டு வருசம் டைம் இருக்கு… பை” சொன்னதும் எழுந்து வந்து விட்டான். அவளுக்கு குடித்த டீயெல்லாம் வெளியே வந்து விடும் போல இருந்தது.

இது நடந்து ஒரு செமஸ்டர் முடிந்திருந்தது. விஜயும், சுரேஷும் அந்த இரண்டாமாண்டு மாணவிகளை மிரட்டப் போய்க் கடைசியில் அது கடலையில் முடிந்தது. இப்போதெல்லாம் விஜய், சுரேஷ், ப்ரியா, உமா நால்வரும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள். இருவரும் இப்போது தம்மடிப்பதுமில்லை. கேட்டால் ப்ரியாவிடமும், உமாவிடமும் சத்தியம் செய்துவிட்டார்களாம். தங்களுக்கும் கேர்ள்ப்ரெண்ட் கிடைத்துவிட்ட சந்தோசம் அவர்களுக்கு. மாமா இளாவிடம் எதுவுமேப் பேசுவதில்லை. பார்ப்பதோடு சரி. ப்ரியாவிடம் ஒரு நாள் கடலைக்கு எந்த மேட்டரும் இல்லாததால், மூன்று பேரும் முதலில் பள்ளிக்கூடத்தில் இளாவைப் பார்த்தது, அப்புறம் அவள் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு வாடகைக்கு வீடு பிடித்தது என்ற எல்லாக்கதையையும், சொல்லிவிட்டான் விஜய். அதையெல்லாம் ஒருநாள் ப்ரியாவும் இளாவிடமே சொல்லிவிட்டாள். இளா சொன்னது இதுதான் :

“க்கா…இந்த மாதிரி பார்த்தவுடனே வர்ற லவ்வெல்லாம் சினிமாவுல மட்டும்தான் நடக்கும். என்னப் பொருத்த வரைக்கும் அது லவ்வும் கிடையாது. இன்னைக்கு பார்த்தவுடனே என்னப் பிடிச்சிருக்குன்னு சொன்னா இன்னும் கொஞ்ச நாள்ல வேற யாரையாவது பிடிக்கலாம். மொதல்ல அவர எல்லார்கிட்டையும் சகஜமாப் பழக சொல்லுங்க… அப்பவாவது எல்லாத்தையும் சரியாப் புரிஞ்சுக்குவார்னு நெனைக்கிறேன்”

“இல்லப்பா அவர் உன்ன சீரியசாவே லவ் பண்றார், நிஜமா!”

சிரித்துவிட்டு இளா சொன்னாள், “இது லவ் கிடையாதுங்க்கா. வேணும்னா இன்னும் ரெண்டே மாசத்துல அவராவே என்ன லவ் பண்ணலன்னு சொல்ல வைக்கவா?”

இளாவைப் பொருத்தவரை மாமாவுக்குத் தன் மேல் இருப்பது காதல் இல்லை வெறும் இனக்கவர்ச்சி மட்டும்தான் என்று நம்பினாள். எப்படியாவது அதை அந்த நான்கு பேருக்கும் புரிய வைத்து விட வேண்டுமென்றும் தானும் இந்தத் தொல்லையிலிருந்து விடுபடவேண்டுமென்றும் முடிவு செய்தவள் எப்படி செய்வதென யோசித்தாள். முதலில் வேறொரு பெண்ணுடையப் பெயரில் ஒரு ஈ மெயில் ஐ டி உருவாக்கினாள். ( ஒரு டிஸ்கி : ஒருவரே வெவ்வேறு பெயரில் இரண்டு ஐ டி களா? என்று சமீபத்தில் நடந்த வலைப்பதிவு கூத்தெல்லாம் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. இது அதற்கு முன்பே எழுதப்பட்டு சேமிக்கப் பட்டது.) அந்த ஐ டி யில் இருந்து மாமாவுக்கு மெயில் அனுப்பினாள். தான் ஒரு கல்லூரி விழாவின் போது அவன் கவிதைகளை வாசிக்க நேர்ந்ததாகவும், அவன் கவிதைகள் அருமையாக இருப்பதாகவும் பாராட்டி ஒரு பெரிய மெயில் அனுப்பியிருந்தாள். அந்த ஐ டி மூலமாகவே அவனுக்கு அடிக்கடி மெயில் அனுப்ப ஆரம்பித்தாள். எல்லா மெயிலுக்கும் மாமாவும் கண்டிப்பாக ஒரு ரிப்லையாவது அனுப்பிவிடுவான். அது பிறகு சாட்டிங்காகப் போய்க்கொண்டிருந்தது. தனக்கு எது பிடிக்கும், தன்னுடைய ரசனையெல்லாம் என்ன என்பது போல இவள் பேச தனக்கும் பெரும்பாலும் அதே மாதிரியான ரசனைகள் தான் என அவன் ஆச்சர்யப்பட, இனிமையாகப் போய்க்கொடிருந்தது அந்த சாட்டிங். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இப்படி சாட்டிங்கில் மட்டும் பேசிக்கொண்டிருந்த இளா ஒருநாள் அதை முடிவுக்கு கொண்டு வர நினைத்து ப்ரியாவையும், உமாவையும் கூப்பிட்டு எல்லாவற்றையும் சொன்னாள்.

