Showing posts with label abiappa. Show all posts
Showing posts with label abiappa. Show all posts

Tuesday, March 31, 2009

நானும் ராதாவும் ஸ்கூல் டூர் போன கதை பாகம் 1


டேய் பசங்களா நாம வரும் வெள்ளி கிழமை டூர் போறோம்! நேரா மாயவரத்தில் இருந்து கிளம்பி சிதம்பரம் கடலூர் வழியா பாண்டிச்சேரி அங்க ஹார்பர் பார்க்கிறோம். பின்ன அங்க இருந்து கிளம்பி மரக்காணம் ரோடுன்னு ஒரு ரோடு இருக்கு அது பார்க்க வேண்டிய ரோடு ஒரே நேரா இருக்கும், அதை பார்கிறோம். அது வழியா திருகழுகுன்றன் போறோம். அங்க கழுகு வந்து சாப்பிடுவதை பார்க்கிறோம். பின்ன நாம சாப்பிடுறோம். அங்க இருந்து செஞ்சி கோட்டை போறோம். அதன் மேல சுத்தி பார்த்துட்டு அப்ப்டியே ராத்திரி சாத்தனூர் டேம் போறோம். அங்க முதலை பண்ணை போறோம். அது அப்படியே பெங்களூர் மாதிரி இருக்கும். அங்க இருந்து அப்படியே மகாபலிபுரம் போறோம், அங்க ராத்திரி ஒரு ஸ்கூல்ல தங்குறோம். காலை முழுக்க மகாபலிபுரம் பின்ன ராத்திரி மாயவரம் ரிட்டர்ன், ஒரு டிக்கெட் 30 ரூவா!

சார் இப்படி சொன்ன பின்ன A குரூப்பில் இருந்த நான் C குரூப்பில் இருந்த ராதாவை பார்க்க ஓடினேன். அவன் முதல்ல கேட்ட கேள்வி " டேய் இன்னிக்கு தான் தேதி 3 ஆச்சே உன் கிட்ட மாச பீஸ் கட்ட 20 இருக்குமே இருக்கா?"'ன்னு கேட்க நான்" இல்லடா அப்பா கிட்ட சில்லரை இல்லை 100 ரூவா கொடுத்தாங்க"ன்னு சொல்ல அதை வச்சு இந்த பதிவை ஆரம்பிச்சிட்டோம். ஸாரி எங்க விளையாட்டை!


வெள்ளி கிழமை டூர் என்பதால் வியாயன் ராத்திரியே எல்லாரும் ஸ்கூல்க்கு வர சொல்லிட்டாங்க. விடிய காலை 4 மணிக்கு கிளம்பனும். எல்லாரும் வந்தாச்சு. என்னையும் ராதாவையும் பார்த்தாலே சிவசங்கரன் பி டி மாஸ்டருக்கு ஒரு டர். ஆளுக்கு ஒரு மஞ்ச பையும் 20 இன்ச் பெல்பாட்டமும் பட்டை பெல்டும் போட்டுகிட்டு வந்தாச்சு. சரி படுத்து தூங்குங்கடான்னு சார் சொன்னப்ப ராதா சொன்னான் "பத்தியா ஓடம் ஒரு நாள் வண்டியில ஏறும்"ன்னு ன்னு ஏதேதோ சொன்னான். ஏன்னா நான் அதே கிளாஸ்ல தூங்கினதுக்கு மரத்துக்கு தண்ணி ஊத்த அனுப்ப பட்டேன். (அப்படி நான் வளர்த்த மரம் தான் இப்ப இருக்கும் பெரிய வேப்ப மரம்)


கொஞ்ச நேரம் கழிச்சு ராதா சுரண்டினான். "மாப்ள நாளைக்கு பாயும் புலி ரிலீஸ் இன்னிக்கு போய் மன்னவன் வந்தானடி பியர்லெஸ்ல பார்த்தா எதுனா டிரெய்லர் போடுவான்ன்னு சொல்ல எனக்கும் சரியா பட்டுச்சு. ரெண்டு பேரும் நைசா எழுந்து போனோம்.


ராதா சொன்னது போலவே பாயும் புலி டிரைலர் போட்டாங்க. தக்காளி வண்டி பக்கத்திலே "கொட்டிகிட்டு ஊத்துதடி வானம்" பாட்டு 2 வரி கழுகு பார்வையில் பார்த்தோம்.


பின்ன படம் முடிஞ்சு வந்து ஸ்கூல் பக்கம் பார்த்தா அய்யோடா எல்லோரும் போயாச்சு. நானும் ராதாவும் பதறி போய் வாட்ச் மேன் கிட்ட கேட்டா "எல்லாரும் போயாச்சு"ன்னு சொல்லிட்டார்!


எங்க 2 பேருக்கும் டூர் பாழாய் போனது கூட முக்கியமா இல்ல! வீட்டிலே ஊருகாய் நினைச்சா பயமா இருந்துச்சு. "ராதா நாம இப்ப முக்கியமான முடிவு எடுக்கனும் உன் கிட்ட என் கிட்ட சேர்த்து 97 ரூவா தனியா இருக்கு நாம நேரா பாண்டிக்கு போயிடலாம் அங்க நம்ம பஸ் பிடிச்சிடலாம்"ன்னு சொன்னேன். சரின்னு அந்த ராத்திரி 3 மணிக்கு கிளம்பியாச்சு பாண்டிக்கு நாங்க 2 பேரும்.


