Saturday, December 30, 2006

வாலிபமே வா... வா...

"வருத்தமில்லா வாலிபர் சங்கம்" - இந்த வார்த்தையைக் கேட்டாலே ஏதோ உருப்படாதவர்களின் சங்கம் என்று முகம் சுளிக்கும் வயோதிகர்கள் நிறைந்த உலகம் இது. வருத்தப்பட்டு என்ன ஆவப்போகுது என்று முடிவு கட்டி சங்கம் அமைப்பது ஒரு பெரிய குற்றமா என்ன? "வருத்தப்பட்ட வயோதிகர் சங்கம்" இதுவரை நமது சங்கத்தை விட பெரியதாக என்னத்தை சாதித்தது என்று சவால் விட்டு என் அட்லஸ் வாலிபர் மாதத்தை ஆரம்பிக்கிறேன். என்னையும் ஒரு வாலிபனாக மதித்து 2007 ஆண்டின் முதல் அட்லஸ் வாலிபராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி!

வால் முளைத்ததால் தான் "வாலி" என்று இராமாயண வாலிக்கு ஒரு பெயர் வந்ததோ என்று சில சமயம் நினைப்பேன். வால் இல்லாவிட்டாலும் வாலிக்கான குணநலன்கள் கைவரப்பெற்றவர்கள் வாலிபர்கள் என்பதாலோ என்னவோ நம்மை "வாலி"பர்கள் என்று அழைக்கிறார்கள். வாலிபப் பருவத்தில் வருத்தமில்லாமல் இருந்தவர்களைக் காட்டிலும் நாட்டுக்காக, வீட்டுக்காக வருத்தப்பட்ட வாலிபர்களையே அதிகமாக சரித்திரம் நமக்கு அடையாளம் காட்டுகிறது.

"வாலிபம்" என்ற சொல்லினைக் கேட்கும் போது பலருக்கு பல விதமான எண்ணங்கள் தோன்றும். "கெயிட்டி", "ஜோதி" தியேட்டர் ரசிகர்கள் இந்த வார்த்தையைக் கேட்டதும் புரிந்துகொள்வது வேறு மாதிரி. இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் இந்த சொல்லை கேட்கும்போது மாவீரர் பகத்சிங்கையும், ஜனநாயக வாலிபர் சங்கத்தையும் நினைவுகொள்வார்கள். சிலபேருக்கு பாரதியும், இயேசுபிரானும் கூட நினைவுக்கு வருவார்கள். ஆத்திகர்கள் சிலருக்கு கிருஷ்ணபகவானின் வாலிபவயது குறும்புகள் நினைவுக்கு வரும். மொத்தத்தில் "வாலிபம்" என்பது ஒவ்வொருவரும் கடந்து வரும் ஒரு பருவம். கவலைகளின்றி வண்ணத்துப் பூச்சிகளாய் உலாவரும் ஒரு பருவம். சில பேருக்கு தங்கள் கொள்கை, குறிக்கோள் எதுவென்று இனங்காணும் பருவம். வளமான அல்லது மோசமான எதிர்காலத்துக்கான வாசலே வாலிபம் தான்.

வாலிப வயது நிகழ்வுகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியாக அமைந்து வாழ்க்கை முழுவதுக்கும் சுவையாக அசைப்போடும்படியான நிகழ்வுகளாக அமைகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் மறக்கமுடியாத ஒரு சம்பவம் அவன் வாலிபப் பருவத்தில் கட்டாயம் நிகழ்ந்திருக்கக் கூடும். அது முதல் காதலாகவோ, நட்புவட்டமாகவோ, மறக்கமுடியாத அனுபவமாகவோ அல்லது வேறு ஏதாவது கந்தாயமாகவோ இருக்கக் கூடும். அதுமாதிரியான மறக்க முடியாத சம்பவம் ஒன்றினை நினைவுகூர்கிறேன்.

