Wednesday, February 28, 2007

மாமாவின் காதல் - நிறைவுப் பகுதி

மாமாவின் காதல் - முதல் பகுதி


அன்று கேண்டீனில் கூட்டம் அதிகமில்லை. ப்ரியாவும், இளாவும் டீக்குடித்துக் கொண்டே பேசிக்கொண்டிருந்தார்கள்.

வேகமாக ஓடி வந்த சுரேஷ் “ப்ரியா, மாமா பைக்ல போகும்போது ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சு… தலைல நல்ல அடியாம் KMCHல அட்மிட் பண்ணிட்டாங்களாம், கிளம்பு போலாம்”. அவர்களோடு இளாவும் கிளம்பினாள்.

மருத்துவமனையை நெருங்க நெருங்க இளாவுக்கு அழுகை ஆரம்பித்திருந்தது. ICU வுக்குள் இருந்ததால் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. அறுவை சிகிச்சை முடிந்து மாமா சுயநினைவுக்கு வர இரண்டு நாட்களானது. நினைவு திரும்பிய பிறகு அவன் அப்பாகூடவே அவனைப் பார்க்க போன அந்த நான்கு பேரோடு இளாவும் உள்ளேப் போனாள். அவன் அப்பா அவனிடம் அதிகம் எதுவும் பேசாமல் மருத்தவரைப் பார்க்கப் போய்விட்டார். அவர்கள் நால்வரும் அவனோடுக் கொஞ்சமாய்ப் பேசிவிட்டு திரும்பும் வரையிலும் ஓரமாய் அமைதியாய் நின்று கொண்டிருந்தாள் இளா. அவளிடம் யாரும் எதுவும் கேட்கவில்லை. அவளும் எதுவும் பேசவில்லை. அவளும் அவனைப் பார்த்து விட்டு வந்ததோடு சரி.

அதன் பிறகு இரண்டு மாதம் அவன் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டி ஊருக்கேப் போய்விட்டான். அந்த இரண்டு மாதமும் இளாவிடம் எதாவது மாற்றம் தெரிகிறதா என்று கவனிப்பதே ப்ரியாவுக்கும், உமாவுக்கும் வேலையாக இருந்தது. ஆனால் அவளிடம் எந்த வருத்தமும் இருந்த மாதிரி தெரியவில்லை. உண்மையா, நடிப்பா என்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. இளாவிடம் கடைசியாக ஒருமுறை கொஞ்சம் சீரியசாக கேட்டு விடுவது என்று ப்ரியாவும், உமாவும் முடிவு செய்து அவளிடம் பேச அவளை கேண்டீனுக்கு வர சொல்லியிருந்தார்கள்.

“என்னங்க்கா ரெண்டு பேரும் சேர்ந்து வந்திருக்கீங்க? வழக்கம்போல மாமாயணமா?”

“கொஞ்சம் சீரியசாப் பேசலாமா?” – ப்ரியா.

“நான் எப்பவுமே சீரியசா தான் பேசிட்டு இருக்கேன்! நீங்க தான் புரிஞ்சிக்க மாட்டேன்றீங்க”

“உண்மையிலேயே உனக்கு மாமாவப் பிடிக்கலையா?”

“பிடிச்சிருக்கவங்க எல்லாத்தையும் கல்யாணம் பண்ணிக்க முடியாதுங்க்கா… ஆரம்பத்துல அவர் மேலக் கோபம் இருந்தது உண்மை…ஆனா இப்போ அவர் மேலக் கோபம் இல்ல.. பரிதாபமாதான் இருக்கு”

“அவர் எழுதினக் கவிதைகள் எதையும் நீ ரசிக்கவேயில்ல?”

“கவிதைகள் எல்லாமே வாசிக்கிறதுக்கும், ரசிக்கிறதுக்கும் தாங்க்கா எழுதறாங்க. அப்புறம் நல்லா கவிதை எழுதறாங்க அப்படிங்கறதுக்கெல்லாம் காதலிச்சுட முடியாது”

“ஏ…அதெல்லாமே உன்ன நெனச்சுதான் எழுதறார்னு உனக்குத் தெரியாதா?” - உமா

“ம்ம்ம்… நான் தெளிவா சொன்ன பின்னாடியும் அவர் இப்படி பண்ணிட்டு இருக்கிறது அவருக்கேத் தப்புனு தோணனும்!”

