Thursday, July 31, 2008

கப்பி எத்தனை கப்பியடி!

நம்ம வருத்தப்படாத வாலிபர் சங்கத்துலேயே ஒருத்தருக்கு அதிகப்படியான பட்டப்பெயர்கள் இருக்குன்னா அது ஒருத்தருக்குத் தாங்க - இன்னிக்குப் பிறந்தநாள் கொண்டாடற சங்கத்தோட கடைக்குட்டி செல்லக்குட்டியான கப்பிக்குத் தாங்க. கப்பிபயங்குற பேரே ஷார்ட்டா ஸ்வீட்டா சுண்டியிழுக்கற மாதிரி தானே இருக்குதுன்னு நீங்கள்லாம் கேக்கறது புரியுது. ஆனாலும் ரொம்ப பாசக்கார பையங்குறதுனாலே ஆளாளுக்கு ஒவ்வொரு பேரு வச்சி கூப்பிடுவோம்.

ஆரம்பக் காலங்கள்ல ஜாவா மொழியிலேயே EJB, செர்வ்லெட்ஸ் இதையெல்லாம் வச்சி கவி புனையற அவரோட திறமையைப் பாத்து வியந்து ஜாவா பாவலர் கவிஞ்சர் கப்பிநிலவன்னு செல்ல்லமா விளிச்சோம்.

மூர்த்தி சிறிதா இருந்தாலும் கீர்த்தி பெருசுன்னு சொல்லுவாங்க இல்லையா...அது மாதிரி இந்த சின்ன வயசுலேயே இம்புட்டு ஞானமான்னு வியக்கற மாதிரி ஸ்பானிஷ் மொழி படங்களைக் கூட பாத்து விமர்சனம் பண்ணற அதீத திறமையைப் பாத்து "ஞானக் குழந்தை"ஆக்குனோம். இதுல ஒவ்வொருத்தருக்கும் அப்பப்போ என்ன மூட் வருதோ அதை பொருத்து ஞானக்குழந்தை ஞானப்பழம் ஞானப்பண்டிதர் இப்படின்னு பல வடிவங்களைப் பெறுவாரு.

அதுக்கப்புறம் தன்னோட ஒரு போஸ்ட்னால குருவி படத்தை சென்னை சிட்டி மட்டும் இல்லாம டோட்டல் தமிழ்நாட்டுல இருக்கற ஏ,பி,சி...இசட் தியேட்டருன்னு எல்லா இடத்துலேருந்தும் தூக்க வச்ச பெருமையைப் பாத்து "குருவி"ராவணன்னு பேரு வச்சோம்.

இதை தவிர்த்து காஞ்சித் தலைவன், கப்பி குருபரன், புன்னகை இளவரசன், கப்பி குப்தா, கப்பி கவுடா, கப்பியூரப்பா, கப்பி பிரகாஷ், கப்பி ஆண்டர்சன் இப்படின்னு செல்லத்துக்குப் பல பேருங்க.

நாங்க எதோ சாதாரணமானவங்க. எங்க லெவலுக்கு எங்களால பேரு தான் வக்க முடியும். ஆனா கவிஞர் கண்ணதாசன் கப்பி பயலைப் புகழ்ந்து ஒரு பாட்டே எழுதிருக்காருன்னா பாத்துக்கங்களேன். நீங்களும் இந்தப் பாட்டைப் பாருங்களேன்.

"கப்பி எத்தனை கப்பியடி
கப்பி எத்தனை கப்பியடி - அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி - தேவன்
(கப்பி எத்தனை கப்பியடி)

கல்யாண கோலம் கொண்ட - கல்யாணகப்பி
காதலிக்கு தெய்வம் அந்த - சீதாகப்பி
அரசாள வந்த மன்னன் - ராஜாகப்பி
அலங்கார ரூபம் அந்த - சுந்தரகப்பி
(கப்பி எத்தனை கப்பியடி)

தாயே என் தெய்வம் என்ற - கோசலகப்பி
தந்தை மீது பாசம் கொண்ட - தசரதகப்பி
வீரம் என்னும் வில்லை ஏந்தும் - கோதண்டகப்பி
வெற்றி என்று போர் முடிக்கும் - ஸ்ரீஜெயகப்பி
(கப்பி எத்தனை கப்பியடி)

வம்சத்திற்கொருவன் - ரகுகப்பி
மதங்களை இணைப்பவன் - சிவகப்பி
மூர்த்திக்கு ஒருவன் - ஸ்ரீகப்பி
முடிவில்லாதவன் - அனந்தகப்பி

கப்பிஜெயம் ஸ்ரீகப்பிஜெயம்
நம்பிய பேருக்கு ஏது பயம்
கப்பிஜெயம் ஸ்ரீகப்பிஜெயம்
கப்பியின் கைகளில் நான் அபயம்!!!"

உங்களுக்குப் பிடிச்ச கப்பியை நீங்களும் தேர்ந்தெடுத்து உங்களுக்குப் பிடிச்ச மாதிரி பிறந்தநாள் வாழ்த்து சொல்லிட்டுப் போங்க.

Monday, July 28, 2008

கவுஜ திறனாய்வு...

எல்லாரும் சொவ்மா இருக்கியளா? 'அதெல்லாம் கெடக்கட்டும்.. உன்னையையும் நம்பி சங்கத்துல இருந்து அட்லாஸ்னு ஒரு டைட்டில கொடுத்தாவ.... ஒரு மரியாத இல்லாம போஸ்டே போடாம சுத்திட்டு திரியரியாலே...'னு கேக்குதியளா?? என்னத்த பண்ண சொல்லுதிய?? ஆணி அதிகம்னு சொன்னா நம்பவா போறியா?

போன பதிவுல காதலிக்கனும்னா கவுஜ எழுதனும்னு சொன்னதுல இருந்து நம்ம நண்பர் ஒருத்தர் நான் கவுஜ எழுதியே தீருவேன்னு ஒத்த காலுல நின்னாரு. அப்புறமா... நாந்தான் அதெல்லாம் ஒரு மாதிரியா சுத்திட்டு திரியரவ எழுதுறதுல.. அதாவது... ஒரு லெவலுக்கு மேல சரக்கிருக்குறவ எழுதுறது (நீங்க தப்பா நெனச்சிடாதிய), நமக்கெல்லாம் சரிப்பட்டு வராதுன்னு சொன்னேன்.. உடனே பயபுள்ள சும்மா இருக்காம உங்க பதிவுலகத்துல இருந்து சில பல கவுஜைய சுட்டு என் காதலிக்கு கொடுத்திடுறேன்னு சலம்புனான்.

நமக்கும் தலைல ஒரு பல்பு எரிய, உடனே... 'எலே தம்பி... எங்க பதிவுல சமீபத்திய கவுஜ சூராவளி ஒருத்தவ இருக்காவ... அவிய எழுதுன கவுஜைய பாத்து அவனவன் அரண்டு மெரண்டு போயிருக்கான்னு BBCலையே சொன்னாவன்னா பாத்துக்கோயேன்'னு சொன்னேன். பயபுள்ளையும் நெம்ப ஆர்வமா, 'யாருடா அது?' னு கேட்டான். நானும்...'இந்த வெளிநாட்டு காரனுவ எல்லாம் தலைல கலர் கலரா பெயிண்ட் அடிச்சிட்டு, கழுத கணைக்குற மாரி கத்திட்டே இருப்பானுவளே... அந்த பாட்டு ஸ்டைலு பேரு... எது என்ன?? ஆங்... Rap... இவிங்க எக்ஸ்ட்ராவா இன்னொரு p சேத்து பேர வச்சிருக்காவ... நியுமராலஜி னு நெனக்கிறேன்'ன்னு சொன்னேன்... 'எலே தம்பி... நான் காதலிக்கிறதுக்கு கவுஜ கேக்குறேன்.. விவாகரத்துக்கு இல்லலே'னு சொல்றான்.

அப்புறம் அவனும் சில பல கவுஜைய சுட்டுப் போட்டு.. சும்மா இல்லாம, கவுண்டர் பெல்கிட்ட போய் திறனாய்வு பண்ண கொடுத்திருக்கான். அவரு சும்மா இருப்பாரா?? அவரோட திறனாய்வ நீங்களே பாருங்க...

எங்குதான்
கற்றுக்கொண்டதோ
என் விழிகள்
உன்
குறும் பார்வையின்
வார்த்தைகளை
மொழிப் பெயர்ப்பதற்கு


டேய் கோமட்டி தலையா... இது உனக்கே நியாயமா இருக்காடா?? அவளே என்ன பாக்குறாளா? உன்ன பாக்குறாளானே தெரியாத ஒன்றரைக் கண்ணு... அத வேற நீ மொழிபெயர்க்கிரியாடா? டேய்.. எல்.கே.ஜி ல ஏ.பி.சி.டி.யையே காப்பி அடிச்சவன்.. நீ எல்லாம் ட்ரான்ஸ்லேஷன் பத்தி பேச வந்துட்டியா?

சுவாரசியமான மர்ம நாவல்
வாசிப்பனாய்த் தான்
உன்னைக் கண்கொட்டாமல் பார்க்கிறேன்.
மற்றபடி நீ பார்க்கும் நாழிகை
முகம் திருப்பிக்கொள்வது எல்லாம்
வெறும் பக்கங்கள் புரட்டும் அவகாசமே.


அப்படியே பாத்துட்டு இரு... ஈவ் டீஸிங்ல புடிச்சிட்டு போக பெரிய கொண்ட போட்ட பொம்பள போலிஸ் வந்துட்டே இருக்குது... டேய் கருவாட்டு மண்டையா... உன்ன எல்லாம் மெட்ராஸ் ஐ வந்த பத்த பேர கூட்டிட்டு வந்து ஒன்றரை மணி நேரம் உடாம பாக்க வைக்கணும்டா... அப்பத்தான்டா திருந்துவ...

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன்


ஏன் டா பனங்கொட்டத் தலையா... சம்பந்தமே இல்லாம சிரிச்சிட்டு இருந்தா சுத்தி இருக்குறவங்க வேடிக்க பாக்காம என்னடா பண்ணுவாங்க?? என்னமோ மூனு நாள் ஐஸ்பெட்டில இருந்து கின்னஸ் சாதன பண்ணவனாட்டம் அசிங்கப்பட்டதையும் சந்தோஷமா சொல்லிட்டு திரியிரியேடா... உன் மனசுல என்ன சுப்ரமணியபுரம் அழகர்னு நெனப்பாடா?