நம்ம ஹீரோவுக்கு அப்ப இருபது வயசு. கட்டிளம் காளை என்று சொல்லமுடியாத டொக்கான, ரொம்ப ஒல்லியான உருவம் (கிட்டத்தட்ட துள்ளுவதோ இளமை தனுஷ் மாதிரி). ஹீரோ தேனாம்பேட்டை எல்டாம்ஸ் ரோட்டில் ஒரு சின்ன கம்பெனியில் வேலை பார்க்கிறார். தினமும் காலை 8.30 மணிக்கு மடிப்பாக்கம் பேருந்து நிலையத்தில் 45E பேருந்துக்காக காத்திருப்பார். 45E பேருந்துக்கு ஒரு ஸ்பெஷாலிட்டி உண்டு. அந்தப் பேருந்து குருநானக் கல்லூரி, செல்லம்மாள் மகளிர் கல்லூரி, நந்தனம் கலைக்கல்லூரி, எஸ்.ஐ.ஈ.டி மகளிர் கல்லூரி, ராணிமேரிக் கல்லூரி ஆகியவற்றைக் கடந்து மாநிலக்கல்லூரி வரை செல்லும். எட்டரை மணிக்கு பேருந்தில் வரும் பயணிகள் எந்த ஏஜ்குரூப்பில் இருப்பார்கள் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

சில நாட்களுக்கு சுவாரஸ்யமில்லாமல் பேருந்தில் சென்று கொண்டிருந்தவருக்கு திடீரென வாழ்க்கையில் பேருந்து வாயிலாக வசந்தம் தோன்றியது. அந்த வசந்தமும் அதே பேருந்து நிறுத்தத்தில் நம்ம ஹீரோவோடு பயணித்து எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரிக்கு சென்று வந்தது. சிம்ரனைப் போல பிடித்தால் ஒடிந்துவிடுமோ என்ற இடை. ரோஜா மலருக்கு சவால் விடும் நிறம். குயில் குரலையும் விட இனிதான குரல். சொல்லவும் வேணுமா? ஹீரோவுக்கு ஆட்டோமேட்டிக்காக காதல் பொத்துக்கொண்டு வந்துவிட்டது.

சரியாக இன் செய்யாத கசங்கிய சட்டை, பிய்ந்துப் போன ஷூ என்று இருந்தவர் சில நாட்களில் ஆளே மாறிவிட்டார். ஏதோ கலெக்டர் உத்யோகத்துக்குப் போவது கணக்காக பீட்டர் இங்கிலாந்து சட்டை, உட்லேண்ட்ஸ் ஷூ, செண்ட் என்று அமர்க்களப்படுத்தத் தொடங்கினார். தினமும் காலையில் ஹீரோயினைப் பார்த்ததுமே வேண்டுமென்றே கையில் வைத்திருக்கும் தம்மை கீழே போட்டு மிதித்து விட்டு லைட்டாக ஒரு ரொமாண்டிக் ஸ்மைல் செய்வார் (இன்ஸ்பிரஸ் பண்ணுகிறாராம்). ஹீரோயினும் வேறுவழியில்லாமல் நம்மைப் பார்த்து ஒருத்தன் சிரித்துத் தொலைக்கிறானே என்று போனால் போகிறதென்று ஒரு ஸ்மைல் விடுவார். இதுபோதாதா ஹீரோவுக்கு கனவில் தொடர்ந்து டூயட் பாட ஆரம்பித்துவிட்டார்.

இப்படியாக மெல்லிய காதல்(?) அவர்களுக்குள் அரும்பிக் கொண்டிருந்தது. ஹீரோவைப் பார்த்துக் கொண்டே இருக்க வசதியாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹீரோயின் பேருந்தின் பின்வாசலுக்கு அருகில் இருக்கும் சீட்டில் அமரத் தொடங்கினார். அவரைப் போலவே நிறைய ஜூலியட்கள் அந்த ஏரியாவை ஆக்கிரமிக்கத் தொடங்கியிருந்தார்கள். வேறு வழியில்லாத ரோமியோக்கள் பேருந்து காலியாக இருந்தாலும் கூட புட்போர்டில் தொங்கியப் படியே பயணம் செய்யும் நிலை.

