Thursday, October 14, 2010

இதென்ன கொடுமை?

பலர் என்னிடம் கேட்பதுண்டு. "சேட்டை, வலைப்பதிவில் எழுதுவதற்கு பதிலாக நீ பேசாமல் மெரீனா பீச்சில் வடைதட்டி வியாபாரம் பண்ணியிருக்கலாமே? பனகல்பார்க் பக்கத்தில் பஜ்ஜி போடலாமே?"

அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒரு வருடத்துக்கு முன்பு.....!(ஓடாதீங்கப்பு, சின்ன ஃபிளாஷ்-பேக் தான்!). மப்பும் மந்தாரமுமாக இருந்த ஒரு நாளில், என் காதில் அந்தச் செய்தி வந்து விழுந்தது. என் இதயம் எக்ஸ்ட்ரா அப்பளம் போல எக்கச்சக்கமாக நொறுங்கியது.

இணையத்தில் என் அபிமான நடிகை ஸ்ரேயாவின் கன்னாபின்னாவென்ற படங்களை எவனோ கிராபிக்ஸ் பண்ணி பரப்புவதாகக் கேள்விப்பட்டதும், துக்கம் தாள முடியாமல், கல்யாண பிரியாணி ஃபுல் ப்ளேட் சாப்பிட்டுவிட்டு, நிறைய ஐஸ் போட்டு, ஒரு லஸ்ஸி வாங்கிக் குடிக்க வேண்டியதாயிற்று.

அன்றே செத்துப்போன என் கொள்ளுப்பாட்டியின் எள்ளுப்பாட்டி மீது சத்தியம் செய்து எப்படியாவது இந்த ’சைபர் கிரைம்’ என்கிற அக்கிரமத்தை வேறோடு அழித்தே தீர வேண்டும் என்று சபதம் பூண்டேன். (நீயே ஒரு சைபர்(ஜீரோ!). நீ எழுதுவதை விட பெரிய கிரைம் என்ன இருக்க முடியும் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்!)

உங்களுக்குத் தெரியுமா? சைபர் கிரைமால் 76% இந்தியர்கள் பாதிப்பு:60% பேர் கம்ப்யூட்டர் வைரஸால் பாதிப்பு என்று அண்மையில் வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சைபர் கிரைமால் நானே பாதிக்கப்பட்டிருக்கிறேன் தெரியுமா? ஒரு தடவை, "உங்கள் மின்னஞ்சலுக்கு சிறந்த மின்னஞ்சலுக்கான ஒரு மில்லியன் டாலர் பரிசு,’ என்று ஒரு மடல் வந்தது. ’இதென்ன அபாண்டம்?நான் அந்த மாதிரி தப்பெல்லாம் பண்ணியதே இல்லையே!’ என்று கூட யோசிக்காமல் அந்த மடலைத் திறந்ததும் ’செல்லாத்தா’ என்ற வைரஸ் எனது கணினிக்குள்ளே புசுக்கென்று நுழைந்து பரவி விட்டது. எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் எதுவும் பலனளிக்காமல் போகவே, பாடிகார்ட் முனீஸ்வரருக்கு கடா வெட்டி பொங்கல் வைத்தபிறகுதான் கம்ப்யூட்டர் இயல்பு நிலைக்குத் திரும்பியது.

இதே போல இரண்டொரு மாதங்களுக்கு முன்னர் எனது ஜீ-மெயில் ஐ.டி.களவாடப்பட்டு விட்டது. (சீரியசாப் பேசிட்டிருக்கும்போது சிரிச்சா எனக்குப் பிடிக்காது; மெய்யாலுமே என்னோட ஐ.டியும் காணாமப் போச்சு!) நானும் எல்லா நண்பர்களுக்கும் எஸ்.எம்.எஸ்.அனுப்பித் தகவலை அனுப்பிக்கொண்டிருந்தபோது, திடீரென்று எனது ஐ.டியை மீட்கவும் முடிந்தது. "தெரியாத்தனமாக உங்களது ஐ.டியை ஹேக் செய்து விட்டேன். நீங்கள் எழுதிய, உங்களுக்கு வந்த மடல்களைப் படித்ததில், என் மூதாதையர்கள் சிக்கிமுக்கிக் கல்லை உரசி அடுப்பு மூட்டிச் சமைத்த காட்சிகளெல்லாம் என் கனவில் வர ஆரம்பித்து விட்டது. இனிமேல் யாருடைய ஐ.டியையும் திருட மாட்டேன்!" என்று ஒரு மன்னிப்புக் கடிதமும் சில நிமிடங்களில் வந்தது.