சொல்லவொண்ணா சோகங்களில்
நில்லாமல் வழிந்த விழிநீரில்
மனம் கசிந்து என்னுடன்
உனதிருப்பை உணர்த்திய
உன் உள்ளங்கையின்
மௌன மொழியா காதல்?


பள்ளிக்கூடப் பரிட்சைல கைல எழுதி வச்சி பிட்டு அடிச்சவந்தானடா நீயீ... ஏன் டா... இந்த மௌனம், தனிமைலாம் உங்கள என்னடா பண்ணிச்சு... சுத்தி சுத்தி அதையே புடிச்சிட்டு நிக்கிறியேடா... உன்ன எல்லாம் காது ரெண்டையும் செவுடாக்கி மொத்தமா மௌன மொழிய கேக்க வைக்கனும்டா...

நான் எப்படி எழுத முயன்றாலும் அதில்
யாரோ எழுதிப்போனதன் சாயல் தெரிகிறது- இருக்கட்டும்
காதல் உலகப்பொது மறைதானே- ஆனால்
யாரும் எழுதாத கவிதை ஒன்று இருக்கிறது என்னிடம்
அது உன் பெயரெழுதிய என் காதல்...!


காப்பி அடிக்கிறதையும் எப்படி டீஸண்டா சொல்லுது பார்.. டேய் தேங்கா மூடி தலையா... காதல் உலக பொதுமறையா?? இது திருவள்ளுவருக்கு தெரியுமாடா?? ஏன் டா... ஒன்னாப்புல இருந்து ஏழாப்பு எட்டு வருசம் படிச்சது வரைக்கும் அவ பேர சொல்லித்தானடா அவளுக்கு அட்டண்டென்ஸ் எடுத்தானுங்க? அத விடுடா... பள்ளிக்கூட பாத்ரூம்லகூட என்னமோ எல்லோரோ ஓவியம் மாதிரி அவ பேர எழுதி வச்சிருக்கானுங்க.... இதுல அவ பேரு யாரும் எழுதாத கவிதையா??

இப்பொழுதெல்லாம்
இயற்கையோடு சண்டையிடுவது
அன்றாடமாகிவிட்டது,
என்னவள் உன்னோடு ஒப்பிட்டவாறே!!


ஆரம்பிச்சிட்டானுங்கடா.... டேய் பஞ்சர் ஒட்டுன பிஞ்ச டயர் தலையா... ஏன்டா.. இதுக்கு முன்னால எல்லாம் நிலா, ஆறு, சூரியம், வானவில், அது இதுன்னு தனி தனியா புடிச்சி இழுத்து கவுஜ எழுதுனீங்க.. இப்ப மொத்த இயற்கையையும் வம்புக்கு இழுக்க ஆரம்பிச்சிட்டீங்களடா?? உங்கள எல்லாம்... டேய்.. வேண்டாம்டா... அசிங்கமா பேச கூடாதுன்னு நெனச்சிட்டு இருக்கேன் டா... வீணா ஏதாவது பேச வச்சிடாதீங்கடா...

கவுஜ மக்களே!! இந்த கவிதைகளயெல்லாம் நீங்க எழுதுனதுன்னு தெரிஞ்சிருந்தா கவுண்டர் பெல் இப்படி எல்லாம் திறனாய்வு பண்ணிருக்க மாட்டாரு.. என்னோட நண்பன், அந்த கரிச்சட்டி மண்டையன் எழுதுனதுன்னு நெனச்சித்தான் மணி அப்படி பேசிப் புட்டாரு... ஸோ... இதெல்லாம் மனசுல வச்சிக்காதிய... பாவம் காலிங்...

முந்தைய திறனாய்வு - 1
திறனாய்வு - 2

Friday, July 25, 2008

குருவி படமும் இன்னொரு ஜோக்கும்

குருவி:

விஜய்'ன் குருவி:


ஜோக்கு

Thursday, July 17, 2008

காதலிச்சா கவிதை வருமா?

திருவள்ளுவர் காலத்துல இருந்தே தீர்க்கப் படாத கேள்வி இதுதாங்க. காதலிச்சா கவிதை வருமா? சரி... நாமதான் 'ப்ரம்மாண்டம் என்பது நமிதாவா? மாளவிகாவா?' போன்ற மில்லியன் டாலர் அறிவியல் கேள்விக்கெல்லாம் விடை காண விக்கில இருந்து வில்லுப்பாட்டு வரைக்கும் தேடுற ஆளாச்சே. சரி நமக்குத் தெரிஞ்ச சில பல காதலர்கள கேட்டுப் பாப்போம்னு தேடிப் பாத்தா, உருபடாத பயலுங்க!! எங்க செட்ல எல்லாருமே இன்னும் சிங்கிளாதான் காஃபி டேல கப்பச்சினோ குடிச்சிட்டு திரியறானுவ‌. அப்புறம் தேடி புடிச்சு கடைசியா காதலிச்சிட்டு இருக்குற ஒருத்தன் சிக்குனான்.

அவங்கிட்ட நம்ம கேள்வியக் கேட்டா 'அப்படியா?'ங்றான். 'அடப்பாவி... நீ கவிதை எழுதலைனா அது உண்மக் காதலே இல்லை'னு நாமளும் கொளுத்திப் போட, பயபுள்ள அதுக்குள்ள பேனாவையும் டைரியையும் தூக்கிட்டு பீச் பக்கமா போயிட்டான். அப்புறம் அவனும் கஷ்டப்பட்டு ஒரு கவுஜைய எழுதி அவன் காதலிக்கிட்டக் காட்டிருக்கான். அதப் பாத்துட்டு அவனோட காதலி விழுந்து விழுந்து சிரிச்சிருக்கா. அதுமட்டுமில்லாம இனி இது மாதிரி காமெடி பண்ணா அப்புறம் டைவர்ஸ் பண்ணிடுவேன்னு மெரட்டிப்புட்டா. பயபுள்ள வந்து என் மூஞ்சிலேயே குத்திருப்பான். நல்ல வேளை அவன் இந்தியாலையும் நான் புதரகத்துலையும் இருந்ததால எஸ்கேப்.

சரி.. இங்கதான் பல பேரு கவுஜன்னு டைட்டில போட்டுக்கிட்டு சுத்துறானுவளே.. அவிங்கக் கிட்ட கேக்கலாம்னு சில மக்கள புடிச்சேன். மொதல்ல, 'இந்த கவுஜைய எப்படி எழுதித் தொலயிறிய?'னு கேட்டேன்.

"மொதல்ல யாருமே இல்லாத தனிமையான நேரத்துல.."னு ஆரம்பிச்சாரு.

"என்னங்க இது... ஏதோ பெரிய வில்லங்கமான வேலய பண்ண போற மாதிரி பிட்ட போடுறீங்க?"

"சொல்லுறத முழுசா கேளுல வீணப் பயல‌... தனிமையான நேரத்துல அப்படியே விட்டத்தப் பாத்துக்கிட்டே இருந்தா..

விரைந்து வரும்
விட்டில் பூச்சியாய்
விட்டத்தில் முழைக்கும் விடியல்... கவிதை

அப்டீனு கவுஜ வரும்"னு சொல்றார்.

நானும் அப்படியே அண்ணாந்துப் பாத்தா பாட்டி வட சுட்ட படந்தான் ஓடிச்சு.

அப்புறம் அவரே... 'காதலிச்சா கவிதை வருமோ, வராதோ தெரியாது... ஆனா கவித எழுத ஆரம்பிச்சா, கவிதைல காதல் ரொம்ப ஈஸியா வரும். அப்படியே நடக்க முடியாத ஒரு மேட்டர எழுதி அது "அன்பே உன்னாலதான்"னு ஒரு பிட்ட ஆட் பண்ணிட்டா அதுதான் காதல் கவித.'னு சொன்னாரு.

சரி... நாமளும் கொஞ்சம் உக்காந்து விட்டத்தப் பாத்துக்கிட்டே வட்டம் போட்டு யோசிச்சதால வந்த விளைவுதாங்க இந்தக் காதல் கவுஜைஸ்...

---------

அடித்து திருத்தப் படாமலேயே
கவிதையாகிறது
எல்லா கிறுக்கல்களும்
உனை எழுதும் போது மட்டும்...

*****

என் நட்புப் பட்டியலில்
முந்திச் செல்கிற‌து...
நான் இல்லாத நேரங்களில்
உன் தேகம் தொட முற்படும்
வில்லத்தன மழையைத்
தடுத்து நிறுத்தும்
உன் கத்தரிப்பூ நிற‌ குடை!!

*****

சென்னைக் கண்ணையும் மிஞ்சிய‌
தொற்று நோயுனக்கு...

உன் விழிவிழுந்த நாள்முதல்
இமைகள் மூடியபின்தான்
விரிகிறது காட்சிகளெனக்கு...

*****

உன் பெயரை வைக்கச் சொல்லி
மொழி வளர்ச்சிக் கழக‌ வாயில்களிலெல்லாம்
உண்ணாவிரதமிருந்து அடம்பிடிக்கிறது
அழகு!!

*****

நீ...
புன்னகை தேசத்திலும்
போர்தொடுக்கும் சமாதான புறா...

Wednesday, July 16, 2008

சங்கத்தின் இரண்டாமாண்டு விழா போட்டி - முடிவுகள்

சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா'வை முன்னிட்டு இரண்டு போட்டிகளை அறிவித்து இருந்தோம். முதல் போட்டிக்கான முடிவுகளை முன்னமே அறிவித்தாயிற்று, ரெண்டு போட்டிக்கான முடிவுகளை அறிவிக்க கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது. அதற்கான காரணம் போட்டி விதிமுறைகளில் சொல்லியப்படி மக்கள் தீர்ப்பு + சக போட்டியாளர்களின் தீர்ப்பு + சங்கத்து சிங்கங்களின் தீர்ப்பு என தீர்ப்பு சொல்லும் நாட்டாமைகளின் வேலை பளுவினால் எடுத்துக்கொண்ட நேரம் மிக மிக அதிகம்.



இதோ ரெண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விபரம்:-

முதல் பரிசு:- காதல் முரசு அருட்பெருங்கோ'வின் தண்டவாளப்பயணம்

இரண்டாம் பரிசு: இந்த இடத்தில் இரண்டு நபர்களின் பதிவுகள் வந்துள்ளது, ரெண்டுக்கு ரெண்டு

லக்கிலுக்'வின் திரும்பிபாரடி
பினாத்தல் சுரேஷ்'வின் இதென்ன கலாட்டா?

