Wednesday, June 6, 2007

கடவுளோடு ஒரு கருப்பு உரையாடல்!

கடவுள்: ஹலோ! யாருங்க அது... என்னைக் கூப்பிட்டது?

நான்: நானாவது?... உங்களைக் கூப்பிடறதாவது?.. ஹலோ யார் பேசறது?

கடவுள்: ஹலோ! நான்தான் கடவுள் பேசறேன்! நீங்க என்னை கூப்பிட்ட மாதிரி என் காதிலே வந்து விழுந்தது. கூப்பிட்ட குரலுக்கு வரது என்னோட வழக்கம். அதான் உங்க கூட கொஞ்சம் பேசலாம்னு ஓடி வந்தேன்!

நான்: அடடே... யாரது கடவுளா??!! ம்...ம்.. இருக்கலாம்! நானும் பிரார்த்தனை பண்றது வழக்கம். அதிலே எனக்கு ஒரு நிம்மதி. ஆனா நான் இப்போ ரொம்ப “busy”! நான் வவாசங்கத்தில் மொக்கை போடுற வேலையா இருக்கேன்!! அப்பறமா வாயேன்!!

கடவுள்: Busy!! எதனாலே அந்த “Busy”?

நான்: அது என்ன எழவோ சொல்லத் தெரியலே! ஆனா எனக்கு இப்ப சுத்தமா நேரமில்லே! வாழ்க்கையே ஒரு போராட்டமாயிடிச்சு இப்பல்லாம்! எப்பப் பார்த்தாலும் ஓட்டந்தான்! என்னாலே முடியலே!

கடவுள்: நல்லா இருக்குங்க உங்க பேச்சு! ஏதோ என்னைக் கூப்பிட்டீங்களே! உங்களுக்குக் கொஞ்சமாச்சும் உதவலாம்னு நினைச்சேன்.. உங்களுக்கு நான் எதாவது உதவி செய்யட்டுமா? இந்த “Computer” யுகத்திலே, உங்களுக்கு எது செளகர்யமோ அது வழியா என்கிட்டே பேசலாம்!! என்ன சொல்றீங்க கருப்பு?

நான்: ம்... சரி சரி... ஏதோ எனக்கு உதவி பண்றதா சொல்றே!! காசு பணம் எதுவும் கேட்கப் படாது! என்ன சரியா?...... அப்படின்னா முதல்லே இதுக்குப் பதில் சொல்லு .... இப்பெல்லாம் வாழ்க்கை ஏன் ஒரு பெரிய சிக்கலா இருக்கு?

கடவுள்: வாழ்க்கையை ரொம்ப அலசாதீங்க!! சும்மா ரசிச்சு வாழ்ந்து பாருங்க!! அலசி ஆராயறதுதான் அத மேலும் சிக்கலா ஆக்குது.

நான்: அப்ப நாம ஏன் தொடர்ந்து சந்தோஷமில்லாம இருக்கோம்?

கடவுள்: நாளைக்கு என்ன ஆகுமோன்னு நேற்று நீங்க ரொம்பக் கவலைப்பட்ட நாள்தான் இன்னைக்கு உங்க முன்னாலே நிக்குது!! நீங்க அலசி ஆராயறதுனாலதான் கவலை உண்டாவுது. கவலப்படறதே உங்க பொழப்பாப் போச்சு!! அதனாலதான் உங்களாலே சந்தோஷமா இருக்க முடியலே!! என்ன பிரியுதா?

நான்: அட! அடுத்த நிமிஷம் என்ன ஆகும்னு தெரியாதிருக்கற போது எப்படிப்பா நம்மாள சந்தோஷமா இருக்க முடியும்?

கடவுள்: நிலையில்லாமை அப்படிங்கிறது தவிர்க்க முடியாத விஷயம்! அதுக்கெல்லாம் கவலைப்படனுமாங்கறது உங்க சொந்த விருப்பம்!!

நான்: அட! நீ ஒண்ணு! எது எப்படியாகுமோங்கறது தெரியாத போது ஒரே வேதனையா இருக்காதா என்ன?

கடவுள்: வேதனை இருக்குந்தான்! ஆனா அதுவும் உங்க சொந்த விருப்பந்தானே!!

