Wednesday, May 2, 2007

மொதல்ல ஒரு கத சொல்லுதேன்

வருத்தப்படாத வாலிப சிங்கங்களே,

வழக்கமா நான் 'கவுஜை'தான் எழுதுவேன். ஆனா சிங்கங்கள் பொழ்ச்சு போகட்டும்னு ஒரு கத சொல்லி ஆரம்பிக்கலாம்னு பாக்கேன். கதன்னா உங்கவீட்டு கதை எங்க வீட்டு க்தை இல்லை. நவீனத்துவமான கதை. "என்னடா கெட்ட வார்த்தை சொல்லுதானே?"ன்னு மனசுக்குள்ள திட்டாம படிங்கப்பு..இந்த மாசம் முழுக்க என்ன செய்யப் போறேன்னு உங்களை மாதிரியே எனக்கும் ஒண்ணும் பிரியலை இன்னும். இருந்தாலும், வருத்தப்படாம எழுதுறதுன்னு நெனச்சிருக்கேன். நீங்க இந்த வாலிபனால வருத்தப்படாம இருந்தா சரிதான். நல்லா இருங்கடே!!

*******************************

"காலம் கடந்து போவதைப் பற்றிய பிரக்ஞையின்றி, உள்ளிருப்பு வற்றிப் போன எரிச்சலில் அமிலம் சுரக்கும் வயிறு. அடுத்தவன் பொருளை அபகரித்தே பழக்கப்பட்டுப் போனாலும் வாழ்க்கை முறை அதுவே யென்றான பிறகு வெளிநியாயங்களைப் பற்றிய அக்கறை கொண்டு வாழத் தலைப்பட அவசியமில்லை. அடுத்த வேளை வந்து பசிக்கத் துவங்கி விட்டது. நேரம் யாருக்காகவும் காத்திருக்காது போகலாம். ஆனால், இந்தப் பசியாவது காத்திருந்து தொலைக்கலாம்.அதுவும் எவருக்காகவும் காத்திருக்காமல் வந்து தொலைக்கிறது.

இன்றைய மோசடியை யாரிடம் துவங்குவது என்பதில்தான் அடிப்படை பிரச்சனை. இந்தத் திருட்டு, வாழ்க்கையில் முன்னிலைக்கு வந்து விடுவதற்காக இல்லையென்றாலும் இப்படித் திருடி வாழ்க்கையை நடத்த வேண்டிய சூழலுக்குத் தள்ளி விட்ட கடவுள் மீது கோபமாக வந்தது. பசிக்காக நடத்தும் இந்தத் திருட்டை பெரிது பண்ணாமல் விடும் பெரிய மனசு எவருக்கு இருக்கிறது?

அடுத்தவனைப் பற்றி கவலைப்பட நான் யார்? இப்போது என்னுடைய ஒரே குறிக்கோள் பசிக்கு உணவு. பாய் கடையில் போய் பார்க்கலாம். ஆனால், அங்கே நாய்களும் மனிதர்களும் ஈக்களும் பேதமில்லாமல் நின்று கொண்டிருப்பார்கள். அடிதடி சண்டை போட்டு உணவைப் பெற்றுக் கொள்ள உடலில் முன்போல வலுவில்லை. வலுவற்ற எதிரியை நேர்கொள்வதுதான் புத்திசாலிக்கு அழகாக இருக்க முடியும்.

திருடுவதென்வது இப்போதெல்லாம் அத்தனை எளிதல்ல. நிறைய தடுப்பு முறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகளென்று இல்லாதவன் திருட்டை தடுப்பதற்கு ஏராளமான் முன்னெச்சரிக்கை வைத்திருக்கிறார்கள். இப்படி அன்றாடப் போராட்டத்திற்கு நடுவில்தான் வாழ்க்கை என்பது அலுப்பு தரத்தான் செய்கிறது. என்ன செய்து தொலைய? பேசிக் கொண்டிருந்ததில் நேரமாகி விட்டது. எனது எதிராளியை அடையாளம் கண்டு கொண்டேன். சாப்பாட்டு நேரம் வந்து விட்டது.

இனிதான் காய்களை நான் சாமர்த்தியமாக நகர்த்தியாக வேண்டும். இந்தக் கடையை சில காலமாகவே கவனித்து வந்து கொண்டுதான் இருக்கிறேன். காலை நேரமானால் தொடங்கும் கடை 10 மணிக்கெல்லாம் கலைந்து போகும். 9 மணிக்கு ஆட்கள் நிறைய வருவார்கள். அப்போது கைவரிசையைக் காட்ட முடியாது. என்னைப் போல வயதாகி விட்டதால் 10 மணியாகும்போது அல்லது கடை முதலாளி தளர்ந்து போகும் போதுதான் நான் நினைப்பதை நிகழ்த்த முடியும். வயிறு பசித்துக் கொண்டிருந்தாலும், நான் கொக்காக இல்லாமல் போனாலும், கொக்கைப் போலக் காத்திருக்க முடிவு செய்தேன்.

