அதனால அவங்களோட பெருந்தன்மையைப் பாராட்டிட்டு, தன்னுடைய கணவனோ, பாய் ஃப்ரெண்டோ, அப்பாவோ, தம்பியோ, அண்ணனோ, மகனோ இந்த மாதிரி எக்ஸ்ட்ரா லக்கேஜ் தூக்கறவங்களா இருந்தாக்கா அதை பாத்துட்டு முதல்ல குறைச்சிக்க சொல்லி ஆலோசனை சொல்ற நுகர்வோர்களான பிரபல பெண் பதிவர்களிடமிருந்து ஆலோசனைகளை வரவேற்றோம். எங்களோட இந்த வேண்டுதலுக்கு வரலாறு காணாத ஆதரவு இருந்தது. சங்கத்து தபால் பெட்டி ரொம்பி வழிஞ்சது. அதை முதன்முதல்ல ஓப்பன் பண்ணி பிரிச்சி படிச்சது நம்ம கப்பிப்பய தான். படிச்சிட்டு "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்"னு கூக்குரலிட்டு அவ்வத் தொடங்கிட்டான். என்னாச்சோ ஏதாச்சோன்னு நாங்க எல்லாம் பதறிப் போய் ஓடியாந்து நாங்களும் பிரிச்சிப் படிச்சிட்டு கும்பலா அவ்வத் தொடங்கிட்டோம். எங்களை அவ்வ வச்ச அந்த அக்காக்களின் ஆலோசனைகள்ல சில உங்கள் பார்வைக்கு. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
1. எக்ஸ்ட்ரா லக்கேஜ் அப்படின்னா என்னன்னு கேக்கற அளவுக்கு மெயிண்டேன் பண்ணிக்கிட்டு இருக்கற 'பாய்ஸ்' சித்தார்த்தின் அதிதீவிர விசிறியான மலேசிய மாரியாத்தா மை ஃப்ரெண்ட் சித்தார்த்தி சங்கத்துக்கு அனுப்பிருக்கற ஆலோசனை கடிதத்தைப் பாப்போம்.
தொப்பையை குறைப்பது எப்படி' என்ற பதிவிட எனக்கு தெரிந்த நண்பர்களிடம் கருத்துக்கள் சேகரிக்க இலகுவாகயிருந்தது [சொந்த கருத்துக்களையும் ஆங்காங்கே கலந்துவிடவும் வசதியாக இருந்தது!!] ஆனால் ' தொப்பையை குறைப்பது எப்படி' என்ற பதிவிட தொப்பை இருப்பவர்களிடம் கருத்துக்கள் கேட்டு விஷயத்தை வாங்க கொஞ்சம் சிரமமாகயிருந்தது. நான் துலாவி துலாவி கேள்வி கேட்டால் ' என்ன தொப்பையை குறைக்க ஆசை வந்துடுச்சா' என்று பதில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுகிறார்கள். அதை எல்லாத்தையும் மீறி நான் சொல்லிக்கொள்ள விரும்பும் ஆலோசனைகள் கீழே.
டிப்ஸ் 1 : உருளை கிழங்கு சிப்ஸ்க்கு பதிலாகமரவள்ளி கிழங்கு சிப்ஸ் சாபபிடவும்.
டிப்ஸ் 2 : தண்ணி அடிக்கும் போது சிப்ஸ்க்கு பதிலாக ஊறுகாயைப் பயன்படுத்தவும்.
டிப்ஸ் 3 : உங்களை விட பெரிய தொப்பை இருப்பவர்களுடன் வெளியே செல்லவும். அப்பொழுது உங்கள் தொப்பை குறைந்துவிட்டது போல் தெரியும்.
டிப்ஸ் 4 : பதிவு எழுத யோசிக்கும் போது மல்லாக்க படுத்து யோசிப்பதற்கு பதில் குப்புற படுத்து யோசிக்கவும். அதனால் தொப்பை அழுந்தி தானாக குறைய வாய்ப்புள்ளது.
டிப்ஸ் 5 : நிக்கற பஸ்ஸில் ஏறுவதையோ இறங்குவதையோ தவிர்க்கவும். ரன்னிங்கில் இருக்கும் போதே ஏறவும், இறங்கவும் முயற்சிக்கவும். கைனெட்டிக் எனர்ஜி உடம்பில் வேலை செய்யும் போது லக்கேஜ் கரைய வாய்ப்புண்டு.

