1. உங்கள் பதிவு ப்ரொபைலில் இருக்கும் அந்தப் பொன் குவியலை நீங்கள் எப்படி சம்பாதித்தீர்கள்? சங்கத்தில் களவாடிய நிதியா? இல்லை சங்கம் பெயரைச் சொல்லி நீங்கள் ஊழல் செய்த நிதியா? சங்கத்துக்காகவே உழைத்து உழைத்து உணவு சமைக்கக் கூட நேரம் இல்லாமல் காய்ந்து போன பர்கரையும் உப்பு சப்பில்லாத பிஸ்ஸாவையும் சாப்பிட முடியாமல் முழுங்கும் என்னைப் பார்த்து, களவாடிய நிதியா, ஊழல் செய்த சதியா என்னும் கேள்வியைக் கேட்டது யார்?!!! யார்?!!!
யார் கேட்ட போதும் கேள்வி என்று ஒன்று வந்து விட்ட காரணத்தால், சட்டத்துக்கும் நீதிக்கும் கட்டுப்பட்ட என்னுடைய பதில் இதோ: அட்சய திருதீயை அன்னிக்கு எல்லார் வீட்டுக்கும் போய் வந்துகிட்டு இருந்தேனா, எல்லார் வூட்லயும் கொஞ்சம் தங்கம் வாங்கி வச்சிருந்தாங்க.. அங்கங்க ஒரு காசு எடுத்ததுல இம்புட்டு சேர்ந்து போச்சு. (சங்கத்துல அப்படியே நிதி இருந்துட்டாலும்!! ம்கும்)
2. பலப் பதிவுகளிலும் உங்களை சின்னப் பெண் எனக் கூறும் நீங்கள்.. உங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சகப் பதிவாளர்களை மிரட்டி உங்களை அக்கா எனக் கூறுமாறு தொடர்ந்து பயமுறுத்துகிறீர்களாமே? இது சரியா? இது சதி.. உங்களை யாருய்யா கூப்டச் சொன்னாங்க?!! ரொம்ப தான். நான் சொன்னேனா?, நான் சொன்னேனான்னு கேக்குறேன்.. கைப்புவை அண்ணான்னு சொன்னேன்.. அவரு தங்கச்சின்னு சொல்லிட்டாரு.. கார்த்திக்கை பாசமலர்னு சொன்னேன்.. அவரு அக்கான்னு சொல்றாரு!! நானா கூப்பிடச் சொன்னேன்?!!! ம்ஹும்..
தம்பி தேவு.. அக்காவுக்கு ஒரு சோடா எடுத்தா.. தொண்டைத் தண்ணி தீர்ந்து போகுது கத்திக் கத்தி... !!!
3. தேர்தல் நேரத்தில் சங்கத்து வேட்பாளர்களுக்கு ஆதரவாக எங்குமே பிரச்சாரம் போக மறுத்து விட்டு... இப்போது மட்டும் அயல் நாட்டு சங்க வளர்ச்சி திட்டம் என்று புதிய திட்டம் வகுத்து அயல் நாடு சென்று டாலர் தேத்துவது நியாயமா? ஐயகோ.. என்னைப் பார்த்து என்ன ஒரு கேள்வி.. இதைக் கேட்க யாருமே இல்லையா?? புதிய பூமியே.. பழைய வானமே.. உனக்குமா தெரியவில்லை என் அருமை!!!!
சரி.. நான் வந்தேன்!! அதை விடுங்க.. நான் இங்க வந்ததும், சங்கத்துல எத்தனை அயல் நாட்டுக்காரங்க புதுசா சேர்ந்திருக்காங்க தெரியுமா?!! மகேஸ், சுகா, மனதின் ஓசை இவங்க எல்லாம் புது வரவு.. இங்க நான் வந்த நேரம் தான் இவங்க எல்லாம் நம்ம சங்கத்துல சேர்ந்திருக்காங்க.. ஏன், சூடான் சிவா கூடத் தான்..
கணக்கு கேட்கும் சங்கத் தலைமையே..
இந்தக் கணக்கையும் பார்!!!
கண்களைத் திறந்து பார்..
கண்ணாடியைத் துடைத்துப் போட்டுப்பார்!!!
இன்னோரு முறை கேட்டுப் பார்!!