“இப்படி எங்கிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசறாரே, இப்ப இந்த ஐ டி ல இருந்து நான் ஐ லவ் யூ னு சொன்னா அடுத்த நொடியே “மி ட்டூ” னு தான் ரிப்லை வரும். அவருக்கு இருக்கிறது பொண்ணுங்ககிட்ட பேச முடியலையேங்கற ஏக்கம். பக்கத்து வீட்டுல இருந்து பேசிப்பழகினா லவ் வந்துடும்னு முட்டாள்தனமா யோசிச்சிருக்கார். அவரப் போய் சீரியசா லவ் பண்றார்னு சொல்றீங்களேக்கா?”

அமைதியாக இருந்தார்கள் இருவரும். ” சரி நீ ச்சும்மா ஐ லவ் யூ னு அனுப்பிப் பாரு என்ன சொல்றாருன்னுப் பார்க்கலாம்” – உமா.

மாமா ஆன்லைனில் வந்ததும் அவனுக்கு இளா ஒரு மெயிலே அனுப்பினாள். தன்னுடைய ரசனைகளும் அவனுடைய ரசனைகளும் ஒத்திருப்பதாகவும் இருவரும் இணைந்து வாழ சரியான ஜோடியாக இருப்பதாக அவள் உணர்வதாகவும் இன்னும் என்னென்னவோ எழுதி கடைசியாக அவன் சம்மதம் சொன்னால் அவனை சந்திப்பதாகவும் இல்லையென்றால் மெயில் தொடர்பையும் நிறுத்திக் கொள்வதாகவும் எழுதி அனுப்பினாள்.

மறுநிமிடமே பதில் வந்தது.

“மன்னிக்கனும்.உங்களப் பத்தி நீங்களா சொன்ன விசயங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும், நீங்க யார்னுகூட எனக்குத் தெரியாது. இந்த மாதிரி ஒரு மெயில் உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல. இன்னொரு விசயம், நான் ஏற்கனவே ஒரு பொண்ணக் காதலிச்சுட்டு இருக்கேன். அந்தப் பொண்ணதான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். இதுவரைக்கும் உங்க கிட்ட மெயில்ல பேசினதுல எதாவது தப்பா பேசியிருந்தா மறுபடியும் என்ன மன்னிச்சுடுங்க”

அதைப் படித்ததும் இளாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ப்ரியா பேசினாள், “இங்கப் பாரு இளா… அன்னைக்கு நீ சொன்ன மாதிரி பார்த்தவுடனே வர்றது எல்லாம் காதல் கிடையாதுதான் ஆனா இந்த ஐ டி பொய்யா இருந்தாலும் இந்த ஐ டி மூலமா மாமா கிட்ட நீ சொல்லியிருக்கிற கேரக்டர்ஸ் எல்லாமே உன்னோடதுதான்! உனக்கும் மாமாவுக்கும் ஒரே மாதிரி வேவ் லெந்த் தான் இருக்குன்றது இப்ப உனக்கேப் புரிஞ்சிருக்கும்”

