Monday, July 27, 2009

தெய்வக் கொயந்தைகள்

நாங்க மூணு பேரு இருந்தோம் எங்க தெருவில், என்னைய விட அவங்க ரெண்டுப் பேரும் ஒரு வருஷம் சீனியர். ஒன்னு பாலாஜி பஜ்ஜி வாழக்கா சப்ஜி, இன்னொன்னு கண்ணம்மா கண்ணம்மா வாயெல்லாம் பொய்யம்மா. (ஹையா என் வெர்ஷன், ஜாலியா என்னைய அப்பாவி தெய்வக் கொயந்தயா அளக்கலாம்).

இந்தப் பட்டத்துக்கு அம்புட்டு பொருத்தம் ரெண்டு பேரும். என்னோட மொதோ ஞானக்குருமார்கள் இவங்கதான். பாலாஜி, கம்முனு போற போக்குல கொளுத்திப் போட்டுட்டு, வர்ற வழில அதுல கேண்டில் ஏத்திட்டு வர்ற ஆளுன்னா, கண்ணம்மா சூப்பரோ சூப்பர், சும்மாச்சுக்கும் காரணமே இல்லாம பொய் சொல்லிட்டே இருப்பா.

நான்தான் ஏற்கனவே சொல்லிருக்கேனே, வராது வந்த 'நாய்'கின்னு. எங்கக்காவுக்கும் எனக்கும் ஏழு வயசு வித்தியாசம்(எப்டியோ இங்கயும் சொல்லி கடுப்புக்கு கால் போட்டாச்சு). அதால நான் கொஞ்சம் வளந்து வெள்ளாடுற ஸ்டேஜ் வந்தப்போ அவங்க சீச்சமம்மு கொயந்தப் பருவத்துக்கு டாட்டா சொல்லிட்டாங்க. கூட சேர்த்து நான் பண்ணுன இம்சையில் என்னைய உசிரோட விட்டதே பெரும்புண்ணியம். அதேசமயம் நான் மனசளவுல பக்த மீராவாட்டம் அவங்கள பிரெண்ட் பிடிக்க அம்புட்டு பாடுப்பட்டிருக்கேன்.

பாலாஜி வீட்லயும் அதே அதே சபாபதே. அவங்கண்ணன் இவன விட எட்டு வயசு பெரியவரு. அவர்தான் எங்கூரு, வெங்கடபதி ராஜு மன்றத் தலைவர்(அது டெண்டுல்கரோட விசிறிகள மெரட்டறத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட மன்றம்). கண்ணம்மா வீட்டுக்கு ஒரே பொண்ணு. எங்க மூணு குடும்பமும் நல்ல நட்போட இருந்தாங்க.

விடுவமா? நாங்க மூணு பேரும் ஒண்ணா சேரக்கூடாது, குறிப்பா பாலாஜியோட சேரக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ஆடர். ஏன்னா, சம்பவத்த சட்டையில் குத்திக்கிட்டு திரிஞ்சோம். ஒன் ஸ்மால் எக்சாம்பில்னா,அந்த டைம்ல தூர்தர்ஷன்ல ரசகுல்லா விளம்பரம் ரொம்ப பேமஸ். நாங்கெல்லாம் எப்படா மறுபடி திங்கலாம்னு காத்திட்டிருப்போம். இவன் என்ன பண்ணான்னா ஒரு தடவ, ஸ்வீட் டப்பால நாலஞ்சு வெள்ள உருண்டைய (ரசகுல்லாவாட்டம் இருந்துச்சி) சக்கரத் தண்ணீல போட்டு கொண்டுவந்தான். என்கிட்டயும் கண்ணம்மாகிட்டையும் சாப்டுங்கன்னு நீட்டினான். ரெண்டு பேரும் செம ஒத்தும. பிளஸ் நான் எங்கக்காக்குக் கொடுகாம எதையும் சாப்ட மாட்டேன்னு கொள்கை வெச்சிருந்தேன். பல்பத்தை அவ நக்கலங்கறதால தின்னாம விட்டேன்னா பாத்துக்கங்க. நான் தின்னாம அவளும் திங்கல. ஸ்கூல்லருந்து வர்ற வழில எங்கம்மாக் கிட்ட பெருமையா விஷயத்தைச் சொல்லி, ஸ்நேக்ஸ் டப்பாவை காமிக்கிறேன், வாங்கிப் பாத்தவங்க அப்டியே மயக்கம் போடாதக் குறைதான். பிக்காஸ் அதிலிருந்தது ரசக்கற்பூரம். தப்பித் தவறி வாய்ல போட்டிருந்தா அவ்வவ்.........எத்தன பேர் உறுப்பட்டிருப்பாங்க நாட்ல , அப்டி போய் விடலாமா? கண்ணம்மா வீட்லயும் சேம் பிளட். ஆனாலும் எதைக் கேட்டிருக்கோம் இதைக் கேக்க. அடி, உதை, அட்வைஸ், கெஞ்சல், இதெல்லாம் எங்களுக்கு பிரிட்டானியா பிஸ்கட்டாட்டம். எதற்குக் கொடுக்கிறாய் அடி, யாரைக் கொல்லப் பிழிகிறாய் அட்வைஸ்னு எதாச்சும் பேசி இன்னும் வாங்கறதுதான் ஹாபியாச்சே.