4. புதரகத்தில் நீங்கள் மேற்கொண்டிருக்கும் அரிசி சோறு வடிப்பான் கருவி ஊழல் உண்மையா? தேவையின்றி சோறு வடிக்கும் சிறுப் பிரச்சனையைப் பெரிதாக்கி சங்கத்தாரின் பொன்னான நேரத்தை வீணானச் சோற்றுப் புராணப் பதிவுகளில் ஈடுபட வைப்பது மாபெரும் துரோகம் ஆகாதா? என்னைய்யா துரோகம், பொல்லாத துரோகம், என்னைக் கேட்டுகிட்டா தல புட்பால் ஆடப் போனாரு?!! புட்பால் ஆடத் தல போறாருன்னு சொன்னீங்க.. அதான் புட் பத்தின பதிவா போட்டேன்!!!.. அதான்யா, food - உணவு.. அது பத்தின பதிவா போட்டு கிட்டு இருக்கேன்.. "சக்கரை இல்லாமல் காபி போடுவது எப்படி ?" அடுத்த பதிவு, பால் பத்தி.. காத்திருங்கள்!!
5. சங்கத்தில் உங்களுக்கு பிகுலு பட்டத்துடன் வழங்கிய பிகுலைத் தலக்கு எதிராகவே பயன்படுத்துவது.. அதாவது தல உதை பந்து விளையாடும் இடங்களில் ஒருவனைக் கூடவே தலப் பின்னால் ஓட விட்டு தலக் கைப்பு பந்து எடுக்கும் போதெல்லாம் அவன் பிகுல் அடிப்பதைப் பார்த்து மகிழ்வது.. இது குற்றமல்லவா? என்ன இது?!! சிறுபிள்ளைத்தனமால்ல இருக்கு?!! பந்தை எசகுபெசகா எடுத்து, தலக்கு அடிகிடி பட்ருச்சுன்னா, பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு பின்னாடியே ஒருத்தனை ஓட விடறேன்.. சரியாப் பாருங்கைய்யா.. அது வேற யாரோ இல்லை.. நானே தான். நானே தான் தலைக்கு பாதுகாப்பு வளையமா பிகிலோட கூட ஓடிகிட்டு இருக்கேன்.. என்னோட தியாகத்தை மெச்சாம, இப்படி போட்டு மொத்துறீங்களே?!! பசங்க எல்லாம் சேர்ந்துகிட்டு!!!
6. கைப்பொண்ணுவை வா.வ.சவில் ( சரியாகப் பார்க்கவும் வரு.வா.ச அல்ல) வா.வ.ச... இணையச் சொல்லி மிரட்டியது.. கைப்பொண்ணுக்கு மீசை முளைக்க வைத்தது.. அதற்கு விளக்கெண்ணெய் தடவியது எனக் கொடுமைகள் இழைத்தது சரியா? இது ஆதாரம் இல்லாத குற்றச் சாட்டு.. அவதூறு பரப்பும் வேலை.. நெக்ஸ்ட்!!!
7.சங்கத்துக்கு மிகவும் நெருக்கமானப் பின்னூட்ட சூப்பர் ஸ்டார் இலவசங்களின் இமயம் வாக்குறுதிகளின் வங்கி இலவசக் கொத்தனார் மீது சங்கத்திலிருந்து தட்டு முட்டுச் சாமான்களை லவட்டிச் சென்றதாய் குற்றம் சாட்டி மிரட்டியது.. இப்போது சாதம் வடிப்பது போன்ற சுமாரான சமையல் குறிப்புக்களைக் கொடுத்துவிட்டு பரோட்டாப் போடுவது எப்படி என்ற மாபெரும் சாதனைப் பதிவுப் போட்டு மீன்கொத்தி அன்பர்களின் அமோக ஆதரவு பெற்று அமைச்சரான கொத்தனாரின் உணவுத் துறை இலாகாவைக் கைப்பற்ற நீங்கள் சதி செய்கிறீர்களாமே? கொத்தனாரின் உணவுத் துறை ஒரு காய்ந்து போன பரோட்டா! ஊசிப் போன சால்னா! அதை ஒருத்தர் கைப்பற்ற வேற பற்றணுமா??!! நம்ம எங்கயோ அடுத்த கிரகத்துல சாதம் வடிக்கிறதப் பத்தி ஹைடெக்கா யோசிச்சிகிட்டு இருக்கோம்.. அவரு இப்போ தான் தரமா வெண்பா எப்படி வடிக்கிறதுன்னு பதிவு போடறாரு பதிவு.. அதுக்கு ஒரு சதி வேறயா?!! நம்ம காரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களே!!
