Showing posts with label கோபி ராமமூர்த்தி. Show all posts
Showing posts with label கோபி ராமமூர்த்தி. Show all posts

Friday, December 24, 2010

ரங்கமணி குரங்கு பிடித்த கதை

ஒரே நேரத்தில் கணவர், அவருடைய குடும்பத்தை வம்புக்கு இழுப்பதில் இந்த மனைவிகளுக்கு என்ன ஒரு ஆனந்தம்.

*************************************

நான்தான் எங்கள் அபார்ட்மென்ட் செக்ரட்டரி. பாழாய்ப் போன குரங்குக் குடும்பம் ஒன்று இரண்டாவது ப்ளாக்கில் பிளாட் நெ 306 இன் பால்கனியில் சில நாட்களாக அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. ஹௌஸ் ஓனர் அந்த வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார்.

அசோசியேஷன் மீட்டிங்கில் என்னைக் காய்ச்சி எடுத்துவிட்டார் அந்த பிளாட்டின் ஓனர். ஒரு செக்ரட்டரி என்ற முறையில் நான் இதைத் தடுத்திருக்க வேண்டும் என்பது அவர் வாதம். ஒரு கட்டத்திற்கு மேல் நான் அந்தக் குரங்கு குடும்பத்திற்கு அந்த பிளாட்டில் வந்து குடியேற NOC கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். வந்த கோபத்தில் அவர் பாதி மீட்டிங்கில் சென்றுவிட்டார். எல்லோரும் முடிவு செய்து குரங்கைத் துரத்தும் பொறுப்பை என் தலையில் கட்டினார்கள். நான் கூகிலாண்டவரைச் சரணடைந்தேன்.

நிலைமை புரியாமல் வீட்டில் வேறு என்னைக் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். குரங்கு என்னிடம் முரண்டு பண்ணாது என்று உத்திரவாதம் கொடுத்தார்கள் (உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் மேலே வலது மூலையில் இருக்கும் என் புகைப்படத்தைப் பார்க்கவும்). விஷயம் அவர்கள் அம்மா வீட்டுக்கும் போனது. பிள்ளையாரைப் பிடிக்கப் போய்க் குரங்காய் மாறிய கதைதான் அவர்களுக்குத் தெரியுமாம். மேலும் மாப்பிள்ளை குரங்கை எப்படிப் பிடிக்கிறார் என்று பார்க்கக் கிராமமே ஆவலாக உள்ளதாம். குறைந்த பட்சம் மாமனார், மாமியார், அவளின் தாத்தா, தாத்தாவின் மூத்த சகோதரர்கள் இருவர் ஆகியோர் (கிட்டத் தட்ட ஒரு மினி zoo ) பெங்களூர் வர டிக்கெட் ஏற்பாடு செய்யும்படி உத்தரவு வந்தது.

இதனிடையே குரங்கு எங்கள் பிளாட்டின் பால்கனிக்கு வந்து அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது. எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை என்னவென்றால், எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மா சொன்னதுதான். "உங்க வீடல் இப்ப எக்ஸ்ட்ரா மெம்பெர் வந்துர்க்காங்க. சம்பளம் ஜாஸ்தியா வேணும்".

ஒரு வேளை அந்தக் குரங்குக் குடும்பத்திற்கு ஒரு மினி zoo வே தன்னைப் பார்க்க தெரிந்து விட்டதோ என்னவோ, திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டது. இதை வீட்டில் சொல்லப் போக, ஒரு வேளை நான் கஷ்டப்படுவது பொறுக்காமல் அவை சென்று விட்டன என்று சொன்னார்கள். அதோடு நிறுத்தாமல், அந்தக் குரங்கு ஒரு சகோதர பாவத்தில் என்மேல் பரிதாபப்பட்டு சென்றிருக்கலாம் என்றும் நினைப்பதாகக் கூறினார்கள். ஒரே நேரத்தில் கணவர், அவருடைய குடும்பத்தை வம்புக்கு இழுப்பதில் இந்த மனைவிகளுக்கு என்ன ஒரு ஆனந்தம்.