இதிலே என்ன கூத்துன்னா "பிரபாகரன்" பஸ் சர்வீஸ் பஸ் ரிப்பேர் ! அவங்க அடுத்த பஸ் அடுத்த நாள் காலை 10 மணிக்கு தான் பஸ் தருவேன்ன்னு சொல்லிட்டாங்க! அதனால சார் எல்லாரையும் அவங்க அவங்க வீட்டுக்கு போக சொல்லிட்டாரு! ஆனா நானும் ராதாவும் தான் கிளம்பிட்டோமே டூர்க்கு அது தெரியாம!


அடுத்து என்னன்னு ஆச்சர்யமா இருக்கா வெயிட் பிளீஸ்!!!

Thursday, March 19, 2009

வைகிங் ஜட்டியும் ஆம்பூர் பிரியானியும்!!!

போன வியாழன் என் ரூம்க்கு வந்த ஒரு பிரண்டு ரொம்ப நொந்து போய் பேசினான். என்னடான்னு கேட்டதுக்கு "ஒன்னும் இல்ல அபிஅப்பா, என் கிட்ட இருக்கும் ஒரு போர்மென் அவன் பொண்டாட்டிய என் முன்னாடியே கன்னா பின்னான்னு திட்டினான் லூசுப்பய"ன்னு சொன்ன உடனே ஆகான்னு எனக்கு பத்திகிச்சு.

"எதுக்கு திட்டினான்"ன்னு கேட்டேன்.

""அது அபிஅப்பா அவனுக்கு வைக்கிங் ஜட்டின்னா ரொம்ப பிடிக்குமாம். அது இங்க கிடைக்கலையாம், அதனால யார் ஊர்ல இருந்து வந்தாலும் அவனுக்கு அவன் பொண்டாட்டி அதை கொடுத்து அனுப்புமாம், ஆனா அது 2 மாசமா அனுப்பலையாம். அதுக்காக ஆம்பூர்ல இருந்து யார் வந்தாலும் அவனுக்கு அது அனுப்பிகிட்டு இருக்கு. அப்படி இருந்தும் ஒரு மாசமா இவனுக்கு வர்லை, அதான் கடுப்பாகி திட்டினான். எனக்கே அசிங்கமா இருந்துச்சு, அவனை எப்படி பழி வாங்கலாம்ன்னு யோசனை பண்ணிய போது தான் உங்க நினைப்பு வந்துச்சு \”

எனக்கு பகீர்ன்னு ஆகிடுச்சு. அவன் வைக்கிங் போடுறதுக்கு நான் என்ன என் வைக்கிங் தர முடியுமா என்ன? அப்படியே அந்த விஷயத்தை விட்டுட்டேன். சரி இருக்கட்டுமேன்னு அவன் நம்பர் கேட்டு வாங்கி வச்சுகிட்டேன்.அந்த நண்பனும் போயாச்சு.

அடுத்த நாள் வெள்ளிகிழமை. என் மெஸ் 4 பேருக்கும் வெள்ளிகிழமை சமைம்பதுன்னா வேப்பங்காய் மாதிரி. “அபிஅப்பா நீங்க இன்னிக்கு பிரியானி போடுங்க”ன்னு சொன்ன போது தான் டக்குன்னு நம்ம ஆம்பூரார் நியாபகம் வந்துச்சு.அதிலே எம்ம விஷயம் என்னன்னா அவன் நல்லா பிரியானி செய்வானாம்.

உடனே போன் பண்ணிட்டேன்.

“அல்லோ ஜாஹாங்கீரா”

“ஆமாம் நீங்க யாரு”

“நான் கொமாரு, உங்க ஊர் தான், நேத்து தான் ஊர்ல இருந்து வந்தேன், உங்க சம்சாரம் உங்களுக்கு ஷட்டி கொடுத்து விட்டுருக்காக”

“அப்படியா தம்பி சந்தோஷம், நான் வந்து வாங்கிகறேன். எங்க இருக்கிய நீங்க”

“அண்ணாச்சி நான் அல்கூஸ், நீங்க ஜேபலலி தான நானே அங்க வந்து தரேன், அண்ணாச்சி நீங்க ந்ல்லா பிரியாணி செய்வீங்கன்னு வீட்டுல சொன்னாங்க, நான் அங்க வந்து ஷட்டிய கொடுத்துட்டு பிரியானி சாப்பிட்டு போறேன்”

“அட இல்லப்பா நான் அங்கயே வரேன், நான் வேணா உன் ரூம்ல இருந்து பிரியானி போடுரேன். எங்க ஊருக்கே பிரியானி பேமஸ் ஆச்சே”

“சரி அண்ணே” வந்துடுங்க இங்க “ அப்படீன்னு சொல்லிட்டு அட்ரஸ் சொல்லிட்டேன்!

என் மெஸ் மெட் எல்லாருக்கும் சந்தேகம். பின்ன விளக்கமா என்ன நடக்க் போவுதுன்னு சொல்லிட்டேன்.