நான்: அட என்னைய்யா இது? உங்கூட ரொம்ப ரோதனையாப் போச்சு! வேதனை நம்ம சொந்த விருப்பம்ன்னா, ஏன் நல்லவங்கலாம் எப்பவும் கஷ்டப்படறாங்க? கெட்டவங்கல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க?

கடவுள்: வைரத்தப் “பாலிஷ்” பண்ணனும்னா அதை உரசித்தானே ஆகணும்! தங்கம் சுத்தமாகணும்ன்னா, நெருப்பிலே புடம் போட்டுத்தானே ஆகணும்!! நல்லவங்கலாம் நெறைய சோதனைககு ஆளாவாங்க! ஆனா கஷ்டப்பட மாட்டாங்க!! அந்த அனுபவத்திலே அவங்க வாழ்க்கை நல்லதாத்தான் ஆகும்! கசப்பா இருக்காது!!

நான்: அப்பன்னா அந்த அனுபவம் வேணுங்கறே? உபயோகப்படுங்றே??

கடவுள்: ஆமாம்யா ஆமாம்!!.. இந்த அனுபவம் இருக்கே, அது கொஞ்சம் கஷ்டப்படுத்ற வாத்தியார்தான்! அவர் உங்களுக்கு சோதனையத்தான் முதல்ல கொடுப்பார்! அதுக்கப்பறம்தான் பாடம் கத்துக் கொடுப்பார்!!

நான்: ஆனா, இன்னும் எதுக்காக நாம அந்த சோதனைக்கெல்லாம் ஆளாகணும்? பிரச்சினை இல்லாத இருக்கக் கூடாதா?

கடவுள்: பிரச்சினைகள்தாங்க உங்களுக்குப் பயன் தரும் பாடத்தைச் சொல்லித்தர வேணுங்கறதுக்காக உண்டாக்கப்பட்டத் தடைக் கற்கள். அதனாலே உங்க மனவலிமை அதிகமாகும்; போராடவும், பொறுத்துக் கொள்ளவும் தெரிஞ்சா, உங்க உள் மனசோட பலம் இன்னும் அதிகமாகும். பிரச்சினை இல்லாமலிருந்தா இது நடக்காது.

நான்: அட என்னவோப்பா! உண்மையாச் சொல்லப்போனா, இத்தன பிரச்சினைக்கு நடுவுலே, சமயத்திலே, நாம எங்கே போறோம்னே தெரியல! ஒரே பயம் பயம்மா இருக்கு எனக்கு.

கடவுள்: நீங்க வெளிப்படையாப் பார்த்தீங்கன்னா, எங்கே போறோம்னு உங்களுக்குத் தெரியாது. கொஞ்சம் மனமொன்றி நினைச்சு பாருங்க! எங்கே போறீங்கன்னு தெரியும். வெளிப் பார்வைக்கு அது ஒரு கனவு போலத்தான் இருக்கும்! விழிப்பாயிருங்க! கண்ணாலே பார்க்கத்தான் முடியும். இதயத்தாலே மட்டும்தான் உள்ளுணர்வு என்னன்னு தெரிஞ்சுக்க முடியும்!!

நான்: சில சமயம் சீக்கிரமா ஜெயிக்க முடியலேங்கறது, சரியான வழிலே போலேங்கறத விட அதிகமா வலிக்குதே! என்ன செய்யறது?

கடவுள்: ஜெயிக்கிறதுங்கறது, மத்தவங்க உங்க செயலின் விளைவுகளை எடை போடறது! திருப்தியா இருக்குதா இல்லயா அப்படிங்கறது, நீங்க தீர்மானிக்கற விஷயம்! எங்கே போறோம்னு தெரிஞ்சுக்கறது இன்னும் போய்க்கிட்டே இருக்கோமே அப்படிங்கறதை விட சந்தோஷம் தர விஷயம் இல்லையா? நீங்க பாகைமானிய வச்சுக்கிட்டு நகருங்க! மத்தவங்க கடிகாரத்தை வைச்சுக்கிட்டு நகரட்டும்!!

நான்: அட என்னப்பா! ரொம்பக் கஷ்டத்திலே இருக்கறப்போ, எப்படி ஊக்கமா வேலை செய்ய முடியும்?