சில நாட்களுக்கு முன் பிளாட் நெ 306 இன் ஹவுஸ் ஓனரை வாக்கிங் போகும்போது பார்த்தேன். அவரைப் பார்த்து மையமாகப் புன்னகைத்து வைத்தேன். அவரே அருகில் வந்து குரங்கு போன செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார். நான் என்ன செய்து விரட்டினேன் என்று கேட்டு வைத்தார். எனக்கு நாக்கில் சனி, செவ்வாய் மற்ற எல்லாக் கெட்ட கிரகங்களும் ஒரே நேரத்தில் குடியேறினர்.

"அது ஒன்னும் இல்லை சார். நான் போய் அந்தக் குரங்கு குடும்பத் தலைவனிடம் உங்களைப் பற்றி சில உண்மைகளைச் சொன்னேன். குரங்கே, உனக்கு இந்த ஓனரைப் பற்றித் தெரியாது. நீ பால்கனில இருக்க. இவர் பால்கனி லைட்டுக்கு மட்டுமில்லாம சூரியன், சந்திரன் வெளிச்சத்திற்கும் கரென்ட் காசு கேட்பார். தானாக அடிக்கும் காற்றுக்கு பேன் சார்ஜ் கேட்பார். இதற்கு மேல் குரங்குக் குட்டிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பார். உன்னுடைய சொந்தகாரர்கள் யாரும் வரக் கூடாது என்பார். வருட வருடம் 10 % வாடகை ஏற்றுவார். எல்லாவற்றுக்கும் மேலாக ரெண்ட் ரெசிப்ட் தரமாட்டார், இந்த மாதிரி எல்லாம் சொன்னவுடனே குரங்கு தன் குடும்பத்தோட ஓடிப் போய்விட்டது சார்" என்றேன். அதற்குப் பிறகு நான் அவரை எங்கும் காணவில்லை.

நான் இனி அசோசியேஷனில் தொடரக் கூடாது என்று அனைவரிடமும் அவர் பேசி வருவதாக் கேள்வி.






Tuesday, December 14, 2010

விடாது துரத்தும் எக்ஸாம் பூதம்

நான் ஒரு டம்மி பீசுங்கறது இந்நேரம் உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். கொஞ்ச நஞ்ச டவுட் இருந்தா இதைப் படிச்சுப் பாருங்க.

*******************************

"சார் நான் கோபி பேசறேன்"

"சொல்லு கோபி சௌரியமா?"

"நல்லா இருக்கேன் சார், நீங்க சௌரியம்தானே, கிருஷ்ணன் சொன்னான் சார்"

"ஆமாம்பா அவசியம் வந்துடு"

"நிச்சயமா சார்"

"MJN சொன்னாரு ஒன்ன chief கெஸ்டா போடா வேணாம்னு சொல்லிட்டியாமே, ஏம்பா"

"கிண்டல் பண்ணாதிங்க சார் "

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிறது பள்ளிப்படிப்பு முடித்து. நினைத்துப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. எத்தனையோ முறை கும்பகோணம் சென்றிருக்கிறேன். ஆனால் பள்ளிக்கூடம் போக ஒரு முறையும் தோன்றவில்லை. சொல்லப் போனால் காசி தியேட்டர் போகப் பள்ளியைக் க்ராஸ் செய்துதான் போக வேண்டும். அப்போதும் பள்ளி செல்லத் தோணியதில்லை. ஒரு வேலை மழை வந்திருந்தால் ஒதுங்கி இருப்பேனோ என்னவோ.

"டேய் பஸ் ஏறிட்டேண்டா"

"சரி, பத்து மணிக்கு வந்துரு"

"ஏன், விழா சாயந்தரம் தானே"

"கொடி கட்றது, நாற்காலி போடறது இதுக்கெல்லாம் ஆள் வேணாமா, நீதான் செய்யணும் அதெல்லாம்"

"என்னடா சொல்ற"

"காலம்பர வேற ஒரு விழா, 9 மணிக்கு வெங்கட்ரமணா வந்துரு, டிபன் சாப்டுட்டு ஸ்கூலுக்குப் போயிடலாம்"

" சரி காசி தியேட்டர்ல என்ன படம் ஓடுது"

" MR சார்கிட்ட பேசுறியா பக்கத்துலதான் இருக்கார்"