“பொதுவா வெளிய பார்த்தா சாஃப்டா இருக்கிற எல்லாருமே நல்லவங்களும் இல்ல… முரட்டுத் தனமா இருக்கிற எல்லாருமே மோசமானவங்களும் இல்ல… மாமாவப் பத்தி சுரேஷும், விஜயும் சொன்னத வச்சு சொல்றேன் கண்டிப்பா மாமா ஒரு நல்ல பார்டனரா இருப்பார்… இதுக்கு மேல உன்னோட முடிவு” - உமா

“க்கா நீங்க சொல்றதெல்லாம் உண்மையா இருந்தாக்கூட எங்க வீட்டு நிலமைல லவ் பண்றதெல்லாம் நெனச்சுக் கூட பாக்க முடியாதுங்க்கா.. ஏதோ எங்கப்பா பென்ஷன்ல தான் போயிக்கிட்டிருக்கு… எனக்கு மெரிட்ல சீட் கிடைச்சதாலதான் காலேஜ்க்கே வர்றேன் இல்லனா நானும் எதாவது டெய்லரிங், டெக்ஸ்க்குனுதான் வேலைக்குப் போயிருப்பேன்… நல்லக் குடும்பத்துலையே லவ் பண்ணா எவ்வளவு பிரச்சினையாகுது? நான் லவ் பண்ணா, அப்பா இல்லாதப் பொண்ண வளர்க்க தெரியலன்னு எங்கம்மாவதான் எங்க சொந்தக்காரங்க எல்லாம் திட்டுவாங்க… எனக்காக எதுக்கு மத்தவங்க கஷ்டப்படணும்… தயவு செஞ்சு அவங்க ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி சொல்ல சொல்லுங்க” – தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று அவள் செய்தது மேலும் பிரச்சினையில் முடிந்ததால், கலங்கியக் கண்களோடு போய் விட்டாள்.

அதற்குப் பிறகு இளாவுக்கும், மாமாவுக்கும் ஒரு தகவல் தொடர்பு வழியாக விஜய், சுரேஷ், ப்ரியா, உமா இருந்தார்கள். அவள் இதெல்லாம் வேண்டாமென்பதில் பிடிவாதமாக இருக்க அவனோ அவளைத் தான் காதலிப்பதில் பிடிவாதமாக இருந்தான். ஒரு ஜாலிக்காக ஆரம்பித்துக் கடைசியில் மாமா இவ்வளவுப் பிடிவாதமாக இருப்பது சுரேஷுக்கும், விஜய்க்குமே ஆச்சரியமாக இருந்தது.

“மாமா… அந்தப் பொண்ணு அழுவுதாண்டா… விட்றுவோமே எதுக்கு இப்படி அழவச்சுப் பாக்கனும்?”

“டேய் நான் இளாவ எதுவும் டிஸ்டர்ப் பண்ணலையே… நான் ரெண்டு வருசம் கழிச்சு சொல்லுப் போதும்னுதான் சொல்லியிருக்கேன்… அவ இப்ப சொல்றத ரெண்டு வருசம் கழிச்சு சொல்லட்டும் பார்க்கலாம்”

அதற்குப் பிறகு இளாவைப் பற்றி மாமாவிடம் யாரும் பேசுவதில்லை, மாமாவின் மனதைத் தவிர. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஓடியிருந்தன.

எப்போதாவது கேன்ட்டினில் உமாவும், ப்ரியாவும் இளாவிடம் சாதாரணமாகப் பேசுவதோடு சரி. அன்றும் அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது இளா கேட்டாள் “ க்கா உங்க க்ளாஸ் சுந்தரண்ணா கூட ரொம்ப நல்லாக் கவிதையெழுதுவாரா? ஹாஸ்டல் புக்ல அவர் கவிதைதான் நெறைய வந்திருக்கு”

“அதுக்கு தமிழ்ல அதோட பேரே தப்பில்லாம எழுதத் தெரியாது.. அது கவிதையெழுதுதா? அதுவும் காதல் கவிதை” உமா, ப்ரியா இருவரும் சிரித்தார்கள்.

