Saturday, October 21, 2006

தீவாளி!

ஒரு மாதத்துக்கு முன்னாலேயே கவுண்ட் டவுண் தொடங்கிவிடும். சனி ஞாயிறை ஒட்டி வந்தால் திங்கள்கிழமை வயத்துவலி வந்து பள்ளிக்கு லீவு போட திட்டம் ரெடியாக இருக்கும். முந்தின வியாழக் கிழமையே எனக்கு அடுத்த வாரம் வயத்துவலி வரும், லீவு வேண்டும் என்று லெட்டரைக் கொடுக்க கை பரபரக்கும். ஜிகிடி அறியாப் பருவத்தில் ட்ரஸில் அவ்வளவு மோகம் இருந்ததில்லை. ஒருதரம் பெண்களின் பாவடை துணி டிசைன் பிடித்து விட அதில் தான் ட்ராயர் வேண்டும் என்று அடம் பிடித்து தைத்துப் போட்டுக்கொண்டது கூட நினைவில் இருக்கிறது. நான் விட்ட உதாரில் என்னைப் பார்த்து இன்னும் நாலு வானரங்கள் வீட்டில் அடம் பிடித்து சூடு போட்டுக்கொள்ள அந்த தீபாவளிக்கு நாங்கள் பாவாடை சாமியார்களாக உலா வந்ததைப் பார்த்து ஊரில் வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சிரித்தார்கள். இதையே அப்புறம் ஒரு பத்து வருஷம் கழித்து பிரிண்டட் ஷர்ட்ஸ் என்று மெட்ராஸில் பேஷனாக்கிவிட்டார்கள். (நாங்க யாரு தீர்க்க தரிசி பரம்பரைல்ல..) ட்ரஸ்ஸை விட அதன் கூட வரும் துக்கடாவில் தான் கவனம் இருக்கும். ஜிகு ஜிகு பெல்ட், ஊதா கூலிங் கிளாஸ், தொப்பி, செருப்பு என்று சுரேஷ், சீனி, வாசு, மணி என்று எல்லோரோடும் ரவுண்டு வரும் போது பந்தாவா இருக்கும்ல. ஊதா கூலிங் கிளாஸைப் போட்டுக்கொண்டு காலை நாலு மணிக்கு லெட்சுமி வெடியை பத்த வைக்கிறேன்னு வெடி அல்ரெடி பற்றியது தெரியாமல் குத்த வைத்துக் கொண்டு பத்தியை வைத்துக் கொண்டு தடவு தடவுன்னு தடவியதில், வெடி வெடித்து அடுத்த தீவாளியிலிருந்து கூலிங் க்ளாஸுக்கு வேட்டு வைக்கப்பட்டது. நல்லவேளை அந்த தரம் எனக்கு எதுவும் சேதாரம் இல்லை.

