Tuesday, January 16, 2007

பெண்களோ, பெண்கள்!

பொங்கல் என்றாலே கிராமங்கள் தானா? சிங்காரச் சென்னையில் இருக்கும் வாலிபர்களுக்கு சந்தை, மாடு, ஜல்லிக்கட்டு போன்ற அடையாளங்கள் இல்லையென்றாலும் வேறுமாதிரியான பொங்கல் அடையாளங்கள் உண்டு. எங்களுக்கெல்லாம் பொங்கல் கொண்டாட்டம் டிசம்பர் இறுதியிலேயே தொடங்கிவிடுகிறது. தமிழர் பண்பாட்டை மறக்காமல் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு பொங்கல் கொண்டாடும் வழக்கம் சென்னை வாலிபர்களுக்கு உண்டு.

பொங்கலுக்கு அடுப்பில் பொங்கல் வைத்து அது பொங்கிவரும்போது பொங்கலோ பொங்கல் என்று கோஷமிட்டு கொண்டாடுவது கிராமங்களில் வழக்கம். நாங்களோ ஜனவரி மாதம் முழுவதும் “டாஸ்மாக்” எனும் பொதுமக்கள் வெகுவாக கூடும் ஸ்தலத்திற்குச் சென்று ஹேவார்ட்ஸ் 5000 மற்றும் கிங்பிஷர் குடுவைகளை குலுக்கி அது பொங்கிவரும்போது ஆனந்தக் கண்ணீருடன் நண்பர்களுடன் சியர்ஸ் சொல்லி பொங்கல் கொண்டாடுகிறோம்.

போகி அன்றும் எங்களது “திருவிளையாடல்” தொடரும். பஞ்சர் சிவா கடையில் கெஞ்சிக் கூத்தாடி வாங்கிய பழைய சைக்கிள் டயர்களுடன் போகி கொண்டாடுவது எங்கள் வழக்கம். அட்வென்ச்சரில் ஆர்வம் கொண்ட சில வாலிபர்கள் அந்த டயரின் ஒரு புறத்தை கொளுத்தி விட்டு அப்படியே ஒரு குச்சியால் எரிந்த டயரை ஓட்டிக் கொண்டு தெருவை வலம் வருவது வழக்கம். கோலம் போடும் பிகர்களின் கவனத்தைக் கவர இதுமாதிரியான அட்வென்ச்சர்ஸ் அவசியம். சில ஆண்டுகளாக காவல்துறையினர் இந்த விளையாட்டுக்குத் தடை போட்டு எங்களது வாலிப வேகத்தை தடுத்து வருவது கண்டிக்கத்தக்கது.

போகி அன்று “மோளம்” அடித்துக் கொண்டே தெருவை வலம்வரும்போது நாம் வெட்டும் பிகரின் வீட்டின் எதிரில் நின்று “போகி போச்சி, பொங்கலும் போச்சி, பொண்ணு தாடா மாமோய்” என்று கோரஸாக கூச்சலிட்டு வருங்கால மாமனாரை கலாய்ப்பதும் உண்டு.

ஏதோ கிராமத்து இளைஞர்களுக்கு மட்டுமே வீரம் உண்டு. ஜல்லிக்கட்டில் தினவெடுத்த தோள்களுடன் பயமில்லாமல் முட்டும் மாட்டை அடக்குகிறார்கள் என்ற மாயத்தோற்றம் இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை. பொங்கலுக்கு 15 நாள் முன்பே எங்களது “ஜல்லிக்கட்டு” ஆரம்பமாகிவிடுகிறது. டிசம்பர் 31 இரவு 12 மணிக்கே அசுரவேகத்தில், புல் மப்புடன் கொலைவெறியுடன் சொந்த பைக்கிலோ அல்லது ஓசி பைக்கிலோ பயணித்து எங்கேயாவது வீரத்துடன் முட்டிக் கொண்டு சாவது என்பதை எங்கள் பண்பாடாகவே வைத்திருக்கிறோம்.

இவ்வாறாக பொங்கலையும், மாட்டுப் பொங்கலையும் கொண்டாடும் நாங்கள் காணும்பொங்கலை மட்டும் விட்டுவிடுவோமா? மார்கழி மாதம் முழுவதுமே எங்களுக்கு காணும் பொங்கல் தான். அதிகாலை 4 மணிக்கே எழுந்து, கிடுகிடுக்கும் குளிரில் பச்சைத் தண்ணீரில் குளித்து, பட்டை அடித்து, அப்பா பாக்கெட்டிலிருந்து அம்பதோ, நூறோ லவட்டி தெருவலம் செல்வது வழக்கம். அப்போது தான் 5.30 மணிக்கு மார்கழிமாத கோலம் போட வரும் நைட்டி நந்தினியையும், மிடி மீனாட்சியையும் அதிகாலையிலேயே சந்திக்க முடியும். பிகர்களை மேக்கப் இல்லாமல் ஒரிஜினல் பர்சனாலிட்டியில் மீட் செய்ய முடிவது இந்த காணும் பொங்கலில் மட்டுமே சாத்தியம்.

அதற்குப் பின்பாக குளிருக்கு இதமாக ஒரு கிங்ஸ் வாங்கி 4 பேர் ஷேர் செய்துக் கொண்டு பயபக்தியுடன் அருகிலிருக்கும் ஏதாவது கோயிலுக்குச் சென்றால் சில வயோதிகர்கள் ஏதோ மார்கழி பஜனை செய்து வெண்பொங்கலோ அல்லது சுண்டலோ தருவார்கள். மார்கழி மாதம் முழுவதுமே அப்பாவின் தண்டச்சோறு திட்டு இல்லாமல் கோயில்களில் எங்களுக்கு ராஜமரியாதையுடன் “டிபன்” தருகிறார்கள்.

