Monday, February 19, 2007

மாமாவின் காதல் - 3

மாமாவின் காதல் முதல் பகுதி

“என்னது உன்கிட்ட வந்து ஐ லவ் யூ சொன்னாளா? அப்புறம் என்ன சொன்னா?” ஒரு விதக் குழப்பத்தோடு கேட்டான் சுரேஷ்.

“அத மட்டும் சொல்லிட்டு ஓடிப்போயிட்டாடா…நில்லுனு சொன்னதுக்கு மீதிய நாளைக்கு சொல்றேன்னுட்டுப் போயிட்டா”

“மச்சான் அவ ஏதோ வெளையாடறான்னு நெனைக்கிறேன், காலையிலேயே வந்து என் கிட்டையும் இதே மாதிரி ‘ஐ லவ் யூ’னு சொல்லிட்டு திரும்பிப் பாக்காம ஓடிப்போயிட்டா… நானும் சீரியஸாதான் சொல்றா ன்னு நெனச்சுட்டு மாமா வந்ததும் ட்ரீட் கொடுக்கலாம்னு இருந்தேனேடா”

“இன்னைக்கு சாயங்காலமே அவகிட்ட கேட்டுட்லாம் விடு” காற்று போன பலூன் மாதிரி ஆகியிருந்தார்கள் இருவரும்.

அன்றுமாலை கல்லூரியில் இருந்து திரும்பி வரும்போது இளவரசியோடு அவள் தோழிகளும் இருக்கும்வரை பொறுமையாக பின் தொடர்ந்துவந்தவர்கள், அவள் தோழிகள் பிரிந்து அவள் தனியானவுடன் நெருங்கிப் போய் கேட்டார்கள்.

“ஏ நில்லு…எதுக்கு ரெண்டு பேர்கிட்டையும் ‘ஐ லவ் யூ’ சொன்ன? எங்களப் பார்த்தா என்ன கேணையனுங்க மாதிரி இருக்கா?”

அவள் திரு திருவென விழித்தாள்.

“என்ன ஒன்னும் தெரியாத மாதிரி முழிக்கிற? ஒழுங்கா யார லவ் பண்றனு சொல்லு… உன்ன விட்டுட்றோம்” – அப்போதும் கூட அவர்களின் காரியத்தில் கண்ணாயிருந்தார்கள்.

அவளுக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது.

“அண்ணா! நான் சத்தியமா யாரையும் லவ் பண்லண்ணா… செகண்ட் இயர் அக்காங்க தான் உங்க மூனு பேர்கிட்டையும் ‘ஐ லவ் யூ’ சொல்ல சொல்லி ராகிங் பண்ணாங்க… நான் மாட்டேன்னுதான் சொன்னேன் நாளைக்கு வந்து சாரி சொல்லிக்க இன்னைக்கு சொல்லிட்டு வரணும்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க அதனாலதான்…”

அவள் அண்ணா என்றது மட்டும்தான் அவர்கள் காதில் முழுவதுமாக விழுந்தது. மீதியெல்லாம் அரைகுறையாகதான் கேட்டது.

“ஏய் இப்ப எதுக்கு அண்ணாங்கற? ஒழுங்கா சீனியர மரியாதையா சார்னு கூப்பிடனும்னு தெரியாதா?”

“சாரி சார் தெரியாம சொல்லிட்டேன்…நான் இன்னைக்கு உங்ககிட்ட இத சொல்லிட்டேன்னு அந்த அக்காகிட்ட சொல்லிடாதீங்க ” பயத்தோடு பார்த்தாள்.

“யார் உங்கிட்ட ராகிங் பண்ணது?”

அவள் சொல்லலாமாக் கூடாதா என்று யோசித்துக் கொண்டு அமைதியாக இருந்தாள்.

