Wednesday, October 6, 2010

வ.வா.ச Vs சி.சி.க


இன்னும் சிறிது நேரத்தில் இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக, வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் சிரிக்காத சிடுமூஞ்சிகள் கழகம் ஆகியவற்றின் உறுப்பினர்கள் பங்குபெறும் ’சந்திப்போமா நிந்திப்போமா?’ நிகழ்ச்சி உங்களது அபிமான பெரியப்பா டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதைத் தொகுத்து வழங்கப்போகிறவர் "சிந்தனை சுனாமி" சுங்கச்சாவடி சுப்பாமணி!

சுப்பாமணி: வணக்கம் நேயர்களே! இன்று நம்முடன் உரையாட வ.வா.சங்கத்தின் சார்பாக இடைக்கால செயலாளர் சேட்டைக்காரன் அவர்களும், சி.சி.க-வின் நிரந்தரச் செயலாளர் முந்திரிக்கொட்டை அவர்களும் நம்மிடையே வந்திருக்கிறார்கள். இருவருக்கும் வணக்கங்கள்!

சே.கா: வணக்கம்! ஹிஹி!

மு.கொ: வணக்கம்!

சுப்பாமணி: சேட்டை! எதுக்கு ஒரு டைப்பா சிரிக்கிறீங்க?

சே.கா: அது ஒண்ணுமில்லீங்க! கவர்ச்சியா நடிச்சு போரடிச்சுப்போச்சுன்னு நமீதா சொல்லியிருக்காங்க! ஒரு வேளை அடுத்த படத்துலே காரைக்கால் அம்மையாரா நடிப்பாங்களோன்னு யோசிச்சேன். சிரிப்பு வந்திருச்சு!

மு.கொ: இது தான் தமிழனின் சாபக்கேடு! தமிழனின் தலைக்குள்ளே சினிமாவென்ற எருமைச்சாணத்தை மூளைக்கு பதிலாக உருட்டி வைத்து அனுப்பி விட்டது இயற்கை. ஐயகோ!

சே.கா: அப்படீன்னா நீங்க தமிழன் இல்லையா அண்ணே?

மு.கொ: சேட்டை! உங்களைப் போல நயன்தாரா யாரைத் திருமணம் செய்து கொள்ளுவார்? ஸ்ரேயாவின் பிறந்தநாள் விருந்தில் பரிமாறப்பட்ட பிரியாணியில் முந்திரிப்பருப்பு போட்டிருந்ததா? தமன்னா உண்மையிலேயே கார்த்தியைக் காதலிக்கிறாரா என்றெல்லாமா நான் எழுதுகிறேன்?

சுப்பாமணி: என்னங்க இது? எடுத்த எடுப்புலேயே டாப் கியர்லே போறீங்க? பதிவர்களுக்கு சர்ச்சை தேவைதான்; ஆனால் அது சண்டையாக மாறி விடக்கூடாது.

மு.கொ: சண்டையும் சச்சரவும் பதிவர்களின் பரம்பரை சொத்து! சேட்டை! உம்மால் பணவீக்கத்துக்கு ஒரு தீர்வு சொல்ல இயலுமா?

சே.கா: புத்தூர் எண்ணையைத் தடவிப் பார்க்கலாமே? ஹிஹி!!

மு.கொ: பார்த்தீர்களா சுப்பாமணி! இவரைப் போன்றவர்களெல்லாம் ஆளுக்கொரு வலைப்பூ ஆரம்பித்து எழுதிக்கொண்டிருக்கிறார்களே?

சுப்பாமணி: முந்திரிக்கொட்டை அவர்களே! நான் முதலிலேயே சொன்னேனே, இன்று தப்பித்துப் போன பைத்தியக்காரரைப் பற்றி விவாதிப்போம் என்று? பிறகு ஏன் பதிவர்களைப் பற்றி விவாதிக்கிறீர்கள்?

சே.கா: ரெண்டும் ஒண்ணுதானே? ஹிஹி!

மு.கொ: சேட்டை! என்ன தைரியமிருந்தால் தப்பித்துப்போன பைத்தியக்காரனோடு பதிவர்களை ஒப்பிடுவீர்கள்? இது வரை யார் தப்பித்துப் போனார்கள் என்று புள்ளிவிபரத்தோடு உங்களால் சொல்ல முடியுமா?

சுப்பாமணி: அதானே, சேட்டை! ப்ளீஸ்! கொஞ்சம் புத்திசாலித்தனமாப் பேசலாமா?

சே.கா: அப்போ நீங்க பேசுங்க, நான் கேட்டுக்கிறேன்! என்னவோ நான் வச்சுக்கிட்டு வஞ்சகம் பண்ணுறா மாதிரியில்லே பேசறீங்க?

சுப்பாமணி: நேயர்களே! ஒரு சிறு விளம்பர இடைவேளைக்குப் பிறகு. கலந்துதையாடல், அதாவது கலந்துரையாடல் தொடரும்..!