“ரொம்பப் பேசாத இளா… நீ எதிர்பார்க்கிற என்ன இல்ல அவர்ட்ட? உண்மையிலேயே சொல்றோம் அவர் உனக்கு perfect match. A friend for ever”

“அது நான் முடிவு பண்ணனும்ங்க்கா!”

“உனக்கென்ன மாமாவக் காதலிக்கிறது பிரச்சினையா? இல்ல காதலிக்கிறதே பிரச்சினையா?”

“…”

“காதலிக்கிறது தான் பிரச்சினை அப்படின்னா கவலையவிடு. உனக்காக உங்க அம்மாகிட்ட பேசி சம்மதம் வாங்கறதெல்லாம் மாமாவேப் பாத்துக்குவார்.”

“க்கா நீங்களா ஏதேதோப் பேசாதீங்க… என் மனச மாத்தலாம்னு முயற்சி பண்ணாதீங்க என்னோட முடிவுல எந்த மாற்றமுமில்ல நான் தெளிவாதான் இருக்கேன்”

“ம்ஹும் இவளுங்களத் திருந்த முடியாதுடி…பாக்க மாதவன் மாதிரி இருக்கான்னு எவனாவது ஒரு சைக்கோ கேஸ்கிட்ட இவளுங்களே போய் மாட்டிக்குவாளுங்க…ஆனா கொஞ்சம் நல்லாவனா இருக்கவன் தானா வந்து ப்ரபோஸ் பண்ணிட்டா மட்டும் போதும் ஓவரா தான் அலம்பல் பண்ணுவாளுங்க… இதுக்கெல்லாம் அனுபவிப்பா” – உமா கொஞ்சம் கோபமாகவே சொன்னாள்.

அவர்கள் பேசியது அவள் காதிலும் விழுந்தது.

இரண்டு மாதம் கழித்து மாமா மீண்டும் வந்த பிறகு, இளவரசி மனதை இனியும் மாற்ற முடியாது என்று நடந்ததெல்லாம் சொன்னார்கள் சுரேஷும், விஜயும். ஏற்கனவே விபத்தில் மாட்டிக் கொஞ்சம் சோர்ந்து போயிருந்தவனுக்கு இது மேலும் கஷ்டமாக இருந்தது. ஆனாலும் விடாப்பிடியாக அவள் தன்னைக் காதலிப்பாள், காதலிக்கிறாள் என நம்பிக் கொண்டிருந்தான்.

ஆனால் அவளிடம் எப்போது, எப்படி ஆரம்பிப்பது என யோசித்துக் கொண்டிருந்தவனுக்கு அவளே வந்து பேசியது ஆச்சரியமாயிருந்தது.

“எனக்கு உங்ககிட்டக் கொஞ்சம் பேசனும்”

“நெறையக்கூட பேசலாம் நான் ஒன்னும் சொல்ல மாட்டேன்”

“தயவு செஞ்சு இனிமேலும் நான் உங்களக் காதலிப்பேன்னு வீணா நம்பிட்டு இருக்க வேணாம்…நெக்ஸ்ட் இயர் உங்களுக்கு ப்லேஸ்மெண்ட் ஆரம்பிக்கப் போகுது அதுல கான்செண்ட்ரேட் பண்ணப் பாருங்க…”

“நீ இனிமேதான் என்னக் காதலிக்கனும்னு ஒன்னும் கிடையாதே… நீ தான் ஏற்கனவே என்னக் காதலிக்க ஆரம்பிச்சுட்டியே”

இதை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“எத வச்சு சொல்றீங்க நான் உங்கள காதலிக்கிறேன்னு”

“நீ என்னக் காதலிக்கிறேன்னு தோணுது அவ்வளவுதான், ஏன் , எப்படினு எல்லாம் எனக்கு சொல்லத் தெரியாது”

“ஆரம்பத்துல இருந்தே நீங்க காரணமில்லாமலே தான் எல்லாத்தையும் செஞ்சுகிட்டு இருக்கீங்க…அதான் பிரச்சினையே”

“காரணத்த வச்சு வந்தா அதுக்குப் பேர் காதலா?”

“பார்த்தவுடனே வந்தா அதுக்குப் பேர் காதலா?”

“பார்த்தவுடனே வந்தது காதல் இல்ல, காதலிக்கலாமா அப்படிங்கற ஆசை”

“சும்மா மழுப்பாதீங்க… காதல்ங்கறது ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கிட்டதுக்கு அப்புறம் வரணும்… கண்டதும் காதல் எல்லாம் சினிமாவுக்கு வேணும்னா நல்லாருக்கும் ஆனா வாழ்க்கைக்கு உதவாது!”

