Tuesday, November 2, 2010

எனக்கு அவசரமா காமடி போஸ்ட்டுக்கு மேட்டர் வேணுமே!!! எங்க கிடைக்கும்??

எனக்கு இப்போ உடனடியாக எதுனா காமடி பதிவு எழுதியாக வேண்டிய கட்டாயம். மனதில் எதை பார்த்தாலும் காமடி தோணமாட்டேன்னு அடம். எல்லாமே சீரியஸ் விஷயங்களாகவே மாறி விட்டது. சரி, நம்ம ராதா கிட்டே கொஞ்ச நேரம் பேசினா எதுனா மேட்டர் கிடைக்கும் என நினைத்து நேத்து அவன் வீட்டுக்கு போனேன். பார்த்தவுடனே கேட்டான்." டேய் மெயில் ஐடி இருப்பவங்களுக்கு எம் எல் ஏ போஸ்ட் தர்ராங்களாமே உங்க கட்சில?" - இப்படித்தான் ராதா எதுவா இருந்தாலும் ஏடாகூடமா புரிஞ்சுப்பான். இது என்னவோ ரேஷன் கார்டு இருப்பவங்க எல்லாருக்கும் இலவச டி வி என்பது போல புரிஞ்சுகிட்டானே மகாபாவின்னு நினைச்சுகிட்டு "இல்லடா ராதா, அப்படி பார்த்தா எனக்கு ஒரு மாமாங்கம் முன்னமே எம் எல் ஏ பதவி வந்து மினிஸ்டர் ஆகி என்னன்னவோ ஆகியிருப்பேனே, எல் எல் ஏக்கு எல்லாம் மெயில் ஐடி தர்ராங்களாம்"ன்னு கோவமா விளக்கம் சொல்லிட்டு அவனிடம் இதுக்கு மேலே நின்னா பிரஷர் தான் ஏறுமே தவிர மேட்டர் எதும் சிக்காது என நினைத்து கொண்டிருக்கும் போதே சீமாச்சு அண்ணா போன்.


"என்ன ராஜா ரயில்வே ஸ்டேஷன் பக்கம் போயிட்டு வருவுமா, மாமனாரை சதாப்தில ஏத்தி அனுப்பிட்டு வருவுமே" என போனிய போது தலையாட்டி கிளம்பினேன். ரயில்வே நிலைய வாசலில் இருந்தே எல்லே ராம் அண்ணாச்சியின் பதிவை எல்லாம் அசை போட்டு கொண்டே உள்ளே போய் நின்ன போது சோழன் எக்ஸ்பிரஸ் வந்து நிற்க என் கூட படிச்ச ஒரு துரோகி மோகன்சந்த் மஞ்சள் பை தூக்கி கிட்டு இறங்கி போக நான் முகத்தை திருப்பி கொண்டேன். அவனுக்கு எனக்கும் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் முதலே செத்தா வாழ்ந்தா இல்லைன்னு ஆகிப்போச்சு. நடந்த சம்பவத்தை சொன்னா நீங்களும் கூட மோகன்சந்தை ஊரை விட்டு ஒத்துக்கி வைத்து அன்னம் தண்ணி ஆகாரம் கொடுக்காம, அவன் வீட்டில் கை நனைக்காமல் இருக்க வாய்ப்பு இருக்கு.

