Wednesday, January 3, 2007

Aக்கம்!

நான் +2 படித்துக் கொண்டிருந்தபோது என் வீட்டுக்கும், பள்ளிக்கும் சுமார் 5 கி.மீ தூரம் இருக்கும். லஞ்ச் அவரில் வீட்டுக்கு வந்தே சுடச்சுட சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்குப் போகும் வாய்ப்பிருந்தது. 1 to 2 லஞ்ச் அவர் என்பதால் கால்மணிநேரத்தில் சைக்கிளை மிதித்து வீட்டுக்கு வந்து கால் மணி நேரத்தில் சாப்பிட்டு விட்டு உடனே பள்ளிக்கு திரும்ப முடிந்தது.

இந்த மாதிரியான லஞ்ச் அவர் ட்ராவலில் எனக்கு அறிமுகமானவர்கள் தான் மூர்த்தியும், சண்முகமும். இருவரும் என் வகுப்புத் தோழர்கள் என்றாலும் அவர்கள் வேறு "தாதா" குரூப், நான் வேறு "மாபியா" குரூப். அவ்வளவாக டச்சப் ஆரம்பத்தில் இல்லை. எனினும் மூவரும் ஒரே வழியில் தான் வீட்டுக்கு வந்தாக வேண்டும் என்பதால் வேறு வழியின்றி பேச்சுத்துணை நண்பர்களாக மாறினோம். பள்ளியிலிருந்து போகும்போது முதலில் மூர்த்தி வீடு வரும். பின்னர் சண்முகம் வீடு வரும். கடைசியாக நான் மட்டும் தனியாக வீட்டுக்குப் போவேன்.

நான் லஞ்ச் சாப்பிட்டுவிட்டு திரும்பி வரும் வரையில் மூர்த்தியும், சண்முகமும் எனக்காக ஒரு பேருந்து நிலையம் அருகில் காத்திருப்பார்கள். ஆரம்பத்தில் 5 நிமிடம் காத்திருந்தார்கள். போகப்போக 10 நிமிடம், 15 நிமிடம் என அவர்கள் எனக்காக காத்திருக்க வேண்டியிருந்தது.

காத்திருக்கும் நேரத்தில் போர் அடிக்குமே? டைம்பாசுக்காக 25 காசு அஜந்தா பாக்கு வாங்கிப் போட்டு மென்றுக் கொண்டிருந்தார்கள். அந்தப் பாக்கு போரடித்ததால் மாணிக்சந்த், பான்பராக் வாங்கி உபயோகிக்க ஆரம்பித்தார்கள். அதுவும் கடுப்பாக இருந்ததால் பக்கத்திலிருந்த பீடா கடையில் ஜர்தா பீடா வாங்கிப் போட ஆரம்பித்தார்கள். இப்படியாக அவர்கள் உருப்படாமல் போனதற்கு நானும் ஒரு காரணமாகி விட்டேன். ஜர்தா பீடா பார்ட்டிகள் தாங்கள் கெட்டது மட்டுமில்லாமல் எனக்கும் அந்தப் பழக்கத்தை ஏற்படுத்தி, என் மூலமாக என் வகுப்புக்கே பீடா போடும் பழக்கத்தை ஏற்படுத்த காரணமாக இருந்தார்கள்.

ஒரு கட்டத்தில் என் வகுப்பு மாணவர்கள் எல்லோருமே (குடுமி ரங்கராஜ் உட்பட) ஜெமினி விக்ரம் கணக்கில் வகுப்பு நேரத்தில் கூட ஜர்தா பீடாவை வாய்க்குள் அதக்கிக் கொண்டு கண்ட இடத்தில் துப்பி பள்ளியையே சிவப்பு மயமாக்கிக் கொண்டிருந்தோம்.