முதல் போட்டியான பிரம்மரசத்தை ஓட விட்டு வெற்றி பெற்ற இரண்டு வெற்றியாளர்கள்:

முதல் பரிசு :- இம்சை வெங்கியின் Timing post

இரண்டாம் பரிசு :- அடிவாங்கும் ரங்கமணி முன்னேற்ற கழக (அரமுக) கர்நாடக துணை தலைவர் அம்பி'யின் உண்மை முகம் சொல்லும் பதிவு

சென்ற வருடம் போலவே இந்த வருடமும் மொத்த பரிசு தொகையான Rs.10,000/- ஏதேனும் தொண்டு நிறுவனத்துக்கு வெற்றியாளர்களின் பெயரில் அளிக்கப்படும்.

வெற்றிப்பெற்ற அனைவருக்கும், போட்டியில் பங்குகொண்ட அனைத்து மக்களுக்கும் சங்கத்து சிங்கங்களின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.

Friday, July 11, 2008

நிஜார் எக்ஸ்பிரஸ் - 01

"பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்". இப்போ திடீர்னு எதுக்குப் பாரதியார் பாட்டையெல்லாம் சொல்லறேன்னு தானே யோசிக்கிறீங்க? 'நிஜார் எக்ஸ்பிரஸ்'னு ஒரு தொடர் ஒன்னை சிங்கங்கள் எல்லாம் சேர்ந்து ஆரம்பிக்கப் போறோம். அது என்ன நிஜார் எக்ஸ்பிரஸ்? ஆர்குட், ஸ்டாக் மார்க்கெட், தமிழ்மணம் இதுக்கு நடுவாலே பொட்டித் தட்டற வேலைன்னு எந்த ஒரு கவலையும் இல்லாம நாமெல்லாம் சுத்திட்டு இருந்தது ஒரு வயசு. நிஜார் போட்டுக்கிட்டு சந்தோஷம் நெறைய, பொறுப்பு கம்மின்னு சுத்திட்டு இருந்த வயசு அது. அந்த காலத்துல, நடந்த சில சம்பவங்கள், அனுபவங்கள் இதை எல்லாம் சொல்லப் போற தொடர் தான் "நிஜார் எக்ஸ்பிரஸ்". ஒரு ஸ்டேஷன்ல ஒரு சங்கத்து சிங்கத்தின் அனுபவத்தோட தொடங்குற இந்த எக்ஸ்பிரஸ் அடுத்த ஸ்டேஷனுக்கு அடுத்த சிங்கத்தை நோக்கி பயணிக்கும். இப்படியே ஒவ்வொரு பதிவுக்கு ஒவ்வொரு சிங்கம் இந்த எக்ஸ்பிரஸை ஓட்டுவாங்க. நிஜார் சரி, எக்ஸ்பிரஸ் சரி...அதுக்கும் பாரதியார் பாட்டுக்கும் என்ன சம்பந்தம்னு தானே கேக்கறீங்க. பள்ளிக்கூடத்துல படிக்கறப்போ பரீட்சையில ஒரு தலைப்பு குடுத்து தலைப்புல கட்டுரை ஒன்று வரைகன்னு சுத்தமா ஐடியாவே இல்லாத தலைப்பு ஒன்னு குடுக்கறாங்கன்னு வையுங்க. என்ன பண்ணலாம்? ஆங்கில கட்டுரையா இருந்தா "Man is a social animal"னோ தமிழ் கட்டுரையா இருந்தா "பாரத நாடு பழம்பெரும் நாடு நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்"னோ ஒரு வரியை ஆரம்பிச்சு கட்டுரைக்குப் புள்ளையார் சுழி போடலாம், அதுக்கப்புறம் கட்டுரைக்குத் தேவையான மேட்டர் எல்லாம் ஒரு ஃப்ளோல அருவி மாதிரி கொட்டும். இந்த மாதிரி...



முன்னொரு காலத்தில், த.பி.*75ஆம் நூற்றாண்டில் தொண்டை மண்டலத்திலே சென்னை மாநகரிலே ஒரு பையன் வாழ்ந்து வந்தான். அந்தப் பையன் பேரும் இந்தப் போஸ்ட் எழுதறவரு பேரும் கிட்டத்தட்ட ஒன்னு தான்னு வையுங்களேன். இல்லை வேணாம்...நாமும் கொஞ்சம் பின்நவீனத்துவமா பேரு வச்சிப் பாப்போமே...அந்தப் பையனோட பேரு கில்லிவளவன். கில்லிவளவனுக்கு வளர்ற வயசுல மத்தப் பையனுங்களைப் போல தெருவுல கிரிக்கெட் விளையாட வேனும்னு ஆசை வந்துச்சாம். வெளையாடனும்னு ஆசை இருந்தா மட்டும் போதுமா? கிரிக்கெட் வெளையாட்டுல மத்தப் பசங்க நம்ம ஹீரோவைச் சேத்துக்கனுமில்ல? அப்படி வெளையாட்டில சேத்துக்கறதுக்கு ஒரு அடிப்படையான தகுதி - ஒரு பேட்டுக்கோ(bat) இல்லை ஒரு பாலுக்கோ(ball) சொந்தக்காரனா இருக்கணுங்கிறது. இது தெரிஞ்சதும் நம்மாளு ராப்பகலா அப்பா அம்மா கிட்ட அழுது அடம்பிடிச்சு ஒரு மட்டை வாங்கிடுறாரு. கூடவே ஆறு ரூபாய் அம்பது காசு பெருமானமுள்ள மிக விலையுயர்ந்த ஒரு ரப்பர் பந்தையும். மட்டைக்கும் பந்துக்கும் சொந்தக்காரரான ஒருவர் விளையாட்டில் சேர விரும்புகிறார் என்பதால், வளவனாருக்கு ரத்தின கம்பளம் விரிக்கப்பட்டு விளையாட அழைப்பு வருகிறது. ஐம்பது காசுகள் பெருமானமுள்ள சிறிய பந்தினையும், பிய்ந்து போன டென்னில் பந்தினையும், கசக்கிச் சுருட்டப்பட்ட காகிதத்தின் மீது சைக்கிள் டியூபினை நறுக்கி நெய்யப்பட்டட 'டியூப் பால்' கொண்டு விளையாடும் பையன்களுக்குத் தொட்டால் பறக்கும் கடினமான ரப்பர் பந்தினைக் கொண்டு வரும் வளவனை விளையாட்டில் சேர்த்து கொள்ள பெரிதாக பிரச்சினை ஒன்றும் இருக்கவில்லை. அதனுடன் புதிய மட்டையைப் பரிசோதித்துப் பார்ப்பதில் கைதேர்ந்த மட்டையாளர்களுக்கு எப்போதும் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
ஆனால் பழம் தின்று கொட்டை போட்ட கிரிக்கெட் விளையாட்டின் பண்டிதர்களின் (நன்றி : கலைஞானி) மத்தியில் வளவன் ஒரு கத்துக்குட்டி என்று வெகு சீக்கிரத்திலேயே நிரூபிக்கப் படுகிறது.

கைக்குள் ஒரு சிறு குச்சியையோ கல்லையோ வைத்துக் கொண்டு "இன் ஆர் அவுட்" என்ற முறையில் டாஸ் போடப்படுகிறது. வளவனின் அணி டாஸ் தோற்கும் அணியாகப் போய்விடுகிறது. கிரிக்கெட் விளையாடுவதற்கு சில பல கோடிகளைத் தொகையாகப் பெற்றுக் கொண்டு விளையாடுபவர்கள் வேண்டும் ஆனால் டாஸ் வென்ற பிறகும் அடுத்தவனை பேட்டிங் செய்ய அழைக்கும் பரந்த மனப்பான்மை கொண்டிருக்கலாம். ஆனால் கணப் பொழுதில், நொடிப் பொழுதில், இமைப் பொழுதில் சூழ்நிலைகள் மாறும் இவ்வீ(வி)தி விளையாட்டில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு ஆசை தீர மட்டையடி செய்தலே புத்திசாலித்தனம். இவ்வாறான சூழ்நிலைகள் என்னவென்று அறிந்து கொள்ள படிக்கும் நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதனையும் நானறிவேன். விளையாட்டு பாதி நடந்து கொண்டிருக்கும் போது "டேய்! ஹோம் ஒர்க் செய்ய டைம் ஆச்சு, நான் கெளம்பறேன்" என்று மட்டையின் சொந்தக்காரன் மட்டையை எடுத்துக் கொண்டுச் சென்று விடுவதும், "வினோத்! விளையாடுனது போதும். சீக்கிரம் வந்து போன்வீட்டா குடிச்சிட்டு கை கால் கழுவிட்டு படிக்க உக்காரு" என்று பந்தின் சொந்தக்காரனை அவன் அன்னையார் அழைப்பதும் அச்சூழ்நிலைகள். ஆகவே எல்லா புத்திசாலி கிரிக்கெட் விளையாட்டுக்காரர்களைப் போலவும் வளவனின் எதிரணியும் "பேட்டிங்" செய்ய தீர்மானிக்கிறது. கில்லி வளவனின் எதிர்வீட்டுச் சுவற்றில் செங்கல்லைக் கொண்டு ஸ்டம்புகள் வரையப் படுகின்றன. இரு வீடுகளுக்கும் இடைபட்ட தெரு தான் மைதானம். மைதானத்தின் வலப்புறம் சென்றால் மட்டுமே ஓட்டங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படும் என்றும், தொடர்ந்து மூன்று முறை இடப்பக்கம் பந்தினை அடித்தால் அவுட் என்றும், மட்டையாளர் பந்தினை அடிக்கும் போது சுவற்றில் பட்டு எகிறி வரும் போது ஃபீல்டர் பிடித்தால் அவுட்(Wall Catch) என்றும், ஒரு முறை தரையில் பட்டு எகிறி வரும் பந்தைப் பிடித்தாலும் அவுட்(One pitch catch) என்றும், ஃபீல்டர்கள் நிற்கும் இடத்திலோ அதற்கு சற்று அருகாமையிலோ பேட்ஸ்மேன் பந்தை அடித்தால் பரவாயில்லை, ஆனால் கண்காணாத இடத்தில் பந்தை அடித்தால் அதனை அடித்தவனே எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றும், வேறொருவரின் வீட்டுக்குள் பந்தை அடித்தால் அவுட் என்றும் அதையும் அடித்தவனே மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டு ஆட்டம் தொடங்குகிறது. முதலில் பேட்டிங் செய்யும் பொறுப்பை எதிரணியின் தலைவரும், முதலில் பந்துவீசும் பொறுப்பை வளவன் அணியின் தலைவரும் மனமுவந்து ஏற்றுக் கொள்கிறார்கள்.