இப்போ மாதிரி இல்லை அப்போ. ஒருவனுக்கு மதிப்பே அவனவன் படிச்ச படிப்பிலோ, வாங்கும் ரேங்கிலோ, சொத்துபத்து வசதியிலோ இல்லை. வரக்கூடைய பொங்கல் வாழ்த்து அட்டையின் எண்ணிக்கை தான் எங்கள் தரநிர்ணய அளவு கோலாக இருந்த காலம். நானும் சிரமப்பட்டு இந்த உலகமே மெச்சும் அளவு "பெரியாஆளாக" வேண்டி மாறன் பிரதர்ஸ் மாதிரி கஷ்ட்டப்பட்டு உழைத்த காலம். என் வீட்டு விலாசத்தை பிட்டு பிட்டா பேப்பரில் எழுதி "எனக்கு நீ பொங்கல் வாழ்த்து அனுப்பினால் நான் உனக்கு அனுப்புவேன்" என வியாபார ஒப்பந்தம் எல்லாம் போட்டு வினியோகம் செய்து கொண்டிருந்தேன். இதோ மஞ்சள் பை மைனராக போகிரானே அந்த துரோகிக்கும் வினியோகம் செய்தேன். ஒருவேளை என் வகுப்பில் இருந்த நாற்பது பேரும் எனக்கு வாழ்த்து அட்டை அனுப்பிவிட்டால் பதிலுக்கு நன்றி கார்டு மொய் வைக்கும் அளவு வசதி இல்லை எனினும் அதிக பின்னூட்டம் வந்தால் "வருகை தந்த அனைவருக்கும் நன்றி"ன்னு கடைசியா ஒரு பின்னூட்டம் போட்டு ஓடிடுவோமே அது போல "மாணவர்கள், 6.F, "ன்னு போட்டு ஒரு கார்டு வாங்கி ஒட்டிடலாம் என நினைத்து கொண்டிருந்தேன்.

எந்திரன் விளம்பரம் மாதிரி எவனையும் விட்டுவிடாமல் நியாபகப்"படுத்தி" கொண்டும் இருந்தேன். பாய் இசாக் முதல், பாதர் பையன் டேனியல் வரை எனக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பியும் இந்த காந்தி பெயரை வைத்து இருந்த காலிப்பய மாத்திரம் ஏமாத்தி விட்டான். இந்த துரோகத்தை எல்லா பொங்கலின் போதும் நினைத்து அழுகின்றேன். பொங்கலுக்கு பானை நியாபகம் வருதோ இல்லியோ இந்த பாழய்ப்போன மோகன்சந்த் நியாபகம் வந்து தொலைக்கிறான். நானோ காமடி பதிவுக்கு மேட்டர் தேடி அலையும் நேரத்தில் இவனா வந்து என் கண்ணில் மாட்டி தொலைய வேண்டும்??

விஷயத்தை ரயில்வே ஸ்டேஷனில் கேள்விப்பட்ட சீமாச்சு அண்ணா கொதித்து போனார். (போனீங்க தானே?) " விடு ராஜா விடு, இதோ என் மாமனார் சமீபமா 30 வருஷமா கேஸ் இல்லாம ஃப்ரீயா தான் இருக்காரு. உன் கேசை நடத்த சொல்லலாம்" என சொல்ல அதுக்கு கூட இருந்த சீமாச்சு அண்ணாவின் சகலர் " நீ வேற வாசன், நானே அவர் மேல கேஸ் போடலாம்னு இருக்கேன். வக்கீல் பொண்ணு தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்னு லட்சியமா இருந்தேன். மாமா இது வரை கோர்ட்டுக்கே போகாம மீண்டும் கோகிலா கமல் மாதிரியே இருக்கார். இதுக்காகவே நான் அவர் மேல கேஸ் போட போறேன்"ன்னு சொல்ல பாவம் மாமா ரொம்ப நொந்து போய் அவருக்கு வந்த போனில் " வந்துட்டேன் ஸ்டேஷனுக்கு வந்தாச்சு. சரியா நைன் தர்டிக்கு கோயம்ப்டூர்ல இருப்பேன். யா யா மாப்பிள்ளை எல்லாம் வந்திருக்கா ஸ்டேஷனுக்கு.. ஆக்சுவலி என்னை ரயில் ஏத்திவிடத்தான் வந்தா, ரயில் கிளம்ப இன்னும் அரை மணி இருக்கு. அது வரை எதுக்கு சும்மா இருப்பானேன்னு என் மானத்தை ரயில் ஏத்தி விட்டுண்டு இருக்கா" என சொல்லி கொண்டு இருந்தார்.