“சரி விடு நாங்களேப் பாத்துக்கறோம்”

“சார் நானே சொல்லிட்றேன் ஆனா நாளைக்கு சாயங்கலம்தான் நான் உங்க கிட்ட சாரி கேட்டேன்னு சொல்லுங்க… காலையிலேயே சொல்லாதீங்க ப்ளீஸ்… ப்ரியாக்காவும், உமாக்காவும்தான் சொன்னாங்க”

“ஓ அவளுங்கதானா? சரி சரி நாங்க பாத்துக்கறோம்”

வண்டியை ஸ்டார்ட் செய்யப் போகும்போது அவள் கேட்டாள் “ அந்த அக்காங்க ,உங்க மூனு பேர்கிட்டவும் “ஐ லவ் யூ” சொல்ல சொன்னாங்க… மாமா சார் எப்ப வருவாங்க?”

அவள் மாமா சார் என்றதும் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு “நைட்டு வந்துடுவான், நாளளக்கு மறக்காம சொல்லிடு” என்று கூறிவிட்டுக் கிளம்பி விட்டார்கள். போகும்போது சுரேஷ் சொன்னான் “மாமா பாவம்டா… வீடெல்லாம் கண்டுபுடிச்சு ரொம்பதான் அலஞ்சான்… அநியாயமா பல்பாகப் போகுது”

அன்று இரவு 10 மணிக்கு மாமா ஊரிலிருந்து வந்தான். அம்மா நினைப்பு இன்னும் இருக்கும்போல இருந்தது ஒரு மாதிரி மூடவுட்டாக இருந்தவன் “டேய் வாங்கடா தண்ணியடிக்கப் போலாம்… எனக்கு தண்ணியடிக்கனும் போல இருக்கு”

ஏற்கனவே நொந்து போயிருந்த இருவரும் உடனேக் கிளம்பினார்கள். வழக்கம்போல இல்லாமல் அன்று அமைதியாகவே இரண்டு ரவுண்ட் போயிருந்தது. கொஞ்சம் போதையேறியவுடனே சுரேஷ் சொன்னான் “மாமா நாம சீக்கிரமே அடுத்த வீடு தேடனும் போல இருக்கு” என்று ஆரம்பித்து மொத்தத்தையும் உளறி முடித்தவன் கடைசியாக சொன்னான் – “மாமா சார் நாளைக்கு உங்களுக்கும் பல்பு வெயிட்டிங் சார்”

அடுத்த நாள் காலை இண்டெர்வெலில் இளவரசி க்ளாசுக்குப் போன மாமா அவளை வெளியேக் கூப்பிட்டு கேண்டினுக்கு வந்தான். அவள் பயந்து கொண்டே வந்தவள் முதலில் சாரி சொன்னாள். அவன் எதுவும் சொல்லாமல் இரண்டு டீ வாங்கிக் கொண்டு வந்தான். மாமா கேண்டினில் டீ குடிக்க வந்திருப்பதையும் அதுவும் ஒரு பெண்ணோடு வந்திருப்பதையும் அவனுக்குத் தெரிந்தவர்கள் எல்லாம் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அவள் என்ன செய்வது என்று தெரியாமல் டீயை மட்டும் குடித்துக் கொண்டிருந்தாள். அவள் டீயைக்குடித்து முடித்ததும் சொன்னான் “நான் உன்னக் காதலிக்கிறேன்… உன்னதான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனைக்கிறேன்… நான் காலேஜ் முடிக்கிறதுக்குள்ள பதில் சொல்லு… இன்னும் ரெண்டு வருசம் டைம் இருக்கு… பை” சொன்னதும் எழுந்து வந்து விட்டான். அவளுக்கு குடித்த டீயெல்லாம் வெளியே வந்து விடும் போல இருந்தது.

