Thursday, March 15, 2007

சினிமா! சினிமா!!

சிறுவயதில் சினிமாவிற்கு செல்வது என்பது எப்போதாவது நிறைவேற்றப்படும் ஆசை. தலைவர் படத்திற்கு மட்டும் அழுது அடம்பிடித்து செல்ல வேண்டும். இல்லையெனில் ஊரிலிருந்து வரும் அத்தை மாமாக்களுக்காகக் காத்திருக்க வேண்டும். காலப்போக்கில் வீட்டில் நம்மை கைகழுவி விட்டதும் திரையரங்கு இன்னொரு மைதானமாகிவிட்டது.

வடபழனியில் தங்கியிருந்தபோது சுற்றுவட்டாரத்தில் நிறைய திரையரங்குகள். கமலா, பங்கஜம், உதயம், காசி, அன்னை கருமாரி காம்ப்ளெக்ஸ், விஜயா, நேஷனல் என ஏதாவது ஒரு தியேட்டரில் நாங்கள் பார்க்காத படம் ஓடிக்கொண்டிருக்கும். வாரத்திற்கு ஏழு நாட்களும் நைட் ஷோ பார்த்த நாட்களுமுண்டு. சில சமயங்களில் ஒரு புது திரைப்படத்தைத் தியேட்டரில் பார்ப்பது என்பது பொழுதுபோக்காக இல்லாமல் கடமையாக மாறிவிடுகிறது.

கல்லூரியில் படிக்கும்போது அனைத்து படங்களும் விடுதி மைதானத்திற்கே வந்துவிடும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் மைதானத்தில் திரை கட்டி சிடியில் திரைப்படங்கள் திரையிடுவோம். அது மட்டுமில்லாமல் எந்த குப்பை படமாக இருந்தாலும் தியேட்டருக்கு சென்று பார்ப்போம். 'இந்த படம் ரொம்ப கேவலமா இருக்குப்பா. திரும்ப போயிடுங்க' என கவுண்ட்டரில் டிக்கெட் விற்பவரே சொல்வதும் நடந்திருக்கிறது.

கல்லூரியில் படிக்கும்போது பார்த்த படங்களில் குறிப்பாக இரண்டு படங்கள் மறக்கமுடியாதவை [விடுதியிலிருந்து 40-50 பேர் மொத்தமாக சென்று ஆப்பு வாங்கிய சிட்டிசனை விட்டுவிடுவோம் ;)]. ஒன்று சாமி. மற்றொன்று சார்லீஸ் ஏஞ்சல்ஸ்.

ஒரு படத்தைப் பார்த்தோ பார்க்காமலோ கருத்து சொல்வதைப் போலவே நமக்குள் ஊறிய இன்னொரு விஷயம் யாராவது வழி கேட்டால் தெரியாவிட்டாலும் குத்துமதிப்பாக கைகாட்டிவிடுவது. 'சாமி' திரைப்படம் மதுரை 'சிந்தாமணி' தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. நாங்கள் ஆறு பேர் கிளம்பிச் சென்றோம். தியேட்டருக்கு குத்துமதிப்பாகத்தான் வழி தெரியும். சிம்மக்கல்லில் இறங்கியதும் நானும் இன்னொரு நண்பனும் வலப்பக்கம் திரும்பாமல் நேராக நடக்க ஆரம்பித்துவிட்டோம். பின்னால் வந்த ஒருவன் எங்களுக்கு வழி தெரியுமா எனக் கேட்டதற்கும் "நாங்கள்ல்லாம் மதுரயை கரைச்சு குடிச்சவய்ங்க. பேசாம வா மாப்ள"ன்னு லந்துவிட்டுக்கிட்டு நடக்க ஆரம்பித்தோம்.