தீபாவளியை ஒட்டி சினிமா ரிலீஸ் தவிர எங்கள் வட்டத்தில் பேசப்படும் இன்னொரு முக்கியமான டாபிக் யார் வீட்டில் எவ்வளவு ரூபாய்க்கு வெடி வாங்கியிருக்கிறார்கள் என்பது. நூறு ரூபாய்க்கு வெடி வாங்குபவர்கள் எல்லாரும் வி.ஐ.பி ஸ்டேடஸ். என்ன தான் அண்டப் புளுகு புளுகினாலும் வீட்டு வாசலில் வெடிக் குப்பை இருந்தால் தான் நம்பப்படும். "நல்ல நாள் அதுவுமா ஏண்டா தெருவெல்லாம் பெருக்கற?" அம்மா எவ்வளவு புலம்பினாலும் யாரும் பார்க்காத போது அடுத்த வீட்டுக் குப்பையையெல்லாம் பெருக்கி நம்வீட்டில் போட்டால் தான் பந்தா விடுவதற்கு நிம்மதியாக இருக்கும். அணுகுண்டையெல்லாம் நான் ஒத்தக் கையாலயே பத்த வைத்து போடுவேன் தெரியுமான்னு பத்தவைத்து எங்கயாவது போட்டு "வானரம் அவதாரம் எடுத்து அப்படியே வந்திருக்கு"ன்னு நாலு பேர் புகழும் போது எவ்வளவு ஆனந்தம். இந்த மாதிரி வயத்தெரிச்சல் சில சமயம் அதிகமாகி லெட்சுமி வெடி கையிலேயே வெடித்து, இதெல்ல்லாம் அண்ணனுக்கு தூசு என்று உதார் விட்டு ஒருத்தரும் பார்க்காத போது ஓரமாய் போய் தண்ணீரில் கைவிட்டு "அவ்வ்வ்வ்வ்வ்" என்று அரற்றி, அடிக்கடி வாயில் விரலை வைத்து சூப்பி பக்கோடா காதர் மாதிரி முழித்த அனுபவமும் உண்டு. ராக்கெட்டைப் படுக்கவைத்து தான் விடுவோம்ன்னு தெருவில் வானர மாநாட்டில் ஒரு கும்பலாக தீர்மானம் எடுத்து விட்டு அது ரோட்டில் போவோர் வருவோரை துரத்த...அடுத்த கட்டமாக அவர்கள் எங்களைத் துரத்த..இதெல்லாம் இல்லாத தீபாவளி தீபாவளியா என்று இருக்கிறது.

மாடு விரட்டி கணேசா...எங்க வீட்டுல இந்த தரம் ஐந்நூறு ரூபாய்க்கு வெடி வாங்கியிருக்குன்னு கடை பரப்பி பந்தா விட்டுக்கொண்டிருக்க.."எங்க ஒரு தரைச் சக்கிரத்தைப் பத்த வைத்துக் காட்டு பார்ப்போம்"ன்னு ஒரு வானரம் உசுப்பேத்திவிட...அவனும் அங்கேயே பத்த வைத்து அது சுத்தி சுத்தி எல்லாவெடியையும் பத்த வைத்து விட, அவர்கள் வீடு வாசலறையில் இரண்டு நாள் முன்னாடியே தீபாவளி வந்து விட - அது என்னம்மோ அவ அப்பாவுக்கு ரொம்ப பிடிக்காமல் அவன் முதுகிலேயே தீபாவளி கொண்டாடிவிட்டார்.

காலை இரண்டு மணிக்கு இந்தப்பக்கம் ஒரு அனுகுண்டை வைத்து தெருவில் எல்லாரையும் எழுப்பினால் அந்தப் பக்கம் இன்னொரு வானரம் பதில் அனுகுண்டைவைத்து சங்கேத மொழி பேசும் காலம் எல்லாம் மலையேறிப் போச்சு போல இருக்கு. ஒரு மணி நேரம் வெடி போட்டுவிட்டு டி.வி. பொட்டி முன்னால் மஙக்ள இசை, நடிகர்கள் வாழ்த்து, நடிகைகள் பேட்டி, புதுப்பாடல், பட்டிமன்றம், உலகத் தொலைகாட்சிகளில் முதல் முறையாக ஒளிபரப்பப் படும் படம் என்று தீபாவளி கொண்டாடும் முறையே மாறிவிட்டது.

குறையாகச் சொல்லவில்லை...மாற்றுங்களைய்யா...டீ.வி. பொட்டியிலிருந்து வெளி வந்து சந்தோஷமாக இந்த தீபாவளியைக் கொண்டாடுவோம்...குடும்பத்தோடு தெருவிற்கு வாங்கள்..(தீபாவளிக்கு கொண்டாடுவதற்குச் சொன்னேன்பா) மக்களோடு மக்களாக சந்தோஷமாக கொண்டாடுவோம். சாலமன் பாப்பையாவும், நமீதாவும் எங்கேயும் போய்விட மாட்டார்கள்.. நாம் வெளியில் வந்து கொண்டாடினால் இன்னும் நாலு பேர் வருவார்கள்...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !!

15 comments:

கதிர் said...

டுபுக்கு,

கலக்கல் வாழ்த்து சொல்லிட்டிங்க! அப்படியே பழைய நினைவுகள கிளப்பி விட்டிங்களே!

