Friday, June 22, 2007

ரகசிய ஏஜெண்ட் 007 (மீள் பதிவு)


அந்த மதில்சுவரைக் கடந்து சத்தமின்றி அடிமேல் அடிவைத்து மெல்ல நகர்கிறது அந்த கறுப்பு கோட் அணிந்த உருவம் . அந்த வீட்டின் சுற்றுப்புறங்களில் சந்தடியே இல்லை. அவ்வப்போது எவரேனும் வருகிறார்களா என்று திரும்பிப்பார்த்துக்கொண்டே அவ்வுருவம் சென்று கொண்டிருக்க ஓட்டின் மேலிருந்து திடீரென பாய்கிறது அந்த ஒரு பூனை. சட்டென சுதாகரித்துக் கொண்ட அந்த உருவம் உடனே பக்கவாட்டில் நகர்ந்துகொள்ள இப்போது பூனை மதில் மேல் தடுமாறி நிற்கிறது.


மெதுவாக அவ்வீட்டின் சன்னலருகே சென்றடைந்த அந்த உருவம் உள்ளிருந்து வரும் பேச்சுக் குரல்களைக் கேட்டதும் உஷாராகி தன்னுடைய நீண்ட கறுப்புக் கோட்டின் பாக்கெட்டில் இருந்து அந்த மினி டேப் ரெக்கார்டரை எடுத்து தயார் படுத்திக் கொள்கிறது.


அப்படியே தன் காதுகளையும் கூர்மையாக்கிக் கொண்ட அந்த உருவம் உள்ளே நடக்கும் உரையாடல்களை பதிவு செய்யத் துவங்குகிறது.


"எல்லாரும் நல்லாக் கவனிக்கணும், இதுதான் அந்த இடத்தோட வரை படம், மெயின் காம்பவுண்ட் கேட் இந்தப் பக்கம் இருக்கு, நாளைக்கு லீவுங்கறதால அந்த கேட் பூட்டிதான் இருக்கும், 20 அடி தள்ளி இன்னொரு சின்ன கேட் இருக்கும், அங்கதான் ஒரு வாட்ச் மேன் இருப்பான்"


"சரியா 8.30 மணிக்கு நீங்க ரெண்டு பேரும் அந்த சின்ன கேட் வழியா உள்ளே போறிங்க சரியா? வாட்ச்மேன்கிட்ட ஏற்கனவே பேசியாச்சுல்ல.. எவ்வளவு கேக்குறான்"


இன்னொரு குரல்"இப்போ கெடுபிடி எல்லாம் ரொம்ப ஜாஸ்தியாம்! பத்து எல்லாம் முடியாது பதினெஞ்சு வேனும்ங்கறான்"


மீண்டும் முந்தைய குரல்"ஓ! சரி தலைக்கு பதினைஞ்சுன்னா அறுபது கொடுத்திடுவோம், மீதி ரெண்டு பேரு காம்பவுண்ட் சுவர் ஏறித்தான் வரணும், கொஞ்சம் ரிஸ்க்தான், இருந்தாலும் வேற வழியில்லை"


"சரி! ஆகட்டும்"


"8.30 உள்ளே வந்தவுடன் ஆள் நடமாட்டம் எந்த அளவுக்கு இருக்குன்னு பார்த்துக்கணும்"


"நீங்க ரெண்டு பேரும் சரியா 8.45 மணிக்கு கேட் வழியா உள்ள வரணும். வரும்போது மறக்காமல் தேவையானதை எல்லாம் மறைச்சு உள்ளே எடுத்து வந்துடணும், உள்ளே ஏற்கனவே இருக்குற இரண்டு பேரும் கிளைமேட் சரி இல்லைன்னு சொன்னா உடனே புரிஞ்சிகிட்டு வந்த மாதிரியே திரும்பி போயிடணும், சொதப்பக் கூடாது, புரிஞ்சிதா?"


அந்த இருவரும் ஒரு சேர "புரிந்தது" என்கின்றனர்.


"நீ அந்த ஆள் நடமாட்டம் அதிகமா இல்லாத இடம் எதுன்னு பார்த்து வெச்சிட்டியா?"