பாருங்க என் ராசிய! காமடி பதிவுக்கு மேட்டர் தேடினா நல்ல குடும்ப சண்டைக்கு மேட்டர் அமையுது. இதான் விதி. சரி மழை வருவது போல இருக்கு. வீட்டுக்கு போவோம். அட பிளாட்பாம் டிக்கெட் செக்கிங் வாசலில் நிற்பது நம்ம கவுதமன். அவனை தெரியுமா உங்களுக்கு. செட்டி தெருவாசி. நாங்க மூணாவது படிக்கும் போது அவனை கடத்திகிட்டு போயிட்டாங்க. ஒரு நாள் தேடியும் கிடைக்கலை. பின்னே அவனை யாரோ இதே ரயில்வே ஸ்டேஷனில் கண்டுபிடித்ததாக அப்ப ஸ்கூல் முழுக்க பேச்சு. நான் இதை சீமாச்சு அண்ணன் கிட்டே சொல்லிகிட்டே வந்தேன். "அண்ணே குழந்தைகளை கடத்தி போய் பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் தான் கடத்தி போனதாக அப்ப ஸ்கூல துண்டு முறுக்கி சார் எங்க கிட்ட சொல்லி யார் கிட்டயும் சாக்லெட் வாங்கி சாப்பிட கூடாதுன்னு சொன்னாரு. அதன் பின்ன நான் யார் கொடுத்தாலும் சாக்லெட் வாங்கி தின்பதில்லை. நீங்க வேணா அந்த பைவ்ஸ்டார் வாங்கி தாங்க. நான் திங்க மாட்டேன். ஹும் அவன் மாத்திரம் அன்னிக்கு தப்பி வரலைன்னா இந்நேரம் எதுனா ரயில்வே ஸ்டேஷனில் நின்னு கிட்டு கையேந்திகிட்டு இருந்திருப்பான்" என சொல்லி முடிக்கவும் நாங்க அவன் கிட்ட வருவதுக்கும் அவன் எங்க கிட்ட " சார் டிக்கெட்" என கேட்டு கையேந்தி நிற்கவும் சரியா இருந்துச்சு. அண்ணன் சொன்னாரு "ஆமாம், வாஸ்தவம் தான்"

வீட்டுக்கு வரும் போது நல்ல மழை. அடடா மழைடா அடை மழைடா என பாடி கொண்டே அபி அடை சாப்பிட்டு கொண்டு இருக்க நட்ராஜ் ஒரு கத்தை பேப்பர் வைத்து கொண்டு கப்பல் விட்டு கொண்டிருந்தான். அட அந்த பேப்பரை எல்லாம் எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே என நினைத்து பிரித்து பார்த்து ஒரே கத்தல். சுத்தமாக என் காமடி பதிவு எழுதும் மூட் போயே போச். எல்லாமே என் காதல் கடிதங்கள். ரயில்வே ஸ்டேஷன் போகும் முன்ன தான் டுபுக்குவின் "லவ்லெட்டர்" பதிவு படிச்சுட்டு காமடி எழுதினா இது போல தான்யா எழுதனும் என நினைத்து கொண்டே போன எனக்கு இப்போ என் லவ்லெட்டர் எல்லாம் கப்பல்லாக போவது கண்டு கோவம் கோவம் கோவமான கோவம். "யார்டா இதை உனக்கு கொடுத்தது" என கோவமாக கேட்டேன். "யாரும் கொடுக்கலை, நான் தான் எடுத்துகிட்டேன்" என சொன்னான். எடுத்த இடத்தை காட்டிய போது எனக்கு பக்குனு ஆகி போச்சு. அது என் ரேசர் கிட். "அய்யோ இது ஏன் என் ரேசர் கிட்க்கு போச்சுன்னு கத்தியபோது தான் அபிஅம்மா " நேத்து தான் நீங்க அந்த சோப் தடவ பேப்பர் இல்லைன்னு கத்தினீங்க, அதான் ஒரு கத்தை பேப்பர் அதிலே வச்சேன்" ------கிழிஞ்சுது இனி இந்த மூட்ல நான் காமடி போஸ்ட் போட்டு என்னத்த வாழும்.