மனிதர்கள் வந்து கொண்டிருந்தார்கள் - பல உடைகளில், பல அளவுகளில். சிலருக்குக் கடன் வேண்டுமாம். கடைக்காரி மறுத்து ஏதோ வேசமாகப் பேசிக் கொண்டிருந்தாள். கடன் தர மறுப்பவள் கடையிலிருந்து நான் அபகரிக்கப் போவதை எப்படி ஏற்றுக் கொள்வாள்? அவளே இந்த வய்தான காலத்திலும் உள்ளதை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறாள். அவளிடம் போயா திருடுவது என்று மன்சாட்சி கொஞ்சமே கொஞ்சம் உறுத்த பசி மனசாட்சியை முறைத்ததில் அது அடங்கிப் போனது.

வாக்குவாதத்திற்குப் பின் கடைக்கார மூதாட்டி கடன் கேட்டவனுக்கு ஏதோ கொடுத்தாள். அவனும் இதுவரை ஏதுமே நடக்காதது மாதிரி சாப்பிடத் துவங்கி விட்டான். பசியென்று வந்து விட்டால் எல்லாம் ஒன்றுதான் போலிருக்கிறது என்று சமாதானம் செய்து கொண்டேன். அவனுக்கு வசவு வலிக்காதது போல எனக்கும் கிடைக்கப் போகும் வசவுகள் வலிக்காது என்று தோன்றியது.

கொஞ்சமாக புழுக்கம் துவங்கியது. சாலையில் போக்குவரத்துத் துவங்கியதன் அறிகுறியாக புழுதி மேலெழுந்து வரத் துவங்கியது. பள்ளிக்கூட பிள்ளைகள் அணிவகுத்து இன்றைக்கு எந்த டீச்சர் அடிப்பார்களோ என்ற கவலையோடு புத்தகப் பையை சுமந்து கொண்டிருந்தார்கள். அவ்வப்போது பிளிறிக் கொண்டு ஓடின பேருந்துகள்.

எல்லாரும் அவரவர் வேலைகளில் தங்களை பொருத்திக் கொள்ளும் அவசரத்தில் இருக்க கடையில் கூட்டம் மெல்ல கலையத் துவங்கியது. சிலருக்குக் கூட்டம்தான் கொண்டாட்டம். எனக்குக் கூட்டம் கலைந்தால்தான் என் வேலையைச் செய்ய முடியும். என் காத்திருப்பு நீளத் துவங்கியது.

ஒருவகையாகக் கடையில் ஆட்கள் குறைந்து போனதும் கடையில் பரப்பி வைத்திருந்த பலகாரங்களை நோட்டம் விட்டேன். இப்போது அந்த மூதாட்டி எல்லாவற்றையும் அடுக்கி வைத்து விட்டு புறப்படும் யத்தத்தில் இருந்தாள். இன்னும் ஓரிரு நிமிடங்களில் எல்லாவற்றையும் அடுக்கி எடுத்துக் கொண்டு கிளம்பி விடுவாள்.அதற்குள்ளாக நான் செய்ய நினைப்பதைச் செய்து முடித்தாக வேண்டும். கடைக்காரி இப்போது இலைகளை அள்ளி எடுத்து பக்கத்திலிருக்கும் குப்பைத் தொட்டியில் வீசி எறிவாள். பக்கத்தில் போய் போடுமளவுக்கு அவளுக்குப் பொறுமையில்லை என்பதை இத்தனை நாள் அவதானிப்பில் அறிந்திருந்தேன் நான். அந்த சில நிமிடங்களில்தான் அவளது கவனம் சிதறும். அந்த நிமிடம்தான் தோதுவானது.

நினைத்தது போலவே கிழவி இலைகளை எடுத்து எறிவதற்காக நடக்க முனைந்த நேரத்தில் கிளையிலிருந்து உந்தி எழும்பி இறக்கை விரித்தேன். புவியீர்ப்பு விசையோடு சேர்ந்து கீழிறங்கி அந்தக் கூடையில் இருந்த வடையைக் குறி வைத்தவாறே பயணப்பட்டு அதனைக் கவ்விக் கொள்ளும்போதும், அதை திரும்பிப் பார்த்து கிழவி பதறி கல்லெடுத்து எறிய முற்படும்போதும் கவனம் சிதறாமல் பறந்து வந்தமர்ந்தேன் பக்கத்து மரத்தின் உயர்கிளையில். திருடி ஜெயித்த மகிழ்ச்சியை விட அதில் இருந்த் ஆபத்து கலந்த பதற்றம் உற்சாகமாக இருந்தது.