சரியா ஒரு மணி நேரம் பின்ன வந்தாரு நம்ம ஹீரோ.

டொக் டொக் டொக்

“வாங்க நீங்க யாரு?’

‘என் பேரு ஜகான்கீரு இங்க கொமாரு யாரு?’

“அட அவரு ஜெபல்லலி போயிருக்காரே, யாருக்கோ பார்சல் வந்துச்சாம், அதை கொடுக்க போயிருக்காரு” இது நான்.

‘அட அவன் ஒரு வெளங்காத பயங்க, எனக்கு சின்னதுல இருந்தே தெரியும் அதை, அந்த லூசு இப்பவும் அப்படித்தான் இருக்குதா, நான் தெளிவா சொன்னேன் நான் இங்க வந்து வாங்கிகரேன் என் பார்சலைன்னு, கேட்டுச்சா பாருங்க, இருங்க அந்த லூசுக்கு போன் பன்ணுறேன்”

நான் தான் வெவரமா போனை சைலண்ட்ல வச்சிட்டனா. ஜகாங்கீர் கிட்ட இருந்து போன் வந்ததும் வெளியே போயிட்டேன்.

“அல்லோ கொமாரு, நான் தான் அண்ணன் ஜகாங்கீரு பேசுறேன்”

‘அட சொல்லுங்க அண்ணே, நான் ஜேபலலியிலே இருக்கேன், உங்களுக்கு எதுக்கு சிரமம் கொடுக்கணும்ன்னு, என் மெஸ் பார்ட்னர் எல்லாம் பிரியானி செய்யனும்ன்னு சொன்னாங்க வந்து செஞ்சுடலாம்ன்னு இங்க வந்துட்டேன்”

‘சரி சரி நான் உன் ரூம்க்கு வந்துட்டேன். நானே பிரியானி செஞ்சுடுறேன். நீ இங்க வந்துடு”

“சரி அண்ணே, அங்க சிவா, கார்த்தின்னு இருப்பாங்க நான் ஏற்கனவே கறி 3 கிலோ வாங்கி வச்சுட்டேன், நீங்க ஆரம்பிங்க நான் வந்துடறேன்”

“சரி நீ இங்க வந்துடு”

நானும் வெளியே போய் போன் சென்சுட்டு அழகா உள்ளே வந்தேன்.

“யாருங்க சிவா, கார்த்தி கொமாரு கறி வாங்கி வச்சிருக்கானாம். எங்க அது எடுங்க, எனக்கு நான் கேக்குறதை எல்லாம் கொடுங்க”

உள்ளே வந்த நான் “சார் நீங்க மொதல்ல கைலி கட்டுங்க”ன்னு சொன்னதுல பூரிச்சு போயிட்டாரன்.

ஆச்சு சர சரன்னு பிரியானி தான் ஒருத்தனே செஞ்சான். நாங்க யாரும் எந்த ஹெல்ப்பும் பண்ணலை. அதிலே அவருக்கு ரொம்ப பெருமை. தான் ஒத்த ஆளா செய்வதை நினைத்து.

90 நிமிஷத்தில் பிரியாணி ரெடி. நடுவே நடுவே எனக்கு வேற போன். நான் வெளியே போய் போய் பேசிட்டு வந்தேன்.

பின்னவும் எனக்கு போன் பண்ணினான்.

“அண்ணே எனக்கு செம டிராபிக் ஜாம், நீங்க அங்க சாப்பிட்டு கிளம்புங்க, நான் உங்க ரூம்ல வாசல்ல இருக்கும் பயர் ஹோஸ் ரீல் டப்பா திறந்து அந்த பார்சலை வச்சுட்டேன். நீங்க வந்து எடுத்து கோங்க”ம்மு சொன்னேன்.

“சரி தம்பி நான் வந்து எடுத்துக்கறேன். சின்ன பிள்ளையிலே உன்னை பார்த்தது. அதான் பார்க்க ஆர்வமா இருந்தேன். சரி விடு அடுத்த தபா பார்த்துக்கலாம். சரி நான் சாப்பிட்டு கிளம்பறேன். உன் மெஸ் ஆளுங்க எல்லாம் நல்ல ஆளுங்க, கார்த்தி, சிவா, சேகர், தினேஷ், பின்ன தொல்ஸ்ன்னு ஒருத்தரு எல்லாம் நல்ல ஆளுங்க, நான் சாப்பிட்டு கிளம்பறேன்”

‘சரின்ண்ணே, நீங்க கிளம்புங்க”

இப்படி சொல்லிட்டு நான் ரூம் உள்ளே வந்துட்டேன்.

பின்ன எல்லாரும் சாப்பிட்டோம். அருமையான பிரியானி.

அவன் ஜேபல்லலி போய் பார்சல் இல்லாம போன் பண்ணினா நான் என்ன செய்யட்டும்????

Friday, March 6, 2009

மனைவியை கொடுமைப்படுத்துவது எப்படி?