சேட்டை! முந்திரி!! சண்டை போடாம இருங்க! யாரோ கூப்பிடறாங்க! என்னான்னு கேட்டுட்டு வந்திடறேன். சரியா!

செக்யூரிடி ஆபீசர்: (கிசுகிசுப்பாக) சுப்பாமணி சார்! இவங்க ரெண்டு பேருலே ஒருத்தர் தான் அந்தத் தப்பிச்சு வந்த பைத்தியமாம். ஆஸ்பத்திரிக்குத் தகவல் கொடுத்திட்டோம். ஆனா, அவங்க வர்ற வரைக்கும் சமாளிக்க முடியுமா?

சுப்பாமணி: என்னாது? இவங்கள்ளே ஒருத்தரா? நான் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு! அந்தப் பைத்தியம் சேட்டைக்காரன்னு பொய் சொல்லி ஸ்டூடியோவுக்குள்ளேயே நுழைசிட்டதா? சே!

செக்யூரிடி: எப்படி சார் நம்பிட்டீங்க?

சுப்பாமணி: என்னய்யா பண்ணட்டும்? வந்ததுலேருந்து கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு, கேனத்தனமாப் பேசிட்டிருந்ததாலே, உண்மையிலேயே இது தான் சேட்டைக்காரன்னு நம்பித்தொலைச்சிட்டேன்.

செக்யூரிடி: இனிமேதான் நீங்க ரொம்ப ஜாக்கிரதையா டீல் பண்ணனும். அந்தப் பைத்தியம் முந்திரிக்கொட்டை மேலே விழுந்து பிறாண்டிரக் கூடாது. எப்படியாவது வந்திருக்கிறது சேட்டைக்காரனில்லை, பைத்தியம்னு அவருக்குப் புரிய வைக்கணும்.

சுப்பாமணி: ஓ.கே!

நேயர்களே! ’சந்திப்போமா நிந்திப்போமா?’ நிகழ்ச்சியில் மீண்டும் உங்களை வரவேற்கிறோம். இன்று நாம் கலந்துரையாடப் போவது ’பைத்தியங்கள் ஏன் ஆஸ்பத்திரிகளிலிருந்து தப்பிக்கின்றன?’ சேட்டை! இது குறித்து உங்கள் கருத்தென்ன? இது சம்பந்தமாக உங்களுக்கு ஏதாவது தனிப்பட்ட அனுபவம் இருக்கா?

சேட்டை: ஹிஹிஹி! அட பைத்தியம் தானே, தப்பிச்சுப் போனாப் போகட்டுமே! ரெண்டு நாள் ஊரைச் சுத்திட்டு வெறுத்துப்போயி திரும்ப ஆஸ்பத்திரிக்கே வந்திரப்போகுது.

மு.கொ: திரும்பத் திரும்ப இந்தச் சேட்டை பொறுப்பற்ற பதிலாகவே சொல்லிக்கொண்டிருக்கிறார். முற்றின பைத்தியங்களை ஊருக்குள் உலவ விட்டால் என்னவாகும்? இது மிகப்பெரிய சட்ட ஒழுங்குப் பிரச்சினையாகி விடுமல்லவா?

சுப்பாமணி: முந்திரிக்கொட்டை சார்! விஷயம் தெரியாமக் கோபப்படாதீங்க சார். இவரு யாருன்னு தெரியாது உங்களுக்கு. தெரிஞ்சா இப்படிக் கோவிச்சுக்க மாட்டீங்க!

மு.கொ: இவரைத் தெரியாதா எனக்கு? சேட்டைக்காரன்னுற பேருலே தினம் ஒரு மொக்கை இடுகை போடுற வெத்துவேட்டு தானே இவரு?

சுப்பாமணி: ஐயையோ! புரிஞ்சுக்க மாட்டீங்கறீங்களே சார்! இவர் நீங்க நினைக்கிற மாதிரி அப்படிப்பட்ட ஆளு இல்லை!

சேட்டை: என்னது? என்னைப் பத்தி எனக்கே தெரியாத தகவல் ஏதாவது இருக்கா? உங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும். என்னான்னு சொல்லுங்கய்யா! இதுக்குன்னு தனி இடுகை போட்டுராதீங்க!

சுப்பாமணி: இருங்க சேட்டை! உங்களைப் பத்தித் தெரியாதா? நீங்க எவ்வளவு நல்லவரு, எவ்வளவு வல்லவரு..?

சேட்டை: அப்படியா? இதென்ன புதுப்புரளியா இருக்கு?

மு.கொ: சமூக அக்கறையோடு வலைப்பூ எழுதுகிற என்னை வைத்துக்கொண்டே சேட்டைக்காரனை நல்லவரு, வல்லவருன்னு சொல்றீங்களே? இது தான் நமது பின்னடைவுக்கு முக்கியமான அடிப்படைக்காரணம். பாரபட்ச அரசியலில், ஜனரஞ்சகம் என்ற பெயரில் புல்லுருவிகளை ஊக்குவித்து தமிழ்மொழிக்கு இழுக்கு விளைவிக்கும் அப்பட்டமான துரோகம்!