" போன வைடா சாமி"

ஆண்டு முழுவதும் நடந்த பல்வேறு போட்டிகளுக்கான பரிசுகளை வழங்கும் விழா காலை பத்து மணிக்கு ஆரம்பமானது. "ஏன்டா, நான் படிக்கிற காலத்துல எனக்கு ஒரு பரிசும் கொடுக்கல" என்றேன். " அதுக்கெல்லாம் ஸ்கூலுக்கு ஒழுங்கா வரணும். போட்டில கலந்துக்கனும். ஜெயிக்கணும். தட்சிநாமுர்த்தி ஞாபகம் இருக்கா ?" என்றான் கிருஷ்ணன்.

என் நினைவு பின்னோக்கிச் சென்றது. எந்தப் போட்டி என்றாலும் அவன்தான் முதல் பரிசு வாங்குவான் - கோலம் மற்றும் தையல் போட்டிகளைத் தவிர. எனக்குப் பொதுவாக எந்தப் போட்டியிலும் விருப்பம் இருந்ததில்லை (சீ சீ இந்தப் பழம் புளிக்கும்) . இருந்தாலும் சில போட்டிகளில் கலந்துகொண்டேன். இப்போது எல்லாரும் சொல்கிறார்களே பல்பு வாங்குதல் என்று. நான் கலந்து கொண்ட எல்லாப் போட்டிகளிலும் சீரியல் பல்பு செட் வாங்கினேன். தட்சிநாமுர்த்திக்கு உடனே போன் செய்து பேசினேன். "இப்பவும் பொறாமையா இருக்கா அவன நெனச்சா?" என்றான் கிருஷ்ணன். " லைட்டா" என்றேன்.

முதல் முறையாகத் தலைமை ஆசிரியர் அறைக்கு எந்த விதமான பிரச்னை பயமுமில்லாமல் நுழைந்தது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் பள்ளி மைதானக் கண்காணிப்பாளர் என்னையே உற்றுப் பார்த்து கிரௌண்ட் கேட்டின் பூட்டை ஒருமுறை உடைத்தது நான்தானே என்று கேட்டு உறுதி செய்து கொண்டார் (அவனா நீயி? ).

மாலை மூன்று மணிக்கு விழா ஆரம்பமானது. ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும் முதலிடம் பிடித்த மாணவர்கள் ஆகியோருக்குப் பரிசுகளை வழங்க ஆரம்பித்தனர். (பய புள்ளைக கர்சிப் பாக்டரியே வச்சிருப்பாக போலிருக்கே, பக்கு பக்குன்னு எடத்தப் புடிக்குதுக). விழா முடிந்ததும் தலைமை விருந்தினர்களை மாணவர்கள் அனைவரும் சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்கிகொண்டனர். நானும் என் பேனாவை எதற்கும் இருக்கட்டும் என்று திறந்து வைத்துக்கொண்டேன் (நானும் ரௌடிதான்). என் நிலைமை கடைசியில் ஆளில்லாத டீக்கடை போலாகிவிட்டது.

இன்னும் கொஞ்சம் (?!) மெனக்கெட்டு நன்றாகப் படித்திருக்கலாமோ என்று திடீரென்று தோன்றியது. "போன வாரம் கோகிலா வந்துருந்தப்ப ஒன்ன விசாரிச்சாப்பா " என்றார் MR சார் . எப்போதோ தொலைத்த பொருள் இப்போது கிடைத்த திருப்தி எனக்கு. மன நிறைவுடன் பஸ் ஏறினேன்.

"எங்கப்பா போயிருந்த நேத்தி" என்றான் பொடியன்

" எங்க ஸ்கூலுக்கு" என்றேன் பெருமிதத்துடன்

" நீ இன்னும் ஸ்கூலே படிச்சு முடிக்கலையா" என்றான் இதில் ஏதோ உள்குத்து இருக்கிறது என்று என் மனதுக்குப் பட்டது.

"நீ என்னோட படிப்பப் பத்திப் பொடியன்கிட்ட எதாவது சொன்னாயா" என்றேன்

"இல்லைங்க ஒங்க அம்மாதான், அப்பா மாதிரி இருக்காதேன்னு நேத்தி சொல்லிக்கிட்டு இருந்தாங்க" என்றார் தங்க்ஸ்.