ரொம்ப சிம்பிள்! அதுக்கு தேவையான உபகரணங்கள் ஒரு கம்பியூட்டரும் நெட் கனக்ஷனும் இருந்தா போதும். எப்படியோ தத்தி குத்தி தமிழ்ல டைப்ப ஆரம்பிச்சுட்டு பின்ன ஒரு பிளாக் எழுத ஆரம்பிச்சுட்டா போதும். அத்தோட உங்க கவலை விட்டுச்சு. இனிமே கவலைப்பட போவது எல்லாம் மத்தவங்க தானே.
நானும் அப்படி இப்படி ஏதோ கிச்சு கிச்சு காட்டும் பதிவரா ஃபார்ம் ஆகிட்டேன். என்ன தான் நீங்க எல்லாம் ஒத்துகிட்டாலும் வீட்டுல ஒத்துகிட்டா தான கொஞ்சம் மரியாதை. அப்பத்தானே கல்யாணபரிசு தங்கவேல் பொண்டாட்டி மாதிரி பிளாக்கர்ஸ் வீட்டு தங்கமணிகளும் ஆப்பிள் ஜூசும், ஆட்டுக்கால் சூப்பும் தருவாங்க.


ஆனா என் வீட்டுல எல்லாம் தலைகீழ் கதை தான். இந்த தடவை நான் போனப்ப எப்படியும் என் தங்கமணியை என் பதிவு எல்லாம் படிக்க வச்சு சிரிக்க வச்சு போட்டோ எடுத்து "பாருங்க நான் எப்படி சந்தோஷமா வச்சிருந்தேன்"ன்னு என் வருங்கால சந்த்திக்கு காட்டிட ஆசைப்பட்டேன். ஏன்னா வரலாறு முக்கியம் இல்லியா?


"சரி நான் இத்தன எழுதறேனே, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்ன்னு பயரியா 1431 பல்பொடி மாதிரி பேமஸ் ரைட்டரா இருக்கேனே, உனக்கு பெருமை இல்லையா அதல்லாம்?"


"ஹி ஹி, வேற பேச்சு இருந்தா பேசுங்க"


"அட நான் ஒரு காமடி எழுத்தாளன் தெரியுமா? என் பதிவை படிச்சுட்டு எத்தன பேர் சிரிக்கிறாங்க. பாரேன் இந்த பதிவை இதை படி பின்ன தான் சாப்பாடு சாப்பிடுவேன்"


மனசுக்குள்ளே (அட ஆண்டவா இவரை சாப்பிட வைக்க இந்த நரக வேதனை தேவையா)


"அட சூப்பர் பதிவு, நல்லா இருக்கு அதும் அந்த எழுத்து ஓட்டம் நல்லா இருக்கு, கதாநாயகன் டயலாக் அருமை, இப்ப சாப்பிடுங்க"


அடப்பாவமே ரமணர் சொன்னது சரிதான் போல இருக்கு. ஒருவன் பிறருக்கு கொடுப்பது எல்லாம் தனக்கே கொடுத்து கொள்வதாக அர்த்தம்’ன்னு, ஆகா நாம எத்தன பதிவிலே இதே டயலாக்கை படிக்காமலே போட்டு தாக்கியிருக்கோம். நமக்கே திரும்புதேன்னு நெனைச்சுகிட்டேன். இதை இப்படியே விடலாமா?


"அட இதுல ஹீரோ எல்லாம் கிடையாது. உனக்கு அஞ்சு நிமிஷம் டைம் தரேன். படி, பின்ன இதுல கேள்வி எல்லாம் கேப்பேன் எல்லாம் சரியா இருந்தா அட்லீஸ்ட் 80% வாங்கினா சாப்பாடு இல்லாட்டி சாப்பிட மாட்டேன்''.


பின்ன பத்து நிமிஷம் கழிச்சு வந்து பார்த்தா தங்கமணி கண்ணுல தாரை தாரையா கொட்டுது. என் காமடி பதிவை படிச்சுட்டு இப்படி அழுத முதல் ஆள்! என்ன்ன்னு கேட்டா "இந்த சிலபஸ் ரொம்ப கஷ்டமா இருக்கு வேற ஈசியா கொடுங்க"ன்னு சொன்னாங்க. விடுவனா? சரி தர்ரேன். இந்த பதிவிலே பாப்பா பாரத மாதா வேஷம் போடுறா, அதுல என்ன கஷ்டம் ஈசி சப்ஜெக்ட் தானே. சரி இந்த பதிவை படி ரொம்ப ஈசி தான் இந்த சப்ஜெக்ட் "பசுவுக்கு சவாலா" நல்லா இருக்கும் படி. பின்ன சாப்பாடு.


ஒரு வழியா 2 பதிவை படிக்க வைக்கும் முன்னே தாவு தீந்து போச்சு. ஆனா தங்கமணி தான் அழுத கண்ணும் சிந்திய மூக்குமா எப்போதும் போல "பேசாம அந்த சென்னை வரனுக்கே அப்பா முடிச்சிருக்கலாம், விதி எல்லாம் விதி"ன்னு சலிச்சுகிட்டு போனாங்க.