ஜர்தாவும், மாவாவும் மாறி மாறி போட்டு வாயின் ஒரு பக்கம் வெந்துவிட இனிமேல் ஜர்தா போடுவதில்லை என்று நான், மூர்த்தி, சண்முகம் மூவரும் ஒரு புத்தாண்டு அன்று முடிவெடுத்தோம். இனிமேல் பீடாவுக்குப் பதிலாக கொஞ்சம் மைல்டாக "தம்" அடிக்கலாம் என்ற யோசனையை நான் முன்வைத்தேன். மற்ற இருவராலும் அது சந்தோஷமாக வழிமொழியப்பட்டது. முதலில் பனாமா பில்டர் வாங்கி அடித்தோம். பின்னர் சார்ம்ஸ், கோல்டு பில்டர், கிங்க்ஸ் என்று பரிணாம வளர்ச்சி அடைந்தது. காசில்லாத நேரத்தில் காஜா பீடியும் உண்டு.

இவ்வாறாக எங்கள் லஞ்ச் டைம் பிரெண்ட்ஷிப் நாளோரு பீடாவும், பொழுதொரு தம்முமாக வளர ஆரம்பித்தது. சகல விஷயங்களையும் அலசுவோம். கட் அடித்து சினிமாவுக்கும் போவதுண்டு. சுவரேறிக் குதிக்கும்போது ஹெட்மாஸ்டரிடம் கையும், களவுமாகப் பிடிபட்டு நாளெல்லாம் முட்டிப் போட்டதுமுண்டு.

ஒரு நாள் மூர்த்திக்கு திடீரென்று ஏனோ ஒரு Aக்கம் ஏற்பட்டது. "மச்சான், கேசட் வாங்கி சாமிப்படம் பார்க்கணும்டா" என்றான். சண்முகத்துக்கும் அதே எண்ணம் இருந்திருக்கும் போல. பலமாக ஆமோதித்தான். எனக்கு உள்ளுக்குள் கொஞ்சமாக உதற ஆரம்பித்தது. எங்கள் ஏரியாவில் இதுமாதிரி சாமிப்படங்களுக்கு புகழ்பெற்ற தியேட்டர் ஆர்.கே. (ராமகிருஷ்ணா என்பதின் சுருக்கம், அந்த தியேட்டர் இப்போது ராஜாவாகியிருக்கிறது). அந்த தியேட்டருக்கு போகும் சில பசங்களை (சரவணா, மோகன்) கெட்ட பசங்க என்று ஒதுக்கி வைத்திருந்தோம். "இப்போ நாமளே அந்தக் காரியத்தை பண்ணுறது என்னடா நியாயம்?" என்று கேட்டேன். "மச்சான் யாருக்கும் தெரியாம நாம மட்டும் பாத்துடலாம், வெளியே மேட்டர் லீக் ஆவாது" என்று சண்முகம் சொன்னான். அப்போதெல்லாம் சிடி, டிவிடி கிடையாது. வீடியோ கேசட் தான்.

கடைசியாக சண்முகம் வீட்டில் கேசட் போட்டுப் பார்ப்பதாக முடிவு செய்தோம். காரணம் சண்முகத்தின் அப்பா, அம்மா ரெண்டு பேருமே ஒர்க்கிங். 6 மணிக்கு தான் வீடு திரும்புவார்கள். மூர்த்தி வீட்டிலும், என் வீட்டிலும் எப்போதும் யாராவது இருந்து தொலைப்பார்கள் என்பதால் சண்முகத்தின் வீடு இந்த மேட்டருக்கு வசதியாக இருந்தது. ஒரு சுபயோக சுபதினத்தில் நங்கநல்லூரில் ஒரு கேசட் கடையில் நானும், மூர்த்தியும் பக்கபலமாக இருக்க சண்முகம் தில்லாக (அவனுக்கு தான் அப்போது மீசை இருந்தது) "சாமிப்படம் இருக்கா" என்று கேட்டான். கடைக்காரர் எங்களை கலாய்ப்பதற்காக "சரஸ்வதி சபதம், திருவிளையாடல், ஆடிவெள்ளி இருக்கு. எது வேணும்?" என்று கேட்டார்.