“உனக்கே நல்லாத் தெரியும் நீயும் நானும் பல விசயங்கள்ல ஒரே மாதிரிதான் சிந்திக்கிறோம்…நாம ரெண்டு பேரும் சேர்ந்து வாழ்ந்தா நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்னு நம்பறேன்”

“நான் ஒருத்தர ஒருத்தர் புரிஞ்சிக்கனும்னு தான் சொன்னேனேத் தவிர ஒரே மாதிரி சிந்திக்கனும்னு சொல்லல… என்ன மாதிரியே இருக்கிற xerox கூட வாழ்றதுல என்ன சுவாரசியம் இருந்துடப் போகுது?”

“தன்னோட பார்ட்னர் 100% தன்ன மாதிரியே இருக்கனும்னு எதிர்பார்க்கிறது முட்டாள்தனம்தான்… ஆனா தான் அதிகம் நேசிக்கிற ஒருத்தருக்கும் தனக்கு இருக்கிற மாதிரி ரசனைகள் தான் இருக்குன்றது உண்மையிலேயே சந்தோசப் படவேண்டியது…அவங்களே லைஃப் பார்டனரா வர்றது இன்னும் சந்தோசமான விசயம் … நான் அததான் உங்கிட்ட எதிர்பார்க்கிறேன்”

இப்படியே இருவருமே மற்றவரை கன்வின்ஸ் செய்கிற மாதிரி பேசிக்கொண்டே போக நேரம் தான் ஆனதே தவிர இருவருமே ஒரு முடிவுக்கு வந்த பாடில்லை. கடைசியாக அவனே சொன்னான்

“நீ ஏற்கனவே முடிவு பண்ணதுக்கு இப்போ வந்து காரணம் தேடிட்டு இருக்காத… உண்மையிலேயே உனக்கு மனசுல என்ன இருக்குன்னு நல்லா யோசிச்சுப் பாரு… நாளைக்கு இதே டைம் இங்கேயே மீட் பண்ணலாம்… ஒரு நல்ல பதிலா சொல்லு”

எதுவும் சொல்லாமல் திரும்பிப் போய்விட்டாள்.

அன்று இரவு நெடுநேரம் அவன் சொன்னதையே யோசித்துக் கொண்டுதான் இருந்தாள். அவளுக்கும் அவன் சொல்வதும் சரியாகதான் இருக்கிறது என்கிற எண்ணம் இருந்தாலும், உண்மையிலேயே அவனையும் அவளுக்குப் பிடித்திருந்தாலும் அவள் மனதில் ஆழப் பதிந்திருந்தது என்னவோ அவளைப் பார்த்தவுடனே அவளைக் காதலிப்பதாக அவன் முடிவு செய்தான் என்பது தான். அதுதான் அவளால் நியாயப்படுத்திக்கொள்ளவே முடியவில்லை. அவனிடம் அடுத்தநாள் என்ன சொல்லவேண்டும் என்று தீர்மானித்துவிட்டுத் தூங்கிப் போனாள்.

அவள் சொல்லப் போவதற்கெல்லாம் என்ன பதில் சொல்வது என் யோசித்துக் கொண்டே அவன் இரவும் கழிந்தது.

அடுத்த நாள். அதே நேரம். அதே இடம்.

“என்ன முடிவு பண்ணிட்டியா”

“இங்கப் பாருங்க அருள்… எனக்கும் உங்களப் பிடிக்கும்தான்…கண்டிப்பா உங்களக் கல்யாணம் பண்ணிக்கிப் போற பொண்ணு அதிர்ஸ்டசாலிதான்… ஆனா என்னால அந்த அதிர்ஸ்டசாலியா இருக்க முடியாது… தயவு செஞ்சு என்ன மன்னிச்சிடுங்க!”

அவனுடையப் பெயரை அவள் உச்சரித்ததே அவனுக்கு முதல் ஆச்சர்யம். அடுத்து அவள் அவனைப் பிடிக்கும் என்று ஒத்துக் கொண்டதும் இன்னும் ஆச்சர்யம்.