அடுத்த நாள் காலையிலே மாத்திரை மருந்துன்னு எடுத்து வரும் போது கண்டிப்பா சொல்லிட்டேன். சில கேள்வி எல்லாம் கேப்பேன். பின்ன தான் எந்த மருந்தும்ன்னு. சில பல கண்டிஷன் எங்களுக்கு இடையே. அதாவது அபிபாப்பா குளூ கொடுக்கலாம். ஆனா ஜாடையால் மட்டுமே. வாயால் சொல்ல கூடாது! சரின்னு ஒத்துகிட்டு சிலபஸ் கேட்டாங்க. சரி நானும் முதல்ல நம்ம வ.வா சங்கத்தையே முதல் சிலபஸ்ன்னு சொல்லிட்டேன். அதுக்கு இலவச இனைப்பா பாப்பா சங்கம்.


ஒரு மணி நேரம் அம்மாவும் பொண்ணும் விழுந்து விழுந்து படிச்ச பின்னே நான் வந்து உக்காந்தேன். என்னை ஒரு வில்லன் மாதிரியே பார்க்கிராங்க.


"சரி வவாசங்க தல யாரு"


"கைப்புள்ள"


"குட், இது கேள்வில சேர்த்தி இல்ல! சும்மா டிரையல் பால் மாதிரி(இப்படித்தான் தெரு பசங்க கிட்ட கிரிக்கெட் விளையாடும் போது நான் அவுட் ஆகும் போதல்லாம் அது டிரயல் பால்ன்னு சொல்லுவது வழக்கம்) முதல் கேள்வி கேட்கவா"


"அய்யோ நான் இந்த போங்கு ஆட்டத்துக்கு ஒத்துக்க மாட்டேன், இதும் ஒரு கேள்விதான், ஏன் சங்கத்து தல அதுக்கு கூட ஒர்த் இல்லியா? சரி அட்லீஸ்ட் இந்த பதிலுக்கு இந்த சின்ன மாத்திரை ஓக்கேவா"


"சரி ஓக்கே சின்ன மாத்திரை தானே, இப்ப கேக்குறேன் பாரு, சங்கத்தின் போர் வாள் யார்?"


"அய்யோ எடுத்த உடனே பத்து மார்க் கேள்வி கூடாது சின்ன சின்ன தா கேளுங்க 1 மார்க் கேள்வியா கேளுங்க, சிபி சம்மந்தமா, பாலாஜிதம்பி சம்மந்தமா இப்படி ஒரு மார்க் கேள்வி ஓக்கே"


"சரி ஓக்கே சிபிக்கு எத்தனை பிளாக் இருக்கு, ஊருக்கு தெரிஞ்சு எத்தனை, ரகசியமா எத்தனை?"


"அய்யோ இது அவருக்கே தெரியாது! வேற எதுனாவது பாலாஜி பத்தி கேளுங்க"
"சரி பாலாஜி பின்னூட்டம் வாங்க என்ன பண்ணுவாரு?"


"பதிவு போடுவாரு"


"அய்யோ அதிக பின்னூட்டம் வாங்க என்ன பண்ணுவாருன்னு கேட்டேன்"
அபி அப்ப குறுக்கிட்டு"அப்பா நீங்க கேட்ட கேள்விக்கு சரியான பதில் தான் இது மரியாதையா மார்க் கொடுங்க, அதனால இந்த பெரிய மாத்திரை ஓக்கேவா"ன்னு சொல்லிகிட்டே வாயிலே மாத்திரையை போட்டு தண்ணி ஊத்திட்டா.


"அப்படியா சரி இப்ப சொல்லு, புலி யாரு?"


"பிரபாகரன்"


"நோ"


"இல்லியா, அப்ப அவரு யாரு?"


"அந்த நோ இல்லை இது, சங்கத்துல யாரு புலி"


"சங்கத்துல எல்லாம் சிங்கம் தான் புலி இல்ல"

இல்ல ஒரு புலி இருக்கு நாகையிலே இருந்து"


"அய்யய்யோ நாகைல புலியா அப்ப உங்க ஆட்சி அம்பேலா?"


அதுக்கு அபி"அய்யோ அம்மா, அந்த புலி அங்கிள் புலிமார்க் வாசனை சீயக்காய் தூள் போட்டு குளிப்பாராம் அதான் அந்த பட்ட பேரும்மா, அதுக்கு எல்லாம் ஆட்சியை கலைக்க மாட்டாங்க"


"சரி இப்ப சொல்லு தேவ்க்கு என்ன பட்ட பேர்? "


தங்கமணி அபியை பார்க்க அபி தன் முயற்சி எல்லாம் சைகையிலே சொல்லியும் புரியாமல் விழிக்க அப்ப பார்த்து தம்பி நட்டு "வாள்"ன்னு கத்த நான் "அபி ஏன் அவன் வாள்ன்னு கத்துறான்ன்னு நான் கேட்க அபி அதுக்கு "அவன் "போர்" அடிச்சா அப்படித்தான் கத்துவான்ப்பா"ன்னு சொல்ல தங்கமணிக்கு ஞானம் வந்து "போர்வாள்"ன்னு சொல்ல நான் அப்படியே நட்டுவும் அபியும் சைகையால் உதவி செய்யாம வார்த்தையால் உதவி செய்தமையால் நான் மார்க் கொடுக்கவில்லை.