அட்லாஸ் வாலிபருக்கும் அவரது குடும்பத்திற்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.

கதிர் said...

கலக்கல் வாழ்த்து சொல்லிட்டிங்க டுபுக்கு!

அட்லாஸ் வாலிபருக்கும் அட்லாஸ் குடும்பத்திற்கும் தீபாவளி வாழ்த்துக்கள்!!

Nakkiran said...

மீண்டும் அந்த நாட்கள் வாராதா என ஏங்க வைத்துவிட்டீர்.

இலவசக்கொத்தனார் said...

டுபுக்கு, உமக்கு தங்கமணிக்கு, உங்க ஜூனியர்களுக்கு எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

ஆனாலும் இப்படி அட்லாஸ் பதிவுல செண்டியா போடறது எல்லாம் டூமச். உடனே ஒரு கலாய்த்தல் பதிவு போடுமய்யா.

Prasanna Parameswaran said...

நல்லா எழுதியிருக்கீங்க! உங்கள் பதிவை படித்துவிட்டு சிரிப்பு வேட்டை விட்டு, அதோடு என் அகக்கண்ணையும் திறந்து விட்டீர்கள்!

ALIF AHAMED said...

தீபாவளி வாழ்த்துக்கள்.


(ஒரு டவுட்டு பிகர பத்தி ஒரு வார்த்தை எழுதலையெ பதிவு போடும் போது தங்கமனி பக்கத்தில் இருந்தாங்கலா..)

கைப்புள்ள said...

//ஜிகிடி அறியாப் பருவத்தில் ட்ரஸில் அவ்வளவு மோகம் இருந்ததில்லை. ஒருதரம் பெண்களின் பாவடை துணி டிசைன் பிடித்து விட அதில் தான் ட்ராயர் வேண்டும் என்று அடம் பிடித்து தைத்துப் போட்டுக்கொண்டது கூட நினைவில் இருக்கிறது. நான் விட்ட உதாரில் என்னைப் பார்த்து இன்னும் நாலு வானரங்கள் வீட்டில் அடம் பிடித்து சூடு போட்டுக்கொள்ள அந்த தீபாவளிக்கு நாங்கள் பாவாடை சாமியார்களாக உலா வந்ததைப் பார்த்து ஊரில் வாயையும் அதையும் பொத்திக் கொண்டு சிரித்தார்கள்//

கலக்கல் பதிவு டுபுக்கு சார். வாய்விட்டு சிரித்தேன். சிறு வயது தீபாவளி அனுபவங்களை அசை போட வைத்தது உங்கள் பதிவு. இது போலவே சின்ன வயசில் போலிஸ் டிரெஸ் தான் வேணும்னு கேட்டு அடம்பிடிச்சது எல்லாம் உண்டு. ஒரு தரம் கூட அதை வாங்கி குடுக்கலைங்கறது வேற கதை :(

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Anonymous said...

Wish you all and your family a very happy Deepavali.


-Unmai

sonypsp said...

Hi Dubukku,

Deepavali wishes for all...

"மாடு விரட்டி கணேசா...எங்க வீட்டுல இந்த தரம் ஐந்நூறு ரூபாய்க்கு வெடி வாங்கியிருக்குன்னு கடை பரப்பி பந்தா விட்டுக்கொண்டிருக்க.."எங்க ஒரு தரைச் சக்கிரத்தைப் பத்த வைத்துக் காட்டு பார்ப்போம்"ன்னு ஒரு வானரம் உசுப்பேத்திவிட...அவனும் அங்கேயே பத்த வைத்து அது சுத்தி சுத்தி எல்லாவெடியையும் பத்த வைத்து விட, அவர்கள் வீடு வாசலறையில் இரண்டு நாள் முன்னாடியே தீபாவளி வந்து விட - அது என்னம்மோ அவ அப்பாவுக்கு ரொம்ப பிடிக்காமல் அவன் முதுகிலேயே தீபாவளி கொண்டாடிவிட்டார். "

That reminds me a flashback in early day's Deepavali day back in Sivakasi.... The open space next to our home called 'Kadavu' - the 1 1/2 feet freespace, where we used to gather and tryout the 'crackers'. One day one vanaram tried a rocket and it went it to next door neighbour Mama's home, where he was showing the fireworks gift pack (ooosi than) and it lit the whole pack.... Mama virku 'Thalai Deepavali' thaan...