கண்ணம்மா எப்டின்னா ஸ்வாரஸியமா டூப்படிப்பா. அவ சொல்ற கதைய வெச்சே நானூறு சூப்பர் டூப்பர் ஹிட்டுகளக் கொடுக்கலாம். நாங்க எங்க நட்பை இன்னும் உறுதியா உலகத்துக்கு எடுத்துரைப்பதெப்படின்னு ஒரு கருத்தரங்கம் நடத்தினப்போ, கண்ணம்மா சொன்ன ஐடியாதான் இது. அடுத்தநாள்ளருந்து மத்த பிரெண்ட்ஸ் கிட்டல்லாம் போய் அனாவசியமா அவங்கம்மாப்பா பேரோ, ஏதோ ஒன்னு கேக்குறது. அவங்க பதிலுக்கு ஏதாச்சும் எங்க அம்மாப்பாப் பத்தி கேட்டாக்கா, ரகசியக் குரலில்(அப்பத்தான் நம்புவாங்கலாமா) ஜல்லியடிக்க ஆரம்பிக்கிறது. எங்கம்மாதான் கண்ணம்மா அம்மான்னும், அவங்கப்பாதான் பாலாஜி அப்பான்னும், சும்மா ஜாலிக்காக இப்டி தத்து கொடுத்தாச்சு, கொஞ்ச நாள்ல நான் அவன் வீட்டுக்கும், கண்ணம்மா எங்க வீட்டுக்கும், பாலாஜி கண்ணம்மா வீட்டுக்கும் போயிடுவோம்னு கேவலமா ஒரு கதையை சொல்ல ஆரம்பிச்சோம். பாலாஜிக்கு இது ரொம்பப் பிடிச்சுப் போய், ஒரு படி மேலப் போய் 'எனக்கு நாலஞ்சு அம்மா, ஆறு ஏழு அப்பா'னெல்லாம் கத கட்ட ஆரம்பிச்சிட்டான். எங்களுக்கு ஸ்லைட்டா ஏதோ தப்புன்னு தெரியிது, ஆனா முழுசா என்னதுன்னு தெரியல. ஒரு கட்டத்துல ரோட்ல போறவர்றவங்கள்ளருந்து எல்லாரையும் தன்னோட அம்மாப்பான்னு இவன் சொல்ல ஆரம்பிக்க, ஒருதரம், ஒருத்தரோட பொண்ணு அங்க உக்காந்திருக்கறது கவனிக்காம இவன் பாட்டுக்கு பீலாவ பீச்சிக்கிட்டிருந்தான். அந்தப் பொண்ணு அழுதுக்கிட்டே போய் டீச்சருங்கக்கிட்ட பத்த வெச்சிருச்சி. அதோட ரிசல்ட் தான் அவனோட முன்மண்டை தழும்புக்குக் காரணம். அப்டியாப்பட்ட வீரமறக் குடியில் வந்தவங்க நாங்க.