“அதான் பிடிச்சிருக்குனு சொல்லிட்டியே… அப்புறமும் என்னத் தயக்கம்? உங்கம்மாவுக்கு பயப்பட்றியா? அதெல்லாம் நான் பாத்துக்கறேன்… நீ கவலைப் படவேண்டாம்”

“எங்கம்மாகிட்ட சம்மதம் வாங்கறதெல்லாம் ரெண்டாவது விசயம்… நான் உங்கள காதலிக்க முடியாதுன்னு சொல்லிட்டு இருக்கேன்… அதப் புரிஞ்சுக்கோங்க…எனக்கு உங்களப் பிடிச்சதுக்கு காரணம் உங்களோட கேரக்டர்… ஆனா உங்களுக்கு என்னைப் பிடிச்சதுக்கு என்ன காரணம்? பார்த்தவுடனே என்ன பிடிச்சிருக்குன்னு முடிவு பண்றதுக்கு காரணமா இருந்தது, உங்கப் பார்வைல நான் அழகாத் தெரிஞ்சது மட்டும் தான?”

“இங்க பார்… நாம ஆசப்பட்டு எடுத்த ஒரு ட்ரெஸ்ச மத்தவங்க எல்லாரும் நல்லா இல்லைனு சொன்னாலும் நமக்கு எப்பவும் அது ஸ்பெஷல் தான்…ஏன்னா அது நாம செலக்ட் பண்ணது அப்படிங்கற எண்ணம் தான்… அது மாதிரிதான் நீயும் நான் செலக்ட் பொண்ணு… எனக்கு நீ எப்பவும் ஸ்பெஷல் தான்”

“ஆனா ட்ரெஸ் செலக்ட் பண்ற மாதிரி பார்த்தவுடனே லைஃப் பார்ட்னர செலக்ட் பண்ணிட முடியாது… இன்னைக்கு பார்த்தவுடனே என்னப் பிடிச்ச மாதிரி நாளைக்கே இன்னொரு பொண்ண பிடிக்காதுனு என்ன நிச்சயம்? இல்ல ஒரு வேளை எனக்கு ஏதாவது ஆகிட்டாலோ இன்னைக்கு இருக்கிற மாதிரியே உங்களால இருக்க முடியுமா?”

அதைக் கேட்டதும் அவனுக்குக் கொஞ்சம் கோபம் வந்தது.

“உன்னத் தவிர எனக்கு வேற யாரையும் பிடிக்காது” அவன் குரலில் மாற்றம் தெரிந்தது.

“அதான் ஏன்னு கேட்கறேன்?”

“அதெல்லாம் சொல்ல முடியாது”

“அப்போ நானும் ஒரே வரியில பதில் சொல்றேன்.. மூஞ்சப் பாத்து காதலிக்கிறவன எல்லாம் என்னாலக் காதலிக்க முடியாது”

கிளம்பப் போனவளை நிறுத்தினான்.

“மூஞ்சப் பாத்துதான் உன்ன எனக்குப் பிடிச்சது. ஆனா அதுக்குக் காரணம் நீ அழகாத் தெரிஞ்சேன்றது கிடையாது…” பாக்கெட்டில் இருந்த பர்சை திறந்து காண்பித்தான்.

அதில் அவளைப் போன்ற முக சாயலோடு ஒரு பெண்ணின் போட்டோ. கிட்டத்தட்ட 22, 23 வயதில்.

அவனைப் பார்த்தாள்.

“இது எங்கம்மா! எனக்கு 2 வயசா இருக்கும்போது இறந்துட்டாங்க… “

கொஞ்ச நேரம் கழித்து அவனேத் தொடர்ந்தான்.

“எல்லாப் பையனுக்கும் மனசுக்குள்ள தனக்கு வரப் போற மனைவி எப்படி இருக்கனும்னு ஒரு ஆசை இருக்குமே அது பெரும்பாலும் அவனவனோட அம்மா குணம் மாதிரி இருக்கனும்னுதான் நெனைப்பாங்களாம். எனக்கு எங்க அம்மாவப் பத்தி தெரிஞ்சதெல்லாம் இந்த போட்டோதான். அதான் அதே மாதிரி நீ இருக்கவும் உடனே உம்மேல ஒரு பாசம் வந்துடுச்சு! இத மத்தவங்ககிட்ட சொன்னா… ஏன் உங்கிட்ட சொன்னாலே சிரிப்பீங்கன்னுத் தெரியும்… இது சரியா தப்பான்னு எனக்குத் தெரியல… ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் அம்மா இல்லாத ஒரு பையனோட ஃபிலிங்ஸ் மத்தவங்களாலப் புரிஞ்சிக்க முடியாது” கொஞ்சம் சீரியசாகிவிட்டான்.