என்ன மேட்டர்னா மதுரையில் மாசி வீதி, பங்குனி வீதின்னு எல்லாம் சுத்தி சுத்தி இருக்கும். நாங்க இன்னர் ரிங்ல நடக்கறதுக்கு பதில் அவுட்டர் ரிங்க்ல நடந்துட்டு இருக்கோம். இந்த மேட்டரே அரை ரவுண்ட் அடிச்சப்புறம் தான் தெரியுது. அப்படியும் முன்னாடி போயிட்டிருந்த நாங்க ரெண்டு பேரும் அசரல. கொஞ்சம் வேகமா நடந்து பசங்க கண்ணுல இருந்து மறைஞ்சு அவங்க பார்க்கறதுக்கு முன்ன வேற யார்கிட்டயாவது வழி கேட்டுடலாம்னு வேகமா நடந்தோம். ஒரு ஜிகர்தண்டா தள்ளுவண்டி கடைக்காரர்கிட்ட கேட்டா "சிந்தாமணி தியேட்டர் ஒரு கிலோமீட்டர் முன்னாடியே இருக்கே"ங்கறாரு.

இதை பசங்க கிட்ட சொல்ல முடியுமா? லெப்ட் ரைட்டுன்னு எடுத்து எப்படியாவது தியேட்டருக்கு போயிடலாம்னு நடந்தா மீனாட்சி அம்மன் கோயிலே வந்துடுச்சு. அங்கயிருந்து எப்படியோ தியேட்டரை கண்டுபுடிச்சு போனா டிக்கெட் வித்துமுடிச்சுட்டாங்க. இவ்வளவு கஷ்டப்பட்டு வந்து படம் பார்க்காம போறதான்னு ப்ளாக்ல வித்துட்டிருந்த ஒரு அண்ணாச்சிகிட்ட ஆறு டிக்கெட்டை வாங்கி உள்ள போனா வச்சாங்க பாருங்க ஒரு ஆப்பு. டிக்கெட் கிழிச்சு குடுக்கறவரு அப்படியே ஆறு பேரையும் வெளிய தள்ளிவிட்டார். கேட்டா அது போன ஷோவோட டிக்கெட்டாம். அலைஞ்சு திரிஞ்சு அல்லாடி வந்தா ப்ளாக்ல வாங்கின டிக்கெட்லயும் ஆப்பு.

மத்த பசங்க எல்லாம் என்னவோ எல்லாத்துக்கும் நாங்கதான் காரணம்னு எங்க ரெண்டு பேரையும் முறைக்கறாங்க. இதுக்காக ஃபீல் பண்ணா முடியுமா? ஒரு ரெண்டு மணி நேரம் அப்படியே மாசிவீதியில சுத்திட்டு ஒரு கடையில ரவுண்ட் கட்டி சாப்பிட்டு நைட் ஷோ அதே படத்தை அதே தியேட்டர்ல பார்த்துட்டு தான் வந்தோம். முன் வச்ச காலை பின் வைக்கலாமா? அப்புறம் தல டிரெயினிங்குக்கு என்ன மரியாதை?

இதே மாதிரி இன்னொரு முறை 'சார்லீஸ் ஏஞ்சல்ஸ்' படத்துக்கு ஒரு பத்து பேர் கிளம்பினோம். மாப்பிள்ளை விநாயகர் தியேட்டர்ல. தியேட்டருக்குப் போய் பார்த்தா நாலு பசங்க பாக்கெட்ல பத்து பைசா இல்லாம வந்திருக்காங்க. கைல இருந்த காசையெல்லாம் போட்டு டிக்கெட்டை வாங்கி படத்தை நல்லா ஜாலியா பார்த்தோம். காமரூன் டியாஸ், ட்ரூ பேரிமூர், சப்பை மூக்கு லூசி லியூன்னு நல்லா கில்பான்ஸா இருந்துச்சு.

படம் முடிஞ்சு வெளிய வந்து திரும்பி போக பஸ்ஸுக்கு காசு இருக்கான்னு பார்த்தா ஆறு ரூபாய் குறையுது. இதுக்காக டிக்கெட் வாங்காமலா போக முடியும்? நோ. நெவர்.