நான் மெதுவாக மூர்த்தியிடம் "வேணாம் மச்சான். ஏதாவது பிரச்சினை ஆயிடப் போவுது" என்றேன். சண்முகமோ முன்பை விட செம தில்லாக "அண்ணே. நான் கேக்குற சாமிப்படம் வேற" என்று தெளிவாகச் சொல்லிவிட்டான். கடைக்காரரும் கடையின் பின்பக்கமாக போய் ஏதோ ஒரு கேசட்டை பாலிதீன் கவரில் சுற்றி எடுத்து வந்தார். மூர்த்தி கடைக்காரரிடம், "அண்ணே இது இங்கிலிஷா, தமிழா இல்லை மலையாளமா" என்று கேட்டான். கடைக்காரர் ஏற்கனவே சண்முகத்துக்கு அறிமுகமானவர் போல. "தம்பி! இதுக்கெல்லாம் லேங்குவேஜே கிடையாதுப்பா. இருந்தாலும் சொல்லுறேன் இது இங்கிலிஷ்" என்று சொல்லிவிட்டு கேணைத்தனமாக சிரித்தார்.

கேசட் கிடைத்ததுமே சுமார் 3 மணியளவில் சண்முகம் வீட்டுக்கு ஓடினோம். இந்த மேட்டர் யாருக்கும் லீக் ஆகிவிடக்கூடாது என்று பிராமிஸ் செய்துக் கொண்டோம். மூர்த்தி தான் ஒருவித கலைத்தாகத்துடன் மூர்க்கமாக இருந்தான். கேசட்டை வி.சி.ஆரில் செருகிவிட்டு நிமிர்ந்து உட்கார்ந்தோம். ஏதோ ஆங்கிலப்பட டைட்டில் ஓடியது. "மச்சான் பேரை பார்வர்டு பண்ணுடா" என்று மூர்த்தி அவசரப்பட்டான். அந்த வி.சி.ஆரில் ரிமோட் வசதி இல்லாததால் ப்ளேயரிலேயே சண்முகம் பார்வர்டு செய்துக் கொண்டிருந்தான். திடீரென டி.வி. இருளடைந்தது. வி.சி.ஆரும் ஆப் ஆகிவிட்டது. போச்சு கரெண்ட் கட். அந்த கந்தாயத்து வி.சி.ஆரில் கரெண்ட் கட் ஆனவுடன் கேசட்டை வெளியே எடுக்கும் வசதி இல்லை.

கொஞ்ச நேரத்தில் கரண்ட் வந்துவிடும் என்று வெயிட் செய்தோம். வரவில்லை... நேரம் 4.... 4.30 என வேகமாக பயணிக்கத் தொடங்கியது. 5.30ஐ முள் நெருங்கும் வேளையில் கூட கரெண்ட் வருவதாகத் தெரியவில்லை. சரியாக 6 மணிக்கு சண்முகத்தின் அப்பா வேறு வந்து விடுவார். அவர் வந்துவிட்டால் போச்சு. சண்முகம் மாட்டிக் கொள்வான் (உடன் நாங்களும் தான்) மூர்த்தி மெதுவாக "பாக்கு வாங்கிட்டு வர்றேண்டா" என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். திரும்பி வருவது போலத் தெரியவில்லை. நானும் மெதுவாக "சண்முகம். ட்யூஷனுக்கு போனம்டா. டைம் ஆவுது" என்றேன். முகம் வெளிறிப் போயிருந்த சண்முகமோ, "டேய் ப்ளீஸ்டா... கொஞ்ச நேரம் இருடா" என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டான். அவன் அப்பா வரும்போது நானும் அருகில் இருப்பது Safe என்று அவன் நினைத்திருக்கக் கூடும்.

5.45 - கரெண்ட் வருகிற பாடாகத் தெரியவில்லை. டென்ஷன் கூடிக்கொண்டே போனது. என்னடா இது தேவையில்லாத ஒரு மேட்டரில வந்து மாட்டிக்கிட்டமே என்று கடுப்பாகியிருந்தேன். சண்முகத்தின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்ததைப் போலத் தெரிந்தது. பொதுவாக எதற்குமே பயப்படாமல் தில்லாக நிற்கிற அவனே இப்படி என்றால் என் நிலைமை என்ன ஆவது என்று யோசித்தேன். மனசுக்குள் முருகனை வேண்டினேன். அப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். "முருகா கரெண்ட் வரணும்" "முருகா கரெண்ட் வரணும்" என்று மந்திரம் மாதிரி உச்சரித்துக் கொண்டிருந்தேன்.