மைதானத்தின் தன்மையினைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கு வீசப்படும் முதல் பந்தான 'ட்ரையல்ஸை'த் தொடர்ந்து, கணக்கில் கொள்ளப்படும் பந்துகளான "ஆல் ட்ரையல்ஸ்" வீசப்படுகின்றது. விளையாட்டின் ஸ்பான்சர் கில்லிவளவனுக்கு மைதானத்தின் இடப்பக்கம் பந்து வந்தால் அதை பாதுகாக்கும் பணி வழங்கப்படுகிறது. தன் மட்டையினைக் கொண்டு எதிரணி தலைவன், தன் அணியின் தலைவன் வீசும் பந்துகளை நயப்புடைப்பதை கில்லிவளவன் பார்த்துக் கொண்டு நிற்கின்றான். அணித் தலைவனைத் தொடர்ந்து இன்னும் இரு பந்து வீச்சாளர்கள் பந்து வீச்சைத் தொடர, தனக்கு வாய்ப்பு எப்போது வரும் என்று காத்துக் கொண்டு நிற்கின்றான் வளவன். வளவனை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள காரணமாயிருந்த எதிரணி பாபு, "டேய்! அவனுக்கு போலிங் போட சான்ஸ் குடுங்கடா" என்று பரிந்துரைக்கிறான். "ரன் ரொம்ப அதிகமாப் போயிட்டிருக்கு. கொஞ்சம் டைட்டாயிருக்கு, நீ பேபி ஓவர் போட்டுக்கம்மா என்ன?" என்று அணி கேப்டன் வளவனிடம் கேட்க எதோ மிகவும் பொறுப்பான பணியைத் தான் தன்னிடம் ஒப்படைத்திருக்கிறான் என்று எண்ணி தலையசைக்கிறான். பிறகு தான் தெரிகிறது, ஒரு ஓவருக்கு ஆறு பந்துகள் வீச வேண்டிய இடத்தில், மூன்று பந்துகள் மட்டுமே வீசப்படும் ஓவரினைத் தான் பேபி ஓவர் என அழைப்பார்கள் என்று. புதிதாகப் பந்து வீசப் பழகுபவனுக்கோ அல்லது சரியாகப் பந்து வீச்சு செய்யாதவனுக்கோ இந்த 'பேபி ஓவர்' தரப்படுவது வழக்கம்.

ஒருவாறாக எதிரணியின் இன்னிங்ஸ் முடிந்து வளவனின் அணி பேட்டிங் செய்யும் தருணம் வருகிறது. எதிரணி கேப்டன் செய்தது போலவே, வளவனின் கேப்டனும் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்குகிறான். வளவன் இப்போது அம்பயர் ஆக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றான். பேட்டிங் செய்யும் அணியிலிருந்து ஒருவர் அம்பயராக இருப்பது தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் ஒன்று தான். அச்சமயத்தில் வளவனின் பந்தினை அணித்தலைவன் அருகில் இருக்கும் ஒரு பாழடைந்த ஓட்டு வீட்டுக்குள் அடித்து விடுகிறான். ஒரு பழைய முருங்கை மரத்தையும், சுவற்றிலிருந்து முளைத்திருக்கும் அரச மரத்தையும் காணும் போது அவ்வீட்டின் அருகாமையில் செல்லவே யாரும் பயப்படுவர். பந்தை வீட்டுக்குள் அடித்தவனும் "நான் டெஸ்டுக்குப் படிக்கனும், கோயிலுக்குப் போகனும்னு, அம்மா தேடுவாங்க" என்று எதேதோ காரணம் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு ஓடிவிடுகிறான். ஆறு ரூபாய் அம்பது பைசா பந்து தொலைந்து போனது ஒருபுறமிருக்க, தனக்கு விளையாடுவதற்கு வாய்ப்பும் கிடைக்காததை எண்ணி வளவன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான். அப்போது வானம் இருட்டுகிறது, இடி இடிக்கிறது, மின்னல் மின்னுகிறது ஒரு அசரீரி ஒலிக்கிறது - "வளவா! நீ இவ்வாறெல்லாம் விளையாடினால் கில்லி வளவன் அல்ல சொத்தை வளவன் என்று அழைக்கப்படுவாய். உனக்கு நான் ஞானத்தைப் போதிக்கிறேன் கேள்" என்று கூறுகிறது. "பந்தையோ, பேட்டையோ வைத்திருப்பவன் தான் எப்போதும் கேப்டனாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் சொந்தக் காரனாக இருந்தும் பந்து பொறுக்கிப் போட்டுக் கொண்டிருந்த நீ ஒரு ஏமாளி." மேலும் "காஜி மந்திரத்தை அறியாமல் எப்படி நீ கிரிக்கெட் விளையாட வந்தாய்?" என்று அசரீரி கர்ஜித்தது. பயந்து போன வளவன் "காஜின்னா என்னங்க?" என்று நடுங்கிக் கொண்டே கேட்டான். "காஜின்னா என்னாவா? உன் பந்தையும் உன் பேட்டையும் வைத்துக் கொண்டு உன்னை பந்து பொறுக்கிப் போட வைத்துக் கொண்டு அடுத்தவர்கள் எல்லாம் அடித்தார்களே அதுக்குப் பேரு தான் காஜி"என உறுமியது அசரீரி. அதற்கு மேல் அசரீரி போதித்ததை எல்லாம் வெகு கவனமாகக் கேட்டு குறித்து வைத்துக் கொண்டான் வளவன். அசரீரியால் ஞானம் பெற்ற வளவன் கில்லி வளவனிலிருந்து "காஜி வளவன்" ஆக மாறினான்.

அசரீரியிடமிருந்து வளவன் தெரிந்து கொண்டதை எல்லாம் பயன் கருதி உங்கள் வீட்டு குழந்தைகள் பயனடைய தொகுத்து வழங்கியிருக்கிறார் இப்பதிவாசிரியர். சான்றோன் ஆக்குதல் தந்தையின் கடன் என்றாலும் சேம்பியன் ஆக்குவது ஒரு வருத்தப்படாத வாலிபனின் கடனல்லவா?

லா பால்(La Ball) - இது பந்து வீச்சாளர்களோ அல்லது அம்பயர்களோ சொல்வது. ஒரு ஓவரின் கடைசி பந்து இது என்பதைத் தெரிவிக்க 'லா பால்' என்று சொல்வார்கள்.

வெயிட்டீஸ்(Waitees) - எனக்குச் சிறிது வேலை இருக்கிறது, அது வரை ஆட்டத்தைத் தொடராமல் நிறுத்தி வையுங்கள் என்று தெரிவிக்க ஃபீல்டரோ, பந்து வீச்சாளரோ சொல்வது 'வெயிட்டீஸ்'. வெயிட்டீஸ் என்று ஒருவர் சொல்லிவிட்டுச் சென்றாலும் ஆட்டம் நிறுத்தப்பட மாட்டாது.

வெயிட்ஸ் ஃபார் தி க்ரீஸ்(Waits for the Crease) - "வெயிட்டீஸ்" என்பதை மட்டையாளர் தெரிவிக்கப் பயன்படுத்தப் பெறும் சிறப்பு சொல் "வெயிட்ஸ் ஃபார் தி க்ரீஸ்"

2ஜி/3ஜி(2G/3G) - மட்டையாளர் பந்தினை அடிக்கும் போது குறுக்கில் எருமை மாடோ அல்லது எதாவது வாகனமோ வரும் போது ஃபீல்டரால் உடனே பந்தினைப் பொறுக்கி வீச முடியாது. அந்த சமயத்தில் மட்டையாளர் அதிகப் படியான ஓட்டங்களை ஓடிக் குவிக்கிறார் என்றால் பந்துவீசும் அணியினரால் சொல்லப்படுவது "2ஜி/3ஜி" அதாவது இரண்டு அல்லது மூன்று ரன்கள் Granted. இது நியாயமாகப் படும் பட்சத்தில் அம்பயரும் இதனை வழிமொழிவார்.

ஜஸ்ட்ல மிஸ்(Justla miss) - பந்தினை மட்டையாளர் ஓங்கி அடிக்க முயலும் போது, பந்து மட்டையில் படாமல் விலகிச் செல்லும் போது மட்டையாளர் சொல்வது "ஜஸ்ட்ல மிஸ்". பந்துக்கும் மட்டைக்கும் கணிசமான தூரம் இருக்கும் போதும் இதை சொல்வதில் இருந்து மட்டையாளர் தவறமாட்டார் என்பது வேறு விஷயம்.

பை ரன்னர்(by runner) - ஒரு மட்டையாளரால் விக்கெட்களுக்கு இடையில் ஓட முடியாது போகும் போது, வேறு ஒருவர் அவருக்குப் பதிலாக ஓடுவார். இவருக்கு பை ரன்னர் என்று பெயர்.

அடிட்டெயில்(Atitail) - மட்டையாளர் சரியாக ஆட முடியாது போனாலோ அல்லது அவருக்கு வேறு வேலையிருந்து வேறு ஒருவருக்குத் தனது வாய்ப்பை வழங்க வேண்டும் போதோ சொல்லப்படும் சொல் 'அடிட்டெயில்'. இதை சந்தர்ப்பத்தைப் பொறுத்து மட்டையாளரோ அல்லது அவர்கள் அணித் தலைவரோ சொல்வார்.

கரெண்ட்(Current) - ஒரு மட்டையாளரை ரன் அவுட் ஆக்கப் பயன்படும் ஒரு உத்தி. பந்து வீசப்படும் தரப்பில் ஸ்டம்புகளுக்குப் பதிலாக ஒரு செங்கல்லோ அல்லது ஒரு கற்குவியலோ இருக்கும். மட்டையாளர் ஓட்டம் எடுப்பதற்காக ஓடி வருவதற்கு முன், ஃபீல்டரால் பொறுக்கி வீசப்படும் பந்தை பந்து வீச்சாளர் கையால் பிடித்துக் கொண்டு இச்செங்கல்லைக் காலால் மிதித்தால் கை வழியாகக் கரெண்ட் பாய்ந்து மட்டையாளர் அவுட் ஆகிவிட்டதாகப் பொருள்.

டபுள் சைட் அவுட்(Double Side Out) - மட்டையாளர் ஓட்டம் எடுப்பதற்காக ஓடும் போது ஃபீல்டர் எந்தப் பக்கம் இருக்கும் ஸ்டம்பில் அடித்தாலும் மட்டையாளர் அவுட் ஆகிவிட்டார் என்கிற விதி.

டபுள் சைட் பேட்ஸ்மேன்(Double Side batsman) - விளையாடுபவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் போது இரண்டணிக்காகவும் பேட்டிங் செய்பவரை டபுள் சைட் பேட்ஸ்மேன் என்றழைப்பார்கள்.