ஒரு மனுஷனை இப்படி எல்லா விதத்திலும் கோவப்படுத்தினா எப்படி காமடி போஸ்ட் போடுவது......

டிஸ்கி: இதல்லாம் எதுக்கு சொல்றேன்னா, காமடி எழுதுவது என்பது நெம்ப கஷ்ட்டம். அதை படிப்பவங்களுக்கு தான் சிரிப்பே தவிர எழுதுறவன் நாக்கு தள்ளிடும். ஆனா நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சிங்கங்கள் இருக்கே அதல்லாம் சேர்ந்து மூணு வருஷத்துக்கு பின்னே நகைச்சுவை போட்டி வைக்க போறாங்களாம். சங்கத்தின் தானை தலவிதீ இளைய சிங்கம் விஜி நாளை ஒரு மாபெரும் அறிவிப்பு செய்ய போறாங்களாம். காத்து வாக்கில் சேதி வந்துச்சு காதுக்கு. மீதி விபரங்கள் எல்லாம் அங்க பார்த்துடுங்க. ரெடியாகுங்க போட்டிக்கு. வரும் டிசம்பர் மாதம் முழுக்க சங்கத்திலே நகைச்சுவை கொண்டாட்டம் இருக்குது. மீதி விபரம் தானை தலைவிதீ விஜி சிங்கம் சொல்லுமப்பா.. இப்போதைக்கு நான் வடைபெறுகிறேன். ஹாப்பி தீபா'வளி. சந்தோஷமா கொண்டாடுங்க.

10 comments:

R. Gopi said...

ஓ, இதுவே காமெடி கிடையாதா? அப்போ நாளைக்கு எழுதுறவங்க இத விடக் காமெடியா எழுதுவாங்களா? காத்திருக்கிறேன்.

Radhakrishnan said...

ஹா ஹா! கோவம் வரமாதிரி நடக்கிற விசயங்களையெல்லாம் காமெடியா எடுத்துக்கிரனும்னு நல்லாவே காமெடி பண்றீங்க அபிஅப்பா. :) இனிய தீபாவளி வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் said...

பதிவுலக சண்டைகளை வெச்சு ஒண்ணு தேத்துங்க

ராம்ஜி_யாஹூ said...

very long

ராம்ஜி_யாஹூ said...

very long

a said...

//
ஆக்சுவலி என்னை ரயில் ஏத்திவிடத்தான் வந்தா, ரயில் கிளம்ப இன்னும் அரை மணி இருக்கு. அது வரை எதுக்கு சும்மா இருப்பானேன்னு என் மானத்தை ரயில் ஏத்தி விட்டுண்டு இருக்கா
//
என்னத்த சொல்லுறது.......... ஒரு வயசான மனுசன...... ரயிலடியில வச்சி காமெடி பண்ணிரூக்கீங்க.....

சிட்டுக்குருவி said...

ஹா ஹா

அருமை அபிஅப்பா

:))

தருமி said...

//மினிஸ்டர் ஆகி என்னன்னவோ ஆகியிருப்பேனே//

அது என்ன - என்னன்னவோ ஆகியிருப்பேன் - அப்டின்னா என்னங்க? ஆனா கவனிச்சுக்குங்க...

கோவி.கண்ணன் said...

//ஆனா நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சிங்கங்கள் இருக்கே அதல்லாம் சேர்ந்து மூணு வருஷத்துக்கு பின்னே நகைச்சுவை போட்டி வைக்க போறாங்களாம். // வாலிபர் சங்கத்துல பெருசுங்களுக்கு என்ன வேலையோ ?

விஜி said...

கோபி உங்க லெவலுக்கு கஷ்டம் இருந்தாலும் ட்ரை பண்ரேன் :)