“இல்லங்க்கா அவர் பேர்ல தான் வந்திருக்கு”

“சரி அது யார் எழுதினதுன்னு சொல்றோம்… அதுக்கு முன்னாடி நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு… காதலிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப காதல் கவிதையெல்லாம் படிக்கிற?”

“ஏங்க்கா காதலிக்காதவங்க எல்லாம் கவிதை கூடப் படிக்கக் கூடாதா? லைஃப்ல தான் சான்ஸ் இல்ல கத, கவிதையிலயாவது படிச்சுக்கலாமேன்னுதான்… சரி அது யார் எழுதனது? நீங்களா?”

“அது எல்லாமே மாமா எழுதினதுதான்… அவர் இப்போ ஹாஸ்டல் கிடையாதுல்ல அதான் இவன் பேர்ல எழுதிப் போட்டிருக்கார்… இவன்தான் இப்போ மாமாகூட தம்முக்குக் கம்பெனிக் கொடுக்கறான்ல அந்தப்பாசம்”

அன்று மாலை லைப்ரரி போனவள் சுந்தர் பெயரில் வந்திருந்த எல்லாக் கவிதைகளையும் மீண்டுமொருமுறை வாசித்தாள்.

அந்த வருடம் கல்லூரியில் நடந்த தமிழ்மன்றக் கவிதைப் போட்டியில் மாமாவின் காதல் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. பரிசு வழங்கும் நாளில் மேடையில் அவனேக் கவிதையை வாசிக்கும் வாய்ப்பு. அவள் வரவேண்டுமே என்று அவனுக்கு துடித்துக் கொண்டிருந்தது. அவளும் வந்திருந்தாள். பார்த்துப் படிப்பதற்கு கையில் கவிதை பிரிண்டவுட்டாக இருந்தாலும் மேடையில் நின்று அவளை மட்டுமேப் பார்த்துக் கவிதையை பிழையில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான். தன்னை மட்டுமே அவன் பார்த்துக் கொண்டிருப்பதால் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது, நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள்,

நீ கடிக்க கடிக்க வளர்ந்து கொண்டே இருக்கிறதே

உன் நாவின் சுவையை ருசித்து விட்டதோ

உன் நகம்.

பிரிண்டவுட்டில் இல்லாததும் கவிதையாக வந்தது அவனுக்கு. வாயிலிருந்து நகத்தை வேகமாக எடுத்தவள், கீழே குனிந்து கொண்டாள். அவன் கவிதையை முடிக்கும்போது இப்படி முடித்தான்

உன் காதல் எனக்கு

உயிர் போல…

அளிப்பாயா?அழிப்பாயா?

எல்லாரும் கைதட்டினார்கள் அவளைத் தவிர.

மாமாவின் கவிதைகளில் இப்போதெல்லாம் காதல் அதிகம் கலந்திருப்பதற்கு யார் காரணமெனக் கல்லூரியில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. இளவரசிக்கு மாமி என்ற பெயரும் முளைத்தது. இரண்டு பேருக்கிடையே எதுவுமே இல்லையென்றாலும் அவர்களைப் பற்றி பேசி பேசியே எதையாவது உண்டாக்கிவிடும் கல்லூரி நண்பர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? அதுவும் மாமா ஒரு தலையாக் காதலிக்கிறான் என்பது தெரிந்ததும் இளாவிடம் அவள் தோழிகளின் அட்டகாசம் அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருந்தது. இளாவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் மாமாவைப் பற்றிய ஆர்வம் அதிகமாகியிருந்தது.