ஏதோ அது நானாக இருந்ததால், தப்பித்தேன்! கொஞ்சம் உருப்படியாக எழுதுகிறவர்கள் என்ன செய்வார்கள் பாவம்?

பலருடைய டெபிட்கார்டு, கிரெடிட் கார்டு,ஏ.டி.எம்.கார்டு என்று ரேஷன் கார்டு தவிர மீதமுள்ள எல்லா கார்டுகளையும் இணைய மோசடிகள் மூலமாகத் தவறாகப் பிரயோகிப்பதாகவும் செய்திகள் வருகின்றன. எனக்கு விசிட்டிங் கார்டு கூட கிடையாது என்பதால் தப்பித்தேன்.

இவ்வளவு பயங்கரமான ஒரு தீயசக்தியைக் குறித்து, சமூகப் பிரக்ஞையோடு ஒரு இடுகை போட வேண்டும் என்பதற்காக, ஒரு நாள் காஷுவல் லீவு போட்டு இந்த இடுகையைத் தயாரித்திருக்கிறேன்.

உங்களில் யாராவது ’வீராசாமி’ படம் பார்த்தீர்களா? (என்னது, ஒரே ஒருத்தர் தானா? உங்க பேரு என்ன விஜய டி.ராஜேந்தரா?) சரி போகட்டும்! அந்தப் படத்தில் நடித்த மேக்னா நாயுடு என்ற நடிகை அனுப்பியதாக பலருக்கு மின்னஞ்சல்கள் போகவும், நிறைய குடும்பங்களில் குழப்பமே ஏற்பட்டு விட்டதாம் ஐயா! இருக்காதா பின்னே? சினிமாவில் வருவதைப் போல, "நான் அம்மாவாகப்போகிறேன்," என்று இ-மெயில் குடும்பஸ்தர்களுக்குப் போனால், வீட்டுக்கு வீடு சப்பாத்திக்கட்டையும், அகப்பையும் பறக்காதா?

இந்த சைபர் கிரைமால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர் நம்ம அசின் தான்! முதலில் அவரது இ-மெயில் களவு போனது.. பிறகு அசின் "தன்பெயரில் ஏதாவது மின்னஞ்சல் வந்தாலும் ரசிகர்கள் அதை நம்ப வேண்டாம்,"எனக் கேட்டுக் கொண்டார். ஆனால், அதற்குள் என் நண்பன் சுரேந்திரன் அசினிடமிருந்து மெய்யாலுமே மெயில் வந்து விட்டதென்று எண்ணி, "முறுக்கிச் சுவன்னதோ...மாறன் முத்திச்சு வர்த்திச்சதோ...?" என்று முண்டா பனியன், லுங்கியுடன் மலையாளத்தில் டூயட்டெல்லாம் பாடிக்கொண்டிருந்தான். அவனை இயல்பு நிலைக்குக் கொண்டு வர சில பல குவார்ட்டர்களும், மசாலா பொறியும் தேவைப்பட்டன.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்கு முன்னரே, மீண்டும் ’என் பெயரில் மோசடி வெப்சைட்!’ என்று அசின் அண்மையில் புலம்பியிருக்கிறார்.

’நான் தான் அசின்,’ என்று சொல்லிக்கொண்டு ஒருவர் அசின் பேரில் ட்விட்டரில் ’என்னுடன் லைவாக சாட் பண்ண வாருங்கள்!’ என்று அழைப்பு விடுத்துள்ளாராம். நல்லவேளை, அண்மைக்காலமாக வலைப்பதிவர்கள் யாருமே யாருடனும் ’சாட்’ செய்வதில்லை என்று கற்பூரத்தை அடித்து சத்தியம் செய்திருப்பதால் அவர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், மற்றவர்கள் அப்படியா?