ஆபத்பாந்த்தவனா ஒரு பையன் செமஸ்டர் முழுக்க தோய்க்காம இருந்த துணிகளை தோய்க்க நாலு பாக்கெட் சர்ஃப் பவுடர் வாங்கி வச்சிருந்தான். அதை கடைல குடுத்து காசு வாங்கிக்கலாம்னு பக்கத்துல இருந்த ஒரு கடைல "அண்ணே, நாங்க திருப்பரங்குன்றம் தியாகராஜா காலேஜ்ல படிக்கறோம். என் பர்ஸை பிக்பாக்கெட் அடிச்சுட்டாங்க. பஸ்ஸுக்கு டிக்கெட் காசு கொஞ்சம் குறையுது. இந்த சர்ஃப் பாக்கெட்டை வச்சுக்கிட்டு அதுக்கான காசை குடுக்க முடியுமா?"ன்னு பம்மிட்டே கேட்டோம்.

அந்த நல்ல மனுசனும் நாலு சர்ஃப் பாக்கெட்டை வாங்கிட்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார். மீதி குடுக்க "ரெண்டு ரூபாய் சேஞ்ச் இல்லையே"ன்னு கெத்தா சொன்னான் நம்ம கூட இருந்தவன். அவர் கேவலமா ஒரு லுக் விட்டுட்டு "பரவாயில்ல தம்பி. இருக்கட்டும்"ன்னு ரெண்டு ரூபாய் போட்டுக் குடுத்தார். அந்த காசை வச்சு அடிச்சுபுடிச்சு ஹாஸ்டல் வந்து சேர்ந்தோம்.

இதுமாதிரி தியேட்டர் அனுபவங்கள் நிறைய இருக்கு. ஒரு நண்பனை மூனு மணி நேரம் தியேட்டர் வாசல்ல காத்திருக்க வச்சுட்டு நான் ஆபிஸ்ல ஆப்பு வாங்கிட்டிருந்த கதையெல்லாம் இருக்கு.

இதை எழுதிட்டு இருக்கும்போது என் நண்பன் "ஏன்டா, ஓசில இடம் குடுக்கறாங்கன்னு இட்லிக்கு சட்னி வைக்காததைக் கூட எழுதிட்டு இருப்பியா?"ன்னு கேட்கறான். " என்னங்க பண்றது. பொது வாழ்க்கையில இறங்கிட்டப்புறம் எல்லா வித மொக்கையும் போட்டுத்தானே ஆகனும்? :)))

18 comments:

நாகை சிவா said...

//வாரத்திற்கு ஏழு நாட்களும் நைட் ஷோ பார்த்த நாட்களுமுண்டு. //

அதுவும் உண்டு, ஒரு நாளைக்கு மூனு படம் பார்த்த நாட்களுமுண்டு. :-)

//சமயங்களில் ஒரு புது திரைப்படத்தைத் தியேட்டரில் பார்ப்பது என்பது பொழுதுபோக்காக இல்லாமல் கடமையாக மாறிவிடுகிறது//

கடமை வீரர்களடா நாம் எல்லாம்!

நாகை சிவா said...

//விடுதியிலிருந்து 40-50 பேர் மொத்தமாக சென்று ஆப்பு வாங்கிய சிட்டிசனை விட்டுவிடுவோம் ;)]

சேம் ப்ள்ட், காலேஜ் செகண்ட் இயர் எல்லாம் திரண்டு போய் நாங்க வாங்கினோம் ஒரு ஆப்பு - காதலர் தினத்துக்கு, (முதல் நாள்)

நான் வாங்கிய டிக்கெட் மட்டும் 92. :-(

நாகை சிவா said...

//இதுக்காக ஃபீல் பண்ணா முடியுமா? ஒரு ரெண்டு மணி நேரம் அப்படியே மாசிவீதியில சுத்திட்டு ஒரு கடையில ரவுண்ட் கட்டி சாப்பிட்டு நைட் ஷோ அதே படத்தை அதே தியேட்டர்ல பார்த்துட்டு தான் வந்தோம். முன் வச்ச காலை பின் வைக்கலாமா? //

அதானே.... சேம் சம்பவம் எனக்கு படையப்பாவிற்கு. வெயிட் பண்ணி பாத்துட்டு தானே வந்தோம். அன்னிக்கு வீட்டில் வாங்கிய ஆப்பு செம ஆப்பு.