இது நடந்து ஒரு செமஸ்டர் முடிந்திருந்தது. விஜயும், சுரேஷும் அந்த இரண்டாமாண்டு மாணவிகளை மிரட்டப் போய்க் கடைசியில் அது கடலையில் முடிந்தது. இப்போதெல்லாம் விஜய், சுரேஷ், ப்ரியா, உமா நால்வரும் ஒன்றாக சுற்ற ஆரம்பித்துவிட்டார்கள். இருவரும் இப்போது தம்மடிப்பதுமில்லை. கேட்டால் ப்ரியாவிடமும், உமாவிடமும் சத்தியம் செய்துவிட்டார்களாம். தங்களுக்கும் கேர்ள்ப்ரெண்ட் கிடைத்துவிட்ட சந்தோசம் அவர்களுக்கு. மாமா இளாவிடம் எதுவுமேப் பேசுவதில்லை. பார்ப்பதோடு சரி. ப்ரியாவிடம் ஒரு நாள் கடலைக்கு எந்த மேட்டரும் இல்லாததால், மூன்று பேரும் முதலில் பள்ளிக்கூடத்தில் இளாவைப் பார்த்தது, அப்புறம் அவள் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு வாடகைக்கு வீடு பிடித்தது என்ற எல்லாக்கதையையும், சொல்லிவிட்டான் விஜய். அதையெல்லாம் ஒருநாள் ப்ரியாவும் இளாவிடமே சொல்லிவிட்டாள். இளா சொன்னது இதுதான் :

“க்கா…இந்த மாதிரி பார்த்தவுடனே வர்ற லவ்வெல்லாம் சினிமாவுல மட்டும்தான் நடக்கும். என்னப் பொருத்த வரைக்கும் அது லவ்வும் கிடையாது. இன்னைக்கு பார்த்தவுடனே என்னப் பிடிச்சிருக்குன்னு சொன்னா இன்னும் கொஞ்ச நாள்ல வேற யாரையாவது பிடிக்கலாம். மொதல்ல அவர எல்லார்கிட்டையும் சகஜமாப் பழக சொல்லுங்க… அப்பவாவது எல்லாத்தையும் சரியாப் புரிஞ்சுக்குவார்னு நெனைக்கிறேன்”

“இல்லப்பா அவர் உன்ன சீரியசாவே லவ் பண்றார், நிஜமா!”

சிரித்துவிட்டு இளா சொன்னாள், “இது லவ் கிடையாதுங்க்கா. வேணும்னா இன்னும் ரெண்டே மாசத்துல அவராவே என்ன லவ் பண்ணலன்னு சொல்ல வைக்கவா?”

இளாவைப் பொருத்தவரை மாமாவுக்குத் தன் மேல் இருப்பது காதல் இல்லை வெறும் இனக்கவர்ச்சி மட்டும்தான் என்று நம்பினாள். எப்படியாவது அதை அந்த நான்கு பேருக்கும் புரிய வைத்து விட வேண்டுமென்றும் தானும் இந்தத் தொல்லையிலிருந்து விடுபடவேண்டுமென்றும் முடிவு செய்தவள் எப்படி செய்வதென யோசித்தாள். முதலில் வேறொரு பெண்ணுடையப் பெயரில் ஒரு ஈ மெயில் ஐ டி உருவாக்கினாள். ( ஒரு டிஸ்கி : ஒருவரே வெவ்வேறு பெயரில் இரண்டு ஐ டி களா? என்று சமீபத்தில் நடந்த வலைப்பதிவு கூத்தெல்லாம் உங்கள் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. இது அதற்கு முன்பே எழுதப்பட்டு சேமிக்கப் பட்டது.) அந்த ஐ டி யில் இருந்து மாமாவுக்கு மெயில் அனுப்பினாள். தான் ஒரு கல்லூரி விழாவின் போது அவன் கவிதைகளை வாசிக்க நேர்ந்ததாகவும், அவன் கவிதைகள் அருமையாக இருப்பதாகவும் பாராட்டி ஒரு பெரிய மெயில் அனுப்பியிருந்தாள். அந்த ஐ டி மூலமாகவே அவனுக்கு அடிக்கடி மெயில் அனுப்ப ஆரம்பித்தாள். எல்லா மெயிலுக்கும் மாமாவும் கண்டிப்பாக ஒரு ரிப்லையாவது அனுப்பிவிடுவான். அது பிறகு சாட்டிங்காகப் போய்க்கொண்டிருந்தது. தனக்கு எது பிடிக்கும், தன்னுடைய ரசனையெல்லாம் என்ன என்பது போல இவள் பேச தனக்கும் பெரும்பாலும் அதே மாதிரியான ரசனைகள் தான் என அவன் ஆச்சர்யப்பட, இனிமையாகப் போய்க்கொடிருந்தது அந்த சாட்டிங். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இப்படி சாட்டிங்கில் மட்டும் பேசிக்கொண்டிருந்த இளா ஒருநாள் அதை முடிவுக்கு கொண்டு வர நினைத்து ப்ரியாவையும், உமாவையும் கூப்பிட்டு எல்லாவற்றையும் சொன்னாள்.