அன்று சூரியன் விரைவாக மலர்ந்த காலைப் பொழுது. அவசர அவசரமாக நம் ஹீரோ எழுந்து ஒரு வெள்ளைச் சட்டையை அயர்ன் செய்து, ஷூவுக்கு பாலிஸ் போட்டு பேக்கை எடுத்துக் கொண்டு பேருந்து நிறுத்தத்துக்கு ஓடுகிறார். என்ன ஒரு இன்ப அதிர்ச்சி! அன்று ஹீரோயின் ஹீரோவுக்கு மிகப்பிடித்தமான கறுப்புக் கலர் புடவையை சற்று லோ-ஹிப்பில் அணிந்து வந்திருந்தார். ஹீரோயினை சேலையில் பார்த்தது ஹீரோவுக்கு அதுவே முதல் முறை. Half அடித்தது போல ஒருமாதிரியான போதை ஹீரோவுக்கு வந்து தொலைத்தது.

தன் கடமையில் சற்றும் மனம்தளராத விக்கிரமாதித்தனின் வேதாளம் மாதிரி 45E பேருந்து வந்தது. ஹீரோயின் மேலே ஏறுகிறார். வழக்கமான சீட்டில் யாரோ அமர்ந்திருக்க சீட்டுக்கு முன் இருந்த கேப்பில் ஹீரோயின் நின்றுக் கொள்கிறார். வழக்கம்போல ஹீரோ புட்போர்டில் தொங்கியவாறே ஹீரோயினை லுக்விட்டு வருகிறார். ஹீரோவுக்கும், ஹீரோயினுக்கும் அரை அடி இடைவெளி கூட இல்லை. பேருந்திலோ அன்று செம கூட்டம். அல்லக்கைகள் ஹீரோவையும், ஹீரோயினையும் இணைத்து ஜோக்கடிக்க இருவரும் நாணத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்து அவ்வப்போது சிரித்துக் கொள்கிறார்கள்.

பேருந்து சுமார் 40 கி.மீ வேகத்தில் பயணிக்கிறது. வேளச்சேரியைப் பேருந்து தாண்டிய நிலையில் ஹீரோவுக்குப் பிடித்தது சனி. சன்னலில் தொங்கிக் கொண்டுவந்தவரின் கையை மேலே இருந்தவன் எவனோ லைட்டாக தட்டி விட ஒத்தைக் கையில் பயணிக்கிறார். காலைநேரத்து கசகசப்பு வியர்வையில் அந்தக் கையும் பிடியை விட்டு மெதுவாக நழுவுகிறது. மேலே இருந்தவன் கொஞ்சம் பேலன்ஸ் தவறி ஹீரோவின் மீது சாய... அய்யோ?

மேலே சாய்ந்தவனும், ஹீரோவும் நடுரோட்டில் விழுகிறார்கள். மல்லாந்து விழுந்த ஹீரோ அந்த நொடியில் ஹீரோயினின் கண்ணில் தெரிந்த கலவரத்தைப் பதிவு செய்துக் கொண்டே மண்டை உடைந்து மயக்க நிலைக்குப் போகிறார். மல்லாந்து விழுந்ததில் மண்டையில் கூரான கல் ஒன்று தேய்க்க லைட்டாக தலையை ஆட்டியதால் காயம் மின்னல் வடிவத்தில் வேறு விழுந்து தொலைத்து விட்டது. ஸ்டிச் செய்தும் இரத்தம் நிற்காத நிலை.