கடவுள்: எப்பவுமே, எவ்வளவு தூரம் தாண்டி இருக்கிறிங்கன்னு பாருங்க! இன்னும் எவ்வளவு தூரம் போகணும்னு பாக்காதீங்க! உங்களுக்குக் கிடைச்ச நல்லதப் பாருங்க! உங்க கைவிட்டுப் போனதப் பாக்காதீங்க!!

நான்: உனக்கு மனுஷங்களைப் பார்த்தா ஆச்சரியமா இருக்கா என்ன?

கடவுள்: ரொம்பவே இருக்கு! கஷ்டப்படற போது, என்னப் பார்த்து 'எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்?' அப்படின்னு கேட்கறவங்க, சுகப்படற போது, 'எனக்கு எதனால இது கிடைச்கது'ன்னு கேட்கறதேயில்ல!! இதுதான் எனக்குப் புரியலே!! எல்லாரும் உண்மை தன் பக்கம் இருக்கணும்னு ஆசைப்படறாங்க! ஆனா உண்மை பக்கம் யாருமே இருக்க மாட்டேங்கறாங்க!!

நான்: அட சில சமயம் நான் கூடத்தான், 'நான் யாரு?' 'ஏன் பொறந்தேன்?' இப்படின்னு கேட்கறேன்! இது வரைக்கும் பதிலே கிடைக்கலே!

கடவுள்: நீ யாருன்னு கண்டு பிடிக்க ரொம்ப கஷ்டப்படாதே!! ஆனா, நீ யாரா இருக்கணும்னு, தீர்மானி!! இங்கே ஏன் பொறந்தேன்னு கண்டுபிடிக்கறத விடு! பொறந்ததுக்கான காரணத்தை ஆராய்ச்சி பண்றத நிறுத்து! காரணத்தை நீயே உருவாக்கு!! வாழ்க்கை, காணாமப் போனதைக் கண்டுபிடிக்கறது இல்லே! புதுசா உருவாக்கறதுதான்! புரிஞ்சுக்கோ!

நான்: இவ்வளவெல்லாம் சொல்றியே, வாழ்க்கையைச் சிறப்பா வைச்சுக்கறது எப்படி?

கடவுள்: உங்களோட இறந்த காலத்தை வருத்தமில்லாம, எண்ணிப் பாருங்க!! நிகழ்காலத்தைப் பொறுப்பா, தன்னம்பிக்கையோட நடத்துங்க!! எதிர்காலத்தை அச்சமில்லாம எதிர்கொள்ளுங்க!

நான்: சில சமயம் என் பிரார்த்தனைக்கெல்லாம் பதிலே இல்லைன்னு நினைக்கிறேன்? சரிதானா?

கடவுள்: இங்கே பதில் அளிக்கப்படாத பிராத்தனைகளே இல்லை! சில பிரார்த்தனைகளுக்கு பதிலே இல்லைங்கறதுதான் நிதர்சனமான உண்மை!!

நான்: கடைசியா ஒரு கேள்வி! உங்க பேரு பகவானா, அல்லாவா, ஏசுவா?

கடவுள்: ஆளாளுக்கு அவங்கவங்க இஷ்டப்படி பேர் வெச்சு கூப்பிடுவாங்க. என் உண்மையான பேரு இறைவன்.

நான்: ரொம்ப நன்றி! உங்ககூட பேசியது ரொம்ப உபயோகமா இருந்தது. நான் இப்ப ரொம்பத் தெளிவா இருக்கேன்! ஒருவிதமான புத்துணர்ச்சியோட இந்த பிறந்தநாளை ஆரம்பிக்கப் போறேன்! ஆமா நான் இத்தனை நேரம் உங்ககிட்ட மரியாதையாவே பேசலையே! உங்களுக்கு என் மேலே கோபம், வருத்தம் இது எதுவுமே இல்லையா? நான் ரொம்ப குழந்தைத்தனமா நடந்துக்கிட்ட மாதிரி இருக்கே!