8.வெண்பாவைக் கட்டாயக் கல்வியாக்கி வருத்தப் படாத வாலிபர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சியது மிகப் பெரியக் குற்றம் அல்லவா? இந்தக் கேள்விக்கு கொத்தனாரும் ஜீவாவும் பதில் சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.. என்னைப் போன்ற அறியாச் சிறுபெண் இதற்கெல்லாம் என்ன கூறுவது??!!
9.கீதா அக்காவின் ஆறு லட்சம் ரசிகர் மன்றங்களைக் கலைத்தது... இன்னும் அவருக்கென் இருக்கும் சில நூறு மன்றங்களையும் பின்னூட்டமிட்டு கலவரப் பூமியாக மாற்றுவது என பெரும் சதி திட்டம் தீட்டி வருகிறீர்களாமே? ஆறு லட்சம் ரசிகர் மன்றம் எந்த ஊர்லங்க இருந்துச்சு?!! ஆறு பேர் கூட இல்லை அந்த ரசிகர் மன்றத்துல.. அவங்க கூட "என்னை இங்கேர்ந்து விடுவி.. காப்பாத்து!!"ன்னு கெஞ்சிகிட்டு இருந்தானுங்க!! நான் தான் போய் அவங்களை எல்லாம் விடுதலை செஞ்சி கூட்டியாந்தேன். இதோ இப்போ சங்கத்து சார்பா மன நல மருத்துவமனைல சேர்த்துட்டு வந்தோமே, அந்த ஆறு பேர்தான்!!
10. எல்லாவற்றுக்கு மேலாக உங்கள் மீது கூறப் படும் குற்றச்சாட்டு சங்கத்தின் உயர்வான...உயிரான... கொள்கையான வருத்தப் படாமல் இருப்பதை மீறியது.. உங்கள்த் தனி பதிவில் மட்டுமின்றி பிற பதிவுகளிலும் சென்று 'வருத்தப்படுவதாய்' பிரகடனம் செயதிருப்பது உங்கள் இயக்கத்திற்கு இழைக்கும் கொடுந்துரோகம் என்று நீங்கள் நினைக்கவில்லையா? வருத்தப்பட்டதாகச் சொன்னேன்.. ஏன் சொன்னேன்?!! எதற்குச் சொன்னேன்? நமது எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்னும் தெளிவு பிறக்க வேண்டுமென்று சொல்லப்பட்ட மதியூகமான வார்த்தைகள் அவை.
உங்களுக்கு இது புரியாமல் போனது வருத்தமில்லை என்ற போதும், கேள்வி கேட்டு இதைக் கொச்சைப் படுத்திய போது தான் மனம் ரணமாகிறது!!!
தங்கத் தம்பிகளே! ரத்தத்தின் ரத்தங்களே!! அன்பு உடன்பிறப்புகளே!!!
ஒரே கொடியில் நாம் அனைவரும் பூத்திருந்தால், கொடி தாங்காமல் உடைந்து விடக் கூடும் என்பதால், வெவ்வேறு கொடியில் பூத்த உடன்பிறவா சகோதர சகோதரர்களே!!!
நீங்கள் என்னைப் புரிந்து கொண்டது இவ்வளவு தானா?!! சங்கத்திற்காக வீக் என்டைக் கூட விலக்கி வைத்து விட்டு வியர்வை வழிய வேலை செய்து கொண்டிருக்கும் என்னை,
வெண்பா பாடவா என்று கூறி கொத்ஸும், வெ.வா. ஜீவாவும் அழைத்துக் கொண்டிருந்த போதும் சங்கத்தின் வெண்பலகையில் என் பெயர் கறுப்பு மையால் எழுதப்படக் கூடாது என்று எண்ணி விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும்,
நமது சங்கம் புட்பாலுக்குப் பின் பேஸ்பாலுக்கும், பாக்கெட் பாலுக்கும், ஆவின் பாலுக்கும் ஆடி அடுத்தடுத்துச், சங்கத்தைச் சிறப்பாக்க என்ன செய்யலாம் என்பது தான் நான் அல்லும் பகலும் அனவரதமும் எண்ணிக் கொண்டிருப்பது என்பதை இங்கு சொல்லிக்கொள்ள விழைகிறேன் (அட, இளவஞ்சி வாத்தியாரை விட நீ...ளமான வாக்கியம் ;))
இப்படிப் பட்ட என்னை நோக்கி, பத்து கேள்விகளை வீசியதல்லாது, அவற்றைப் பதில் சொல்லச் சொல்லி நாளொரு பின்னூட்டமும் பொழுதொரு குற்றச்சாட்டும் வைத்து இந்த ஒரு வாரமாக என்னை மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளாக்கி விட்டீர்கள்!!