5.55 - முருகர் என் உருக்கமான வேண்டுகோளுக்கு செவி சாய்த்து விட்டார் போல. கரெண்ட் வந்தது. சண்முகம் ஒளிவேகத்தில் இயங்கி கேசட்டை எடுத்து என் பனியனுக்குள் திணித்தான். "மச்சான்! ஓடிப்போயி கேசட்டை கடையிலே கொடுத்துடு, அப்பா வர்றப்போ நான் இங்கே இல்லேன்னா அடி பின்னிடுவார்" என்றான். கேசட்டை செருகிக் கொண்டு என் சைக்கிளை எடுத்தேன். கேட் திறந்துக் கொண்டு சண்முகத்தின் அப்பா உள்ளே வந்தார். "குட்மார்னிங் அங்கிள்" என்று சொல்லிவிட்டு மெதுவாக சைக்கிளை நகர்த்தினேன். "குட்மார்னிங் இல்லேடா... குட் ஈவ்னிங்டா Fool" என்றவாறே வீட்டுக்குள் நுழைந்தார். வீட்டுக்குள் நல்ல பையன் மாதிரி சண்முகம் ஏதோ எகனாமிக்ஸ் டெபினிஷியனை சத்தம் போட்டு படிக்கும் சத்தம் வெளியே கேட்டது. தப்பித்த நிம்மதியில் மெதுவாக சைக்கிளை வீடியோ கடைக்கு மிதிக்க ஆரம்பித்தேன்.

15 comments:

Anonymous said...

//மூர்த்தி மெதுவாக "பாக்கு வாங்கிட்டு வர்றேண்டா" என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டான். திரும்பி வருவது போலத் தெரியவில்லை. //

Sorry machan. I didn't find anyway to escape.

Anonymous said...

//Aக்கம்//
தலைப்பு அருமை.
திரைக்கதை சுப்பர் !!

Anonymous said...

Ennanga ithu blog la vanthu sami padam athu ithunu? itz too bad :(

Anonymous said...

உங்களுக்கு கலைத்தாகம் வரவே இல்லேயா?

Anonymous said...

லக்கியாரே பட்டைய கிளப்பறீங்க...

கடைசில நாங்க அந்த வீட்ல மாட்ன மாதிரி ஃபீல் பண்ணோம்!

அட்டகாசமா எழுதியிருக்கீங்க ;)

Anonymous said...

//5.55 - முருகர் என் உருக்கமான வேண்டுகோளுக்கு செவி சாய்த்து விட்டார் போல. கரெண்ட் வந்தது.//

பஞ்சதந்திரத்துல கமல் சொல்ற மாதிரி இதுக்கெல்லாம் கூட கடவுள் உதவுவாரா???

Anonymous said...

மதிய உணவுக்கு வீட்டுக்குப் போற நல்ல பழக்கம் உங்களை எதுல கொண்டுபோய் விட்டிருக்குன்னு நெனச்சா... இதுக்குப் பேர் தான் தலையெழுத்தோ? :-D

Anonymous said...

முதல் அனுபவம்தான் ஊத்திகிச்சு!

அப்புறம் சீக்கிரமே கில்லாடியா ஜெயிச்சிருப்பீங்களே!

அதைப்பத்தியும் அடுத்து எழுதறது.....!

Anonymous said...

கடைசி வரைக்கும் சண்முகத்துடன் தைரியமாக (??) நின்று போராடிய உங்கள் தெகிரியம் பாராட்டத்தக்கது. :))

உங்களை விட கில்லி மூர்த்தி டாப்!

Anonymous said...

//கடைசி வரைக்கும் சண்முகத்துடன் தைரியமாக (??) நின்று போராடிய உங்கள் தெகிரியம் பாராட்டத்தக்கது. :))//



இவரு கூட நிக்கலேன்னா, அப்புறம் வேற யாரு கேஸட்டைத் திருப்பிக் கொடுக்கறது?