ஃபுல் கவர்(Full cover) - மட்டையாளர் ஸ்டம்புகள் அனைத்தையும் மறைத்துக் கொண்டு விளையாடும் போது அவர் போல்ட் ஆவதற்கு வாய்ப்புகள் குறைவு. அத்தகைய சமயத்தில் மட்டையாளர் ஸ்டம்புகளைச் சிறிது காட்டி விளையாடுவதற்காக பந்து வீச்சாளர்களால் சொல்லப்படும் சொல்.

ஃபுல் ஃபாஸ்ட்(Full fast) - அடிக்க முடியாதபடி அதிவேகத்துடன் பந்து வீச்சாளர் பந்தினை வீசும் போது மட்டையாளரால் சொல்லப் படும் சொல்.

லொட்டு/டொக்கு/கட்டை போடுதல் - தன்னை நோக்கி வீசப்படும் பந்தினை அடித்து ஆடாமல் பந்தினை வீணடிக்கும் போது மட்டையாளரைக் கடிந்து கொள்வதற்காகச் சொல்லப்படும் சொற்கள்.

ஓசி காஜி(Osi Gaaji) - விளையாட்டுக்குச் சற்றும் சம்பந்தமில்லாத ஒருவர் சில பந்துகளைச் சும்மா அடித்து விளையாடிவிட்டு தன் வேலையைப் பார்க்க கிளம்பிவிடுவதை ஓசி காஜி என்பார்கள்.

காஜி மன்னன் - "அறுபது ஓவர்கள் விளையாடி அவுட் ஆகாமல் முப்பது ரன்களை மட்டுமே அடிக்கும் சுனில் கவாஸ்கரும், பதினைந்து பந்துகளில் இருபத்தைந்து ரன்கள் அடிக்க வேண்டும் என்ற இலக்கு இருக்கும் போதும் கட்டை போடும் ரவி சாஸ்திரியும் கமெண்டரி பொட்டியில் உக்கார்ந்து கொண்டு அடுத்தவர்கள் ஆட்டத்தைக் குறை கூறும் போது 'காஜி மன்னா, வாயைப் பொத்துடா"னு எனக்கே கத்தனும் போல இருக்கும் என அசரீரி ஒரு உதாரணத்துடன் இதை விளக்கியது.


பி.கு:
1. த.பி* - தலைவிக்குப் பின் :)
2. கிரிக்கெட் விளையாட்டினைக் குறித்து ஆங்கிலத்தில் மேலதிக ஞானம் பெற இந்த விக்கிபீடியா சுட்டியைப் பாருங்கள்.

நிஜார் எக்ஸ்பிரஸ்



புறப்பாடு - சென்னை
அடுத்த நிறுத்தம் - மதுரை

Thursday, July 10, 2008

ஏய்ய்...டேய்ய்ய்..ஆங்ங்..கொக்கமக்க..அவ்வ்

நலிந்து வரும்(???) நடிகர் சங்கத்துக்காக மலேசியா, சிங்கப்பூர், துபாய்னு கலைவிழா அது இதுன்னு நடந்துக்கிட்டு இருக்குற இந்த நேரத்துல, பாய்ந்து வரும் பதிவர் சங்கத்துக்காக ஒரு விழா நடந்துட்டு இருக்குது. அதுக்கு சிறப்பு விருந்தினரா வந்திருக்குற சில பல பெருந்தலைகள் ரகசியமா பேசிட்டு இருந்தத அப்படியே நோட் பண்ணி இங்க லைவ் ரிலே டிலேடா பதிபரப்புறோம்...

"மொக்கையை மையமாக வைத்து பதிவிடும் பெரியோர்களே...
ஜல்லியை சல்லடைபோல் சாமான்ய மக்களுக்குக்கும் எடுத்தியம்பும் ஜாம்பவான்களே...
கொலவெறி பதிவுப் போட்டு சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளும் அன்பர்களே...
மற்றும் இங்கு பின்னூட்டம் போட்டு, பின்னூட்டம் எடுத்த கிறுக்கு கண்ணையா.... ச்சே... பழைய காமெடிய காப்பி அடிச்சு அடிச்சு அப்படியே வந்திடுச்சு... மன்னிச்சிக்கோங்க!! மற்றும் சரக்கு தீர்ந்த தருணத்தில் பஞ்சம் தீர்க்க வரும் இங்கே வீற்றிருக்கும் சிறப்பு விருந்தினர்களே...."

யாரு அந்த சிறப்பு விருந்தினர்கள்னு ஒரே கன்பியுஷனா இருக்கா? நமக்கு நாமளே ஆப்பு அடிச்சதுக்கு அப்புறம் ஸ்பெஸலா ஆப்பு அடிக்கிற கேப்டன் அண் கோ தாங்க!!

"அனைவரையும் பதிவர் சங்கத்தின் சார்பில் வருக வருக என வரவேற்கிறேன்...", அப்டீனு ஒரு மூத்த பதிவர் வரவேற்புரை வழங்கிட்டு இருக்காரு.

"அடப்பாவிகளா!! இதுக்கும் சங்கமாடா?? சங்கம் வளர்த்த தமிழ்நாடுன்னு சொன்னாலும் சொன்னாங்க... ஆயாக்கடை பன்னை திண்ணு ஆய் போனவர்கள் சங்கம்... தகரடப்பாவை தவறவிட்ட டப்பா தலையன்கள் சங்கம்னு நம்ம ஆட்கள் எல்லாத்துக்குமே சங்கம் வைக்கிறானுங்களடா... நம்ம தமிழன் எங்க போனாலும் திருந்தவே மாட்டானாடா", முதல் வரிசையில் மும்முறமாக கவனித்துக் கொண்டிருந்த விவேக். ஸைட்ல பாத்தா நம்ம கேப்டன் கண்ணுல தவுஸ்ண்ட் வாட்ஸ்ல ஒரு ரெட் லைட்டு(அந்த மாதிரி லைட் இல்லீங்க...முந்தா நாள் அடிச்ச லோக்கல் சரக்கால வந்த இன்னும் தெளிவாகாத எஃபெக்ட் தான் அது) எரியுது.

"ஏனுங்க கேப்டன்?? ரொம்ப கோவமா இருக்கீங்க?" னு விவேக் லைட்டா பிட்ட போட

"ஏய்... வானத்துல இருக்குற சூரியானோட எண்ணிக்கை... ஒன்னு... ஒரு உறைல இருக்க வேண்டிய கத்தி... ஒன்னு"

"ஏன்டா டேய்... நீ சாதரண டையலாக்க கூட அப்படித்தான் சொல்லுவியாடா?? உன்னைய ஓட்டி ஆயிரம் பதிவுப் போட்டாலும் நீ திருந்த மாட்டடா"

"நான் சொல்றத முழுசா கேளுங்க தம்பி..."னு ஒரு கர்ஜனை சவுண்ட விட்டுட்டு, "அதே மாதிரி... இந்தியாக்கு.... இந்தியாக்கு என்ன?? இந்த உலகத்துக்கே ஒரே ஒரு கேப்டன் தான்... அது நான் தான்... எங்க இருந்தோ ஒருத்தன் ட்ரெயின பின்னால தள்ளுறதும், கூளிங்கிளாஸ் போட்டு மலைல ஏறுறதும்னு இருக்கான். அவன வைஸ் கேப்டனாக்கி என்னோட கம்பேர் பண்ண ஆரம்பிச்சிட்டாய்ங்க இந்த பதிவு பசங்க..."

"அடப்பாவி!! இவிங்க கபடி ஆடுறதுக்கு இன்னொருத்தன் சிக்கிட்டான்னு சந்தோஷப் படுறத விட்டுட்டு... இப்படி ஆப்பு வாங்குறதுக்கு அட்வான்ஸ் புக்கிங்ல அட்டண்டென்ஸ் கொடுக்குறானே..."னு விவேக் கம்மி சவுண்டல கமெண்ட் கொடுக்க கேப்டன் இன்னும் கண்டினிவ் பண்றாரு.

"அதுமட்டுமா... என்னோட கஜேந்திரன் படத்துல வர்ற கயித்துச் சண்டைய பாத்து காப்பி அடிச்சு ஹாலிவுட்ல கிங் காங்கும் டைனோஸரோட கயித்துல சண்ட போடுறத எடுத்தானுங்க... அதெல்லாம் இவனுங்க விட்டுடுவானுங்க. ஆனா... ஷாக்குக்கே ஷாக் அடிக்கிற என்னோட யுனிவர்ஸல்வுட் ஐடியாஸ எடுத்து நையாண்டி பண்றானுங்க..."னு கேப்டன் கொதிப்படைகிறார்.

"இவரு போடுறது எல்லாம் மொக்க பின்னூட்டம்...
அத பாத்ததும் எல்லாரும் எடுப்பாங்க ஓட்டம்"னு இன்னொரு மூத்த பதிவர மேடைல புகழ்ந்துட்டு இருந்தது ஒருத்தர் காதுல விழ

"டேய்... யாருடா போடுறது பிட்டு??
இது மாதிரி பேசுறது எனக்கும் சிம்புவுக்குமான காப்பி ரைட்டு...
அத விட்டுட்டு...
நீ ஆகிக்கோ அப்பீட்டு..
ஏய் டண்டணக்கா ஏய் டணக்குடக்கா"னு டீ.ஆர். ஆஜர் ஆக

"அடப்பாவி!!! ஆப்படிக்குறவங்க மத்தில ஆஃப் பாயில் போட்டு வரவேற்குறானே!!! சொந்த செலவுல சூனியம் வைக்க இவனால மட்டும்தான்டா முடியும்"னு விவேக் ஜெர்க் ஆகிறார்.

கோவமா ஒக்காந்திட்டு இருக்குற கேப்டனோட பக்கத்து சீட்ல பார்க் பண்ணிட்டு அவர் காதோரமா தன் சோகத்த சொல்லி முறையிடுறாரு டி.ஆர்.

"தாங்க முடியல இவனுங்க தொல்ல...
அத தீத்து வைங்க முதல்ல...
சீரியஸா நானும் எடுக்குறேன் படம்...
அத காமெடியாக்கி பண்றானுங்க அடம்..."

"ஏன்டா டேய்... ஜுனூன் தமிழ்ல இப்படி ஒடச்சி ஒடச்சி டயலாக்லையே கவு(ச்)ஜ வாசிச்சா இவனுங்க மலர்வளையம் வைக்காம மணமாலையா சூட்டுவாய்ங்க??"னு ஸைக்கில் கேப்ல கெடா வெட்டுனாரு விவேக்.