அடுத்த ஒருவாரத்துக்கு மண்டையில் கட்டுடன் சோகமாக வளராத தாடியை வருடிக்கொண்டு வருத்தமாக ஹீரோ காட்சியளித்தார். மண்டையில் அடிபட்டவுடன் சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் உதவுவதற்கு பதிலாக "அப்பன் ஆத்தா கஷ்டப்பட்டு படிக்கவெச்சா, இதுங்க பாட்டுக்கு புட்போர்டுல தொங்கி உசுரை விடுதுங்க" என்று திட்டித் தீர்த்தது கூட அவருக்கு கவலையில்லை. அடிபட்டு வீட்டுக்கு வந்தவுடன் அப்பா சுளுக்கெடுத்தது கூட அவருக்கு கவலை அளிக்கவில்லை. ஊசி போட வரும்போது வீரமாக ஆர்ம்ஸை காட்டும்போது பட்டக்ஸில் தான் போடுவேன் என்று நர்ஸ் கேவலப்படுத்தியது கூட அவருக்கு கவலை அளிக்கவில்லை. பிகர்கள் எதிரில் கீழே விழுந்துவிட்டோமே என்ற அதிமுக்கிய கவலை தான் அவரை வாட்டி எடுத்தது. எந்த மூஞ்சியை வெச்சிக்கிட்டு 45E பக்கம் போவோம் என்று மனதுக்குள் அழுது புலம்பினார்.

ஒரு வாரத்தில் நிலைமை சகஜமாகிவிட்டாலும் கூட மானம் போய்விட்டதே (ஹீரோ கவரிமான் ஜாதியாக்கும்) என்பதால் 45Eயை விட்டு விட்டு F51க்கு மாறிவிட்டார். புது பஸ், புது ஹீரோயின் என்று அவர் வாழ்க்கை திசை திரும்பிவிட்டது. ரோமியோ, ஜூலியட்டின் அமரத்துவ லெவலுக்கு வளரவேண்டிய அவர்களது காதல் பஸ் புட்போர்டினால் காமெடியாகி விட்டது.

ஹீரோ தான் இந்தப் பதிவை எழுதிக் கொண்டிருக்கும் 2007 ஜனவரிமாத அட்லஸ் வாலிபர். ஹீரோயின் எங்கிருக்கிறாரோ எப்படியிருக்கிறாரோ தெரியவில்லை. அந்த சம்பவத்துக்குப் பின் ஹீரோயினை அவர் பார்த்தது கூட இல்லை. நினைவுகள் மட்டுமே மிச்சம் :-(

அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

19 comments:

வாலிஹரன் said...

டெஸ்ட் மேசேஜ் :-)

Anonymous said...

intha snap ungalodatha :O

Mohamed Ismail said...

லக்கிலுக் உங்களுக்கு எனது அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள் - நாகூர் இஸ்மாயில்

Anonymous said...

வாலிபரே வருக வருக!!! சில பல காரணங்களால் நான் பாதியிலே அப்பீட் ஆக வேண்டியதா போச்சு. நீங்க கலக்குங்க...

அரை பிளேடு said...

ஆட்டோகிராப் நல்லாஇருக்கு.

45E போனா இன்னா, அடுத்து வருது F51.

வாழ்க்கையில நெறய பஸ் வரும் போகும். கடைசில ஒரு பஸ் கல்யாணம் அப்படின்ற பேருல நம்ம மேல ஏறிடும்.

அதுதாம்பா வாழ்க்கை.

SP.VR.சுப்பையா said...

லக்கியண்ணே!
சும்மா கலக்குங்க அண்ணே!
"வருத்தப் படாத" என்ற அடைச்சொல் வருகிறமாதிரி எந்த சங்கம் இருந்தாலும் சேர்ந்து கொள்ளுங்கள்.
எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு!

கைப்புள்ள said...

