புதிய வாசகர்களும் ரசிக்க, என்னுடைய பழைய சிறுகதையொன்று மீள்பதிவாக !!!
தங்கத்தமிழகத்து திருக்கோவிலூர் என்னோட சொந்த ஊருங்க...அதான் இந்த குறிஞ்சி கபிலர் வடக்கிருந்து உயிர் துறந்த, அதாங்க, சாப்புடாம உண்ணாவிரதம் இருந்து செத்துப்போன கபிலர் குன்று இருக்குதே, அந்த ஊரு...
மூவேந்தர் முற்றுகை படையெடுப்புல செத்துப்போன கடையெழு வள்ளள்கள்ள ஒருத்தர் பாரி, அவரோட மகளுங்க அங்கவை, சங்கவைய திருக்கோவிலூர் ராஜா திருமுடிக் காரிக்கு கட்டிகொடுத்துட்டு, நன்பனுக்கு செய்துகொடுத்த கடமை முடிஞ்சுதுன்னு அந்தமாதிரி செத்துப்போனாராம் கபிலர்..இந்த காரியும் கடையெழு வள்ளல் தானே, ஏழாவது வகுப்புல படிச்ச நியாபகம் இருக்குதுங்களா ?
அங்கிருந்து ஒரு 10 கிலோமீட்டர் மினிபஸ்ஸில் போனா நெடுங்கம்பட்டு என்ற கிராமம் வருமுங்க...அந்த காலத்துல திருக்கோவிலூரு ராஜா புலவருங்களை ஊருகளுக்கு பேரு வெக்கச்சொல்லி அனுப்புவாங்களாம்...நெடு நெடுன்னு நடந்து வந்ததால இந்த ஊரு நெடுங்கம்பட்டு, ஆடு மேஞ்சு கொழுந்து இல்லாத செடிங்களை பார்த்த ஊரு கொழுந்திராம்பட்டு, சடையை கட்டிக்கிட்டு ஒரு பொண்ணு நடந்து போன ஊரு சடகட்டி, அத்திமரம் இருந்ததால அத்திப்பாக்கம், ஆத்தோரம் மணல் அள்ளிக்கிட்டு மக்கள் இருந்த எடம் மணலூர்பேட்டை, அப்படீன்னு புலவருங்க பேரு வச்சாங்க அந்த காலத்துல...
இந்த கதை அதை பத்தி இல்லைங்க...ஒரு சம்பவத்தை பத்தி..இந்த சம்பவம் நடந்து ஒரு 8 வருடம் இருக்கும்...
எங்க தாத்தா போய் சேர்ந்த பிறது - நெடுங்கம்பட்டு கிராமத்தில எங்க கிழவி மட்டும் தனியா இருந்தது...நிலத்தை பார்க்கனும் இல்லையா...
நாம அப்பப்போ விசிட் அடிக்கிறது...காரணம் இரண்டு - ஒன்று - சுருட்டு மிலிட்டரி தாத்தாவோட சீட்டாட்டம்...
பத்து ரூவாயை வைத்து - கிழவனார் ஏமாந்தா - சுத்தி போதையில் ஆடுறவனுங்க கண்ணுலே மண்ணை தூவி - 50 ரூபாயை ஜெயிச்சிடலாம்...எல்லாம் திருட்டு ஆட்டம்தான்...கார்டுகளை ஒளித்து - மறைத்து - எப்படியாவது ஜெயிக்கிறது...
மற்ற காரணம் - நல்ல வெடக்கோழிகளை பங்காளிங்க உதவியோட அமுக்கி - காட்டுல கொண்டுபோய் வறுத்து திங்கறது.
இந்தமாதிரி தான் ஒருநாள்...கிளம்பி போறேன் கிராமத்துக்கு...
கிழவி வீட்டுலே பையை போட்டுட்டு - பத்துரூவாயை பாக்கெட்டுல சொருவிக்கிட்டு சுருட்டு கிழவனார் வீட்டுப்பக்கம் போறேன்.
தெரு முக்குல - என்னோட கண்ணு நெலை குத்துது.ஆகா.!!!
நல்ல எளஞ் செவப்பு கலர்ல - நல்ல வெடச்சாவல் ஒன்னு மேயுது.
அட இன்னாடா இது...போனவாரம் கண்ணுல படல..சந்தையில எவனோ புதுசா வாங்கிட்டு வந்திருக்காண்டோய்.
ஆவறதில்லையே இது...என்று சீட்டாட்ட கிளப்புக்குள் ( நம்ம கிழவனார் வீடுதான்) நுழைகிறேன்.
ஆட்டத்துல மனசே போவல...எப்படி அந்த கோழியை பிடிச்சு மொக்கறது (திங்கறது) என்பதுலேயே சுத்துதுடோய்.
ஆச்சு...சுருட்டை இழுத்துக்கிட்டே கிழவனார் - ரம்மி ஆட்டத்துல என்னை ரெண்டு புல்லு தூக்கினார். பிறவு கடைசியா ஒரு ஸ்கூட் அடிச்சார். பத்துரூவா போச்சு.