"ந்தோ பாருங்க உங்க சங்கத்து சிங்கத்துக்கு எல்லாம் பத்து பத்து புள்ள பொறந்து எல்லாம் ஆளுக்கு 8 பிளாக் ஒரிஜினலாவும், 27 பிளாக் பினாமியாவும் வச்சு எப்ப பார்த்தாலும் அவங்க அப்பா எல்லாரையும் படிச்சு கமெண்ட் போடுங்கப்பான்னும், ஆன்லைன்ல இருந்தாலும் ஆஃப் லைன்ல இருந்தாலும் லிங் கொடுத்தும், தனி மெயில்ல "நேரம் இருக்கும் போது படிங்க,இதான் என் லிங் :குறிப்பு: இன்னும் 10 நிமிஷத்துல நேரம் உங்களுக்கு கிடைக்கலைன்னா நான் திரும்பவும் ஒரு மெயில் அனுப்பி ஞாபகப்'படுத்தறேன்' எனவும் சொல்லி தொல்லை குடுக்கலை என் பேரை மாத்திகுங்க"ன்னு சாபம் விட்டுட்டு போயிட்டாங்க.


அத்தோட நான் 2 நாள் டைம் கொடுத்தேன். நல்லா படிச்சு பாஸ் பண்ணுங்கன்னு சொல்லி!
*************************
மக்கா பதிவு முடிஞ்சுது. இப்ப தலைப்பு ஓக்கேவா! ஆனா பாருங்க பதிவு தான் முடிஞ்சுதே தவிர ஒரு விஷயம். எல்லார் தங்கமணியும் ஒரு கொடுமைன்னா தாங்கிட்டு விதின்னு போயிடுவாங்க. ஆனா என் வீட்டு நிலைமை இருக்கே ரொம்ப கொடுமை. "கணவனை கொடுமை படுத்துவது எப்படி"ன்னு அடுத்த பதிவே போடும் அளவு சமாச்சாரம் இருக்குங்க. வந்தது வந்துட்டீங்க அதையும் படிச்சு தொலைங்க அந்த கொடுமையை!
*******************************
"என்னங்க இன்னுமா தூக்கம் ஆயில்யன் காலை பதிவு போடும் நேரம் ஆச்சு, விட்டா தூங்கிகிட்டே இருப்பீங்க தம்பி ஆயில்யன் மதிய பதிவு போடும் வரைக்கும்"


"அல்லோ என்னங்க பப்பு இன்னிக்கு ஸ்கூல்க்கு டிபன் வேண்டாம், சும்மா திராட்சை பழம் போதும்ன்னு சொல்லிட்டா"- இது தங்கமணி!


"ஏன் டேய் அபி என்ன நினைச்சுகிட்டு இருக்க நல்லா சாப்பிடனும்"- இது நான்


"அப்பா நான் பப்பு இல்ல பாப்பா, அம்மா சொன்னது பப்புவை பத்தி, முல்லை ஆண்டி பதிவு படிச்சிருப்பாங்க போல இருக்கு"- இது அபி!


"சாப்பாடு என்ன ஆச்சு?" இது நான்!


"இருங்க நல்லா ஸ்டெர்லைஸ் பண்ணாம தட்டு கொடுக்க கூடாதுன்னு அம்மா வலைப்பூவிலே போட்டிருந்தாங்க"- தங்கமணி

மதியம்: அல்லோ என்ன பண்ணிகிட்டு இருக்க!

தங்கமணி: இருங்க எட்டு புள்ளி எட்டு வரிசை கோலம் போட்டு ஸ்கேன் பண்ண போரேன்!


"நான் கடவுள் படம் இன்னிக்கு போலாமா"


"லக்கி நல்லா இருக்குன்னு சொல்லியாச்சு, அதிஷா அருமைன்னு சொல்லியாச்சு, அடுத்து 4 பதிவு ஒரே கொடுமை அதும் லேடீஸ் வர கூடாதாம். நீங்க போய் தனியா பார்த்துட்டு வாங்க"


"ஹல்லோ சாப்பாடு என்ன இன்னிக்கு"


"இருங்க அதுக்கு தான் நானும் வெயிட்டிங், தூயா எப்படியும் இன்னிக்கு ஒரு பதிவு போடுவா, இன்னிக்கு அதான் மெனு!"

"ஏங்க இன்னிக்கு போய் LIC கட்டிடுங்க ஏன்னா இன்னிக்கு கோபி பதிவு போடும் நாள்!"

"ஓ இன்னிக்கு சம்பள நாளா சரி ஓக்கே, ஆமா 6 மாசத்துக்கு ஒரு தடவை வீட்டு வரி கட்டனுமே அதை எப்படி நியாபக படுத்துவ?"

"அதான் டுபுக்கு பதிவு போடுவாரே அப்ப கட்டினா போதும்"
"சரி ஹீட்டர் போடு நான் குளிக்க போறேன்"
"அய்யோ ரிஷான் பதிவு படிக்கலையா உலக செய்தி, ஆப்ரிக்காவிலே ஒருத்தர் ஹீட்டர் போட்டு குளிச்சதுக்கு அமிஞ்சிகரையிலே எலக்ட்ரிக் பில் வந்துச்சாம்"


" சரி ஷூ எடு நான் விளையாட போகனும்"


"அய்யோ டெட்டால் தீர்ந்து போச்சு சேத்துல நடந்து போய் டெட்டால் வாங்கிட்டு வாங்க, டாக்டர் புரூனோ சொல்லிட்டாரு"


'சரி எதுனா அய்யனார் பதிவு வந்துச்சா?"