அப்போதுதான் அவர்கள் வீட்டருகில் புதிதாக ஒரு கிளை நூலகம் ஆரம்பிக்கப் பட்டிருந்தது. இளா சனி ஞாயிறெல்லாம் அங்கே போய் எதாவது படித்துக் கொண்டிருப்பாள். மாமாவும் போவான். ஆனால், அவள் இருப்பது தெரிந்தால் தானும் அங்கிருப்பது அவளுக்கு சங்க்டமாக இருக்குமோ என்று சீக்கிரமேத் திரும்பி விடுவான். ஒருநாள் அவள், சுட்டி விகடனை எடுத்துக் கொண்டு ரெஜிஸ்டரில் எழுதும்போது லைப்ரரியன் கேட்டார் “என்னம்மா கொழந்தைங்க புக்கெல்லாம் நீ படிக்கிற?”. அடிக்கடி லைப்ரரி போவதால் அவருக்கும் அவளைத் தெரியும்.

“ஏன் சார்? கொழந்தைங்க புக்கெல்லாம் கொழந்தைங்க மட்டும்தான் படிக்கனுமா? பின்னாடி என்னோட கொழந்தைக்கு சொல்றதுக்கு ஒரு கதையாவது தெரிஞ்சுக்கனுமில்ல?” சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“இன்னைக்கு எல்லாருக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல… அங்கொரு பையன் பொண்ணுங்க புக்க எடுத்துப் படிச்சுட்டு இருக்கான்… கேட்டா, பொண்ணுங்க பிரச்சினையெல்லாம் தெரிஞ்சிகிட்டாதான சார் நாளைக்கு ஒரு நல்ல ஹஸ்பெண்டா இருக்க முடியும்னு என்னையவே கேட்கறான்.. ம்ஹும்”

கையெழுத்து போடும்போது பார்த்தாள் அவள் விகடனுக்கு நேராக மாமாவின் கையெழுத்து இருந்தது. அவசரமாக சுற்றிலும் பார்த்தாள். ஒரு மூலை சேரில் அவள் வந்ததையும் கவனிக்காமல் மாமா சீரியசாக ‘அவள் விகடன்’ படித்துக் கொண்டிருந்தான்.

அன்று கேண்டீனில் கூட்டம் அதிகமில்லை. ப்ரியாவும், இளாவும் டீக்குடித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள்.

வேகமாக ஓடி வந்த சுரேஷ் “ப்ரியா, மாமா பைக்ல போகும்போது ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு… தலைல நல்ல அடியாம் KMCHல அட்மிட் பண்ணிட்டாங்களாம், கிளம்பு போலாம்”. அவர்களோடு இளாவும் அவசரமாகக் கிளம்பினாள்.

நிறைவுப் பகுதி

அழியாத அன்புடன்,

அருட்பெருங்கோ.

Friday, February 16, 2007

டவுசர் பாண்டி (vol-2)

காதலர்தினம் ஒரு வழியா முடிச்சுபோச்சு, காதலன் காதலிக்கிட்டே பேசுறதும், காதலி காதலன்'கிட்டே பேசுறதும் பார்க்கிறப்போ 'அப்பிடியே நம்மையறியாமே உள்ளுக்குள்ளே ஒன்னு பொங்கி வந்து அவனுகளை தலைமுடியை பிடிச்சு நறுக் நறுக்குன்னு நாலு குட்டு வைக்கணும் போலே தோணும். வீட்டுலே உட்கார்ந்து எழுதி வந்து மேடையிலே பேசுறமாதிரி பேசிட்டு திரிவானுக... அதுவும் நம்மளை மாதிரி காஞ்சுபோன கேஸ்களுக்கு அவனுக பேசுறத கண்டா அப்பிடியே பத்திட்டு வரும், அதாவது நம்மளை மாதிரி'ன்னு சொன்னது காதலர் தினத்தை அன்பர் தினம் , அதிசயமாய் வேலை பார்க்கும் தினமா கொண்டினவங்களுக்கு தான் சொல்லுறேன். வேற யாரும் டென்சன் ஆகவேணாம்....!!!!!

லவ் பண்ணிட்டு திரியறவயங்கே கூட ஆளுக்கு ஒருத்தர் துணை ஒன்னு இருப்பாய்ங்கே... அப்பிடி உட்கார்ந்து கிடந்த நம்ம டவுசரு பாண்டி சொல்லுறத கேளுங்க.





