Sunday, October 17, 2010

சூ மந்திரத் தக்காளி!

பெண்களை கவர்வதற்கு ஜாய் அலுக்காஸ் போய் கண்ணைப் பறிக்கும் வைரநெக்லஸ் வாங்கிக் கொடுத்து, மாதாமாதம் கிரெடிட் கார்டு பில்லைப் பார்த்து முழிபிதுங்க வேண்டுமா?

போத்தீஸுக்கும், சென்னை சில்க்ஸுக்கும் போய் எந்திரன் படத்துக்கு முதல்நாள் மார்னிங் ஷோ போனவன் போல இடிபட்டு கசங்கி கந்தர்கோளமாக வேண்டுமா?

அநியாய வட்டிக்குக் கடன்வாங்கி, அடையாறு கேட் ஹோட்டலுக்குக் கூட்டிக்கொண்டு போய் ஆட்டுக்கால் சூப் வாங்கிக் கொடுக்க வேண்டுமா?

தேவையேயில்லை! இதையெல்லாம் விடவும் மிகவும் சுலபமான, சிக்கனமான ரகசிய வழியொன்று இருக்கிறது. அந்த வழியைக் கடைபிடித்தால், உங்களது மின்னஞ்சல் பெட்டியும் எனது மின்னஞ்சல் பெட்டியைப் போலவே காதல் மடல்களால் நிரம்பி வழிந்து குறுவை சாகுபடிக்கு ஒத்தாசை செய்யும் என்பது உறுதி.

நம்பிக்கையில்லையா? இதோ எனது மின்னஞ்சல் பெட்டியின் ஸ்க்ரீன்-ஷாட்!


இப்படி எனக்கு ஒரே நாளில் இந்தியாவின் கனவுக்கன்னிகளெல்லாம் மடல் மீது மடலாகப் போடுவதற்கு என்ன காரணம்? அவர்களது உள்ளங்களை என்னால் எப்படி கொள்ளை கொள்ள முடிந்தது? இது என்ன தங்கமலை ரகசியமா என்று யோசிக்கிறீர்களா?

தங்கமலை ரகசியம் இல்லை; தக்காளி ரகசியம்!

சிரிக்காதீங்க! தக்காளி என்றால் லேசுப்பட்டதா?

அதற்கு எப்போது கிராக்கி வரும் என்று தெரியாது. திடீரென்று கிலோ நான்கு ரூபாய்க்கெல்லாம் விற்கும்போது, பல வீடுகளில் பாயசம் தவிர எல்லாவற்றிலும் தக்காளி போடுவார்கள். அதை வைத்து ரசமும் வைக்கலாம்; கொத்சு பண்ணலாம்; தொக்கு அரைக்கலாம். கொஞ்சம் அழுகிப்போனால், பொதுக்கூட்டங்களில் பேச்சாளர்களின் முகத்தைக் குறிபார்த்து எறியலாம். இவ்வளவு அருமை பெருமை வாய்ந்த தக்காளியைப் பற்றி ரஜினி ஒருத்தர் தான் ’ஆசைக்கிளியே அரைக்கிலோ புளியே! அழுகின தக்காளியே!’ என்று பாடியிருக்கிறார். இருந்தாலும் தலைவர் என்பதால் விட்டு விடுகிறேன்.

திருமணமாகாதவர்களே! உங்கள் காதலியை தக்கவைத்துக் கொள்ள இனிமேல், ஒரே இளநீரில் இரண்டு ஸ்ட்ரா போட்டு உங்களது கஞ்சத்தனத்தை வெளிப்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக, தினமும் தக்காளி ஜூஸ் வாங்கிக் கொடுங்கள்!

’ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?’ என்றெல்லாம் இனிமேல் பாடாதீர்கள். ’தக்காளிப்பெண்ணே..!" என்று மாற்றிப் பாடுங்கள். கவிதை எழுதுபவர்களும் இனிமேல் காதலியைத் தக்காளியோடு ஒப்பிட்டு எழுதுங்கள். உதாரணத்துக்கு.....