"அய்யோ ஏன் இப்படி புத்தி போகுது உங்களுக்கு நான் கேயாரெஸ் பதிவு நறுக்குன்னு 4 எடுத்து வச்சிருக்கேன் வந்து படிங்க"


"இல்ல நாம ஒரு முடிவுக்கு வரலாம்! இனி நானும் உன்னை கொடுமை படுத்த மாட்டேன், நீயும் என்னை கொடுமை படுத்த கூடாது ஓக்கே"

Monday, March 2, 2009

"ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!"




சின்ன வயசுல பெரிய அண்ணாத்த அக்கா இவிங்களுக்கு எல்லாம் தம்பியா இருக்கும் அவலம் இருக்கே ரொம்ப கொடுமை. அவங்க விளையாட்டுக்கும் சேர்த்துக்க மாட்டாங்க. நம்மையும் தனியா விளையாட விட மாட்டானுங்க. அப்படியே சேர்த்து கிட்டா கூட உப்புக்கு சப்பானியா ஒரு கை குறைஞ்சா பெரிய மனசு பண்ணுவானுங்க. அந்த ஸ்டேஜ் எல்லாம் போய் நானும் ரவுடிதான்ன்னு ஜீப்பிலே ஏறிகிட்டு லந்து விட்டு முடிச்ச பின்ன இப்ப திரும்பவும் அப்படி ஒரு டிப்ரஷன் வந்துடுச்சு.


இந்த 40+ வந்தாலே ஆணோ, பெண்ணோ சரி. இந்த யூத்துங்க தொல்லையும் தாங்கலை. பெரிசுங்க தொல்லையும் தாங்கலை. எவனும் சேர்த்துக்க மாட்டங்கிறாய்ங்க. எதுனா ஒரு பதிவிலே கும்மி அடிக்கலாம்ன்னு பார்த்தா கூட "அபிஅப்பா கொஞ்சம் உக்காந்து நாங்க எப்படி கும்மி அடிக்கிறோம்ன்னு பாருங்க. உங்க அனுபவத்தை நாங்க மைண்டுல வச்சிக்கிறோம்"ன்னு குசும்பன், கோபி, சென்ஷி, பொடியன் & குரூப் சொல்லுது.


சரி இந்த பக்கம் போவும்ன்னு பார்த்தா சீனாசார், தருமி சார் எல்லாம் "போங்க போங்க அபிஅப்பா நாங்க சீரியஸ் பதிவு போடுவோம், நீங்க பரிசல், வேலன் அண்ணாச்சி அப்படியே அந்த பக்கம் ஒதுங்குங்க"ன்னு கழட்டி விட்டுட்டு போறாங்க.


சரி அம்மாக்கள் வலைப்பூ, பேரண்ட்ஸ் கிளப்ன்னு போய் "இந்த குழந்தை வளர்ப்பு இருக்கே அது ஒரு கலை" அப்படீன்னு ஒரு பிட்டை போட்டு நாமலும் யூத்து தான்ன்னு காமிச்சுகிட்டு உள்ளே போனா அங்க "கொலையே விழும், போங்க போங்க நாங்க குழந்தை வளர்ப்பு பத்தி எல்லாம் அபிஅம்மா கிட்ட கேட்டுக்கறோம்"ன்னு விரட்டி கழுத்த பிடிச்சு வெளியே தள்ளி விட்டுராங்க.


அப்படி பேஸ்தடிச்சு உக்காந்தப்ப தான் வீட்டு கதைவை யாரோ தட்டினாங்க.


"ஹல்லோ யாருங்க வீட்டில? அபிஅப்பா வீடுதானே இது! "


காத்து வாங்கும் கடைக்கு கூட யாரோ வர்ராங்களேன்னு எனக்கு ஒரே குஷி .எனக்கு 504 மில்லி அடிச்சு ஆஃப்பாயில் சைட் டிஷ்ஷா வச்ச மாதிரி ஒரு ஜிவ் வந்துடுச்சு. சிட்டு குருவிக்கு என்ன கட்டுப்பாடுன்னு பாடிகிட்டே ஓடி வந்து கதவை திறந்தா அட நம்ம வருத்த படாத வாலிபர் சங்கத்து சிங்கம் எல்லாம் தல கைப்புள்ள தலைமையிலே வந்திருக்காங்க.


முதல்ல இளாதான் ஆரம்பிசாரு!


"அபிஅப்பா சங்கத்துல இருந்து வந்திருக்கோம். உங்க ஒதவி வேணும்"


"அய்யய்யோ 180ல 90 போச்சுன்னா மீதி எத்தன ஆங் 90 தானே இருக்கு" இது நான்!