"அவரு பொழப்பே இங்க நாறி போய் இருக்குதாம்... இதுல பரட்ட புராணத்துக்கு பின்னூட்டம் போட போறாரா இவரு... ஆங்..." னு இண்ட்ரோ இல்லாமலேயே எண்ட்ரீ கொடுக்குறார் S.J.சூர்யா.

"வாடா வா... அது என்னடா கடைசில ஒரு 'ஆங்' 'ஆங்'னு சகிலா சவுண்டு விடுற மாதிரியே சவுண்ட விடுற"

"அது என்னோட மேனரிஸம் ஆங்... எப்படி அந்த காலத்துல நம்பியார்க்குன்னு ஒரு மேனரிஸம் இருந்திச்சோ... அதே மாதிரி இது என்னோட மேனரிஸம்.. ஆங்..."னு தன்னுடைய சுயசரிதைய பாடிட்டு, "கலக்கப் போவது யாரு? அசத்தப் போவது யாரு?க்கு அப்புறம் நமக்கு அதிகமா ஆப்பு அடிக்கிறது இவனுங்க தான்... ஆங்... டி.வி. காரனுங்களாவது பரவாயில்ல... விளம்பரத்துக்காக பண்றானுங்க. ஆனா வெறும் களப்பைய மட்டும் கைல வச்சிட்டு ஸ்கெட்ச் போட்டு கலாய்ச்சிட்டு இருக்காய்ங்க இந்த ப்ளாக்கர்ஸ்..."


"இப்படி.."னு விவேக் என்னமோ பேச ஆரம்பிக்க அவர தடுத்து, சூர்யா என்னமோ சொல்றாரு.

"ஒன்னு சொல்ல மறந்துட்டேன்.... ஆங்..."

"சரி... சொல்லித் தொல..."

"அதான் சொல்லிட்டனே.... ஆங்..."

"டேய்... என்னமோ இருக்கு?? ஆனா இல்ல... ன்னு பில்கேட்ஸ் ரேஞ்சிக்கு பில்ட்-அப் கொடுத்த... மவன... உன்ன கலாய்ச்சி ஆயிரம் போஸ்ட் போட வச்சிருவேன்"

"அதான் சொன்னனே.. மொதல்ல 'ஆங்' சொல்ல மறந்துட்டேன்... அப்புறமா அத சொல்லிட்டேன்... ஆங்"

"அடப்பாவிகளா!!! இப்படி இவனுங்க வாய்க்கு பபுல்கம்ம கொடுத்தா... அத மென்னு திண்ணு முட்ட விடாம, மோந்துப் பாத்து ஏப்பமாடா விடுவாங்க??"

இது எல்லாத்தையும் கவனிச்சிட்டும் கவனிக்காத மாதிரி ஒருத்தர் தலைல முக்காடு போட்டு உக்காந்திருந்தார்ர். அவர தலைல இருந்த துணிய எடுத்துப் பாத்தா... அட அது நம்ம கவுண்டர் பெல்...

"என்ன சார்.. இப்பெல்லாம் நீங்க ஒரு படத்துலையும் நடிக்கிறதே இல்ல??"னு விவேக் லைட்டா பத்த வச்சாரு.

"டேய் கோத்து விடுற கோமட்டி தலையா!!! உங்க நெலமையாவது பரவாயில்லடா.... இங்க எவனுக்கு ஆப்பு அடிக்கிறதா இருந்தாலும் என் பேர போட்டு அடிச்சிடுறானுங்க. அது எல்லாமே நாந்தான் போட்டேன்னு எல்லாரும் கொலவெறில இருக்கானுங்க. அப்புறம் எப்டிடா எனக்கு படத்துல நடிக்க சான்ஸ் கொடுப்பாங்க தயிர்ச்சட்டி மண்டையா..."னு கவுண்ஸ் டெசிபல்ல கூட்ட,

"ஆமாங்கண்ணா இவனுங்க பண்ற அக்கப்போரால, இனி எவனுமே உள்ளூர் நாயகன்னு கூட டைட்டில் போட மாட்டானுங்கண்ணா"னு விவேக் சமரசம் பண்றாரு.

"ஆமாம் குருட்டுக் கண்ணாடி தலையா.... நீ கூட சின்னக் கலைவாணர்னு சம்பந்தமே இல்லாம ஒரு டைட்டில போட்டுட்டு திரியறதா சொல்றாங்களே"னு கவுண்டர் சொல்ல விவேக் அந்த எடத்த விட்டு அளறி அடிச்சு கெளம்புறார். அப்போ பேக் ரவுண்ட்ல இருந்து ஒரு சவுண்ட் வருது.

"அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"

எல்லாரும் திரும்பிப் பாத்தா வடிவேலு அங்க அவரோட ஸ்டைல்ல அழுதுட்டு இருக்காரு.

"நீங்களாவது பரவாயில்லீங்கடா. செமஸ்டர் பரிட்சை மாதிரி எப்பவாவதுதான் ஆப்பு வாங்குவீங்க. இங்க எனக்கு ஆப்பு அடிக்கனும்னே ஒரு சங்கத்த வச்சிருக்கானுங்க. கட்டதுர மாதிரி எதிரிங்கள கூட நம்பிடாம்லாம்டா. ஆனா, நமக்குன்னு சங்கம் வச்சி டொண்டி ஃபோர் அவர்ஸ்... இருவத்து நாலு மணி நேரம்... மூச்சுத் தெணர தெணர ஆப்படிக்கிறானுங்கடா... அது பத்தாதுன்னு மாசத்துக்கு ஒருத்தன அட்லாஸ்ங்குற பேருல அப்ரண்டீஸா சேத்துவிட்டு அடிஷனல் ஆப்ப ஆஃபர்ல அடிக்குறானுங்கடா... அவ்வ்வ்வ்வ்"னு அவரு அழ, அவரோட நெலமைய நெனச்சு எல்லாருமே உச்சு கொட்டுறாங்க.... :)))

Monday, July 7, 2008

லொல்லு சபா 'ஜெயில்'

பதிவெழுத ஆரம்பிச்ச காலத்துல வல்லவன் படத்தப் பாத்த கொலவெறில லொல்லு சபா ஸ்டைலுல ஒரு பதிவு ஒன்னு எழுதுனேன். அதே மாதிரி அப்ப வந்த வெயில் படத்துக்கும் ஒரு பதிவ எழுதி ட்ராஃப்ட்ல போட்டு வச்சிருந்தேன். சங்கத்துல இப்ப போடுறதுக்கு எதுவுமே தோன மாட்டேங்குதுங்றதுனால.... ஹி...ஹி... இங்க அந்த பதிவ போட்டுடுறேன் மக்கா..

---------------------

என் பேரு முருகேசன். சின்ன வயசுல எங்கப்பா பொறுக்கி வச்சிருந்த கட்ட பீடிய சுட்டு நானும் இழுத்துட்டேன்னு எங்க அப்பா என்ன போட்டு அடிச்சாரு. அந்த கோவத்துல, அவரு பொறுக்கி வச்சிருந்த எல்லா கட்ட பீடிகளையும் தூக்கிக்கிட்டு நான் ஊர விட்டே ஓடி வந்துட்டேன். அதுக்கப்புறம், எங்க சுத்தியும் ஒரு ஃபிகரும் என்ன ஏறெடுத்து பாக்காததால, எங்கப்பனாவது எனக்கு ஒரு பொண்ணப் பாத்து கல்யாணம் பண்ணி வைப்பான்னு, இருவது வருசம் கழிச்சு இப்பத்தான் நான் ஊருக்குப் போறேன்.


முருகேசன் அவரோட கிராமத்து வீடு பக்கம் வர்றாரு. அவரோட அப்பா, இப்பவும் அதே கட்ட பீடிய அடிச்சுட்டு திண்ணைல உக்காந்திருக்காரு.

"நைனா... நாந்தாம்பா ஒம் புள்ள முருகேசன்"

அவரு கண்டுகிடவே இல்ல.

"டேய் அப்பா... நாந்தான் டா உன் புள்ள முருகேசன்", கொஞ்சம் சத்தமாவே முருகேசன் சொன்னாரு.

"நீதான் என் புள்ளைங்றதுக்கு என்னடா சாட்சி? என் சொத்த ஆட்டையப் போடுறதுக்காக இப்படி வேசம் போட்டு வந்திருக்கியா?"

"ஆமா... இவரு பெரிய துபாய் அலி பாய்... நாலஞ்சி கப்பல் விட்டுறுக்காரு. ஏன் டா அப்பா, போடுறதுக்கு ஒரு பனியன் கூட இல்லாம, வெறும் ஒடம்புல ஒக்காந்திருக்க... ஒனக்கு இந்த ஓவர் சீன் தேவையா? உண்மைய சொல்லு, காசு இல்லாமத்தானே ஷேவிங் பண்ணாம, இப்படி பண்ணாட மாதிரி தாடி வச்சிட்டு திரியிற?"

"டேய்... வெறும் ஒடம்புல ஒக்காறது கிராம பழக்கம்டா"

"ஆமாங்கடா... உங்களுக்கெல்லாம் மனசுல அர்னால்டுன்னு நெனப்பா? அரசாங்கத்துல அரசியல் வாதிங்க சின்ன வீட்டுக்கு வூடு கட்டுனது போக, மிச்சக் காசுல இங்க கக்கூஸ கட்டுனா, அதுல போகாம, இந்த ஊரையே நாசம் பண்ணிட்டு, 'இந்த சுகம் வேற எங்கயாவது வருமா'ன்னு டையலாக் விடுறது ... இப்படி சட்டைய போடாம, போற வர்ற பொம்பள புள்ளைங்க கிட்ட சீன் போடுறது... கெழவி மூக்கு பொடிய திருடிட்டான்னு, ஒன்னே கால் ருவா மேட்டருக்கெல்லாம், பஞ்சாயித்துங்ற பேருல மூனு மணி நேரம் மொக்கைய போடுறது... கலாம் '2020 இல் இந்தியா வல்லரசு'ன்னு பேசிக்கிட்டு இருக்குற இந்த காலத்துலையும் உங்களோட அக்கப்போரு தாங்க முடியலடா..."

"நீ என்ன சொன்னாலும் உன்ன என் புள்ளைன்னு ஏத்துக்க முடியாதுடா"

என்னோட அப்பா அப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே என் தம்பி கதிர் அங்க வந்தான்.