ரொம்பவே பசிக்கிறது. கதை சொல்லிக் கொண்டிருக்க நேரமில்லை. அப்புறம் ஏதாவது நரி வருவதற்குள்ளாக வடையைத் தின்றாக வேண்டும்.

******

என்ன எழவய்யா இதுன்னு கேட்காதீங்க.
காக்கா - நரி கதை தெரியுமுல்லா.
அத நவீனமா சிறுகதையா எழுதிப் பழகுதேன்.
எனக்கும் தெரியுமுல்லா எளக்கியம்?

12 comments:

நாடோடி said...

ஆகா குரு என்ன இது..
:)))))))))))))))))))))))

எனக்கு ஒன்னுமே பிரியல...எதோ கண்ணு முன்னாடி ஜிலேபிய யாரோ காட்டிகினு சுத்துறமாதிரி இருக்கு.

CVR said...

நல்ல கதை!!
இதை போன்ற பல கதைகள் படித்திருக்கிறேன் என்பதால்,ஆராம்பிக்கும் போதே இது மனிதனாக இருக்காது என்ற எண்ணம் தலை தூக்கியது.
படிப்பவரை ஏமாற்றி விடுவதுபோல் இன்னும் சில வரிகளை சேர்த்திருக்கலாம்!! :-)
நேரம் இருந்தால் இதை படித்து பாருங்கள்!! :-)

வாழ்த்துக்கள்!! :-)

பினாத்தல் சுரேஷ் said...

தல..

என்ன இது மீள்பதிவு உப்புமா? சரி, நானும் என் கமெண்ட்டை மீள்பதிவு செஞ்சுடறேன்.

---

சிரமம் பாக்காம இதே பின்னவீனத்துவத்தோட பாட்டி, நரி, வடை பாயிண்ட் ஆப் வியூவிலையும் சொல்லிடுங்க ;-)

Anonymous said...

வெளங்கிரும் இந்தக் கதயவாவே இம்புட்டு நேரம் சொல்லிட்டிருந்தீரு....எங்கன போய் முட்டிக்க...சரி சரி..நல்லாத்தேன் சொல்லிருக்கீரு.நம்மூர்கார பயலாப் போயிட்டீரு..தேசிபண்டிட்டில சேர்த்திருக்கேன்...கணக்குப் புஸ்தகத்துல வரவு வெச்சிக்கிரும்வே...

http://www.desipundit.com/2007/05/02/kathakelule/

Anonymous said...

இப்பவே கண்னைக் கட்டுதே இன்னும் ஓரு மாசம் இருக்கே

லொடுக்கு said...

அண்ணாச்சி எங்கேயோ போயிட்டீங்க.... சூப்பரூ!!

நாமக்கல் சிபி said...

//அண்ணாச்சி எங்கேயோ போயிட்டீங்க.... சூப்பரூ!! //

அதேதான்! ரிப்பீட்டேய்!

தலைவா எங்கியோ போயிட்டீங்க!

Anonymous said...

நன்றி மக்களே,

ப்ழைய கள்ளாச்சே, எப்படி இருக்குமோன்னு பயந்தேன். கள்ளு எப்ப குடிச்சாலும் கள்ளுதான்னு சொல்ற மாதிரி இருக்கு உங்க மறுமொழிகள் எல்லாம். நன்றி

சாத்தான்குளத்தான்

கிருத்திகா ஸ்ரீதர் said...

டுபுக்குவின் சுட்டி மூலம் இங்கு வந்தேன்.. ஒரு சின்ன சந்தேகம். இதை இதை நீங்கதான் எழுதினீகளா?? இல்ல மண்டபத்தில யாராச்சும்??????
நல்லா இருக்கு..ரொம்ப லேட் கமெண்ட் இல்ல...

மங்களூர் சிவா said...

//
என்ன எழவய்யா இதுன்னு கேட்காதீங்க.
//

ச்ச சான்ஸ் போச்சு :(((


//
காக்கா - நரி கதை தெரியுமுல்லா.
அத நவீனமா சிறுகதையா எழுதிப் பழகுதேன்.
எனக்கும் தெரியுமுல்லா எளக்கியம்?
//

நல்ல எளக்கியம்

வாழ்க உம் தொண்டு!!

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

பிரிச்சு மேய்ங்கய்யா !!!!

நெல்லைக் கிறுக்கன் said...

அண்ணாச்சி,
கலக்கீட்டிரய்யா... மக்கா உம்ம எளக்கியம் புல்லரிக்க வைக்குது வே...