"பார்த்துட்டேன், கெமிஸ்ட்ரி லேப்பின் பின்புறம் அவ்வளவா நடமாட்டம் இருப்பதில்லை"என்றது இன்னொரு குரல்.


"சரி! உள்ளே போயி கிளைமேட் நல்ல இருந்துச்சுன்னா, உடனே 8.55 மணிக்கு குழி பறிக்க ஆரம்பிச்சிடணும், ஆரம்பிச்சு சரியா 15 நிமிஷத்துல வேலை முடியணும் அதாவது 9.10 க்கு எல்லாம் தயாரா இருக்கணும்"


"சரியா 9.15 மணிக்கு மீதி ரெண்டு பேரும் காம்பவுண்டு சுவர் வழியா ஏறி உள்ளே குதிச்சி வரணும், நல்லா கவனிச்சிக்குங்க யார் கண்ணிலும் படக் கூடாது, 9.20ல் இருந்து 9.30 வரை வார்ம் அப் பண்ணிக்கணும், சரியா 9.30 மணிக்கு ஆரம்பிச்சிடணும்"


எல்லோரும் கோரஸாக சரி என்கின்றனர்.


"இப்ப நாம கலையலாம். பீ கேர்ஃபுல்"


"சிபி இதை மறந்து இங்கயே வெச்சிட்டுப் போறியே, கவனமா கொண்டு வரணும், காஸ்ட்லியானது"


"ஓ.கே. டன்"


சிபி என்ற பெயரைக் கேட்ட மாத்திரத்தில் சட்டென தனக்குத்தானே சொடக்குப் போட்டுக் கொள்கிறது அந்த உருவம். உடனே அங்கிருந்து வந்த சுவடு தெரியாமல் விறுவிறுவென நகர்ந்தவேறெ தன் கோட் பையில் இருந்து சுவிட்ச் ஆஃப் செய்து வைத்திருந்த தனது செல்போனை எடுக்கிறது.


மறுநாள் காலை.மணி 8.30: அந்த இருவர் சிறிய கேட்டை நெருங்க, வாட்ச்மேனிடம் பணம் கைமாறுகிறது. இருவரும் உள்ளே செல்கின்றனர்.


மணி 8.45: இன்னும் இருவரும் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.


மணி 8.50: நான்கைந்து வாட்டசாட்டமான ஆட்கள் சாலையில் எதிர்ப்புறம் இருந்து வந்து வாட்ச் மேனை கொத்தாய்ப் பிடிக்கிறார்கள்.


"எங்கடா பணம்?"


"எந்த பணம் சாமி?"


பொளேரரென்று கன்னத்தில் விழுகிறது.

"நாங்க யாருன்னு தெரிஞ்சிக்கணும்ல, அதுக்குதான் இது! இப்ப சொல்லு! அவங்க குடுத்த அறுபதாயிரம் எங்கே?"


"இன்னா சார் சொல்றீங்க! அறுபதாயிரமா?....யாரு குடுத்தா?"


"இவனை இப்படி கேட்டா சொல்லமாட்டான், உள்ளே கூட்டிகிட்டு வாங்க, விசாரிக்கிற விதத்துல விசாரிச்சா எல்லாம் தெரியும்"


மணி 9.15: காம்பவுண்ட் சுவர் மீது ஏறி உள்புறமாக குதிக்கின்றனர் இருவர்.

"என்னப்பா எல்லாம் தயாரா, ஆரம்பிக்கலாமா?"எல்லோரும் ஆமோதிக்கிறார்கள்.


"சிபி அந்த குண்டுகளை எடு"

சிபி பாக்கெட்டுக்குள் கையை விட


"ஸ்டாப் இட்..!" என்று சத்தம் வர திரும்பிப்பார்த்தால் மரத்தின் பின்புறம், புதர்கள் இவற்றில் இருந்து எல்லாம் ஐந்தாறு ஆஜாணுபாகுவான உருவங்கள் எழுந்து இவர்களை நோக்கி வர, இவர்களோ ஒன்றும் புரியாமல்"ங்கே......" என்று விழிக்கின்றனர்.


அதற்குள் அவர்கள் அனைவரையும் அந்த கும்பல் சுற்றி வளைத்துக் கொள்கிறது. வாட்ச் மேனை பிடித்தவர்களும் அங்கு வந்து சேர்கின்றனர்.