“இப்படி எங்கிட்ட வழிஞ்சு வழிஞ்சு பேசறாரே, இப்ப இந்த ஐ டி ல இருந்து நான் ஐ லவ் யூ னு சொன்னா அடுத்த நொடியே “மி ட்டூ” னு தான் ரிப்லை வரும். அவருக்கு இருக்கிறது பொண்ணுங்ககிட்ட பேச முடியலையேங்கற ஏக்கம். பக்கத்து வீட்டுல இருந்து பேசிப்பழகினா லவ் வந்துடும்னு முட்டாள்தனமா யோசிச்சிருக்கார். அவரப் போய் சீரியசா லவ் பண்றார்னு சொல்றீங்களேக்கா?”

அமைதியாக இருந்தார்கள் இருவரும். ” சரி நீ ச்சும்மா ஐ லவ் யூ னு அனுப்பிப் பாரு என்ன சொல்றாருன்னுப் பார்க்கலாம்” – உமா.

மாமா ஆன்லைனில் வந்ததும் அவனுக்கு இளா ஒரு மெயிலே அனுப்பினாள். தன்னுடைய ரசனைகளும் அவனுடைய ரசனைகளும் ஒத்திருப்பதாகவும் இருவரும் இணைந்து வாழ சரியான ஜோடியாக இருப்பதாக அவள் உணர்வதாகவும் இன்னும் என்னென்னவோ எழுதி கடைசியாக அவன் சம்மதம் சொன்னால் அவனை சந்திப்பதாகவும் இல்லையென்றால் மெயில் தொடர்பையும் நிறுத்திக் கொள்வதாகவும் எழுதி அனுப்பினாள்.

மறுநிமிடமே பதில் வந்தது.

“மன்னிக்கனும்.உங்களப் பத்தி நீங்களா சொன்ன விசயங்கள் மட்டும்தான் எனக்குத் தெரியும், நீங்க யார்னுகூட எனக்குத் தெரியாது. இந்த மாதிரி ஒரு மெயில் உங்ககிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல. இன்னொரு விசயம், நான் ஏற்கனவே ஒரு பொண்ணக் காதலிச்சுட்டு இருக்கேன். அந்தப் பொண்ணதான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். இதுவரைக்கும் உங்க கிட்ட மெயில்ல பேசினதுல எதாவது தப்பா பேசியிருந்தா மறுபடியும் என்ன மன்னிச்சுடுங்க”

அதைப் படித்ததும் இளாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

ப்ரியா பேசினாள், “இங்கப் பாரு இளா… அன்னைக்கு நீ சொன்ன மாதிரி பார்த்தவுடனே வர்றது எல்லாம் காதல் கிடையாதுதான் ஆனா இந்த ஐ டி பொய்யா இருந்தாலும் இந்த ஐ டி மூலமா மாமா கிட்ட நீ சொல்லியிருக்கிற கேரக்டர்ஸ் எல்லாமே உன்னோடதுதான்! உனக்கும் மாமாவுக்கும் ஒரே மாதிரி வேவ் லெந்த் தான் இருக்குன்றது இப்ப உனக்கேப் புரிஞ்சிருக்கும்”