இதுக்கு நடுவுல இந்த அம்மாங்க ஓவரா பவர காமிக்கிறேன்னு முதுகுல நாலு சாத்து சாத்திக்கிட்டு எங்கள கர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு உறும வெச்சாங்க. இதப் பத்தி தீவிரமா விவாதிச்சதுல நானும் கண்ணம்மாவும் ஒரு முடிவுக்கு வந்தோம். அப்போதான் ஏதோ போட்டிக்கு, Snow White and the Seven Dwarfs, Hansel and Gretel இதெல்லாம் எங்களுக்கு பிரைசா கெடச்சிருந்தது. இதுகள வெச்சு ஒரு மாஸ்டர் பிளான் போட்டோம். முட்டை கொண்டுட்டு வர்ற அண்ணன் சைக்கிள்ல காத்தெறக்கி விடுறது, இல்லன்னா வேகமா பாஞ்சு வந்து அவரு கைலருந்து முட்ட டிரேயை தட்டி விடுறது, இல்லன்னா பெசஞ்சு வெச்சிருக்க கோதும மாவை கூரைல அடிச்சு அது தொங்குரதப் பாத்துக் கூத்தாடுரதுன்னு அமைதியா நாங்க உண்டு எங்க என்டர்டெயின்மென்ட் உண்டுன்னு செவனேன்னு இருக்கறச்சே, அந்நியர் எதிரில் அந்நியனா மாறி இழுத்துப் போட்டு மொத்துற அம்மாங்களுக்கு சரியான பாடம் புகட்ட, சாத்துன ஒடெனே சுதாகரிச்செழுந்து, 'சித்தீ'ன்னு அவங்களப் போய் கட்டிக்கணும். ஆனா இதுக்கு ஒரு தற்கொலைப் படை வீரனுடயத் துணிவிருக்கனும். ஏன்னா விளைவுகள் எப்டி இருக்கும்னு அந்த விஷ்ணுவாலயே சொல்ல முடியாது. அதேசமயம் பலன் நிச்சயமுண்டு. 'ஆபரேஷன் சித்தி'யை நான்தான் மொதோ அரங்கேற்றம் பண்ணேன். நான் நெனச்சதுக்கு மாறா எங்கம்மா சிரிசிரின்னு சிரிச்சு வெறும் அட்வைசோட விட்டுட்டாங்க. சப்புன்னு போச்சு. கண்ணம்மா டைரெக்டா காரியத்தில் இறங்காம, 'இனி அடிச்சே, சீக்கிரமே காலைல எழுந்து, பால்காரம்மா எதிர்ல உன்னைய சித்தின்னு கூப்டிருவேன்னு' முட்டாள்தனமா மெரட்டி, மெடிக்கல் லீவ் போட்டுக்கிட்டா.

அதேமாதிரி, சிலபல வருஷங்கழிச்சு, ஒரு தடவ எங்க ஸ்கூல் பின்னாடி இருந்த வீட்ல பெயிண்டடிக்கிற வேலை நடந்திட்டு இருந்தது. பில்லருக்கு செகப்பு பெயிண்டடிச்சிக்கிட்டிருந்த ஆளுங்க மேலையும் கொஞ்சம் ஜாஸ்தி பெயின்ட் ஒட்டிக்கிட்டு இருந்தது. நம்ம பாலாஜி இதை பாத்துட்டான். ஒடனே, கெளப்பி விட்டுட்டான்,'டேய் பின் வீட்ல பேய் இருக்குடா', 'செகப்பு கலர்ல இருக்குடா', 'நங்கு காட்டுதுடா'ன்னு. பாவி என்கிட்டக்கூட அப்டியே சாதிச்சான். இதெல்லாம் காலை அசெம்பிளிக்கு முன்ன. அடுத்து பிரேக் வர்றத்துக்குள்ள, எப்டி பர்ஸ்ட் ஸ்டாண்டர்டுலருந்து டென்த் வரைக்கும் ரூமருக்கு ரூட் போட்டுக் கொடுத்தானோ தெரியாது, பிரேக் சமயம், அம்புட்டு பேரும் அங்க ஆஜர். அது ஏதோ ஸ்கூல் விசேஷத்துக்கு ஒரு வாரம் முந்திங்கறதால எங்க டீச்சருங்க அந்த பிசில எங்கள சரியா பாக்கல. நாங்கெல்லாம் காச் மூச்னு கத்திட்டு ஆர்ப்பாட்டம். சத்தம் கேட்டு பெயிண்டடிக்கிறவங்க வந்து பாத்தா, இன்னும் கத்துறது. அவங்க ஏதோ பசங்க வெள்ளாடுறாங்கன்னு போய்ட்டாங்க. அதுக்குள்ள, இவன் கல்லெடுத்து எங்க கைல கொடுத்துட்டான்.பெரிய பசங்க தடுக்க தடுக்க நாங்கெல்லாம் கல்லெடுத்து அடிக்கிறோம். கொடும என்னன்னா, அந்த வீட்டுப் பையனும் எங்க கூட சேர்ந்துக்கிட்டு கல்லடிச்சு ஒரே கூத்து. ரெண்டு மூணு நிமிஷம் கூட கடமைய எருமை கணக்கா நாங்க செஞ்சி முடிக்கல, அவங்க கோவமா பின்கதவ தொறந்திட்டு வந்து சத்தம் போடறாங்க. பக்கத்து வீட்டு ஆட்களும் ஸ்கூலுக்கு வந்தாச்சு. மீட்டிங்க்ல இருந்த டீச்சருங்களும் வெளில வந்தாச்சு.