"அன்பே!
உன் சருமத்தைப் பார்த்தால்
சரக்குமாஸ்டருக்கும் ஆசை வருமே!
தக்காளியென்று
தப்பாக நினைத்து விட்டாரோ?"

காதலியே இல்லாதவர்கள் காதலிக்கு கூடை கூடையாக தக்காளியை அனுப்புங்கள். காதல் கைகூடுவது நிச்சயம்.

திருமணமானவர்களே! உங்கள் மனைவியின் அன்பு மியூச்சுவல் ஃபண்டு போல பல்கிப்பெருக, தினமும் மல்லிகைப்பூ வாங்குகிறீர்களோ இல்லையோ, தவறாமல் தக்காளி வாங்கிக் கொடுங்கள்! திருமணதினத்துக்கும், பிறந்தநாளுக்கும் தக்காளிக்கலரில் உடை வாங்கிக்கொடுத்தால், உங்களது இல்லறம் தக்காளி ரசம் போல கமகமவென்று மணம்வீசும்!

தக்காளி சீனிவாசன் தயாரிக்கும் படங்களைத் தவறாமல் காதலி/மனைவியோடு பாருங்கள்!

தப்பித்தவறி, காதலியோடோ மனைவியோடோ ஊடல் ஏற்பட்டால் தக்காளி கெட்ச்-அப் வாங்கிக்கொடுத்து பேட்ச்-அப் செய்து கொள்ளலாம்.

அப்படியென்ன இருக்கிறது இந்தத் தக்காளியில் என்று கேட்கிறீர்களா? உங்களுக்கு விஷயமே தெரியாதா?

தக்காளி பெண்களின் இதயநோயைக் கட்டுப்படுத்தும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆகவே, காதலியாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி அல்லது ஒருவருக்கு காதலி, மனைவி இருவருமே இருந்தாலும் சரி, நிறைய தக்காளி வாங்கிக் கொடுங்கள்!

என்ன இருந்தாலும், அவர்களது இதயத்தில் குடியிருக்கிறவர்கள் அல்லவா நீங்கள்? தினசரி தக்காளி வாங்கிக் கொடுத்தால் குடியிருக்கிற வீட்டில் விரிசல் ஏற்படாமல் இருக்கும்.

இத்தோடு நிறுத்திவிடாமல், இனிமேல் ’காதலர் தினம்’ வரும்போது பூக்களை அனுப்புவதற்கு பதிலாக, கோயம்பேட்டுக்குப் போய் நிறைய தக்காளி வாங்கி அனுப்புங்கள்!

வாழ்க தக்காளி! வளர்க காதல்!

9 comments:

  1. ஓ...அப்ப இத்த்ன நாளா பல பதிவுகள்ல "தக்காளி"ன்னு வந்ததெல்லாம் அன்பின் வெளிப்பாடா... அவ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. அப்ப அது கெட்ட வார்த்தை இல்லியா? அப்ப சரி தக்காளி இதான்யா போஸ்ட்டு:-)))))

    ReplyDelete
  3. :))

    ரெண்டு லோடு தக்காளி பார்சேல்!

    ReplyDelete
  4. யோவ் இப்ப தான் மெயில் பாக்ஸ் படத்தை ஓப்பன் பண்ணி பார்த்தேன்:-)))))))))))))) செம நக்கலு!பறவை மினிம்மா இல்லியே அந்த லிஸ்ட்டுல???

    ReplyDelete
  5. alvaa kudukurathu therium ippolaam thakkkaali thaan fashiona nallathu

    ReplyDelete
  6. தக்காளி..!! கலக்கிட்டாங்கப்பு..!!

    ReplyDelete
  7. அல்வாவுக்கு பதிலா இனிமே நான் தக்காளி தான் கொடுக்கறது.

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)