“பொதுவா வெளிய பார்த்தா சாஃப்டா இருக்கிற எல்லாருமே நல்லவங்களும் இல்ல… முரட்டுத் தனமா இருக்கிற எல்லாருமே மோசமானவங்களும் இல்ல… மாமாவப் பத்தி சுரேஷும், விஜயும் சொன்னத வச்சு சொல்றேன் கண்டிப்பா மாமா ஒரு நல்ல பார்டனரா இருப்பார்… இதுக்கு மேல உன்னோட முடிவு” - உமா

“க்கா நீங்க சொல்றதெல்லாம் உண்மையா இருந்தாக்கூட எங்க வீட்டு நிலமைல லவ் பண்றதெல்லாம் நெனச்சுக் கூட பாக்க முடியாதுங்க்கா.. ஏதோ எங்கப்பா பென்ஷன்ல தான் போயிக்கிட்டிருக்கு… எனக்கு மெரிட்ல சீட் கிடைச்சதாலதான் காலேஜ்க்கே வர்றேன் இல்லனா நானும் எதாவது டெய்லரிங், டெக்ஸ்க்குனுதான் வேலைக்குப் போயிருப்பேன்… நல்லக் குடும்பத்துலையே லவ் பண்ணா எவ்வளவு பிரச்சினையாகுது? நான் லவ் பண்ணா, அப்பா இல்லாதப் பொண்ண வளர்க்க தெரியலன்னு எங்கம்மாவதான் எங்க சொந்தக்காரங்க எல்லாம் திட்டுவாங்க… எனக்காக எதுக்கு மத்தவங்க கஷ்டப்படணும்… தயவு செஞ்சு அவங்க ப்ரெண்ட்ஸ்கிட்ட சொல்லி சொல்ல சொல்லுங்க” – தொல்லையிலிருந்து விடுபடலாம் என்று அவள் செய்தது மேலும் பிரச்சினையில் முடிந்ததால், கலங்கியக் கண்களோடு போய் விட்டாள்.

அதற்குப் பிறகு இளாவுக்கும், மாமாவுக்கும் ஒரு தகவல் தொடர்பு வழியாக விஜய், சுரேஷ், ப்ரியா, உமா இருந்தார்கள். அவள் இதெல்லாம் வேண்டாமென்பதில் பிடிவாதமாக இருக்க அவனோ அவளைத் தான் காதலிப்பதில் பிடிவாதமாக இருந்தான். ஒரு ஜாலிக்காக ஆரம்பித்துக் கடைசியில் மாமா இவ்வளவுப் பிடிவாதமாக இருப்பது சுரேஷுக்கும், விஜய்க்குமே ஆச்சரியமாக இருந்தது.

“மாமா… அந்தப் பொண்ணு அழுவுதாண்டா… விட்றுவோமே எதுக்கு இப்படி அழவச்சுப் பாக்கனும்?”

“டேய் நான் இளாவ எதுவும் டிஸ்டர்ப் பண்ணலையே… நான் ரெண்டு வருசம் கழிச்சு சொல்லுப் போதும்னுதான் சொல்லியிருக்கேன்… அவ இப்ப சொல்றத ரெண்டு வருசம் கழிச்சு சொல்லட்டும் பார்க்கலாம்”

அதற்குப் பிறகு இளாவைப் பற்றி மாமாவிடம் யாரும் பேசுவதில்லை, மாமாவின் மனதைத் தவிர. கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஓடியிருந்தன.