“ஹே.. ஐ யாம் ரியலி வெரி சாரி… நாந்தான் தப்பாப் புரிஞ்சிக்கிட்டேன்…நீ பார்த்த்வுடனே லவ் பண்றன்னு உன் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்லவும் நான் வேறென்ன முடிவு பண்ண முடியும்”

“சரி இப்போ என்னதான் சொல்ற” நிமிராமலே கேட்டான்.

“பையன்ங்களுக்கு மட்டுமில்ல… எல்லாப் பொண்ணுக்கும் அதே மாதிரி ஆச இருக்கும். அப்பா மாதிரி பாசமா பாத்துக்குற ஹஸ்பெண்ட் கிடைக்கனும்னு. எங்கப்பா பாசத்த 15 வயசு வரைக்கும் அனுபவிச்சிருக்கேன். எங்கப்பா மாதிரி பாசமா நீயும் பாத்துக்குவேன்ற நம்பிக்கை இருக்கு”

நிமிர்ந்து பார்த்தான். புன்னகைத்து விட்டு குனிந்து கொண்டாள்.

ஒரு அப்பா அம்மா விளையாட்டு ஆரம்பமானது.

அழியாத அன்புடன்,

அருட்பெருங்கோ.

9 comments:

Unknown said...

நச்சுன்னு முடிச்சீட்டீங்க..காதல் முரசு டச் இருக்கு.. சுபம் போட்டாச்சு. :-)

ஜி said...

கடைசில டைய்லாக் பஞ்ச் கொஞ்சம் மிஸ்ஸிங்.. காதல் மாசம் முடியப் போறதுங்கறதால அவசரமா முடிச்சிட்டீங்களா??

நல்ல சுவாரஷயமான தொடர்....

dubukudisciple said...

nalla thodar..
arumaiyana mudivu thaan!!
melam pala kathaigal ezhuthavum

Unknown said...

dev,

/நச்சுன்னு முடிச்சீட்டீங்க..காதல் முரசு டச் இருக்கு.. சுபம் போட்டாச்சு. :-) /

kadhailaiyaavadhu subhamaa mudiyattumE... :)

Unknown said...

zee (;-))

/கடைசில டைய்லாக் பஞ்ச் கொஞ்சம் மிஸ்ஸிங்.. காதல் மாசம் முடியப் போறதுங்கறதால அவசரமா முடிச்சிட்டீங்களா??/

feb mudiyaradhu mattumilla naanum oru vaaram oorla irukka maattEn... avasarathula ezhudhinadhu dhaan ;-)

kuraigal iruppin mannnippeer!!!

/நல்ல சுவாரஷயமான தொடர்.... /

dhaangsubaa!!!

Unknown said...

dubuks,

/nalla thodar..
arumaiyana mudivu thaan!!
melam pala kathaigal ezhuthavum /

thanks a lot...

sorry for not typing in tamil!!!

நந்தா said...

அருமையான தொடர் கதை. அதுவும் முதல் இரண்டு பகுதிகள் கல்லூரி வாழ்க்கையை நினைத்து ஏங்க வைத்து விட்டது.

மாமாவின் கேரக்டரைசேஷனைப் பார்க்கும் போது சற்றே உங்கள் சாயல் தெரிகிறதே அப்படியா? :)

ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது கதை அருமையிலும் அருமை.

ஆனால் கடைசி பகுதியை மட்டும் எதோ அவசரத்தில் முடித்தது போல தெரிகிறது.

Unknown said...

//அருமையான தொடர் கதை. அதுவும் முதல் இரண்டு பகுதிகள் கல்லூரி வாழ்க்கையை நினைத்து ஏங்க வைத்து விட்டது.//
கல்லூரி வாழ்க்கை எப்போது நினைத்துப் பார்த்தாலும் இனிமையானதுதானே?

//மாமாவின் கேரக்டரைசேஷனைப் பார்க்கும் போது சற்றே உங்கள் சாயல் தெரிகிறதே அப்படியா? :)//
வழக்கமானக் கேள்வி!! வழக்கமான பதில் – “இல்லை” :-)))

//ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது கதை அருமையிலும் அருமை.

ஆனால் கடைசி பகுதியை மட்டும் எதோ அவசரத்தில் முடித்தது போல தெரிகிறது.//

ஆமாங்க நந்தா, கொஞ்சம் அவசர கதியில எழுதிட்டேன் :-(((

daffi said...

Arul Unga karpanaigal ellame eppadi azhga irruku???!