"யார் நீங்களெல்லாம், இங்க என்ன செய்யுறீங்க? உங்க பேரு என்ன?" என்று சரமாரியாக கேள்விகளை வீசுகின்றனர்.


"என் பேரு கைப்புள்ளை.." என்று ஆரம்பிக்கிறார் கைப்புள்ளை.


"என் பேரு தேவ்"


"என் பேரு இளா என்கிற விவசாயி"


"என் பேரு சிவா, நாகை சிவா.."


"என் பேரு பாண்டி, ஜொள்ளுப் பாண்டி"


"ஓ நீதான் சிபியா என்று அமைதியாக நிற்பவரைப் பார்த்து அக்கும்பல் கேட்க

"ஆமாம்" என்று பரிதாபமாய் தலையசைக்க


"நீதான் குண்டு வெச்சிருக்கியா? எங்கே வெச்சிருக்கே?" என்றவாறு வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர் சிபியை நெருங்க,


"இதோ இங்கதான் வெச்சிருக்கேன்"

என்றவாறே தன் கால்சட்டைப்பையில் கைவிட்டு விளையாடக் கொண்டுவந்த ஆறு புதிய கோலி குண்டுகளை எடுத்து அப்பாவியாய் காட்டுகிறார்.


"டேய் எங்ககிட்டயே விளையாடுறீங்களா?"


"க்கும்...எங்கே விளையாட விட்டீங்க" என்று கைப்புள்ளை முனக...


எரிச்சலின் உச்சத்திற்கு போகிறது அந்த கும்பல். அதற்குள் அந்த வாட்ச்மேன் "இன்னாபா இது நாலு பேருன்னு சொல்லிட்டு அறுபது ரூபாய குடுத்துட்டு இங்கே 6 பேரு இருக்கீங்களே, இவங்க என்னடான்னா அறுபதாயிரம் எங்கேன்னு கேட்டு அடிக்கறாங்கப்பா, ஏம்பா நீங்களாச்சும் சொல்லுங்கப்பா ஆருபது ரூபாதான் கொடுத்தீங்கன்னு"எண்ரு புலம்ப அதுவேறு எரிச்சலை இன்னும் அதிகமாக்குகிறது.


பற்கலை நறநறவென கடித்துக்கொண்ட அந்த குழுவின் தலைமை அதிகாரி "எங்கய்யா அந்த தகவல் கொடுத்த ஆசாமி..?' என்று கோபமாகக் கத்த


"சார்.... அந்த ஆள் எஸ்கேப் ஆயிட்டான். அங்க பாருங்க" என்று இன்னொரு அதிகாரி கைகாட்ட, அவர் காட்டிய திசையில் அனைவரும் திரும்பிப் பார்க்க

தலை தெறிக்க ஓடிக்கொண்டிருக்கிறது அந்த கறுப்பு கோட் அணிந்த உருவம்.



(இந்த மாசத்து அட்லாஸ் வாலிபர் வந்த அன்னிக்கே நான் அவரைக் கலாய்ப்பேன்னு உரிமையோட சொன்னதுக்கும் இந்த மீள் பதிவுக்கும் எந்த தொடர்பும் இல்லீங்கோ............!)

3 comments:

CVR said...

த.உ.பு.சி (ROFL aka தரையில் உருண்டு புரண்டு சிரித்தேன்) !!!!!!

ஆனா நிஜத்துக்கும் கதைக்கும் நிறைய வேறுபாடு!!
உதாரணமா கதையில சிபி என்ற கேரக்டர் அப்பாவியா சித்தரிச்சிருக்கறத சொல்லலாம்!!! :-)))

ALIF AHAMED said...

ஆனா நிஜத்துக்கும் கதைக்கும் நிறைய வேறுபாடு!!
உதாரணமா கதையில சிபி என்ற கேரக்டர் அப்பாவியா சித்தரிச்சிருக்கறத சொல்லலாம்!!! :-)))
///
அப்ப ஆவியா சித்தரிச்சிருக்கலாமுனு சொல்லுரீங்கலா...?

MyFriend said...

ட்ரில்லான ஒரு ட்ரில்லர் கதை. ஜூப்பரண்ணே! ;-)