எப்போதாவது கேன்ட்டினில் உமாவும், ப்ரியாவும் இளாவிடம் சாதாரணமாகப் பேசுவதோடு சரி. அன்றும் அப்படி பேசிக்கொண்டிருக்கும்போது இளா கேட்டாள் “ க்கா உங்க க்ளாஸ் சுந்தரண்ணா கூட ரொம்ப நல்லாக் கவிதையெழுதுவாரா? ஹாஸ்டல் புக்ல அவர் கவிதைதான் நெறைய வந்திருக்கு”

“அதுக்கு தமிழ்ல அதோட பேரே தப்பில்லாம எழுதத் தெரியாது.. அது கவிதையெழுதுதா? அதுவும் காதல் கவிதை” உமா, ப்ரியா இருவரும் சிரித்தார்கள்.

“இல்லங்க்கா அவர் பேர்ல தான் வந்திருக்கு”

“சரி அது யார் எழுதினதுன்னு சொல்றோம்… அதுக்கு முன்னாடி நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லு… காதலிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப காதல் கவிதையெல்லாம் படிக்கிற?”

“ஏங்க்கா காதலிக்காதவங்க எல்லாம் கவிதை கூடப் படிக்கக் கூடாதா? லைஃப்ல தான் சான்ஸ் இல்ல கத, கவிதையிலயாவது படிச்சுக்கலாமேன்னுதான்… சரி அது யார் எழுதனது? நீங்களா?”

“அது எல்லாமே மாமா எழுதினதுதான்… அவர் இப்போ ஹாஸ்டல் கிடையாதுல்ல அதான் இவன் பேர்ல எழுதிப் போட்டிருக்கார்… இவன்தான் இப்போ மாமாகூட தம்முக்குக் கம்பெனிக் கொடுக்கறான்ல அந்தப்பாசம்”

அன்று மாலை லைப்ரரி போனவள் சுந்தர் பெயரில் வந்திருந்த எல்லாக் கவிதைகளையும் மீண்டுமொருமுறை வாசித்தாள்.

அந்த வருடம் கல்லூரியில் நடந்த தமிழ்மன்றக் கவிதைப் போட்டியில் மாமாவின் காதல் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது. பரிசு வழங்கும் நாளில் மேடையில் அவனேக் கவிதையை வாசிக்கும் வாய்ப்பு. அவள் வரவேண்டுமே என்று அவனுக்கு துடித்துக் கொண்டிருந்தது. அவளும் வந்திருந்தாள். பார்த்துப் படிப்பதற்கு கையில் கவிதை பிரிண்டவுட்டாக இருந்தாலும் மேடையில் நின்று அவளை மட்டுமேப் பார்த்துக் கவிதையை பிழையில்லாமல் சொல்லிக் கொண்டிருந்தான். தன்னை மட்டுமே அவன் பார்த்துக் கொண்டிருப்பதால் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது, நகத்தைக் கடிக்க ஆரம்பித்தாள்,

நீ கடிக்க கடிக்க வளர்ந்து கொண்டே இருக்கிறதே

உன் நாவின் சுவையை ருசித்து விட்டதோ

உன் நகம்.

பிரிண்டவுட்டில் இல்லாததும் கவிதையாக வந்தது அவனுக்கு. வாயிலிருந்து நகத்தை வேகமாக எடுத்தவள், கீழே குனிந்து கொண்டாள். அவன் கவிதையை முடிக்கும்போது இப்படி முடித்தான்

உன் காதல் எனக்கு

உயிர் போல…

அளிப்பாயா?அழிப்பாயா?

எல்லாரும் கைதட்டினார்கள் அவளைத் தவிர.