கிழவணார் கிட்ட திருடுன ஒரு அரை சுருட்டை பத்தவச்சிக்கிட்டே - யோசனையா வரேன்.
நம்ம பங்காளி கோபு - திருக்கோவிலூர்ல இருக்கான்.
ஒம்போது மணி மினி பஸ் டிரைவர் அண்ணாச்சிக்கிட்ட தகவல் சொல்லிவிடுறேன்.
போன் எல்லாம் ஏது எங்கூருல..அதுலயும் கோடு வேர்டு தான்.
அண்ணாச்சி.நாளைக்கு முனியப்பசாமிக்கு படையல் போடனும்.என் பங்காளி கோபு இல்லைன்னா கோபி - பஸ்டாண்டுல திரியுவானுங்க.கொஞ்சம் சொல்லிவிட்டுடுங்க..காலையில வெரசா வந்துடச்சொல்லுங்கப்பு.
என்றேன்.
கிழவி வீட்டுக்கு போய் - அது வைத்திருந்த காரக்குழம்பை ஒரு வெட்டு வெட்டிட்டு - அந்தி சாயும் நேரத்தில் குடிசை வீட்டு முற்றத்தில் கட்டையை சாய்த்தேன்..
டேய்.டேய்.ஏந்திருடா என்று கோபுவும் ( இப்போது ஊரில் விவசாயம் பார்க்கிறார்)- கோபியும் ( இப்போது இவர் போலிசாக இருக்கிறார்) எழுப்பினாங்க..
காலையில் ஏழு மணிக்கு முதல் பஸ்ஸை பிடித்து வந்துட்டானுங்க...
டேய்..எந்திரிடா..பொட்டையா இல்ல சாவலா, உடம்பு எத்தனை கிலோ தேறும், தொடை நல்லா இருக்கா ?
என்னம்மோ உலக அழகி போட்டியில கலந்துக்கப்போற கோழி மாதிரி ஆர்வமா விசாரிக்கானுங்க.
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....கிழவி இன்னும் கொல்லிக்கு போவல...கொஞ்சம் இருங்க டோய்.என்றேன்..
கிழவி கிளம்பியது.
தூம்பாவுல இருந்து கொஞ்சம் அரிசியை எடுத்து வாயில் போட்டுக்கொள்கிறேன்...காலையில் பல்லு விளக்கவில்லை.
அவ் அவ் அவ் அவ் என்று அரிசியை மெல்லாமல் குதப்புகிறேன்.
மெல்ல கிளம்பி போகிறோம் மூன்று பேரும்.
கோபி - பொட்டிக்கடைக்கு போயி எண்ணையை ஒரு கவரில் கட்டிக்கோ - மொளகாத்தூள் ஒரு கவரில் வாங்கிக்கோ - அப்படியே காட்டு கொல்லிக்கு வந்திடு...நம்ம இடத்துக்கு...என்றேன்.
உப்பு - மஞ்ச தூள் ??? என்றான் கோபி.
அது ஏற்க்கனவே பாலித்தீன் கவரில சுத்தி வைச்சிருக்கோம்.என்றான் கோபு.
டேய் கோழியக்காட்டுங்கடா...கோபு அவசரப்படுறான்.
இரு ராசா.கொஞ்சம் பொறு.இது நான்.
ஆங்...அதோ மேயுறான் பாரு.
சிவப்பு நிறத்தில் கும்முனு இருக்கு சாவல்.
அப்படியே வாயில் குதப்பிக்கிட்டிருந்த அரிசியை துப்புறேன்.கோழிக்கு வெகு அருகில்..
பொ..பொ...பொ...பா.
அரிசி கிட்ட வருது சாவல்.
லபக்..லபக் னு பொறுக்குது.
அஞ்சே நிமிஷம்..நாங்க அப்படியே பெறாக்கு பாத்துக்கிட்டு நிக்குறோம். ஏதோ எங்களுக்கும் இந்த கோழிக்கும் சம்பந்தம் இல்லாதது மாதிரி..
கோழி இப்ப லைட்டா தள்ளாடுது...பல்லு விளக்காத வாயில் புழுங்கல் அரிசியை போட்டு கொஞ்சம் குதப்பி, வாயிலேயே அந்த அரிசியை வைத்திருந்து அதை கோழி தின்றால், கோழிக்கு மயக்கம் வந்து விழுந்துவிடும். என்ன ஆசிட் இருக்கோ அதில் ? கோழிக்கு அதுதான் சயனைடு..
டேய் கோபு...தெருவுல யாரும் இல்லை..கோழிய அமுக்குடா..என்றேன்.
கையோடு கொண்டுபோயிருந்த சிமெண்ட் சாக்கில் அய்ட்டத்தை - கொஞ்சம் கழுத்தை திருகி - உள்ளே அனுப்புறோம்.
அப்புறம் - பரபரன்னு எங்க ரெகுலர் இடத்தில் சந்திப்பு...அந்தோனியார் காட்டுக்கோயில் அருகே.
