Wednesday, May 30, 2007

கவுஜையா வாழுங்கடே!!

கவுஜை தொகுப்பு போடுவது எப்படி? - பாகம் 3

தலைப்புதான் ஒரு கவுஜை தொகுப்புக்கு தலை மாதிரி. எப்படி பதிவுக்கு தலைப்பைப் பார்த்து கூட்டம் கூடுதோ அதே மாதிரிதான் கவுஜை தொகுப்புக்கும் பேரு வச்சு கூட்டத்தைக் கூட்டணும். உதாரணமா காதல் கவுஜைன்னு வைங்க.

நீயாகிய நான், தேவதையின் சிறகுகள், காதலால் கசிந்துருகி, வியர்க்காத விழிகள், அழகுக்கு அப்பால், அன்பான ராட்சசி, மனதில் பூத்த ரோசா, உன்னோடுதான், என்னவளே, முத்தத்தின் சத்தம் என்று என்ன எழவு பெயர் வேண்டுமானாலும் காதல் கவிதைக்கு வைக்கலாம்.

சமூகக் கோபமென்றாலும் அப்படித்தான். புரட்சி தீ, யாரிடம் இருக்கிறது தோட்டா?, இனியொரு விதி செய், அவனுக்கேற்ற அரிவாள், வெட்டியெறி,அழித்து விடு, கனவுகள் மற, காட்சிப் பிழை என்று ஏதாவது பெயர் வைக்கலாம்.

ஆனால் நவீனக் கவுஜை என்றால் கொஞ்சம் யோசிக்கணும்.
வாசகனைத் திடுக்கிட வைக்க வேண்டும் தலைப்பு - கவுஜை எப்படியும் அதைச் செய்யும் என்பது வேறு விசயம்.

'பிட்ஸா கடையில் பீத்தோவன்' என்றொரு தலைப்பைப் பாருங்கள். தமிழ் வாசகனுக்கு அந்நியமானவை பிட்ஸாவும், பீத்தோவனும். நவீனக் கவுஜையின் நோக்கம் கெடாதவகையில் வாசகனை அந்நியப்படுத்தும் இது போன்ற தலைப்புகளை நிறைய யோசியுங்கள்.
'முசோலினியின் மூக்குக் கண்ணாடியும் மூன்றாம் வகுப்பு கணக்கு புத்தகமும்' இப்படி தலைப்பு வைத்தாலும் சரிதான். இந்த ரெண்டுக்கும் என்ன எழவு சம்பந்தம் இருக்கும் என்ற யோசனையிலேயே நுட்ப வாசகன் நூலாகப் போய்விடுவான். அதனால் தலைப்பை கவனமாகத் தேர்ந்தெடுங்கள். 'அக்குளில் முளைத்த ஆலமரம்' கூட நல்ல தலைப்புதான்.
'அடர்கானகத்தில் நீலி'யும் நல்ல தலைப்புதான். ஆனாலும் இன்னமும் செறிவாக, 'அடர்கானகமும் அடங்காத நீலியும்' னு பேரு வச்சுப்பாருங்க. நவீன கவுஜைத்தலைப்புக்கு இந்த 'ம்'காரம் ரொம்ப முக்கியம். 'அவன் அவள்'னு வச்சா அது சாதாரணம். 'அவனும் அவளும்'னு வச்சாத்தான் அது நவீனம். இந்த அடிப்படையை ஞாபகத்துல வச்சுக்கோங்க.
'கவுஜையும் கண்றாவியும்'னு நீங்க தலைப்பு வச்சு என் தலையை உருட்டாதீங்க. சொல்லிட்டேன்.

சரி. ஒருவகையா தலைப்பையும் வச்சாச்சு. இனி????..
வேறென்ன படிக்கட்டுதான். - அதாங்க கவுஜை
அதைத்தான் எப்படி வேணும்னா எழுதிடலாமே?