"அசின் சேச்சி! இனிமேல் எந்தப் படப்பிடிப்பா இருந்தாலும், உங்க ஊரு வேம்பநாட்டுக்காயல்லே தான் நடத்தணுமுன்னு கண்டிசன் போட்டிருக்கீங்களாமே? எதுக்கு? உங்களை நம்பி படமெடுக்கிற தயாரிப்பாளருக்கு எப்படி மூழ்குறதுன்னு ப்ராக்டீஸ் பண்ண வசதியா இருக்குன்னு தானே?" என்று ஒருத்தர் கேட்டிருக்காராம்.

இதே மாதிரி ஸ்ரேயாவோட பேரிலே யாரோ ட்விட்டர் ஆரம்பிச்சு, ’என் மனதைக் கவர்ந்த ஒரே ஆண் சேட்டைக்காரன் தான்!’ என்று எழுதவும், ஆந்திரா, தமிழ்நாட்டுலே பலருக்கு மாரடைப்பே வந்திருச்சாம். (முதல் மாரடைப்பு எனக்குத் தான்!)

இதே மாதிரி தனுஷ் பேருலே கூட ட்விட்டர் ஆரம்பிச்சிருக்காங்கன்னும் செய்தி வந்தது. இதைக் கண்டிச்சு ’அகில உலக ஒல்லிப்பிச்சான்கள் முன்னேற்றக்கழகம்’ கண்டன அறிக்கை வெளியிட்டிருந்தாங்க!

ஆகவே, பெரியோர்களே! தாய்மார்களே! சைபர் கிரைம்லேருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு.

உங்க வீட்டுலே சுத்தியல் இருக்கு தானே?

16 comments:

எஸ்.கே said...

காமெடியா எழுதியிருந்தாலும் சைபர்கிரைம் பற்றி நன்றாகவே எழுதியிருக்கிறீர்கள். நன்றி! இப்படிபட்ட பரிசு மெயில்கள், நடிகர் நடிகை சம்பந்தமான மெயில்கள், வெளிநாட்டு மெயில்கள் என பல வருகின்றன. சில வைரஸையும் அளிக்கின்றன சில மோசடி மெயில்களாக அமைகின்றன!

விஜி said...

குட் :))

வார்த்தை said...

:)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ஏகப்பட்ட திகில் .. ரொம்ப கொடுமப்பட்டிருக்கீங்க போல..

Gayathri said...

hahaha internetkku sani pidichuduchu

NaSo said...

//ஆகவே, பெரியோர்களே! தாய்மார்களே! சைபர் கிரைம்லேருந்து தப்பிக்க ஒரே ஒரு வழிதான் இருக்கு.

உங்க வீட்டுலே சுத்தியல் இருக்கு தானே?//

இதுதான் கரெக்ட். சேட்டை அண்ணே கலக்கீட்டிங்க போங்க!

ILA (a) இளா said...

பின்னூட்ட கையூட்டு

நாமக்கல் சிபி said...

:)) சேட்டை சேட்டைதான்!

நன்மனம் said...

பின்னூட்ட கையூட்டு 2 :-)

அபி அப்பா said...

ஆகா சேட்டையின் சேட்டை உச்சகட்டத்திலே இருக்குது:-)))))))))))))

vasu balaji said...

சேட்டைக்கு எது கிடைச்சாலும் வேட்டைதானா:)))

விஷாலி said...

கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல போல (சைபர் க்ரைம்) நம்ம கூட விலாற்றதே (கம்ப்யூட்டர் பயன் படுத்துவோர்) அவனுக்கு வேலையா போச்சி.

Eeva said...

நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!

ரஹீம் கஸ்ஸாலி said...

சேட்டையின் பதிவில் மேட்டரும் இருக்குதுங்கோ....

சென்ஷி said...

//
இதே மாதிரி ஸ்ரேயாவோட பேரிலே யாரோ ட்விட்டர் ஆரம்பிச்சு, ’என் மனதைக் கவர்ந்த ஒரே ஆண் சேட்டைக்காரன் தான்!’ என்று எழுதவும், ஆந்திரா, தமிழ்நாட்டுலே பலருக்கு மாரடைப்பே வந்திருச்சாம். (முதல் மாரடைப்பு எனக்குத் தான்!)//

செம்ம சேட்டை :))

நாமக்கல் சிபி said...

//சேட்டையின் பதிவில் மேட்டரும் இருக்குதுங்கோ..//

:))