"டேய் டேய் டேய் வேணா! விட்டுடு, சங்கம் ஆரமிச்சு 3 வருஷம் ஆக போவுது! ரொம்ப கண்ணு பட்டு போச்சு எதுனா திருஷ்டி சுத்தி போடனும்ன்னு பாசக்கார பயலுக கேட்டானுக! உன் போட்டோ குடு சங்க ஆபீஸ்ல மாட்டனும்" இது கைப்புள்ள!


"அடங்கொய்யால, அதுக்குதான் தல உங்க போட்டோவையே மாட்டிகலாமே" இது நான்.


"யோவ் என்னுது வேற மூஞ்சி, உன்னுது நாற மூஞ்சி" - கைப்ஸ்


"அதுல ஒரு சிக்கல் ஆகி போச்சு அபிஅப்பா, இஸ்கூல் போற நாதாறி பய புள்ள எல்லாம் "குறி" பார்த்து அடிப்பது எப்படின்னு பழகுறானுங்க அந்த போட்டோவை வச்சு அதான்" இப்படி கச்சேரி வச்சது தேவ்!


"டேய் இத இவரு கேட்டாரா பக்புக்பக்புக்ப்க்" - கைப்ஸ்


"சரி ராயல் ராம் வச்சு பசங்களை சமாளிக்க வேண்டியது தானே?" - அபிஅப்பா


"அய்யோ அய்யோ சரியான மக்குனி பாண்டியனா இருக்கீர் அபிஅப்பா, எனக்கு அந்த ஆப்பு வக்கிறதே ராயலு தான் அபிஅப்பூ ...ஸ்ஸ்ஸ்ஸ் இப்பவே கண்ண கட்டுதே, முடியல," கைப்புள்ள பின் அடி முதுகை பிடிச்சுகிட்டு உக்காந்த பின்னே அடுத்து நானும் பரிதாபப்பட்டு என் போட்டோவை சங்கத்து திருஷ்டிய கழிக்க வேண்டிய காரணத்தால் கொடுத்துட்டேன், ஒரு நிபந்தனை போட்டு.


"தல எனக்கு என் போட்டோவை நீங்க சங்கத்து வாசல்ல மாட்டினாலும் சரி இல்ல ஆண்கள் கக்கூஸ்ல மாட்டினாலும் சரி ஆனா அந்த ஒரு மாசமும் நான் சங்கத்துல எழுதியே "தீர்ப்பேன்"


கைப்புள்ளக்கி கோவம் வந்து பக்கத்துல நின்ன கப்பிக்கு ரெண்டு பளார்ன்னு விட்டு "ராஸ்கல் சங்கத்து திருஷ்டிய போக்க வலைஉலக ஆன்மீக ஆழ்வாரு கேயாரெஸ் கிட்ட குறி கேட்டு வந்து திருஷ்டி கழிக்க சரியான மூஞ்சி என் மூஞ்சிக்கு அடுத்து அபிநொப்பா மூஞ்சி தான்ன்னு சொல்லி என்னய கூட்டிட்டு வந்தீங்களே, இப்ப பாரு நானும் எழுதுவேன்னு அடம், இதுக்கு பேசாம நீ தகர கவித எழுதி சங்கத்து பேரை காப்பாதுலாம், இல்லாட்டி சங்கத்தை வித்துபுட்டு பேரீச்சம் பழம் வாங்கி திங்கலாம், யோவ் அபிஅப்பா அப்படி சங்கத்துல இல்லாதவங்க எழுதினா அது அட்லாஸ் வாலிபரு அய்யா வாலிபர்"


"வாலிபர்ரோ வைரமுத்துபர்ரோ நான் எழுதுவேன் வேணும்ன்னா முதல் போஸ்ட் தலைப்பை "ஆத்தாஆஆஆஆஆஆ நான் யூத்த்த்த் ஆகிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்!!!"ன்னு தலைப்பு வச்சிக்கறேன்"


"சரி வச்சு தொலைங்க, ஆனா நீங்க யூத்து மாதிரி எழுதனும் என்னைய மாதிரி எழுதனும்"


"சரி சரி, "பீடிங் பாட்டிலை கழுவுவது எப்படி?", "டயப்பர் மாட்டுவது எப்படி?", "ரிங்கா ரிங்கா ரோஸ் ரோஸ் பாட்டு குழந்தை கண்ணன் பாட்டு தான் - ஒரு கல்வெட்டு ஆராய்சி", "ஆபீஸ் போகும் போது எடுத்து செல்லும் பொருட்கள் - ஒரு செக் லிஸ்ட்", "டயனோரா டிவியும் டயானா மாமியும்!!" அப்படீன்னு ஒரே யூத் தலைப்பா போட்டு தாக்கிடுறேன் தல, மறக்காம நம்ம போட்டோவை மாட்டுங்க"


"சரி நான் போட்டோவை மாட்டுறேன். சரியா எழுதலைன்னா நம்ம போர்வாள் அதுக்கு கீழ ஊதிவத்தி ஏத்தி வைக்கிற மாதிரி இருக்கும் பர்வால்லயா. டேய் வாங்கடா போவும், ஒரு மாசம் கழிச்சு சங்கம் இருந்தா வருவும்"


எல்லாம் சங்கத்து சாவிய என் கைக்கு கொடுத்துட்டு போயாச்சு. வாங்க மக்கா இனி நம்ம கொண்டாட்டம் தான்!