உங்களோட அட்லாஸ் மாசத்தை சொந்த அனுபவத்தோட ஆரம்பிச்சி வச்சிருக்கீங்க. 45E எனக்கும் பரிச்சயமான பஸ் தான். ஸ்கூல் படிக்கும் போது திருவல்லிக்கேணிலேருந்து வி.எம்.தெரு வரைக்கும் அந்த பஸ்ல போயிருக்கேன். உங்க அனுபவம் மூலமா நீங்க ஒரு வருத்தப்படாத வாலிபன்னு தெரிஞ்சிக்கிட்டேன். இந்த மாசத்துல கலக்கி எடுப்பீங்கன்னு எதிர்பாக்கறோம். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
:)

karthik said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

சேதுக்கரசி said...

சூப்பரா எழுதறீங்க லக்கியாரே. 45E-னு ஆரம்பிச்சப்பவே நெனச்சேன் இது ஏதோ சொந்தக்கதை மாதிரி இருக்கேன்னு! ஆனா ஒரு பஸ் போனா இன்னொண்ணு வரும்னு அருமையான பாடத்தையாவது கத்துக் கொடுத்திருக்கே இந்த அனுபவம்.. அதுவரைக்கும் ஓகே!

Anonymous said...

என்ன லக்கி, திரும்பி ஒரு நாள் 45E இல் போய், அனுதாபப் பார்வை, "நலம் தானா?!"ன்னு ஆகி.. நெஜ ஹீரோவா ஆகி இருக்க வேண்டியதை இப்படி F51க்கு மாறி கெடுத்துட்டீங்களே! :)

சரி, F51 எங்கேர்ந்து எங்க போவுது? கீழ்க்கட்டளை - ப்ராட்வே?

லக்கிலுக் said...

நன்றி நண்பர் மற்றும் நண்பிகளே!

F51ல் நம் ஹீரோவின் செகண்ட் இன்னிங்ஸ் நன்றாகவே நடந்தது. ஆனாலும் ஓபனிங் நல்லா இருந்தும் பினிஷிங் வழக்கம்போல சொதப்பிடுச்சி :-(

அகில உலக ஷகிலா ரசிகர் மன்றம் said...

//"வாலிபம்" என்ற சொல்லினைக் கேட்கும் போது பலருக்கு பல விதமான எண்ணங்கள் தோன்றும். "கெயிட்டி", "ஜோதி" தியேட்டர் ரசிகர்கள் இந்த வார்த்தையைக் கேட்டதும் புரிந்துகொள்வது வேறு மாதிரி.//

சரி. நல்லாவே புரிஞ்சிக்கிட்டோம்.

Anonymous said...

'இது வாலிப வயசு'

தல சொன்ன டையலாக்க செயல்முறைல காட்டிட்ட வால்...

லக்கிலுக் said...

//அகில உலக ஷகிலா ரசிகர் மன்றம் said…///


:-)))))))))))))) lol

இராம் said...

அ.வா,

ஆரம்பமே அசத்தல்....

ம் நடத்துங்க...... :-)))))

Anonymous said...

'இது வாலிப வயசு'
:-)
அருமையான பதிவு

Anonymous said...

அய்யோ அய்யோ ...அனுதாபத்தை வைத்து ஜெயிக்கவேண்டியத அனியாயமா கெடுத்துபுடியலே...அந்த கைபுள்ள sorry அந்த புள்ள கொடுத்துவச்சது(அவ்ளோதான்) - குமார் தொல்காப்பியம்

Anonymous said...

ஒரு அருமையான காதல் காவியம் இப்படி அரைக்குறை பிரசவமாக...... இல்லை, இல்லை, ஆரம்பத்திலேயே கலைந்து விட்டதே...... படித்த எனக்கே இப்படீன்னா, எழுதின லக்கிக்கு எப்படி இருந்திருக்கும்?

என்னுடைய பல கதைகள் இப்படித்தான் 23சி, 27டி, 29சி 22 என முற்றுப்பெறாமலே..........

அது ஒரு கனாக்காலம்.

செந்தழலார் கொலைப்படை said...

எங்கள் தங்கத் தலைவருக்கும் 47Dயில் இதே மாதிரி அனுபவம் ஏற்பட்டதுண்டு