சென்ஷி said...

அமர்க்களம் படத்துக்கு என் கிளாஸ் பிரண்ட்ஸ் எல்லோரையும் அடம்பிடிச்சு கட் அடிக்க வச்சு கூட்டிட்டு போனது ஞாபகத்துக்கு வருது.
சிட்டிசன் படத்துக்கு ரிலீஸ் அன்னிக்கு பகல் காட்சி டிக்கெட் கிடைக்காம கும்பகோணம், மாயூரம்ன்னு அலைஞ்சு கடைசியில கும்பகோணம் பரணிகா தியேட்டர்ல ரிலீஸ் அன்னிக்கு ராத்திரி ஷோ பாத்தேன். ஷோ ஆரம்பிச்சப்ப ராத்திரி மணி 11. :))


//இதை எழுதிட்டு இருக்கும்போது என் நண்பன் "ஏன்டா, ஓசில இடம் குடுக்கறாங்கன்னு இட்லிக்கு சட்னி வைக்காததைக் கூட எழுதிட்டு இருப்பியா?"ன்னு கேட்கறான். " என்னங்க பண்றது. பொது வாழ்க்கையில இறங்கிட்டப்புறம் எல்லா வித மொக்கையும் போட்டுத்தானே ஆகனும்? :))) //

இது ஒரு மொக்க பின்னூட்டம். :))

சென்ஷி

நாகை சிவா said...

//இதுக்காக டிக்கெட் வாங்காமலா போக முடியும்? நோ. நெவர். //

நீ தான் நல்லாவே நல்லவன் வேசம் போடுவீயே....அது போல தானே இதும்!!!

//பொது வாழ்க்கையில இறங்கிட்டப்புறம் எல்லா வித மொக்கையும் போட்டுத்தானே ஆகனும்? :))) //

ஆமாம், ஆமாம்.... இல்லையா பின்ன!!!

கப்பி பய said...

சிவா,

//கடமை வீரர்களடா நாம் எல்லாம்!
//

இல்லையா பின்ன

//நான் வாங்கிய டிக்கெட் மட்டும் 92. :-(
//

:))))

//அன்னிக்கு வீட்டில் வாங்கிய ஆப்பு செம ஆப்பு. //

அது என்னைக்கும் இருக்கறதுதானே :))

//நீ தான் நல்லாவே நல்லவன் வேசம் போடுவீயே....அது போல தானே இதும்!!!
//

ஹி ஹி

கப்பி பய said...

சென்ஷி,

//இது ஒரு மொக்க பின்னூட்டம். :))
//

:)))))

G.Ragavan said...

அடேங்கப்பா...இங்க சொல்லீருக்குறத வெச்சே ரெண்டாயிரம் சினிமா எடுக்கலாம் போல! :-) நல்லாத்தான் கலக்கீருக்கீங்க. சோப்பு பவுடர் எல்லாம் வித்திருக்கீங்க. நல்ல தொவையல்தான்.

கப்பி பய said...

//நல்லாத்தான் கலக்கீருக்கீங்க. சோப்பு பவுடர் எல்லாம் வித்திருக்கீங்க. நல்ல தொவையல்தான்.
//

நன்றி ஜிரா. நாம கொஞ்சம் அசந்தா நம்ம பசங்க நம்ம வேட்டியையே உருவி வித்துடுவாங்க :)))

ACE said...

//அந்த நல்ல மனுசனும் நாலு சர்ஃப் பாக்கெட்டை வாங்கிட்டு பத்து ரூபாய் நோட்டை நீட்டினார்//

கலக்கியிருக்கீங்க.. காலேஜ்ல படிக்கும் போதே மார்க்கெட்டிங் அனுபவத்துல படிச்சிருக்கீங்க..:) லாபம் வேற பாத்திருக்கீங்க :)

கப்பி பய said...