'Engalukko Odampu poora Deepavali'...

:))
Raam Kumar

Anonymous said...

vazhthugal

நாமக்கல் சிபி said...

வழக்கம் போல கலக்கிட்டீங்க :-)

பழசெல்லாம் ஞாபகம் வந்திடுச்சு...

//இதையே அப்புறம் ஒரு பத்து வருஷம் கழித்து பிரிண்டட் ஷர்ட்ஸ் என்று மெட்ராஸில் பேஷனாக்கிவிட்டார்கள்//
இந்த பிரிண்டட் ஷர்ட் வந்த புதிதில் வாங்க கடை கடையாக அலைந்தோம்... ஆனால் அப்போழுது அது அதிகமாக வரவில்லை... பிறகு காலேஜ் ஃபங்ஷனுக்கு போட்டு போய் HOD கிட்ட நல்லா திட்டு வாங்கினோம் :)

Geetha Sambasivam said...

நானும் தினம் தினம் வந்து பார்க்கிறேன். ப்ளாக்கைத் திறந்தாலே பாதிக்கு மேலே வெறும் வெள்ளையாத் தான் வருது. இன்னிக்கும் "ஒரு மாதத்துக்கு முன்னால்" ங்கிறதுலே இருந்துதான் படிக்க முடியுது. இது என்னங்க இப்படி இருக்கு? தலைவி வரான்னா எல்லாம் ஒழுங்கா இருக்க வேண்டாமா? முதல்லே பக்கத்தைச் சரியா எல்லாம் படிக்கிறமாதிரி ஒழுங்கா வைங்க. வர வர தலைவி யாரு, என்ன என்ன செஞ்சிருக்காங்க சங்கத்துக்குங்கறதுக்கெல்லாம் யாருக்கும் பயமே இல்லாமல் போச்சு. :D
The pages are not in a proper condition. It is done with errors only. Kindly see into it. I am facing this problem for the last one week.
Geetha Sambasivam.

Unknown said...

அட என்ன டுபுக்கு நீங்க வாலிப வயசுன்னு சொல்லி இங்கிட்டு கூப்பிட்டு பதிவுப் போடச் சொன்னா மலரும் நினைவுகளாச் சொல்லி சங்கத்துக் கௌரவத்துக்குப் பங்கம் வைக்கிறீங்க....:)))

எப்படியோ தீவாளி அன்னிக்கு சிவாஜி (பிரபு அவங்க அப்பா) எம்.சீ.ஆர், பட ரீலிஸ்க்குப் போனக் கதையைச் சொல்லாம விட்டீங்களே...

யப்பா டுபுக்குக்கு ஆப்பு அடிச்சுட்டோம் இல்ல....

Unknown said...

//சங்கத்துக்குங்கறதுக்கெல்லாம் யாருக்கும் பயமே இல்லாமல் போச்சு. :D//

பயமா எஙகளுக்கா.... கீதாக்கா நாங்க எல்லாம் வாலிப வயசு... சோ டோன்ட் டிஸ்டர்ப்

நாகை சிவா said...

//"வானரம் அவதாரம் எடுத்து அப்படியே வந்திருக்கு"ன்னு நாலு பேர் புகழும் போது எவ்வளவு ஆனந்தம்.//

ஆமாம் இது எல்லாம் கேட்காட்டி அப்புறம் என்ன தீபாவளி.

போன வருசம் கூட நம்ம தெருவில் ஒருவர், உங்கள் எல்லாத்தையும் Sound Polluation இன்னும் என்ன என்னமோ கேஸ் பெயர் எல்லாம் சொல்லி மிரட்டி பாத்துச்சு.... :)))