" ஆமாண்டா நாந்தான் சொன்னேன், என்ன இப்போ" என்றார் அம்மா.

" நான் 2000 த்துல அந்த எக்ஸாம்....." என்று முடிப்பதற்குள்

" கிருஷ்ணா அங்கிள் சொன்னாரு, ஏதோ Y2K, கம்ப்யூட்டர் ப்ராப்லம் அதனாலதான் நீ பாஸ் ஆனியாமே" என்றான் பொடியன்.

அம்மாவும் தங்கமணியும் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தார்கள். நான் முறைக்க ஆரம்பித்தேன். ஒத்துக்கறேன் ஒத்துக்கறேன். நான் பல்பு வாங்கினத ஒத்துக்கறேன். ஆபீஸ் எக்ஸாம் பாஸ் பண்ணிட்டு நெக்ஸ்ட் மீட் பண்றேன் என்றேன் மனதுக்குள்.

"ஏங்க அந்த ப்ரோமோஷன் எக்ஸாம் என்னாச்சு, அஞ்சு வருஷமா எழுதுறிங்களே" என்றார் தங்கமணி

மானங்கெட்ட மனசாட்சி வெளில எல்லாம் கேக்குது

Wednesday, December 8, 2010

லேடீஸ் ஸ்பெஷல்

என்ன இப்படிக் கிறுக்கி வெச்சிருக்கீங்கன்னு யாரும் கேட்டுட முடியாது இவங்களை. அதுக்குத்தான் ப்ளாக் பேருலயே கிறுக்கல்கள் அப்படிங்குற வார்த்தையை வெச்சிருக்காங்க. வழக்கமா நாம போடற பதிவுக்கு டிஸ்கி எழுதுவோம். இவங்க கொஞ்சம் மேல போய் வலைப்பூவுக்கே டிஸ்கி கொடுத்திருக்காங்க.

சரி என்னதான் எழுதுறாங்கன்னு, மன்னிக்கவும், கிறுக்குறாங்கன்னு போய்ப் பாத்தா தொலைஞ்சீங்க. வாரா வாரம் ஒரு ஹோட்டலுக்குப் போயிட்டு அங்க உள்ள எல்லாத்தையும் சாப்பிட்டுவிட்டு ஒரு பதிவு அதைப் பத்தி. பர்ஸ் எடுத்துட்டுப் போறாங்களோ இல்லையோ கேமராவும் கையுமாப் போய்டுவாங்க போல. வித விதமா போட்டோ. படிக்கிறவங்களை வெறுப்பேத்துறதுக்கே போட்ட மாதிரி இருக்கும்.

இந்தப் பதிவுகளுக்கு விஜி மேடம் ஒரு டெம்ப்லேட் பின்னூட்டம் போடுவாங்க. ‘பாத்துட்டேன் அப்புறம்’ அப்படின்னு. அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான். என்னிய வுட்டுட்டு நீங்க மட்டும் போய் நல்லா சாப்புடுறீங்க அப்படிங்கறதுதான்.

சரி, இது தவிர வேற என்ன எழுதி இருக்காங்கன்னு பாத்தோம்னா விதூஷ் எழுதின கவிதைக்கு ஒரு கோனார் நோட்ஸ். கோபுலுன்னு விகடன்ல ஒரு கார்டூனிஸ்ட் இருந்தார். அதுல ஒரு கார்ட்டூன் ஞாபகம் வருது. ஒரு சிறுவன் அப்பா இருக்கும் அறைக்குப் போவான். அவர் அப்போதுதான் முகம் முழுதும் ஷேவிங் கிரீம் தடவி வைத்திருப்பார். சிறுவன் பயந்து போய் வேறொரு அறைக்குப் போவான். அங்கே அம்மா நிறைய பேசியல் கிரீம் கொண்டு முகம் பூரா அப்பி வைத்துக் கொண்டிருப்பார். சிறுவன் அதைப் பார்த்து விழுந்தடித்துக் கொண்டு ஓடுவான். எனக்கு அது மாதிரிதான் ஆச்சு. விதூஷ் கவிதையை முதலில் படித்தேன். அதன் பின் வித்யாவின் கோனார் நோட்ஸ். நான் பதிவு எழுத ஆரம்பித்த கொஞ்ச நாளிலேயே எனக்கு நடந்த இரட்டை விபத்து இது. இது போக இவர் நிறைய முழி பேர்ப்புக் கவிதைகள் எழுதியுள்ளார். உங்களால் ஒரு கவிதைக்கு மேல் படிக்க முடியாது. ஒரு கவிதை படித்து முடிக்கும்போதே முழி பேந்து விடுமே!