நல்லா செம மாத்து வாங்கினோம் அத்தனைப்பேரும். அப்டியாச்சும் கம்னு இருந்தோம்ங்கறீங்க?

இது நடந்து ஒரு வருஷத்துல உலகக் கோப்பை கிரிக்கட் வந்துச்சி. உலகப் பிரசித்திப் பெற்ற கல்கத்தா கேவலம் நடந்தது அந்த வாட்டிதான். நாங்க எல்லாரும் செம சோகமாகி, கண்டிப்பா சூசயிட் பண்ணிக்கறதுன்னு முடிவுக்கு வந்துட்டோம். ஆனா,அன்னைக்குன்னு பாத்து எப்டி மாஸ் சூசயிட் திடீர்னு பண்றது? இப்போ மாதிரி நாளுக்கு நாப்பது டிவி சீரியலா இருந்துச்சி எங்களுக்குக் கத்துக் கொடுக்க?அதே சமயம், கும்ப்ளேவும் காம்ப்ளியும் கதறின சீனையும், நாம அங்கருந்து நாலு அழுகின தக்காளி அடிக்க முடியலயேங்குற வருத்தத்தையும் தாங்கிட்டு எப்டி தூங்கறது? ஒடனே நம்ம கண்ணம்மாதான் ஐடியாவ சொன்னா, ஏய் பேசாம ஆளுக்கு கொஞ்சம் பெனெட்ரில குடிச்சிட்டு மட்டயாகிடலாம்னு. ஒடனே போன்ல கதறின மத்த அன்புள்ளங்களுக்கும் நாங்க காட்டுத்தீய விட வேகமா இதை பரப்பிட்டோம். ஒடனே எல்லாரும் போருக்குப் புறப்படராப்ல பொறப்டாச்சி மருந்துக் கடைய நோக்கி.

அவ்ளூண்டு ஊர்ல இருந்த பத்து மருந்துக்கடைல, கடசாத்துறத்துக்கு ஒருமணிநேரம் முன்ன திடீர்னு நூத்துக் கணக்குல பசங்க வந்து பெனெட்ரில் கேட்டா ஈசியா கண்டுப்பிடிச்சிட மாட்டாங்களா? அதுவும் கூட்டத்தோட கூட்டமா, அவங்க பசங்களும் லைன் கட்டி வெரப்பா நிக்கும்போது வேறென்னப் பண்ணுவாங்க? கூப்டு 'அன்பா' விசாரிச்சதுல, கோழைப் பசங்க பிளானை பப்பரப்பான்னு போட்டு ஒடச்சிட்டாங்க, அதுவும் எங்களையும் சேர்ந்தாப்டி போட்டுக் கொடுத்திடுச்சுங்க எட்டப்பனுங்க. அப்புறம் நடந்தத எங்கூரு வரலாறு சொல்லும். பின்ன, இன்னிவரை ஒரு மருந்துக் கடைலக் கூட டாக்டர் பிரிஸ்க்ரிப்ஷன் இல்லாம மருந்துக் கிடைக்காது. அதுவும் ஒரு மாசத்துக்கு மேல பழசுன்னா, அந்த டாக்டருக்கே போனைப் போட்டிருவாங்க. பாருங்க எவ்ளோ பெரிய சமூக நலனுக்கு வித்திட்டிருக்கோம் நாங்க, அதப் புரிஞ்சிக்காம ஒரேக் குஷ்டமப்பா.