என் தம்பிக்கு எம் மேல ரொம்ப பாசம். சின்ன வயசுல, நான் பக்கத்து பெஞ்ச் பாண்டியம்மாவ சைட் அடிச்சிட்டு இருந்தத பாத்து, கமலா டீச்சர் என்ன வஞ்சிப் புட்டாங்க. அதுனால கோவப்பட்ட என் தம்பி, பள்ளிக்கூட சுவத்துல, 'கமலா டீச்சருக்கும், கணக்கு வாத்தியாருக்கும் காதலா?"ன்னு எழுதிப் போட்டு பழிவாங்குனான். என் தம்பிக்கு எம் மேல அவ்வளவு பாசம். இப்ப கொஞ்சம் கொஞ்சமா டெவலப் ஆகி, ஒரு வெளம்பர கம்பெனி ஆரம்பிச்சிருக்கான். ஊருல யாராவது காதல் பண்ணினாங்கன்னா, என் தம்பியோட கம்பெனித்தான் இந்த ஊருக்கே தெரிய படுத்தும். எல்லா சுவர் விடாம, விவேக் ஸ்டைல்ல, 'பாலா சன்மதி ஜங் ஜங்'னு எழுதி வைப்பான். பெரிய பெரிய அரசியல்வாதிங்கக்கிட்ட இருந்து கூட எதிர்க்கட்சிக் காரங்க வீட்டு சுவத்துல எழுதச் சொல்லி டெண்டர் வரும்
.


"டேய் கதிர்.. நான் அண்ணன் டா"

"ஏன் டா.. நெத்தில சொட்டையும், மொகத்துல தாடியும் வச்சிட்டு, பாதி கெழவனா வந்து நிக்கிற உன்னப் பாத்தாலே தெரியல... நீ என்னோட பெரியவந்தான்னு... அதுல என்ன டா நொண்ணன் டா"

"அது இல்ல டா.. சின்ன வயசுல ஓடிப் போன முருகேசன்"

'ஆஹா... இருந்த ஒரு குடிசையையும் ஆட்டையப் போட வந்துட்டானே', என்று மனதில் நினைத்துக் கொண்டாலும்

"அண்ணே... வாண்ணே உள்ள"

"அவன் இந்த வீட்டுக்குள்ள வரக்கூடாது. ஓடிப் போனவன் சும்மாவா போனான். என்னோட செருப்பத் தூக்கிட்டு ஓடிப் போயிட்டான். அது எப்படிப் பட்ட செருப்பு. அதப் போட்டு நடந்தா, செருப்புப் போட்டிருக்குறதே தெரியாது", முருகேசனின் அப்பா.

"எப்படிடா செருப்பு போட்டதுத் தெரியும். அது என்ன பாட்டா செருப்பா? பாட்டமே இல்லாத செருப்பப் போட்டுக்கிட்டு நடந்தா, செருப்புப் போட்டிருக்குறது எப்டிடா தெரியும்? ஏன் டா அண்ணா... அந்த செருப்ப நாய்கூட துக்கிக்கிட்டுப் போகாதா.. நீ என் டா அத எடுத்துட்டுப் போனா.. அத விடுடா... நான் ரூட் விட்டுட்டு இருந்த பக்கத்து வீட்டு பாண்டியம்மாவ ஏன் டா இழுத்துக்கிட்டு ஓடுன?"

"அத ஏன் டா கேக்குற? அவளும் என்னைய விட்டுட்டு ஓடிப் போயிட்டாடா"

"அப்புறம்?"

"அப்புறம் என்ன... நானும் ஒரு ஊருல பயாஸ்கோப் காட்டுற ஒருத்தன்கிட்ட வேலைக்கு சேந்து கஷ்டப்பட்டு, அவனுக்கு குவார்ட்டர்ல வெசவச்சி கொன்னு அந்த தியேட்டர் ஓனர் ஆனேன்"

"ஆமாம்.. பயாஸ்கோப்புன்னா அந்த கமல் படத்துல, 'கத கேளு கத கேளு'ன்னு ஒருத்தர் தூக்கிட்டு வருவாரே அதானே"

"அது இல்லடா.. இந்த லென்ஸு, கண்ணாடிய வச்சி, வெள்ள வேட்டில வாத்தியார் படத்தப் போடுவேமே. அது"

"அடத் தூ. சரி...உன் வாழ்க்கைல காதல் வரவே இல்லையாடா"

"வந்திச்சே.. நான் பயாஸ்கோப் காட்டுற தெருவிலத்தான் மீனு வித்துட்டு இருந்தா ஒருத்தி.. அவளை எப்படியோ கரெக்ட் பண்ணி காதல் பண்ணிட்டு இருந்தேன். சரி அவள கல்யாணம் பண்ணலாம்னு பாத்தா, அவளோட பழைய புருசனோட புது பொண்டாட்டியோட அப்பாத்தான் நான் கொன்ன பயாஸ்கோப் ஓனர்னு என்னோட பயாஸ்கோப்ப புடிங்கி அடிச்சு தொரத்திட்டாங்க. அப்புறம்தான் இங்கன வந்தேன். ஆமாம் கதிரு நீ கூட ஒருப் பொண்ண லவ் பண்றியாமே", அன்று கதிரைப் பாத்து கண்ணடிகிறார் முருகேசன்.

"அடப்பாவி.. நானே குச்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து கரெக்ட் பண்ணி வச்சிருக்கேன். என் ஆளையே தள்ளிட்டுப் போகப் பாக்குறியா. உன்னெல்லாம் வீட்டுக்குள்ளையே சேக்கக் கூடாது", கதிர் முருகேசனை துரத்திக் கொண்டு ஓடுகிறார்.

"ஆமாம்.. இந்தப் படத்துலத்தான் ஜெயிலே வரலியே.. ஏன் 'ஜெயில்'னு பேரு வச்சிருக்கீங்க", மனோகர் கைய ஆட்டி ஆட்டி கேட்கிறார்.

"ஏன் டா டேய். உனக்குக்கூடத்தான் நல்லக்கண்ணன்னு பேரு வச்சிருக்காங்க. உன் கண்ண பாக்குறவனுக்கெல்லாம் மெட்ராஸ் ஐ வருதே. அதப் பத்தி யோசிச்சியா? பெருசா நொட்ட சொல்ல வந்துட்ட", கதிராக சந்தானம் மனோகரை துவைக்கிறார்.

Friday, July 4, 2008

எவர் கிரீன் காமெடி பீஸஸ்



திரைப்படங்களில் வரும் சில காட்சிகள் எப்ப நினைச்சாலும் சிரிப்பை வரவழைக்கும் விதமா அப்படியே பச்சக்குன்னு மனசுல் இடம்பிடிச்சிக்கும்1 அப்பேர்ப்பட்ட சில காட்சிளில் இதுவும் ஒண்ணு!

என் ஃபேவரைட் கிளிப்பிங்க்ஸ்ல முதல் இடத்துல இருக்குறது!

நீங்களும் பாருங்க!

நினைச்சி நினைச்சி சிரிப்பீங்க!


Wednesday, July 2, 2008

நாங்களும் உலகநாயகந்தான்!!!

ஒலக சினிமாவ ஒரண்ட இழுத்து நெம்ப நாளாச்சேன்னு நானும் கொரியா, ஸ்பானிஷ், இத்தாலின்னு படங்கள தேடிட்டு (ஸைட்ல கப்பிக்கிட்ட கருத்து கேட்டுக்கிட்டே) இருந்த சமயத்துல மொக்கை போடுறதுக்குன்னே நட்பு ஒருத்தன் இந்தியாவுல இருந்து ஜிடாக்ல தூது அனுப்புனான். சரி பெங்களூர் ஃபிகர்கள பத்தி விசாரிக்கலாம்னு நானும் நம்பி ஒரு ஸமைலியப் போட்டு ஏழரைய ஏணிப் போட்டு வரவேத்துத் தொலச்சிட்டேன். அங்கிருந்து இன்னும் ரெண்டு பேரு கான்ஃப்ரன்ஸ்ல ஜாயிண்ட் அடிச்சானுங்க. கான்ஃபரணன்ஸ் போட்டாலே எவனோ ஒருத்தன் சிக்க போறான்னு அர்த்தம். வாடிக்கையா மாட்டுற நண்பன் அன்னைக்கு சிக்காம போக பயபுள்ளைங்க டார்கெட் என் மேல பாஞ்சி டோட்டல் ஒன்றரை மணி நேரமும் பேண்டேஜ் மேல டேமேஜ் ஆற அளவுக்கு கும்மியடிச்சிட்டாங்க. அதோட சுருவாக்கம் இங்கே...

"என்னடா.. உன்னோட ரெண்டு கியுபிக்கல் தாண்டி ஒரு சூப்பர் ஃபிகர் இருக்குதுன்னு சொன்னியே.. எப்படி இருக்கா அவ??"

"ங்கொய்யால... நான் நல்லா இருக்கேனா, இல்லையானு ஒரு கேள்வியும் கேக்கல. எடுத்த உடனே எவளோ ஒரு ஃபிகர் பத்தி கேக்குறியேடா?"

"அம்புட்டு நல்லவனாடா நீயீ?? நீ எதுக்கு என் கூட சேட் பண்ணுற‌ன்னு எனக்கு தெரியாதா?? பக்கத்து வீட்டு பவித்ரால இருந்து முக்குச் சந்து முனியம்மா வரைக்கும் விசாரிக்கத்தானே..."

"ஏன் இந்த கொலவெறி?? நண்பன் பிங் பண்றானே... பயபுள்ளைட்ட பேசலாம்னு பாசத்தோட வந்தா... ஏன் இப்படி??"

"சரி... அமெரிக்கால எப்படிடா பொழுது போக்குறீங்க?", இந்த கேள்விய அவன் கேக்கும்போதுதான் இன்னொரு ரெண்டு பேரு வந்து சேந்தாங்க.