மாமாவின் கவிதைகளில் இப்போதெல்லாம் காதல் அதிகம் கலந்திருப்பதற்கு யார் காரணமெனக் கல்லூரியில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லோருக்கும் தெரிய ஆரம்பித்தது. இளவரசிக்கு மாமி என்ற பெயரும் முளைத்தது. இரண்டு பேருக்கிடையே எதுவுமே இல்லையென்றாலும் அவர்களைப் பற்றி பேசி பேசியே எதையாவது உண்டாக்கிவிடும் கல்லூரி நண்பர்களைப் பற்றி கேட்கவா வேண்டும்? அதுவும் மாமா ஒரு தலையாக் காதலிக்கிறான் என்பது தெரிந்ததும் இளாவிடம் அவள் தோழிகளின் அட்டகாசம் அளவுக்கு மீறிப் போய்க்கொண்டிருந்தது. இளாவுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் மாமாவைப் பற்றிய ஆர்வம் அதிகமாகியிருந்தது.

அப்போதுதான் அவர்கள் வீட்டருகில் புதிதாக ஒரு கிளை நூலகம் ஆரம்பிக்கப் பட்டிருந்தது. இளா சனி ஞாயிறெல்லாம் அங்கே போய் எதாவது படித்துக் கொண்டிருப்பாள். மாமாவும் போவான். ஆனால், அவள் இருப்பது தெரிந்தால் தானும் அங்கிருப்பது அவளுக்கு சங்க்டமாக இருக்குமோ என்று சீக்கிரமேத் திரும்பி விடுவான். ஒருநாள் அவள், சுட்டி விகடனை எடுத்துக் கொண்டு ரெஜிஸ்டரில் எழுதும்போது லைப்ரரியன் கேட்டார் “என்னம்மா கொழந்தைங்க புக்கெல்லாம் நீ படிக்கிற?”. அடிக்கடி லைப்ரரி போவதால் அவருக்கும் அவளைத் தெரியும்.

“ஏன் சார்? கொழந்தைங்க புக்கெல்லாம் கொழந்தைங்க மட்டும்தான் படிக்கனுமா? பின்னாடி என்னோட கொழந்தைக்கு சொல்றதுக்கு ஒரு கதையாவது தெரிஞ்சுக்கனுமில்ல?” சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“இன்னைக்கு எல்லாருக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல… அங்கொரு பையன் பொண்ணுங்க புக்க எடுத்துப் படிச்சுட்டு இருக்கான்… கேட்டா, பொண்ணுங்க பிரச்சினையெல்லாம் தெரிஞ்சிகிட்டாதான சார் நாளைக்கு ஒரு நல்ல ஹஸ்பெண்டா இருக்க முடியும்னு என்னையவே கேட்கறான்.. ம்ஹும்”

கையெழுத்து போடும்போது பார்த்தாள் அவள் விகடனுக்கு நேராக மாமாவின் கையெழுத்து இருந்தது. அவசரமாக சுற்றிலும் பார்த்தாள். ஒரு மூலை சேரில் அவள் வந்ததையும் கவனிக்காமல் மாமா சீரியசாக ‘அவள் விகடன்’ படித்துக் கொண்டிருந்தான்.

அன்று கேண்டீனில் கூட்டம் அதிகமில்லை. ப்ரியாவும், இளாவும் டீக்குடித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள்.

வேகமாக ஓடி வந்த சுரேஷ் “ப்ரியா, மாமா பைக்ல போகும்போது ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு… தலைல நல்ல அடியாம் KMCHல அட்மிட் பண்ணிட்டாங்களாம், கிளம்பு போலாம்”. அவர்களோடு இளாவும் அவசரமாகக் கிளம்பினாள்.

நிறைவுப் பகுதி

அழியாத அன்புடன்,

அருட்பெருங்கோ.

12 comments:

ஜி said...

அருட்பெருங்கோ... பிச்சு உதருறீங்க...

சான்ஸ் கிடக்காதனால கதையைப் படிக்கும் ஒரு அபாக்யஷாலி... :)))

தமிழன்பன் said...

அருமையான நடை! விலகி நின்றாலும் நெருங்கி பார்க்கும் வித்தியாசமான கதை

Anonymous said...