2. அடுத்ததா வலையுலக மேரி க்யூரி, மின்னல் சுமதி அவங்க சொல்லிருக்கற ஆலோசனைகள். ஏன் இவங்களை க்யூரி அம்மையாரோட ஒப்பிடறோம்னு நீங்க தெரிஞ்சிக்கனும். இயற்பியல், வேதியியல் இந்த ரெண்டு பிரிவுலயும் ஆஸ்கார் அவார்டு...சாரி...நோபல் பரிசு வாங்குன முதல் விஞ்ஞானி மேடம் மேரி க்யூரி. அதே மாதிரி ஆண்கள் தொந்தியைக் குறைப்பதற்காக இயற்பியல் ரீதியாகவும் வேதியியல் ரீதியாகவும் வெகு விஞ்ஞானப் பூர்வமாக ஆய்வு நடத்தி ஒரு ஆய்வுக் கட்டுரைக்கு ஒப்பான ஆலோசனையை இவர் வழங்கியிருப்பதால் இவருக்கு "வலையுலக மேரி க்யூரி" பட்டத்தை அளிப்பதில் சங்கம் பெருமகிழ்ச்சி அடைகிறது. இப்போ அவங்க சொன்ன ஆலோசனையப் பாப்போம்.
"...இதுக்குத் தான் நம்மூரு பல்லவன் இருக்காரே, மந்திரத்தாலயும் மருந்தாலயும் கரைக்க முடியாதது லாம் கரைக்கறதுக்காகவே, நீங்க இன்னும் ட்ரை பண்ணவேயில்லையா? அப்போ அத ஒருதரம் ட்ரை பண்ணிப் பாருங்க புரிஞ்சுடும் அதோட வலிமை."
மேல இருக்கற அவங்களோட இந்த ஆலோசனையைப் படிச்சிட்டு, "நாங்கெல்லாம் ரெகுலரா பேருந்துல பயணம் செய்யறவங்க தான்...ஆனாலும் ரிசல்ட் எதுவும் இல்லை. உங்க ஆலோசனையை இன்னும் கொஞ்சம் வெளக்கமாச் சொல்லுங்க" அப்படின்னு நம்ம தளபதி சிபி பதில் கடிதம் போட அதுக்கு அவங்க கிட்டேருந்து வந்த இன்னொரு பதில் கடிதத்தைப் படிச்சிட்டு நாங்க அவ்வ ஆரம்பிச்சது இன்னும் அடங்குன பாடில்லை. அது என்னன்னா...
"எப்படிங்க ரிசல்ட் இருக்கும்...இல்லை எப்படி ரிசல்ட் இருக்கும்னு கேக்கறேன். பஸ்சுல ஏறுனதும் முதவேலையா சீட்டைப் பாத்து உக்காந்துக்குவீங்க...அப்படி இடம் கெடைக்கலன்னா லேடீஸ் சீட்ல உக்காந்துக்குவீங்க...கொஞ்சம் ஏமாந்தா கண்டக்டர் சீட்ல உக்காந்துக்குவீங்க. இப்படி எல்லாம் இருந்தா எப்படி ரிசல்ட் இருக்கும். லக்கேஜை காணாப் போக்கனும்னா கொஞ்சம் மெனக்கெடனும். முதல்ல இந்த தானியங்கி கதவுகள் இருக்கற பேருந்துகள்ல ஏறக் கூடாது. பஸ் காலியா இருந்தாக் கூட படிக்கட்டுல தொங்கிட்டுத் தான் வரணும். கண்டக்டர் "ஏறி வாய்யா"ன்னு கத்துனா பதிலுக்கு நீங்க "நீ தான்யா தவளை வாயன், பன்னி வாயன்" அப்படின்னு பதிலுக்குக் கத்திட்டு படிக்கட்டுல தொங்கிட்டே பயணம் செய்யனும். நீங்க இந்த கமல் நடிச்ச சத்யா படம் பாத்திருக்கீங்களா? அதுல கமல் வளையோசை கலகல பாட்டுல பஸ்சுல ஃபுட்போர்ட் அடிச்சிட்டு போவாரு பாத்துருக்கீங்க இல்லை. அந்த மாதிரி டெய்லி பஸ்சுல கடைசி படிக்கட்டுல ஒத்த கால் சுண்டுவிரல்ல தொங்கிட்டு போவனும்ங்க.