"என்ன‌ ப‌ண்ணுவோம்?? இப்ப‌டி உங்க‌ள‌ மாதிரி யாராவ‌து கெடச்சா மூச்சு தெண‌ர‌ வ‌ரைக்கும் மொக்க‌ போடுவோம். அட்டு காமெடிக்கெல்லாம் பேக்‍ர‌வுண்ட்ல‌ ஆள‌ வ‌ச்சி சிரிக்கிற இங்க்லிஷு சீரிய‌ல்க‌ள‌ எல்லாத்தையும் ஒன்னு விடாம‌ பாப்போம். அப்படி, யாருமே சிக்க‌லைன்னு வையீ.... இருக்க‌வே இருக்கு ஆர்குட். அதுலையும் புதுசா ஒன்னு போட்டிருக்கான். நாம‌ என்ன‌த்த‌ மாத்துனாலும் எல்லாத்துக்கும் வெளிச்ச‌ம் போட்டு காட்டிடுவானுங்க‌. ஸோ... க‌மிட்டட் னு ஸ்டேட‌ஸ‌ மாத்திட்டா அப்புற‌ம் எல்லாரும் வ‌ந்து விசாரிக்க‌ ஆர‌ம்பிச்சிடுவாங்க‌. அப்புற‌ம் அவுங்க‌ளோட‌ கொஞ்ச‌ நேர‌ம் மொக்க‌"

"இதெல்லாம் ஒரு பொழ‌ப்பு. உங்க‌ள‌ எல்லாம் ஒழுங்கா வேல‌ செய்யுங்க‌டானு ஆன்ஸைட் அனுப்புனான் பாரு... அவ‌ன‌ சொல்ல‌னும்"

"இது ம‌ட்டுமாடா?? ப்ளாகுங்கற‌ பேருல‌ இவ‌னுங்க‌ ப‌ண்ற‌ அக்க‌ப்போரு தாங்க‌ முடிய‌ல‌டா", அதுவ‌ரைக்கும் அமைதியா இருந்த‌ இன்னொருத்த‌ன் ஆர‌ம்பிச்சான்.

"அப்ப‌டி என்ன‌டா ப்ளாக்ல‌ எழுதுவீங்க‌?"

"அது ஒரு பெரிய‌ காமெடி மாப்ள‌... நான் சொல்றேன் பாரு"ன்னு ஆர‌ம்பிச்சு போட்டு தாக்கிட்டான் என்னோட‌ அந்த‌ அமைதியான‌ ந‌ண்ப‌ன். இது என்னோட‌ ந‌ண்ப‌ன் சொன்ன‌துதான் ம‌க்க‌ளே... நாந்தான் சொன்னேன்னு த‌ப்பா நென‌ச்சி போடாதிய‌... :)))

"வெயிலில் ம‌ழை, குடைக்குள் மழை, பீங்கான் ம‌ழைன்னு என்ன‌மோ வைர‌முத்துவோட‌ ஒன்னுவிட்ட‌ பேர‌ன்னு ம‌ன‌சுல‌ நென‌ச்சிட்டு த‌லைப்ப‌ வ‌க்கிற‌து. அந்த மழையும் இவிங்க கைல மாட்டிக்கிட்டு படாத பாடு படுது. ஆட்டைய‌ப் போட்ட‌ துண்டுபீட‌ய‌ அடிச்ச‌தையே ஏதோ ஐன்ஸ்டின் லெவெலுக்கு சாத‌னை ப‌ண்ண‌ மாதிரி எழுதுற‌து. அதுலையும் த‌லைப்பு வைப்பாங்க‌ பாரு... 'க‌ள‌வாடிய‌ க‌ட்ட‌பீடி'னு. அப்படியே பொலேர்னு நாலு அப்பு அப்புற மாதிரி. இவ‌னுங்க‌ என்ன‌மோ எழுதி தொல‌ச்சிட்டானேன்னு ஐயோ பாவ‌ம்னு 'உங்க‌ள் எழுத்து அருமை'னு கொஞ்ச‌ பேரு சில டெம்ப்ளேட் க‌மெண்ட‌ போடுவாங்க‌. அப்ப‌ இவிங்க‌ ஒரு டைய‌லாக் அடிப்பாங்க‌ பாரு. 'என்ன இருந்தாலும் உங்க‌ அளவுக்கெல்லாம் வ‌ர முடியுமா?'னு. கேட்டா த‌ன்ன‌ட‌க்க‌மாமாம். ஆனா, இவிங்க‌ள‌ ஒரு வித‌த்துல‌ பாராட்ட‌லாம்டா. எல்லாருமே வ‌டிவேலு மாதிரி எவ்வ‌ள‌வு அடிச்சாலும் தாங்குவாய்ங்க‌. மீச‌ முழுக்க‌ ம‌ண்ணா இருந்தாலும், ஒட்டாத‌ மாதிரியே ரியாக்ஷ‌ன் விடுவாய்ங்க‌"

"நானும் ப்ளாக் எழுதுற‌துக்கு ஏதாவது ஐடியா கொடுடா", இம்புட்டையும் கவனமா கேட்டுக்கிட்டு இருந்தவனுக்கு எப்படித்தான் இந்த ஆச வந்துச்சோ தெரியல :))

"அட‌ப்பாவி.... நீயுமா?? ச‌ரி.. சொல்லித் தொலைக்கிறேன். கேளு", ம‌றுப‌டியும் அசிங்க படுத்த ஆர‌ம்பிக்க‌ப் போறான்னு தெரிஞ்சுப் போச்சு. ந‌ம்ம‌ள‌ வேற‌ ந‌ல்ல‌வ‌ன்னு சொல்லிட்டாங்க‌. அத‌னால‌ அமைதியாவே இருந்துட்டேன். :((( அவன் சொன்ன ஐடியாஸ் கீழ்வருமாறு...

- 'க‌ன்னுக்குள் க‌ன்னிவெடி'ன்னு ஒரு ப்ளாக‌ ஆர‌ம்பிச்சு, 'அல்வாவை பிய்க்காம‌ல் திங்குவ‌து எப்ப‌டி?'னு டிப்ஸ் கொடுக்க‌லாம்.

- 'காத‌ல் கூச்செரியும் க‌ருவாட்டுக் குழ‌ம்பு'னு ஒரு காத‌ல் க‌வுஜ‌ய‌ எழுதி, 'ரெட்டை இன்றில்'னு ஒரு போர்ட‌ மாட்டி போட‌லாம்.

- ந‌ம்மூரு அழுகாச்சி சீரிய‌ல‌ பாத்துட்டு, 'சிப்பிப்ப‌ய‌'னு பேர‌ வ‌ச்சி 'உலக விம‌ர்ச‌னம்' எழுத‌லாம்.

- 'பூரிக்க‌ட்டையின் பின்ன‌ணியில் புற‌நானூறு'ன்னு, பூரிக்கட்டயால தங்கமணிக்கிட்ட அடி வாங்குன வரலாற்று சிறப்ப போட‌லாம். இந்த மாதிரி மேட்டருக்கு 'க‌ம்பி'ன்னு பேரு வ‌ச்சா அமோக‌மா வ‌ரலாம்ங்குற‌து ப‌திவுல‌க‌ நியும‌ரால‌ஜியாம்.

- வீக்கெண்ட் விக்க‌ல்னு வெள்ளிக்கெழ‌ம‌ ஆன‌ ம‌ங்க‌ள‌க‌ரமான‌ ம‌ங்கைக‌ள் ப‌ட‌த்த‌ப் போட்டு ஓட்ட‌லாம். ஆனா அதுக்கு சில‌ பேர் கிட்ட‌ இருந்து காப்பிரைட்டு வாங்க‌னும்.

- ஒரு ரெண்டு மூனு பேரா சேந்து 'பால் ட‌ம்ள‌ர்'னு ஒரு ப‌ளாக‌ ஆர‌ம்பிச்சு, ப‌ட‌த்துல‌ வ‌ர்ற‌ மொக்க‌ டைய‌லாக் எல்லாத்தையும் சேக‌ரிக்க‌லாம்.

- பாப்புலாரிட்டி வேனும்னா, 'மிட்லைட் ம‌சாலா'னு கில்பான்ஸா ஒரு டைட்டில‌ போட்டு, 'ந‌டுராத்திரியில் காய‌ வைப்ப‌து எவ்வ‌கை ம‌சாலா? அ)சிக்க‌ன் ம‌சாலா ஆ)ம‌ட்ட‌ன் ம‌சாலானு கேள்வி ப‌தில‌ போட‌லாம். ப்ளாக் பேரையும் வித்தியாச‌மா 'க‌ண்ண‌கிக் கூரை'னு வ‌ச்சிக்க‌லாம்.

- வ‌ய‌ச‌ கொற‌க்குற‌துக்குன்னே சில‌ ப‌சங்க‌ தடியன், குட்டிப்பையன், தலைப்பையன்னு பேர‌ வ‌ச்சிருப்பாய்ங்க‌. அவுங்க‌ள‌ மாதிரியே நாம‌லும் ஃபாளோ ப‌ண்ணிக்க‌னும். அப்ப‌டியே க‌மெண்ட் போடும்போதெல்லாம் 'சூப்ப‌ர் அங்கிள்', 'சூப்ப‌ர் ஆண்டி'னு இள‌வ‌ய‌சு மாதிரியே இமேஜ‌ மெயிண்டெயின் ப‌ண்ணிக்க‌னும். சில‌ பேரு 'வாலிப‌ன்'ங்குற‌ போஸ்டுக்காக‌வே ச‌ங்க‌த்துல‌ கூட சேந்திருக்காங்க‌ளாம்.

- அப்ப‌டி எதுவுமே கெடைக்க‌லைனு வையீ.. இருக்க‌வே இருக்கு சங்கிலித்தொட‌ர். 'அசிங்க‌மான‌ ஆறு' 'பைத்திய‌மாக்கும் ப‌த்து'னு ஒரு போஸ்ட்ட‌ போட்டு, நாம‌ ப‌ழி வாங்குற‌துக்கு டார்கெட் லிஸ்ட்ல‌ இருக்குற‌வ‌ங்க‌ளையும் இந்த‌ விளையாட்டுல‌ இழுத்து விட்டு கூத்துப் பாக்க‌லாம்.

பாத்தீங்க‌ளா ம‌க்கா!!! இந்த‌ போஸ்ட்ட‌ ப‌டிக்கிற‌ நீங்க‌ளே எம்புட்டு கொல‌வெறில‌ இருக்கீங்க‌. அவிங்க‌ கான்ஃப்ல‌ மாட்டுன‌ நான் என்ன‌ க‌தின்னு நென‌ச்சிப் பாத்துக்கிடுங்க‌. ச‌ரி என‌க்கு இங்குட்டு என்னல‌ ச்சோலின்னு கேக்குதியளா?? என்ன பண்ண சொல்லுதிய?? இம்புட்டு நாளா ரிஷான் அண்ணாச்சி பட்டைய கெளப்பிட்டு பின்னி பெடலுடுத்துட்டு இருந்தாவள்லா... அதனால சங்கத்துக்கு நெறய திஷ்டி பட்டுடுச்சாம். அதாம்.. அத எப்படி கழிக்கிறதுன்னு பாத்துட்டு இருந்தாவ. அதனால ஓரமா சலம்பிட்டு இருந்த என்னைய கூட்டியாந்து மொக்கயா ஏதாவது போடுப்பானு சொல்லிட்டாவ. அதான்...

தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்னு கேக்குதியளா?? இருக்குடே... இருக்கு... அத நீங்களே கண்டுபுடிச்சிக்கோங்க...:)))