எங்க ஆப்பரேஷன்களுக்காக தயாராக - ஒரு புதரில் ஒளியவைத்திருக்கும் - வாணல் - கரண்டி வெளியே வருகிறது...உப்பு, மஞ்சள் தூள், எண்ணை ஆகிய துணைவர்களும் தயாராகிறார்கள்.
காட்டில் திரிந்து, கொஞ்சம் நன்றாக காய்ந்த சுள்ளிகளை கொண்டுவருகிறான் - கோபி.
கோழியை உரித்து - மஞ்சள் தடவி லைட்டாக தீயில் காட்டி - பிறகு பீஸ் போட்டு - மிளகாய்தூள் - உப்பு போட்டு - எண்ணை சட்டியை வத்து - வேலை ஜரூராக நடக்குது.
இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கட்டையை எடுக்கிறான் கோபு....ஏற்க்கனவே குடித்து மீதி வைத்திருந்த வாத்தை - புதரில் இருந்து எடுத்து வருகிறான் - கோபி.
(கட்டை : விஸ்கி குவார்ட்டர் - காரணம் குள்ளமா இருக்கில்ல... வாத்து - புல் பாட்டில் சரக்கு - காரணம், ஓப்பன் செய்யும்போது - வாத்து கழுத்தை திருகுவது மாதிரி திருகனும் இல்லையா, இது சகாய விலைக்கு மிலிட்டரி மாமாவிடம் வாங்கிய ரம்.)
வேலை முடிஞ்சது...ஏப்ப்ப்.
பெருத்த ஏப்பம் ஒன்றை விட்டுவிட்டு, பதினோரு மணிவாக்கில் வீட்டுக்கு வந்து, கிணற்று தண்ணீர் ஒரு சொம்பு குடித்துவிட்டு, கட்டையை மீண்டும் சாய்க்கிறேன்...ஜில்லென வேப்ப மரத்து காத்து சலசலக்க, அரை மயக்க போதையில் எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது...
சாயங்காலம் - கிழவி லபோதிபோ என்று அலறும் சத்தம் கேட்டு எழுந்துகொள்கிறோம்.
பாடையில போவ...கட்டையில போவ என்று சென்சார் செய்யாத வார்த்தைகளை அள்ளி தெளித்துக்கொண்டிருக்குது எங்க ஆயா.
மண்ணை வாரி விட்டு சாபம் கொடுத்துக்கிட்டுருக்கு.
ஓ..ஆயா...நிறுத்து...இப்ப என்ன ஆகிப்போச்சுன்னு இப்படி கூவுற...என்றேன் சிவந்த கண்களுடன்.
கம்முனாட்டி..எடுபட்ட பய..படுபாவி - சாண்டாக்குடிச்சவன் - கட்டையில போவ என்று மீண்டும் ஆரம்பிக்குது.
தே, என்னா ஆச்சு மொதல்ல சொல்லு அத்த.என்றேன்.
போனவாரம் சந்தையில ஒரு கோழி வாங்கி வச்சிருந்தேன் டா..பாவிப்பய எவனோ அத்தை திருடி தின்னுப்புட்டான்...எடுபட்ட பய...கட்டிய திண்ணவன்., முனீஸ்வரனுக்கு படையல் போட்டு அவன் கையு காலு வெளங்காம பண்ணனும்.
ஆடு மேய்க்கிற பசங்க - செவப்பு சாவல் ரெக்கை காட்டு கோயில் பக்கம் கிடக்குன்னு சொல்லுறானுங்க.
பாடையில போவ..கட்டையில போவ..என்று மீண்டும் ஆரம்பிக்குது.
அடக்கொடுமையே, நம்ம வீட்டு சேவலை நாமே மாஸ்டர் ப்ளான் போட்டு திருடி தின்னுருக்கோம்.
சரி சரி சாவனை விடாத ஆயா.
எந்த நெலமையில நம்ம வீட்டு சேவல்னு தெரியாம திருடி திருடினானுங்களோ.என்றேன்.
9 comments:
இது திரட்டியில வருதா இல்லையா ? ஒருபயலும் கமெண்டு போடமாட்டேங்குறாங்க >?
படிக்காமலே கமெண்ட் போடுறேன்...
//இது திரட்டியில வருதா இல்லையா ? ஒருபயலும் கமெண்டு போடமாட்டேங்குறாங்க >?
//
தமிழ்வெளி வழியா வந்தேன்
//பல்லு விளக்காத வாயில்//
ஆனானப்பட்ட மனுசனே இப்படி பல்லு விளக்காம பக்கத்தில போனா மயங்கிவுளுந்துருவான். பாவம் கோழி மண்டையப்போடாம என்ன பண்ணும். :)
even I have not read, but I am just writing comment, just like that.
திருட்டுக் கலவாணிகளா............
அண்ணே. பதிவுல திரட்டியில எல்லாத்துலயும் வருதுண்ணே..
:-)))
:-)
மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
நம்ம ஊரு பெருமைய வெளிச்சம் காட்டிட்ட.
Post a Comment