அது என்ன மாயமோ, பக்கோடா கட்டித் தரும் பேப்பரில் உள்ள விஷயம் எப்போதுமே சுவாரஸ்யமாகவே இருக்கும். அந்தப் பொது விதியை நம்ம்ம்ம்ம்ம்ம்ம்பி பக்கோடா பேப்பர்கள் பதிவுகளைப் படிக்க ஆரம்பித்தேன். முழி பேர்ந்ததுதான் மிச்சம்.

அடுத்தது தி கிரேட் விஜி. இவங்களைப் பத்தி நான் ஒண்ணும் பெரிசா சொல்ல வேணாம். ஏற்கனவே இவங்க பேர்ல இருந்த வலைப்பூ ஒண்ணு காணாம போச்சு. கூகிளுக்கே பொறுக்கலை. அதான் காணாம போச்சு. இப்போ புதுசா ஒண்ணு. தி கிரேட் விஜி அப்படின்னு வலைப்பூ பேரு. எப்படியும் பெரிசா பதிவு ஒன்னும் போடப் போறதில்லை. அதனால பேர்லயாவது கிரேட் இருக்கட்டும்னு வெச்சிக்கிட்டாங்க போல.

எனக்கு ஒரு சந்தேகம் வரும். இவங்களை நம்பி எப்படி சங்கத்தோட பொறுப்பை ஒப்படைச்சாங்கன்னு. அப்புறம்தான் தெரியுது, யார் ரொம்ப வெட்டியோ அவங்க பொறுப்பில்தான் சங்கம் இருக்கிறது என்று. நான் கூட ரொம்பப் பெருமைப் பட்டேன். நம்மையும் எழுதக் கூப்பிடுகிறார்களே என்று. அப்புறம்தான் தான் தெரியுது, வெட்டியா உள்ளவங்களைத்தான் எழுதவே கூப்பிடுவாங்கன்னு. அதெப்படி விஜி, நான் வெட்டிங்குறதை இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சீங்க?

இவங்க மூணு பெரும் விட்ட (கூகிள்) பஸ்ஸை வரிசையா நிறுத்தினா நைல் நதி நீளம் வரும். அவ்ளோ பஸ். எழுந்ததும் பஸ், புக்கு படிச்சா பஸ், சாப்பிட்டா பஸ், இத்யாதி. இதுல வித்யா பேஸ் புக்குல இருந்து சில விஷயங்களை எடுத்து பஸ்ல விடுவாங்க.

பதிவிற்குச் சம்பந்தமில்லாத விஷயம்

நான் பதிவெழுத ஆரம்பித்த நாட்களில் இருந்து கிட்டத்தட்ட என் எல்லாப் பதிவுகளுக்கும் பின்னூட்டம் போடுபவர்கள் பரிசல்காரனும் வித்யாவும் (கொஞ்ச நாளாய் பின்னூட்டங்கள் இல்லை, ஏன்?). நான் இன்று ஏதோ கொஞ்சம் சுமாராக எழுத அவர்கள் கொடுத்த ஊக்கமும் ஒரு முக்கியக் காரணம். என்னுடைய சுமாரான ஒரு பதிவை வலைச்சர ஆசிரியராக அவர் இருந்தபோது அதில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்தக் காரணங்களுக்காக நான் வித்யாவுக்கு சரிவர நன்றிகள் ஒருபோதும் சொன்னதில்லை. இந்தத் தருணத்தில் சொல்லி விடுகிறேன். வித்யா, மிக்க நன்றி.