ஆசிப் மீரான்
அட்லாஸ் வாலிபர்
தபால் பெட்டி எண்
துபாய்

இவ்வளவுதாங்க கவுஜை. எவ்வளவு 'ஈஜி'யா இருக்குன்னு பாத்துக்கிடுங்க.
அதனாலதான் அதைக் கடைசியில எழுதிக்கலாம்னு சொன்னேன்.
இன்னும் வேணும்னா கவிமடத்துல இதுக்கான ஆதாரக் குறிப்புகள் கிடைக்கும்

அதிக பட்சமாக 40 பக்கம்தான் கவுஜைத் தொகுப்பு. அளவுக்கு மிஞ்சினா அமிர்தம் நஞ்சாகுமோ ஆகாதோ தெரியாது;ஆனா கவுஜைத் தொகுப்பு இந்த அளவைத்தாண்டுனா நஞ்சுதான். ('தொகுப்பு போடுறதே அப்படித்தானவே?'ன்னு கேட்டா என்னத்த்ச் சொல்ல?)


முதல் பக்கத்தில் வழக்கமா அம்மாவுக்கு, அப்பாவுக்கு, என் தமிழாசிரியருக்கு(பாவம் அவர் என்னய்யா பாவம் செஞ்சாரு?!!) அப்படின்னு காட்டிக் கொடுத்துடுவாங்க. அப்படி இல்லாம வித்தியாசமா 'இதைப்படித்துத் தொலைக்கும் அவஸ்தைக்கு ஆளாகும் என் வாசக அன்பர்களுக்கு' ன்னு அர்ப்பணம் செஞ்சுடுங்க.

சரி. முதல் பக்கம் முடிஞ்சது. அடுத்த பக்கத்துல அச்சாபீஸ் பேரு விலாசம் எல்லாம் நீங்க சொல்லாம அவங்களே போட்டுடுவாங்க. அதனால பக்கம் ரெண்டும் நிறைஞ்சு போச்சு. மூணாவது பக்கம் ஏதாவது சின்னதா ஒரு கோட்டோவியம் போடுங்க. அதுக்குக் கீழே கவுஜையப் பத்தி ஏதாவது பெரிய மனுசன் எப்பவாவது நிதானத்துல இருக்கும்போது எழுதுன

'உலகப்பந்தை
உருட்டி ஆடும்
உன்னத மொழிதான்
கவுஜை'

இந்த மாதிரி விசயம் ஏதாவது எங்கயாவது கிடைக்கும். அதைப் போட்டு வச்சுட்டா பக்கம் மூணுக்கு 'மேட்டர்' கிடைச்சாச்சு.

இனி அணிந்துரை வாங்குனது இருக்கும். நிறைய இடைவெளி விட்டு எழுதுனா ஒரு நாலஞ்சு பக்கம் தேறிடும். அட நீளமான அணிந்துரைன்னா நல்ல கவுஜைதான் போலன்னு மக்கள் நெனச்சுப்பாங்க. அது முடிஞ்சதும் இந்தக் கவுஜைக்கெல்லாம் சொந்தக்காரனான உங்களைப் பத்தி உங்களுக்குக் கவுஜை எழுதணும்கற கெட்ட புத்தி எப்பலேருந்து வந்துச்சுங்குறதப் பத்தியெல்லாம் நீங்கதான சொல்லியாவணும். அதனால என்னுரைன்னு ஒரு பகுதி போட்டு ஒரு நாலஞ்சு பக்கம் ஓட்டுங்க. பார்த்தீங்களா? கவுஜைங்குற கர்மம் இல்லாமலேயே 10- 12 பக்கம் ஓட்டியாச்சு. அப்படியும் 'இன்னும் 28 பக்கம் இருக்குதே; இதுக்குக் கொறஞ்சது 50 கவுஜையாவது எழுதணுமே'ன்னு கவலைப்படாதீங்க.