"எங்கவீட்டுலே யாராவது பொண்ணுக கூட பேசிட்டு இருக்கிற பார்த்தா பிரச்சினை ஆகிறும்.. ஸோ கொஞ்சம்கூட வாடா! நாமெல்லாம் இருந்தா கூட்டமா சேர்த்து கும்மாளம் போடற மாதிரி இருக்கும்'ன்னு சொல்லி கூட்டிட்டு போறீங்களே, உனக்கு அங்கே துணை இருக்கு, எனக்குன்னு யாராவது இருக்காங்களான்னு நினைச்சி பார்த்தீங்களாடா வீங்கி போன அரவிந்தசாமிகளா?"

"டேய்! இன்னிக்கு எனக்கும் அவளுக்கும் பெரிய சண்டை'டா! அவளை திட்டிட்டு வந்துட்டேன்! இப்போ என்ன ஆனாளோ? சாப்பிட்டாளா? தூங்குனாளோ?? இப்பிடி பல வகையா திங்க் பண்ணீறீங்களே..அவிஞ்சு போன அடுப்புலே வெந்து போன சாமிகளா? ஒங்ககூடவே குரங்கு குட்டியாட்டம் திரியுற எங்களுக்கு எப்பாவது வடையும் டீயும் வாங்கி தரனுமின்னு யோசிச்சுருக்கீங்களடா போண்டா தலையனுகளா?"

"ஊரெல்லாம் தொத்து வியாதி பரவிறுக்கே! நம்ம பயப்புள்ள'க்கு என்னாச்சோன்னு பார்க்கவந்த இடத்திலேயும் "ரெண்டு மூணு நாளா அடிச்ச காயச்சலிலே வெளியே எங்கயும் போகமுடியலை! அவளையும் பார்க்கமுடியலையே? ஐயோ ஐயோ'ன்னு கதருற ஒங்களை எல்லாம் ஏண்டா சிக்கன்குனியா டைனோசர் வந்து கடிச்சு வைக்கலை??"

"நம்ம பண்ணுற லவ்'லே எப்பாவது அடி கிடி வாங்க வேண்டியாதிருந்தா இந்த பயப்புள்ளயும் வாங்கட்டுமின்னு கூட்டிட்டு போறே பாசக்கார மச்சானுகளா!... ஊரோட ஒத்து வாழனுமின்னு பழமொழிக்கு ஏத்தமாதிரி அடிக்க வர்றவங்களோட சேர்த்து நாங்களும் குடுப்போமிடா எண்ணை சட்டியிலே வெந்து எந்திரிச்ச கோழிமண்டயனுகளா"

Thursday, February 15, 2007

பசுமை நிறைந்த நினைவுகளே..

இந்த பாட்ட கேட்டதும் (ஃபேர்வல்), அதாங்க பள்ளிக்கூட, கல்லூரி பிரிவு உபச்சார விழாதான் நம்ம ஞாபகத்துக்கு வரும். இப்படி பல பாடல்கள் சில நிகழ்ச்சிக்காகவே நம்ம ஆட்கள் வச்சிருப்பாய்ங்க நம்ம மக்கள். எடுத்துக்காட்டா 'வாராயோ தோழி வாராயோ - கல்யாணம், இளமை இதோ - புத்தாண்டு'..

எங்க ஊர்ல இருக்கிற பெண்களுக்கான கல்லூரிகள் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டா, மதுரை மக்கள்கிட்ட கேளுங்க - சிறந்ததா எங்க கல்லூரியைதான் தேர்வு செய்வாங்க! அத்தனை பிரசித்தி.