Friday, December 3, 2010

தங்கமணி தரும் அதீத விளக்கங்கள்

இதைத்தான் காலக் கொடுமைன்னு சொல்றது. போயும் போயும் என்னைய காமெடியா எழுத சொல்லி சொல்றாங்க விஜி. ஒரு வேளை என்னைய வெச்சுக் காமெடி பண்றாங்களான்னு தெரியலை. ச்சே ச்சே அப்படின்னு நீங்க சொல்லும்போதே எனக்குத் தெரியுது. விஷயம் அதேதான்.

சங்கத்தில் பதிவு எழுத என்னை ஏண்டா கூப்பிட்டோம்னு நொந்துக்கனும். அந்த அளவு சீரியஸா பதிவு போடலாம்னு இருக்கேன்.

இது போன்ற வலைக் குழுமங்களில் பதிவு எழுதுறதுன்னா என்னன்னு தெரியாம ஒரு வாட்டி அணில் கவிதா கிட்டப் போய் ‘நட்சத்திரப் பதிவர்’னா என்ன அப்படின்னு கேட்டு வெச்சேன். இப்பவே உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். பதிவுலகத்துல நான் டம்மி பீஸ் அப்படின்னு.

பஸ்ல நான் கமென்ட் போடற அழகைப் பார்த்து அருணையடி என்னை, ‘கோபி தி இன்னோசென்ட் சைல்ட்’ அப்படிங்க்றார். இந்த அழகுல நான் போய் யாரைக் கலாய்க்க முடியும்? இதுல விஜி கிட்டயிருந்து அறிவுரை வேற. கன்னா பின்னான்னு கலாய்க்கனும்னு.

எப்புடி ஆரம்பிக்கிறதுன்னு தெரியாம் இருந்த நேரத்துலதான் தங்க்ஸ் பத்தி நினைப்பு வந்தது. நீங்க இந்த men are from Mars, women are from Venus அப்படிங்கற புத்தகம் பத்திக் கேள்விப் பட்டிருப்பீங்க. அந்தக் காலத்து இளைஞர் அப்படின்னா ‘வஞ்சியரின் வார்த்தையிலே அர்த்தமே வேறுதான், அர்த்தமெல்லாம் வேறுதான், அகராதியும் வேறுதான்’ அப்படிங்கற பாட்டாவது உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். விஜி, அபி அப்பா, அருணையடி, அணில் கவிதா இவங்கல்லாம் ஸ்கூல் போகும்போது வந்த படம்னு நினைக்கிறேன். நான் அப்போ பிறக்கவே இல்லை.

இதுல விஜிதான் எல்லாருக்கும் சீனியர் அப்படின்னு கேள்வி. ஆனா பாருங்க அவங்க அணில் கவிதாவை தத்து மம்மின்னு கூப்பிடுவாங்க. அப்பப்போ யூத் அப்படின்னு காமிச்சிக்க இளவரசிதான் அவங்களுக்குப் புடிச்ச ஹீரோயின்னு சொல்வாங்க. அவங்களுக்குத் தெரியாது. இளவரசி போய், இன்னும் எத்தனையோ பேர் போய் இப்போ தமன்னா வந்தாச்சுன்னு. இதுல சங்கத்துக்கு மட்டும் வருத்தப்படாத வாலிபர் சங்கம்னு பேரு.

சரி அவங்களைப் பத்தின நிறைய உண்மைகளைப் பாத்தாச்சு (இதுக்குப் பேர் கலாய்க்கிறது இல்லை, உண்மையைத்தான் சொல்றேன், நம்புங்க மக்கா). டாபிக் பத்திப் பேசுவோம். ஒரே வார்த்தைக்கு தங்க்ஸ் வேற அர்த்தத்திலும் ரங்க்ஸ் வேற அர்த்தத்திலும் புரிஞ்சிப்பாங்க அப்படின்னுதான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இப்போதான் தெரியுது ஒரே செயலுக்கு அவங்க ரெண்டு அர்த்தம் சொல்றாங்க. படிச்சுப் பாருங்க.

இந்தப் பதிவுல இன்னொரு சௌகரியம். ஒருத்தர் ரெண்டு பேர்னு கலாய்க்காம ஒட்டு மொத்த ரங்க்ஸ் குரூப்பையே கலாய்த்த மாதிரி ஆச்சு. சேம் சைட் கோல் தான். பரவாயில்லை. லூஸ்ல விடுங்க.

