Wednesday, November 15, 2006

வ. வா. ஆட்டோகிராப் - 3!!!

முந்தைய பாகம் பார்க்க

பாகம் 1
பாகம் 2

நமக்கும் நம்ம தமிழ் வாத்தியாருக்கும் எப்பவுமே பிரச்சனைதாங்க....
அதுக்கு முக்கிய காரணம் இந்த திருக்குறள் தான்...

எனக்கு தெரிஞ்சது மொத்தமே 2 குறள் தான்

அகர முதல எழுத்தெல்லாம் தகர
ஸ்லேட்டில் எழுதி பழகு

அடுத்து

இனிய உளவாக இன்னாத கூறல்
கேக்கிருப்ப பன்கவர்ந் தற்று

இந்த இரண்டு குறளை மட்டும் தெரிஞ்சி வெச்சிக்கிட்டு நானும் எவ்வளவு நாள்தான் சமாளிப்பேன்.

நமக்கு முதல் வார்த்தைய சொல்லி திருக்குறள் எழுத சொன்னாலே வராது. இதுல கடைசி வார்த்தைய வேற சொல்லி எழுத சொல்லுவானுங்க...

பரிட்சைல எப்படி கேட்பானுங்கனா அருளென்னும் என்று தொடங்கும் குறளையும், பிறர்க்கு என்று முடியும் குறளையும் எழுதுகனு கேப்பாங்க...

சரினு நானும் வேற வழியில்லைனு

அருளென்னும் உளவாக இன்னாத கூறல்
கேக்கிருப்ப பன்கவர்ந் தற்று

அகர முதல எழுத்தெல்லாம் தகர
ஸ்லேட்டில் எழுதி பிறர்க்கு

இப்படி எழுதிடுவேன். இதுக்கு அவர் மார்க் போடமாட்டாரு. அப்பறம் அவர்ட போய் சண்டை போட்டா அரை மார்க் போடுவாரு.

அப்பறம் அந்த பகுபத உறுப்பிலக்கணம்னு ஒண்ணு இருக்கு
நேரா போனா மாங்கா, குறுக்கால போனா புளியாங்கானு இருக்கும்.

எனக்கும் சொல்லி கொடுக்க அவர் ரொம்ப முயற்சி பண்ணாரு. பாவம் அவருக்கு அனுபவம் பத்தல.

இது இல்லாம அணினு (நமக்கு ஞாபகம் இருக்கறது வஞ்ச புகழ்ச்சி அணிதான்) ஒண்ணு இருக்கு. பாட்ட சொல்லி அது எந்த அணினு கேப்பாரு. நமக்கு பாட்டை சொல்லி எந்த படம்னு கேட்டா கரெக்டா சொல்லிடுவோம். இல்லை க்ரிக்கெட் ப்ளேயர சொல்லி எந்த அணினு கேட்ட கரெக்டா சொல்லுவோம். ரெண்டும் இல்லாம பாட்ட சொல்லி எந்த அணினு கேட்டா மனுசன் என்னதாங்க பண்ண முடியும்.

கடைசியா அவரால எனக்கும் எங்க கணக்கு வாத்தியாருக்கும் சண்டை வந்ததுதான் மிச்சம்... அந்த சம்பவம் இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கு...

சுமார் 9 வருடங்களுக்கு முன்னால்... கணக்கு பரிட்சை நடந்து கொண்டிருந்தது (கொசு வத்திய சுத்துங்க)

கணக்கு வாத்தியார், "பாலாஜி! எழுந்திரி"

எழுந்து நின்றேன்...

"கைல என்ன புக்?"

"தமிழ் மீடியம் மேத்ஸ் புக் சார்" (நான் ஆங்கில மீடியம்)

"என்னடா காப்பி அடிக்கறயா?"

"இல்லை சார்... தமிழய்யா சொன்னதைத்தான் பண்ணேன்"

"என்னடா உளற?"

"எனக்கு தமிழய்யா தான் சொன்னாரு... வேற மொழில இருக்கறத பார்த்து எழுதினா அது காப்பியில்லைனு. வேணும்னா நீங்களே அவரை கூப்பிட்டு கேளுங்க"

"டேய் குமாரு நீ போய் உங்க தமிழய்யாவை கூப்பிட்டு வாடா"

குமார் சென்று தமிழய்யாவை கூப்பிட்டு வந்தான். நானும் கணக்கு வாத்தியாரும் (கையில் கணக்கு புத்தகத்துடன்) நின்றிருந்ததை பார்த்ததும் தமிழய்யாவிற்கு கொஞ்சம் பயம் வந்துவிட்டது.

"என்னா சார்... ஏதாவது பிரச்சனையா?" தயக்கத்துடன் தமிழய்யா கணக்கு வாத்தியாரை கேட்டார்...

"இங்க பாருங்க சார்... தமிழ் மீடிய புக்கை வெச்சி காப்பி அடிச்சிட்டு நீங்க தான் அந்த மாதிரி பண்ண சொன்னீங்கனு சொல்றான்"

"பாலாஜி... என்ன இது? நான் எப்ப உனக்கு சொன்னேன்"

"சார்... ஏன் பொய் சொல்றீங்க? போன வாரம் கம்ப ராமாயணம் கிளாஸ் ஞாபகமில்லை?"

மீண்டும் கொசுவர்த்தி...

"பாலாஜி எழுந்திரி... கம்பரின் பெருமைகள் என்னனு நேத்து நடத்தனனே சொல்லு பார்ப்போம்?"

""

"இப்படி அமைதியா நின்னா என்ன அர்த்தம்?
கம்பனை போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் இந்த பூமிதனில் எங்கேயும் காணோம் (தூர்தஷன்ல சொல்லி அறிவிப்புகள்ல போட சொல்ல வேண்டியதுதான?)

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்

இது கூட ஞாபகம் இல்லையா?"

"சார்... இது அநியாயம். வால்மீகி எழுதனத அவ்ர் காப்பிதான அடிச்சாரு"

"இங்க பாரு... அவர் ஒன்னும் காப்பி அடிக்கல... வடமொழில இருந்ததை தமிழுக்கு ஏத்த மாதிரி எழுதினார்"

இப்ப திரும்ப பரிட்சை ஹாலுக்கு வாங்க... (பரிட்சை எழுத இல்லை)

"சார் நீங்க சொன்ன மாதிரி நான் தமிழ்மீடியம்ல இருக்கறதை ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்துட்டு இருக்கேன்... நியாயமா பார்த்தா நீங்க என்னய புகழ்ந்து தான் சொல்லனும்...
பாலாஜி வீட்டு கட்டுத்தறியும் கணக்கு போடும்னு சொல்லனும்.

நானும் அப்படியே காப்பி அடிக்கல. அதுல x,y,z னு இருக்கறத a,b,cனு மாத்திதான் போடறேன்"

அதுக்கு அப்பறம் நமக்கு அட்வைஸ் பண்றதையே நிறுத்திட்டாரு...