இப்டியாப்பட்ட சமூக சேவகர்களான நாங்க மூணு பேரும், கால ஓட்டத்தில், அவங்க மெட்ரிக் எக்சாம் முடிஞ்சதிலிருந்து பிரிஞ்சிட்டோம். கண்ணம்மா என்னமோ கவுந்தி அடிகளாட்டம் அநியாயத்துக்கு மாறிட்டா, சி ஏ பண்ணிக்கிட்டே இருக்கா, எப்போ முடிப்பான்னு தெர்ல. இவன் பேருக்கு சம்பந்தமில்லாத பிராமிசிங் நிறுவனத்தில், மனித வள மேம்பாட்டுத் துறைல நல்லப் பதவிக்கு வந்துட்டான்(நட்பை மறக்காம பேக்டோர் எங்கருக்குன்னு, எங்கூருக்கே மேப் போட்டுக் கொடுத்தான்). அங்க மொதல்ல மோப்பம் பிடிச்சு எஸ்சான மக்களில் அண்ணனும் ஒருவர். கட்டக் கடேசியா அவனுக்கும் இப்போ கண்ணாலமாம். மூணு பேருக்குமே இப்போ ஒருத்தரோட ஒருத்தர் பெரிய ஒட்டுதல் இல்லைன்னாலும், அது ஒரு அழகிய நிலாக் காலத்துல டெரரிஸ்டாட்டும் என்னா கொரங்கு வேலைலாம் பண்ணிருக்கோம்!!! இதெல்லாம் என்னாத்துக்கு? இப்போ நீ என்னதான் கருத்து சொல்லவரன்னு கேக்காதீங்க, ஒன்னியும் இல்ல, சும்மாச்சுக்கும் விஷயமில்லாம கொசுவத்திங்கர பேர்ல வழக்கம்போல பிளேடு போட்டிருக்கேன்.

8 comments:

சந்தனமுல்லை said...

:-))))))))))))


OMG...U R Rocking, gal!!!

Anonymous said...

செம கொசுவர்த்தியா இருக்கு..:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

திருவிளையாடல் புராணமே எழுதலாம்போலவே.. இப்பத்தான் தெய்வக்குழந்தைகளின் பராக்கிரமத்தை அறிந்தேன்..

தெளிந்தேன்..
:)

பித்தன் said...

ரத்தம் வருது தலைவா.......

☀நான் ஆதவன்☀ said...

மயக்கமே வருது ராப். எம்புட்டு பெரிய பதிவு :)

கண்டியூவா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது. ஆனா கடைசி பத்தி செண்டிமெண்ட்டா முடிஞ்சது “டச்சிங்”.

☀நான் ஆதவன்☀ said...

உங்க ப்ரெண்ஷிப் கட்டான உடனே எல்லாரும் உருப்பட்டுடாங்க போல :)

♫சோம்பேறி♫ said...

/* நான் மனசளவுல பக்த மீராவாட்டம் அவங்கள பிரெண்ட் பிடிக்க அம்புட்டு பாடுப்பட்டிருக்கேன் */

அவ்வ்வ்.. இந்த அக்காக்களே இப்படித் தான் ராப்.

அப்பா அம்மா எக்சேஞ் வெளையாட்டு, மாஸ் சூசைட், ஆப்பரேஷன் சித்தி.. ஹைய்யோ.. ஹைய்யோ.. சான்ஸே இல்லாத காமெடி. கீப் ராக்கிங்.

Anonymous said...

சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சு :)