*****************************

தங்கமணி தரும் அதீத விளக்கங்கள்

(தங்க்ஸ் பேசுவது சாய்வு எழுத்துக்களில்)

ஏங்க உங்களுக்கு நான் செய்ற சில விஷயங்கள் புடிக்கலைன்னு நினைக்கிறேன்.

அப்படி எல்லாம் எதுவும் இல்லை.

சும்மா சொல்லாதீங்க. நீங்க கேளுங்க நான் சொல்றேன். தப்பா இருந்த மாத்திக்கிறேன்.

கிடைத்த வாய்ப்பை விட்டுவிட மனம் வரவில்லை. எல்லாவற்றையும் கேட்டு விடுவது என்று கேட்க நினைத்து எழுதி வைத்திருந்த நோட்டுப் புத்தகத்தை எடுத்தேன்.

ஆமாம். புடவைக் கடையில் ஏன் இவ்ளோ நேரம் ஆக்குகிறாய்?

அப்படிக் கேளுங்க. நாங்கதான் கட்டுகிறோம் அப்படின்னாலும் பாக்கப் போறது நீங்கதான். பாக்கும் போது நல்லா லக்ஷணமா இருக்க வேண்டாமா அதுக்குத்தான் அவ்ளோ நேரம் செலவு பண்ணிப் புடவை எடுக்கிறோம். இதுலயும் உங்க நலன்தான் முக்கியம் எங்களுக்கு.

நீ சொல்றது இடிக்குதே. காலம்பர ஆபீஸ் போற அவசரத்துல உன்னைப் பாக்க டைம் எங்கே இருக்கு. சாயந்திரம் வந்ததும் டிவி பாக்கவும் பதிவு எழுதவுமே நேரம் போயிடுது. ராத்திரி பெட ரூமுக்குள்ள ஒரு நைட்டிய மாட்டிக்கிட்டுத் தான் வர்றே. நான் உன்னைப் புடவைல பாக்கவே முடியறதில்லையே.

அதாங்க தப்பு பூரா உங்க பேர்ல. நான் மெனக்கெட்டு நாலு அஞ்சு மணி நேரம் கால் கடுக்க நின்னு புடவைக் கடைல புடவை எடுத்து அதைக் கட்டிக்கிட்டு உங்க முன்னால வந்தா உங்களுக்கு என்னைப் பாக்க நேரமில்லை. உங்களைக் கட்டிக்கிட்டு....

நான் அதற்குள் அவளை இடைமறித்து, சரி சரி தப்பு எம்பேர்லதான்.

சரி அடுத்த கேள்வி கேளுங்க.

வேண்டாம். அடுத்த கேள்வி அடிபட்டுப் போச்சு

சும்மா கேளுங்க

ஏன் ரொம்ப நேரம் மேக் அப் போடுறேன்னு கேக்கலாம்னு இருந்தேன்... ஆனா அந்தக் கேள்விக்கும் நீ போன கேள்விக்கு சொன்ன பதிலைத்தான் சொல்லப் போற

சமத்துங்க நீங்க, ம்ம்ம் அடுத்த கேள்வி

நீ ஏன் எங்க மனுஷங்க வரும்போது அவங்க கிட்ட சரியாப் பேச மாட்டேன்கிற

நான் லொட லொடன்னு பேசிக்கிட்டே இருக்கேன் அப்படின்னு அவங்க நினைக்கக் கூடாதுல்ல.

சரி, ஏன் உன் மூஞ்சில எண்ணெய் வடியுது?

பொழுதன்னைக்கும் சீவி சிங்காரிச்சிக்கிட்டே இருப்பா போலருக்கே அப்படின்னு அவங்க தப்பா எடுத்துக்கக் கூடாதுல்ல அதான்.

அதுவே உங்க மனுஷங்க வரும்போது தலைகீழா மாறுதே ஏன் (பெரிதாக மடக்கிவிட்ட பாவனை என் தொனியில்)

நீங்க ஒரு டியூப் லைட்டுங்க. எங்க வீட்டில் இருந்து வர்றவங்க கிட்ட நான் நல்லாப் பேசலைன்னா உங்களுக்கும் எனக்கும் சண்டைன்னு நினைச்சிக்க மாட்டாங்க. பொண்ணை மாப்பிள்ளை நல்லா வெச்சிக்கலையோன்னு அவங்களுக்கு சந்தேகம் வந்துடாது.