பக்கத்துக்கு ஒரு கவுஜை போதும். அதுவும் எண்ணி நாலு வரி - அதிக பட்சமா 5 வரி போதும். ஆனா அதை அப்படியே சும்மா போடக் கூடாது. இடது மூலையில் குட்டியா ஒரு கவுஜை . மேல் மூலையில நெஜம்மான ஒரு குட்டியோட படம். என்ன எழவை எழுதியிருக்கீங்கங்குறதப் பொறுத்து படத்தை 'ஜெலக்ட்' பண்ணனும். உங்க வாஸ்துப்படி படத்தை எங்க வேணும்னாலும் போடலாம். வாசிக்குறவன் வாஸ்துப்படி அவனுக்கு நேரம் சரியில்லாம போறதுக்குப் பரிகாரமத்தை அவன்தான் கண்டுபுடிச்சாகணும்

உன் மைவிழி
ஓரத்தில்
துளிர்த்து நிற்கிறது
எனக்கான
கண்ணீர்த்துளி


இப்படி ஒரு கவுஜை (தூ!! இதெல்லாம் கவுஜையா?ன்னு கோபப்பட்டா எப்படி?) இருக்குன்னு வச்சுக்கலாம். இந்தக் கவுஜையை கீழே ஓரமா போட்டுட்டு மேலே பெருசா ஒரு கண்ணுலேருந்து ஒரு துளீ நீர் சொட்டுறா மாதிரி ஒரு படத்தைப் போட்டுட்டா போதும். படிச்சுட்டு அழப்போறவனை மனசுல வச்சுக்கிட்டு நாம செஞ்ச மாதிரி இருந்துட்டு போகட்டுமே!!

இப்படியே ஒரு 15 கவுஜை எழுதுங்க.
அது கூடவா தெரியாது??

வருத்தப்படாத வாலிபன்
வருத்தப்பட்டான்
கல்யாணம்


அப்படின்னு ஒரு சங்கூ எழுதுங்க. எவனுக்கோ சங்கூதுறதைச் சொல்றதுனால இது ஹைக்கூல சங்கூ பிரிவுல வரும்.(கவுஜைல என்னென்ன பிரிவெல்லாம் இருக்கு பாருங்க) இதுக்கு ஒரு அழகான படம் தேர்ந்தெடுக்கலாம். ஆடு தலைல மஞ்சள் தண்ணி தெளிக்குற மாதிரி ஒரு படம் போட்டா மஜாவா இருக்காது?

முக்கியமான விசயம் ஒண்ணு இருக்கு. கவுஜை பொஸ்தவுத்துல என்னதான் குறும்பா, வெறும்பான்னு எழுதிக் குவிச்சாலும் நீள் கவுஜைன்னு ஒண்ணு கட்டாயம் இருக்கணும். அதை ஒரு ரெண்டு பக்கம் ஓட்டிக்கலாம். நீள்கவுஜை எப்படி எழுதணுமா?
என்னய்யா வெளங்காத ஆளா இருக்கீங்க? நீள்கவுஜைதான் இருக்குறதுலேயே ரொம்ப சுலபம்.

காலை எழுந்தேன்
கை விலக்கி நெட்டி முறித்தேன்
எதிர் சுவர்
காலண்டரில்
தேதி மே 29 காட்டியது
ஓடிப்போய் விட்டது ஒருநாள்
மெல்ல எழுந்து
கிழிக்கிறேன்
ஓடிப்போன ஒரு நாளை.

அடுத்த நாளுக்கான ஆயத்தமாய்
நடக்கிறேன் மெதுவாய்
பற்பசை பிதுக்கி
விரலில் வைத்து
தேய்க்கிறேன் பல்லை..


இப்படியே ராத்திரி படுக்குறவரைக்கும் எதையாவது எழுதித் தொலைச்சுட்டா நீள்கவுஜை வந்துடும். இதுல ஒரு பெரிய அனுகூலம் என்னன்னா காலைக் கடன் கழிச்சதையெல்லாம் எழுதுறீங்கன்னு வச்சுக்கோங்க. ஒண்ணுக்கு போனா முன் நவீனத்துவம், ரெண்டுக்கு போனா பின்நவீனத்துவம் ரெண்டையும் ஒரே நேரத்துல தொட்டுட்டீங்கன்னு அர்த்தம்.