//காலேஜ்ல படிக்கும் போதே மார்க்கெட்டிங் அனுபவத்துல படிச்சிருக்கீங்க..:) லாபம் வேற பாத்திருக்கீங்க :)
//

எல்லாம் தல ட்ரெயினிங் தான் ;))

இலவசக்கொத்தனார் said...

//

//வாரத்திற்கு ஏழு நாட்களும் நைட் ஷோ பார்த்த நாட்களுமுண்டு. //

அதுவும் உண்டு, ஒரு நாளைக்கு மூனு படம் பார்த்த நாட்களுமுண்டு. :-)//

நாங்க நாலு படம் பார்த்திருக்கோமில்ல. அப்புறம் பரீட்ச்சைக்கு முதல் நாள் சினிமா பக்கறதை ஒரு பழக்கமாவே வெச்சிருந்தோமில்ல!

கப்பி பய said...

//அப்புறம் பரீட்ச்சைக்கு முதல் நாள் சினிமா பக்கறதை ஒரு பழக்கமாவே வெச்சிருந்தோமில்ல!//

பரிட்சைக்கு படிக்கும்போது கம்ப்யூட்டர்ல படத்தை ஓட்டிவிட்டு மானிட்டரை ஆஃப் பண்ணிட்டு கதை வசனம் கேட்டுக்கிட்டே படிப்பீங்களா? :))

தம்பி said...

இந்த ஊருக்கு வந்தும் எனக்கு ஆப்பு தொடருதுப்பா.

ப.கி.மு.சரம் ஓடுதுன்னு ஒருத்தன் சொல்ல நானும் நாலஞ்சு பேர கூட்டிகிட்டு தியேட்டர் பக்கம் போனா போஸ்டர்ல நம்ம கரடி மும்தாஜ் கூட ஒய்யாரமா கோட் சூட் போட்டுகிட்டு போஸ் குடுக்குது.

என்ன பண்றது முன் வைச்ச கால பின் வச்சது இல்லையே பசங்கள கதற கதற வீராசாமிக்கு இட்டுனு போனேன். வரும்போது ஒருத்தன் சொல்லாம கொள்ளாம ஓடிட்டான்.

தம்பி said...

//நான் வாங்கிய டிக்கெட் மட்டும் 92. :-( //

இத நாங்க நம்பணும்???????????

இலவசக்கொத்தனார் said...

//பரிட்சைக்கு படிக்கும்போது கம்ப்யூட்டர்ல படத்தை ஓட்டிவிட்டு மானிட்டரை ஆஃப் பண்ணிட்டு கதை வசனம் கேட்டுக்கிட்டே படிப்பீங்களா? :))//

அப்பம் எல்லாம் நம்மூட்ல கம்ப்யுட்டர் ஏதுவே! டேப் செட்டுல சும்மா தலைவர் பாட்டைப் போட்டு விட்டுட்டு படிக்க வேண்டியதுதான்.

நாகை சிவா said...

////நான் வாங்கிய டிக்கெட் மட்டும் 92. :-( //

இத நாங்க நம்பணும்??????????? //

நம்பி தாண்டி ஆகனும்!!!!

காலேஜ்ல மாஸ் கட்டுனு ஒரு மேட்டர் இருக்கு, அது தெரியுமா உனக்கு!!!

92 டிக்கெட் வாங்கினேன் என்று தான் சொன்னேன், என் காசுனு நினைச்சுகாதே...

இந்த மாதிரி மாஸ் கட்ல 50 பசங்க பணம் கொடுத்தாலே போதும், 50 டிக்கெட் போக எங்க செட் பசங்க ஒரு வாரம் படம் பாப்பதற்கும் கலெக்சன் வந்து விடும்.

நாகை சிவா said...

//அப்பம் எல்லாம் நம்மூட்ல கம்ப்யுட்டர் ஏதுவே! டேப் செட்டுல சும்மா தலைவர் பாட்டைப் போட்டு விட்டுட்டு படிக்க வேண்டியதுதான். //

ஆமாம் கொத்துஸ், டிவி ஒடட்டாடி நமக்கு எல்லாம் படிச்ச மாதிரியே இருக்காது....