அந்த மாதிரி தொங்கிட்டு போகும் போது லக்கேஜ் மேல காத்து வந்து மோதும். காத்து வந்து மோதுச்சுன்னா லக்கேஜ் சும்மா விட்டுருமா...அதுவும் காத்தை தன் மேல மோத விடாம பலமா பதிலுக்குத் தள்ளும். காத்து லக்கேஜை தள்ள, லக்கேஜ் காத்தை திரும்ப தள்ள இப்படியே தொடர்ச்சியா நியூட்டனின் மூன்றாம் விதி படி வினையும் எதிர்வினையும் நடந்து நடந்து லக்கேஜ் காலப்போக்குல மெல்ல கரைஞ்சிடும். இது ஒரு இயற்பியல் மாற்றம்(physical reaction)
பஸ்சுல ஃபுட்போர்ட்ல தொங்கிட்டு போகும் போது physical reaction மட்டும் இல்லாம ஒரு chemical reaction கூட நடக்கும். அது என்னன்னா பஸ் படிக்கட்டுல நீங்க தொங்கிட்டுப் போகும் போது வெளியில அடிக்கிற காத்தும் வெயிலும், அதாவது air and heat ஒன்னா சேந்து லக்கேஜ் மேல ஒரு வேதியியல் மாற்றத்தை நடத்தி அப்படியே அதை எரிச்சிடும். இதை oxidationனு சொல்லுவாங்க.
ஆனா இவ்வளவு ஐடியா குடுத்தாலும் ஃபாலோ பண்ண மாட்டீங்க. ஏன்னா உங்களை மாதிரி ஆளுங்க கூட அமலா மாதிரி ஃபிகர் இருந்தா தான் நான் ஃபுட்போர்ட் அடிப்பேன்னு சொல்லுவீங்க. அப்புறம் எங்கேருந்து ரிசல்ட் கெடைக்கும்?"

3. கண்ணனைக் கான துவாரகை செல்வதற்கு முன்னாடி சங்கத்தின் நிரந்தர தலைவி நம்ம கீதா மேடம் அனுப்பிச்ச ஆலோசனை கடிதம் இப்போ உங்க பார்வைக்கு. அவங்க கொஞ்ச வித்தியாசமா ஆண்களின் எக்ஸ்ட்ரா லக்கேஜ் கரைய பெண்கள் பின்பற்ற வழிமுறைகளைப் பற்றி சொல்லிருக்காங்க.
"எக்ஸ்ட்ரா லக்கேஜ் தூக்கற ஆண்களை, அந்த லக்கேஜைக் கரைக்க முயற்சி எடுக்க வைக்கனும்னா அதுக்கு அவங்க அடிமடியிலேயே கை வச்சாத் தான் திருந்துவாங்க. சாயந்திரம் ஏழு மணிக்கு ஆரம்பிச்சு இரவு பத்து மணி வரை ஓடற ஆனந்தம், திருமதி செல்வம், கலசம், கோலங்கள், அரசி இந்த மாதிரியான பாடாவதி மெகா சீரியல்களுக்குப் பெண்களுக்குச் சரிசமமா ஆண்களும் அடிமையாகிப் போய் இருக்காங்க. அதை எல்லாம் பாக்க அனுமதி வேணும்னா தெனமும் மாலை ஒரு மணி நேரம் ஜாகிங் போகனும்னு கட்டுப்பாடு விதிக்கனும். எண்ணெயில் பொரிச்ச சமாச்சாரங்கள் எதையும் கண்ணுலேயே காட்டப்படாது. அப்படியும் எப்பவாச்சும் ஆசை பட்டு பஜ்ஜி, போண்டா வேணும்னு ரொம்ப கெஞ்சி மன்றாடி கேட்டுக்கிட்டாங்கன்னா வீட்டுலேருந்து ஒரு பத்து கிலோ மீட்டர் தூரத்துல இருக்கற ஒரு கடையைச் சொல்லி அங்கேருந்து எண்ணெய் வாங்கிட்டு வரச் சொல்லலாம். ஏன்னு காரணம் கேட்டாங்கன்னா உங்க சைடுல (உங்க வீட்டுக்காரரு சைடு கெடையாது) ரொம்ப ஒல்லியா லக்கேஜ் இல்லாத யாரையாச்சும் உதாரணம் காட்டி அவரு அந்த கடையில தான் எண்ணெய் வாங்கறாராம்...அதான் அப்படி இருக்குறாராம் அப்படின்னு சொல்லலாம். இப்படி சொன்னா ஒன்னு எனக்கு பஜ்ஜியே வேணாம்னு சொல்லிடுவாங்க இல்லைன்னா பத்து பத்து இருபது கிலோ மீட்டர் போயிட்டு வந்ததுல நல்லா பெண்டு நிமிந்து இருக்கும். அதுக்கப்புறம் பஜ்ஜி சாப்பிடற ஆசையே போயிருக்கும்"