எனக்குக் கொஞ்சம் தலை சுத்துது. நான் மிச்சத்தை நாளைக்குக் கேக்குறேனே.

இல்லை இல்லை. இன்னைக்கே முடிச்சிடுவோம்

யாரை, என்னையா?

இல்லைங்க கேள்வியை.

சரி, நீ சமையல் இன்னும் கொஞ்சம் ருசியாப் பண்ணலாமே (கொஞ்சம் எச்சரிக்கையாக ஒரு நான்கடி தள்ளி உட்கார்ந்து கொண்டேன்)

எனக்கு உங்க நாக்கை விட உங்க உடம்புதாங்க முக்கியமாப் படுது. சமையல் ருசியா இருந்தா நீங்க நிறைய சாப்பிட்டு வெயிட் போட்டுடுவீங்க. மத்தபடி எனக்கு நல்லாவே சமைக்கத் தெரியும். புதுசா விஜி அப்படிங்க்றவங்க பதிவுல பாவக்காயும் பரங்கிக்காயும் போட்ட ஒரு டிஷ் பத்தி நேத்தி படிச்சேன். செஞ்சு கொண்டு வரட்டுமா? இல்லை நேத்து நான் புதுசா ஒரு ஸ்வீட் கண்டுபிடிச்சேன். வெந்தயமும் நாட்டு சக்கரையும் போட்டு. அதை செஞ்சு கொண்டு வரட்டுமா?

இதற்கு மேல் கேள்வி கேட்க எனக்குத் தெம்பில்லை. மயக்கம் வந்தது போலக் கீழே விழுந்தேன்.

டேய் தம்பி, அந்தத் தண்ணி ஜாடியைக் கொண்டாடா. அப்பாவைத் தெளிய வெச்சுத் தெளிய வெச்சு அடிப்போம்.

ஓரக்கண்ணால் பார்த்தேன். பயபுள்ள என்னா வேகமா ஓடுது.

எழுந்து உட்கார்ந்து தங்க்சின் கையைப் பிடித்துக் கொண்டு இனி கேள்வியே கேட்பதில்லை, ஆளை விட்டுடு என்று கெஞ்சாத குறையாக சொன்ன பிறகே தப்ப முடிந்தது.

ரங்க்ஸ், நீங்க பாட்டுக்கு தங்க்ஸ் கேள்வி கேட்க சொன்னாலும் கேட்டு மாட்டிக்காதீங்க. தங்க்சை பொருத்தவரை நீங்கள் இரண்டு விதிகளைக் கடைபிடிக்க வேண்டும்.

ஒன்று, தங்க்ஸ் செய்வது எப்போதுமே சரி.

இரண்டு, தங்க்ஸ் செய்வது சரியா தவறா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும் பட்சத்தில், விதி ஒன்றைக் கடைபிடிக்கவும்.

இது போக கேக்காம விட்ட கேள்வி இன்னும் நிறைய. அதுல ஒன்னு ரெண்டு நீங்க கேட்டுப் பாருங்க உங்க தங்க்ஸ் கிட்ட. பதிலைப் பின்னூட்டத்தில் சொல்லுங்க, கேட்டு விட்டு உயிரோடு இருக்கும் பட்சத்தில்!

அது ஏன் உன் தங்கை நான் டூர் போகும்போது மட்டும் நம்ம வீட்டுக்கு வறா?

தேற்றம் (theorem) , கிளைத் தேற்றம் (corrolary) மாதிரி கேள்வி, கிளைக் கேள்வி: அதெப்படி நான் டூரை பாதியில் முடித்துக் கொண்டு உன்கிட்ட சொல்லாமலே ஊருக்கு வந்தாலும் அவ அதுக்கு முத நாளே கரெக்டா எப்படிக் கிளம்பிப் போயிடறா?

பேஷன் டிவி ஏன் நம்ம வீட்டில் வர மாட்டேங்குது?