சூப்பரா கீது தல.

Unknown said...

வாவ் அருட்பெருங்கோ.. கதையைக் கன ஜோராக் கொண்டுப் போயிருக்கீங்க.. ஆனா நீங்களும் ஆக்ஸிடெண்ட்ன்னு சினிமாத் தனமாக் காதல் அரும்ப காரணம் சொல்லப் போறீங்களா.... :)

Unknown said...

வாங்க ஜி,

/ அருட்பெருங்கோ... பிச்சு உதருறீங்க...

சான்ஸ் கிடக்காதனால கதையைப் படிக்கும் ஒரு அபாக்யஷாலி... :)))/

அதெல்லாம் ஓக்கே ஜி... அபாக்ய சாலியா?

அதிக பாக்யசாலியா?

Unknown said...

வாங்க இறைவன் (:-))

/ அருமையான நடை! விலகி நின்றாலும் நெருங்கி பார்க்கும் வித்தியாசமான கதை/

நடை சரி... அடுத்தப் பகுதியில் கதை நிறைவடையும் ... முடிவும் எப்படினு சொல்லிட்டுப் போங்க... ;-)

Unknown said...

வாங்க உண்மை...

("இறைவன்" வந்துட்டுப் போன உடனே "உண்மை" வந்திருக்கார் :-))

/ சூப்பரா கீது தல./

நன்றி தல!!!

Unknown said...

வாங்க தேவ்,

/வாவ் அருட்பெருங்கோ.. கதையைக் கன ஜோராக் கொண்டுப் போயிருக்கீங்க.. ஆனா நீங்களும் ஆக்ஸிடெண்ட்ன்னு சினிமாத் தனமாக் காதல் அரும்ப காரணம் சொல்லப் போறீங்களா.... :)/

அட அடுத்தப் பகுதியும் படிச்சுட்டு சொல்லுங்கப்பா ;-)

dubukudisciple said...

அருட்பெருங்கோ!
நல்ல நடை!! கதை நல்லா இருக்கா இல்லையானு அடுத்த பகுதிய படிச்சிட்டு சொல்ரேன்

மனதின் ஓசை said...

காமெடியா ஆர்ம்பிச்ச கதை எப்பன்னே தெரியாம சீரியஸா ஆகிடுச்சு.. நல்லா கொண்டு போறிங்க..

தேவ் சொன்ன மாதிரி ஆக்ஸிடென்ட் கொஞ்சம் மசாலாவா இருக்கு.. ஒகே.. வெயிட்டிங் பார் லாஸ்ட் பார்ட்.

Unknown said...

வாங்க டுபுக்கு,

/ அருட்பெருங்கோ!
நல்ல நடை!! கதை நல்லா இருக்கா இல்லையானு அடுத்த பகுதிய படிச்சிட்டு சொல்ரேன்/

கண்டிப்பா நாளைக்கு இல்லாட்டி நாளை மறுநாள் போட்டுட்றேன்.. அப்புறம் காதல் மாசம் முடிஞ்சுடுமே!!!

Unknown said...

வாங்க மனதின் ஓசை,

/ காமெடியா ஆர்ம்பிச்ச கதை எப்பன்னே தெரியாம சீரியஸா ஆகிடுச்சு.. நல்லா கொண்டு போறிங்க../

காமெடி வருத்தப் படாத வாலிபர்களுக்காக...சீரியஸ் காதலிக்கிறவங்களுக்காக :-)))

/தேவ் சொன்ன மாதிரி ஆக்ஸிடென்ட் கொஞ்சம் மசாலாவா இருக்கு.. ஒகே.. வெயிட்டிங் பார் லாஸ்ட் பார்ட்./

மசாலா எல்லாம் கொஞ்சமாதான் தூவியிருக்கேன்... அடுத்தப் பகுதி படிச்சுட்டு சொல்லுங்க...