கடைக்காரன் நேரா வீட்டுக்கு வந்து நாரடிச்சுடுவானே!

சம்முகம் அப்பா வர்ரையில படிக்கறமாரி காட்டணும்.

எல்லாம் ஒரு ஒத்துக்குள்ளே ஒத்துதான்!

இல்லீங்களா, லக்கிலுக் சார்!
:)

Anonymous said...

இதே மாதிரி ஒரு தடவ எங்களுக்கும் காஸெட் கரண்ட் கட் ஆகி மாட்டிக்கிச்சு. ஆனா, அது ஏதோ ஒரு தமிழ் படம். மூனு நாள் கரண்ட் வராததுனால, ப்ளேயர கழட்டி காஸெட்ட வெளில எடுத்தோம்...

கரண்டால எங்களுக்கு மூனு நாள் வாடகைத்தான் போச்சு.. உங்களுக்கு, கரண்ட் மட்டும் கரெக்ட்டான நேரத்துல வரலேனா...

Anonymous said...

லக்கி நீ பீல் பண்ணாதமா இந்தியாவுல கலைத்துறையினருக்கும், அதை ரசிக்கிறவங்களுக்கும் மரியாதையே இல்ல :((.. இதை எதிர்த்து ஏன் யாருமே டீ கூட குடிக்க மாட்டேங்கிறாங்க.

Anonymous said...

நீங்க ராமகிருஷ்ணா‍ன்னா நாங்க "ஆலந்தூர் மதி"யாக்கும் (சில சமயம் "ப.மலை ஜோதி" யும் உண்டு) என்பதி இங்கே பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன். :)

Anonymous said...

Alandhur madhila enkappa bit poduraanuva? andha kaalathula Parankimalai jothi , ramakrisna (ippo raja) , porur banu, avadi kumaran, senneerkuppam balamurugan, vadapalani ram , pattabiram hari, geyitty, ithukkellaam season ticket eduthittu povom. Latest Anuraagh . Ippo ellaathaiyum izhuthu moodittaanuvalaannu theriyalai. latest update irunthaa sollunkappaa adtha maasam india pokanum. ENnathan HBO cinemax bizhat paarthaalum bit maadhiri thril illai

ippadikku Pratheepa thasan

Anonymous said...

உங்களுக்கு இப்படி ஆச்சு...எனக்கு இப்படி ஆச்சு...

5.45 - கரெண்ட் வருகிற பாடாகத் தெரியவில்லை. டென்ஷன் கூடிக்கொண்டே போனது. என்னடா இது தேவையில்லாத ஒரு மேட்டரில வந்து மாட்டிக்கிட்டமே என்று கடுப்பாகியிருந்தேன். கார்த்தியின் கண்கள் கொஞ்சம் கலங்கியிருந்ததைப் போலத் தெரிந்தது. பொதுவாக எதற்குமே பயப்படாமல் தில்லாக நிற்கிற அவனே இப்படி என்றால் என் நிலைமை என்ன ஆவது என்று யோசித்தேன். மனசுக்குள் பிள்ளையாரை வேண்டினேன். அப்போதெல்லாம் எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம். "பிள்ளையாரே கரெண்ட் வரணும்" "பிள்ளையாரே கரெண்ட் வரணும்" என்று மந்திரம் மாதிரி உச்சரித்துக் கொண்டிருந்தேன்.கரன்ட் 6.05க்கு தான் வந்தது.அதற்கும் முன்பே கார்த்தி அப்பா வந்திருந்தார். எங்களை கையும் கேசட்டுமாக பிடிக்க வேண்டி உடனே ஆன் செய்ய மவுன ராகம் ஒடியது. "ரொம்ப நாளா இத தான் பாக்கனும்னு னெனச்சேன்" என்று வழிந்தார். பின்னே பிள்ளையாருக்கு ஒரு தேங்காய், மனசாந்திக்கு ஒரு..ன்னு போச்சு...ஹும்..அது ஒரு கனா காலம். ஆனா அந்த ஆர்த்தி வீடியோ மேல இப்பவும் கல் எறியனும் போலவே இருக்கு..