நான் பி.எஸ்ஸி படிக்கும்போது,ஒரு செட் சேர்ந்தோம் பாருங்க, சும்மா லெக்சரர் எல்லாம் நடுங்குவாங்க எங்க வகுப்புக்கு வரதுக்கே, அவ்வளவு அடக்கம்! கடைசி பென்ச்! சேட்டை எல்லாம் செய்யரதுக்குன்னே வந்திருக்கீங்களான்னு கேப்பாங்க எல்லாரும். HODயை வாரம் ஒருமுறை சந்திச்சிரனும் எங்களுக்கெல்லாம்! மொத்தம் 10 பேர். இம்சை தாங்காம ஒவ்வொருத்தரையும் ஒவ்வொரு பெஞ்சில உக்கார சொல்வாங்கன்னா பார்த்துக்கோங்களேன்.லேடீஸ் காலேஜில படிச்சா நிறைய இம்சை பொண்ணுங்களுக்கு கிடையாது. அம்மா அப்பா ரொம்ப ரிலாக்ஸா இருப்பாங்க - நொய் நொய்னு பசங்க பத்தி அட்வைஸ், வார்னிங் எல்லாம் சொல்ல சந்தர்ப்பம் இருக்காது. ஏன்னா எங்களுக்கு போக வர காலேஜ் பஸ், மத்த படி காலேஜுக்குள்ள பசங்க நுழைய முடியாது. தங்கச்சிய இறக்கிவிட வந்தேன், கூட்டிட்டு போக வந்தேன்னு கூட உள்ள வர முடியாது! ஒரு அட்டண்டர், ரெண்டு வாட்ச்மேன், 2 பஸ் டிரைவர் அவ்வளவுதான் எங்க கல்லூரி தேசத்துல ஆண்கள் ஆதிக்கம்!

வருஷா வருஷம் ஃபீஸ் கட்டவேண்டிய நாள், எக்ஸாம் ஃபீஸ் எல்லாத்தையும் கடைசி நாள் அன்னைக்கு தான் கட்டுவோம், இல்லைன்னா, கட்டாதவங்களுக்கு ஒரு க்ரேஸ் நாள் தருவாங்களே அப்போ தான் கட்டுவோம், ஏன்னு கேட்டீங்கன்னா, வீட்ல எல்லாம் ஃபீஸ் கட்டனும்னு சொன்ன உடனே, வசூலிச்சிருவோம், அதை செலவழிச்சிட்டு கடைசி நாளுக்குள்ள தேத்தனும்ல, அதுக்கு தான் இவ்வளவு கஷ்டமும்!!

எக்ஸாம்னாலே ரொம்ப கொண்டாட்டம்தான் எங்க மக்களுக்கு. க்ருப் ஸ்டடிங்கிற பேர்ல யார் வீட்லயாவது ஸ்டடி லீவ் எல்லாம் கழிச்சிட்டு முந்தின நாள் தான் தனியா படிப்போம். டீ எல்லாம் ஃப்ளாஸ்கில நிரப்பிட்டு பெட்ரூமுக்கு எடுத்திட்டு போய், முதல் கப் குடிச்சு முடிச்சிட்டு, ஒரு மணி நேரம் மட்டும் தூங்குவோம்னு அலாரம் எல்லாம் வச்சிட்டு, தூங்கிருவோம். அப்புறம் அலாரம் அடிச்சுதா, எந்திருச்சியான்னு எல்லாம் கேட்கக் கூடாது! காலைல 6 மணிக்கு எந்திருச்சு, அம்மாக்கிட்ட நாந்தான் தூங்கிட்டேன்னா, நீங்களாவது எழுப்பியிருக்க கூடாதான்னு சொல்றது,அம்மா திரும்ப ஒரு முறை கொடுப்பாங்க பாருங்க, சூப்பரா இருக்கும், அப்படியே வேகம் வேகமா, குழிச்சிட்டு, காலேஜ் போயிருவேன்.அங்க நம்ம மொத்த செட்டும் இருக்கும் பாருங்க - சும்மா சூப்பரா இருக்கும்!! நீ என்ன பாடம் படிச்ச, அதை கொஞ்சம் சொல்லுடின்னு ஒருத்தர் ஒருத்தர்கிட்ட போய் கேட்டு 10 மணிக்குள்ள நல்லா தேத்திருவோம். என்ன சொல்லுங்க நாமளா படிக்கறத விட இப்படி செவி-வழி கல்வி நல்லா மனசில தங்கும்! தியரி பேப்பர் எல்லாம் இந்த கதை தான். ப்ரோக்ராமிங் எல்லாம் பிரிச்சு மேஞ்சிருவோம்ல! 10 பேர்ல ஒரு 5 பேராவது டாப் 5ல இருப்போம். மத்தியானம் பரீட்சைன்னா, காலைலதான் ஆரம்பிப்போம் படிக்க! கடைசில 10 பெரும் அரியர்ஸே வைக்காம பாஸ் பண்ணிட்டோம்ல! எப்படி!! இதுல 4,5 பேர் ரேங்க் ஹோல்டர்ஸ் வேற!!