ஆனா ஒரு விசயத்துல கவனமா இருக்கணும். இப்படி நாள்கணக்குல கவுஜை எழுதுனாலும் கடைசி ரெண்டு மூணு வரில வாசகன் நெஞ்சை நக்குறமாதிரி நாலு வரி வச்சிடுங்க. அப்பதான் அவன் புளகாங்கிதமடைஞ்சு கொஞ்சமா உங்களைத் திட்டுவான்

............
உறங்கச் சொல்லுமுன் பார்க்கிறேன்
நாட்காட்டியை
அடுத்த நாளுக்கான
நம்பிக்கையை தருகிறது எனக்கு


இந்த மாதிரி 'நம்பிக்கை' என்னமோ காலண்டர்ல செஞ்சு சுவத்துல மாட்டியிருக்குற மாதிரி ஏதாவது உளறினாக் கூட போதும். 'சே!! நம்பிக்கை உணர்ச்சியை எப்படி அள்ளித் தெளிச்சிருக்கான் கவுஞன்?'னு வெவரம் தெரியாத நாலு பேரு சந்தோசப்படாமலா போயிடப் போறான்?

இப்படியே ஓட்டிட்டா 30 பக்கம் முடிஞ்சிடும். மீதி 10 பக்கம் என்ன பண்றது?
இவ்வளவு கஷ்டப்பட்டு கவுஜை பொஸ்தவம் போட்டு இருக்கிற நமக்கா இதுக்கு விடை தெரியாது?

மீதி 10 பக்கத்தையும் வெள்ளைத்தாளா விட்டுட்டு குறிப்புக்காகன்னு போட்டுடலாம்.
யாருக்குக் குறிப்பு, ஏன் குறிப்பு, இந்த எழவுக்கவிதைக்கெல்லாம் எதுக்கு குறிப்புன்னு யாரும் கேட்கமாட்டாங்க. 'என்ன உலகமகா காவியமா எழுதியிருக்கோம் குறிப்பு எழுதுறதுக்கு?' ன்னு சுயமா உங்களை நீங்களே கேள்வில்லாம் கேட்கக் கூடாது. ஏன்னா, கவுஞன் தன் கவுஜைகள் மூலமா மத்தவங்களைக் கேள்வி கேட்டு சாகடிக்கலாமே தவிர சுயமா தன்னைத்தானே
கேள்வி கேட்பது முறையன்று.

பாருங்க இப்போ.
மொத்தம் 40 பக்க கவுஜை தொகுப்புக்கு வேண்டியதெல்லாம்
75 வரிதான் கவுஜையே.
ஒரு வானம் பார்த்த படம்
ஒரு 'அனாமத்து' அணிந்துரை
'ஏண்டா எழுதுனோம்'னு கவுஞனோட சுயஉரை
குறிப்புக்காக வெத்து தாள்.

பாருங்க கவுஜை தொகுப்பு போடுறது எவ்வளவு சுலபம்!!
நீங்களும் கவுஜை தொகுப்பு போட்டு கவுஜையா வாழுங்கடே!!

17 comments:

நாமக்கல் சிபி said...

:)

கலக்குறீங்கப்பூ!

சங்கூ - சூப்பர்!

வாசகன் said...

//'பிட்ஸா கடையில் பீத்தோவன்' என்றொரு தலைப்பைப் பாருங்கள். தமிழ் வாசகனுக்கு அந்நியமானவை பிட்ஸாவும், பீத்தோவனும். நவீனக் கவுஜையின் நோக்கம் கெடாதவகையில் வாசகனை அந்நியப்படுத்தும் இது போன்ற தலைப்புகளை நிறைய யோசியுங்கள்.//

என்னைச் சொல்லலியே?!

இலவசக்கொத்தனார் said...

அண்ணாச்சி, நமக்கு ஒரு பரிந்துரை அனுப்பும் ஓய்!!

CVR said...

ROFL!!!!!!!!
மிகவும் ரசித்து படித்தேன்!!

வாழ்த்துக்கள்!! :-D

Ayyanar Viswanath said...

நல்லாயிருங்க அண்ணாச்சி

Anonymous said...