கடவுள்: இது தெரிஞ்ச விஷயம்தானே! தப்பு செய்யறதும் உடனே வருந்துறதும் மனுஷங்களுக்கு இயல்பான ஒண்ணுதானே!. உங்களை எல்லாம் குழந்தைகள் அப்படின்னு சொன்னாதான் நான் கடவுள் என்றாகும். குழந்தைகள் செய்யற தப்பெல்லாம் நான் பெரிசா எடுத்துக்கறது இல்லே!

'நம்பிக்கை வையுங்க! நல்லதே நடக்கும்!
அச்சத்தை விடுங்க! ஆக்கம் தானே வரும்!'

உங்க சந்தேகத்தை எல்லாம் நம்பாதீங்க! உங்க நம்பிக்கை பேர்லே சந்தேகப்படாதீங்க!! வாழ்க்கை ஒரு புதிர்தான்! விடுவிக்கலாம்! பிரச்சினை இல்லே; தீர்க்கறதுக்கு!! என் பேர்லே நம்பிக்கை வையுங்க! என்னைக்கும் கூடவே இருப்பேன்!! எப்படி வாழணும்னு தெரிஞ்சா, உங்க வாழ்க்கை ரொமப அற்புதமானது! தெருஞ்சுக்கறதுக்கு முயலுங்க! பெரிய சாதனை எல்லாம் வலிமையால சாதிக்கலே! விடாமுயற்சியாலதான் சாதிச்சிருக்காங்க! நீங்களும் சாதியுங்க! சந்தோஷமா இருங்க!

இப்போதைக்கு அவ்வளவுதான்; மறுபடியும் கூப்பிட்டா, அப்ப நான் வருவேன்! என்ன வர்ட்டா!

***இது ஒரு ஆங்கில மூலத்தின் தழுவல். கற்பனையும் மேல் அதிக சேர்க்கையும் கருப்பு***

14 comments:

  1. கருப்பு,

    இப்பதான் கொஞ்சம் கொஞ்சமா மாறிண்டு வரே. அப்படியே இரு. பகுத்தறிவு கோஷ்டிகளுடன் சேராதே. உன்னை கெடுத்துப் புடுவானுங்க.

    ReplyDelete
  2. Karuppu uncle what happened to you !!!!! Don't join this Va Va group, you should keep writting in whatever you are good at.

    ReplyDelete
  3. கருப்பு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    அவருக்கும், அவரைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த நாள் போல எல்லா நாளும் இனிமையாய் அமைய நானும் பிரார்த்திக்கிறேன்!

    :)

    ReplyDelete
  4. அருமையான பதிவு! பாராட்டுக்கள்!

    ReplyDelete
  5. கருப்பின்,கருப்பு பக்கமாக இப்பதிவை நான் கருதுகிறேன்.

    ReplyDelete
  6. கருப்பு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. //Don't join this Va Va group//

    ஒரு மாசத்துக்காவது அவரு சிரிச்சிகிட்டும், சிரிக்க வெச்சிகிட்டும் இருக்கட்டுமேய்யா!

    :)

    ReplyDelete
  8. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  9. தோழர் கருப்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  10. சகோதரர் சதிஷ்'க்கு

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  11. //நாமக்கல் சிபி said...
    கருப்பு அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    //

    ஒருத்தர் நல்ல கருத்துக்கள் சொல்லிட்டால் ஒடனே சாமியார் ஆக்கிடுவிங்களே !
    நாமக்கல்லாரின் நக்கலுக்கு

    :)

    ReplyDelete
  12. கருப்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  13. //கருப்பின்,கருப்பு பக்கமாக இப்பதிவை நான் கருதுகிறேன். //

    கருப்புவுக்காக வ.வா.சங்கமே இந்த மாசம் கருப்பு வண்ணத்துல இருக்கும் போது அவர் எழுதினது மட்டும் என்ன வெள்ளையாவா தெரியப் போவுது.

    ReplyDelete
  14. //கருப்பின்,கருப்பு பக்கமாக இப்பதிவை நான் கருதுகிறேன். //


    இந்த மாசம் முழுவதும் கருப்புவுக்கு சிரிப்பு/சிறப்பு பக்கங்கள் என்றே கருதுகிறோம்!

    ReplyDelete

இங்கன தான் கருத்தும் அப்படியே ஓட்டும் போடனும்.. மறந்துடாதீங்க மக்கா :)