சுப்பாமணி: முந்திரிக்கொட்டை சார்! என்னாலே சத்தம் போட்டுச் சொல்ல முடியாது சார்! கொஞ்சம் பொறுங்க சார்! அவங்க வந்திடுவாங்க சார்! வந்து கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க சார்! அவசரப்படாதீங்க!

மு.கொ: என்னய்யா பின்நவீனத்துவம் மாதிரி புரியாத மாதிரியே பேசறீங்க? யாருய்யா வரணும்? எதுக்கு கூட்டிக்கிட்டுப்போகணும்? எனக்குப் பைத்தியமே பிடிச்சிரும் போலிருக்கே!

சுப்பாமணி: அதான்! அதே தான்! அதைத் தான் சொல்ல வந்தேன்! புரிஞ்சுக்க மாட்டேங்கறீங்க!

மு.கொ: என்னது? விட்டா நான் தான் தப்பிச்சு ஓடுன பைத்தியமுன்னு சொல்லிடுவீங்க போலிருக்குதே!

சுப்பாமணி: அது நீங்க இல்லை!

சே.கா: அப்ப யாரு சுப்பாமணி? நீங்களா?

சுப்பாமணி: ஆமாம் சேட்டை! நான் தான்! நீங்க டென்சன் ஆகாதீங்க!

சுப்பாமணி: யோவ் சுப்பாமணி! நீங்க பைத்தியம்னா சேட்டை ஏன் டென்சன் ஆகணும்? என்னய்யா நடக்குது இங்கே?

குரல்: டேய் அவசரக்குடுக்கை! இங்கேயா இருக்கே? வார்டுபாய்ஸ்! போய்ப் பிடியுங்க அவங்களை!

சுப்பாமணி: முந்திரிக்கொட்டை! வாங்க சேட்டையைப் பிடியுங்க! இல்லாட்டி மறுபடியும் தப்பிருவாரு!

மு.கொ: ஐயையோ! என்னை விட்டிருங்க! நான் வர மாட்டேன்! நான் வர மாட்டேன்!

வார்டுபாய்: வரமாட்டேன்னா விட்டிருவோமா? மரியாதையா வரியா இல்லாட்டி ஊசி போடட்டுமா?

மு.கொ: ஊசியா? எனக்கு வலிக்கும். நான் அழுவேன்!

சுப்பாமணி: என்னது? முந்திரிக்கொட்டை தான் பைத்தியமா? நான் சேட்டைன்னில்லே நினைச்சிட்டேன்.

மு.கொ: சுப்பாணி சுப்பாணி! என்னை விடச் சொல்லுங்க சுப்பாணி!

(முந்திரிக்கொட்டையை ஆஸ்பத்திரி ஊழியர்கள் தரதரவென்று இழுத்துக்கொண்டு போகிறார்கள்)

சுப்பாமணி: சேட்டை! ஐயாம் சாரி! உண்மையிலேயே உங்களைத் தான் நான் பைத்தியமுன்னு நினைச்சிட்டேன். நல்ல வேளை, நான் நினைச்ச மாதிரி அது நீங்க இல்லை!

சே.கா: ஹையோ ஹையோ! ஊருலே ஒரே ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி தான் இருக்குதுன்னு நினைக்கறீங்களா?

சுப்பாமணி: அ.ப்..ப..டீ..ன்..னா...? நீங்களும்........?

சே.கா: ஹிஹிஹி! ஹிஹிஹி!

8 comments:

ILA (a) இளா said...

படிச்சிட்டு வந்து பின்னூட்டறேன்.

அபி அப்பா said...

\\சே.கா: ஹையோ ஹையோ! ஊருலே ஒரே ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரி தான் இருக்குதுன்னு நினைக்கறீங்களா?
\\

இது தான் சேட்டை டச்!!! நல்லா இருக்குய்யா சேட்டை:-)))))))))

ILA (a) இளா said...

//ஆஸ்பத்திரி தான் இருக்குதுன்னு நினைக்கறீங்களா?
//
சே அபி அப்பா அங்கே இருந்து எல்லாம் வரலை, நம்பனும் ஆமா

நாமக்கல் சிபி said...

:)) கலக்கல்!

vasu balaji said...

:)) சேட்டை தாங்கலை:))

சி.பி.செந்தில்குமார் said...

சேட்டை அண்ணே,பதிவு சூப்பர்,செம காமெடி வழக்கம் போலவே,ஆனா டைட்டிலை சுருக்கமா போடாம விரிவா போட்டிருந்தா இன்னும் ஹிட் ஆகும்னு நினைக்கறேன்

Gayathri said...

rombha nagaichuvaya irukku..super

Mahi_Granny said...

சிந்தனை சுனாமி சேட்டை தான்.