:))

PRABHU RAJADURAI said...

classic...

"ஒண்ணுக்கு போனா முன் நவீனத்துவம், ரெண்டுக்கு போனா பின்நவீனத்துவம் ரெண்டையும் ஒரே நேரத்துல தொட்டுட்டீங்கன்னு அர்த்தம்"

உக்காந்து யோசிப்பீரோ:-))

ALIF AHAMED said...

முற்றிலும் மாறுபட்ட
கலக்கல் பதிவு
:)

கப்பி | Kappi said...

கலக்கல் அண்ணாச்சி :)))

Raj Chandra said...

ஆசிப்,

முக்கியமா ஒன்னை விட்டுட்டிங்களே...

கவிதைக்கு நடுவில் மனித குலத்து உறுப்புகளைப் பற்றி வரிகள் போட்டுவிட்டால் பரபரப்புக் கூடும். பிறகு யாராவது அதை எதிர்த்தால் மனித குலத்தின் வலி தெரியாத பிற்போக்குவாதி என பேட்டிக் கொடுத்து இன்னும் பத்துக் காப்பி விற்கலாமே...

வெட்டிப்பயல் said...

அண்ணாச்சி,
அசத்தல் பதிவு...

விழுந்து விழுந்து சிரித்தேன்... கவிமடத்துல சேர்ந்து நானும் ஒரு கவுஜ புத்தகம் போடலாம்னு முடிவு பண்ணிட்டேன்...

ilavanji said...

அண்ணாச்சி,

எத்தனை கவுஜருங்க வருங்கால வாழ்க்கைல மண்ணள்ளிப் போட்டிரோ தெரியலை! அவங்க நெனச்சு நெனச்சு திட்டறதுல உமக்கு இன்னும் ஒரு மாசத்துக்காவது விக்கல் நிக்காது! :)))

அதெல்லாம் சரி! இதுக்கு பரிகாரமா நாலஞ்சு நல்ல கவிதைகளையும் அடையாளம் காட்டிட்டு போலாம்ல?!

இராம்/Raam said...

அண்ணாச்சி,

கலக்கல் பதிவு.

என்னோட கவுஜ தொகுப்புக்கு பத்து இருபது பக்கம் காலியா இருக்குன்னு அநியாத்துக்கு ஃபீல் பண்ணேன்....

ஹி ஹி அதுக்கும் ஒரு வழி சொல்லிட்டிங்க.... :P

மிக்க
நன்றி
அட்லாஸ்
வாலிபரான
அண்ணாச்சி
அவர்களே!!!

ப்ரியன் said...

கலக்கல் அண்ணாச்சி...

இம்புட்டு ஈஸியா
கவிஜை தொகுப்பு
முன்னமே தெரியாமே போச்சே!

- சங்கூ சங்கரன்

ILA (a) இளா said...

கவிதை எழுத அமர்ந்தேன்
கவிதை வரவில்லை,
கடைசி பக்கம் போட்டேன்,
அணிந்துரை எழுத ஆசிப்பை அழைத்தேன்,
பினாத்தலாரைக் கேட்டு தலைப்பிட்டேன்.
அ முதல் ஃ வரை மாற்றி போட்டு
கவிதை என்றேன்.
பெற்றது வெற்றி,
சேருமே அண்ணாச்சிக்கு

ஸ்ரீமதன் said...

/வருத்தப்படாத வாலிபன்
வருத்தப்பட்டான்
கல்யாணம்
/

கிடைத்த கேப்பில் கிடா வெடடும் விதமாக எனக்கு "சங்கூ" ஊதிய அண்ணாச்சியை வன்மையாக கண்டிக்கிறேன் :-) :-) :-)

இரவு கவி said...

// ஒண்ணுக்கு போனா முன் நவீனத்துவம், ரெண்டுக்கு போனா பின்நவீனத்துவம் //

இத்தன நாளா நவீனத்துவத்துக்கு விளக்கம் தெரியாம இருந்தேன் இன்னைக்கு தெருஞ்சுகிட்டேன் :-)