Friday, April 2, 2010

பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்வது எப்படி?


கடந்த முறை யாழ்ப்பாணத் தமிழில் லவ்ஸ் அகராதி போட்டேன். பெருவாரியான இளவட்டங்களின் ஹஸ்புல் காட்சிகளோடு பதிவு வெள்ளி விழாவைத் தாண்டி விட்டது. இதைப் பார்க்கும் போது "ஆண்பாவம்" படத்தில் வி.கே.ராமசாமி சொன்னது தான் ஞாபகம் வருது.
" இந்த ஊர் நல்லா இருக்கணும்னு பள்ளிக்கூடம் கட்டினேன், கோயில் கட்டினேன், ஆஸ்பிட்டல் கட்டினேன், ஒருத்தனும் ஏறெடுத்துப் பார்க்கல, என்னை ஒரு பொருட்டாவே மதிக்கல.
இப்ப ஒரு சினிமா கொட்டகை கட்டினதும் நீங்கள்ளாம் எனக்கு மாலை, மரியாதையோட கொடுக்கிற மரியாதையைப் பார்த்ததும் உங்களை இவ்வளவு நாளாப் புரிஞ்சுக்க முடியலையேனு வருத்தமா இருக்கு" அப்படிச் சொல்வார் வி.கே.ஆர்.

என்ன தான் மாஞ்சு மாஞ்சு நாலைந்து பக்கங்களுக்கு பதிவு எழுதி என்னத்தைக் கண்டோம் ;-)

சரி இந்தப் பதிவில் எனக்குத் தெரிந்த பாதுகாப்பான வழியில் காதலைச் சொல்லும் வழிமுறைகளைப் பார்ப்போம். லவ்ஸ் அகராதி பழைய பதிப்பு எண்டு சொன்ன ஆட்களின் ஆலோசனையும் ஏற்கப்பட்டு இந்தப் பதிவில் அவர்கள் சொல்லும் பாதுகாப்பான வழிமுறைகளும் சேர்க்கப்படும் ;-)

வழிமுறை 1

ஜீமெயில் கணக்கு மூலம் தான் விரும்பும் காதலிக்கு மின்னஞ்சல் மூலம் காதலைச் சொல்லலாம். குறித்த பெண்ணின் ரியாக்க்ஷன் நேர்மாறானதாக இருப்பதை அறிந்தால் உடனே நீங்கள்
"ஐயையோ என்னோட ஜீமெயில் ஹாக் (hack)பண்ணுப்பட்டுடுத்து" என்று சமாளிப்பிக்கேஷன் சொல்லலாம்.

வழிமுறை 2

காதலி உள்ளூர்க்காரி என்றால் கோயிலுக்குப் போகும் சமயம் பார்த்து உள்ளே சென்று காதல் கடிதத்தைக் கொடுக்கலாம். இதில் இருக்கும் பாதுகாப்பு என்னவென்றால் பாதணிகளோடு (செருப்பு, ஹீல்ஸ்) கோயிலுக்கு உள்ளே செல்லமுடியாது. எனவே நீங்கள் பாதிக்கப்படும் வாய்ப்புக் குறைவு. இதில் இருக்கும் அபாயம் என்னவென்றால் இந்துக் கோயிலுக்குத் தான் இது பொருந்து. சர்ச்சில் வேலைக்கு ஆவாது. செருப்பு, ஹீல்ஸ் உடன் உள்ளே செல்லலாம்.

வழிமுறை 3

ஏப்ரல் முதலாம் திகதி வரை காத்திருக்கவும். அந்த நாள் வந்ததும் காதல் கடிதத்தைப் பரிமாறலாம். கடிதத்தைக் கண்ட பெண் கடு கடு என்று மாறினால், உடனே சமாளித்துக் கொண்டு
"ஹய்யா! ஏப்ரல் பூல் உனக்கு, ஏமாந்துட்டியா, என் ரேஞ்சே வேற" என்று சொல்லலாம்.


வழிமுறை 4

மாதம் ஒரே ஒரு பதிவு மட்டும் எழுதிக் கொண்டு மற்றைய நாளெல்லாம் ஸ்கிரீன் சேவர், பொன்மொழிகளை மின்னஞ்சல்களை அனுப்பும் "தல" கோபி போல நீங்களும் இப்படித் தொடர்ந்து குறித்த பெண்ணுக்கு அனுப்பலாம். ஒரு ரெண்டு மாசம் கழிச்சு சைக்கிள் கேப்பில் காதலை உயர்வாகச் சொல்லும் பொன்மொழிகள், ஸ்கிரீன் சேவரை அனுப்பிப் பாருங்கள். மறுமுனை ரியாக்க்ஷன் எப்படி என்று நாடி பிடித்து அறியலாம். பிடிக்கலை என்றால் இருக்கவே இருக்கு இன்னொரு கிளி.


வழிமுறை 5

காதல் கடிதத்தை வாங்கினால் செல்போன் இலவசம், இன்கம்மிங் கால்ஸ் ப்ரி என்று சொல்லிப் பார்க்கலாம்.


வழிமுறை 6.

இது என் சொந்த அனுபவம் (காப்பி ரைட் கிடையாது, யாரும் உபயோகிக்கலாம்)
மு.மேத்தாவின் கண்ணீர்ப்பூக்களில் இருந்து, வைரமுத்து, பா.விஜய், தபூசங்கரை காப்பி அடிச்சு மாய்ஞ்சு மாய்ஞ்சு காதல் கடிதத்தை எழுதுகிறீர்கள். ஆனால் நீங்கள் அதைக் கொடுக்கும் போது ஒரு வரி கூடப் படிக்காமல் சுக்கு நூறாகக் கிழித்துப் போட்டு "இடியட்" என்று அவள் திட்டினால் உங்கள் மனம் எவ்வளவு கஷ்டப்படும்.
எனவே முதல் கடிதத்தில் ஒன்றுமே எழுதாதீர்கள். வெறும் வெற்றுத் தாளையே நாலாக மடிச்சு நீட்டுங்கள். அந்தக் கடிதத்தை வாங்கி உங்கள் முன்னிலையிலேயே ஆவலோடு (காதல் பனிக்க) பிரித்தாள் என்றால்
"இந்தத் தாளைப் போல என் மனசு இப்பவெல்லாம் வெறுமையாவே இருக்கு, சம்மதமா" என்று பல்டி பிளஸ் லூட்டி அடிக்கலாம்.
படிக்காமலே அதைக் கிழித்துப் போட்டு விட்டாள் என்றால்
"கிடக்குது கழுத, காசா பணமா, கவிதைப் புத்தகம் வாங்கும் செலவு மிச்சம்" என்று உங்களைச் சமாதானப்படுத்திக் கொண்டு நகருங்க லே....;-)

இது ஒரு மீள்பதிவு-எழுதியது- கானாபிரபா

1 comment:

சென்ஷி said...

கோபி மாசம் ஒரு பதிவு எழுதறான்னு படிச்சதுமே தெரிஞ்சு போச்சு இது ஒரு மீள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள் பதிவுன்னு :))

அவன் இப்ப ஸ்க்ரீன் சேவர் ரேஞ்ச் எல்லாம் தாண்டி வெறுமனே விவேகானந்தர், வள்ளலார், ரமணர் போட்டோக்களை அனுப்பிக்கிட்டு இருக்கான் தல..