இந்த லவ் பண்ற பொண்ணுங்களை தான் ஓரங்கட்டி கிண்டல் பண்ணுவோம். ரோஸ் வச்சிட்டு காலேஜ் வந்தா ஒரு கிண்டல், சேலை கட்டிட்டு வந்தா ஒரு கிண்டல், புது ஹேண்ட் பேக் கொண்டுவந்தா ஒரு கிண்டல்னு ஓட்டிவோம்!இந்த ஃபைனல் இயர் அழகான காலம். மிக சீக்கிரம் முடிஞ்சா மாதிரி இருக்கும். செட் சாரி (சேலை) ன்னு ஒரு பழக்கம் இருக்கும் எல்லா லேடீஸ் காலேஜ்லயும். அதாவது செட்ல இருக்கிற அத்தனை பேரும், ஒரே மாதிரி, ஒரே கலர்ல சேலை கட்டி, ஃபோட்டோ எல்லாம் எடுத்து ஞாபகார்த்தமா வச்சுக்குவாங்க! அனேகமா அந்த சேலையை அன்னைக்கு மட்டும் தான் எல்லாரும் கட்டுவாங்க, அதுக்கு அப்புறம் அது பீரோவில தூங்கும். எங்க செட் மட்டும் இதை செய்யல. அப்படி கட்டுற மக்களை எல்லாம் எக்கச்சக்கமா கிண்டல் பண்ணி ஏண்டா கட்டினோம்னு ஃபீல் பண்ணவச்சிருவோம். திட்டி தீர்த்திருவாள்க எங்கள! அதுக்கும் வெட்கமில்லாமல் சிரிப்போம்னா பார்த்துகோங்க! லெக்சரர் திட்டினாலும் இதே ரியாக்ஷன் தான் குடுப்போம், கடுப்பாயிருவாங்க.

ஃபேர்வல் அன்னைக்கு எல்லாரும் ஆட்டோகிராப் கேட்பாங்க எழுதுவாங்க. நாங்க யாரு ! எல்லாருக்கும் எல்லாம் எழுத மாட்டோம்ல , ரொம்ப முக்கியமானவங்களுக்கு மட்டும் எழுதுவோம். அப்ப பார்த்து அழுவாய்ங்க சில பேர், "இனி எப்போடி பார்ப்போம்", "போன் பேசு என்ன","லெட்டர் போடுபா" இப்படி எல்லாம் சொல்லி பெனாத்துவாய்ங்க! ஒரே காமெடியா இருக்கும். நாங்க கெக்க பெக்கேன்னு சிரிப்போம் அப்ப, அத பார்த்திட்டு அவங்க தன்னால நொந்துருவாய்ங்க! இன்னைக்கும் இவிங்க திருந்தலையான்னு நினைச்சு தனக்கு தானே திட்டிக்குவாங்க!

நாங்க படிச்சு முடிச்சதுக்கு அப்புறம் காலேஜ் போனப்போ, எங்க ஜூனியர்கள் கிட்ட எங்களை திட்டின, பல முறை வார்ன் பண்ண ஹெச்ஓடி, லெக்சரர்ஸ் எல்லாரும் "இவங்க உங்க சீனியர்ஸ், நல்ல பிள்ளைகள், அருமையா படிப்பாங்கன்னு" சொல்லும்போது என்றைக்கும் வராத கண்ணீர் எட்டிப் பார்த்தது! ஆனாலும் நம்ம சேட்டையை கொஞ்சம் குறைச்சு பண்ணியிருக்கலாமோன்னும் தோன்றியது!!