=> இதில் சங்கத்துக்குச் சம்பந்தமில்லாத கட்டதுரையும் பார்த்திபனும் என்னைக் கெக்கலிகொட்டிச் சிரித்த போது அதைக் கண்டிக்க வேண்டிய தலைவர் எதுவுமே சொல்லாமல் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்தது ஏன்?!!
=> ஒரு கொடியில் பூத்த இரு மலர் என்று அவ்வப்போது சொல்லிக் கொள்ளும் பேராசிரியர் கமிட்மென்ட்ஸ் கார்த்திக் இந்த விவகாரத்தில் தனக்கு ஒன்றும் தெரியாது என்பது போன்று மௌனம் காத்தது ஏன்?!!
=> கேள்விகளின் ஆழம் புரிந்தும், அதனால் கேள்விக்குள்ளாக்கப் படும் எனது கட்டுரிமை புரிந்தும் கேள்விகளைப் பற்றி ஒன்றுமே சொல்லாமல், பேரிச்சம் பழங்களைப் பற்றியே பேசி இந்தக் கொடுமையைத் தளபதி சிபி கண்டிக்காமல் விட்டது ஏன்?
=> இந்த நிகழ்வைக் கண்டித்து "தீக் குளிக்கிறேன்!! தீக் குளிக்கிறேன்!!" என்று கொதிப்பதாகச் சொல்லிய ஜொள்ளு பாண்டி, ஒரு டீக் கூட குடிக்காதது ஏன்?
=> மற்ற தம்பிகள் எல்லாம் இது மாதிரி குற்றச்சாட்டுகளுக்கு ஆளான போது, ஓடோடி வந்து கைக் கொடுத்த தலைவலி கீதா இப்போது இந்தப் பிரச்சனையில் ஒன்றுமே சொல்லாதது ஏன்?
இத்தனை கேள்விகள் இப்போது எழுகின்றன.. கைப்பொண்ணு காணாமல் போனதற்கும் இப்போது சங்கத்துக்காக, ஒட்டகம் போல் உழைத்த என்னை(நாய், கழுதைன்னு எத்தனை நாள் சொல்றது?!!) ஓரம் கட்ட முயல்வது.. இவை எல்லாம் எதற்காக?!!
* மகளிர் அணியை ஒரே நபர் கட்டி ஆள வேண்டும் என்னும் பேராசையால் எழுந்த பொறாமைக் கடிதமா?
* வட அமெரிக்காவில் கொள்கை பரப்ப நான் வந்து விட்டேன் என்று அஞ்சி தோசை சுடும் பேராசிரியரின் பெரிய சதியா?
* தளபதி தலை மறைவாய் இருந்த போது தலையெடுத்து பொறுப்புடன் கட்சியைப் பார்த்துக் கொண்டேனே, அதற்கு அவர் செய்யும் கைம்மாறா?
* கழகப் போர்வாள், தலயின் கை என்று சொல்லப்படுபவர் எங்கே கைக்கு போட்டியாக, தலயின் மூளையாக நான் வந்துவிடுவேன் என்று எண்ணிக் கிளப்பிய பழியா?
இத்தனை கேள்வியும் எழுந்தாலும், எதுவும் நான் கேட்கும் கேள்வி அல்ல!! இதைக் கேட்பது எனக்காக உயிரையும் தரத் தயாராய் இருக்கும் என் அருமைத் தொண்டர்கள்..
அவர்களுக்கு நியாயமான பதில் சொல்லக் கட்சித் தலைமை கடமைப்பட்டுள்ளது.. சீக்கிரத்தில் இதற்கொரு பதில் தெரியவில்லையெனில், சோழங்க நல்லூர் சந்திப்பில் அஜன்டாவில் இல்லாமல் விவாதிக்கப்பட்ட விஷயங்களை வெளிவிட வேண்டியதாகிவிடும்!!!