காணும் பொங்கல் ஸ்பெஷலாக பிகர் வெட்ட அரசாங்கம் சிறப்பு அனுமதியாக சுற்றுலாப் பொருட்காட்சி நடத்துவதை சென்னையின் வாலிபச் சிங்கங்கள் நன்றியுடன் வருடாவருடம் நினைத்துப் பார்ப்போம். சுற்றுலாப் பொருட்காட்சி மட்டுமா? கடற்கரையில் காணும்பொங்கல் அன்று வங்காள விரிகுடாவில் அடிக்கும் அலை எங்களது ஜொள் அலையே. சித்தாள் பிகரிலிருந்து சாப்ட்வேர் பிகர் வரை ஒரே இடத்தில் காணவேண்டுமா? சென்னைக்கு ஜனவரி 17 அன்று வாருங்கள். கடற்கரையில் பிகர்களுக்கு பிலிம் காட்டுவதற்காக நீச்சல் தெரியாவிட்டாலும் கடலில் குதித்து வீரத்துடன் உயிர்த்தியாகம் செய்யும் வாலிபர்களை சென்னையில் மட்டுமே காணுவது சாத்தியம்.

பிகர் கிடைக்காமல் அவதிப்படும் வாலிபர்களுக்கு வரப்பிரசாதம் இந்த காணும் பொங்கலே. வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கோ அல்லது கிண்டி சிறுவர் பூங்காவுக்கோ சென்றால் அவரவர் பர்சனாலிட்டிக்கேற்ப தக்க எக்ஸ்போர்ட் பிகரையும் (எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்யும் பிகர்) கரெக்டு செய்ய முடியும். ஏற்கனவே பிகரை ரைட்டு செய்து வைத்திருக்கும் புண்ணியவான்களும் பிகர்களோடு கோவளம், மகாபலிபுரம் என்று ரவுண்டு கட்டி கொண்டாடும் வழக்கமும் உண்டு.

பொங்கலுக்கு அடுத்து விரைவில் வரும் காதலர் தினத்துக்கான ஆயத்தங்களைச் செய்ய பொங்கல் விடுமுறை சென்னை இளைஞர்களுக்கு கிடைத்திருக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதம் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

சரி, சங்கத்து சிங்கங்களெல்லாம் பொங்கல் கொண்டாடுவோம். எங்கே கோஷம் போடுங்கள் பார்ப்போம்....

"பெண்களோ பெண்கள்"

7 comments:

பொங்கல் கொண்டாடுபவன் said...

பெண்களோ பெண்கள்

G.Ragavan said...

அடடா! இதுல்ல பண்டிகை. இத எல்லா மதத்தாரும் கொண்டாடுவாங்கன்னு நெனைக்கிறேன். ஆகையால உண்மையிலேயே இதயே தமிழர் திருநாளாக் கொண்டாடுவது நல்லதுன்னு தோணுது. அப்படியே...பக்கத்துல கேரளா கருநாடகான்னு அறிமுகப்படுத்தி அகில இந்தியத் திருநாளாவேக் கொண்டாடிடலாம். யாரு கண்டா...அகில உலகத் திருநாளானா ஆனாலும் ஆகலாம்.

செந்தழல் ரவி said...

ஒரு மார்க்கமாத்தான் இருக்கு !!! கலக்கல் !!!!

Anonymous said...

//ஏதோ கிராமத்து இளைஞர்களுக்கு மட்டுமே வீரம் உண்டு. ஜல்லிக்கட்டில் தினவெடுத்த தோள்களுடன் பயமில்லாமல் முட்டும் மாட்டை அடக்குகிறார்கள் என்ற மாயத்தோற்றம் இருக்கிறது. அப்படியெல்லாம் இல்லை. பொங்கலுக்கு 15 நாள் முன்பே எங்களது “ஜல்லிக்கட்டு” ஆரம்பமாகிவிடுகிறது. டிசம்பர் 31 இரவு 12 மணிக்கே அசுரவேகத்தில், புல் மப்புடன் கொலைவெறியுடன் சொந்த பைக்கிலோ அல்லது ஓசி பைக்கிலோ பயணித்து எங்கேயாவது வீரத்துடன் முட்டிக் கொண்டு சாவது என்பதை எங்கள் பண்பாடாகவே வைத்திருக்கிறோம்.//

கலக்கல் பண்பாடு!!!!!

Anonymous said...

அ.வா,


சூப்பர் போஸ்ட்....

கிங்ஸ், மார்கழி மாசமின்னு அப்பிடியே பழைய ஞாபகத்தை கிளறி விட்டுடிங்க.... :)

Anonymous said...

//போகி அன்று “மோளம்” அடித்துக் கொண்டே தெருவை வலம்வரும்போது நாம் வெட்டும் பிகரின் வீட்டின் எதிரில் நின்று “போகி போச்சி, பொங்கலும் போச்சி, பொண்ணு தாடா மாமோய்” என்று கோரஸாக கூச்சலிட்டு வருங்கால மாமனாரை கலாய்ப்பதும் உண்டு.//

:-))))))))

Anonymous said...

லக்கிக்கு இடு லக்கியேதான் ... உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல .. அருமையா எழுதி இருக்கிங்க ... வாழ்த்துக்கள் !

"பெண்களோ, பெண்கள்!"